திருமறைப் பொறிகள் – 1 பெரியவர்கள் காலில் விழலாமா

கடந்த சில அல்லது பல ஆண்டுகளாக ஒரு அரபிச் சொல் நம் சகோதரர்கள் வாயில் மாட்டிக்கொண்டு படாத பாடுபட்டுக்கொண்டிருக்கிறது. அந்தப் பாவப்பட்ட சொல் ‘ஷிர்க்’ என்பதாகும். இது ஷிர்க், அது ஷிர்க் என்று ஆளுக்காள் தனிமனித ஃபத்வா கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இட்லி சாப்பிடுகிறாயா – நீ ஷிர்க் செய்கிறாய். இட்லிபற்றி குர்ஆனிலோ ஹதீஸிலோ எதுவுமே சொல்லப்படாமலிருக்க, அது காஃபிர்கள் சாப்பிடும் உணவாகவும் இருக்கும்போது அதை நீ சாப்பிடுவது ஷிர்க்.

தேங்காய்ச் சட்னி தொட்டுக்கொண்டாயா? அதுவும் ஷிர்க். அந்தத் தேங்காயைப் பறித்தவன் ஒரு காஃபிர். அந்த தென்னந்தோப்புக்குச் சொந்தக்காரன் ஒரு காஃபிர். ஒரு காஃபிருக்குச் சொந்தமான தோப்பிலிருந்து, ஒரு காஃபிரால் பறிக்கப்பட்ட தேங்காயை அரைத்து நீ சட்னி செய்து உன் உணவில் சேர்த்துக்கொள்வது நிச்சயமான ஷிர்க் ஆகும்…!

இந்த ரீதியில் நொந்து நூடுல்ஸ் ஆகிக்கொண்டிருக்கிறது ’ஷிர்க்’ என்ற சொல். ‘யா அல்லாஹ், இந்த ’ஷிர்க்வாதி’களிடமிருந்து என்னைக் காப்பாற்று’ என்று அந்த சொல் முறையிட்டுக்கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நல்ல நாள் பெருநாளில் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றுக்கொள்ளும் வழக்கம் நம்மிடமும் இருக்கிறது. சின்னக் குழந்தைகள் காசு, பரிசுகள் பெருவதற்காக இந்தக் காரியம் செய்வார்கள். வளர்ந்தவர்கள் தங்களைவிட பெரியவர்களான அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா, மாமானார், மாமியார் என்று இருப்பவர்களின் காலில் விழுந்து வாழ்த்துப் பெறுவார்கள். இது நமக்கெல்லாம் தெரியும்.

இது ஷிர்க் என்று சொல்லப்படுகிறது. எழுதப்படுகிறது. பேசப்படுகிறது. வாட்ஸ்-அப் செய்யப்படுகிறது. முகநூலிடப்படுகிறது. இன்னும் என்னென்னவோ விதங்களில் ஆங்காங்கே இந்த ஷிர்க் வாந்தி எடுக்கப்படுகிறது.

இது பற்றி நான் யோசித்தேன்.

இது உண்மையிலேயே ஷிர்க் ஆகுமா?

இல்லை என்றுதான் என் அறிவும் மனமும் பதில் சொல்லின. ஏன்?

 1. இறைவனுக்கு இணையாக இன்னொருவரை அல்லது இன்னொன்றை வைப்பது ஷிர்க். ஆனால் ஒருவர் காலில் விழுந்து மரியாதை செய்வதோ அவர்களுடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதோ இதில் எப்படி சேரும்? காலில் விழும் அனைவருக்கும் தெரியும் தான் யார் காலில் விழுகிறோமோ அவர் அல்லாஹ் அல்ல என்று. பின் எப்படி இது ஷிர்க் ஆகும்?
 2. அல்லாஹ்வுக்கு உருவமே இல்லை எனும்போது உருவம் உள்ள ஒரு மனிதனின் காலில் விழும்போதே அவர் அல்லாஹ் இல்லை என்பது நிரூபணமாகிறதல்லவா? அப்போ அது எப்படி ஷிர்க் ஆக முடியும்?
 3. அல்லாஹ்வுக்குக் கால் இருந்து அவன் காலில் விழுந்து எழுவதை நாம் வழக்கமாகக் கொண்டிருந்தால் மட்டுமே பெரியவர்கள் காலில் விழுவது இணை வைத்தல் என்ற காரியத்தை நெருங்கக்கூடிய வாய்ப்பு உண்டு. சொல்லுங்கள் சகோதரர்களே, அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறதா? கால்களாவது உள்ளனவா? நீங்கள் தொழும்போது சஜ்தாவில் செல்லும்போது அல்லாஹ்வின் கால்களில் தலை வைப்பதாக நினைக்கிறீர்களா?
 4. நீங்கள் தொழுகிறீர்கள். ஆனால் உங்கள் மனம் வெளியில் கழற்றிப்போட்ட புது பாட்டா செருப்பிலேயே இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். உங்கள் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படும் என்று நினைக்கிறீர்களா? இல்லையல்லவா? ஏன்? ஏனெனில் உங்கள் உடல் ஒரு காரியம் செய்கிறது ஆனால் மனம் செய்யவில்லை. மனம் செய்யாத எதையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை. புகாரி தொகுப்பின் முதல் நபிமொழியே ’இன்னமல் அஃமாலு பின் நிய்யத்’ என்பதுதான். உங்களுடைய செயல்கள் யாவும் உங்கள் எண்ணத்தைப் பொறுத்தே அளக்கப்படும் என்று அர்த்தம். இதை உறுதி செய்யும் திருமறை வசனங்கள் அனேகம் உண்டு. உதாரணமாக, குர்பானி கொடுப்பதைப் பற்றி இறைவன் குறிப்பிடும்போடு நாம் அறுக்கும் கால்நடைகளின் கறியோ, ரத்தமோ தன்னை வந்து சேர்வதில்லை, ஆனால் உங்கள் தக்வா எனப்படும் இறையச்சம்தான் என்னை வந்து சேர்கிறது என்று அல்லாஹ் குர்’ஆனிலே குறிப்பிடுகின்றான் (22:37).

இஸ்லாத்தின் அடிப்படையே மனசுதான். கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிய ஐந்து கடமைகளிலும் நீங்கள் கலிமா சொல்லவில்லை என்றால் முஸ்லிமாகவே ஆக முடியாது. கலிமா சொல்வதென்றால் வாயால் மட்டும் சொல்வதல்ல. மனதால் சொல்லவேண்டும். மனதாறச் சொல்லவேண்டும். ஆனால் நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகியவற்றை மனதால் நிறைவேற்ற முடியாது. அவற்றை நிறைவேற்ற உடலும் பொருளும் வேண்டும். ஆனால் கலிமா இல்லையென்றால், மற்ற அனைத்தும் வீணாகிவிடும். இதிலிருந்து என்ன தெரிகிறது? மனம், மனம்தான் இஸ்லாத்தின் அடிப்படை.

எனவே நிய்யத் சரியில்லை என்றால் தொழுகை, நோன்பு என எல்லாமே ஏற்றுக்கொள்ளப்படாமல் போகலாம். அவை ஷிர்க் ஆகும் வாய்ப்பும் உண்டு (இறைவனுக்காகவே செய்யப்படவேண்டியதை வேறு யாரையோ திருப்திப்படுத்த நீங்கள் செய்தால் அது அப்படித்தானே ஆகும்?). ஆனால் நிய்யத் சரியாக இருந்தால் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படும். இதுதான் மனிதர்களின் செயல்பாடுகளின் பின்னால் மறைந்து வாழும் உண்மை.

 1. எனவே பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவது ஆகுமான காரியமே. அதில் சின்னத் தவறுகூட இல்லை.

இதுபற்றி திருமறையில் ஏதாவது உள்ளதா என்று பார்க்க ஆசைப்பட்டேன். தேடிப்பார்த்தால் அங்கே பல ஆச்சரியங்கள் கொட்டிக்கிடந்தன. அவற்றையும் இங்கே உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

o2-34சூரா பகரா வசனம் 34: வ இத் குல்னா லில் மலாஇக திஸ்ஜுதூ லி ஆதம ஃப சஜதூ இல்லா இப்லீஸ்

பின்னர் நாம் மலக்குகளை நோக்கி ஆதமுக்குப் பணிந்து ஸுஜூது செய்யுங்கள் என்று சொன்னபோது இப்லீஸைத் தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர். இப்லீஸ் மறுத்தான். ஆணவமும் கொண்டான். அவன் காஃபிராகிவிட்டான். உண்மையை மறுத்தவனாகிவிட்டான்.

என்றெல்லாம் இவ்வசனத்தின் பொருள் கூறுகிறது. மனிதனைப் படைத்து மலக்குகளை மனிதனுக்கு சிரம் தாழ்த்தி மரியாதை செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். அதை மீறிய ஷைத்தானை ஆணவம் கொண்டவன் என்றும் உண்மையப் புரிந்துகொள்ளாதவனென்றும், காஃபிர் என்றும் கூறுகிறான். இதிலிருந்து என்ன தெரிகிறது?

மனிதர்களுக்கு சஜ்தா செய்யலாம் என்று தெரிகிறது.

நம் ஐவேளைத் தொழுகையின் ஒரு பகுதியாக இருக்கிற சஜ்தா வேறு ஆதமுக்கு செய்யச் சொன்ன சஜ்தா வேறு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் அந்த வசனத்தை மொழிபெயர்க்கும்போது எல்லாருமே  prostrate என்ற சொல்லைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த சொல்லுக்கு, ‘காலைத் தொட்டுப் பணிதல், ‘நெடுஞ்சான் கிடையாக விழுந்து கிடத்தல்’ என்ற பொருள்களும் வரும். எப்படி மரியாதை செய்தாலும் அது சரிதான். அதற்கும் நாம் தொழுகையில் செய்யும் சஜ்தாவுக்கும் சம்பந்தமில்லை. இப்படிச் சொல்வது நானல்ல அல்லாஹ்! இதே வசனம் வேறு வேறு இடங்களில் குர்’ஆனில் திரும்பத் திரும்ப வருகிறது. உதாரணமாக

7:11, 15:30, 17:61, 18:50, 20:116, 38:72 ஆகிய சூராக்களிலும் இடம்பெறுகின்றது.

எனவே சகோதரர்களே காலைத் தொட்டு மரியாதை செய்வதை ஷிர்க் என்று நீங்கள் சொல்விர்களேயானால் அது அல்லாஹ்வைவிட நீங்கள் என்று அறிவாளி என்று சொல்வதற்கு ஒப்பாகும். அல்லாஹ் மன்னிப்பானாக!

பெருமானார் (ஸல்) வெளிப்படையாக இதுபற்றி ஏதும் சொல்லவில்லை. அல்லாஹ் அனுமதித்திருந்தால் கணவனுக்கு மனைவி சஜ்தா செய்யலாம் என்று சொல்லியிருப்பேன் என்று சொன்னதைத்தவிர. ஆனால் யார் காலிலும் விழாதீர்கள் என்றும் அவர்கள் வெளிப்படையாக சொல்லவில்லை. ஏனெனில் குர்’ஆனை நமக்குக் கொடுத்ததே அவர்கள்தானே? அல்லாஹ் செய்யச் சொன்னது தவறு என்று அவர்கள் சொல்லமாட்டார்கள். காலில் விழுகின்ற காரியத்தை அனுமதித்தால் அது ஒருவகையான வணக்க நிலைக்கு நம்மை எடுத்துச் சென்றுவிடலாம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். அதனால் அதுபற்றி அவர்கள் மௌனம் சாதித்திருக்கலாம். இல்லையெனில் மரியாதை செய்யும் பொருட்டு ரஸுலுல்லாவின் காலிலேயே சஹாபாக்கள் விழுந்திருப்பார்களே. அப்படி நடந்ததாக வரலாறு நமக்குக் காட்டவில்லை.

சகோதரர்களே, காலில் விழுவதை சிபாரிசு செய்வதற்காக நான் இதை எழுதவில்லை. முதலமைச்சர்கள் காலில் விழும் அல்லது அவர்கள் செல்லும் காரின் முன், டயரின் முன் விழும் மானமற்றவர்களின் செயலைப்பற்றியும் நான் இங்கே பேசவரவில்லை.

பெரியவர்கள் என்று நாம் மதிப்பவர்களின் காலில் விழும் வாய்ப்பு ஏற்பட்டால், அந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள விரும்பினால், உங்கள் மனம் தெளிவாக இருக்கும் பட்சம், அந்தக்காரியத்தில் தவறு ஏதும் இல்லை, அதற்கு அல்லாஹ்வின் அனுமதியும் உண்டு என்பதற்காகவே இதை எழுதினேன். ஆனால் எதையுமே ஆராய்ந்து பார்க்காமல், யாரோ ஒருவர் சொன்ன கருத்தை ஏதோ ரஸூலுல்லாஹ்வே சொல்லிவிட்டமாதிரி எடுத்து வைத்துக்கொண்டு, அல்லாஹ் கொடுத்த மூளையையே பயன்படுத்தாமல், தொட்டதற்கெல்லாம் ஷிர்க் என்று சொல்லும் கெட்ட பழக்கத்திலிருந்து நம்மை நாம் விடுவித்துக்கொள்ளவேண்டும்.

பிரியாணி சாப்பிடுவதிலிருந்து, ஏஸியில் படுப்பதுவரை ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் காலத்தில் செய்யாத எத்தனையோ விஷயங்களை நாம் செய்துகொண்டிருக்கிறோம். அதுபோலத்தான் பெரியவர்களை மதிப்பதும். அதுவும் அல்லாஹ் வழியைப் பின்பற்றி.

சிந்தியுங்கள் சகோதரர்களே…

அன்புடன்

நாகூர் ரூமி

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

15 Responses to திருமறைப் பொறிகள் – 1 பெரியவர்கள் காலில் விழலாமா

 1. Abusali says:

  எதையுமே ஆராய்ந்து பார்க்காமல், யாரோ ஒருவர் சொன்ன கருத்தை ஏதோ ரஸூலுல்லாஹ்வே சொல்லிவிட்டமாதிரி எடுத்து வைத்துக்கொண்டு, அல்லாஹ் கொடுத்த மூளையையே பயன்படுத்தாமல், தொட்டதற்கெல்லாம் ஷிர்க் என்று சொல்லும் கெட்ட பழக்கத்திலிருந்து நம்மை நாம் விடுவித்துக்கொள்ளவேண்டும்.

 2. சிறு விளக்கம்

  காலில் விழுவது – இது சமீகால பெருசர்ச்சை. அது ஷிர்க்கா இல்லை வாஜிபா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். காலில் விழுவது அதாவது சிறியவர்கள் பெரியவர்கள் காலில் விழுவது, பிள்ளை பெற்றோரின் காலில் விழுவது, மனைவி கணவனின் காலில் விழுவது – இது இந்திய துணைக்கண்டத்தில் நடக்கும் நிகழ்வு. ஆனால் நம் தமிழ் நாட்டைப் பொருத்தவரை காரின் காலில் விழுவது ஹெலிகாப்டர் காலில் விழுவது, காம்பௌண்டு கேட் காலில் விழுவது, அதிகப்படியானது என்றாலும் இவைகளை முன் சொன்னவற்றில் சேர்க்க முடியாது.
  அல்லாஹ்வுக்கு மட்டுமே சஜ்தா செய்யவேண்டும் மற்றவர்கள் யார் காலில் விழுந்தாலும் அது சஜ்தா ஆகிவிடும், அது இணைவைப்பு, ஹராம், ஷிர்க் என்றல்லாம் பேசப்படுகிறது, ஃபத்துவாவும் கொடுக்கப்படுகிறது.

  நான் சுற்றிவளைக்காமல் நேரடியாகவே விசயத்துக்கு வருகிறேன். குர் ஆனில் “சஜ்தா” என்ற வார்த்தை எங்கே முதன் முதலில் வருகிறது? அல்லாஹ் யாருக்கு சஜ்தா செய்ய சொன்னான்?

  முதன் முதலில் (மனித இனம் படைக்கப்படுமுன்) மண்ணால் ஆதமை படைத்து அவருக்கு எல்லா வானவர்களையும் சஜ்தா செய்ய சொன்னான். எல்லா மலக்குகளும் சஜ்தா செய்தனார் ஒரு மலக்கைத் தவிர. “நான் நெருப்பினால் படைக்கப்பட்டவன் மண்ணால் படைக்கப்பட்ட இவருக்கு சஜ்தா செய்யமாட்டேன்” என்று காரணம் கற்பித்தான். அதனால் சபிக்கப்பட்டு ஷைத்தானாக மாறிவிட்டான்.
  இது சூரா பக்ராவில் 34 வது வசனத்தில் வருகிறது. அதன் பிறகு வேறு யாருக்காவது சஜ்தா செய்யச்சொன்னானா அல்லாஹ்?

  ஆக அல்லாஹ் தன் நிலையிலிருந்து மாறவில்லை, சொன்னதை மாற்றவுமில்லை திரும்ப பெற்றுக்கொள்ளவுமில்லை

  இப்போது நான் கேட்கிறேன், நாம் தொழுகையில் யாருக்கு சஜ்தா செய்கிறோம்? அல்லாஹ்வுக்கு செய்கிறோமா? இல்லை அல்லாஹ்வுக்காக செய்கிறோமா? நிய்யத்து எப்படி சொல்கிறோம் “லில்லாஹி அல்லாஹு அக்பர்?”, இல்லை வெறும் “அல்லாஹு அக்பர்?” அல்லாஹுவுக்கு என்றால் லில்லாஹிக்கு என்ன பொருள்?
  மூஸா(அலை) அடங்கியிருக்கும் இடம் நமக்கு தெரியும், யூனுஸ்(அலை) அடங்கியிருக்கும் இடம் தெரியும் இன்னும் மற்ற மற்ற நபிமார்கள் அடக்கத்தலம் தெரியும் ஆதம்(அலை) அடங்கியிருக்கும் இடம் யாருக்காவது தெரியுமா?
  நான் உறுதியாக சொல்கிறேன் எந்த கஃபத்துல்லாஹ்வை அவர்கள் கட்டினார்களோ அந்த கஃபத்துல்லாஹ்வில்தான் அடங்கியிருக்கிறார்கள். எனவேதான் கிப்லாவை முன்னோக்கி தொழும்படி இறைவன் பெருமானார்(சல்) அவர்கள் மூலமாக நமக்கு கட்டளை இட்டுள்ளான். நாம் சஜ்தா செய்வது ஆதம்(அலை)க்குதான் அல்லாஹ்வுக்கு அல்ல

  நான் உனக்குத்தான் சஜ்தா செய்வேன் என்று அல்லாஹ்விடம் சொன்னால் நானும் ஷைத்தான்தான். எனவே அல்லாஹ் எதை சொன்னானோ, பெருமானார் அவர்கள் எதை காட்டினார்களோ அதை செய்தே ஆகவேண்டும். அதுதான் இஸ்லாம்.
  மீண்டும் காலில் விழுவதற்கு வருகிறேன்.

  காலில் விழுவது என்பது இந்திய துணை கண்டத்தில் நிகழ்ந்துவரும் ஒரு சமிக்கையே தவிர வேறொன்றுமில்லை. அது இணைவைப்பதாகாது. ஒருவருடைய கையைப் பிடித்துக்கொண்டு “நீங்கள் தெய்வம் மாதிரி வந்து காப்பாற்றினீர்கள்” என்று சொன்னால் அது இணைவைப்பு. வேறு வார்த்தையில் சொன்னால் யாரையும் அல்லது எதனையும் தெய்வத்தோடு ஒப்பீடு செய்தால் அது இணைவைப்பு, ஷிர்க்கு, ஹராம், etc., etc.,

  • நாகூர் ரூமி says:

   ஹமீது ஜாபர் அவர்களிடமிருந்து அருமையானதொரு புதிய பார்வை கிடைத்துள்ளது. அது சரியென்றே நான் நினைக்கிறேன்.

 3. abulhasan says:

  mihavum arumaiyana vilakkam…

 4. ரஷீத் நாகை says:

  அருமையான கட்டுரை ,மேலும் ஜாஃபர் நாநாவின் கருத்தும் அற்புதமானது ..

 5. ஹமீது says:

  இது ஒரு நாத்திக சிந்தனை, அந்த அடிப்படையில் இது சரிதான்

 6. Mohamed Haniffa says:

  New view on this issue; good article lets us think of SHIRK

 7. ABDUL LATHEEF says:

  Assalam Alaikum (VAR) BROTHER,
  Bowing our head to any of our elders is an act which we see in India. Your view on supporting is not acceptable Sir, Your article shows you are standing against the propaganda of thoweed jamath and their associates, though I do not accept their stand fully but we can not claim they are total wrong. Saints, great scholar, eminent poet, respectable man, martyrs are there in every nation, people have great respect to them. Respect to all those is not inclined in bowing our head to any fellow human being. Rumi Sir from my heart I respect you in all ways as you are my brother, elder, inspirational writer, a man who never insult anybody ( other religious people or customs ) but Kaalil vizhu vadhu ……! Oh my God….this is toooo much…Anyhow God knows the best—its wrong sir.

  Abdul Latheef

  • நாகூர் ரூமி says:

   Alaikum Salam Brother.
   Thank u for yr good opinion about me.
   I am not in agreement with Tawheed Jamath which has spoiled the unity of our community in the past 15 years. And they are egoistic and unfruitfully argumentative.
   And I am not a follower of any Jamath for that matter. I follow my own heart.
   I am not recommending falling at the feet of elders, though it is not at all shocking to me, as it is to you. You seem to be a supporter of some Jamath but
   you have not answered the questions raised by me through the Quran.
   Allah is asking the angels to prostrate before Adam, a man.
   Please prove from the Quran and Hadith that my argument is wrong.
   I shall be grateful to you. I am open. One can touch the feet of elders in respect is my view. In fact, a Muslim cannot do any shirk act. We have to see not the physical acts but what goes on in one’s mind while doing those acts.
   anbudan
   rumi

 8. abu says:

  arumaiyana katurai

 9. abu says:

  வஹாபிகளுக்கு சாட்டையடி இந்த கட்டுரை பிஜே மதத்தை சேர்ந்தவர்கள்
  ஷிர்க் வியாபாரம் செய்து காசு பார்க்கிறார்கள் அதற்கு சரியான கட்டுரை
  வாழ்த்துககள்

 10. ABDUL LATHEEF says:

  Rumi Sir, Thanking you for your reply…
  no counter argument…!

  Abdul Latheef

 11. Roshan Jahan says:

  hi masterji
  தாங்கள் சொல்வது எல்லாம் சரி.ஹமீது ஜாபர் அவர்கள்
  சொன்னது படித்தது தான் எனக்கு தலையை
  சுற்றுகிறது.அப்படியென்றால்மலக்குகளை , ஷைத்தானை
  சஜ்தா செய்ய சொன்ன அல்லாஹ், உலகம்
  முடியும் வரை பிறக்கும் ஒவ்வொரு மனிதனும்
  ஆதமுக்கு சஜ்தா செயா வேண்டிய ஏற்பாடாக
  இருக்கலாம்.இந்த கோணத்தில் நாம் இதுவரை
  சிந்திக்கவே இல்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s