சிலையும் நீ, சிற்பியும் நீ — என்ன சொல்கிறது உங்கள் உடல்? — 10

Alumai Sirpi Feb 2015உடல் பொய் சொல்வதே இல்லை

 • மஹாத்மா காந்தி

மஹாத்மா சொல்வது எவ்வளவு பெரிய உண்மை தெரியுமா? ஆமாம். நமது உடல் பொய் சொல்வதே இல்லை. ஏன்? ஏனென்றால் அதற்குப் பொய் சொல்லத்தெரியாது! சத்தியத்தின் இன்னொரு வடிவம்தான் நம் உடல்! அது நம்மோடு இருபத்து நான்கு மணி நேரமும் பேசிக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால் நாம்தான் கேட்பதே இல்லை!

காதலர்கள் பெரும்பாலும் கண்களால் பேசிக்கொள்வார்கள் அல்லவா? ஒரு பார்வை போதும். அது காதலா அல்லது வெறுப்பா என்று தெரிந்துவிடும். காதலர் கடைக்கண் காட்டிவிட்டால் மாமலையும் ஓர் கடுகாம் என்ற முதுமொழி தெரியும்தானே?!

ஒரு மாணவனிடம் இரண்டும் இரண்டும் எவ்வளவு என்று ஆசிரியர் கேட்டாரா. அதற்கு உடனே அவன் “நான்கு இட்லிகள்” என்று பதில் சொன்னானாம்! ஏன் தெரியுமா? அவன் கடுமையான பசியில் இருந்தான்! அப்போது பேசியது அவனது வாய் அல்ல. அவனது உடல். இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் அவனது வயிறு!

நாம் சொல்லாமல் விடும் எவ்வளவோ விஷயங்களை நம் உடல் சொல்லவல்லது. உடல் மொழி மிகவும் மென்மையானது. அதே சமயம் அது மிகவும் உறுதியானது. ஏனெனில் அதில் உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை. ஹார்மோன்களின் பேச்சு என்றுகூட அதைச் சொல்லலாம். அல்லது உயிரணுக்களின் பேச்சு. At forty, a man is a physician or a fool என்று ஆங்கிலப்பழமொழி உண்டு. நாற்பது வயதில் தன் உடலை அறிந்தவன் மருத்துவனாக, அல்லது மருத்துவனை ஒத்தவனாக இருக்கிறான். அறியாதவன் மூடனாக இருக்கிறான் என்று அதற்குப் பொருள்.

10 -- Ennasolgirathu Ungal Udal தூசியடர்ந்த ஒரு அறைக்குள் நீங்கள் போக நேரிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது என்ன நடக்கிறது? கொஞ்ச நேரத்தில் நீங்கள் ‘ஹச் ஹச்’ என்று தும்ம ஆரம்பித்துவிடுவீர்கள். அல்லவா? அது ஏன் நடக்கிறது? உங்கள் நுரையீரல் உங்களிடம் பேசுகிறது! ஆமாம். அது உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தியைச் சொல்கிறது. தும்மல் மூலம்! ஆமாம். தும்மல் என்பது நுரையீரலின் செய்தி.

அது என்ன செய்தி?

”அட முட்டாளே, எனக்குள் தூசி புகுந்துவிட்டது, நீ சீக்கிரம் தூய்மையான இடத்துக்குப் போ”.

இதுதான் செய்தி! எப்படி? அப்படி நுரையீரல் என்ன செய்துவிட்டது? நுரையீரலுக்குள் சென்ற தூசியை தும்மல் மூலம் தூக்கி வெளியே எறிந்துவிட்டது! பத்து முறை தும்மல் வந்தால், உள்ளே போன தூசியை வெளியேற்ற ரொம்பவும் பாடுபட்டுக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்!

இது புரியாமல், தும்மலை நிறுத்த நாம் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு, எதையாவது முகர்ந்து, எதையாவது தடவி, எதையாவது விழுங்கி தும்மலை நிறுத்த முயற்சி செய்கிறோம்! நுரையீரலின் பேச்சை  உதாசீனப்படுத்துகிறோம்! ஒரு பிரச்சனைக்கு அது தீர்வு கொடுத்துக் கொண்டிருக்கும்போது நாம் அதை நிறுத்தி வேறு ஒரு பிரச்சனையை உருவாக்க, அல்லது ஏற்கனவே இருக்கின்ற பிரச்சனையை இன்னும் தீவிரப்படுத்த முயற்சித்துக்கொண்டிருக்கிறோம்!

10.2 --Ennasolgirathu Ungal Udalஇப்போது சொல்லுங்கள் யார் அறிவாளி? மெத்தப்படித்த நாமா? அல்லது உருவானபோதே, அறிவுடன் உருவான உடலா? ஒரு சின்ன உதாரணம் தருகிறேன். நான்கு நண்பர்களுடைய ரத்தம் நான்கு விதமாக இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒருவருக்கு ஏ, இன்னொருவருக்கு பி, இன்னொருவருக்கு ஓ, இன்னொருவருக்கு பி ப்ளஸ் என்று வைத்துகொள்வோம். ஒரு இட்லியை அல்லது ஒரு தோசையை அல்லது ஒரு வடையை நான்கு பேரும் பங்கு போட்டு சாப்பிடுகிறார்கள். நான்காகப் பிரிந்த அந்த இட்லி, அல்லது தோசை, அல்லது வடை அவர்கள் வயிற்றுக்குள் சென்று, செரித்த பிறகு, அது ரத்தமாக மாறும்போது ஒவ்வொருவருக்கும் அவரவர் ப்ளட் க்ரூப் ரத்தம்தானே உருவாகும்? அப்படியானால் ஒரே ஒரு வடையை அல்லது இட்லியை அல்லது தோசையை வைத்து நான்கு விதமான ரத்த வகைகளை உருவாக்க உடலுக்குத் தெரிந்திருக்கிறது என்றுதானே அர்த்தம்?! சிந்தித்துப் பாருங்கள், உடலின் அறிவு நம்மை வியக்க வைக்கும்.

உண்மையில் நம் உடல் ஒரு ஞானி. அந்த ஞானியின் மௌனமான பேச்சை நாம் உதாசீனம் செய்துகொண்டே இருக்கிறோம். அதனால் நமது ஆரோக்கியத்தை நாமே கெடுத்துக்கொண்டிருக்கிறோம். அன்றாடம் நாம் தொடர்ந்து விடாமல் செய்யும் காரியம் இதுதான்! இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வித்தியாம் எதுவும் இல்லை.

பிறந்த குழந்தைக்கு கெட்டுப்போன பாலைக் கொடுத்துப் பாருங்கள். (செய்துபாருங்கள் என்று இதை நான் சிபாரிசாகச் சொல்லவில்லை. செய்தால் என்னாகும் என்பதையே சொல்ல வருகிறேன்). அப்படிக் கொடுத்தால் கொஞ்ச நேரத்தில் அந்தப் பாலை குழந்தை வாந்தி எடுத்துவிடும்! பிறந்த குழந்தையின் வயிற்றுக்கும் அந்த அறிவு உள்ளது. அப்படிப்பட்ட பரிபூரண அறிவுடன்தான் எல்லாக் குழந்தைகளும் பிறக்கின்றன. நீங்களும் நானும். ஆனால் காலம் செல்லச் செய்ய நாம் உடலின் பேச்சை அலட்சியப்படுத்த ஆரம்பிக்கிறோம். அதன் விளைவுகளையும் அனுபவிக்கத் தவறுவதில்லை.

நமக்கு வயிற்றால் போகிறது என்று வைத்துக்கொள்வோம். சாப்பிட்ட சாப்பாடு சரியானதல்ல, அது சரியாக செரிக்கவில்லை, கெட்டுப்போய்விட்டது, அது வெளியேற்றப்பட வேண்டியது என்று உடலுக்குத் தெரிகிறது. அதனால் அது சிறுகுடலிலிருந்து அந்த கெட்ட உணவை பெருங்குடலுக்குள் செரிக்காமலே அனுப்புகிறது. அதுதான் வயிற்றுப்போக்காக வெளியே வருகிறது. ஆனால் நாம் என்ன செய்கிறோம்? உடனே மருந்து மாத்திரைகளை விழுங்கி, அந்த அசிங்கங்கள் எல்லாம் நம் உடலை விட்டு வெளியே வந்துவிடாமல் நிறுத்தி, நம் உடலையே கக்கூஸாக்குகிறோம்! யார் அறிவாளி? யோசியுங்கள்.

இருமல் வருகிறது என்றால் என்ன அர்த்தம் என்று தெரியுமா? நமது நுரையீரலில் தேங்கிவிட்ட சளியை வெளிக்கொண்டுவரும் ஏற்பாடு அது. குழந்தையாக இருந்தால் மலம் அல்லது வாந்தி மூலமாக இந்த சளி வெளியேற்றப்படும். பெரியவர்களாக இருந்தால் குறிப்பாக இருமல் மூலமாகத்தான் அது வெளியேற்றப்படும். தேவையில்லாத சளியை வெளியேற்ற உடல் ஏற்படுத்திய முறைதான் இருமல்.

ஆனால் நாம் என்ன நினைக்கிறோம்? இருமல் ஒரு வியாதி என்று நினைக்கிறோம். அதை நிறுத்த ’காஃப் சிரப்’களைக் குடிக்கிறோம்! அப்படியானால நுரையீரலில் தேங்கிவிட்ட சளி எப்படி வெளியாகும்? நாம் குடிக்கும் ’காஃப் சிரப்’களில் உள்ள வேதிப்பொருள்கள் ஈரமாக இருந்த சளியை உலர்த்திவிடும். இப்போது அதை வெளியேற்றுவது சிரமம். எனவே இப்போது வரும் இருமல் ’ட்ரை காஃப்’ எனப்படும் உலர் இருமலாக மாறுகிறது.

10.1 --Ennasolgirathu Ungal Udalஉள்ளே போன வேதிப்பொருள்கள் நம் சளியை காயவைத்து பொடியாக்கி நுரையீரலின் நுண் துளைகளுக்குள் படிய வைத்துவிடுகின்றன! இந்த மாறுதலால் கொஞ்ச நாளைக்கு இருமல் நின்று போகும். ஆஹா, ‘காஃப் சிரப்’ அருமையாக வேலை செய்துவிட்டது, இருமல் நின்றுவிட்டது என்று நாம் நினைக்கிறோம்! ஆனால் காய்ந்து பொடியாகிப்போன சளி என்னாகும் என்று தெரியுமா? அது உடலுக்கு போதிய எதிர்ப்பு சக்தி கிடைக்கும்வரை ‘விருந்தாளி’யாக உடலியே தங்கிவிடும்!

சரி, அதை எப்போது உடல் வெளியேற்றும்? முதலில் நாம் சாப்பிட்ட ’சிரப்’புகளினால் உள்ளே போன வேதிப்பொருள்களை வெளியேற்ற வேண்டிய அவசியம் உடலுக்கு ஏற்படுகிறது. அப்படி அவை வெளியேற்றப்பட்டாலும் மிச்ச சொச்சம் லிவர் எனப்படும் கல்லீரலில் தங்கிவிடும்! அதன் பிறகு உடலுக்கு இப்போது வேலை அதிகமாகிவிடுகிறது. ஏன்?

சளி ஈரமாக இருந்தால் அதை இருமல் மூலம் எளிதாக வெளியேற்றி இருக்கும். ஆனால் இப்போது அது உலர்த்தப்பட்டு பொடிப்பொடியாக நுரையீரல் முழுவதும் தூவப்பட்டுள்ளது! எனவே அதை மீண்டும் ஈரப்படுத்தி வெளியேற்ற வேண்டும்! அதனால் இந்த முறை ஏற்படும் இருமும்போது எரிச்சலுடன் ரத்தத்துளிகளும் வெளிவரும் வாய்ப்புண்டு!

ஆனால் நாம் இப்போதும் இருமலை நிறுத்த முயற்சி செய்தோமானால் என்னாகும் தெரியுமா? குழந்தையாக இருந்தால் ப்ரைமரி காம்ப்ளக்ஸ் என்ற நோய் வரும். பெரியவர்களாக இருந்தால் டிபி, ஆஸ்த்துமா, ஈஸ்னோஃபீலியா போன்ற நோய்கள் வரும். அதன் பிறகு தோலில் சொரியாசிஸ், எக்சிமா, ஒற்றைத்தலைவலி போன்ற நோய்கள் வரும்.

என்ன பயமுறுத்துவதுபோல் தோன்றுகிறதா? நீங்களும் நானும் செய்வதைத்தான் சொல்கிறேன். நாம் எப்படி தவறாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று எடுத்துக்கூறுகிறேன். நம் உடலின் மொழியை அலட்சியப்படுத்துவதால் ஏற்படும், அல்லது ஏற்படப்போகும் விளைவுகளைப் பற்றி எச்சரிக்கிறேன். அவ்வளவுதான்.

பசி ஒரு அருமையான செய்தி. அப்போது நாம் சாப்பிடவேண்டும். தாகம் ஒரு அற்புதமான செய்தி. அப்போது நாம் தண்ணீர் குடிக்கவேண்டும். நேரத்துக்கு சாப்பிடவேண்டும் என்று நாமே அல்லது நமது குடும்பமே போட்டு வைத்த கணக்குப்படி பசியில்லாமல் சாப்பிட்டால் அல்சர் போன்ற வியாதிகள் வரும். தாகமில்லாமல் குடித்தாலும் பிரச்சனைதான். சிலர் காலையில் எழுந்தவுடன் லிட்டர் லிட்டராக தண்ணீர் குடிப்பார்கள். இதுவும்தவறுதான். உடலே தண்ணீர் கேட்காமல் நாம் தண்ணீர் கொடுக்கவே கூடாது. இப்படியெல்லாம் சாப்பிடுவதும் குடிப்பதும் உடலுக்கு நன்மை செய்யாது. மாறாகத் தீங்கு செய்யும்.

சிறுநீரைப் பரிசோதித்து உங்களுக்கு ’சுகர்’ இருக்கிறது என்று டாக்டர் சொன்னால் நீங்கள் உங்கள் சிறுநீரகத்துக்கு நன்றி சொல்லவேண்டும்! ஏனெனில் அவை அற்புதமாக வேலை செய்து கெட்டுப்போன சுகரை, குளூகோஸை உங்கள் உடலில் இருந்து வெளியேற்றிவிட்டது! அது ஒரு நோயின் அடையாளமல்ல. ஆரோக்கியத்தின் அடையாளம்!   முறைப்படி சாப்பிடாததால் உணவு சரியாக செரிக்காமல், (தேவையான இன்சுலின் சேராத)  கெட்ட க்ளுகோஸ் உண்டாகிவிடுகிறது. அதைத்தான் சிறுநீர் மூலமாக கிட்னி வெளியேற்றி உள்ளது.  அதற்காக நாம் சந்தோஷப்பட வேண்டுமே தவிர, அச்சப்படக்கூடாது. எப்படி முறையாக சாப்பிடுவது என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

உடலில் ஏற்படும் எல்லா நோய்களுக்கும், கட்டிகள், இதய அடைப்பு, கேன்சர், சிறுநீரக வேலை நிறுத்தம், பித்தப்பை கற்கள், பெருங்குடல் வீக்கம், முட்டி வலி, வாதம், மூளைக்கட்டி, ரத்த அழுத்தம் – இப்படி எல்லா நோய்களுக்குமே காரணம் ஒன்றுதான்: உடலின் செய்தியை நாம் உதாசீனப்படுத்தியது.

தொழிலில், பணியில், லட்சியத்தில் வெற்றியடைந்தால் மட்டும் போதுமா? உடல் ஆரோக்கியமாக இருந்தால்தானே நமது மற்ற வெற்றிகளுக்கெல்லாம் அர்த்தம் வரும்? ஒரு கோடி ரூபாய் சம்பாதித்துவிட்டு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து முக்கிய உறுப்புகள் அகற்றப்படுவதற்காக படுத்துக்கிடப்பதில் என்ன வெற்றி உள்ளது? வாழ்க்கையே ஒரு தோல்வியாக மாறிப்போய்விடாதா?

உடல் வளர்த்தேன், அதனால் உயிர் வளர்த்தேன் என்று திருமூலர் தெரியாமல் சொல்லவில்லை. உடல் சரியாக பராமரிக்கப்படவில்லையென்றால் ”திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்” என்று அவரே ஒரு போடு போடுவதைக் கவனிக்கவும்!

நமது உடல்

 • தவறு செய்வதில்லை
 • ஊறு விளைவிக்கும் எதையும் தனக்குள் அனுமதிப்பதில்லை
 • தன்னைத்தானே சரி செய்துகொண்டு குணப்படுத்திக்கொள்ள அதற்குத் தெரியும்
 • தேவைப்படாமல் தனக்குள் திணிக்கப்பட்ட எதையும் அது கழிவாக மாற்றி வெளியேற்றுகிறது
 • அந்த கழிவுகளை வெளியேற்றும் நிகழ்வில் ஏற்படும் கஷ்டங்களைத்தான் நாம் நோய் என்று நினைத்துக்கொள்கிறோம்
 • கழிவுகளை அகற்ற விடாமல் நாம் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளால் கழிவுகள் வெளியேற வழியில்லாமல் உடலிலேயே தேங்கி பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றன
 • இப்படித் தேங்கிய கழிவுகள் நம் உடல் உறுப்புகளின் வேலையை பாதிக்கின்றன
 • எது எப்படி இருப்பினும் தன் கடமையைச் செய்வதிலிருந்து உடல் தவறுவதே இல்லை

அப்படியானால் என்ன செய்யவேண்டும்?

 •  பசிக்கும்போது சாப்பிடுங்கள்
 • ருசித்து மென்று சாப்பிடுங்கள்
 • சாப்பிடும்போது பேசாதீர்கள்
 • தாகம் எடுத்தால் குடியுங்கள்

உடலில் தோன்றும் நுட்பமான உணர்வுகளைக் கவனியுங்கள். அதுதான் அதன் பேச்சு. உணவுக்கு மட்டுமல்ல. வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியா தவறா என்ற குழப்பம் வந்தால்கூட உங்கள் உடம்பைக் கேளுங்கள். உற்று கவனியுங்கள். ஒருவிதமான சங்கட உணர்வு உடலில் எங்கேனும் இருந்தால் உங்கள் முடிவு உங்களுக்கு நன்மை செய்யாது என்று புரிந்துகொள்ளுங்கள். மாறாக, உடல் சாதாரணமாக, எந்த ’ரீஆக்‌ஷனும்’ காட்டாமல் இருந்தால் முடிவு சரியென்று புரிந்துகொள்ளுங்கள். அடுத்தவர் பேசும்போது அவர் முகத்தையும், உடலையும் கவனியுங்கள். அவர் பொய் சொல்கிறாரா அல்லது  உண்மை சொல்கிறாரா என்பது தெரிந்துவிடும்.

எல்லா அறிவுகளும் கொட்டிக்கிடக்கும் ஒரு புத்தகம் இந்த உலகில் உண்டென்றால் அது உங்கள் உடல்தான். ஒரு நாளைக்கு ஒரு பக்கமாவது அதை முதலில் படிக்க ஆரம்பியுங்கள். ஆரோக்கியம் என்பது மருந்து மாத்திரைகளில் இல்லை என்பது புரியும். சொல்லப்போனால் மருந்து மாத்திரைகள்தான் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொண்டிருக்கின்றன என்பதும் புரியும்.

அப்படியானால் அவசரத்துக்கூட மருந்து மாத்திரை போடக்கூடாதா?

அப்படியல்ல. அவசரத்துக்கு, உடனடித் தேவைக்கு எந்த மருத்துவரையும் பார்க்கலாம். அவர் கொடுக்கும் எந்த மருந்து மாத்திரைகளையும் உட்கொள்ளலாம். ஆனால் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமென்றால் வாழ்நாள் பூராவும் ’சாப்பாட்டுக்கு முன்’, ‘சாப்பாட்டுக்குப் பின்’ என்று மாற்றி மாற்றி காலை, பகல், இரவு என எந்நேரமும் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பதுதான் அறிவீனம்.

நம் உடலின் இயற்கையான அறிவை அது பலவீனப்படுத்தும். நம் நோயைக் குணப்படுத்த நம் உடல் எடுக்கும் முயற்சிகளை அவை தடுக்கும். உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளில் உள்ள வேதிப்பொருள்கள் உடலில் கலந்து விஷமாகும். ஆனால் இன்றைக்கு உலகில் அதுதான் நடந்துகொண்டுள்ளது. இன்று உலகில் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மாத்திரை மருந்துகள் மனிதர்களின் வயிறுகளுக்குள் சென்று குடியேறி குடிகெடுத்துக்கொண்டுள்ளன. இப்படி எப்போது பார்த்தாலும் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டுக்கொண்டே இருப்பதும் ஒருவிதத்தில் தற்கொலைதான்.

கடவுளுக்கு உங்களைப் பிடிக்கவில்லையென்றால் உங்களை டாக்டரிடம் அனுப்புவார்.

டாக்டருக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்றால் உங்களை கடவுளிடம் அனுப்புவார்!

சமீபத்தில் ’வாட்ஸ் அப்’பில் எனக்கு இப்படி ஒரு ஜோக் வந்தது! உண்மைதான். உடலின் மொழியை, உடலின் நுட்பமான, மென்மையான செய்திகளை, தகவல்களை, எச்சரிக்கைகளை நாம் உதாசீனப்படுத்திக்கொண்டே இருந்தால் நடக்கப் போவது அதுதான்.

நம் உடலில் ஏற்படும் ஒவ்வொரு வேதனையும், ஒவ்வொரு வலியும் ஒரு நோய்தீர்க்கும் ஏற்பாடு என்பதை உணருங்கள். உடல் எப்போதுமே உங்கள் நோயைப்போக்கும் வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறது.

நாலு நிமிஷம் தலை வலித்தால் நாற்பது பேரிடம் நாலு நாளைக்குச் சொல்லிக்காட்டி புலம்பாதீர்கள். மாத்திரை எதுவும் போடாமல் அமைதியாக அமர்ந்து தலைவலியை நன்கு உணர்ந்து பாருங்கள். எப்படி வலிக்கிறது, எங்கெல்லாம் வலிக்கிறது, விட்டுவிட்டு வலிக்கிறதா, தொடர்ந்து வலிக்கிறதா, குத்துகிறதா, பரவுகிறதா — இப்படியெல்லாம் கண்களை மூடிக்கொண்டு ஒரு தியானம் செய்வதுபோல் ஒரு ஐந்தாறு நிமிடங்களுக்கு உற்று கவனித்து உணர்ந்து பாருங்கள்.

இப்படிச் செய்யும்போது கவலைப்படாமல், பயப்படாமல், விமர்சிக்காமல், நல்லது அல்லது கெட்டது என்று எதுவுமே நினைக்காமல் வெறுமனே தலைவலியை உணர்ந்து பாருங்கள்.

சில நிமிடங்களிலேயே வலி இல்லாமல் போகும். நம் நோயைத்தீர்க்கும் மருந்து நமக்குள்ளேயே உள்ளது என்பது அப்போதுதான் உங்களுக்கு விளங்க ஆரம்பிக்கும்.

முயன்று பாருங்கள். உங்கள் உடலின் பேச்சைக் கேளுங்கள். அதற்கு மரியாதை கொடுங்கள். அது உங்களுக்கு நன்மை செய்யும். நன்மை மட்டுமே செய்யும்.

========

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

6 Responses to சிலையும் நீ, சிற்பியும் நீ — என்ன சொல்கிறது உங்கள் உடல்? — 10

 1. yasmine begam says:

  உங்க கட்டுரையை படித்தேன் . அருமையாகவும் உண்மையாகவும் இருந்தது .அதில் நம் உட்கொள்ளும் மருந்தே விஷமாக மாறும் என்று தங்கள் சொன்ன கூற்று  உண்மையே . எனக்கு ஒரு உண்மை சம்பவம் நினைவுக்கு வருகிறது. எங்கள்  வீடு பக்கத்து வீட்டு பெண்மணி தனக்கு  வரும் தலைவலிக்கு பரசெடமோல் உபயோகிப்பதை வழக்கமாக  கொண்டார் . அதிகப்படியாகவும் அடிக்கடி   எடுத்துக்கொண்ட இந்த பரசெடமொளல் வயிறு வலி ஏற்பட்டு மருத்துவமனையில்   அனுமதிக்கப்பட்டார் இந்த பரசெடமொளில் அதிகபடியான வேதி பொருள் இருப்பதாகவும் உடலுக்கு கெடுதல் தர கூடிய காபின் உள்ளதாகவும்   பின்பு தான் தெரியவந்தது . இதனால்  ஏற்பட்ட பக்கவளைவு காரணமாக எதிர்காலத்தில் சிறுநீரக பிரச்சனை வரலாம் எனவும் அதில் அதிகபடியான காபின் உள்ளதால் தான் இதற்க்கு காரணம் என்றார் மருத்துவர்கள். உடல்  நலத்துக்காக நம் எடுத்துகொள்ளும் மருந்து மாத்திரைகளே சில சமயம் நமக்கு   எமனாக மாறிவிடுகிறது. உங்கள் கட்டுரையை படித்த பிறகுதான் எனக்கே  தெளிவு பிறந்தது.  இது ஒரு மருத்துவ ஏடு.

 2. mohanbabupt says:

  Nice article!!For further information, and detailed information, Please visit http://www.antomictherapy.org.

 3. Mohamed Haniffa says:

  You R right; the same thing is conveying by Raymond Francis’ book, Never Be Sick Again thru various seminar in 5 star hotels of all over the world with big sponsored programme (I have attended recently with my co. sponsored program in Qatar)

 4. abulhasan says:

  Fantastic article….

 5. nawshad says:

  கடவுளுக்கு உங்களைப் பிடிக்கவில்லையென்றால் உங்களை டாக்டரிடம் அனுப்புவார். டாக்டருக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்றால் உங்களை கடவுளிடம் அனுப்புவார்!

  அற்புதமான வரிகள்.. இப்படித்தான் இரண்டு பேரும் ஆள் மாறி ஆள் என்னை அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s