புறாக்கள் கட்டிய மாளிகை 03 – அறியாமைக்கால அரேபியா

PKM March Coverஇஸ்லாம் உலகளவில் எப்படிப் பரவியது என்று பார்ப்பதற்கு முன், அரேபியாவுக்குள் எப்படி வளர்ந்தது, அந்தக்கால அரேபிய சமுதாயம் எப்படிப்பட்டது என்றெல்லாம் புரிந்துகொள்ளவேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் எப்படிப்பட்ட மனிதர்களுக்கு மத்தியில் இறுதித்தூதர் வாழ்ந்தார்கள், எப்படிப்பட்ட மனிதர்களை அவர்கள் மாற்றினார்கள், செழுமைப்படுத்தினார்கள், முழுமைப்படுத்தினார்கள் என்பது அப்போதுதான் புரியும்.

நாமெல்லால் இருபத்தோறாம் நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனாலும் இன்று நடந்துகொண்டிருக்கும் சண்டைகளும், சச்சரவுகளும், அவிழ்த்து விடப்பட்டுக்கொண்டிருக்கும் வன்முறைகளும், செய்யப்படும் கொலைகளும், அடிக்கப்படும் கொள்ளைகளும் அரேபியாவின் இருண்ட காலக்கலாச்சாரத்துக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல. எனவே மீண்டும் மீண்டும் இறுதித்தூதரின் வழிகாட்டுதல் நமக்கு தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மனிதன் பாதி மிருகம் பாதி, இல்லையில்லை, மிருகம் அதிகம், மனிதன் கொஞ்சம் என்று வாழ்ந்துகொண்டிருந்த அவர்களை எப்படி முற்றிலும் மனிதர்களாக, புனிதர்களாக இறுதித்தூதர் மாற்றினார்கள் என்று தெரிந்துகொண்டால் நமக்கும் அது உதவியாக இருக்குமல்லவா? நம்முடைய வாழ்க்கை முறையையும் அவர்களது வாழ்க்கை முறையையும் ஒப்பீடு செய்து பார்ப்பதற்கும் அது வசதியாக இருக்கும். இஸ்லாம் உலகளாவப் பரந்ததன் பின்னணியில் உள்ள ரகசியமும் புரியும். பார்க்கலாமா?

குலமும் கோத்திரமும்

ஒரு மனிதன் தன் பெயரைக்கொண்டு அடையாளம் காணப்படுகிறான் என்பது உண்மைதான். ஆனால் எல்லாக் காலத்துக்கும், எல்லா சமுதாயங்களுக்கும் பொருந்தும் உண்மையல்ல இது. அடையாளப்படுத்துதலின் நிறம் ஊருக்கு ஊர் மாறுகிறது. நாகூர் ரூமி என்று சொன்னால் பலருக்கு என்னைத் தெரியும். முஹம்மது ரஃபி என்று சொன்னால் சிலருக்கு என்னைத் தெரியும். ஆனால் என் ஊரான நாகூர் சென்று நான் நாகூர் ரூமி என்றாலும் முஹம்மது ரஃபி என்று சொன்னாலும் பெரும்பாலானவர்களுக்கு என்னை யாரென்று எளிதில் தெரிந்துகொள்ளமுடியாது. என் தகப்பனார் பெயரையோ, பாட்டனார் பெயரையோ சொன்னால் உடனே நான் அனைவராலும் அறிந்துகொள்ளப்படுவேன்.  ஆம்பூர் பக்கம் ’காந்தான்’ எனப்படும் குடும்பப் பெயர் முக்கியம். நேர்காணலுக்குச் சென்றால் ‘நீங்கள் எந்தக் குடும்பம்?’ என்று கேட்பார்கள். ஆனைகார், மெத்தக்கார், அப்பாபிள்ளை, சீயா என்று ஏதாவது குடும்பப் பெயரைச் சொன்னால் உடனே புரிந்துகொள்ளப்படுவார்கள். உரிய மரியாதையும் கொடுக்கப்படும். பள்ளப்பட்டிக்குப் போய் ஒருவர் பெயரைச் சொல்லி இவர்வீடு எங்கிருக்கிறது என்று கேட்டால், ‘எந்த வகையறா?’ என்று அடுத்த கேள்வி வரும். வகையறாவைச் சொல்லிவிட்டால் போதும், சந்து பொந்துகளிலெல்லாம் புகுந்து அவர் வீடுவரை கொண்டு விட்டுப்போவார்கள்!

குடும்பப் பெயரையும் பெரியவர்கள் பெயரையும் சொல்லிப் புரிந்துகொள்ளும் இந்தப் பாரம்பரியம் ரொம்ப தொன்மையானது. கிரேக்கத்திலும் இப்படித்தான். நீ யார் என்று கேட்டால் ஹோமரின் இலியட் காவியத்தின் கதாநாயகன் அக்கிலிஸ், ‘நான் அக்கிலிஸ்’ என்று சொல்லமாட்டான். அவன் பெயரை எப்போது, யார் கேட்டாலும் ‘நான் பீலியூஸின் மகன் அக்கிலிஸ்’ என்றுதான் சொல்வான்!

அரேபிய பாரம்பரியமும் இப்படிப்பட்டதே. ஒருவரின் பெயரிலேயே சில தலைமுறைகளை நாம் தெரிந்துகொள்ளலாம். அங்கே குலமும் கோத்திரமும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. அவர்களிடமிருந்துதான் நாமும் குடும்பப் பெயர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டிருக்கவேண்டும். ரொம்ப காலமாகவே அரேபிய தீபகற்பத்தில் பல வகையான பழங்குடியினர் அல்லது கோத்திரத்தினர் இருந்தனர். காலப்போக்கில் அவர்கள் மறைந்தும் போயினர். அவர்களைப்பற்றி நாம் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. இஸ்லாம் தோன்றிய வரலாற்றையும், உலகளாவ இஸ்லாம் பரவிய வரலாற்றையும் புரிந்துகொள்ள இது நிச்சயம் நமக்கு அவசியம். முக்கியமான மூன்று கோத்திரத்தினரை அரேபிய வரலாறு அடையாளம் காண்கிறது. யார் அவர்கள்?

 PKM3.11) ’பயீதா’வினர்

’பயீதா’ என்றால் ’அழிந்தொழிந்து போன வகை’ என்று பொருள் என்று கூறுகின்றனர் வரலாற்று ஆசிரியர்கள். இயற்கை அழிவுகள் மற்றும் அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டைகள் காரணமாக இந்த குலம் அல்லது கோத்திரம் இல்லாமல் போயிருக்கலாம். (குலம், கோத்திரம் என்ற இரு சொற்களையும் நான் இங்கே ஒருபொருளிலேயே பயன்படுத்துகிறேன். ஆங்கிலத்தில் tribe, clan ஆகிய சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. ’ட்ரைப்’ என்ற சொல்லுக்கு ’ஒரு பெரிய குடும்பம்’ என்றும், ’க்ளான்’ என்ற இரண்டாம் சொல்லுக்கும் அதே பொருள் வரும். ஆனாலும் உபரியாக, ’சில அல்லது பல குடும்பங்களில் கூட்டு’ என்றும் பொருள் வரும். Tribe என்பதை ’குலம்’ என்றும் Clan என்பதைக் ’கோத்திரம்’ என்றும் புரிந்துகொள்ளலாம்).

திருக்குரானில் குறிப்பிடப்படும் ஆது, தாமூது கூட்டத்தினர் இந்த பயீதா குலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பது வரலாற்று அறிஞர்களின் கணிப்பு.

2)  கஹ்தானியர்கள்.

ய’அராப் இப்னு கஹ்தான் என்பவரின் வழித்தோன்றல்கள் இவர்கள். யமன் தேசம் மற்றும் அரேபியாவின் தென்பகுதியில் இவர்கள் வாழ்ந்தார்கள். கலப்படமற்ற அரேபிய ரத்தம் கொண்டவர்கள் என்று இவர்கள் வர்ணிக்கப்படுகிறார்கள். யமனிகளும் மதினாவில் வாழ்ந்த அவ்ஸ் மற்றும் கஸ்ரத் கோத்திரத்தினரும் கஹ்தானிய பரம்பரையின் வாரிசுகள். (இஸ்லாமிய வரலாற்றில் மதினாவில் வாழ்ந்த அவ்ஸ் மற்றும் கஸ்ரத் கோத்திரத்தினர் மிக முக்கியமானவர்கள். அன்சாரிகள் அனைவருமே அல்லது பெரும்பாலானோர் இக்கோத்திரத்தினர்தான்).

பல மாகாணங்கள் இந்த கஹ்தானியர்களின் ஆளுகையில் இருந்தன. யமன் தேசத்தின் வளர்ச்சியில்  இவர்களுக்கு பெரும் பங்கு இருந்தது. தங்கள் நினைவாக இவர்கள் தம் நாகரீகத்தை விட்டுச் சென்றனர்.

அவர்கள் விட்டுச்சென்ற கல்வெட்டுக்கள் மூலமாக கஹ்தானியர்களின் வரலாறு விஞ்ஞான முறைப்படி இன்று ஆராய்ச்சி செய்யப்படுகின்றது. இஸ்லாத்துக்கு முந்தைய கலாச்சாரம் பற்றி என்ன சொல்லப்பட்டிருந்தாலும் அது கஹ்தானியர்களோடு சம்மந்தப்பட்டது என்பதையும் யமன் தேசத்தோடு தொடர்பு கொண்டது என்பதையும் புரிந்துகொள்வது அவசியம்.

3) அத்னானியர்கள்

இவர்கள் நபி இஸ்மாயீல் அவர்களின் வம்சாவழியினர். நபி இப்ராஹீம் பாலஸ்தீனிலிருந்து மக்காவுக்குக் குடியேறியபோது அது முழுக்க முழுக்க வறண்ட பூமியாக இருந்தது. பிறகு அல்லாஹ்வின் அருளைக்கொண்டு அங்கே ஜம்ஜம் என்ற ஊற்றுக்கிணறு உருவானது.  நபி இஸ்மாயீல் ஜுர்ஹம் அல்லது ஜர்ஹம் என்ற கோத்திரத்தினரின் பெண்ணை மணமுடித்தார். அக்கோத்திரத்தினர் மக்காவுக்கு அருகில் தங்கள் கூடாரங்களை அமைத்திருந்தனர். நபி இஸ்மாயீலின் வம்சா வழியினர் அனேகம். அவர்களில் அத்னான் என்பவரும் ஒருவர். நபி இஸ்மாயீலிடமிருந்து பல தலைமுறைகளுக்குப் பின்னால் வந்தவர் அவர்.

அத்னானின் வம்சாவழியினர் பல கோத்திரங்களாகப் பிரிந்தனர். அவற்றில் மிகுந்த புகழ்மிக்க கோத்திரமாக விளங்கியது குறைஷ் கோத்திரம். பனூ ஹாஷிம் குறைஷிக் கோத்திரத்தின் ஒரு பகுதியாகும்.  ’பனூ’ என்ற சொல் ‘கோத்திரம்’ என்பதற்கான அரபிச் சொல் என்று புரிந்துகொள்ளலாம். இறுதித்தூதரின் குடும்பம் அல்லது கோத்திரம் அத்னானிய வம்சாவழியினரே என்பது இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டியது.

PKM3.2அரேபியர்களின் பொதுவான ஒழுக்கங்கள்

இஸ்லாத்துக்கு முந்திய காலத்தில் அரேபியர்கள் வாழ்ந்த காலத்தை வரலாற்று ஆசிரியர்கள் ’ஜாஹிலிய்யா’  என்று குறிப்பிடுகின்றனர். ‘அறியாமைக் காலம்’ என்று இதனைத் தமிழாக்கலாம்.

அறியாமைக் காலத்தில் வாழ்ந்த அத்னானிய அரேபியர்கள் இயல்பாகவே வள்ளல் தன்மை மிக்கவர்களாகவும், விருந்தோம்பல் செய்யக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் நம்பிக்கை துரோகம் செய்ததில்லை. அப்படிப்பட்ட நிகழ்வுகள் வெகு அரிதாகவே நடந்தன. வாக்கு மீறுவதை அவர்கள் மன்னிக்கமுடியாத குற்றமாகக் கருதினர். நா வன்மை மிக்கவர்களாகவும் அவர்கள் இருந்தனர். (மேலான இந்த பண்புகளுக்கு ‘ஜாஹிலிய்யா’ என்ற சொல் பொருந்தாது.  இந்தப் பண்புகளையெல்லாம் மீறி அவர்கள் செய்த காட்டுமிராண்டித்தனமான, முட்டாள்தனமான, மனிதத்தன்மையற்ற காரியங்கள் அதிகமாக இருந்ததால் இந்தப் பெயர் கொடுக்கப்பட்டது என்று புரிந்துகொள்ளலாம்).

அவர்களைப் பற்றிய இன்னொரு மிகமுக்கியமான விஷயம் அவர்களது அபாரமான நினைவாற்றல். ஒருவரின் பெயரைத் தெரிந்துகொண்டாலே அவரது தகப்பனார், பாட்டனார் என சில தலைமுறைகளின் பெயர்களை நாம் தெரிந்துகொள்ளலாம். அலீ இப்னு அபீதாலிப் என்றால் அபீ தாலிப் உடைய மகன் அலீ என்றும், முஹம்மதிப்னு அப்துல்லாஹ் இப்னு அப்துல் முத்தலிப் இப்னு ஹாஷிம் இப்னு அப்துல் மனாஃப் இப்னு குசை என்றால் குசையுடைய மகன் அப்துல் மனாஃப்; அப்துல் மனாஃபுடைய மகன் ஹாஷிம்; ஹாஷிமுடைய மகன் அப்துல் முத்தலிப்; அப்துல் முத்தலிபுடைய மகன் அப்துல்லாஹ்; அப்துல்லாஹ்வுடைய மகனார் முஹம்மது என்று ஆறு தலைமுறைகளைப் புரிந்துகொள்ளலாம்.

கவிதைகளையும் பேச்சையும் வெகு எளிதாக அவர்கள்  மனனம் செய்தனர். கவிதை இயற்றுவதிலும் கவிதை சொல்வதிலும் அவர்கள் ஈடு இணையற்றவர்களாக விளங்கினர். பேச்சாற்றலும் கவிதையும் வீரமும் அவர்களது மரபணுவிலேயே இருந்தது எனலாம். கவிதையை ‘சிஹ்ர் ஹலால்’ (அனுமதிக்கப்பட்ட மாந்திரீகம்) என்றே அவர்கள் குறிப்பிட்டனர்.  எதிரியிடமிருந்து புறமுதுகிட்டு ஓடுவது அவமானம் என்றே அவர்கள் கருதினர். குதிரையேற்றம், அம்பெய்தல் ஆகியவற்றில் அவர்கள் சிறந்து விளங்கினர்.

இப்படி சில போற்றத்தகுந்த குணங்கள் கொண்ட அவர்களிடம் பல கீழ்த்தரமான, வெறுக்கத்தக்க குணாம்சங்களும் இருந்தன. ஒழுங்கங்கெட்ட அந்த குணங்களும் அவர்களது ரத்தத்தோடு கலந்திருந்தன. அவர்களின் சாதனைகளின் முக்கியத்துவத்தை அவை குறைத்தன. கண்ணுக்குத் தெரியாத அருள் உலகிலிருந்து நபிகள் நாயகம் என்ற ஒளி மட்டும் அவர்கள்மீது படாதிருந்தால் அவர்களும் அவர்களது கலாச்சாரமும், சாதனைகளும், நாகரீகமும் முற்றிலுமாக மண்ணோடு மண்ணாக அழிந்துபோயிருக்கும். அரேபியர்களின் வரலாறு என்று ஒன்று இல்லாமலே போயிருக்கும்.

மிக மிக அற்பமான காரணங்களுக்காக ஐம்பது ஆண்டுகள், நூறாண்டுகள் என அவர்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். மிருகங்களுக்கு இணையான குரோதத்தோடு அவர்கள் இருந்தனர்.

சட்டமோ, ஒழுங்கோ, அரசாங்கமோ இல்லாததால்  எந்தவித கட்டுப்பாடுமின்றி அவர்கள் வாழ்ந்து வந்தனர். இதனாலேயே அவர்கள் ஓரிடத்தில் தங்கி வாழாமல் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் தங்களுக்கும் தங்கள் மிருகங்களுக்கும் உணவு தேடி இடம் விட்டு இடம் போய்க்கொண்டே இருந்தனர். எங்கே தண்ணீரும் தாவரங்களும் இருந்தனவோ, அங்கே தங்கள் கூடாரங்களை அமைத்துக்கொண்டனர். அதைவிடச் சிறந்த இடம் ஒன்றைக் கண்டுவிட்டால் உடனே ஏற்கனவே இருந்த இடத்தைக் காலி செய்துவிட்டுப்  போய்விடுவார்கள். அரேபியாவின் வறண்ட பூகோள சூழ்நிலையும், மிக அதிகமாக அவர்கள் ரத்தம் சிந்தியதும் அவர்களது நாடோடி வாழ்க்கைக்குக் காரணங்களாக அமைந்தன.

யமன் தேசப்பகுதி மட்டும், குறிப்பாக சபா மற்றும் ம’ஆரிப் பகுதிகள், மிகுந்த நாகரீகமுடையதாகவும், மாளிகைகள் கொண்டதாகவும், மரங்களடர்ந்த சாலைகளைக் கொண்டதாகவும் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அரேபியாவின் ஒரு சின்ன பகுதிமட்டும்தான் இவ்விதம் இருந்ததே தவிர ஒட்டு மொத்த அரேபியாவையும் எடுத்துக்கொண்டால் அது நாகரீகமானதாக இருக்கவில்லை, உலகின் பல பகுதிகளை வெற்றிகொண்ட கிரேக்க ரோம சாம்ராஜ்ஜியங்கள் அரேபியாவின் பக்கம் தலைவைத்தே படுக்கவில்லை என்பதே வரலாற்று ஆசிரியர்களின் ஒட்டுமொத்தமான கருத்து. குறிப்பாக இஸ்லாம் அங்கே மலர்ந்தபோது நாகரீகம் என்ற ஒன்று எதுவும் அங்கே இருக்கவில்லை என்றே திருக்குர்’ஆனும் குறிப்பிடுகிறது:

நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் – உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள். இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக்குழியின் கரைமீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறும்பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் வசனங்களை உங்களுக்குத் தெளிவாக்குகிறான் (3:103)

அலீ (ரலி) அவர்களின் பேருரைகளின் புகழ்பெற்ற தொகுப்பான “நஹ்ஜுல் பலாகா” என்ற  நூலில் அரேபியர்களைப் பற்றி அவர்கள் இவ்வாறு சொல்கிறார்கள்:

அரேபியர்களாகிய நீங்கள் மிக மோசமான நம்பிக்கையிலும் மிக மோசமான இடங்களிலும் உங்கள் நாட்களைக் கழித்தீர்கள். கற்களும் செவிட்டுப் பாம்புகளும் நிறைந்த இடங்களிலும் நீங்கள் வசித்தீர்கள். சேறுகலந்த நீரை அருந்தினீர்கள், (பல்லிகள், பேரீச்ச விதை மாவு போன்ற) முரட்டு உணவையும் உண்டீர்கள். உறவினரையும் நண்பர்களையும் கொன்று ரத்தம் சிந்தினீர்கள். உறவினர்களிடமிருந்து பிரிந்து வாழ்ந்தீர்கள். உங்கள் மத்தியில் விக்கரகங்களை வைத்து வணங்கினீர்கள். பாவங்களிலிருந்து நீங்கள் ஒதுங்கியிருக்கவில்லை (நஹ்ஜுல் பலாகா பேருரை 26).

PKM3.3அரேபியர்களின் மதம்

அரேபியர்களுக்கு இறைநம்பிக்கை இருந்தது. அல்லாஹ்வை தலைமைக் கடவுள் என்றும், அவனை நோக்கி, அவனருகில் தம்மைக்கொண்டுசெல்லும் சக்தி வாய்ந்த கடவுள்கள்களாக சிலைகள் இருந்தன என்றும் அவர்கள் நினைத்தனர். இதை திருமறையும் உறுதி செய்கிறது:

(நபியே!) நீர் அவர்களிடம்: “வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று கேட்டால், “யாவரையும் மிகைத்தவனும், எல்லாவற்றையும் அறிந்தோனுமாகிய அவனே அவற்றை படைத்தான்” என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள் (43:9)

“அவர்கள் [அச்சிலைகள்] எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (39:3)

அலீ (ரலி) அவர்களின் ஒரு கருத்துப்படி, அரேபியர்களுக்கு அல்லாஹ்மீது நம்பிக்கை இருந்தது. ஆனால் அல்லாஹ்வைப்பற்றி அவர்கள் பலவிதமான கருத்துக்களைக் கொண்டிருந்தனர். அல்லாஹ் தன் படைப்பினங்களைப் போல உருவம் உள்ளவன் என்று எண்ணினர் பலர். வேறு சிலர் ’அல்லாஹ்’ என்ற பெயரிலிருந்து வேறு பெயர்களை உருவாக்கி அவற்றுக்கான சிலைகளை வழிபட்டனர். லாத், உஸ்ஸா போன்ற பெயர்கள் இப்படிப்பட்டவையே.

அல்லாஹ்வை அரேபியர்களுக்கு இறுதித்தூதர் அறிமுகப்படுத்தவில்லை. ’அல்லாஹ்’ என்ற பெயர் அரேபியர்களுக்கு மிகவும் அறிமுகமான பெயர்தான். இறுதித்தூதரின் தந்தையார் பெயர்கூட அப்துல்லாஹ்தானே? அப்து+அல்லாஹ் என்பதன் சேர்க்கைதான் அப்துல்லாஹ்வாகிறது. இதுமட்டுமல்ல, அரேபியர்கள் சத்தியம் செய்யும்போது ”அல்லாஹ்வின் மீதுஆணையாக” என்றுதான் சொல்வது வழக்கம்.

அரேபியர்களில் சிலர் சூரியனையும் சந்திரனையும் வழிபட்டனர். பனீ மலீஹ் என்ற கோத்திரத்தினர் ஜின்களையும், ஹுமைர், கனானா, தமீம், லகம், தா’யீ, கய்ஸ் மற்றும் அசது கோத்திரத்தினர் சூரியன், சந்திரன், தர்பன், கனோபஸ் போன்ற நட்சத்திரங்களையும், வியாழன், புதன் போன்ற கிரகங்களையும் வணங்கினர் என்றும் கல்பி என்ற பிரபலமான அரேபிய வரலாற்று ஆசிரியர் எழுதினார்.

சிலை வணக்கம்

அதுமட்டுமல்ல. அரேபியர்கள் கடவுள் என்று எண்ணி வணங்கிய சிலைகளில் முக்கியமானவை ஹுபல், லாத், மனாத் மற்றும் உஸ்ஸா ஆகியவையாகும்.

ஹுபல்

ஹுபல் சிலை ஆகப்பெரியது. அது ஆண் உருவத்தில் செய்யப்பட்டிருந்தது. க’அபாவுக்குள்ளேயே அது வைக்கப்பட்டிருந்தது. அதுதான் உள்ளே இருந்த 360 சிலைகளிலும் பெரியது. அந்தச் சிலையைப் பார்க்கும் அனுமதி வழங்கும் உரிமை குறைஷியரிடம்தான் இருந்தது. சிலையில் வலது கை உடைந்திருந்ததாகவும் அதற்கு பதிலாக தங்கத்தில் கை செய்யப்பட்டுப் பொருத்தப்பட்டிருந்தது என்றும் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ஒருவகையான சிவப்பு ரத்தினத்தில் அந்த சிலை செய்யப்பட்டிருந்தது என்றும் குறிப்பிடப்படுகிறது.

குறி சொல்வதற்கும், குறிகேட்பதற்கும், இறப்பின்போதும், கன்னித்தன்மையை அறியவும், திருமணம் போன்ற சடங்குகளுக்கும் அந்தச் சிலையை அரேபியர் பயன்படுத்தினர்.

ஏழு அம்புகளை அதற்குமுன்னால் எய்து குறி கேட்பது அவர்கள் வழக்கம். உதாரணமாக ஒரு அம்பில், ‘கடவுள் செய்யச் சொல்கிறார்’ என்று எழுதப்பட்டிருக்கும். இன்னொன்றில், ‘கடவுள் செய்யவேண்டாம் என்று சொல்கிறார்’ என்றும், இன்னொன்றில் ஒன்றுமில்லாமலும் இருக்கும். மூன்று அம்புகளில் எந்த அம்பு ரொம்ப தூரம் போய்த் திரும்புகிறதோ அதில் உள்ள வாசகமே கடவுளின் விருப்பமாக எடுத்துக்கொள்ளப்படும். ஒன்றும் எழுதப்படாத அம்பு வந்தால், மீண்டும் முன்போல் செய்யப்படும். இது ஒரு முறை. இன்னொரு முறையில் மூன்று அம்புகளையும் பின்னால் அம்பறாத்தூணியில் போட்டுக் குலுக்கி எடுப்பர். எது வருகிறதோ அது கடவுளின் விருப்பமாக ஏற்றுக்கொள்ளப்படும்.

PKM3.4அப்துல்லாஹ்வா 100 ஒட்டகங்களா

இறுதித்தூதரின் பாட்டனார் அப்துல் முத்தலிப் ஒருமுறை தனக்கு பத்து மகன்கள் பிறந்தால் அதில் ஒருவரை ஹுபலுக்கு பலி கொடுப்பேன் என்று உறுதியெடுத்திருந்தார். ஆமாம். நரபலி கொடுக்கும் சமுதாயமாக அரேபியா இருந்தது! அதன் பிறகு சொல்லி வைத்தமாதிரி அவருக்கு பத்து மகன்கள் பிறந்தனர். முடிவு செய்திருந்தபடி ஹுபல் இருக்கும் இடம் சென்று அம்புகளில் மகன்களின் பெயர்களை எழுதி அவற்றை எய்து பார்த்தார். அப்துல்லாஹ் என்ற பிரியமான, அழகான, கடைசி மகனின் பெயர்தான் வந்தது! சொந்தக்காரர்களின் அறிவுரைப்படி ஒரு குறிசொல்லும் பெண்ணிடம் போய் அறிவுரை கேட்டார். தன்மீது ஒரு ஆவி வந்து குறிசொல்லும், பிறகு வாருங்கள் என்று அவள் அனுப்பிவிட்டாள். (ஆஹா, ஆவி அமுதாக்கள் அரேபியாவிலேயே தோன்றிவிட்டனர் போலும்)! பின்னர், ஆவி வந்துவிட்டது, கேட்டுவிட்டேன் என்று சொல்லி பின்வருமாறு கூறினாள்.

அப்துல்லாஹ் என்று ஒரு அம்பில் எழுதி, பத்து ஒட்டகங்கள் என்று இன்னொரு அம்பில் எழுதிப் போட்டுப்பார்க்க வேண்டும். ஒட்டகம் என்று வந்தால் பத்து ஒட்டகங்களை அறுத்து பலிகொடுத்துவிட்டு அப்துல்லாஹ்வைக் காப்பாற்றலாம். மாறாக அப்துல்லாஹ் என்ற பெயர் வந்தால் மீண்டும் பத்து ஒட்டகங்கள் என்று எழுதி போட்டுப்பார்க்க வேண்டும். இப்படியே ஒட்டகங்கள் என்ற பெயருள்ள அம்பு வரும்வரை போட்டுப்பாருங்கள் என்று கூறினாள்!

ஆனால் எத்தனை முறை போட்டாலும் அப்துல்லாஹ்வின் பெயர்தான் வந்தது! கடைசியில் 100 ஒட்டகங்கள்தான் அப்துல்லாஹ்வைக் காப்பாற்றின! அப்துல்லாஹ்வுக்கு பதிலாக 100 ஒட்டகங்கள் அறுக்கப்பட்டு ஹுபலுக்கு பலி கொடுக்கப்பட்டன! உலகத்துக்கே வழிகாட்டக்கூடிய ஒளியைப் பெற்றுத்தர இருந்த ஒளியின் ஒளியை ஒரு முட்டாள்தனமான நம்பிக்கையின் காரணமாக ஒரு சிலைக்கு பலி கொடுத்திருந்திருப்பார்கள்! இப்படிக்கூடவா  மனிதர்கள் இருந்திருப்பார்கள் என்று திகைக்க வைக்கிறது சரித்திரம். எனினும் அப்துல் முத்தலிபுக்கு மாற்றுவழி சொல்லி பெருமானாரின் தந்தையார் பலியாகாமல் காப்பாற்றிய அந்தக் குறிசொல்லும் பெண்ணுக்கு நம் சமுதாயம் கடமைப்பட்டிருக்கிறது. அவள் அப்துல்லாஹ்வைக் காப்பாற்றியதால் நமக்கு நபிகள் நாயகம் கிடைத்தார்கள்!

ரத்தமின்றி சத்தமின்றி மக்கா வெற்றிகொள்ளப்பட்டபோதுதான் இறுதித்தூதர் க’அபாவினுள் இருந்த 360 சிலைகளையும் உடைத்து அகற்றினார்கள். ஹுபலையும் சேர்த்து.

லாத், மனாத், உஸ்ஸா

இம்மூன்றும் பெண் உருவத்தில் உருவாக்கப்பட்ட சிலைகள். லாத், மனாத், உஸ்ஸா ஆகிய மூன்றும் ’அல்லாஹ்வின் மகள்கள்’ என்றும் கருதப்பட்டன. தாயிஃப் நகரத்தில் லாத்தின் சிலை வணங்கப்பட்டது. காதலுக்கும் காமத்துக்குமான கிரேக்கப் பெண் கடவுளான அஃப்ரோடைட்டிக்கு இணையான இன்னொரு பெயர்தான் லாத் என்றும் கூறப்படுகிறது. தாபூக் யுத்தத்தின்போது பெருமானாரின் உத்தரவின் பேரில் இச்சிலை அகற்றப்பட்டது.

மனாத் சிலை விதியின் கடவுளாகக் கருதப்பட்டது. மதினாவில்கூட பெருமானாரின் வரவுக்கு முன்வரை இச்சிலை வணங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தாயிஃப் நகரத்தில் உஸ்ஸாவின் சிலையும் இருந்தது. திருமறையும் இவைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது. உஹதுப்போரில் குறைஷிகள் “லாத்தின் மக்களே, உஸ்ஸாவின் மக்களே” என்றுதான் போர்க்குரல் எழுப்பினார்கள்! நக்லாவில் இருந்த உஸ்ஸாவின் சிலையை காலித் இப்னு வலீத் தகர்த்தார்.

ஒவ்வொரு கோத்திரமும், குடும்பமும்கூட குடும்பக் கடவுள், கோத்திரக்கடவுள் என்று பலவற்றை வழிபட்டனர். இன்று காணப்படும் குலதெய்வ வழிபாட்டின் தொடக்கமாக அதைக்கருதலாம். தினசரி அவர்கள் வாழ்வில் நடந்த நல்லது கெட்டதுக்குக் காரணம் அச்சிலைகள்தான் என்று அவர்கள் நினைத்தனர். ஒவ்வொரு கோத்திரத்தினரும் தங்கள் இஷ்டசிலைகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் க’அபாவைச் சுற்றி வைத்திருந்தனர். அவற்றின் பாதுகாப்புக்கு அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர். அச்சிலைகளைப் பூட்டி வைத்திருந்த குட்டிக்கோயில்களின் சாவிகள் கோத்திரத்தினரின் குடும்பங்களிலேயே இருந்தன. வழிவழியாக அச்சாவிகள் கைமாறின.

குடும்பச் சிலைகளை குடும்பத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொரு நாள் இரவும் பகலும் வணங்கினர். எங்காவது பிரயாணம் செல்வதென்றால் சிலைகளை எடுத்து தம் உடம்பில் தேய்த்துக்கொள்வார்கள். பிரயாணத்தின்போது பாலைவனத்தில் இருந்த கற்களை வணங்கினார்கள். எங்காவது போய் இறங்கித் தங்கும்போது நான்கு கற்களைத் தேர்ந்தெடுத்து அதில் மிக அழகானது எதுவோ அதை வணங்கினார்கள். (’பிகே’ திரைப்படம் நினைவுக்கு வருகிறதா?) மற்ற மூன்று கற்களையும் உணவு சமைக்கப் பயன்படும் அடுப்பாகப் பயன்படுத்தினார்கள். இவ்வகைச் சிலைகளுக்கு ’அன்சாப்’ என்று பெயர். அழகாக வடிவமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்ட சிலைகளுக்கு ’அவ்தான்’ என்று பெயர். தங்க அல்லது வெள்ளி முலாம் பூசப்பட்ட சிலைகள் மற்றும் மரத்தால் செய்யப்பட்ட சிலைகளுக்கு ‘அஸ்னாம்’ என்று பெயர்.

மிருகங்களை பலி கொடுப்பதன் மூலம் தாம் வணங்கிய சிலைகளின் நல்லெண்ணத்தைச் சம்பாதிக்க முடியும் என்று அரேபியர்கள் நம்பினர். அப்படி பலி கொடுக்கப்பட்ட மிருகங்களின் ரத்தத்தை அச்சிலைகளின் தலைகளிலும் முகங்களிலும் தேய்த்தனர். முக்கியமான காரியங்களை நிறைவேற்றுமுன் அச்சிலைகளைக் ’கலந்தாலோசித்தனர்’!

அது எப்படி என்கிறீர்களா? அது ரொம்ப எளிது. இரண்டு குச்சிகளில் ‘செய்’, ‘செய்யாதே’ என்று எழுதி அச்சிலைகளின் முன் அவைகளைத் தூக்கிப்போட்டு கைகளை நீட்டுவர். ‘செய்’ குச்சி வந்தால் தெய்வம் செய்யச்சொல்வதாக எடுத்துக்கொள்வார்கள். ‘செய்யாதே’ குச்சி வந்தால் அதுவே தெய்வத்தின் யோசனை என்பதாக எடுத்துக்கொள்வர். ஹுபலை வைத்து அப்துல்லாஹ் விஷயத்தில் என்ன நடந்தது என்று ஏற்கனவே பார்த்தோம்.

மூட நம்பிக்கைகள் — இறந்த பிறகு மனிதனின் நிலை

இறப்பிற்குப் பிறகான வாழ்வு பற்றி அரேபியர்கள் கொண்டிருந்த கருத்து ரொம்ப விசித்திரமானது. ஒரு மனிதன் இறந்த பிறகு அவனது ஆன்மா ஒரு பறவையின் வடிவத்தில் அவன் உடலை விட்டு வெளிவருகிறது. ஒரு ஆந்தையை ஒத்திருக்கும் அதன் பெயர் ’ஹமா வ சதா’. அது பிணத்தின் அருகில் அமர்ந்து தொடர்ந்து புலம்பிக்கொண்டிருக்கும். அந்த புலம்பல் கேட்க மிகவும் அச்சமூட்டுவதாகவும் பயங்கரமாகவும் இருக்கும்.

இறந்தவரைப் புதைத்த பிறகு ஆன்மப்பறவை இவ்விதமாக அந்த மனிதனின் உடலருகே அமர்ந்து முடிவற்ற அதன் புலம்பலைச் செய்துகொண்டே இருக்கும். சமயங்களில் அது இறந்தவரின் வீட்டுக்கூரையின் மீது அமர்ந்துகொண்டு குழந்தைகள் நிலை என்ன என்பதைத் தெரிந்துகொள்ளும்.

இயற்கைக்கு மாறான விதத்தில் ஒருவர் இறந்துபோனால், உதாரணமாக கொல்லப்பட்டிருந்தால், அப்பறவை ”அஸ்கூனீ” (என்னைக்கொன்றவனின் ரத்தத்தால் என் தாகத்தைத் தணியுங்கள்) என்று கத்திக்கொண்டே இருக்கும் – என்றெல்லாம் அரேபியர் நம்பினர்.

ஆனால் அரேபியர்களோடு வாழ்ந்த யூதர்களும் கிறிஸ்தவர்களும் சிலைவணக்கத்தை வெறுத்தனர். யத்ரிப் எனப்பட்ட மதீனாவில் யூதர்கள் அதிகமாக இருந்தார்கள். கிறிஸ்தவர்கள் நஜ்ரான் பகுதியில் அதிகமாக இருந்தனர். (நஜ்ரான் என்பது சவுதி அரேபியாவில் யமன் நாட்டுக்கு அருகில் இருந்த ஒரு நகரம்). காலப்போக்கில் இவ்விரு சமுதாயங்களும்கூட ஓரிறைக் கொள்கையிலிருந்து விலகிப்போயின.

— இருள் தொடரும். விடியும்வரை காத்திருப்போம்.

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s