சிலையும் நீ, சிற்பியும் நீ — அச்சம் என்பது…– 11

SNSN March Coverஅச்சம் இயற்கையானது. எனவே அதற்குரிய இடத்தில் அதை வைத்துவிடவேண்டும்

  • ஹஸ்ரத் மாமா

அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உரிமையடா – என்ற பிரபலமான கண்ணதாசன் பாடல் எல்லோருக்கும் தெரியும். அஞ்சாமல் இருப்பது திராவிடர் உரிமை மட்டுமல்ல. அது ஒட்டு மொத்த மனித குலத்துக்கும் அவசியமான ஒன்று. அச்சம் என்பது மடத்தனமானது என்று புரிந்துகொள்ளுமுன் அது மிகவும் இயற்கையானது என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆமாம். அச்சம் என்பது இயற்கையானது. இயல்பானது. எல்லா உயிர்களுக்கும் சொந்தமானது. ஆனால் அதிலிருந்து எப்படி மீள்வது என்ற ரகசியம் மனிதர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. அதுவும் எல்லா மனிதர்களுக்குமல்ல!

ஒருவர் ரொம்ப துணிச்சலானவர். எந்தப் பிரச்சனையானாலும் சட்டென்று ஒரு முடிவெடுத்து காரியத்தில் இறங்கிவிடுவார். இன்னொருவர் ரொம்ப பயந்தாங்கொள்ளி. நம்ம தெனாலி மாதிரி தொட்டதெற்கெல்லாம் பயப்படுவார். இந்த இரண்டு பேரில் யாரிடத்தில் பயமிருக்கிறது என்று கேட்டால், இது என்ன கேள்வி பயந்தாங்கொள்ளியிடத்தில்தான் என்று பயமில்லாமல் ஒரு பதிலை நீங்கள் சொல்வீர்கள். ஆனால் அது தவறான பதில்!

இங்குதான் நான் சொல்லவரும் ரகசியமே இருக்கிறது!

ஹெர்குலிஸ்  அல்லது அக்கிலிஸ் மாதிரி துணிச்சலான ஒரு மனிதனுக்கும் மிஸ்டர் பீன் மாதிரி பயந்தாங்கொள்ளிக்கும் இடையில் உள்ள ஒற்றுமை இரண்டு பேருக்குமே பயம் இருக்கிறது என்பதுதான்! என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆச்சரியம்தான். ஆனால் இதுதான் உண்மை. எல்லாம் மனிதர்களுக்குள்ளும் பயம் இருக்கிறது. அப்படியானால் துணிச்சலான வீரனுக்கும் அச்சம் கொண்ட ஒருவருக்கும் என்ன வித்தியாசம்? இந்தக் கேள்விக்கான பதிலில்தான் ரகசியம் இருக்கிறது.

ரகசியம் இதுதான். துணிச்சலானவர்கள் பயத்தை மீறி காரியத்தில் இறங்கிவிடுகிறார்கள். ஆனால் பயந்தாங்கொள்ளிகளோ அச்சத்தால் செய்யவேண்டிய எதையும் செய்யாமல் தயங்கிக்கொண்டே இருந்துவிடுகிறார்கள். இதுதான் வித்தியாசம். ஒருவன் பிரச்சனையை எதிர்கொள்கிறான். இன்னொருவன் பிரச்சனைக்குள்ளேயே முடங்கிவிடுகிறான்.

முல்லா ஒருநாள் மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டார். என்ன அங்கே சத்தம் என்று அவர் மனைவி அதட்டலாகக் கேட்டார். ஒன்றுமில்லை, என் சட்டை கீழே விழுந்துவிட்டது என்று முல்லா பதில் சொன்னார். சட்டை விழுந்தால் ஏன் அதற்கு இவ்வளவு சப்தம் என்று மீண்டும் முல்லாவின் மனைவி கேட்க, “ஒன்னுமில்ல, அந்த சட்டைக்குள்ள நானிருந்தேன்” என்றார் முல்லா! மனைவிக்கு அவ்வளவு பயம்! நீங்கள் எந்த ரகம்?

பயமே இல்லாத மனிதனே கிடையாது. அப்படி ஒருவர் இருக்க முடியாது. அப்படி இருந்தால் அவர் மனிதனல்ல. இயந்திரம். ஏனெனில், இயந்திரங்களுக்குத்தான் அச்சமே கிடையாது. ஆனால் அதற்காக இயந்திரங்களை துணிச்சலான கம்ப்யூட்டர், வீரமான சைக்கிள் என்றெல்லாம் கூறுவோமா? மாட்டோமல்லவா?

சரி, அப்படியானால் அச்சம் என்பது எல்லா மனிதர்களுக்கும் உரியது என்று விளங்கிவிட்டது. பிரச்சனை என்னவென்று தெரிந்துவிட்டது. அதை எப்படித் தீர்ப்பது?

முதலில் பிரச்சனையைப் புரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் அதை எப்படித் தீர்ப்பது என்று புரிந்துகொள்ளமுடியும்.

SNSN -- 11.1அச்சம் வரும்போது நம் உடல் அதைக் காட்டிக்கொடுத்துவிடும். முகம் வெளுக்கும், இதயம் அதிகமாகத் துடிக்கும், நாடித்துடிப்பின் வேகம் குறையும், உடல் நடுங்கும், வியர்க்கும், குரல் கம்மும், பேசமுடியாமல் போகும் – இதெல்லாம் சில அறிகுறிகள். இவை அத்தனையும் ஒருசேர நடக்கும் என்று சொல்லவரவில்லை. இவற்றில் ஏதாவதொன்று அல்லது சில அறிகுறிகள் இருக்கலாம். இவற்றின் மூலமாக நீங்கள் அச்சத்தில் இருக்கிறீர்கள் என்பதை நீங்களோ அல்லது உங்களை கவனிக்கும் மற்றவரோ புரிந்துகொள்ள முடியும்.

முதல் முறையாக என் தம்பி ஒருவர் மேடையேறி ஒரு பாடலைப் பாடினார். ”விழியே கதை எழுது” என்ற எம்ஜியார் படப்பாடலின் மெட்டில் ஒரு பாட்டு. “மனமே பயமெதற்கு” என்பது முதலடி! அவர் அதைப் பாடியபோது அவருக்கு அச்சத்தில் வியர்த்து விட்டது. இரு கைகளாலும் சட்டையைப் பிடித்துகொண்டு அவர் பாடிய அந்த அச்சப்பாடலை இன்று நினைத்துப் பார்த்தாலும் சிரிப்பு வருகிறது!

நம்முடைய பயங்களில் பெரும்பாலானவை நம்முடைய கற்பனையின் குழந்தைகள்தான். நாம் பணி புரிந்த ஊரில் உள்ளவர்கள் எதையாவது சாப்பிடச் சொன்னால், “அது குளிர்ச்சியாச்சே” என்பார்கள். அல்லது “அது சூடாச்சே” என்பார்கள். இந்த உலகில் சூட்டையும் குளிர்ச்சியையும் தவிர வேறு என்ன இருக்கும்? மாறி மாறி அவைதானே இருக்கும்? அவர்கள் சூட்டுக்கும் குளிருக்கும் பயந்துகொண்டே இருந்தால் எதையுமே சாப்பிடமுடியாமல் பட்டினியால் சாக நேரிடும்! ஆனால் பட்டினி பயம் மட்டும் அவர்களுக்கு வரவே இல்லை! பரிட்சை எழுத, மேடையில் பேச, உயரத்திலிருந்து கீழே பார்க்க, காரில் செல்ல, பைக்-கில் செல்ல, குளிர்ந்த நீர் குடிக்க – இப்படி நமது அச்சங்கள் அனேகம்.

இது ஒத்துக்கொள்ளாது, அதைச் சாப்பிடக்கூடாது, இதைச் சாப்பிடக்கூடாது, அது கொழுப்பு, இது இனிப்பு, பி.பி. ஏறிவிட்டது, பி.பி. இறங்கிவிட்டது, சளி பிடிக்கும், காய்ச்சல் வரும், தனியாக இருக்க பயம், சேர்ந்து இருக்க பயம், பேச பயம், பழக பயம், பெண்கள் என்றால் பயம், ஆண்கள் என்றால் பயம், முரட்டு மீசையைப் பார்த்தால் பயம், அடர்த்தியான தாடியைப் பார்த்தால் பயம், உயரமான, குண்டான, கருப்பான ஆட்களைக் கண்டால் பயம், வாத்தியார் பயம், பரிட்சை பயம், அப்பா பயம், மாமா பயம், பேய் பயம், இருட்டு பயம், இந்தியாவுக்கு அமெரிக்க பயம், அமெரிக்காவுக்கு ஆப்கன் பயம், மீனவர்களுக்கு சிங்கள பயம், தொண்டர்களுக்கு தலைவர் பயம், தலைவர்களுக்கு கைது பயம் – அப்பப்பா, நமது அச்சங்களின் அட்டவணைக்கு முடிவே கிடையாது போலிருக்கிறது.

SNSN -- 11.2அச்சத்தை வெல்வது எப்படி?

அப்படியானால் அச்சத்தை வெல்வது எப்படி? இந்தக் கேள்விக்கான சரியான பதில் அச்சத்தை வெல்ல வேண்டியதே இல்லை என்பதுதான்! ஆமாம். எதையும் நாம் அடக்கவோ, அமுக்கவோ முயற்சி செய்தால் அதோடு போராட வேண்டிவரும். இப்படிக் கஷ்டப்பட்டுப் போராடிப் பெறுகின்ற வெற்றி தற்காலிகமானதே. இன்னொரு சந்தர்ப்பத்தில் அது பூதாகாரமாக வெளியில் வரும்.

அச்சம் கொண்டுபோகும் திசையில் செல்லக்கூடாது. மாறாக மகிழ்ச்சி செலுத்தும் திசையில் செல்லவேண்டும். ஆனால் நம்மைச் சந்திக்கின்ற ஒவ்வொருவரும், நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு சூழ்நிலையும் நமக்கு அச்சத்தை அளிப்பதாகவே இருக்கின்றன. அச்சம் இருந்தால் நாம் சுதந்திரமாகவே இருக்க முடியாது.

ஆனால் நம் சமூகமும், நாம் சார்ந்திருக்கும் மதங்களும் நமக்கு அச்சத்தை போதிப்பவையாகவே இருக்கின்றன. இந்த உலகில் ஜெயிக்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம், மரணம் பற்றிய அச்சம், நரகம் பற்றிய அச்சம் – இப்படி. ஆனால் ஒவ்வொரு குழந்தையும் அச்சங்களின்றி சுதந்திரமாகத்தான் பிறக்கிறது. ஆனால் வளர வளர அச்சங்கள் அதன் மீது திணிக்கப்படுகின்றன. அன்பின் பேராலும், பாரம்பரியத்தின் பேராலும், ஏன் விஞ்ஞானத்தின் பேரால்கூட.

சின்ன வயதில் அம்மா காட்டிய ‘பூச்சாண்டி’தான் வளர்ந்த பிறகு தனியாகப் போக பயம், தனியாக இருக்க பயம், இருட்டு பயம், பேய், பிசாசு பயம் என்று வளர்கிறது. புரிந்துகொண்டால் இதிலிருந்து நிச்சயமாக மீள முடியும்.

அப்படியானால் என்ன செய்வது?

இரண்டு வழிகளில் அச்சத்திலிருந்து வெளிவரலாம். ஒன்று ஏற்கனவே அதோடு போராடாமல், அதைப் புரிந்துகொள்வது. இன்னொரு வழி, எதற்காக பயப்படுகிறோமோ, அந்தக் காரியத்தையே செய்துவிடுவது. ஆமாம். நான் அப்படித்தான் செய்தேன்.

SNSN -- 11.3நான் ரொம்ப குள்ளமும் அல்ல, உயரமும் அல்ல. ஆனால் நடுத்தரத்துக்கும் கொஞ்சம் கீழே. எனக்கு கார் ஓட்டக் கற்றுக்கொள்ள பயம். ஆனால் நான் என்ன செய்தேன்? கார் வாங்கிய பிறகு ஓட்டக் கற்றுக்கொண்டேன். லைசென்ஸும் வாங்கி விட்டேன். ஆனால் பயம் போனதா என்றால் இல்லை. ஏன்? கார் லைசன்ஸ் வாங்க அதிக பட்சமாக ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம்தான். அதற்குள் கார் எப்படி ஓட்டுவது என்ற ’தியரி’ மட்டும்தான் நன்றாகக் கற்றுக்கொள்ளலாம்! ஆனால் நிஜத்தில் நிறைய கார் ஓட்டுகின்ற அனுபவம் ஏற்படுகின்ற வரையில் பயம் போகாது. எனக்கும் அப்படித்தான். நான் என்ன செய்தேன்?

ஈரோட்டில் ஒரு விழாவில் என்னைப் பேச அழைத்திருந்தார்கள். நான் இருந்த ஊரிலிருந்து ஈரோடு 240 கிலோ மீட்டர் தூரம்! நானே காரை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுவது என்றுமுடிவெடுத்து அதை நிறைவேற்றினேன்! அதிலிருந்து கார் ஓட்டுவது பற்றிய பயம் என்னைவிட்டுப் போனது!

மின் விசிறியின் கீழ் படுத்தால் அது தலைமீது விழுந்துவிடுமென்று சிலருக்கு பயமிருக்கும். அப்படிப்பட்டவர்கள் மின்விசிறிக்குக் கீழேயே படுக்கவேண்டும் என்று என் குருநாதர் சொல்லுவார். அதுவும் பயம் போக்கும் வைத்தியம்தான். பயப்படும் திசையிலேயே சென்று பயப்படுவதில் உண்மையில் எந்த அர்த்தமும் இல்லை என்று புரிந்துகொள்வது. எதைச் செய்ய பயப்படுகிறோமோ அதையே செய்வது. பயந்துகொண்டே இருந்தால் நீங்கள் கோழையாவது நிச்சயம். பயத்துக்கு எதிர் திசையில் விழிப்புணர்வுடன் நீங்கள் செல்ல ஆரம்பிக்கும்போதே நீங்கள் ஞானத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று கூறுகிறார் ஓஷோ!

ஒருவகையில் பார்க்கப்போனால் பயம் என்பதுகூட ஒருவகையான செயல்படாத கோபம்தான். அது செயல்படும் கோபத்தையும் வன்முறையயும்கூட உருவாக்க வல்லது. தீவிரவாதிகளின் செயல்பாடுகளெல்லாம்கூட ஒருவகையில் அவர்களது அச்சத்தின் வெளிப்பாடுதான். எனவே அச்சம் எந்த நேரத்திலும் ஆத்திரமாகவும், கோபம் எந்த நேரத்திலும் பயமாகவும் மாறும் சாத்தியமுள்ளது.

இன்னொரு வகையில் பயம்கூட அறிவுதான். பயத்தினால்தான் தீக்குள் நாம் விரலை விடுவதில்லை. பயத்தினால்தான் பாம்பைக் கண்டால் ஓடுகிறோம். பயத்தினால்தான் சாலையிம் நாம் வலதுபக்கமாகவோ அல்லது இடது பக்கமாகவோ வாழும் நாட்டின் சாலை விதிகளை அனுசரித்து நடக்கிறோம்.  பயத்தினால்தான் ஹாரன் சப்தம் கேட்டவுடன் ஒதுங்குகிறோம். அந்த பயமில்லை என்றால் நமக்கு ஆபத்துதான்!  ஒருவகையில் பயம்தான் அனேக ஆபத்துகளிலிருந்து  நம் உயிரைக்காப்பாற்றுகிறது. இப்படிப்பட்ட பயங்களுக்கு நாம் நன்றி சொல்வதுதான் முறை!

ஆனால் இந்த பயம் இயல்புக்கும் இயற்கைக்கும் மாறாக அதீதமாக மாறும்போதுதான் பிரச்சனைகள் வருகின்றன. அப்போது அந்த பயமே ஒரு நோயாக மாறுகிறது. பயம் ஒரு நோயாக மாறும்போது எதற்கெல்லாம் பயப்படத் தேவையில்லையோ அதற்கெல்லாம் பயப்பட ஆரம்பிக்கிறோம். ஆனால் அவ்வாறான பயங்களை நியாயப்படுத்தி நாம் காரணங்கள்கூட சொல்லலாம். அவற்றை ஃபோபியா (phobia) என்று உளவியல் கூறுகிறது.

உதாரணமாக, உயரமான இடத்திலிருந்து ஒருவருக்கு கீழே பார்க்க பயம் இருக்கலாம். அப்படிப் பார்க்கும்போது அவர் உடம்பு ஜில்லிடலாம். வயிற்றின் உள்ளே வண்ணத்துப் பூச்சிகள் படபடக்கலாம். இது சாதாரணம் பயம். ஆனால் பத்தாவது மாடியில் உள்ள கம்பனியில் கிடைத்த வேலையை, கம்பனி பத்தாவது மாடியில் இருக்கிறது என்ற காரணத்துக்காக விடுவதென்பது ஃபோபியா. ஊசியைப் பார்த்தால், ரத்தத்தைப் பார்த்தால் பயப்படுவது சாதாரணமானது. ஆனால் அதற்காக ஒரு டாக்டர் மாப்பிள்ளையை  அல்லது பெண்ணை வேண்டாமென்று சொல்வது ஃபோபியா! இந்த வீட்டுக்குள்ளே போனால் வீடு இடிந்து தலையில் விழுந்துவிட்டால் என்ன செய்வதென்று கற்பனை செய்து எந்த வீட்டுக்குள்ளும் போகாமலிருந்தால் அது ஃபோபியா! விபத்துகள் ஏற்படுகின்றன என்பதற்காக காரிலோ, பஸ்ஸிலோ, ரயிலிலோ, விமானத்திலோ போக மறுப்பது ஃபோபியா.

கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் அச்சம் என்பது நமது கற்பனையால் உருவாவதாகும் என்பது புரியும். அது நிகழ்காலத்தில் நடக்கும் ஒரு விஷயத்தை ஒட்டி வருவதில்லை. எதிர்காலத்தில் நடக்கப்போகும் அல்லது நடக்காமல் போகும் ஒரு கற்பனை சார்ந்த விஷயத்தை ஒட்டியே வருகிறது.

உங்களுக்குப் பின்னால் படு வேகமாக ஒரு கார் வருகிறது. இன்னும் சில வினாடிகளில் அது உங்கள்மீது மோதி உங்களை சாகடித்துவிடும் என்று வைத்துக்கொள்வோம். அப்போது உள்ளுணர்வால் தூண்டப்படும் நீங்கள் சட்டென்று ஒதுங்கி உங்களைக் காப்பாற்றிக்கொள்வீர்கள். அது அச்சத்தால் செய்யப்பட்ட காரியமல்ல. அதீத அறிவினால் செய்த காரியமாகும். ஆமாம்.  இல்லாத ஒன்றுக்காக நீங்கள் கற்பனையால் பயப்படவில்லை. நிச்சயமான ஒரு அபாயத்திலிருந்து உங்களைக் காக்க நீங்கள் எடுத்துக்கொண்ட ஒரு முயற்சிதான் அது. அதில் அச்சம் ஏதுமில்லை. அறிவு மட்டுமே இருக்கிறது. இது வேறு, இப்படி நடந்து விடுமோ, அப்படி நடந்துவிடுமோ என்று நினைத்து, கற்பனை செய்து அதனால் செய்யவேண்டிய காரியத்தைச் செய்யாமல் போனாலோ, செய்யக்கூடாத காரியத்தை செய்தாலோ – அதுதான் அச்சத்தின் வெளிப்பாடு. எனவே அச்சம் எப்போதுமே எதிர்காலத்தோடும் கற்பனையோடும் தொடர்பு கொண்டது. அது நிகழ்காலத்தோடும் நிஜத்தோடும் தொடர்பு கொண்டதல்ல.

ஆன்மிக உண்மை

ஒரு ஆழமான ஆன்மிக உண்மை என்னவெனில் ’நான்’ என்ற நினைப்புதான் அச்சத்துக்குக் காரணம். ஆமாம். நமக்கு எதாவது ஆகிவிடுமோ என்ற நினைப்புதான் அச்சத்தை உருவாக்குகிறது.

டயஜீனஸ் என்று ஒரு ஞானி இருந்தார். அவர் ’ஹாய்’யாகப் படுத்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொண்டிருந்தார். அங்கு வந்த மாவீரர் அலெக்சாண்டர், “நான் உலகை வென்ற அலெக்சாண்டர். உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமா?” என்று கேட்டார்.

“ஆமாம். நீங்கள் என் மீது படும் வெயிலை மறைத்துக்கொண்டிருக்கிறீர்கள். கொஞ்சம் தள்ளி நின்றால் நல்லது” என்றார்!

கோபமான அலெக்சாண்டர், “எனக்கு மரியாதை தராவிட்டால் உன் தலையைச் சீவிவிடுவேன்” என்று சொல்லி வாளை உருவினார்.

அதற்கு டயஜீனஸ், “தலையைச் சீவுவீர்களா? ஆஹா, என் உடலிலிருந்து என் தலை துண்டிக்கப்பட்டு விழுவதை நான் பார்த்ததே இல்லை. அதைப்பார்க்க ஆசைப்படுகிறேன். தயவு செய்து சீக்கிரம் என் தலையைச் சீவுங்கள்” என்று சொன்னார்!

அலெக்சாண்டர் ஸ்தம்பித்து நின்றார்! என்ன மனிதர் இவர்? மரணத்துக்கு அஞ்சாத ஒரு மனிதனா? பின்னர், “நான் அலெக்சாண்டராக இல்லாவிட்டால், டயஜீனஸாக இருக்கவே விரும்பியிருப்பேன்” என்று அவர் சொன்னாராம்!

அச்சம், கோபம், வலி – இப்படியான பெயர்களற்ற, பெயர்களையும் அவை குறிக்கும் உணர்ச்சிகளையும் அறியாத குழந்தைகளைப்போல நாம் இருக்க முடியுமானால், அச்சத்திலிருந்து நம்மால் நிச்சயம் முழுமையாக விடுபட முடியும்.

ஆமாம். அச்சம் வரும்போது எந்த எதிர்ப்பும் காட்டாமல், ஒரு குழந்தையைப்போல அதை முழுதாக உணர ஆரம்பித்தோமென்றால், அது விரைவிலேயே நம்மை விட்டுப் போய்விடும். ஏனெனில் அச்சத்தை நாம் உணர்ந்து கவனிக்க ஆரம்பிக்கிறோம் என்றாலே, நமக்குள்ளே அச்சமில்லாத பகுதி ஒன்று இருக்கிறது என்றுதானே அர்த்தம்? அச்சம் மட்டுமல்ல, கோபம், பொறாமை, துக்கம், சந்தோஷம் போன்ற எந்த உணர்ச்சியாக இருந்தாலும் இந்த உணர்ச்சி இப்போது நம்மிடம் இருக்கிறது என்று நாம் உணரும்போது அந்த உணர்ச்சியை விட்டு நாம் மேலே செல்கிறோம். அல்லது உணர்ச்சிகளுக்கு மேலே, உணர்ச்சிகளைத்தாண்டி நாம் இருப்பதை உணர்ந்துகொள்கிறோம்.

உணர்ச்சிகளுக்கு மேலே இருக்கும் நாம்தான் உண்மையான நாம் என்பதைப் புரிந்துகொண்ட அந்தக் கணத்திலேயே அந்த உணர்ச்சியிலிருந்து, அது எதுவாக இருந்தாலும் சரி, நாம் விடுதலை அடைகிறோம்.

இப்போது சொல்லுங்கள், அச்சம் என்பது மடமையடா என்ற பாடல் சரிதானே?

============

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s