சிலையும் நீ சிற்பியும் நீ — 3 முதல் 9 வரை

அன்புள்ள நண்பர்களுக்கு, சிலையும் நீ சிற்பியும் நீ என்ற தலைப்பில் நான் மாதம் ஒரு கட்டுரை ஆளுமைச் சிற்பி என்ற பத்திரிக்கையில் எழுதிக்கொண்டிருக்கிறேன். இதுவரை விட்டுப்போன அத்தியாயங்களை ஒட்டு மொத்தமாக இங்கே பதிவு செய்கிறேன். விட்டுப்போனது பற்றி ஒரு  ரோஷன் ஜஹான் என்ற வாசகி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இதை இங்கே பதிவு செய்கிறேன். நான் அவருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். அன்புடன்

நாகூர் ரூமி

03 -- SNSN (July 2014)மனதில் உறுதி வேண்டும் — 3

மனதில் உறுதி வேண்டும் / வாக்கினிலே இனிமை வேண்டும் / நினைவு நல்லது வேண்டும் / நெருங்கின பொருள் கைப்படவேண்டும்

என்று பாரதி மிகச்சரியாகப் பாடினார். முதலில் நமக்கு இருக்க வேண்டியது மனதில் உறுதி. வெற்றி பெறுபவர் விட்டுவிடுவதில்லை. விட்டுவிடுபவர் வெற்றி பெறுவதில்லை என்று ஒரு ஆங்கில முதுமொழி உள்ளது. ஆமாம். நமக்கு வெற்றி வேண்டுமானால் விட்டுவிடவே கூடாது. விட்டு விடாமல் இருக்கவேண்டுமானால் நம் மனதில் உறுதி வேண்டும்.

மன உறுதி என்றால் என்ன?

இது ஒரு கேள்வியா? இதுகூடவா தெரியாது என்று கேட்பீர்கள். நான் கேள்வி கேட்கவில்லை. மன உறுதி உங்களிடம் இருக்கிறதா என்று நீங்களே பரீட்சித்துப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறேன்.

 1. அவருடைய இமெயிலுக்கு பதிலனுப்ப வேண்டும் என்று முடிவெடுத்தீர்களே அனுப்பிவிட்டீர்களா?
 2. அடுத்த நாள் காலையில் ஐந்து மணிக்கு எழுந்து தியானம் செய்யவேண்டும் என்று முடிவெடுத்தீர்களே செய்தீர்களா?
 3. மெடாஸின் வாங்குவதற்காக மெடிகல் ஷாப்-புக்குப் போய் எல்லாம் ஒரே பாராஸெட்டிமால் குடும்பம்தான் என்று கடைக்காரர் சொன்னதை வைத்து க்ரோஸின் வாங்கிவந்தீர்களா இல்லையா? அப்போ மெட்டாஸின் வாங்கவேண்டுமென்ற உங்கள் முடிவு என்னானது?
 4. அடிக்கடி மறந்து போகும் ஒன்றைப்பற்றி, இனி மறக்கவே கூடாது என்று முடிவெடுத்தீர்களே, அதை நிறைவேற்றினீர்களா?

இப்படி நான் கேட்டுக்கொண்டே போகலாம். நீங்கள் மனசாட்சிப்படி பதில் சொன்னால், எந்தக் கேள்விக்கும் முடிவெடுத்தபடி செய்துவிட்டேன் என்று சொல்லமுடியாது. ஏன்? உங்களுக்கு மன உறுதி இல்லை. ஆனால் வாழ்க்கையில் சாதனை செய்தவர்கள், பெருவெற்றி அடைந்தவர்கள் – கவனிக்கவும், சாதாரண வெற்றியல்ல, பெருவெற்றி — யாரும் உங்களைப் போல இல்லை. அதனால்தான் அவர்கள் பெருவெற்றி அடைந்தார்கள்.

ஃபோர்டு கார்

ஹென்றி ஃபோர்டு தெரியுமில்லையா? அவர் முதன் முதலாக கார் ஒன்றை வடிவமைக்க வேண்டும் என்று நினைத்தார். அமெரிக்காவில் சைக்கிளில் போகிறவர்களெல்லாம் காரில் போக வேண்டும் என்பதுதான் அவரது பெரிய ஆசையாக இருந்தது. பேராசை அல்ல.

கவனிக்கவும். பெரிய ஆசை. மஹா ஆசை. மெகா ஆசை. இதற்கும் பேராசைக்கும் பெரிய வித்தியாசமுள்ளது.  தேவைக்கு அதிகமாக ஆசைப்படுவது பேராசை. ஆனால் வைக்கின்ற ஆசையை, லட்சியத்தை சின்னதாக வைக்காமல் பிரம்மாண்டமாக வைப்பது பெரிய ஆசை.  புரிகிறதா?

பேராசை பெருநஷ்டம் என்று சொல்வார்கள். அது சரிதான் ஆனால் பெரிய ஆசை அப்படிப்பட்டதல்ல. அது பற்றி எரியும் ஆசை. எப்படி ராக்கட்டின் பின்னால் நெருப்பு பற்றி எரிய எரிய அது மேலே மேலே போய்க்கொண்டிருக்குமோ அதே போல வாழ்க்கையில் உங்களை மேலே மேலே கொண்டுபோகக்கூடிய ஆசை.  பேராசை அழிவுப்பூர்வமானது. பெரிய ஆசை ஆக்கப்பூர்வமானது. பேராசை உங்களை அழிக்கும். பெரிய ஆசை உங்களை வாழவைக்கும். மற்றவர்களும்  வாழ வழிவகுக்கும். பேராசை ஒரு பள்ளத்தாக்கு. பெரிய ஆசை மலையின் உச்சி.

சரி, ஹென்ரி ஃபோர்டுக்கு வருவோம். ஒரு கார் செய்யவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார் அல்லவா? அதுபற்றி கருத்து கேட்க அவர் ஒரு ஆளைத் தேர்ந்தெடுத்தார். அவர் தேர்ந்தெடுத்த ஆள் ரொம்பப் பெரிய மனிதர்.  அவரும் ஒரு சாதனையாளர். அதுவும் உலகமே வியக்கும் சாதனை மனிதர் அவர். இனம் இனத்தோடு சேரும் என்பது இதுதான். ஒத்த அதிர்வலைகளை உருவாக்கிக்கொண்டிருப்பவர்கள் இடையில்தான் நட்பும், உறவும் ஏற்படும். காதலர்களுக்கு இடையில் இருப்பது  மாதிரி. நல்ல கணவன் மனைவிக்கு இடையில் இருப்பது மாதிரி. நல்ல நண்பர்களுக்கு மத்தியில் இருப்பது மாதிரி. சரி, யார் அந்த சாதனை மனிதர்? அவர் வேறு யாருமல்ல, இறைவனுக்கு அடுத்த படியாக இந்த உலகத்துக்கே ஒளி கொடுத்த ’விஞ்ஞான மகான்’ தாமஸ் ஆல்வா எடிசன்தான்!

எடிசனும் ஃபோர்டும் நண்பர்கள். பின்னே, அப்படித்தானே இருக்க முடியும்? காந்தத்தோடு இரும்புதானே போய் ஒட்டும்?  வெறும் மண் ஒட்டுமா?

ஆனால் அந்த விஞ்ஞான மேதை என்ன சொன்னார்? அதுதான் ஆச்சரியமான உண்மை. ஃபோர்டின் கருத்தைக் கேட்டுவிட்டு, அது சாத்தியமில்லை, வேண்டாம், நீங்கள் பேசாமல் என் கம்பனியிலேயே வேலைக்கு வந்துவிடுங்கள் என்றார் எடிசன்!

நம்ப முடியவில்லை. ஃபோர்டின் புதிய சிந்தனை அவருக்குப் புலப்படவில்லையா? அல்லது பிடிக்கவில்லையா? ஆஹா, இந்த கருத்தை இவன் அமுல் படுத்திவிட்டால் பெரிய ஆளாகிவிடுவான் என்ற பொறாமை பல்பு அவருக்குள்ளும் எரிந்ததா? தெரியவில்லை.

ஆனால் சாத்தியமில்லை என்று அவர் சொன்னது மட்டும் சத்தியம். வரலாற்றில் இது இருக்கிறது. அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளாமல் போனதுதான் ஹென்ரி ஃபோர்டு செய்த மிகப்பெரிய சாதனை என்று நான் சொல்வேன்! ஆமாம். அவ்வளவு பெரிய மனிதர்; ஆயிரத்துக்கும் மேற்பட்ட  முக்கியமான கண்டுபிடிப்புகளைச் செய்தவர்; அவர் எப்படி தவறாகச் சொல்லமுடியும் என்று ஃபோர்டு நினைக்கவில்லை. அவர் ஏற்கனவே தன் மனதுக்குள் அழுத்தமான கோடு, இல்லை இல்லை, ஃபோர்டு கார் செல்லத் தேவையான ரோடு போட்டு வைத்திருந்திருக்கிறார். ஆமாம். எடிசனே சொல்லிவிட்டார், இது நிச்சயம் நடக்காது என்று ஃபோர்டு நினைக்கவே இல்லை! அங்கேதான் அவரது மகத்துவம் இருக்கிறது. ”தெய்வத்தால் ஆகாதெனினும், முயற்சி  தன்மெய் வருத்தக் கூலி தரும்” என்ற திருக்குறள் கருத்தை ஹென்ரி ஃபோர்டு பின்பற்றி இருக்கிறார்! அங்கேதான் அவர் நிற்கிறார்!

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனைப்போல ஃபோர்டு காரியமாற்ற ஆரம்பித்தார். முதல் அவர் உருவாக்கிய காரில் ரிவர்ஸ் கியர் இல்லை. அதைப் பின்புதான் அவர் வடிவமைத்தார். அதனால் என்ன? முன்னேறிச் செல்லும் கார்களை மட்டும் அவர் முதலில் உருவாக்கினார் என்று வைத்துக்கொள்ளலாம்! என் நண்பர் ஒருவர் சொன்ன அனுபவ நகைச்சுவை நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது. முதன் முதலாகக் கார் ஓட்டக் கற்றுக்கொள்ள விரும்பிய அவர் தன் நண்பரின் காரை எடுத்துக்கொண்டு போனார். ஒரு சின்ன தெருவில் கார் சென்றபோது எதிரில் ஒரு கார் வந்துவிட்டது. இவர் ரிவர்ஸில் போனால்தான் அந்தக் காருக்கு வழி கிடைக்கும் என்ற சூழ்நிலை. இவர் யோசிக்கவே இல்லை. உடனே காரைவிட்டுக் கீழிறங்கி எதிரில் இருந்த கார் ஓட்டுனரிடம் சென்று, “நான் இப்போதுதான் கார் ஓட்டக் கற்றுக்கொண்டிருக்கிறேன். எனக்கு ரிவர்ஸ் எடுக்கத் தெரியாது. எனக்காக தயவு செய்து நீங்களே ரிவர்ஸ் எடுத்துவிடுங்கள்” என்று சொல்லித் தன் காரின் சாவியை அவரிடம் ஒப்படைத்திருக்கிறார்! அவரைப் போன்றவர்களுக்காக ஹென்ரி ஃபோர்டு முதலில் கார்களை உருவாக்கியதாக நாம் எடுத்துக்கொள்ளலாம்!

’ரைட்’ எப்படி ராங்காகும்?

ரைட் சகோதர்கள் விமானம் செய்ய எண்ணி, அதைப் பற்றிய தங்களுடைய கற்பனைகளை மற்றவர்களிடம் சொன்னபோது எல்லோரும் சிரித்தார்கள்.  மற்றவர்கள் என்ன, அவர்களுடைய அப்பாவே சிரித்தார். ”பணத்தை விரயம் செய்ய இவ்வளவு முட்டாள்தனமான ’ஐடியா’வா? வேண்டாம் மக்களே, காற்றில் பறக்கின்ற வேலையை தயவுசெய்து பறவைகளிடம் விட்டுவிடுங்கள்” என்று கிண்டலாகச் சொன்னார்! ஆனால் அவர்கள் விட்டார்களா?

”சாரி டாடி, எங்களுக்கு ஒரு கனவு இருக்கிறது. அதை நனவாக்காமல் நாங்கள் விடமாட்டோம்” என்று உறுதிபடக் கூறிவிட்டார்கள்.

முதல் விமானத்தைப் பறக்கவிட  வட கரோலினாவில் இருந்த கிட்டி ஹாக் (Kitty Hawk) என்ற இடத்தை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அப்போதும் நம்பிக்கையில்லாமல், என்னதான் நடக்கிறது பார்க்கலாமே என்ற ஆர்வத்தில் சிலர் சென்றார்கள். ஆனால் இன்று நிலமை என்ன? பறவைகளைவிட அதிகமாக விமானங்கள் வானில் பறந்துகொண்டுள்ளன என்றே சொல்லலாம். ரைட் சகோதர்களின் “அபத்தமான கற்பனை” கொடுத்த விளைவு அது!

ரேடியம்

ரேடியமெல்லாம் விஞ்ஞானப்பூர்வமாக கிடைக்காது என்றுதான் மேரி க்யூரியிடம் மற்ற விஞ்ஞானிகள் சொன்னார்கள். ஆனால் தூங்காமல் கொள்ளாமல் நடு இரவிலும் விழித்திருந்து விடாமல் பரிசோதனைகள் செய்துகொண்டே இருந்தார் மேரிக்யூரி என்ற சாதனைப்பெண். ரேடியம் கண்டு பிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றபிறகு, போய் அதை வாங்கி வருவதற்குக்கூட அவரிடம் காசில்லாமல் இருந்தது என்பது ஒரு வரலாற்று சோகம்!

அற்புதப் பாலம்

ப்ரூக்லின் பாலம் என்று ஒன்று நியூயார்க் நகரத்தில் உள்ளது. உலகின் மிக அற்புதமான தொங்குபாலங்களில் ஒன்று அது. கிட்டத்தட்ட 1600 அடி நீளம் கொண்டது! வேறு வார்த்தைகளில் சொன்னால் 490 கிலோமீட்டர்கள் நீளம் கொண்டது! அதைக் கட்டியவர்கள் இரண்டு பேர். ஒரு அப்பா, ஒரு மகன். இருவரின் பெயரும் ரூப்லிங் (Roebling) என்று வரும். தந்தை ஜான் அகஸ்டஸ் ரூப்லிங். மகன் வாஷிங்டன் ரூப்லிங். இரண்டு பேருமே பொறியாளர்கள்தான். ஏற்கனவே சின்னச் சின்ன தொங்கு பாலங்களை இவர்கள் வடிவமைத்திருக்கின்றனர். ஆனால் கிட்டத்தட்ட 500 மைல் நீளப் பாலம் என்பது அசாத்தியமான கற்பனையாகவே இருந்தது.

திட்டமிட்டு, வடிவமைத்து வேலைகள் செய்த சில காலத்திலேயே ஒரு விபத்தில் சிக்கி தந்தை ரூப்லிங்-கின் பாதங்களின் இரு பெருவிரல்களும் நசுங்கி, பின் வெட்டியெடுக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட வேறு விளைவுகளால் அவர் இறந்தே போனார். பின்னர் எல்லாம் மகனின் தலையில் வந்துவிழுந்தது. ஆனால் மகனும் ஒரு விபத்தில் சிக்கி அப்பாவைவிட கடுமையாக பாதிக்கப்பட்டார். அவரால் அசையவோ பேசவோ முடியாது! மருத்துவமனையிலேயே பல ஆண்டுகள் கிடந்தார். அதோடு தொங்குபாலம் பற்றிய திட்டம் அந்தரத்தில் தொங்கிப் போய்விடும் என்றுதான் அனைவரும் நினைத்தனர்.

ஆனால் அதுதான் நடக்கவில்லை. உடல் கிடந்தாலும் மனம் படு சுறுசுறுப்பாகவே இருந்தது ரூப்லிங்கிற்கு. ஒரு விரலை மட்டுமே அவரால் அசைக்க முடிந்தது. அதை வைத்துக்கொண்டு அவர் தன் மனைவியில் கையில் ஒரு தட்டு தட்டினார். ப்ரூக்லின் பாலம் அங்கே உருவாகத் தொடங்கியது என்று சொல்லலாம்.

ஆமாம். ஒவ்வொரு தட்டும் பொறியாளர்களுக்கு ஒரு உத்தரவு. அதை எப்படி அவர் மனைவி புரிந்துகொண்டார், அவர் புரிந்து கொள்வதற்கு எவ்வளவு காலம் ஆகியது, அவளுக்குப் புரிய வைப்பதற்கு ரூப்லிங் எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டார் என்றெல்லாம் கற்பனை செய்யக்கூட முடியவில்லை. ஆனால் கிட்டத்தட்ட பதிமூன்று ஆண்டுகள் இவ்விதம் தட்டித்தட்டி, ஒரு சிற்பி சிலையை உருவாக்குவதுபோல, ரூப்லிங் தன் மனைவியின் கையில் தட்டி உத்தரவுகள் கொடுத்துக்கொண்டிருந்தார். ப்ரூக்லின் பாலம் மெல்ல மெல்ல உருவானது!

ஆஹா, இதுவல்லவா சாதனை! நான் ப்ரூக்லின் பாலத்தைச் சொல்லவில்லை. ரூப்லிங் செய்த காரியத்தைச் சொல்கிறேன். ஒரு மனிதனின் மனதில் எவ்வளவு உறுதி இருந்தால் இப்படி விடாமல் முயன்றிருக்க முடியும்!

அற்புத மனிதன்

மாரிஸ் குட்மேனின் (Morris E Goodman) கதையும் இப்படிப்பட்டதுதான். அமெரிக்காவைச் சேர்ந்த இவர் தான் சம்பாதித்த பணத்தில் ஒரு குட்டி விமானம் வாங்கினார். அதை ஓட்டிக்கொண்டு போனபோது ஒரு விபத்து ஏற்பட்டது. விமானத்தில் ஏதோ கோளாறு. இவர் ஏதேதோ செய்து ஓடுதளம்வரை வந்துவிட்டார். ஆனால் விமான எலக்ட்ரிக் கம்பிகளில் மோதி தலைகுப்புற விழுந்தது. குட்மேனுக்கு எலும்புகள், தலைப்பக்கம், முதுகுத்தண்டுப்பக்கமெல்லாம் சேதமாயின. ஸி-1, ஸி-2 ரக காயங்கள் என்று அவை மருத்துவ உலகில் சொல்லப்பட்டன. அவரசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். எட்டு மாதங்கள் இருக்க நேரிட்டது.

இந்த காலகட்டத்தில் அவரது உதரவிதானமும் நிரந்தரமாகச் சேதமடைந்திருந்தது. அவரால் பேசவோ, தானாக மூச்சுவிடவோ, உடலை அசைக்கவோ முடியாது. கண்கள் மட்டும் இங்குமங்கும் அசையும். அவ்வளவுதான். இனி காலம்பூராவும் அவர் இப்படியே ஒரு சப்பிப்போடப்பட்ட மாங்கொட்டை மாதிரிதான் கிடக்கவேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.

ஆனால் அடுத்த கிறிஸ்துமஸுக்குள் தான் எழுந்து நடந்து மருத்துவமனையை விட்டு வெளியே செல்லவேண்டும் என்று அவர் முடிவெடுத்தார். கவனிக்கவும், குட்மேன் முடிவெடுத்தார். அவர் கண்கள் அசைவதைப் பார்த்த அவரது சகோதரி அவருக்கு உதவினார். கண் அசைவுக்குத் தகுந்தமாதிரி  ஏ, பி, சி, டி எழுத்துக்களைப் புரிந்துகொண்டார். உதாரணமாக ஒருமுறை அசைத்தால் ஏ, இரண்டு முறை என்றால் பி – இப்படி. இப்படியே தான் சொல்ல நினைப்பதையெல்லாம் ’பேசி’ வந்தார் குட்மேன்.

செயற்கை உபகரணம் இல்லாமல் சொந்தமாக முயன்று அவர் மூச்சு விட்டபோது மருத்துவர்களுக்கு பெரிய ஆச்சரியம். அதேபோல பல ஆச்சரியங்கள் அவர்களுக்குக் காத்திருந்தது. அவர் நினைத்தபடி எழுந்து நின்றார். யாருடைய உதவியும் இன்றி நடந்தார்! எட்டு மாதங்கள் கழித்து மருத்துவமனையில் இருந்து ’டிஸ்சார்ஜ்’ ஆனார்! அந்த மன உறுதிக்காகத்தான் உலகம் அவரை அற்புத மனிதர் என்று அழைக்கிறது.

மன உறுதி என்ற அந்த அற்புத ஆற்றல் நம்மிடமும்தான் உள்ளது.

பயன்படுத்தினால் என்ன நண்பர்களே?

அந்த இரண்டு விநாடிகள் — 4

இந்த உலகத்தில் உள்ள மதிப்பு மிகுந்த ஒரே விஷயம் உள்ளுணர்வுதான்.

 • ஐன்ஸ்டீன்

04 -- SNSN (Aug 2014)ஒரு இளைஞன் நிர்வாணமாக நின்றுகொண்டிருக்கிறான். இடது கால் கொஞ்சம் முன்னே இருக்கிறது. கைகள் இடுப்பில். என்ன இது யாராவது நிர்வாணச் சாமியாரா என்று கேட்கிறீர்களா? அப்படியெல்லாம் இல்லை. அது ஒரு அழகான, அற்புதமான சிலை. அதுவும் ரொம்ப காலத்துக்கு முந்தியது. எவ்வளவு காலம்? கிமு ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தியது. அவ்வகை சிலைகளுக்கு கூரோஸ் என்று பெயர்.

சரி, இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்கிறீர்களா? விஷயம் இல்லாமலா சொல்வேன். இருக்கிறது. ரொம்ப முக்கியமான உண்மை. அதுவும் உங்கள், ஏன், நம்முடைய வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அதில் கிடைக்கும் வெற்றிகள் சம்பந்தப்பட்டது. கூரோஸின் கதையைத் தெரிந்துகொண்டால் நம்முடைய வாழ்வில் அன்றாடம் நடக்கும் ஒரு மிகப்பெரிய விஷயத்தின், நாம் கவனிக்கத் தவறுகிற விஷயத்தின் பின்னால் இருக்கும் ஒரு மகா உண்மையைத் தெரிந்துகொண்டதாக அர்த்தம்.

கூரோஸின் கதை

கலிஃபோர்னியாவில் ஒரு அருங்காட்சியகம் இருந்தது. இருக்கிறது. ஜெ பால் கெட்டி ம்யூசியம் என்று அதற்குப் பெயர். செல்லமாக ’த கெட்டி’. அங்கே ஒருநாள் பெக்கினா என்ற ஒருவர் வந்து தன்னிடம் ஒரு கூரோஸ் இருப்பதாகவும் அதை விற்க விருப்பம் என்றும் சொன்னார். உலகத்தில் மொத்தமாகவே கிட்டத்தட்ட இருநூறு கூரோஸ்கள்தான் இருந்தனவாம். எனவே ரொம்ப ஜாக்கிரதையாக, அது உண்மையான கூரோஸ்தானா, அல்லது கூரோஸ்போன்ற போலியா என்று கண்டுபிடிக்க பதினான்கு மாதங்கள் அந்த சிலை பலவிதமான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. கடைசியில் அது உண்மையான கூரோஸ்தான், கிமு ஆறாம் நூற்றாண்டுக்கு முந்திய சிலைதான் என்று ஆராய்ச்சிகளின் முடிவில் சொன்னார்கள். எனவே பெக்கினாவின் அந்த சிலையை பத்து மில்லியன் டாலர்களுக்கு வாங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. பத்து மில்லியன் என்றால் ஒரு கோடி. ஆனால் ஒரு கோடி ரூபாய் அல்ல, ஒரு கோடி டாலர்கள்! (நான் கணக்கில் கொஞ்சம் ‘வீக்’. நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்).

1986-ம் ஆண்டு அந்த கூரோஸை பொதுமக்கள் பார்வைக்கும் வைத்தார்கள். ஆனாலும் அந்த கூரோஸில் ஒரு குறை இருந்தது. என்னவோ அதில் சரியில்லை. இப்படி முதன் முதலில் சொன்னவர் ஒரு இத்தாலிய கலைப்பொருள் வரலாற்றாசிரியர். அவர் பெயர் ஜெரோ. குறிப்பாக சிலையின் நகங்களில் ஏதோ குறை தென்படுவதாக அவர் சொன்னார்.

எவ்லின் ஹாரிசன் என்ற கிரேக்க சிலை நிபுணி சிலையின் தலையிலிருந்த துணியை நீக்கியவுடன், “இதை வாங்கப் போகிறீர்களா? கேட்க ரொம்ப வருத்தமாக இருக்கிறது” என்று சொன்னார்.

சிலையைப் பார்த்ததும், “ரொம்ப புத்தம் புதுசாக உள்ளதே” என்றார் நியூயார்க்கின் அருங்காட்சியக இயக்குனர் ஹோவிங். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள ஒரு சிலையைப் பற்றிக் கூறும் வார்த்தையா அது? ஆனால் அவர் தொடர்ந்து, “இந்த சிலையை வாங்கிவிட்டீர்கள் என்றால் பணத்தைத் திரும்பப் பெற முயற்சி செய்யுங்கள். வாங்கைல்லையென்றால், வாங்காதீர்கள்” என்றும் சொன்னார்!

ஜெரோ, எவ்லின் ஹாரிசன் மற்றும் அருங்காட்சியகப் பொறுப்பாளர் – இந்த மூவரும் சிலை பற்றி கருத்து சொல்ல எடுத்துக்கொண்ட நேரம் இரண்டு வினாடிகளுக்கும் குறைவு! ஆமாம். அதுதான் வினோதம். பதினான்கு மாத ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அல்லது உறுதிசெய்யப்பட்ட உண்மைகளுக்குப் புறம்பாக இரண்டே வினாடிகளில் சிலைக்கு எதிராக சில கருத்துக்களை இவர்கள் உதிர்த்தார்கள்.

எதை எடுத்துக்கொள்வது? எது அறிவுக்குப் பொருத்தமானது? முன்னதா பின்னதா? சந்தேகமில்லாமல் முன்னதுதான். ஆனாலும் சந்தேகம் என்று ஒன்று வந்துவிட்டபிறகு உறுத்தலில்லாமல் வாங்கமுடியுமா என்ன? எனவே சிலையை ஏதென்ஸுக்கு அனுப்பி மறுபடியும் நிபுணர் குழுவிடம் ஒப்படைத்தார்கள். பின்னர்தான் ஒவ்வொன்றாக வெளிவந்தது. சிலை பற்றி சமர்ப்பிக்கப்பட்ட கடிதங்கள், ஆவணங்கள் யாவும் போலியானவை,  சிலை பூமிக்குக்கீழே இருந்ததே இல்லை என்பன போன்ற பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்தன! இரண்டே வினாடிகளில், பார்த்தவுடன் சிலைக்கு எதிராக மனதில் உதித்த கருத்துக்கள்தான் கடைசியில் மிகச்சரியாக இருந்தன!

அயோவா பரிசோதனை

அமெரிக்காவின் மாநிலமான அயோவாவில் ஒரு பரிசோதனை நடந்தது. அங்கிருந்த க்ளப்புகளில் நடந்த ஒரு சூதாட்டப் பரிசோதனை அது.  நான்கு அடுக்குகள் கொண்ட கார்டுகள் இருக்கும். அவை இரண்டு நிறங்கள் கொண்டவை. நீலமும் சிவப்பும். சிவப்பு வந்தால் நஷ்டம். நீலம் வந்தால் லாபம். ஆனால் எந்த நிறம் எந்த அடுக்கில் அதிகமாக இருக்குமென்று தெரியாது. கிட்டத்தக்க எண்பது கார்டுகளை எடுத்தெடுத்துப் போட்டபின்தான் எந்த அடுக்கில் எந்தவிதமான நிறக்கார்டுகள் இருக்கும் என்று தர்க்க ரீதியாக சிந்தித்து யூகிக்க முடியும். ஆனால் சிலர் பத்துப் பதினைந்து கார்டுகள் போட்டவுடனேயே அடுத்தடுத்து லாபம் தரக்கூடிய நிறக்கார்டுகளையே எடுத்தார்கள்.

அது எப்படி சாத்தியமானது என்று கண்டுபிடிக்க ஒரு வேலை செய்தார்கள். சூதாடிகளை ஒரு யந்திரத்தோடு இணைத்தார்கள்.  அவர்களது உள்ளங்கைகளில் வியர்வை ஏற்படுவதை அந்த யந்திரம் பதிவு செய்தது. அப்படி ஏற்படும்போதெல்லாம் அவர்கள் சரியான, லாபம் கொடுக்கும் நிறக்கார்டுகளையே எடுத்தார்கள். அவர்களுக்கே தெரியாமல்.

ரொம்ப தர்க்க ரீதியாக சிந்தித்து நாம் ஒரு முடிவுக்கு வருமுன்னரே, வேறு விதமாக நம் மூளையின் இன்னொரு பகுதி அதுவாகவே சிந்தித்து மிகச்சரியான முடிவுக்கு வந்துவிடுகிறது. (நாமாக சிந்தித்தால்தான் பிரச்சனை)! அதன்படி நடக்க நம் உடலையும் தூண்டுகிறது. சுயமாக சிந்திக்கும் மூளையின் அந்தப்பகுதியை ஆங்கிலத்தில் adaptive unconscious என்கிறார்கள். அந்த ’அடாப்டிவ் அன்கான்ஷியஸ்’தான் உள்ளங்கையில் வியர்வையை ஏற்படுத்தியிருக்கிறது. அது ஏற்பட்டவுடன், அப்படி ஏற்பட்டதே தெரியாமல் விளையாடியவர்கள் சரியான கார்டுகளைத் தேர்ந்தெடுத்தார்கள்! எல்லாம் ஒருசில வினாடிகளிலேயே! என்ன நடக்கிறது என்று நம் கண்களுக்குத் தெரிந்து மூளைக்குள் மீண்டும் பதிவாவதற்குள்!

அப்படியானால் மூளை செயல்படும் வேகம் மிகவும் அபாரமானதாக இருக்கிறது என்று அர்த்தம். நாம்தான் எப்போதும் ரொம்ப கவனமாக, யார்மீதும் மோதக்கூடாது என்று இருபது, நாற்பதிலேயே நம் சிந்தனையை ஓட்ட முயற்சித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் மூளையின் ஒரு பகுதியான அடாப்டிவ் அன்கான்ஷியஸ் யார் மீதும் மோத முடியாத 300 மைல் வேகத்தில் ஆகாயத்திலேயே பறந்து வேலையை முடித்துக்கொள்கிறது! உண்மையில் அது ஒரு ராட்சச கணிணியைப்போல செய்கிறது. ஏகப்பட்ட தகவல்களை கண்ணிமைக்கும் நேரத்துக்குள் உள்வாங்கி, அலசி ஆராய்ந்து, அப்படியெல்லாம் நடந்ததற்கான அறிகுறியே இல்லாமல் முடிவை மட்டும் கொடுக்கிறது!

இன்னொரு விதத்தில் புரிந்துகொள்வதானால் இப்படிச் சொல்லலாம். நம் ஒவ்வொருவர் மூளைக்குள்ளும் ஒரு பெண் ஒளிந்துகொண்டிருக்கிறாள். பெண்களின் மூளைக்குள்ளும்தான். பெண்கள் எப்போதுமே எந்த விஷயத்திலும் சட்டென்று ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள். நான் ஏதாவது ஒரு விஷயம் பற்றி விலாவாரியாக என் மனைவியிடம் சொன்னால் ’அதெல்லாம் சரிப்பட்டு வராது’ என்று சட்டென்று சொல்வாள். எனக்கு எரிச்சலாக வரும். ஆனால் கடைசியில் அவள் சொன்னமாதிரிதான் நடக்கும். அப்போது அவள் என்னைப் பார்த்து ஒரு புன்னகையை வீசுவாள். புன்னகையா அது? ஹிரோஷிமா, நாகசாகியில் வீசப்பட்ட அணு குண்டுகளைவிட மோசமானது அது!

இப்படி ஒரு முறை அல்ல, பல முறைகள் நடந்துள்ளன. எப்படி இது பெண்களுக்கு மட்டும் சாத்தியமாகிறது? They are by nature more intuitive. பெண்கள் இயற்கையிலேயே உள்ளுணர்வுப் பூர்வமாக வாழ்பவர்கள். இயற்கையோடு அதிகமாக இணைந்தது பெண் மனம். அதனால் ஒரு காரியத்தின் முடிவு முன்கூட்டியே அவர்களுக்குத் தெரிந்துவிடுகிறது. ஆனால் இப்படியொரு சிறப்பு அம்சம் தங்களிடம் இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டவர்கள் குறைவு. (அதுதான் நமக்கும் நல்லது)!

உள்ளங்கை அரித்தால் பணம் வரும் என்று சொல்கிறார்களே அதுவும் இதுமாதிரியானதுதான். பணம் வரப்போவதை முன் கூட்டியே அடாப்டிவ் அன்கான்ஷியஸ் உள்ளங்கை அரிப்பு மூலமாக அறிவித்துவிடுகிறது. இனிமேல் உள்ளங்கை பேசும்போது கவனமாகக் கேட்பது நல்லது!

தின் ஸ்லைசிங் பரிசோதனை

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் நளினி அம்பாடி என்று ஒரு உளவியல் பேராசிரியை இருந்தார். வார்த்தைகளற்ற மானிட நடத்தையில் ஆராய்ச்சி செய்தவர். உள்ளுணர்வு பற்றியும் ஆராய்ச்சி செய்தவர். அவர் ஒரு பரிசோதனை செய்தார். ஒரு பேராசிரியர் வகுப்பு நடத்துவதை காணொளிப்பதிவு செய்தார். முதலில் பத்து வினாடிகள், பின்பு ஐந்து வினாடிகள், பின்பு இரண்டே வினாடிகளுக்கு அந்த காணொளிப் பதிவுகளை இரண்டுவிதமான குழுக்களுக்கு அவர் காண்பித்தார். ஒரு குழுவில் இருந்தவர்கள் காணொளியில் வரும் மனிதர் யாரென்றே தெரியாதவர்கள். இன்னொரு குழுவில் இருந்தவர்கள் காணொளியில் வரும் பேராசிரியரின் மாணவ மாணவிகள். ஒரு முழு செமஸ்டருக்கும் அவரிடம் பயின்றவர்கள்.

இரண்டு பிரிவினரிடத்தும் அந்தக் காணொளியை தனித்தனியாகக் காண்பித்து அந்த பேராசிரியர் பற்றி அவர்களின் கருத்தைப் பதிவு செய்துகொண்டார்.  முடிவு ஆச்சரியம் தருவதாக இருந்தது. ஏன்? ஏனென்றால் பேராசிரியரை நன்கு தெரிந்தவர்கள் சொன்ன கருத்தும் அறவே தெரியாதவர்கள் சொன்ன கருத்தும் கிட்டத்தட்ட ஒரேவிதமானதாக இருந்தது! பல மாதங்கள் ஒரு மனிதரோடு பழகியவர்கள் அவரைப் பற்றி சொன்னவையும், இரண்டே வினாடிகள் அவரைப் பார்த்தவர்கள் சொன்ன கருத்தும் ஒரேவிதமானதாக இருந்தது!

ஒரு சில வினாடிகளில் காட்டப்படும் தகவல்கள் என்ற சின்ன கூறை, ஒரு கீற்றை மட்டும் வைத்துக்கொண்டு நம் மூளை சில முடிவுகளுக்கு வந்துவிடுகிறது. அம்முடிவுகள் நாம் பழகி, அலசி ஆராய்ந்த பிறகே சொல்ல முடிகிற முடிவுகள்! ஆனால் எதுவுமே செய்யாமல், பார்த்த மாத்திரத்திலேயே முடிவு செய்துவிடுகிறது நம் மூளை. சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லவேண்டிய விமானம் சென்னையில் ’டேக்-ஆஃப்’ ஆன அடுத்த வினாடி சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கின மாதிரி! நம் மூளை அந்த முடிவுக்குக் குதிக்க எடுத்துக்கொள்ளும் சின்ன கூறுகளை ’தின் ஸ்லைசிங்’ (thin-slicing) என்று கூறுகிறார்கள். இந்த தின் ஸ்லைசிங்-கிற்கு நம் மூளை எடுத்துக்கொள்ளும் நேரம் குறைந்த பட்சம் இரண்டு விநாடிகள், அதிகபட்சம் பத்து வினாடிகள்!

அப்படியானால் நாம் ஏன் மணிக்கணக்கில், நாள் கணக்கில், மாசக்கணக்கில் யோசித்து, யோசித்து, ரொம்ப ஜாக்கிரதையாகச் செயல்பட்டு பின் தோற்றுப்போகிறோம்? பொதுவாக எடுக்கப்படும் ஒரு முடிவு எவ்வளவு முயற்சிக்கும், எவ்வளவு காலத்துக்கும் பிறகு எடுக்கப்பட்டது என்பதில்தான் அதன் தரம் இருக்கிறது என்றுதான் நாம் நம்புகிறோம். ‘பதறிய காரியம் சிதறும்’, ‘அவசரக்காரனுக்கு புத்தி மட்டு’, ‘அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே’  என்றெல்லாம் பழமொழிகள் வேறு வைத்திருக்கிறோம். ஆனால் நம்மால் இப்படி வாழ முடிகிறதா?

விருந்துக்கு ஒருவரை அழைக்க வேண்டுமென்றால் சிந்தித்து முடிவெடுக்கிறோம். ஆனால் திடீரென்று ஒரு கணவேகத்தில் ஏதோ அவர் சொன்ன ஒரு சொல் உங்களை உசுப்ப, சட்டென்று கோபப்பட்டு அவரிடம் சண்டைக்குப் போகிறோமே அதை யோசித்தா செய்கிறோம்? யாரையாவது பார்த்தவுடன், எதுவும் பேசாமலே, அவரை அல்லது அவளைப் பற்றி எதுவும் தெரியாமலே சட்டென்று பிடித்துப் போகிறது அல்லது சட்டென்று பிடிக்காமல் போகிறதே அது எப்படி? கண்டதும் காதல், வெறுப்பு எல்லாம் வருகிறதே அது எப்படி?

அப்போதெல்லாம் நம் மூளையின் மர்மமான ஆனால் மஹா சக்தி கொண்ட வேறொரு பகுதி வேலை செய்கிறது. அந்த கம்ப்யூட்டர் போடும் கணக்கு எப்போதுமே தவறுவதே இல்லை. அது கணிதமேஜை ராமானுஜம் மாதிரி. ஆமாம். அவர் சொன்ன 1729 என்ற எண்ணின் கதை தெரியுமல்லவா?

அவர் இங்கிலாந்து மருத்துவமனையில் நோயுற்றுப் படுத்துக்கிடந்தார். அவரைப் பார்க்க ஹார்டி என்ற இன்னொரு கணித மேதை வந்தார். (ராமானுஜத்தை இந்திலாந்துக்குக் கொண்டு சென்றவர் அவர்தான். அந்த மாமனிதர் இல்லாவிட்டால் இந்த உலகத்துக்கு ராமானுஜம் என்ற மேதையைத் தெரிந்திருக்காது).

“நான் ஒரு டாக்ஸியில் வந்தேன். அதன் எண் 1729. எனக்கது ரொம்ப ‘டல்’ எண்ணாகப் படுகிறது” என்று சொன்னார். மருத்துவமனையில் நோயாளியைப் பார்க்கப்போனால் ஆப்பிள், ஆரஞ்சு என்று வாங்கிக்கொண்டுபோய் உடல்நலம் விசாரிப்பார்களா, இப்படி எண்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்களா என்கிறீர்களா? வேதனையாளர்களுக்கும்,

சாதனையாளர்களுக்குமான, அதாவது நமக்கும் அவர்களுக்குமான, வித்தியாசம் அதுதான்!

சரி ராமானுஜம் என்ன பதில் சொன்னார் தெரியுமா? 1729 என்ற எண் ஹார்டி வாயிலிருந்து வெளிவந்த அந்தக்கணமே ராமானுஜம் சொன்னார்: “No”, It is a very interesting number; it is the smallest number expressible as the sum of two cubes in two different ways.” (இதைத் தமிழில் சொல்லமுடியாது). ஆனால் பின்னால் அவர் சொன்னது உண்மைதான் என்பது நிதானமாக நிரூபிக்கப்பட்டது. ஆனால் ராமானுஜத்துக்கு வேலை செய்தது அவர் மூளையின் அந்த மஹாசக்தி கொண்ட பகுதியான அடாப்டிவ் அன்கான்ஷியஸ்.

இதிலிருந்தெல்லாம் என்ன தெரிகிறது? நிதானமாக எடுக்கப்பட்ட முடிவுகளைப் போலவே கண நேரத்தில் அடாப்டிவ் அன்கான்ஷியஸ் எடுக்கும் முடிவுகளும் மிகச்சரியானவைகளாக இருக்க முடியும். இன்னும் சொல்லப்போனால், அலசி ஆராய்ந்து எடுக்கப்படும் முடிவுகளாவது தவறாகப் போகலாம். ஆனால் இரண்டு வினாடிகளில் அடாப்டிவ் அன்கான்ஷியஸ் எடுக்கும் முடிவுகள் தவறாது.

நமது வெற்றிக்காக அந்த இரண்டு வினாடிகளை, நம் அடாப்டிவ் அன்கான்ஷியஸை நாம் பயன்படுத்த முடியாதா என்ன? எப்போது அதை நம்பலாம்? எப்போது நம்பக்கூடாது? யோசித்து முடிவெடுப்பதுபோல், யோசிக்காமல், ஆனால் மிகச்சரியான முடிவுகளை எடுப்பது எப்படி என்று கற்றுக்கொள்ள முடியுமா? அடாப்டிவ் அன்கான்ஷியஸை வேண்டுமென்றே பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ள முடியுமா? இல்லை அது ஒரு அருட்கொடை மாதிரியான விஷயமா?

இல்லை, அதைக் கற்றுக்கொள்ள முடியும். இது எவ்வளவு பெரிய நல்ல செய்தி?!

எப்படி எப்படி என்கிறீர்களா? பொறுங்கள். அதற்குள்தான் அடுத்து நாம் போக இருக்கிறோம்.

அடாப்டிவ் அன்கான்ஷியஸ் — 5

உங்களுக்குள் உள்ளுணர்வு தோன்றும்போது உங்களுக்குள் மறைந்திருக்கும் ஆற்றல்கள், திறமைகள் யாவும் மேலே வர ஆரம்பிக்கின்றன. நீங்கள் கற்பனை செய்ததைவிட நீங்கள் பெரிய ஆள் என்று தெரிய ஆரம்பிக்கும்.

 • பதஞ்சலி

05 -- SNSN(Sept 2014)உள்ளுணர்வுக்குத்தான் ஆங்கிலத்தில் அழகாக ’அடாப்டிவ் அன்கான்ஷியஸ்’ என்று சொல்கிறார் மால்கம் க்ளாடுவெல். இதை ’இன்ஸ்பிரேஷன்’ (inspiration) என்று பொதுவாக ஆங்கிலத்தில் சொல்வர். நாம் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்துவிட்டோமென்றால் உள்ளுணர்வு வருவதை, அது அறிவிப்பதையெல்லாம் கேட்க முன்கூட்டியே நாம் தயாராகலாம்.

டாக்டர் வெயின் டயர் என்ற உலகப்புகழ்பெற்ற எழுத்தாளரைப் பற்றி உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். Inspiration: Your Ultimate Calling என்று அவர் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். ஆனால் அவருக்கு முதலில் இரண்டு தலைப்புகள் தோன்றின. ஒன்று மேலே நான் சொன்னது. இன்னொன்றில் Calling என்ற சொல்லுக்கு பதிலாக Destiny என்று போட்டிருந்தார். ஆனால் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் வந்துவிட்டது. ஹே ஹவுஸ் என்ற தன் நூலின் பதிப்பகத் தலைவர் ட்ரேஸி என்பவரை அழைத்து கருத்துக் கேட்கலாம் என்று அவருக்கு தொலைபேசி அழைப்பு கொடுக்கிறார். ’காலர் ஐடி’ திரையில் calling என்ற வார்த்தை மின்னி மின்னி மறைந்தது. அதை ஒருகணம் பார்க்கிறார். உஷாராகிறார். தெரிந்துவிட்டது. ‘காலிங்’ என்ற சொல்லைப் பயன்படுத்து என்று அவரது அடாப்டிவ் அன்கான்ஷியஸ் சொல்லிவிட்டது! அந்தப் பெயரையே தன் நூலுக்கு வைக்கிறார்! அதுவும் படு பிரபலமாகி அவருக்குப் புகழ் சேர்ந்தது.

Inspiration என்றால்  being in Spirit என்கிறார் அவர். அதாவது நம்முடைய சாரமாக, அடிப்படையாக, ஆதாரமாக எது இருக்கிறதோ அதோடு இருப்பது. ஆன்மாவோடு இருப்பது. உள்ளுணர்வு என்பது நம்முடைய சாரம் நமக்கு அனுப்பும் செய்தி. நமக்குள்ளே நம்மை மீறிய ஒரு மாபெரும் ஆற்றல் மறைந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் ஒரு கணம்தான் அடாப்டிவ் அன்கான்ஷியஸ் வேலை செய்யும் நேரம்.

சரி உள்ளுணர்வை, இது உள்ளுணர்வுதான் என்று எப்படிப் புரிந்துகொள்வது? அது திரும்பத் திரும்ப வரும். அது சொல்கிற மாதிரி செய்வது ‘ரிஸ்க்’ என்றுகூடத் தோன்றலாம். ”பாதுகாப்பு வேண்டுமென்றால் கரையில் நில்; பொக்கிஷம் வேண்டுமென்றால் கடலுக்குள் செல்” என்று பாரசீகக் கவி சா’அதி பாடியதும் உள்ளுணர்வை மதிப்பது பற்றித்தான்.

”நான் தனியாக இருக்கும்போது, நன்றாக சாப்பிட்டுவிட்டு காலாற நடந்துபோகும்போது, அல்லது யாருமே இல்லாமல் தனியாக இருக்கும்போது, தூக்கம் வராமல் தனிமையில் தவிக்கும்போது – இம்மாதிரி தருணங்களில்தான் எனக்கு அபரிமிதமாக கருத்துக்களும் இசைக்குறிப்புகளும் ஒரு ஆற்றைப்போல பொங்கிப் பிரவகித்து அபரிமிதமாக வருகின்றன. அவை எங்கிருந்து, எப்படி வருகின்றன என்றெல்லாம் எனக்குத் தெரியாது. நீ வந்துதான் ஆகவேண்டும் என்று அவைகளை என்னால் வற்புறுத்தி வரவழைக்கவும் முடியாது” என்று கூறுகிறார் இசை மேதை மொசார்ட்!

அன்பு, அமைதி, இன்பம் இவைதான் நம்முடைய சாரமாக உள்ளன. எப்போதெல்லாம் நாம் இவற்றிலிருந்து விலகி வெறுப்பு, கசப்பு, கோபம், பயம், பேராசை, இறுக்கம், பொறாமை, பொறுமையின்மை, துவேஷம், வன்முறை போன்ற தவறான திசைகளில் பயனிக்க ஆரம்பிக்கிறோமோ அப்போது நாம் உள்ளுணர்வின் வழிகாட்டுதல் பெறவே முடியாது என்பதைப் புரிந்துகொள்ளலாம். நாம் நம் சாரத்தோடு இணைந்திருந்தால் மட்டுமே அடாப்டிவ் அன்கான்ஷியஸ் வேலை செய்யும்.

நம் உடலில் இருந்து எடுக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட ஒரு ரத்தத் துளியில் உள்ள இரும்புச் சத்து எவ்வளவு விழுக்காடு என்று பார்த்தால் ஒரு உண்மை புரியும். நம் உடலுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் ரத்தத் துளி ஒன்றில் எவ்வளவு இரும்புச் சத்து உள்ளதோ அதே விழுக்காடுதான் நம் உடலிலிருந்து வெளியில் வந்த துளியிலும் இருக்கும். நம் உடலில் இருந்து பிரிக்கப்பட்ட துளியும் உடலுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் பிரிக்கப்படாத துளியும் ஒன்றுதான். ஆனால் உடலிலிருந்து பிரிந்துவிட்ட, தன் மூலத்திலிருந்து பிரிந்து வந்துவிட்ட அந்த ரத்தத் துளியால் நமக்கு ஒரு பயனும் இல்லை. அதனால் ஓடவோ, நமக்கு வலுவூட்டவோ, நம்மை குணப்படுத்தவோ முடியாது. ரொம்ப நாளைக்கு இப்படியே உடலை விட்டுப் பிரிந்து வெளியிலேயே இருக்குமானால் அது காய்ந்து, உலர்ந்து, அழிந்து போகும். உடலுக்கு உள்ளே ஓடிக்கொண்டிருக்கும் ரத்தத்துளியில் இருக்கும் எல்லா அம்சங்களும் அதற்கு இருந்தாலும் பயனற்றுப் போகும். சாரத்திலிருந்து நாம் பிரிந்திருந்தால் நமக்கும் இந்த கதிதான்.

”கடவுளை சிரிக்க வைக்க வேண்டுமென்றால், நீங்கள் போட்டுவைத்திருக்கும் திட்டங்களையெல்லாம் அவனிடம் சொல்லுங்கள் போதும்” என்று சொல்வார்கள்! இதற்கு என்ன அர்த்தம்? திட்டமே போடக்கூடாது என்று அர்த்தமா? அப்படியல்ல. கடவுள் என்பதும் சாரம் என்பதும் ஒன்றுதான். உள்ளுணர்வுகள்தான் மீண்டும் மீண்டும் நம்முடைய சாரத்தோடு நம்மை இணைக்கின்றன. அவற்றிலிருந்து பிரிந்திருக்கும்போது எவ்வளவு திட்டம்போட்டாலும் அது பிரயோஜனப்படாது. ”வல்லாஹு ஹைருல் மாகிரீன்” என்று திருக்குர்’ஆன் வசனம் ஒன்று (03:54) கூறுகிறது.  திட்டமிடுபவர்களிலெல்லாம் மிகச்சிறந்த திட்டமிடுபவன் அல்லாஹ்தான் என்று அதற்கு அர்த்தம். சாரத்தின் திட்டம்தான் ஜெயிக்கும். உள்ளுணர்வோடு, உள்ளுணர்வை மதித்து வாழ்வது எவ்வளவு முக்கியம் என்று இப்போது புரிகிறதா?

ஜான் காட்மேன் என்று ஒரு அமெரிக்க உளவியலாளர் இருந்தார். அவர் ’காதல் சோதனைக்கூடம்’ (Love Lab)ஒன்று வைத்திருந்தார். அதில் கிட்டத்தட்ட 3000க்கும் மேற்பட்ட தம்பதியரைப் பேட்டி கண்டார். அவர்கள் பேசுவது கால் மணி நேரம் வீடியோ எடுக்கப்படும். அவர்கள் வெளிப்படுத்தும் ஒவ்வொரு உணர்ச்சிக்கும், உடல் அசைவுகளுக்கும் ஒரு எண் கொடுக்கப்படும். இப்படி ஒவ்வொரு வினாடிக்கும் செய்யப்பட்டது.

கால் மணி நேரம் எனில் கணவனுக்கு 900 வினாடிகள், மனைவிக்கு 900 வினாடிகள். மொத்தம் 1800 வினாடிகளுக்கான உணர்ச்சி வெளிப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு அவற்றுக்கு எண்களும் வழங்கப்பட்டன. உதாரணமாக ஒரு தம்பதிக்கு முதல் ஆறு வினாடிகளில் 7,7,14, 10, 11, 11 என்ற எண்கள் கொடுக்கப்பட்டிருந்தால், கொஞ்ச நேரம் கோபமாகவும், பின்பு உணர்ச்சி எதையும் வெளிப்படுத்தாமலும், பின்பு தன் கருத்தை நியாயப்படுத்தியும், பின்பு புலம்பவும் ஆரம்பித்தார் என்று புரிந்துகொள்ளலாம்.  இவ்விதம் 15 நிமிடங்களுக்கு ஆராய்ச்சி செய்தபின் அடுத்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் கணவன் மனைவியாகத் தொடர்வார்களா இல்லை விவாகரத்துப் பெற்றுவிடுவார்களா என்று 95 விழுக்காடு சரியாக காட்மேன் சொன்னாராம்! அவர் செய்ததையே மூன்று நிமிடங்களுக்கு வீடியோ எடுத்து சிபில் என்பவர் சொன்னார்! அதாவது அடுத்த ஆண்டு எப்படி இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த நிமிடம் சொல்கிறது! அடாப்டிவ் அன்கான்ஷியஸ் செய்யும் வேலையை கொஞ்சம் கஷ்டப்பட்டு காட்மேன் செய்துகாட்டியிருக்கிறார். ’விவாகரத்துக் கணக்கு’ (The Mathematics of Divorce) என்று 500 பக்க புத்தகம் வேறு அவர் எழுதினாராம்!

உங்கள் படுக்கை அறை

ஒரு கம்பனியில் வேலைக்கு ஆள் எடுக்கவேண்டும், அவர் நேர்மையானவரா, புதிய சிந்தனைகளை ஏற்றுக்கொள்பவரா, சோம்பேறியா, கடின உழைப்பாளியா என்றெல்லாம் தெரிந்துகொள்ளவேண்டும் என்றால் அந்த ஆளை நேர்காணல் செய்வார்களா அல்லது அவருக்குத் தெரியாமல் அவரது படுக்கையறையைக் கண்காணிப்பார்களா? இது என்ன முட்டாள்தனமான கேள்வி என்கிறீர்களா? முன்னதுதான் பின்னது இல்லை என்பீர்கள். நானும் அதைத்தான் சொல்வேன். ஆனால் கோஸ்லிங் என்ற உளவியலாளர் பின்னதைத் தேர்ந்தெடுத்தார்!

ஒரு எண்பது மாணவர்களை அவர் தேர்ந்தெடுத்துக்கொண்டார். கேள்விகள் அடங்கிய ஒரு படிவத்தை அவர்களின் நண்பர்களிடம் கொடுத்து முதலில் அவர்களுடைய கருத்தைக் கேட்டார். பின்பு அவர்கள் யாரென்றே தெரியாத நபர்களிடம் அக்கேள்விகளைக் கொடுத்து அந்த எண்பது பேர்களின் படுக்கையறைகளின் சாவிகளைக் கொடுத்தார். யாரும் இல்லாதபோது உள்ளே போய் அறையைக் கவனித்து அந்தக் கேள்விகளுக்கான பதில்களை எழுத வேண்டும். இதுதான் நிபந்தனை! அவர்களுக்கு அதற்காகக் கொடுக்கப்பட்ட நேரம் 15 நிமிடங்கள்தான்!

முடிவு என்ன தெரியுமா? அம்மாணவர்களை நன்கறிந்த நண்பர்கள் என்ன சொன்னார்களோ, அதையும், அதற்கு மேலும் மிகச்சரியான தகவல்களை, அம்மாணவர்களின் படுக்கையறைகளைப் பார்த்தே அந்த அந்நியர்கள் சொல்லிவிட்டனர்!

எப்படி? படுக்கையறையில் என்ன இருக்கும்? களைந்து கடாசிய ஜட்டி, சுருட்டி  மூலையில் போடப்பட்ட பனியன், மடிக்காமல் போட்டுவைத்த லுங்கி, ’அழகி’களின் படங்கள், பீடி சிகரட் நாற்றம் – இப்படி இருக்கலாம். அல்லது அடுக்கி வைக்கப்பட்ட துணிமணி, புத்தகங்கள், குறுந்தகடுகள், ஒழுங்கில் இருக்கும் மேஜை, சுருட்டி வைக்கப்பட்ட படுக்கை, சுவற்றில் அழகாக மாட்டப்பட்ட நிழல்படம் அல்லது ஓவியம் – இப்படி இருக்கலாம். இந்தப் பொருள்களெல்லாம் உங்களைப் பற்றி ஒரு காவியமே பாடிவிடும் என்பதுதான் உண்மை. உங்கள் ’லட்சணம்’ என்ன என்பதை அவை காட்டிவிடும். ஆங்கிலத்தில் அழகாக அதை behavioral residue என்று சொல்கிறார்கள். நீங்கள் யார் என்ற உண்மை, நீங்கள் இல்லாதபோதுதான் நீங்கள் பயன்படுத்திய பொருள்கள் மூலமாக சிறப்பாக உணர்த்தப்படும்! ஆம். அதுதான் தின் ஸ்லைசிங். உங்களின் குறுக்கு வெட்டுத் தோற்றம். அதைப் பார்த்தவுடனேயே பார்ப்பவரின் அடாப்டிவ் அன்கான்ஷியஸ் வேலை செய்ய ஆரம்பித்துவிடும். உங்களைப் பற்றி அக்குவேறு ஆணி வேறாக அது சொல்லிவிடும். அதுதான் கோஸ்லிங் பரிசோதனையில் நடந்தது. வருஷக்கணக்கில் பழகியவர்களால்கூட சொல்ல முடியாததை சில நிமிஷங்கள் மட்டும் அங்கே கழித்தவர்களால் சொல்ல முடிந்தது. அது அடாப்டிவ் அன்கான்ஷியஸ் செய்த மாயம்.

நம் வாழ்வின் பல நேரங்களில் நாம் தின் ஸ்லைசிங் செய்துகொண்டுதானிருக்கிறோம். அதாவது அடாப்டிவ் அன்கான்ஷியஸைப் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். புதிதாக ஒருவரைப் பார்க்கும்போது, ஒரு புதிய சூழலில் இருக்கும்போது இப்படி. எந்த இடத்துக்கு எந்த மாதிரி உடை அணிந்துகொண்டு செல்ல வேண்டும் என்று நமக்கு நன்றாகத் தெரிந்திருந்தால் நமக்கு ‘ட்ரெஸ் சென்ஸ்’ இருக்கிறது என்று அர்த்தம். ஒரு கூடைப்பந்தாட்ட வீரருக்கு களத்தில் எப்படியெல்லாம் இருக்கவேண்டும், விளையாட வேண்டும் என்று தெரிந்திருந்தால் அவருக்கு ‘கோர்ட் சென்ஸ்’ இருப்பதாக அர்த்தம். இதெல்லாம் திட்டம் போட்டு செய்வதில்லை. உடனுக்குடனேயே செய்துவிடுகிறோம். இந்த ’சென்ஸ்’தான் உள்ளுணர்வு என்பது. இதுதான் அடாப்டிவ் அன்கான்ஷியஸ். இதுதான் தின் ஸ்லைசிங்.

டேவிட் சிப்லீ என்ற பறவையியல் நிபுணர் ஒருநாள் கிட்டத்தட்ட 200 கெஜ தூரத்தில் பறந்துகொண்டிருந்த பறவையொன்றைப் பார்த்தார். பார்த்தவுடனேயே அது ரஃப் என்ற வகையைச் சேர்ந்த உள்ளான் பறவை என்று கண்டுபிடித்துவிட்டார். அதுவரை அந்தவகை உள்ளான்கள் பறப்பதை அவர் பார்த்ததே இல்லை!  ஆனால் எப்படியோ பறவைகளின் சாரம் அவருக்கு அத்துபடியாகியிருந்தது. அது உள்ளான்தான் என்று அவரது அடாப்டிவ் அன்கான்ஷியஸ் மிகச்சரியாகச் சொல்லிவிட்டது!

டாம் ஹாங்க்ஸ் என்று ஒரு ஹாலிவுட் நடிகர் இருக்கிறார். அவர் ஆரம்பத்தில் டிவி நிகழ்ச்சிகளில் நடித்துக்கொண்டு யாருக்கும் தெரியாதவராக இருந்தார். ஒருநாள் அவரை ஹாலிவுட் தயாரிப்பாளர் ப்ரையன் க்ரேஸர் பார்த்தார். பார்த்தவுடனேயே டாம் ஹாங்க்ஸ் ’ரொம்ப ஸ்பெஷல்’ என்று உணர்ந்துகொண்டார். வாய்ப்புகள் கொடுத்தார். ஸ்ப்லாஷ், அபோல்லோ 13, த டாவின்ஸி கோட் போன்ற படங்களில் நடிக்க வைத்தார். டாம் ஹாங்க்ஸ் இன்று உலகப்பிரபலம். பல விருதுகளைப் பெற்றுவிட்டார். எல்லாம் ப்ரையன் அவரைப் பார்த்த கணத்தால் வந்த யோகம். ஆனால் அவரிடம் ’ஏதோ’ இருந்ததை ப்ரையனிடமிருந்த ‘ஏதோ’ ஒன்று உடனே புரிந்துகொண்டது! அந்த ‘ஏதோ’ ஒன்றுதான் நமது உள்ளுணர்வு.  அடாப்டிவ் அன்கான்ஷியஸ்.

ஒரு உலகப் புகழ் பெற்ற அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் இருந்தார். அவரோடு சேர்ந்து தொழிலில்

அவருடைய பங்குதாரராக ஆகவேண்டுமென்று எட்வின் சி. பார்ன்ஸ் என்பவர் விரும்பினார். ஆனால் அதற்கு இரண்டு விஷயங்கள் தடையாக இருந்தன. ஒன்று, பார்ன்ஸ் அந்த விஞ்ஞானியை அதுவரை நேரில் பார்த்ததில்லை. இரண்டு, அவருடைய ஊரிலிருந்து அந்த விஞ்ஞானி இருந்த ஊருக்கு ரயிலில் செய்ய அவரிடம் காசில்லை! ஆனாலும் அவர் விடவில்லை. எப்படியோ கிளம்பிவிட்டார். எப்படி என்கிறீர்களா? நம்முடைய வழியில்தான்! கூட்ஸ் வண்டியில் ஏறிச் சென்றுவிட்டார்! போய் அந்த விஞ்ஞானியில் தொழிற்சாலை வாசலில் நின்றுகொண்டு தான் வந்திருக்கும் நோக்கத்தை அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தார்! எல்லோரு சிரித்தார்கள். என்றாலும் இப்படி ஒரு பைத்தியக்காரர் சொல்லிக்கொண்டு தொழிற்சாலை வாசலில் நிற்கிறார் என்ற செய்தி அந்த விஞ்ஞானிக்குச் சென்றது. விஞ்ஞானியும் வந்து அவரைப் பார்த்தார். ஊரைவிட்டு துரத்திவிடப்பட்ட பிச்சைக்காரனின் கோலத்தில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். என்றாலும் அந்த விஞ்ஞானி பார்ன்ஸை தன் தொழிற்சாலையில் ஒரு ஊழியராக சேர்த்துக்கொண்டார்! கொஞ்ச காலத்திலேயே பார்ன்ஸின் கனவும் நிறைவேறியது! ஆமாம். அந்த உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானியின் ’பார்ட்ன’ராகவும் ஆகிவிட்டார்.

சரி, யார் அந்த விஞ்ஞானி? அவர்தான் உலகப் புகழ்பெற்ற தாமஸ் ஆல்வா எடிசன்! பிச்சைக்காரக் கோலத்திலிருந்து எட்வின் பார்ன்ஸை அவர் ஏன் முதலில் ஊழியராக சேர்த்துக்கொண்டார். உருவத்தையும் உடையையும் பார்த்து நிச்சயம் சேர்த்திருக்க முடியாது. பின் அவரைச் சேர்த்துக்கொள்ளலாம் என்று ஏன் எடிசனுக்குத் தோன்றியது? காரணத்தை எடிசனே சொல்கிறார். “அவருடைய முகத்தில் ஏதோ இருந்தது. அவர் எந்த எண்ணத்தோடு வந்திருக்கிறாரோ அவர் அதை நிச்சயமாக நிறைவேற்றுவார் என்று அந்தக் கணம் எனக்குத் தோன்றியது” என்கிறார் எடிசன்! பின்னர் பல மாதங்கள் கழித்து எடிசன் டிக்டேடிங் மெஷின் என்ற ஒன்றை எடிசன் கண்டுபிடித்தபோது அதை விற்க யாரும் முன்வரவில்லை. பார்ன்ஸ் முன் வந்து அதிக எண்ணிக்கையில் விற்று சாதனை படைத்து, அவர் விரும்பியதுபோலவே எடிசனின் பங்குதாரராகவும் ஆனார்.

எடிசனை அப்படி முடிவெடுக்க வைத்தது அந்தக் கணத்தில் அவருக்கு ஏற்பட்ட ஒரு உணர்வு. அவருடைய அடாப்டிவ் அன்கான்ஷியஸ் கொடுத்த உத்தரவு என்றும் சொல்லலாம். ஒரு கண நேரப் பொறிதான் அது. ஆனால் அதன் பேச்சு எப்போதுமே பொய்யாவதில்லை.

நாம் பொய்சொல்லலாம். ஆனால் நமது உள்ளுணர்வு, நமது அடாப்டிவ் அன்கான்ஷியஸ் எப்போதுமே பொய்சொல்வதில்லை.

 பார்வைகள் பலவிதம் — 6

இருட்டு அதிகமாக இருந்தால் விடியப்போகிறது என்று அர்த்தம்

 • ஓஷோ

எந்தப்பக்கம் பார்க்கிறீர்கள்?

06 -- SNSN (Oct 2014)ஸ்பெயின் நாட்டில் ஒரு மலைப்பகுதியில் ஒரு மடாலயம் இருந்தது. அங்கே படித்துத்தேறவேண்டுமென்றால் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். அங்கே ஒரு இளைஞன் சேர்ந்தான். அந்த பயிற்சிகளில் ஒன்று மௌனமாக இருப்பது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பேசவேண்டும். அதுவும் இரண்டே வார்த்தைகள்தான் பேசலாம்! எப்படிப்பட்ட நிபந்தனை!

ஆனால் அந்த இளைஞன் அந்த நிபந்தனையைக் கடைப்பிடித்தான். இரண்டு ஆண்டுகள் கழித்து மூத்த துறவி அவனை அழைத்து, “நீங்கள் இரண்டு வார்த்தைகள் பேசலாம்” என்று அனுமதி கொடுத்தார். அந்த இளைஞன் என்ன பேசினான் தெரியுமா?

“சாப்பாடு மோசம்” என்றான்!

வன வாசம் மாதிரி அடுத்து இரண்டாண்டுகள் மௌனவாசம். அது முடிந்த பிறகு மூத்த துறவி மறுபடியும் அந்த இளைஞனை அழைத்து அடுத்த வாய்ப்பைக் கொடுத்தார். அப்போது அந்த இளைஞன் என்ன சொன்னான் தெரியுமா?

“படுக்கை கரடுமுரடு” என்றான்!

அடுத்த இரண்டு ஆண்டுகள் போயின. மூன்றாவது வாய்ப்பு வந்தபோது அந்த இளைஞன் அதை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டான் என்றுதான் சொல்லவேண்டும். ஆமாம். மூன்றாவது இரண்டாண்டுகள் முடிந்த பிறகு இரண்டு வார்த்தைகள் பேசலாம் என்று அவருக்கு அனுமதிகொடுக்கப்பட்டபோது அவன் சொன்னார்:

“நான் போகிறேன்”!

மூத்த துறவி சொன்னார். “எனக்குத்தெரியும். நீங்கள் இந்த மடத்தை விட்டுப் போய்விடுவீர்கள் என்று அப்போதே நான் உணர்ந்தேன். ஏனென்னில் நீங்கள் இங்கு வந்த நாள்முதல் இந்த மடத்தில் இருக்கும் எந்த நல்லதையும் பார்க்கவில்லை. கெட்டதை மட்டுமே பார்த்தீர்கள். இந்த மனநிலைதான் நீங்கள் சொர்க்கம் சென்றாலும் தொடரும். சொர்க்கமும் உங்களுக்கு நரகமாகும்” என்றார்.

ஆஹா, எவ்வளவு அற்புதமான அறிவுரை. வாழ்க்கையில் நாம் வெற்றி அடையவேண்டுமென்றால் எதைப்பார்க்கவேண்டும்? இதுதான் கேள்வி. வாழ்வில் எளிய, நன்மையான, அற்புதமான, அழகான விஷயங்கள் எவ்வளவோ உள்ளன. அதேபோல அசிங்கமான, அருவருக்கத்தக்க, தீமையான விஷயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. நம்முடைய கழிவு துர்நாற்றமடித்ததைப் பற்றி நாம் என்றாவது யோசித்துக்கொண்டே இருந்திருக்கிறோமா? அதேபோலத்தான் நமக்கு வெளியே உள்ள விஷயங்களையும் பார்க்கவேண்டும். அதுதான் நமக்கு நன்மை செய்யும். அதைத்தான் இந்தக் கதை கூறுகிறது.

ஒரு கம்பி வயலின்

பகானினி என்று ஒரு இத்தாலிய வயலின் மேதை இருந்தார். அவரது விரல்கள் மிகவும் நீளமாக இருந்தன. ஒருமுறை அவர் ஒரு ஆர்கெஸ்ட்ராவில் வயலின் வாசித்துக்கொண்டிருந்தார். மெய்மறந்து ரசிகர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர். அவரும் மெய்மறந்துதான் வாசித்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் திடீரென்று அது நடந்தது.

வயலினின் ஒரு கம்பி உடைந்து நாராசமான சப்தமெழுப்பியது. இசைக்குள்ளே அபஸ்வரம். ஒரு கணம் பகானினி திகைத்துப்போனார். ஆனால் ஒரு கணம்தான். அடுத்த கணம் மீதி இருந்த கம்பிகளில் தன் விரல்களை ஓட்டி இசையை எழுப்பினார்.

ஆனால் பிரச்சனை அங்கே முடிந்துவிடவில்லை. கொஞ்ச நேரத்தில் சட்டென்று அடுத்த ஒரு கம்பியும் உடைந்துபோனது! ஆனால் பகானினி தளர்ந்துவிடவில்லை. மீதி இருந்த கம்பிகளில் தொடர்ந்து வாசித்தார். ஆனால் விதி மீண்டும் சதி செய்தது. ஆமாம். மூன்றாவது கம்பியும் தெறித்து மூன்று கம்பிகளும் அபஸ்வரமெழுப்பி அவருடைய வயலினிலிருந்து தொங்கின!

ஆனால் பகானினி அப்போதும் தளர்ந்துவிடவில்லை. ஒரே கம்பியிலேயே அவர் கற்பனையில் இருந்த ராகத்தை, மெட்டை, இசையை எழுப்பி வாசித்து முடித்தார்! ஒரு கம்பியில் வயலின் இசை நிகழ்ச்சி நடத்திய ஒரே இசைமேதை உலகில் அவராக மட்டுமே இருக்க முடியும். வயலின் கம்பிகள் மட்டுமே அறுந்துவிழுந்தன. ஆனால் அவரது மனக்கம்பிகளை அறுக்க எதாலும் முடியவில்லை. இப்படிப்பட்டவர்கள் வெற்றி வயலினை எப்போதுமே வாசித்துக்கொண்டுதான் இருப்பார்கள். அந்த இசை இந்த உலகையே மயக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எரிவது இல்லாவிட்டால் மிதப்பது

அமெரிக்காவில் குடும்பத்துக்குத் தேவையான நுகர்பொருள் தயாரிக்கும் புகழ்பெற்ற கம்பனி ஒன்று இருந்தது. இன்னும் இருக்கிறது. அதன் பெயர் ப்ராக்டர் அண்ட் காம்பிள். முக்கியமாக அது முதலில் மெழுகுவர்த்திகளைத்தான் தயார் செய்து விற்றுக்கொண்டிருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக மெழுகுவர்த்தி வியாபாரம் திடீரென்று வீசிய எடிசனின் மின்சார பல்புக் காற்றால் அணைந்து போனது. ஆமாம். எடிசன் மின்சாரத்தால் எரியும் பல்பைக் கண்டுபிடித்ததால் மெழுவர்த்திகளுக்குத் தேவையில்லாமல் போனது. ப்ராக்டர் அண்ட் காம்பிள் மெழுகுவர்த்தியின்மீது எடிசன் அவருக்கே தெரியாமல் மண்ணைப் போட்டுவிட்டார்! பாவம், என்ன செய்வது, எப்படி சமாளிப்பது என்று கம்பனிக்குத் தெரியவில்லை. யோசித்துக்கொண்டே இருந்தார்கள். அந்தக்காலகட்டத்தில் கம்பனியில் ஒரு விபத்து நடந்தது.

அங்கு வேலை பார்த்த ஊழியர் ஒருவர் வேலை முடிந்து மெஷினை ஆஃப் செய்யாமல் வந்துவிட்டார். திரும்பவும் போய்ப் பார்த்தபோது  ஒரே புகையும் நுரையுமாக இருந்தது. அதிலிருந்து அவருக்கு ஒரு ’ஐடியா’ தோன்றியது. இந்த நுரையை வைத்து சோப்பு செய்தால் என்ன என்று தோன்றியது! அப்படியே செய்தார். ஆனால் என்ன அதிசயம், உலகிலேயே வித்தியாசமான ஒரு சோப்பு கிடைத்தது. அது என்ன என்கிறீர்களா? அதுதான் மிதக்கும் சோப்பு!

ஆமாம். அந்த சோப்பு தண்ணீரில் போட்டால் கல் மாதிரி நீருக்குள் போகவில்லை. நீருக்கு மேலே தாளைப்போல மிதக்க ஆரம்பித்தது. அப்போது உருவானதுதான் அமெரிக்காவின் ப்ராக்டர் அண்ட் காம்பிளின் ஐவரி மிதக்கும் சோப்பு! சென்ற ஆண்டு மட்டும் 11.31 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிகர வருமானம் அந்தக் கம்பனிக்குக் கிடைத்தது! எத்தனை கதவுகள் மூடப்பட்டாலும் சரி, அறியப்படாத எத்தனையோ கதவுகளை நமக்காக இறைவன் திறப்பான். சோர்ந்து போகாத மனம் மட்டும்தான் நமக்கு வேண்டும். அது நமக்கு ஆக்கப்பூர்வமான சிந்தனையைக் கொடுக்கும். அது நமக்கு செல்வததை, புகழை எல்லாம் கொடுக்கும்.

யார் அந்தப் பையன்?

அந்தப் பையனுக்கு ஒன்பது வயதிருக்கும். பள்ளிக்கூட மாணவன். ஆனால் அவனுக்கு ஒரு பிரச்சனை இருந்தது. தாகம் எடுத்தால் அவனால் தண்ணீர் குடிக்க முடியாது! ஏன், ஏதாவது நோயா? ஆமாம். நோய்தான். ஆனால் அவனுக்கு அல்ல. அவன் வாழ்ந்த சமுதாயத்துக்கு. என்ன புரியவில்லையா?

அந்த மாணவன் ஒரு தலித் பையன். தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்ட ஜாதியிலிருந்து வந்தவன். அப்படிப்பட்ட பையன்கள் தண்ணீர் குடிக்க வேண்டுமென்றால் பள்ளிக்கூடத்தில் இருக்கும் குழாயைத் திருகி தண்ணீர் கீழே ஊற்றும்போது கையால் பிடித்துக் குடிக்க . ஆனால் அந்த அனுமதிகூட இந்தப் பையனுக்குக் கிடையாது. ஏன்? அவன் ஜாதி அவ்வளவு தாழ்ந்த ஜாதியாகக் கருதப்பட்டது.  மஹர் என்ற ஜாதியைச் சேர்ந்தவன் அவன். அவனுக்கு தாகமெடுப்பதே குற்றம்! ஆனால் அவன் மஹர் என்ற ஜாதியைச் சேர்ந்தவன், அந்த ஜாதி தீண்டத்தகாத ஜாதியாகப் பார்க்கப்பட்டது என்பதெல்லாம் அவன் தாகத்துக்குத் தெரியவில்லை பாவம். சரி, அப்ப என்னதான் வழி? தாகமெடுத்தால் நீரின்றி வறண்டுச் சாகவேண்டுமா?

அப்படியல்ல. தாகமெடுத்தால் ஆசிரியரிடம் சொல்ல வேண்டும். இது முதல் கட்டம். இதில் ஒன்றும் பிரச்சனையில்லை. இது முறைதான். அவர் அனுமதி கொடுத்தபின் குழாயடிக்குச் சென்று, திருகி தண்ணீர் குடிக்கலாம். ஆனால் மஹர் ஜாதிக்காரர்களுக்கு அந்த அனுமதியும் இல்லை. அவர்கள் தொட்டால் தண்ணீரின் தூய்மை கெட்டு அது தீட்டாகிவிடும் என்று அவர்கள் நினைத்தார்கள்! அதனால் ஒரு மஹர் பையனுக்கு தாகமெடுத்தால் அவன் ஆசிரியரின் அனுமதி பெற்று, பள்ளியில் வேலை பார்க்கும் ஹிந்து ப்யூனை உடன் அழைத்துச் செல்லவேண்டும். அவர் குழாயைத் திறக்க, இவன் கைகளைக் கீழே பிடித்து தண்ணீர் குடித்துக்கொள்ளலாம்! ஆனால் ப்யூன் பள்ளிக்கு வராத நாட்களில் மஹர் பையன்களுக்கு தாகமெடுக்கக்கூடாது! எடுத்தாலும் தண்ணீர் கிடைக்காது!

இது எங்கே நடந்தது என்கிறீர்களா? எங்கோ ஆப்பிரிக்கப் பழங்குடியினரிடையே அல்ல. சோமாலியாவில் அல்ல. எதியோப்பியாவில் அல்ல. பழம்பெருமை பேசும்  நம் பாரத நாட்டில்தான்! அந்த மஹர் பையன் யார் தெரியுமா? இந்திய அரசியல் சாசனத்தை வடிவமைத்துக்கொடுத்த மேதை அம்பேத்கர்தான்!

வாழ்வில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சரி, அதை மீறி மேலே செல்லவேண்டும் என்ற பற்றி எரியும் ஆசை, இலக்கும் லட்சியமும் இருந்தால் எதுவும் சாத்தியம் என்பதற்கு அவருடைய வாழ்க்க ஒரு சிறந்த உதாரணம்.

நாமா? உலகமா?

ஒரு குழந்தை கதை சொல்லச்சொல்லி தன் அம்மாவைத் தொந்தரவு செய்துகொண்டே இருந்தாள். ஆனால் அம்மா ரொம்ப களைப்பாக இருந்தாள். நீ கொஞ்ச நேரம் படி, பின்பு சொல்கிறேன் என்று சொல்லிப்பார்த்தாள். ம்ஹும். மகள் ஓய்வதாயில்லை. கடைசியில் தொந்தரவு தாங்க முடியாத தாயின் மூளை வேகமாக வேலை செய்தது. சட்டென்று தன் கையில் இருந்த ஒரு பத்திரிக்கையின் பின் அட்டையைக் கிழித்து, பின் மறுபடியும் அதை நான்கைந்து துண்டுகளாகக் கிழித்து மகள் கையில் கொடுத்தாள். அந்த பின் அட்டையின் முன்பக்கத்தில் பூமியின் வரைபடம் இருந்தது.

“இந்த ’க்ளோப் மேப்’பை சரியாகச் சேர்த்துக்கொடு. கொடுத்தால் உடனே கதை சொல்கிறேன்” என்று சொல்லி மகள் கையில் துண்டுகளைத் திணித்தாள் தாய். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக ஒரு சில வினாடிகளில் படத்தை மிகச்சரியாக ஒன்று சேர்த்துக்கொண்டுவந்து குட்டி மகள் கொடுத்துவிட்டாள்! எப்படி இவ்வளவு சீக்கிரம் இதை ஒன்று சேர்த்தாய் என்று அம்மா கேட்டாள். மகள் சிரித்துக்கொண்டே அட்டையின் பின்பக்கத்தைக் காட்டினாள். அதில் ஒரு பெண்ணின் படம் இருந்தது.

“நான் இந்தப் பெண்ணைத்தான் ஒன்று சேர்த்தேன்” என்று கூறினாள். பிரிந்துகிடந்த ஒரு மனுஷியை ஒன்று சேர்த்ததும் உலகமே தானாக ஒன்று சேர்ந்துகொண்டது!

நமக்கு மிகவும் தெரிந்த பழைய கதைதான் இது. ஆனால் இதில் நமக்கான செய்தி ஒன்று உள்ளது. இந்த உலகைத் திருத்த விரும்பினால் முதலில் நம்மிலிருந்துதான் நாம் தொடங்கவேண்டும்! “நீ தேவையில்லாமல் விரலை அசைத்தால்கூட அதற்கு ஏற்றவாறு இந்த பிரபஞ்சம் முழுவதும் அசைகிறது” என்று என் குருநாதர் சொல்வார். அதுதான் இது. நாம்வேறு உலகம் வேறல்ல. விஞ்ஞான ரீதியிலும் சரி, மெஞ்ஞான ரீதியிலும் சரி. நாம்தான் உலகம். நம்மிலிருந்துதான் உலகம். உலகம் நமக்குள் இருக்கிறது. எனவே முதலில் திருந்தவேண்டியதும், திருத்த வேண்டியதும் நம்மைத்தான்.

தடைகளா படிகளா? — 7

07 -- SNSN (Nov 2014)அவர் ஒரு குள்ளமான இளைஞர். ஆனால் அவரது பேச்சையும் செயலையும் எல்லோரும் விரும்பினார்கள். யார் அவர்?

காசிக்கு வடக்கே கிட்டத்தட்ட ஏழு கிலோமீட்டர் தூரத்தில் மொகல்சிராய் என்று ஒரு சிற்றூர். அந்த ஊரில் ஒரு ஏழைத் தந்தைக்கு ஒரு ஏழை மகன் பிறந்தான். அவன் ரொம்பக் குள்ளமான சிறுவனாக இருந்தான். ஆனால் அவனது தன்னம்பிக்கை ரொம்ப உயரமாக வளர்ந்திருந்தது. அவனுக்கு ஒன்றரை வயதிருந்தபோது சாதாரண குமாஸ்தாவாக பிழைப்பு நடத்தி வந்த அவனது தந்தையும் மறைந்தார்.  தாய்வழித்தாத்தா வீட்டில் வளர்ந்தான் சிறுவன். தாத்தா நல்லவர், ரொம்ப அன்பானவர். ஆனால் அவரும் வசதியானவரில்லை. அவர் வீட்டிலும் நிறைய குழந்தைகள் இருந்தனர். எனவே ஒருநாளைக்கு ஒருவேளை உணவு மட்டுமே அவர்களால் உண்ண முடிந்தது. பல சமயங்களில் அதுவும் இல்லாமல் பட்டினிகிடக்க நேரிட்டது.

ஆனால் வறுமை, பசி எதாலுமே அந்தச் சிறுவனின் திறமையையும் உழைப்பையும் கெடுக்கமுடியவில்லை. சிறுவனது ஆங்கில உச்சரிப்பு ஆசிரியர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.

ஒருநாள் திருவிழா பார்த்துவிட்டு நண்பர்களுடன் அந்தச் சிறுவன் திரும்பிக்கொண்டிருந்தான். கங்கை நதியைக் கடந்து அக்கரைக்குப் போகவேண்டியிருந்தது. ஓடக்காரருக்குக் கொடுப்பதற்கு அந்தச் சிறுவனிடம் பணம் ஏதுமில்லை. நண்பர்களிடம் கேட்டிருந்தால் நிச்சயம் கொடுத்திருப்பார்கள். ஆனால் அவன் கேட்கவில்லை. சிறுவனாக இருந்தாலும் சுயமரியாதை உணர்வு மிக்கவனாக அவன் இருந்தான். எனவே காத்திருந்து, எல்லோரும் சென்றபிறகு தனியனாக கங்கை நதியை நீந்தியே கடந்து அக்கரைக்குச் சென்றான்!

கால் பந்தாட்டம், ஹாக்கி, கிரிக்கட் என்று பந்து வைத்து விளையாடும் எந்த விளையாட்டாக இருந்தாலும் அவனுக்கு அதில் விருப்பம் அதிகம். ஆனால் பந்து வாங்கக் காசிருக்காது. பழைய துணிகளை இலைகளில்கட்டி, அதையே பந்தாக்கி அவன் விளையாடுவான்! எந்நேரமும் ஏதாவது புத்தகத்தை வைத்துப் படித்துக்கொண்டிருப்பதும் அவன் பழக்கமாக இருந்தது.

இளைஞனாகிக்கொண்டிருந்தான் அவன். அப்போது அவன் வயது பதினாறு. உயர்நிலைப்பள்ளிக் கல்வியை முடிந்திருந்தான். மேற்படிப்பைத் தொடர காசியில் இருந்த காசி வித்யாபீடம் என்ற பள்ளியில் அவன் சேர்ந்தான். அவன் வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. ஆனால் தினமும் அவன் பள்ளிக்கு நடந்தே சென்றான்!

இப்படி உருவான அந்த இளைஞன் இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் இந்திய அரசியலிலும் பெரும் பங்கெடுத்துக்கொண்டான். பல முறை சிறை சென்றான். கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளை சிறையிலேயே கழித்தான். 1947-ம் ஆண்டு காவல் மற்றும் போக்குவரத்துத்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார் அந்தக் குள்ளமான இளைஞர்!

பெண் நடத்துனர்களை வேலைக்கு வைத்து சாதனை செய்த முதல் மனிதர் அவர்தான். கலவரம் செய்யும் மக்களைக் கலைக்க தடியடி நடத்துவதை மாற்றி தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் முறையையும் அவரே அறிமுகப்படுத்தினார்! பின்னர் ரயில்வே அமைச்சரானார். மூன்றாம் வகுப்புப் பெட்டிகளில் மின்விசிறிகளைப் பொருத்தச் செய்தார். ரயில்வே சரக்குக் காவல்படையை உருவாக்கினார். இரண்டு ரயில் விபத்துகளுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார்! (இப்போதெல்லாம் ’ராஜினாமா செய்’ என்று எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டாலும் ’ஏன் ராஜினாமா செய்யவேண்டும்?’ என்று கேட்பவர்களே அதிகம்)!  பின்னர் உள்துறை அமைச்சரானார். என்றாலும் அவருக்கென்று சொந்த வீடு கிடையாது. ’ஹோம்லெஸ் ஹோம் மினிஸ்டர்’ என்று அவர் வர்ணிக்கப்பட்டார்!

வறுமையிலும் பொறுமை இழக்காத, குள்ளமான அந்த மாமனிதர் யார்? அவர்தான் ஜவாஹர்லால் நேருவுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமராக நியமிக்கப்பட்ட லால் பகதூர் சாஸ்திரி! மனதிலே உறுதியிருந்தால் எதுவுமே தடையல்ல, தடைக்கற்கள் யாவுமே படிக்கற்கள் என்று உலகுக்கு உணர்த்தியவர் அவர்!

கரப்பான் பூச்சி வீட்டுப் பாடகன்

அந்தப் பையன் வீட்டில் எப்போதும் எலிகளும் கரப்பான்களும் நிறைந்திருக்கும். அவைகள் நிரந்தர விருந்தினர்கள் மற்றும் நண்பர்கள்! பல நாட்களில் உண்ண எதுவுமின்றி அவன் பட்டினியாகப் படுத்துவிடுவான். ஆனால் அந்த வறுமையால் அவனது மனதில் ஓடிக்கொண்டிருந்த இசையை ஒன்றும் செய்யமுடியவில்லை. ஒரே ஒரு பாட்டு அவனுக்கு உலகப்புகழையும் பெரும் செல்வத்தையும் கொடுத்துவிட்டது! “Baby, baby” என்ற பாட்டு. அதைப்பாடிய அந்தச் சின்னப்பையன் இன்று அமெரிக்காவின் இளம்பருவ கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கிறான். இன்று அவன் கிட்டத்தட்ட 65 மில்லியன் டாலருக்குச் சொந்தக்காரன்! அவன் பெயர் ஜஸ்டின் பீபர்!

மகன் தந்தைக்குச் செய்யும் உதவி

அந்தப் பையனின் குடும்பம் வசித்தது மும்பையில் இருந்த புலேஷ்வர் என்ற ஒரு பகுதியில். வசதி குறைந்தவர்கள் வசித்த பகுதி அது. அங்கே இரண்டு அறைகளே கொண்ட ஒரு வீட்டில் அவர்கள் வசித்தனர். அப்பா அம்மாவோடு. இன்று அந்தப் பையனின் சொத்து மதிப்பு 18.5 பில்லியன் டாலர்கள்! இந்தியாவிலேயே பெரும் பணக்காரர் அவர்தான். ஆமாம், நீங்கள் யூகித்தது சரிதான். அவர்தான் முகேஷ் அம்பானி!

ஸ்டீல் மனம் படைத்தவர்

தமிழ்நாட்டில் வீட்டுவசதி வாரியங்களில் மூன்று வகையான வீடுகள் உள்ளன. LIG, MIG, HIG என. லோ இன்கம் க்ரூப், மிடில் இன்கம் க்ரூப், ஹை இன்கம் க்ரூப் என்று அர்த்தம். இதில் எல்.ஐ.ஜி. வகை வீட்டுக்குள் போனால் ஒரு ஹால் இருக்கும். பத்துக்குப் பத்தோ பத்துக்குப் பனிரண்டோ இருக்கலாம். அதற்குள்ளேயே ஒரு டாய்லட் இருக்கும். ஒரு பால்கனியும் இருக்கலாம். அவ்வளவுதான். அதையே வரவேற்பறையாக, படுக்கை அறையாக, சமையல் அறையாக, எல்லாமாகவும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்! அதுதான் LIG வீடு!

அப்படி ஒரு வீட்டில், ஆனால் தமிழ்நாட்டில் அல்ல, இங்கிலாந்தில், தன் பெற்றோரோடு வசித்து வந்தான் அந்தப் பையன். பல நேரங்களில் பசியை மறப்பதற்காக தூங்குவதுண்டு! கடைசியில் குடும்பம் பஞ்சம் பிழைக்கவேண்டி அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தது. அவனுக்கு 13 வயதிருக்கும்போது ஒரு காட்டன் மில்லில் வேலை கிடைத்தது. நூல் கண்டுகளை மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும். அதுதான் வேலை. ஒருநாளைக்கு பனிரண்டு மணி நேரம் வேலை!

பின்னர் ஒரு தந்தி கொடுக்கும் அலுவலகத்தில் மெசஞ்சர் பையனாக வேலை கிடைத்தது. பிறகு அங்கேயே செய்தி அனுப்புபவனாக பதவி உயர்வு கிடைத்தது. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அவன் உயர்ந்துகொண்டே இருந்தான். ஏனென்றால், வறுமையை மீறிய கனவுகள் அவனிடம் இருந்தன. பற்றி எரியும் ஆசைகள் இருந்தன. அவர்தான் பின்னாளில் கார்னகி ஸ்டீல் கம்பனியை ஆரம்பித்த ஆண்ட்ரூ கார்னகி. உலகின் ஆகப்பெரிய பணக்காரர் என்று கருதப்பட்டவர்! அவர் உடலை வறுமை வாட்டினாலும் அவர் மனம் அவர் உருவாக்கிய ஸ்டீலைவிட உறுதியாக இருந்தது!

வால்மார்ட் ராட்சசன்

தன் வீட்டில் இருந்த மாடுகளுக்கு பால் கறந்து அவனே கொண்டுபோய் வீடுகளுக்குக் கொடுத்து வந்தான் அந்தப் பையன். அதுமட்டுமல்ல, தினசரிகள், வாராந்தரிகள், மாதாந்தரிகளையும் வீடுவிடாகச் சென்று போட்டு வேலை செய்துவந்தான். அவர் யார் தெரியுமா? வால்மார்ட் என்ற டிபார்ட்மெண்டால் ஸ்டோர்களை அமெரிக்காவில் ஆரம்பித்த சாம் வால்டன்! அவரது இன்றையை சொத்து மதிப்பு 23 பில்லியன் டாலர்கள்!

ஊடக ராணி

அவள் ஒரு அமெரிக்கக் கறுப்பினப் பெண். அவள் பிறந்தபோது அவள் அம்மாவுக்குத் திருமணமாகவில்லை! ஒன்பது வயதில் அவள் தன் சொந்தக்காரர்களால் பாலியல் ரீதியாக மிகவும் துன்புறுத்தப்பட்டாள். பாலியல் வன்முறைக்கும் உள்ளானாள். பதினான்கு வயதானபோது ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்! அவனும் சீக்கிரமே செத்துப்போனான்.

19 வயதிருக்கும்போது ஒரு டிவி நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குபவளாக வேலைக்குச் சேர்ந்தாள். அந்த டிவி நிகழ்ச்சி அதிகம் விரும்பிப் பார்க்கப்படாத ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. ஆனால் இவள் சென்ற பிறகு அது முதலிடத்தைப் பிடித்தது. அதற்குக் காரணம் அவளுடைய உணர்ச்சிமயமான, முன் தயாரிப்புகளற்ற, நகைச்சுவையான பேச்சுதான்.

என்னை ஒரு பிரபலமான டிவியில் பேட்டி எடுக்க அழைத்திருந்தார்கள். முதலில் என்னை மூன்று மணி நேரத்துக்கும்மேல் கேள்விகள் கேட்டு பதில்களை வாங்கிக் குறித்து வைத்துக் கொண்டார்கள். பின்னர் அவர்களாகவே கேட்பதுபோல் அரைமணி நேரம் பேட்டி எடுத்தார்கள்! இதுதான் நேர்காணல்களின் லட்சணம்.

முன் தயாரிப்புகளின்றி, நேரத்துக்குத் தகுந்தபடி பேசுவதென்பது ஒரு அரிய கலையாகும். அது தனிமனித திறமை சார்ந்தது. அதையாரும் சொல்லித்தர முடியாது. அது உள்ளேயிருந்து வரவேண்டும். அந்த  கருப்பினப்பெண்ணுக்கு அது இயல்பாக வந்தது. அவள் பிரபலமானாள். பின்னர் அவள் பெயராலேயே 1983-ல் ஒரு பேட்டி நிகழ்ச்சி உருவானது. அதில் அவள் மைக்கேல் ஜாக்சன் போன்ற மிகப்பிரபலமானவர்களைப் பேட்டி கண்டாள். அதுமட்டுமல்ல, ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கையர் என்று யாருமே பேட்டியெடுக்காத, பேட்டியெடுக்கத் தயங்குபவர்களையெல்லாம் இவள் பேட்டி எடுத்தாள். யார் அவள்? அவர்தான் அமெரிக்காவின் மிகச்சிறந்த ‘டாக் ஷோ’ தொகுப்பாளினியான ஓப்ரா வின்ஃப்ரை. இன்று அவருக்கு 2.9 பில்லியன் டாலர்களுக்குச் சொத்திருக்கிறது. வட அமெரிக்காவில் உள்ள ஒரே கறுப்பின கோடீஸ்வரி அவர்தான்!

காலதாமதத்தால் வந்த சாதனை

1990-ம் வருடம். அந்தப் பெண் ரயிலுக்காகக் காத்திருந்தாள். ரயில் நான்கு மணி நேரம் காலதாமதமாக வரும் என்ற அறிவிப்பு வந்தது. நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? ரயில்வே அதிகாரிகளிடம் சென்று கத்தியிருப்போம். சண்டை போட்டிருப்போம். ஆனால் அந்தப் பெண் அப்படியெல்லாம் எதுவும் செய்யவில்லை. அந்த நேரத்தைப் பயன்படுத்தி ஒரு நாவலை மனதில் எழுதினாள். ரொம்ப நாளாக தன் மனதில் ஓடிக்கொண்டிருந்த கதையின் இறுதி வடிவம் அது. வீட்டுக்கு வந்தவுடன் அதை தன் பழைய டைப்ரைட்டரில் தட்டச்சு செய்ய ஆரம்பித்தாள். அது குழந்தைகளுக்கான ’ஃபாண்டசி’ நாவல்.

எழுதி முடித்து அதை நூலாக வெளியிட வேண்டி பனிரண்டு வெளியீட்டாளர்களுக்கு அனுப்பினாள். ஆனால் ஒருவர்கூட அதை ஏற்றுக்கொள்ளவில்லை. கடைசியில் ப்ளூம்ஸ்பரி என்ற ஒரு வெளியீட்டாளர் மட்டும் அதை ஏற்றுக்கொண்டார். அதுவும் எப்படித்தெரியுமா? அந்த வெளியீட்டு நிறுவனத்தின் சேர்மன் தன் எட்டுவயது மகளிடம் முதல் அத்தியாயத்தைக் கொடுத்து படிக்கச் சொன்னார். அவள் படித்துவிட்டு உடனே இரண்டாம் அத்தியாயத்தைக் கேட்டாள்! குழந்தைகளுக்கான நாவல் எப்படி இருக்கிறதென்பதை குழந்தைகள்தானே முடிவு செய்யவேண்டும்? அதுதானே சரியாகும்? அவருடைய ’டெக்னிக்’ வெற்றிகரமாக வேலை செய்தது. அவரும் நாவலை வெளியிட்டு முன் தொகையாக அந்தப் பெண்ணுக்கு 1500 பவுண்டுகளை மட்டும் கொடுத்தார்.

அந்த நாவல்தான் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் விற்றுத்தீர்ந்த ஹாரி பாட்டர் நாவல் தொடராகும்! அதன் நான்காவது பாகம் ஒரே நாளில் 372,775 பிரதிகள் விற்றன! அமெரிக்காவில் இரண்டு நாட்களில் அது முப்பது லட்சம் பிரதிகள் விற்றன! அதன் ஏழாவது பாகம் முதல் நாளே பதினோரு மில்லியன் பிரதிகள் (ஒரு கோடியே பத்துலட்சம்) விற்றன! ஒரு தமிழ் நூலாவது இப்படி விற்காதா என்ற ஏக்கம் எனக்கு ஏற்படுகிறது! ஹாரிபாட்டர் நாவல் பாகங்களை எழுதிய அந்தப் பெண் ரௌலிங் இங்கிலாந்துக்காரர். இன்று உலகின் பெரும் பணக்காரர்களில் அவரும் ஒருவர்! காத்திருந்தது வீண் போகவில்லை! நாமும் எத்தனையோ தடவைகளில் எது எதற்கோ காத்திருக்கிறோம். ஆனால் அந்த மாதிரி நேரங்களை ஆக்கப்பூர்வமான, நம் வளமான வாழ்விற்காகப் பயன்படுத்தி இருக்கிறோமா? அல்லது எரிச்சலடைந்து சமுதாய அமைப்பை திட்டிக்கொண்டு நேரத்தை வீணடித்திருக்கிறோமா? நிந்தித்துப் பார்ப்பதை நிறுத்துங்கள். சிந்தித்துப் பாருங்கள்.

வறுமை, பசி, பட்டினி, நிறம், இனம், பால், பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை, சிறைச்சாலை, தண்டனை, போராட்டம், நோய், அன்பின்மை, அன்னையின்மை, தந்தையின்மை, கல்வியின்மை, இனப்பாகுபாடு, பால் பாகுபாடு — இப்படி எதுவுமே மனிதர்களின் முன்னேற்றத்துக்கும், வெற்றிக்கும், சாதனைக்கும் தடையாக இருந்ததில்லை. மனம் என்ற ஒன்று மட்டும் செம்மையாக இருந்தால்.  மனதில் உறுதி வேண்டும். பாரதி வாக்கு. எவ்வளவு தீர்க்கதரிசனமான வார்த்தைகள்!

கதைகளும் காரணமும் — 8

துர்கா பூஜை

ஒரு பக்திமான் இருந்தார். அவர் வருடா வருடம் துர்கா பூஜைய வெகு விமரிசையாகக் கொண்டாடி வந்தார். சூரியன் உதித்தது முதல் அஸ்தமிப்பதுவரை ஆடுகள் அறுக்கப்பட்டு, சமைக்கப்பட்டு வந்தவர்களுக்கெல்லாம் ருசியான மட்டன் உணவு வழங்கப்பட்டது. பல ஆண்டுகள் ஆன பிறகு ஆடுகள் அறுப்பது நிறுத்தப்பட்டது. “என்ன ஐயா, இப்போதெல்லாம் துர்கா பூஜைக்கு ஆடுகள் அறுப்பதில்லையே, ஏன்?” என்று கேட்டபோது அவர் சொன்னார்:

“என் வாயைப் பாருங்கள். எல்லாப் பல்லும் கொட்டிவிட்டது. இனி நான் எப்படி மட்டன் கறி சாப்பிடுவேன்”!

ஆஹா, பூஜைக்கான காரணம் தெரிந்ததா? எந்தக் காரணத்துக்காக பூஜை நடத்தப்பட்டதோ, அதே காரணத்துக்காகத்தான் அது நிறுத்தவும் பட்டது! காரணம் பல்தான், வேறென்ன?! பல் போனால் சொல் போச்சு என்று கூறுவார்கள். இந்தக் கதையில் வரும் ’பக்திமா’னுக்கு பல் போனதால் பூஜையும் போனது!

பூஜைக்குள் இருந்த அரசியல் அது! மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்குப் பின்னாலும் ஒரு அரசியிலிருக்கும். ஒவ்வொரு நல்ல காரியத்துக்குப் பின்னாலும் லேசான சுயநலம் இருக்கும். அதைப் புரிந்துகொண்டால், நாம் ஏமாறாமால் இருக்கலாம். நம்மை நாமே செதுக்கி உருவாக்கிக்கொள்ள இந்த அறிவு மிகவும் அவசியம்.

தவளை தப்பியது

ஒரு நாள் சில தவலைகள் கூட்டமாக எங்கோ போய்க்கொண்டிருந்தன. திடீரென்று இரண்டு தவளைகள் ஒரு ஆழமான குழிக்குள் விழுந்துவிட்டன. கொஞ்ச தூரம் போனதும்தான் மற்ற தவளைகளுக்கு இரண்டு சகோதரர்கள் குறைவது தெரிந்தது. அவைகள் பாசத்துடன் திரும்பி வந்து அந்தக் குழிக்குள் உற்றுப்பார்த்தன. உள்ளேதான் இரண்டு தவளைகளும் மேலே வருவதற்காக பகீரதப்பிரயத்தனம் செய்துகொண்டிருந்தன.

ஆனால் அவைகள் எவ்வளவு முயன்றாலும் அவைகளால் வெளிவர முடியாத அளவுக்கு குழியின் ஆழம் இருந்தது. எனவே மற்ற தவளைகளெல்லாம் ஒன்று சேர்ந்து, “சும்மா முயற்சி செய்து உங்கள் சக்திகளை வீணாக்கி, களைத்துச் சாகவேண்டாம். முயற்சி செய்யாமல் நிம்மதியாக செத்துவிடுங்கள்” என்று உரக்கக் கத்தின.

அது கேட்ட ஒரு தவளை தன் முயற்சிகளைக் கைவிட்டு அமைதியாக அமர்ந்து உயிர்விட்டது. ஆனால் இன்னொரு தவளையோ துள்ளித் துள்ளிக் குதித்து முயற்சி செய்துகொண்டே இருந்தது. கடுப்பாகிப்போன மற்ற தவளைகள், “ஏய், உனக்கு அறிவில்லையா? சும்மா குதிக்காதே. கீழே அமர்ந்து அமைதியாகச் செத்துத் தொலை. உன்னால் மேலே வரவே முடியாது” என்று உரத்த குரலில் கத்தின.

ஆனால் அந்தத் தவளை மீண்டும் மீண்டும் கடுமையாக முயற்சி செய்தது. கடைசியில் ஒருவழியாக மேலேயும் வந்துவிட்டது! ஆச்சரியப்பட்ட மற்ற தவளைகள், “எப்படி இது சாத்தியமானது? உன்னால் எப்படி முடிந்தது? நாங்கள்தான் அவ்வளவு தூரம் வராதே என்று உரக்கச் சொன்னோமே? அப்படியும் உன்னால் எப்படி வர முடிந்தது?” என்று அதனருகில் வந்து கத்தின.

“எனக்குத்தான் காது செவிடாயிற்றே, நீங்கள் சொன்னது எதுவுமே எனக்குக் கேட்கவில்லை. நீங்கள் உரக்க ஏதோ சொல்லி என் முயற்சிக்கு உற்சாகமூட்டுகிறீர்கள் என்று நினைத்தேன்” என்று சொன்னது!

ஒரு சொல் கொல்லும், ஒரு சொல் வெல்லும் என்பது இதுதான்! எப்போதுமே நாம் நல்ல வார்த்தைகளையே பேசவேண்டும். நல்ல வார்த்தைகளையே கேட்கவேண்டும். எதிர்மறையான சொற்களுக்கு நம்மை நாமே செவிடாக்கிக்கொள்ளவேண்டும்! அப்போதுதான் வெற்றியை அடைய முடியும்.

வெற்றி மட்டும் முக்கியமல்ல

இந்த நிகழ்ச்சி நடந்து ஒரு நூறு ஆண்டுகளுக்கும் மேலாகிறது. ஆனால் மிக முக்கியமான நிகழ்ச்சி. அவர் பெரிய பணக்காரர். பணக்காரர் என்பதைவிட கோடீஸ்வரர் என்று சொல்வதே பொருத்தமானது. அவர் ஒரு நாள் காலையில் தினசரியைப் பார்த்துக்கொண்டிருந்தார். அதில் வந்த ஒரு இறப்புச் செய்தியைப் படித்தவுடன் அதிர்ச்சியில் உறைந்து போனார். ஏன்? அதில் அவர் பெயரைப்போட்டு அவர் இறந்துவிட்டதாக செய்தி சொன்னது!

ஆனால் அது ஒரு தவறான செய்தி. அவர் பெயரில் இருந்த யாரோ இறந்திருந்தார்கள். ஆனால் அவர் என்று நினைத்து அந்த செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதோடு, அவரைப் பற்றி சிலரின் கருத்துக்களும் வெளியிடப்பட்டிருந்தன. “வெடிமருந்து ராஜா இறந்துபோனார்” என்று அவர் வர்ணிக்கப்பட்டிருந்தார். இன்னொருவரோ அவரை “மரணத்தை விற்கும் வியாபாரி” என்று வர்ணித்திருந்தார்.

ஐயோ கடவுளே! என் இறப்புக்குப் பிறகு இப்படியா நான் நினைவுகூறப்படுவேன்? இந்த எண்ணம் அவரை என்னவோ செய்தது. அப்போது அவர் ஒரு முடிவு செய்தார். இனிமேல் அமைதிக்காக உழைக்கவேண்டும் என்று. அதன்படியே தன் மீதி வாழ்நாளைக் கழிக்கவும் செய்தார். யார் அவர்? அவர்தான் ஆல்ஃப்ரட் நோபல். நோபல் பரிசுக்கான கமிட்டியை நிறுவியவர். அவர் பெயரால்தான் இன்று உலகின் தலைசிறந்த, புகழின் உச்சிக்கு ஒருவரை அழைத்துச் செல்லும் பரிசான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இலக்கியம், விஞ்ஞானம், அமைதி என்று பல துறைகளுக்கும். முதலில் டைனமைட் எனப்படும் வெடிமருந்தை விற்றுக்கொண்டிருந்தவருக்கு தவறாக வந்த ஒரு இரங்கல் செய்தி ஒரு ஞானோதயத்தைக் கொடுத்தது. எவ்வளவு வசதியாக, எவ்வளவு வெற்றியோடு, எவ்வளவு செல்வத்தோடு வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல, அந்த செல்வம் எந்த வழியில் வந்தது, எதற்காக அது செலவிடப்படுகிறது போன்ற விஷயங்களே வாழ்க்கையில் முக்கியம் என்பதை நோபலுடைய வாழ்க்கை உணர்த்துகிறது.

என்ன பெரிய வித்தியாசம்?

ஒரு நாள் ஒரு கடற்கரையில் அலைகளில் அடித்துக்கொண்டு பல நூற்றுக்கணக்கான நட்சத்திரமீன்கள் கரையில் ஒதுங்கின. தண்ணீரில் இருந்தால்தான் அவைகளால் வாழமுடியும். கரைக்கு வந்தவுடன் வெயில் பட்டு அவை வாடின. அதைப்பார்த்த ஒரு இளைஞன் அவற்றில் சிலவற்றைக் கையில் எடுத்து ஒவ்வொன்றாகத் தூக்கி மீண்டும் கடலில் போட்டான். அதைப்பார்த்த அவனது நண்பன், “என்ன முட்டாள்தனமான காரியம் செய்துகொண்டிருக்கிறாய்? நூற்றுக்கணக்கான மீன்கள் உள்ளன. எல்லாவற்றையும் உன்னால் மீண்டும் கடலில் எறிய முடியாது. நீ இப்படிச் செய்வதால் என்ன வித்தியாசம் ஏற்படப்போகிறது?” என்று கேட்டான்.

அதற்கந்த இளைஞன் சொன்னான்: “எல்லா நட்சத்திர மீன்களையும் என்னால் காப்பாற்ற முடியாது. எனக்குத் தெரியும். ஆனால் இதோ இப்போது தூக்கி எறிகிறேனே, இந்த மீனுக்கு என்னால் வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும். இந்த ஒரு மீனுக்கு இது வாழ்வாகும். அதுதான் வித்தியாசம்.”

நூறு மதிப்பெண்களுக்கு முயற்சி செய்து நூறு பெற்றாலும் வெற்றிதான். ஐம்பது பெற்றாலும் வெற்றிதான். வெற்றி என்பது எண்ணிக்கையில் இல்லை. செயலில் இருக்கிறது. உண்மையில் தோல்வி என்று எதுவுமே கிடையாது. ஒன்று வெற்றி கிடைக்கும். அல்லது ஏன் அது கிடைக்கவில்லை என்ற பாடம் கிடைக்கும். அதுவே ஒரு வெற்றிதான்.

க்ளாசைக் கீழே வையுங்கள்

ஒரு பேராசிரியர் செயல்முறை வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார். ஒரு க்ளாஸைக் கையில் தூக்கிப்  பிடித்து மாணவர்களிடம் காட்டிக் கேட்டார்.

“இந்த க்ளாஸ் என்ன எடை இருக்கும்?”

”50 கிராம், 100 கிராம்” என்று பல பதில்களை மாணவர்கள் சொன்னார்கள்.

”இந்த க்ளாஸ் என்ன எடை என்று எனக்கும் தெரியாது. ஆனால் நான் இதைத் தூக்கி சில நிமிடங்கள் பிடித்துக்கொண்டிருந்தால் என்னாகும்?”

“ஒன்றுமாகாது”

”சரி, ஆனால் இதை நான் ஒரு மணி நேரம் தூக்கிப் பிடித்துக்கொண்டிருந்தால்?”

“உங்கள் கை வலிக்க ஆரம்பிக்கும் சார்”

“ரொம்ப சரி, நான் இதை இப்படியே ஒரு நாள் பூரா தூக்கிப் பிடித்துக்கொண்டிருந்தால்?”

“கை மரத்துப்போகும். தசை வலிப்பு வரலாம். ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டிவரும் சார்”.

மற்ற மாணவர்கள் சிரித்தனர்.

”ஓகே. ஆனால் இவ்வளவு நேரத்தில் இந்த க்ளாஸின் எடை கூடியிருக்குமா?”

“இல்லை சார், கூடாது”

”அப்படீன்னா, என் கை ஏன் வலிக்கும்? ஏன் மரத்துப்போகும்? நான் ஆஸ்பத்திருக்குப் போகவேண்டிய நிலை ஏன் வருகிறது?”

மாணவர்களுக்கு குழப்பமாக இருந்தது.

“சரி, இந்த வலியிலிருந்து வெளியில் வர நான் என்ன செய்யவேண்டும்?”

“க்ளாஸைக் கீழே வைக்கணும் சார்”என்றார் ஒரு மாணவர்.

”ரொம்பச் சரி. வாழ்க்கையின் பிரச்சனைகளும் இப்படித்தான். தலையில் தூக்கி வைத்துக்கொண்டே இருந்தால் வலிக்க ஆரம்பிக்கும். பின்பு அசைவற்று ஆகிவிடுவீர்கள். வேறு எதுவுமே செய்யமுடியாது. வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றிச் சிந்திப்பது ரொம்ப முக்கியம்தான். ஆனால் அதைவிட முக்கியம் நாளின் முடிவில் அதைக்கீழே வைத்துவிட்டு, மறந்துவிட்டு உறங்கப் போவதுதான். அப்போதுதான் ஒவ்வொரு நாளும் புத்துணர்ச்சியுடன், புதிதாக எழலாம். புதிய பிரச்சனைகளைச் சமாளிக்க தயாராகலாம்.”

இந்தக் கதைக்கு விளக்கம் தேவையில்லை. வாழ்க்கையில் வெற்றி எவ்வளவு முக்கியமோ அதைப்போலவே அதையொட்டி மன இறுக்கத்துக்கு ஆளாகாமல் இருப்பதும் முக்கியம். ரிலாக்ஸ்டாக இருக்கவும் கற்றுக்கொள்ளவேண்டும். அப்போதுதான் வெற்றி தொடர்ந்து வரும்.

தீயை அணையுங்கள்  — 9

கோபம் என்பது ஒரு பாத்திரத்தில் உள்ள அமிலம் மாதிரி. ஒருவர் மீது அது வீசப்பட்டால், அவருக்கு அது ஏற்படுத்தும் தீமையைவிட அது ஊற்றப்பட்டிருந்த பாத்திரத்துக்கு ஏற்படுத்தும் தீமைதான் அதிகம்

 • மார்க் ட்வைன்

ஒரு ஊரில் ஒரு அசுரன் இருந்தான். அவனுக்குப் பசிக்கும்போதெல்லாம் அவன் ஒரு குறிப்பிட்ட உணவைத்தான் சாப்பிடுவான். மற்ற உணவு எதையும் எடுத்துக்கொள்ளமாட்டான். அப்படியானால் அந்த உணவு எப்போதும் கிடைக்கும் உணவாக இருக்கவேண்டுமல்லவா? அந்த உணவு என்ன என்று யோசிக்கிறீர்களா? அசுரர்கள் மனிதர்களை உண்ணுவார்கள் என்று இதிகாசங்கள் கூறுகின்றன. ஆனால் இந்த அசுரன் ரொம்ப வித்தியாசமானவன். அவனுடைய உணவு என்ன தெரியுமா? சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். ஆமாம். அவனுடைய உணவு கோபம்!

ஆமாம். மனிதர்கள் மற்றும் விலங்குகளின் கோபத்தை உண்டு அவன் நாளொரு மேனியும் பொழுதொரு தொந்தியுமாக பெருத்துக்கொண்டிருந்தான்! ஏனெனில் கோபம் அவனுக்கு மிகமிக அதிகமான அளவில் கிடைத்துக்கொண்டே இருந்தது.

அவனுக்குப் பசியெடுத்தால் அவன் ஒரு காரியம் செய்வான். குடும்பத்துக்குள் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்திவிடுவான். குடும்பத்தினர் ஒருவர்மீது ஒருவர் கோபம் கொண்டு கத்துவார்கள். சண்டைபோடுவார்கள். அடித்துக்கொள்வார்கள். பழிக்குப்பழி என்று வன்மம் வளர்ப்பார்கள். அதுபோதும் அவனுக்கு. அவர்கள் கோபம் அதிகமாக ஆக, இவனுடைய வயிறு பெருத்துக்கொண்டே போகும்.  பலமும் அதிகமாகிக்கொண்டே போகும். குடும்பச் சண்டை போதவில்லையென்றால், ஊருக்குள் சண்டையை ஏற்படுத்துவான். அதுவும் போதவில்லை என்றால் நாட்டுக்கு நாடு போரை உண்டாக்குவான். ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையில் வெறுப்பை வளர்ப்பது அவனுக்கும் ஒன்றும் பெரிய விஷயமாக இல்லை. அதற்காகவே காத்துக்கொண்டிருந்தது போலத்தான் நாடுகளும் செயல்பட்டன. கோபப்படவும் வன்முறையைத் துவக்கவும் அவர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு துரும்புக் காரணம் அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. கோபத்துக்கு அடிமையாகும் இந்த மானிட குணங்கள் யாவும் அந்த அசுரனுக்கு ரொம்ப வசதியாகப் போயின. எந்த அளவுக்கு என்றால் கோப உணவை உண்டு அவனுக்கு ‘போர’டித்து விடும் அளவுக்கு!

சரி, கதை மேற்கொண்டு என்ன என்று கேட்கிறீர்களா? சொல்லத்தானே போகிறேன். அசுரனுக்கு ஒரு வினோதமான ஆசை வந்தது. மனிதர்களின் கோபத்தை உண்டு உண்டு அவனுக்கு சலித்துவிட்டது. இனி தேவர்களுக்கும் கடவுளர்களுக்கும் மத்தியில் கோபத்தை உண்டுபண்ணி அந்தத் தேவகோபத்தை உண்ண வேண்டுமென்று விரும்பினான்! அதற்காக சக்கா என்ற கடவுள் இருந்த உலகத்துக்கு அவன் போனான். அங்கே பல தேவர்களும் குட்டிக்குட்டி கடவுளர்களும் இருந்தனர். அவன் போன நேரம் அவனுக்கு மிகவும் சாதகமாக இருந்தது. தலைமைக் கடவுளும் ராஜாவுமான சக்கா அங்கு இல்லை. அவர் எங்கோ சென்றிருந்தார். அவரது இருக்கை காலியாக இருந்தது. இதுதான் சரியான தருணம் என்றெண்ணிய அசுரன் சட்டென்று அந்த ராஜாக்கடவுளின் சிம்மாசனத்தில் போய் அமர்ந்துகொண்டான்.

அங்கு வந்த தேவர்களும் கடவுளர்களும் அதைக்கண்டு கடுமையான கோபம் கொண்டனர். “ஏ, அசுரனே! என்ன திமிர் உனக்கு! எங்கள் கடவுள் சக்காவின் இருக்கையில் நீ அமரலாமா?” என்று கொதித்தனர். அவர்கள் கோபத்தில் கொதித்து எழ எழ அசுரனுடைய உடல் பருத்துக்கொண்டே போனது. அவனுடைய பலமும் கூடிக்கொண்டே போனது. தேவர்களுடைய சக்தியெல்லாம் குறைந்துகொண்டே சென்றது. அசுரன் சிரித்தான். அவர்களது கோபம்தான் அவனது உணவு என்று பாவம் அவர்களுக்குத் தெரியாது! அவர்கள் கோபம் அதிகரித்துக்கொண்டே போனது. அவனது சக்தியும்தான். கோப உணவின் நல்ல விளைவு அதிகமாகி, சிவப்பு நிறத்தில் ஒரு புகைபோல ஒன்று அசுரனின் உடம்பிலிருந்து வெளிவர ஆரம்பித்தது.

அந்த நேரத்தில் தீடீரென்று அங்கே ஒரு ஒளி தோன்றியது. அது சக்காவின் ஒளி. அவர் வந்துவிட்டார். அவர் அருகே வந்தவுடன் அசுரன் சிரித்தான். உன் இருக்கையில் நான் அமர்ந்திருக்கிறேன் பார்த்தாயா என்று கொக்கரித்தான்.

ஆனால் சக்கா கோபமடையவில்லை. அமைதியாக, “வாருங்கள் நண்பரே, உங்கள் வரவு நல்வரவாகுக. நீங்கள் என் இருக்கையில் அமர்ந்தது என் பாக்கியம். எங்கள் விருந்தினராகிய உங்களுக்கு ஏற்ற கௌரவம் அதுதான். இதோ, உங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் இந்த சாதாரண இருக்கையில் நான் அமர்ந்துகொள்கிறேன். உங்களுக்கு மேற்கொண்டு என்ன வேண்டும் கேளுங்கள் நண்பரே, தரக்காத்திருக்கிறேன்” என்றார் புன்முறுவலுடன்!

அவ்வளவுதான். அசுரனின் உடல் காற்றுப்போன பலூன் மாதிரி புஸ்ஸென்று மெலிந்துகொண்டே போனது. கோபத்துக்கு பதில் அன்பும் அமைதியும் சக்காவிடமிருந்து வரும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. அவன் சக்தியெல்லாம் வடிந்துபோயிற்று. இறுதியில் அவன் சக்தியின்றி, உணவின்றி செத்தே போனான்!

இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்த கதை. நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது. வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது. அன்பும் மன்னிப்பும்தான் கோபத்துக்கு மாற்று. நெருப்பை நீர் ஊற்றித்தானே அணைக்கமுடியும்? அதைத்தான் புத்தரும் செய்தார்.

அவரிடம் ஒருவன் வந்து அவரைக் கன்னா பின்னாவென திட்ட ஆரம்பித்தான். ஏன்? அவனுடைய குலத்தில் இருந்து ஒருவர் ராஜ்ஜியத்தைத் துறந்து புத்தரின் சொல்கேட்டு மனம் மாறி துறவியாகிவிட்டார். அந்தக் கோபம் அவனுக்கு. அவன் திட்டுவதையெல்லாம் புத்தர் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். அவன் திட்டி முடித்ததும், “நண்பரே, உங்களுக்கு ஒருவர் சில பரிசுப்பொருள்களைக் கொடுக்கிறார். அவை உங்களுக்கு வேண்டாமென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்.

என்னடா இது! நாம் திட்டுகிறோம், இவர் கோபமடையாமல் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்ட அவன், “வேண்டாமென்றால் கொடுத்தவரிடமே பொருள்களைத் திருப்பிக் கொடுத்துவிடுவேன்” என்றான்.

புத்தர் சொன்னார். “ரொம்பச் சரி. இவ்வளவு நேரமாக ஏதேதோ சொற்களை என்னை நோக்கி வீசிக்கொண்டிருந்தீர்கள். அவைகளை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அவைகளை நீங்களே எடுத்துக்கொண்டு போய்விடுங்கள். இனி அவை உங்களுடையவை”!

உங்களை மனிதர்கள் வெறுக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா? அதற்குச் சிறந்த வழி கோபப்படுவதுதான்! ஆமாம், கோபப்படும் மனிதர்களை யாராவது விரும்புவார்களா? எனக்கு ஒரு மாமா இருந்தார். நான் கோலி விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் அவ்வளவுதான். என் கன்னத்தில் அறை விழும். கன்னம் பழுத்துவிடும். நான் அப்போது சின்னப்பையன். எனக்கு அந்த விளையாட்டு மிகவும் பிடிக்கும். ஆனால் அவர் என்னை அதற்காக ஏன் அடித்தார் என்று இப்போது நினைத்துப்பார்க்கிறேன். இப்போதும் காரணம் தெரியவில்லை. ஒருவேளை அவர் கோலிக்குண்டு விளையாடிக் கொண்டிருக்கும்போது அவர் மாமா அவரை அடித்திருக்கலாம். அல்லது குழந்தைகளை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவர்களை அச்சத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்ற தவறாக கொள்கையை அவர் பின்பற்றி இருக்கலாம். எது எப்படி இருப்பினும், விரும்பப்படாத ஒரு மாமாவாகவே அவர் ஆகிப்போனார்.  அதற்குக் காரணம் அவரது கோபம்.

ஒரு மனிதனின் கோபம் இன்னொரு மனிதனை காயப்படுத்துகிறது. ஆனால் கோபப்படும் மனிதருக்கு இது ஒருவகையில் வெற்றிதானே? அப்படியானால் கோபமானது கோபப்படுபவரையும் பாதிக்கிறது என்று மார்க் ட்வைன் சொன்னதன் அர்த்தம் என்ன என்று யோசித்தேன். இன்றையை விஞ்ஞானம் அதற்கான பதில்களை கொட்டிக்கொட்டிக் கொடுக்கிறது.

கோபம் வந்தால் உங்கள் இதயத்துடிப்பின் அளவு அதிகமாகிறது, ரத்த அழுத்தம் கூடுகிறது அல்லது குறைகிறது, அட்ரீனலின் போன்ற ஹார்மோன்கள் தேவையற்ற வகையில் மிக அதிகமாகச் சுரக்கின்றன, ரத்த ஓட்டம் கண்களுக்கு அதிகமாகப் பாய்ந்து விழிகள் சிவக்கும் (கோபப்பார்வை), உள்ளங்கைகளுக்கு ரத்தம் பாயும் (அடுத்தவனை அடிக்க வசதியாக), முகத்தசைகள் பாதிக்கப்படும், வியர்க்க ஆரம்பிக்கும் – இப்படி இத்யாதி இத்யாதி.

இதனால் என்ன என்கிறீர்களா? ஒன்றுமில்லை, உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு அதிகம். மூளை பாதிக்கப்படும். (மூளை இருந்தால் கோபப்பட்டிருக்கவே மாட்டான் என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது)! அனஃப்லாக்சிஸ் என்ற நோய்வர வழிவகுக்கும். ஒரு அம்மா ரொம்ப கோபக்காரியாக இருந்தாள். அடிக்கடி அவள் கோபம் என்ற உணர்ச்சிக்கு அடிமையாகிக்கொண்டே இருந்தாள். அப்படி ஒருமுறை கடுமையான கோபத்தில் இருந்தபோது தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்திருக்கிறாள். அதைக் குடித்த குழந்தை இறந்து போனது! கோபம் அவளது ரத்தத்தை விஷமாக்கிவிட்டது! இந்த தகவலை தாதாஜி என்று அழைக்கப்பட்ட மகான் வஸ்வானி கூறுகிறார். இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த விஞ்ஞான உண்மைகளெல்லாம் தெரியாத காலத்திலேயே பெரியவர்களெல்லாம் இந்த உண்மையை உள்ளொளியால் உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்றெல்லாம் பழமொழிகள் உள்ளன. நம் திருவள்ளுவர் ’வெகுளாமை’ என்று ஒரு அதிகாரத்தையே இதற்காக ஒதுக்கி சினம் பற்றிய பத்து குறள்களை எழுதியுள்ளார். அதில் ஒன்று:

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லுஞ் சினம்

ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ளவேண்டுமானால் கோபப்படாமல் இருக்கவேண்டும். இல்லையெனில் அந்தக் கோபம் அவனையே கொன்றுவிடும் என்று கூறுகிறார். இதைவிட வெளிப்படையாகச் சொல்லவும் வேண்டுமா? அதுமட்டுமா?

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்

இல்அதனின் தீய பிற

என்றும் சொல்லியுள்ளார். நமது கோபம் பலிக்காத இடங்களில், உதாரணமாக நமது முதலாளிகள், எஜமானர்கள், ’பாஸ்’கள், நம்மைவிட வலிமையும் செல்வாக்கும் வாய்ந்தவர்களிடத்தில் கோபத்தைக் காட்டுவதால் பயனில்லை. அதனால் நமக்கு தீமையே ஏற்படும். சரி, அப்படியானால், நம்மைவிட எளியவரிடத்தில் கோபத்தைக் காட்டலாமா என்றால் அதுவும் கூடாது! ஏன்? அப்போதும் நமக்கே தீமை என்கிறார் திருவள்ளுவர் பெருமான்! எந்த வழியில் கோபப்பட்டாலும் அது தீமையே விளைவிக்கும்! ஆஹா, ஞானம் என்பது இதுதான். ஞானமிக்க நமது தமிழ்ப் பாரம்பரியத்தில் இல்லாதது ஒன்றுமில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் நாம்தான் அதை இன்னும் புரிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.

தன் மனைவியின் கால்சிலம்புகளைத்தான் கோவலன் களவாடினான் என்று அவன் மீது கோபப்பட்டு பாண்டிய மன்னன் கோவலனுக்கு மரணதண்டனை விதித்து உயிர் பறித்தான். ஆனால் அவனுடைய கோபத்தின் விளைவு என்ன? அது தன்னுடைய கால்சிலம்புதான் என்று கண்ணகி நிரூபித்த பிறகு ”யானே கள்வன்” என்று கதறிக்கொண்டு மன்னன் தன் இன்னுயிரை விட்டான். வள்ளுவர் சொன்ன உண்மையை ’சிலப்பதிகாரம்’ அழகாகக் காட்சிப்படுத்துகிறது.

ஒருமுறை ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் சிறைச்சாலைக்குச் சென்று அங்கிருந்த போர்க்கைதிகளையெல்லாம் ‘சாப்பிட்டீர்களா?’, ‘தூங்கினீர்களா?’ என்று  நலம் விசாரித்தார். “மிஸ்டர் லிங்கன், எதிரிகளோடு நடந்துகொள்ளும் முறை இதுவல்ல” என்று அவருடைய பெண் காரியதரிசி கூறினார். அதுகேட்ட லிங்கன், “உண்மைதான் மேடம். ஆனால் இப்போது அவர்களை நான் என் நண்பர்களாக்கிவிட்டேனில்லையா?” என்றார்! எவ்வளவு அறிவார்ந்த வார்த்தைகள்! கோபம் எதிரிகளைத்தான் உருவாக்கும். ஆனால் அன்பும் கருணையும் எதிரிகளையும் நண்பர்களாக்கிவிடும்!

சரி இதனால்தான் நாம் கோபப்படக்கூடாதா? இதுமட்டுமல்ல. கோபம் நம்மை அதன் அடிமையாக்கிவிடும். அதுதான் விஷயம். அலெக்சாண்டர் கிரீஸ் நாட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். கிரேக்கர்கள் இந்திய மகான்களையும் யோகிகளையும் விரும்புகிறார்கள் என்று தெரிந்தவுடன் தன்னோடு ஒரு மகானையும் கூட்டிச் செல்லவேண்டும் என்று விரும்பினார். ஒரு யோகியைப் பார்த்து, “நான் அலெக்சாண்டர், நீங்கள் என்னோடு எங்கள் நாட்டுக்கு வாருங்கள்” என்று உத்தரவிட்டார். ஆனால் அந்த யோகியோ, “நான் எங்கும் வரவிரும்பவில்லை” என்று கூறிவிட்டார். அதுகேட்ட அலெக்சாண்டருக்கு வந்தது மகா கோபம்.

“நான் யார் தெரியுமா? உலகை வெற்றிகொண்ட மாவீரன் அலக்சாண்டர். என்னோடா வர மறுக்கிறாய்? உன் தலையைச் சீவிவிடுவேன்” என்று கூறினார். ஆனால் அந்த யோகியோ பயப்பட்டதாகத் தெரியவில்லை.

மாறாக, “நீ உலகை வெற்றி கொண்டவனா? இருக்கவே முடியாது. நீ என் அடிமையில் அடிமை என்பதுதான் உண்மை”என்றார்!

அலெக்சாண்டருக்கு பயங்கர ஆச்சரியம். நான் அடிமையா? அதுவும் இவனது அடிமையின் அடிமையா? என்ன வினோதம் இது? “எப்படி இப்படிச் சொல்கிறாய்?” என்று கர்ஜித்தார்.

அப்போதும் கொஞ்சமும் கலங்காமல் அந்த ஞானி சொன்னார், “கோபம் எனது அடிமை. நீயோ அதன் அடிமையாக இருக்கிறாய். அதனால்தான் அப்படிச் சொன்னேன்”!

அதற்குமேல் கதையில் என்ன நடந்திருக்கும் என்று நான் சொல்லவேண்டியதில்லை. அலெக்சாண்டரும் புரிந்துகொண்டார். அவரும் ஒருவகையில் ஞானிதான். இல்லையென்றால் உலகையே வெற்றிகொண்ட அவர், “நான் இறந்த பிறகு என் கைகளை மட்டும் பிணப்பெட்டிக்கு வெளியில் வைத்து, கைகளில் மண்ணை வைக்கவேண்டும்” என்று கோரிக்கை வைப்பாரா? எவ்வளவு வெற்றிகொண்டாலும் எந்த மனிதனாலும் எதையும் எடுத்துச் செல்லமுடியாது என்ற உண்மையை தன் இறுதிக்கணத்தில் உணர்த்திய அவர் ஞானிதானே!

சரி, மறுபடியும் கோபத்துக்கு வரலாம். அந்த ‘சப்ஜக்ட்’ட்டுக்கு வரலாம் என்று கூறினேன். அப்படியானால் ஒரு மனிதன் வாழ்நாளில் கோபமே படக்கூடாதா?

இது ஒரு நியாயமான கேள்வி. இதற்கு நியானமான பதில்: கோபப்படலாம் என்பதுதான்! அப்படியானால் இதுவரை சொல்லியதெல்லாம்? அதுவும் சரிதான். இதுவும் சரிதான்! என்ன புரியவில்லையா?

கோபத்தில் இரண்டு வகை உள்ளது. ஒன்று உங்களையே அழிக்கும் கோபம். இன்னொன்று தார்மீகமான கோபம். மேலே விவரித்ததெல்லாம் முதல்வகைக் கோபம். இரண்டாவது வகைக்கோபம் அநியாயத்தை, அக்கிரமங்களைக் கண்டு பொங்கி எழுவது. இன்ன இடத்தில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார்கள், குழந்தைகள் கொல்லப்பட்டார்கள் என்று செய்தி வரும்போது நமக்கு தார்மீகமான கோபம் வரவேண்டும். அந்த கோபம் உங்களை அழிக்காது. ஏனெனில் அது கோபப்படுவதல்ல. கோபத்தை வெளிப்படுத்துவது. இரண்டுக்கும் பாரதூரமான வித்தியாசம் உண்டு.

கோபப்படுவது நம்மை அடிமையாக்கிவிடும். நான் அதன் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவோம். உணர்ச்சிவசப்பட்டுவிடுவோம். ஆனால் கோபத்தை வெளிப்படுத்தும் இரண்டாவது வகையில் நாம் நமது கட்டுப்பாட்டுக்குள் இருப்போம். அதேசமயம் இது சரியல்ல என்று அநியாயத்தை நோக்கிய நமது எதிர்ப்பை கோபமாக வெளிப்படுத்துவோம். அப்படி வெளிப்படுத்தும்போது நாம் நம்மை அந்த உணர்ச்சியின் பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டு உண்மைகளை மட்டும் ஆணித்தரமாக, அழுத்தமாகச் சொல்வோம். பேசுவோம் அல்லது எழுதுவோம். அல்லது நமக்கே உரிய வகையில் வெளிப்படுத்துவோம்.

நாம் ஒரு ஓவியனாக, எழுத்தாளனாக இருந்தால் ஒரு ஓவியத்தின், ஒரு காவியத்தின் மூலமாக நம் கோபத்தை நாம் வெளிப்படுத்துவோம். அக்கிலிஸின் கோபத்தை ஹோமர் ’இலியட்’ என்ற காவியாமாக்கினார். பாண்டவர்களின் கோபம் மஹாபாரதமானது. நாம் ஒரு இசையமைப்பாளராக இருந்தால் நம் கோபத்தை இசையாக்குவோம். ஷைகோவ்ஸ்கி போல. ஆனால் இப்படியெல்லாம் செய்யும்போது நாம் கோபம் என்ற உணர்ச்சிக்குள் இருக்கமாட்டோம். அதற்கு வெளியே இருப்போம்.

இப்படிப்பட்ட கோபம் ஒரு தர்மம்கூட. நமது கடமைகளின் ஒன்று என்றுகூடச் சொல்லலாம். சில நேரங்களில் குழந்தைகளிடம் நாம் கோபத்தைக் காட்டவேண்டியுள்ளது. அவர்களை நெறிப்படுத்த. சில நேரங்களில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் கோபத்தைக் காட்டவேண்டியுள்ளது. அவர்களை சரிப்படுத்த. போகிற போக்கில் ஆட்டோ ட்ரைவர் நம்மீது ஒரு கால்கிலோ எச்சிலைத் துப்பிவிட்டுச் சென்றால் அவன்மீது நம் கோபத்தைக் காட்டி அவனை வாய்மூட வைக்கவேண்டியது நமக்கு அவசியமாகிறது.

இந்த மாதிரியான தார்மீக கோபத்தை நாம் பழகிக்கொள்ளவேண்டும் என்று பாரதி கூறினான். ரௌத்திரம் பழகு என்று. நபிகள் நாயகம் சில சமயங்களில் கோபத்தை வெளிப்படுத்துவார்கள். கண்கள் சிவந்திருக்கும். உடல் நடுங்கும். ஆனால் வார்த்தையிலும் நடத்தையிலும் நிதானம் தவறாது. அவர்களது கோபத்தைப் புரிந்துகொண்டு உடனே மற்றவர் தம் நடத்தையைச் சரிப்படுத்திக்கொள்வர். இப்படிப்பட்ட கோபம் ’இமோஷனலி இண்டலிஜெண்ட்’-ஆன கோபம். இதில் யாருக்கும் தீமை விளையாது. நன்மையே விளையும்.

கோபம் பற்றி சில பெரியவர்கள் சொன்னதை கீழே எடுத்துக்காட்டியுள்ளேன். அவற்றைப் பற்றி சிந்தியுங்கள். உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்:

 • கோபத்தில் ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பித்தால், முடிவில் வெட்கப்பட்டுத் தலைகுனிய வேண்டிவரும் – பெஞ்சமின் ஃப்ராங்க்லின்.
 • முட்டாள்களின் இதயத்தில்தான் கோபம் குடியிருக்கும் – ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீன்.
 • கோபம் என்பது தற்காலிக பைத்தியம். அதைக்கட்டுப்படுத்துங்கள். அல்லது அது உங்களைக் கட்டுப்படுத்திவிடும் – ஜி.எம்.ட்ரவெல்யன்.
 • கோபம், வருத்தம், அச்சம் எல்லாம் உங்களுடையதல்ல. அவைகள் உங்கள் மனதின் நிலைகள். அவைகள் வரும், போகும். வந்துபோகும் எதுவுமே உங்களுடையதல்ல. அது நீங்களல்ல – எக்ஹார்ட் டாலி

இவர்கள் பேசியிருப்பதெல்லாம் முதல் வகை கோபம் பற்றித்தான். பாரதி சொன்ன ரௌத்திரம் பற்றியல்ல. இவ்வகைக்கோப உணர்ச்சியைக் கட்டுப்படுத்த நாம் சில வழிகளைக்கையாளலாம்:

 • கோபம் வரும்போது உடனே அதை வெளிப்படுத்தாமல் கொஞ்சம் தள்ளிப்போடலாம். 100 வரை எண்ணலாம்.
 • கோபம் வரும்போது ஒரு க்ளாஸ் தண்ணீர் குடிக்கலாம். அது கோபத்தை நிச்சயம் குறைக்கும்.
 • அமைதியாக ஒரு இடத்தில் அசைவின்றி உட்காரலாம்.
 • யார் மீது கோபமாக இருக்கிறதோ அவருக்கு நம் கோபத்தையெல்லாம் கொட்டி, பச்சை பச்சையாகத் திட்டி ஒரு கடிதம் எழுதி, எழுதி முடித்தவுடன் அதைக்கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டுவிடலாம். அப்போதும் நம் மனது ரிலாக்ஸ் ஆகிவிடும்.

இப்படியெல்லாம் முயற்சி செய்துதான் பாருங்களேன்.

============

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

5 Responses to சிலையும் நீ சிற்பியும் நீ — 3 முதல் 9 வரை

 1. Muhammad says:

  “”அற்புதப் பாலம்

  ப்ரூக்லின் பாலம் என்று ஒன்று நியூயார்க் நகரத்தில் உள்ளது. உலகின் மிக அற்புதமான தொங்குபாலங்களில் ஒன்று அது. கிட்டத்தட்ட 1600 அடி நீளம் கொண்டது! வேறு வார்த்தைகளில் சொன்னால் 490 கிலோமீட்டர்கள் நீளம் கொண்டது! அதைக் கட்டியவர்கள் இரண்டு பேர். ஒரு அப்பா, ஒரு மகன். இருவரின் பெயரும் ரூப்லிங் (Roebling) என்று வரும். தந்தை ஜான் அகஸ்டஸ் ரூப்லிங். மகன் வாஷிங்டன் ரூப்லிங். இரண்டு பேருமே பொறியாளர்கள்தான். ஏற்கனவே சின்னச் சின்ன தொங்கு பாலங்களை இவர்கள் வடிவமைத்திருக்கின்றனர். ஆனால் கிட்டத்தட்ட 500 மைல் நீளப் பாலம் என்பது அசாத்தியமான கற்பனையாகவே இருந்தது.””

  490 மீட்டர்கள் ,,, pls correct it ..

  Barakallah feek…

 2. Mohamed piyas says:

  Dear sir
  Thank you very much for lovely posts and I’m finding it very very informative and useful.
  Just wanted to bring to ur notice a small clarification that the Brooklyn bridge’s length is not that too long sir -as mentioned in the article (490km ?)
  Thank you very much and hope to see u again
  Many thanks for your posts sir
  With love
  M piyas

 3. Karuppumk Mk says:

  ஒரு தந்தை மகனுக்கு எழுதிய கடிதமாகவே நான் இதை பார்க்கிறேன். எனக்காக எழுதப்பட்டது போலவே தோன்றுகிறது. தொடர்ந்து உங்கள் கட்டுரைகளை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என் முன்னேற்றத்திற்கு இந்த கடிதம் கலங்கரை விளக்காக இருக்கும். நன்றி,,,,,,,,,,,,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s