முத்துக்கள் பத்து: தேர்ந்தெடுக்கப்பட்ட என் சிறுகதைகள்

Muthukkal Pathuதிலகவதி மேடம் IPS அவர்கள் நடத்தும் அம்ருதா பதிப்பகத்தின் வெளியீடாக என் பத்து சிறுகதைகள் வெளிவந்துள்ளன. தலைப்பு: முத்துக்கள் பத்து. தமிழின் சிறந்த எழுத்தாளர்களின் பத்து கதைகள் இத்தலைப்பில் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. என் கதைகளும் அந்த தொடர்பில் வந்திருப்பதுதான் ஆச்சரியம்! நண்பர் யுகபாரதி  கொடுத்த முன்னுரை என்னைத் தூங்கவிடாமல் செய்துவிட்டது! அந்த புகழ்ச்சிக்கு உரியவன்தானோ நான் என்ற மயக்கத்தை ஏற்படுத்திவிட்டது! உண்மை எப்படியோ இருக்கட்டும், அவரது முன்னுரை ஒரு கவிஞனை அடையாளம் காட்டுவது. இலக்கியத்தின் நேசர்கள் யாரும் அதை ரசித்துப் படித்து மகிழலாம். இதோ அது  உங்களுக்காக. முன்னுரையைப் படித்து விட்டு என் நூலை வாங்க வேண்டும் என்ற ஆசை வந்தால் அதற்கு நான் காரணமல்ல! தொடர்புகளுக்கு:

அம்ருதா பதிப்பகம் — திரு ஜூலியன் 044243535555 / 9790969829

ஞானத்தின் ஜன்னல் வழியே

யுகபாரதி

என்னுடைய அன்பை நான் ரூமியோடு பகிர்ந்துகொள்ளத் தொடங்கி ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது.இந்த நெடிய உறவில் அவர் என்னை ஒவ்வொரு முறையும் ஒரு புதிய நூலோடுதான் சந்திந்திருக்கிறார்.இது,எப்படி அவருக்குச் சாத்தியப்படுகிறது என்பது இன்றுவரை என்னால் உய்த்துணர முடியாத அதிசயங்களில் ஒன்று.அவர் ஓய்வில்லாமல் எழுதிக்கொண்டே இருக்கிறார்.எதைப்பற்றியும் அவரால் எழுத முடிகிறது.சகமனிதனை சங்கடப்பட வைக்காத நடை.ஆகாயத்திற்குக் கீழுள்ள அத்தனை விஷயங்களையும் அவர் அலசுகிறார்.சமயத்தில் ஆகாயத்தையும்.ஆகாயத்திற்கு அப்பால் உள்ளதையும்.

சூஃபியிஸமா,இஸ்லாமா,சுயமுன்னேற்றமா,ஆல்பா தியானமா, மருத்துவமா, சிறுகதைகளா, கவிதைகளா, நாவலா, நாகூர் ஆண்டவரை பற்றியா எதையும் அவர் விட்டுவைப்பதில்லை. அவர் எழுத்துக்கள் தன்னைத் தானே இடையறாமல் சமைத்துக்கொள்கின்றன.எழுத்தில் உள்ள ருசியை அவர் கண்டடைந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். ஒரு தாத்தாவின் தெளிவும் பேரனின் குறும்பும் அவருடைய எழுத்துக்களில் வெளிப்படுவதை நீங்களும் உணர்ந்தவர்களே. நிறைய எழுதுகிறவர்கள் நிறைவாக எழுதுவதில்லை என்னும் கூற்றை ரூமியின் எழுத்துக்கள் பொய்யாக்குகின்றன. எப்பொழுது தரவுகளைத் தேடுகிறார். எப்பொழுது அதை ஆக்கங்களாக்குகிறார் எனத் தெரியவில்லை. எத்தனையோ விதமான ஆய்வுகளை அவர் மேற்கொள்கிறார். அவருடைய நூல்கள் அத்தனையையும் நான் வாசித்திருக்கிறேன். எதிலும் நுனிப்புல் மேய்தல் இல்லை.விஷயத்தின் ஆழ அகலங்களை கற்றறிந்து, அதன் நுட்பங்களை வெளிப்படுத்தும் விதத்தில் என்னை அவர் கவர்ந்துகொண்டே இருக்கிறார். அரசன் ஆநிரைகளைக் கவர்ந்தால் போர் வருமாம். ரூமியின் கவர்தலில் ‘போர்’ போய்விடுகிறது.

ரூமியோடு எனக்குள்ள பந்தமென்பது வெறும் எழுத்தாளர் வாசகர் உறவுயில்லை. அதற்கும் மேலே.பல வேளைகளில் அவர் என்னை நெக்குருகச் செய்துவிடுகிறார். குருவாக சிலசமயம் வழிகாட்டுகிறார்.குழப்பம் சேர்ந்து நான் உடைந்து போகையில் அவருடைய அன்பு என்னை ஆறுதலாகத் தாங்கிக்கொள்கிறது.குடும்பத்தோடு நான் போய் தங்கும் அவருடைய வீடு எனக்கு ஒருவகையான உற்சாகத்தை அளிக்கிறது.இரவு பகலாக அவருடன் பேசி என் அறியாமைக்கு வெளிச்சம் எடுத்து வந்திருக்கிறேன். ஆற்றலிலும் அன்பின் உபசரிப்பிலும் அவர் என்னை ஆட்கொண்டிருக்கிறார். ரூமி, எழுத்தாளர் மட்டுமில்லை.எழுதவும் செய்கிறார் அவ்வளவுதான்.

அவரை நான் முதல் முதலாக சந்திந்த போது அவரிடம் என்ன விதமான அனுகுமுறை இருந்ததோ அதிலிருந்து இம்மியும் பிசகாதவராக அவர் பழகி வருகிறார்.இடையில் எத்தனையோ நூல்களை எழுதிவிட்டார்.ஏராளமான வாசகர்களை கொண்டுவிட்டார். ஆன்மிக தளத்தில் அவரைப் பின் தொடர ஒரு பெரும் கூட்டம் அவருக்காகக் காத்திருக்கிறது. என்றாலும்,எழுத்திற்கும் எதார்த்தத்திற்கும் எவ்வித மாறுபாடுகளையும் அவரிடம் நான் கண்டதில்லை. கணையாழியில், தனியனாக என் வாழ்வை நான் தொடங்கியதில் இருந்து ஓரளவு வெகுமக்களுக்கு அறிமுகமான இந்தப் பொழுதுவரை அவரிடம் பழகிவருகிறேன். இந்தப்பழக்கத்தில் அவரே எனக்கு நிறைய தந்திருக்கிறார். கதையாக,கவிதையாக,கட்டுரையாக, பாடலாக எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ரூமியை நெருக்கத்தில் அறிந்தவன் என்ற முறையில் இந்தத் தொகுப்பில் ஒருசில கதைகளை அதன் ஈரம் காய்வதற்குள்ளேயே வாசித்திருக்கிறேன். அவருடைய எழுத்துக்களில் மைய்யமாக இழையோடும் அங்கதத்தை நினைத்து நினைத்துக் கிறங்கியிருக்கிறேன். “குட்டியாப்பா” அவருடையக் கதைகளில் உச்சம். ஏனைய கதைகளும் அப்படியே என்றாலும் அவரை நான் முழுமையாக உணர்ந்த இடம் அதுவே. வலிந்து அவர் கதைகளை எழுதுவதில்லை என்பதை இக்கதைகளை வாசிக்கும் யார் ஒருவரும் எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.கதைகளை அதன் போக்கில் விட்டுவிடும் சாமர்த்தியமே ரூமியின் தனித்துவம்.புத்திசாலியாக தன்னை நிறுவிக்கொள்ள அவர் எப்போதும் முயல்வதில்லை.காரணம்,அவர் புத்தியை விட ஞானத்தை விரும்புகிறவர்.

வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே ஊடாடும் மனித உறவுகளை ஞானத்தின் ஜன்னல் வழியே அவர் பார்த்தறிகிறார்.இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் அதைத்தான் காட்டுகிறது.பிருந்தாவனில் அவர் பார்க்கும் கடவுளுக்குப் பசியைப்பற்றி தெரிந்திருக்கிறது. ரூமியின் கதைகள், முதல் வார்த்தையிலேயே தொடங்கிவிடுகின்றன. சிவநேசன் மூன்றாவது நாளாக வீட்டுக்குத் தூரமாகிப் போயிருந்தான்.இப்படி ஒரு வரியை அவர் தொடங்கிவிட்ட பிறகு அந்தக் கதையை நம்மால் வாசிக்காமல் இருக்க முடியுமா. இதுதான் ரூமியின் கதை சொல்லும் உத்தி. மகாபாரத பாத்திரங்களை வைத்துக்கொண்டு இரண்டு கதைகளைச் (திரௌபதியும் சாரங்கபறவையும், ஜலவிமோசனம்) சொல்லியிருக்கிறார்.இரண்டுமே புதுவகையான உணர்வைக் கிளர்த்துக்கின்றன.இரண்டிலும் அவருடைய எள்ளலுக்குக் குறைவில்லை.

மதத்தை முன்னிறுத்துபவர்களே இன்றைக்கு மஹாபாரத்தைப் பேசுகிறார்கள்.பாரதத்தின் வாயிலாக இந்து சமயத்தை மீட்கலாம் எனவும் அதன் மூலம் தங்களுக்கான அரசியல் லாபத்தை ஈட்டலாம் எனவும் சிலர் கருதுகிறார்கள்.இதன் ஒருபகுதிதான் ஜெ.மோ.க்களின் மகாபாரத சம்பாசனைகள். ஆனால், ரூமியின் மகாபாரத சொல்லாடல் என்பது மதத்தைக் கடந்தது. மதத்தை அவர் எங்கேயும் பறைசாற்றிக்கொண்டு திரியவில்லை. அவருடைய பெரும்பாலான கதைகளில் பரமஹம்சரும் இயேசுவும் நபியும் மகாவீரரும் தென்படுகிறார்கள். ரூமி,மனிதர்களை அரசியல் இல்லாமல் பார்க்கப் பழகியிருக்கிறார்.

அடிப்படையில் ரூமி பேராசிரியர் என்பதால் அவருடைய மொழியில் உள்ள நேரடித் தன்மை லயிக்க வைக்கிறது.பெரும்பாலான பேராசிரியர்களுக்கு இது வாய்த்திருக்க வாய்ப்பில்லை.உலகை விழித்துப் பார்ப்பவர்க்குத்தான் உண்மையின் சொரூபம் தெரியும். ரூமியும் அவருடைய எழுத்துக்களும் அத்தகைய சொரூபத்தை நமக்குக் காட்டுவன. ரொம்பவும் லேசான இதயத்தோடுதான் அவர் யாரையும் எதிர்கொள்கிறார். எதிர்பார்ப்புகள் ஏதுமற்று அவரிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகளில் தாய்மை சுரப்பதாக சொன்னால் உங்களுக்கு மிகையாக தோன்றலாம். ஆனால், அதுதான் உண்மை. “குட்டியாப்பா”வை வாசித்துவிட்டு எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் இரண்டு மாதத்திற்கும் மேலாக அதைப்பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்ததையும் அற்புதமான கதை என்று எல்லோருக்கும் அக்கதையை பிரதியெடுத்து அனுப்பியவர்களையும் நேரடியாக நான் அறிவேன். ரூமி, தீவிரமானப் படைப்பாளி. தீவிரம் என்று நான் சொல்வதை நீங்கள் தீவிரவாதத்தோடு சம்பந்தப்படுத்திக்கொள்ளக் கூடாது. தொடர்ச்சியாக அயற்சியில்லாமல் செயல்படுபவர் என்பதாக பொருள் கொள்ள வேண்டும்.மீண்டும் மீண்டும் அவருடைய எழுத்துக்கள் நேசத்தின் வெளிப்பாடாகவே அமைகிறது.

ரூமி,எனக்கு நெருக்கமானவர் என்பதால் அவரைப் போற்றுவதில் உள்ள தயக்கத்தை தவிர்க்க முடியவில்லை.இந்தக் கதைகளைப் பற்றி வேறு யாரிடமாவது அவர் எழுதிக் கேட்டிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். இக்கதைகளின் ஊடே அவர் சிருஷ்டிக்கும் வெளி நம்மை நாமே இழந்துவிடும் அற்புதத்தைக் கட்டமைக்கிறது. விரவிவரும் புன்முறுவலில் நாமும் மோனத்தை நோக்கி போய்விட நேர்க்கிறது. இக்கதைகளை பேருந்திலோ அல்லது புகைவண்டியிலோ வாசித்துக்கொண்டு போனால் உங்கள் இருக்கைக்கு அருகே அமர்ந்தவர் உங்களை உன்மத்தர் என்று எண்ணக்கூடும். அப்படியான சிரிப்பலைகளை இவ்வெழுத்துக்கள் உண்டாக்கும் கீர்த்தி பெற்றிருக்கிறது.யோசித்து இந்த அங்கத்தங்களை உண்டாக்குகிறாரா இல்லை இயல்பாகவே அவரிடம் இப்பண்பு குடிகொண்டிருக்கிறதா என யோசிக்க முடியவில்லை.பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர் படைப்புகளை வாசித்து வருபவன் என்னும் முறையில் சொல்வதென்றால் ரூமியின் எழுத்துக்கள் வசமிழக்க வைக்கின்றன.எவ்வளவு கொடூரமான மனமுடையவனையும் கொள்ளென்று சிரிக்க வைத்து விடுகின்றன.

இஸ்லாமியக் கதை மாந்தர்களை இவரைப் போல சொற்பமானவர்களே சொல்லியிருக்கிறார்கள்.அதிலும், ரூமியின் பங்களிப்பு ஒப்பிட முடியாத உயரத்தில் உள்ளது.எந்த பாராட்டையும் சிறிய புன்னகையில் கடந்துவிடும் அவர், யாருடைய விமர்சனங்களையும் புறக்கணித்ததில்லை.தனக்குப் பட்டதைச் சொல்கிறேன் என்பதைவிட தன்னால் யாரும் பட்டுவிடக் கூடாது என்றே கருதுகிறார்.

ஒவ்வொருமுறையும் ஒரு புதிய நூலோடு சந்திக்கும் ரூமி, இம்முறை நூலாவதற்கு முன்பே எனக்குத் தந்துவிட்டார் என்பதுதான் கூடுதல் தகவல்.

=========

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

2 Responses to முத்துக்கள் பத்து: தேர்ந்தெடுக்கப்பட்ட என் சிறுகதைகள்

  1. மிக அருமையான முன்னுரை.

    முன்னுரையைப் படித்து விட்டு நூலை வாங்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது…யுகபாரதிக்காகவும் & குட்டியப்பாவுக்காகவும் .

    அம்ருதா பதிப்பகம் மேன்மேலும் வளர வாழ்த்துக்களுடன்
    மகேஷ் – பாடி

  2. Basudeen says:

    முன்னுரையைப் படித்து விட்டு நூலை வாங்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s