புறாக்கள் கட்டிய மாளிகை 05 – அவர் எப்படிப்பட்டவர்?

சமநிலைச் சமுதாயம் இதழ் சில காரணங்களினால் தடைப்பட்டு இன்று (ஆகஸ்ட் 2015) மீண்டும் வந்துவிட்டது. இன்ஷா அல்லாஹ் நல்லபடியாக இனி தொடரும். புறாக்கள் கட்டிய மாளிகை என்ற தலைப்பில் நான் உலகளாவிய இஸ்லாமிய வளர்ச்சியின் வரலாற்றை எழுதிக்கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும். பெருமானார் (ஸல்) எப்படிப்பட்டவர்கள் என்பது பற்றிய சற்றே நீண்ட இந்த கட்டுரையை நிச்சயம் படித்து கருத்துச் சொல்வீர்கள் என்று நம்புகிறேன்.

Samanila Cover Aug 2015இஸ்லாம் இந்த உலகில் பரவியது எப்படி என்று பார்ப்பதற்கு முன், அரேபியாவுக்குள் அது எப்படிப் பரவியது என்றும் பார்த்துவிடுவது அவசியம். ஏனெனில், அங்கிருந்துதானே எல்லாம் தொடங்கியது!

இஸ்லாம் என்ற சொல்லுக்கு சாந்தி, சமாதானம், அமைதி என்ற அர்த்தங்கள் உண்டு என்று அறிவோம். ஆனால் சொல்லிருக்கட்டும். செயல் எப்படி இருந்தது என்பதுதான் இஸ்லாத்துக்கு எதிரான நிலைப்பாடுகொண்டவர்களின் கேள்வி. அந்த கேள்வியில் நியாயம் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளவேண்டுமானால், ஏற்கனவே வரித்துக்கொள்ளப்பட்ட எந்தவித முன்கருத்துக்களுமின்றி வரலாற்றைப் பார்ப்பதே சரியானதாகும்.

இஸ்லாம் என்ற மார்க்கத்தின் ஸ்தாபகர் என்றும் அதைப் பரிபூரணப்படுத்தியவர் என்றும் பார்க்கப்படுகின்ற பெருமானார் இறைவனின் தூதர் என்ற அந்தஸ்தைப் பெருவதற்கு முன், முதல் இறைச்செய்தி அருளப்படுவதற்கு முன் எப்படி இருந்தார்கள்? எப்படி வாழ்ந்தார்கள்? அவர்களுடைய குணாம்சங்கள் என்னவாக இருந்தன?

இக்கேள்விகளுக்கு நாம் பதிலைத் தெரிந்துகொள்ளவேண்டியது மிகமிக அவசியம். ஏனெனில் ஒரு வாய்ப்பு, ஒரு அந்தஸ்து உங்களுக்கு வருகிறதென்றால் அதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறதென்றுதான் அர்த்தம். இது பிரபஞ்ச விதியாகும். தகுதி இல்லாமல் ஒருவராலும் ஆசைப்படுவதை அடைய முடியாது. எனவே இறைத்தூதர் என்ற தகுதி வருவதற்கு முன்னர் முஹம்மது அவர்களுடைய குணங்கள் எவ்வாறு இருந்தன என்று பார்ப்பது இஸ்லாமிய வரலாற்றையும், இஸ்லாத்தின் ராட்சச வளர்ச்சியையும் புரிந்துகொள்ள நமக்கு உதவும்.

இங்கே இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்லிவிட விரும்புகிறேன். ஆசைப்பட்டது நமக்குக் கிடைக்கவேண்டுமென்றால், ஆசைப்படுவதை அடைய நாம் தகுதி உள்ளவராக நம்மை ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பிரபஞ்ச விதியைப் பற்றித்தான் நான் மேலே குறிப்பிட்டேன். ஆனால் தான் இறைவனுடைய தூதராக வேண்டுமென்று நபிகள் நாயகமவர்கள் ஆசைப்படவில்லை. ஏன்?

PKM-05.0

 

 

 

 

 

மனிதர்கள் மூன்று வகை. 1. இறைவனால் தேர்ந்தெடுத்துக்கொள்ளப்பட்டவர்கள். 2. இறைவனைத் தேர்ந்தெடுத்துக்கொண்டவர்கள். 3.மற்றவர்கள். முதல் வகையில் தூதர்களும், இரண்டாம் வகையில் ’அவ்லியா’ எனப்படும் இறைநேசர்களும், மூன்றாவது வகையில் நாமும் வருவோம். இறைமறுப்பாளர்கள்கூட இந்த மூன்றாவது வகையில் இருக்கலாம்! ’நுபுவ்வத்’ எனும் நபித்துவம் இறைவனுடைய கருணையின் பரிசு. ’விலாயத்’ எனும் இறைநட்பு இறைநேசத்துக்கும் அதற்கான உழைப்புக்குமான அங்கீகார விருது. இந்த விருதைப் பெறுவதற்கு ஒவ்வொரு மனிதருக்கும் தகுதி உள்ளது. அதனால்தான் முதல் மனிதரைப் படைத்த பிறகு மலக்குகளை அழைத்து என் பிரதிநிதியை இந்த உலகில் படைத்திருக்கிறேன் என்று இறைவன் சொன்னான் (2:30)

பெருமானார் முதல் வகை. இறைவன் அவர்களைத் தன் இறுதித்தூதராகத் தேர்ந்தெடுக்கொண்டான். எனவே கொடுக்கப்படவிருந்த பணிக்கு என்னென்ன தகுதிகள் தேவையோ அவையனைத்தையும் வளர்த்துக்கொள்ள பெருமானாரைத் தயார் செய்தான்! ஆமாம். அதனால்தான் முஹம்மது அவர்கள் இளைஞராக இருந்தபோதே தான் வாழ்ந்த ஒட்டு மொத்த சமுதாய குணத்துக்கும் மாற்றமான குணம் கொண்டவராக இருந்தார்கள்.

அரேபியர்கள் அனைவரும் குடிகாரர்களாக, மூட நம்பிக்கை கொண்டவர்களாக, பெண்களை இஷ்டத்து அனுபவிப்பவர்களாக, ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளைக்கொண்டவர்களாக, விபச்சாரம் செய்பவர்களாக, பிறன் மனை விழைபவர்களாக, சூதாடுபவர்களாக, கேளிக்கைகள், குடி கூத்து என்று ஆடிப்பாடி மகிழும் குணம் கொண்டவர்களாக, வட்டி வாங்குபவர்களாக, வட்டி கொடுப்பவர்களாக, வியாபாரத்தில் நேர்மையற்றவர்களாக, கவிதை இயற்றுபவர்களாக, கவிதை பாடுபவர்களாக, ரத்த வெறி பிடித்தவர்களாக, பல தலைமுறைகளுக்குப் பழிவாங்கும் குணம் கொண்டவர்களாக – இப்படி எல்லா துர்குணங்களுக்கும் ஒட்டுமொத்தமாக சொந்தம் கொண்டாடியவர்களாக இருந்தனர்.

ஆனால் அந்தக் கெட்ட குணாம்சங்கள் எதுவுமே முஹம்மது அவர்களிடம் மருந்துக்குக்கூட இல்லை. ஒரு கெட்ட குணம்கூட இல்லாமல் ஒரே ஒரு இளைஞர் மட்டும் அரேபிய சமுதாயத்தில் இருந்தார் என்றால் அது பெருமானார் மட்டும்தான். இது வரலாறு காட்டும் ஆச்சரியங்களில் ஒன்று. இஸ்லாம் வெளிப்படையாக அரேபியாவில் எடுத்துரைக்கப்படுவதற்கு முன்னும், எடுத்துரைக்கப்பட்ட பின்னும் இறுதித்தூதரின் முன்மாதிரி எவ்வாறு இருந்தது என்று வரலாற்றிலிருந்து சில உதாரணங்கள் காட்ட விரும்புகிறேன். இஸ்லாம் எப்படிப் பரவியது என்ற கேள்விக்கான பதில் அந்த நிகழ்வுகளில் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.

PKM-05.1பெருமானார் கோபமடைந்தால்

அரேபியர்கள் கெட்ட வார்த்தைகளால் திட்டுவதற்குத் தயங்கவே மாட்டார்கள். ரொம்ப கோபமாக இருந்தால், “லாத்தின் மர்மஸ்தானத்தைச் சப்புவீராக” என்றெல்லாம் திட்டுவார்களாம்! (’லாத்’ என்பது கடவுளென வணங்கப்பட்ட பெண் உருவத்தில் செய்யப்பட்ட சிலைகளில் ஒன்று என்று ஏற்கனவே பார்த்தோம். நாம் பயன்படுத்தும் கெட்ட வார்த்தைகள்கூட அரேபியர்களிடமிருந்துதான் வந்திருக்குமோ என்று சந்தேகம் வருகிறது)! ஆனால் தன்வாழ்நாளில் ஒரு கெட்ட சொல்லைக்கூட இறுதித்தூதர் சொன்னதில்லை. ரொம்ப கோபமாக இருந்தால், “உன் நெற்றி அழுக்கால் கருப்பாகட்டும்” என்று கூறுவார்கள். அவர்களுடைய அதிகபட்சமான வசவுச்சொல் இதுதான்!

ஹயா எனும் வெட்க உணர்வு

ஹயா எனப்படும் வெட்க உணர்வு ஒரு முஸ்லிமுடைய நம்பிக்கையின் பகுதியாகும் என்பது நபிமொழி. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற குணங்களெல்லாம் பெண்களுக்கு உரியவையாகத்தான் கருதப்படுகின்றன. குறிப்பாக வெட்க உணர்வு. நாணுதல் ஒரு சிறந்த குணம். அது பெண்ணிடம் இருந்தாலும் சரி, ஆணிடம் இருந்தாலும் சரி. உடல் ரீதியான நாணம் பெண்களுக்கு அழகு. அசிங்கமானதையும் தீயதையும் செய்யக்கூடாது என்ற உள்ள ரீதியான நாணம் இருபாலருக்கும் அழகு. ஆனால் உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும் எந்தவிதமான நாணமும் அரேபியர்களிடம் இருந்ததில்லை. க’அபாவை அவர்கள் நிர்வாணமாகச் சுற்றி வருவார்கள். கனமான பொருளைத் தூக்கிக்கொண்டு போவதாக இருந்தால்கூட இடுப்புக்குக்கீழ் உள்ள ஆடையை அவிழ்த்துவிட்டுக் கொண்டு ‘ஃப்ரீ’யாகச் செல்வது அவர்களுடைய வழக்கமாக இருந்தது!

ஒருமுறை க’அபாவை புதுப்பிப்பதற்காகச் சென்றுகொண்டிருந்த சிறியதந்தை அப்பாஸோடு இளைஞர் முஹம்மதுவும் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. முஹம்மதின் இடுப்புக்குக் கீழே இருந்த ’இஸார்’ என்ற ஆடையை அவிழ்த்துத் தோளின்மீது போட்டுக்கொள்ளும்படி பெருமானாரைவிட மூன்று வயதே மூத்த சிறியதந்தையார் சொன்னார். அவருடைய சொல்லை மீற முடியாமல் பெருமானாரும் அவர் சொன்னபடி செய்தார்கள். ஆனால் ஆடையை அவிழ்க்கும்போதே, நாம் நிர்வாணமாகப் போகிறோமே என்ற வெட்க உணர்வு மேலிட, அந்தக் கணத்திலேயே மயக்கமுற்று உணர்விழந்தவர்களாய்க் கீழே விழுந்தார்கள்!

நபித்தோழர் ஜபீர் இப்னு அப்துல்லாஹ் அவர்களின் மூலமாகக் குறிப்பிடப்படும் இந்த நிகழ்ச்சி புகாரி நபிமொழித்தொகுப்பில் வருகிறது (கிதாபுஸ் ஸலாத், அத்தியாயம் 8, எண் 360). உலகப்புகழ் பெற்ற எவருக்கும் இல்லாத, எவரிடத்திலும் காணமுடியாத சிறப்பு குணமாக வெட்க உணர்வு பெருமானாரிடம் இருந்ததை ஐயத்திற்கிடமின்றி நாம் உணர்ந்துகொள்ளலாம். இதையொத்த ஒரு நிகழ்வை இந்த உலகில் வாழ்ந்த எந்த ஒரு தலைவர், மகான், மஹாராஜா, ஞானி, விஞ்ஞானி – எவருடைய வாழ்விலும் நான் கண்டதில்லை. அப்படி ஒருவர் இருந்தால் என்று உங்களால் காட்டமுடியுமா?

ஆங்கிலத்தில் It speaks volumes என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் இது. இது சொல்லாத செய்தியே இல்லை. ஒரு ஆண் மகன் இப்படி இருந்தார் என்றால் பெண்களுக்கு அவர் என்னவிதமான கண்ணியம் கொடுத்திருப்பார், அவரால் வழிநடத்தப்பட்ட சமுதாயம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை கற்பனை செய்தாவது பார்க்கலாம். அவிழ்த்துப் போட்டுக்கொண்டு ஆடிப்பாடி குதூகலிப்பதை நாகரீகம் என்று நினைக்கும் மக்கள் பெருகிக்கொண்டே போகும் உலகத்தில், அரை நிர்வாணமாகவும், முழு நிர்வாணமாகவும் அலைந்த சிலரை மஹான்கள் என்றும், ஞானிகள் என்றும் கருதும் உலகில், இப்படியோஒர் அற்புத மனிதரை, இவ்வளவு அழகிய முன்மாதிரியை இந்த உலகம் கண்டதுண்டா? அப்படியானால் அப்படிப்பட்ட ஒரு தலைவரை, தூதரை, ஞானியைப் பின்பற்றுகின்ற சமுதாயம் எப்படிப்பட்டதாக உருவாகி இருக்கும்?

PKM-05.2கருப்புக் கல்லில் கை வைத்த சமாதான ஒளி

ஒரு முறை க’அபாவின் சுவர்கள் ஒரு வெள்ளத்தில் இடிந்துபோயின. பாலை வனத்தில் தண்ணீர் இல்லாததும் பிரச்சனைதான். தண்ணீர் வெள்ளமாக வந்தாலும் பிரச்சனைதான். முக்கியமான கோத்திரத்தினரெல்லாம்கூடி என்ன செய்வதென்று யோசித்தனர். முழுமையற்ற தோற்றம் கொண்டிருந்தது க’அபா. ஒவ்வொரு கோத்திரத்தினருக்கும் ஒதுக்கப்பட்டிருந்த சுவர்களை முழுவதுமாக இடித்துவிட்டு மீண்டும் புதிதாகக் கட்ட வேண்டும். ஆனால் அதற்கு அவர்கள் மனதளவில் தயாராக இல்லை. ஏன்? க’அபாவின் உள்ளே வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டுக்கொண்டிருந்த தெய்வங்களாகக் கருதப்பட்ட விக்கிரகங்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமோ என்று பயந்தனர்!

பூனைக்கு யார் மணி கட்டுவது? அல் வலீத் இப்னு அல் முகீரா என்பவர் துணிச்சலாக முன்வந்தார். தன் கோத்திரத்துக்கென ஒதுக்கப்பட்டிருந்த, பாழ்பட்டிருந்த, யமன் நாட்டைச் சேர்ந்த அல்லது யமன் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்களைக்கொண்டு கட்டப்பட்ட சுவரை எல்லா ’தெய்வங்க’ளையும் வேண்டிக்கொண்ட பிறகு இடித்தார். மறுநாள் காலை அவருக்கு ஒன்றும் ஆகிவிடாமல் நல்லவிதமாக இருந்ததைக் கண்ட மற்ற அரேபியர்களுக்கும் துணிச்சல் வந்தது! அவர்களும் தங்களுக்குச் சொந்தமான சுவர்களை இடித்தனர்.

இப்போது க’அபாவை மீண்டும் கட்டவேண்டும். அந்த நேரம் பார்த்து வெள்ளத்தின் காரணமாக ஒரு எகிப்திய கப்பலொன்று ஜித்தாவில் கரையொதுங்கியிருந்தது. அதில் வந்த பாகோமியஸ் என்பவர் ஒரு கட்டிடக்கலை வல்லுனராகவும் (மேஸ்திரி என்று வைத்துக்கொள்ளுங்களேன்), தச்சு வேலை கொஞ்சம் தெரிந்தவராகவும் இருந்தார். க’அபாவை மீண்டும் புதுப்பித்துக்கட்ட உதவுவார் என்ற சரியான அனுமானத்தின் பேரில் அல் வலீத் இப்னு அல் முகீராவின் தலைமையில் ஒரு குழு சென்று அவரை  அழைத்து வந்தனர்.

வேலைகளெல்லாம் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் புதிய பிரச்சனையொன்று பூதாகாரமாக எழுந்தது. ஹஜ்ருல் அஸ்வத் என்ற புனிதமான கறுப்புக்கல்லை அதற்குரிய இடத்தில் வைப்பது யார்? அதுதான் கேள்வி. அதுதான் பிரச்சனை. கோத்திரங்கள் அதற்காகப் போட்டிபோட்டுக்கொண்டன. எந்த அளவுக்கென்றால், அப்துத்தார், அதீ ஆகிய இரண்டு செல்வாக்கு மிக்க கோத்திரங்களும் தங்களைத்தவிர வேறு எவரும் அந்த வேலையைச் செய்யக்கூடாதென்று பிடிவாதமாக இருந்தனர். இன்னும் ஒருபடி மேலே போய், அப்துத்தார் கோத்திரத்தினர் ஒரு கோப்பை நிறைய ரத்தத்தைக் கொண்டுவந்து அதில் தங்கள் கைகளை விட்டு சத்தியப்பிரமாணம் செய்தனர்! அது அனேகமாக மிருக ரத்தமாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் மனித ரத்தம் சிந்துவதற்குரிய முன்னேற்பாடாக அது இருந்தது என்பதுதான் உண்மை.

அந்த நேரத்தில் மக்தூமி கோத்திரத்தைச் சேர்ந்த, செல்வாக்கு மிகுந்த அபூ உமய்யா என்பவர் சமயோசிதமாக ஒரு நல்ல காரியம் செய்தார். “அல் சுஃப்பா வாசல் வழியாக காலையில் யார் முதலில் வருகிறார்களோ, அவரிடமே என்ன செய்யலாமென்று கேட்டு அவர் சொல்வதன்படி முடிவுக்குவரலாம்” என்று ஒரு கருத்தைச் சொன்னார். அதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

அதை ஓர் அறிவார்ந்த யோசனை என்று சொல்லமுடியாது. ஏனெனில் அந்த வாசல் வழியாக ஒரு போக்கிரி, ஒரு திருடன், ஒரு பேராசைக்காரன், ஒரு மிருகம் – யார் வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் வரலாம். அரேபியர்களின் மூட நம்பிக்கைக்குத் தீனி போடுவது மாதிரியான ஒரு கருத்து அது. அதனாலோ என்னவோ அந்த யோசனையை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

ஆனால் இறைவனின் விருப்பம் அங்கே வேலை செய்தது. அந்த வாசல் வழியாக முஹம்மதுதான் முதலில் வந்தார்கள். அப்போது அவர்களுக்கு வயது இருபத்தைந்து என்றும், முப்பத்தைந்து என்றும் இரண்டு கருத்துக்கள் உள்ளன. இளைஞராக இருந்தார்கள் என்பதுவரை மிகச்சரி. ஏற்கனவே “நம்பிக்கைக்கு உரியவர்” என்ற பொருள்படும் ‘அல் அமீன்’ என்ற கௌரவப்பெயரை அரேபியர்களிடம் அவர்கள் பெற்றிருந்தார்கள். “அதோ, அல் அமீன் வருகிறார். அவரிடமே கேட்டுவிடலாம்” என்று அவர்கள் முடிவு செய்தனர்.

விரைந்து முடிவெடுக்கக்கூடியவர்களாகவும், மிகுந்த அறிவாற்றல் மிக்கவர்களாகவும் முஹம்மது விளங்கினார்கள். அங்கே வந்த அல்அமீனிடம் பிரச்சனை சொல்லப்பட்ட உடனேயே ஒரு விரிப்பைக் கொண்டுவாருங்கள் என்று கேட்டார்கள். அவ்வாறே அது கொண்டுவந்து வைக்கப்பட்டது. அதனை விரித்து அதன் நடுவில் அந்தப் புனிதக் கருப்புக் கல்லைத் தூக்கி வைத்தார்கள். ”ஒவ்வொரு கோத்திரத்தாரும் விரிப்பின் நுனியைப் பிடித்துக்கொள்ளுங்கள்” என்றார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. எல்லாக் கோத்திரத்தலைவர்களின் கைகளும் அத்துணியில் பட்டுக்கொண்டிருந்ததால் அக்கல்லைத் தூக்கி வைத்த பெருமையின் பங்கு அனைவருக்கும் சென்றது. அனைவரும் திருப்தியடைந்தார்கள். அப்படியே அந்தக் கல்லைத் தூக்கிக்கொண்டுபோய் அதனிடத்தில் முஹம்மது அவர்களே தம் கையால் அதை எடுத்து அது ஏற்கனவே இருந்த இடத்தில் பொருத்தி வைத்தார்கள். அதை யாரும் தடுக்கவில்லை. ஏன் நீங்கள் வைக்கிறீர்கள் என்று கேட்கவும் இல்லை. பெருமானாருக்கு அரேபியர்களிடையே இருந்த மரியாதையையும் அந்தஸ்தையும் இது காட்டுகிறது.

அநாவசியமான ரத்தம் சிந்துதல் பெருமானாரால் தடுக்கப்பட்டது. ரத்த வெறிபிடித்தவர்களுக்கு மத்தியிலே ஒற்றுமையையும் இணக்கத்தையும் முஹம்மது ஏற்படுத்தினார்கள்.

“பயங்கரமான இந்த காலகட்டத்தில் முஹம்மதின் வரலாறு நமக்குத் தேவையாக இருக்கிறது…எல்லாவற்றுக்கும் மேலாக, அமைதியை எப்படி உண்டாக்குவது என்பதை முஹம்மதிடமிருந்துதான் நாம் கற்றுக்கொள்ளவேண்டும்” என்று உலக மதங்களின் வரலாற்றை எழுதும் பிரிட்டிஷ் அறிஞரும், Muhammad – A Biography of the Prophet என்ற நூலின் ஆசிரியரும், Muhammad – The Legacy of the Prophet என்ற தொலைக்காட்சித் தொடரின் தயாரிப்பில் முக்கிய பங்களிப்பாளருமான கரன் ஆர்ம்ஸ்ட்ராங் சொல்வதுதான் எவ்வளவு உண்மை!

இஸ்லாம் என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ளவைக்கும் நிகழ்ச்சியாக இதைப் பார்க்கவேண்டும். இதுதான் ஆரம்பம். அறிவார்ந்த முடிவின் விளைவாக சமாதானம், ஒற்றுமை, அமைதி, சந்தோஷம் – இவற்றை ஏற்படுத்துவதே இஸ்லாம். இஸ்லாம் என்ற பெருவட்டம் சாந்தியாலும் சமாதானத்தாலும் நிறைந்துள்ளது. இஸ்லாத்தின் விளக்கமாக இவையே உள்ளன. இக்குணங்களையெல்லாம் எடுத்துரைக்கின்ற குணக்குன்றாக இறுதித்தூதர் இருந்தார்கள். அதற்கு அடிப்படையாக ஓரிறைக் கொள்கை இருந்தது. ஆனால் இன்றைக்கு முஸ்லிம்களுக்குள்ளேயே எத்தனை பிளவுகள்? எத்தனை குழுக்கள்? சகோதரர்களே, இஸ்லாமிய வரலாற்றின் செய்தியை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? சீர்தூக்கிச் செயல்படுத்த வேண்டாமா?

PKM-05.3ஹில்ஃபுல் ஃபுதுல்

அப்போது பெருமானாருக்குப் பதினைந்து வயதிருக்கும். மக்கத்துக் குறைஷிக் கோத்திரத்தாருக்கும் ஹவாஸீன் கோத்திரத்தாருக்குமிடையே யுத்தம் போன்ற சண்டையொன்று ஏற்பட்டது. அதுவும் ரத்தம் சிந்தக்கூடாது என்று தடுக்கப்பட்டிருந்த புனித மாதமான துல்ஹஜ் மாதத்தில் தொடங்கியது. இன்னின்ன மாதங்களில் போர் செய்யக்கூடாது, கொலை செய்யக்கூடாது, ரத்தம் சிந்தக்கூடாது என்று அவர்கள் எடுத்திருந்த முடிவினை அவர்களே மீறினார்கள். (துல்காயிதா, துல் ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய  மாதங்கள் ரத்தம் சிந்தக்கூடாத புனித மாதங்கள் என்று அறியப்பட்டன). ஆனால் முடிவுகளைவிட உணர்ச்சிகள்தான் அவர்களுக்கு முக்கியமாக இருந்தன.

போர் நான்கு ஆண்டுகள் தொடர்ந்து நடந்தது. பலர் கொல்லப்பட்டார்கள். அமைதியும் நிம்மதியும் இன்றி பலருடைய வாழ்க்கையே நாசமாகிப்போனது. இளைஞர் முஹம்மதுவுக்கு அது மிகுந்த வருத்தம் கொடுத்தது. ஆனால் அவர்களால் ஒன்றும் செய்யமுடியாத சூழ்நிலை. இதை எப்படியாவது தடுக்கவேண்டும் சிலர் விரும்பினார்கள். அதில் முக்கியமானவர் ஜூதானின் மகனான அப்துல்லாஹ் என்பவர். நறுமணப் பொருள் வியாபாரியாக இருந்த அவர் ஒரு செல்வந்தராகவும், செல்வாக்கு மிகுந்தவராகவும் இருந்தார். முட்டாள்தனமான அந்த யுத்தத்தை நிறுத்த விரும்புகிறவர்கள் அனைவரையும் தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தார். கலந்துபேசி ஒரு சுமூகமான முடிவு எடுக்க முடியுமா என்று பார்ப்பதற்காக.

பல கோத்திரங்களைச் சேர்ந்த தலைவர்களும், நலம் விரும்பிகளும் அவர் வீட்டில் கூடினர். அனாவசியமான ரத்தம் சிந்தலைத் தடுப்பது தம் கடமை என்று நினைத்தவர்கள் அவர்கள். அந்தக் கூட்டத்திற்கும், உடன்படிக்கைக்கும்தான் ’ஹில்ஃபுல்  ஃபுதுல்’ (நியாயவாதிகள் மேற்கொண்ட உடன்படிக்கை) என்று பெயர். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட இரண்டு முக்கியமானவர்கள் இறுதித்தூதரும், அபூபக்கரும் (அப்போது அபூபக்கர் பெருமானாரின் ஆத்ம நண்பராகவில்லை).

ஒரு சிவப்பு ஒட்டகக்கூட்டத்தையே பரிசாகக் கொடுத்திருந்தாலும் அதற்காக அக்கூட்டத்தில் நான் கலந்துகொள்ளாமல் இருந்திருக்கமாட்டேன் என்று பிற்காலத்தில் இறுதித்தூதர் கூறினார்கள். எந்தக் காரணம் கொண்டும் ரத்தம் சிந்துதல் தடுக்கப்படவேண்டும், அமைதியும் சந்தோஷம் நிலவ வேண்டும் என்பது அவர்கள் நோக்கமாக, லட்சியமாக இருந்தது. அந்த லட்சியத்தை நிறைவேற்றும் முயற்சியாக அவர்கள் வாழ்க்கை இருந்தது. ஹில்ஃபுல் ஃபுதுல் கூட்டத்தில் கலந்துகொண்டது அதற்கு ஒரு சின்ன, ஆனால் சிறந்த உதாரணம்.

தனிமை, பொறுமை, இயற்கையை தியானித்தல், ஆழ்ந்த சிந்தனை ஆகியவற்றை ஆடு மேய்க்கும் காலத்திலிருந்தே பெருமானார் பெற்றிருந்தார்கள். மிருகங்களை மேய்ச்சலுக்குக் கொண்டுசெல்லும் ஒரு மனிதரால் வேறு என்ன செய்யமுடியும்? தறிகெட்டு ஓடும் மிருகங்களை நெறிப்படுத்த மிகுந்த பொறுமை தேவை. அவைகளோடு மனிதனால் உரையாடவும் முடியாது. எனவே இயற்கையாகவே மேய்ப்பர்களுக்குத் தனிமை கிடைத்துவிடுகிறது. தனிமையில் இருந்தால் நமக்கு ‘போரடிக்கிறது’ என்று சொல்வோம். ஆனால் இறைத்தூதர்கள் இந்த பிரபஞ்சைத்தைப் பற்றியும், அதைப்படைத்தவனைப் பற்றியும், மனிதர்களை மேம்படுத்துவது பற்றியும் சிந்திப்பதற்கு அந்த நேரங்களைப் பயன்படுத்திக்கொண்டனர். மிருகங்களை மேய்க்கும் ஒருவரால்தான் தறிகெட்டு ஓடும் மனிதர்களையும் நெறிப்படுத்த முடியும் என்று இறைவன் நினைத்தானோ என்னவோ! அதனால்தான் இறைத்தூதர்கள் அனைவருமே நல்ல மேய்ப்பர்களாக இருந்திருக்கிறார்கள்!

PKM-05.4பெற்றோரா எஜமானா?

இறுதித்தூதரின் குணாம்சத்தை அவர்கள் நடந்துகொண்ட விதத்திலிருந்தும் மற்றவர்கள் அவர்கள்மீது கொண்டிருந்த மரியாதையை வைத்தும் புரிந்துகொள்ளலாம். அப்படிப்பட்ட ஒரு முக்கியமான நிகழ்வை இப்போது பார்க்கலாம்.

உலகம் முழுவதும் எல்லா கலாச்சாரங்களிலும் அடிமைகளை வைத்திருக்கும் பழக்கமிருந்தது. கிமு 8000 ஆண்டிலேயே அடிமைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் கருப்பினத்தவர் அடிமைகளாகவும் வீட்டு வேலைக்காரர்களாகவும் இருந்தனர். 1863ம் ஆண்டு Emancipation Proclamation என்ற ஒரு விடுதலை உத்தரவு மூலம் அடிமைத்தளையை நீக்கிவிட்டாரே என்ற கோபத்தில்தானே ஆப்ரஹாம் லிங்கன் சுட்டுக்கொல்லப்பட்டார்! லிங்கன் எவ்வளவு பெரிய காரியம் செய்தார் என்று புரிந்துகொள்ளவேண்டுமென்றால் அமெரிக்காவில் அடிமைகள் நடத்தப்பட்ட விதம் குறித்து நாம் கொஞ்சமாவது தெரிந்துகொள்ளவேண்டும்.

மிகமிகச் சிறிய தவறுகளுக்காக அமெரிக்க அடிமைகளுக்குக் கொடூரமான தண்டனைகள் கொடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்றுக்குப் பெயர் லின்ச்சிங் (Lynching). அற்பமான ஒரு காரணத்திற்காக அடிமை ஒருவனை அல்லது ஒருத்தியை எல்லோரும் பார்க்கும்படியாக மரத்தில் தூக்கிலிடுவது! அதுதான் ’லின்ச்சிங்’! இப்படித்தான் உலகம் முழுவதும் இருந்திருக்கிறது. அரேபியாவிலும் இப்படித்தான் இருந்தது. பிலால் போன்ற அடிமைத் தோழர்கள் பட்ட கஷ்டம் எழுத்தில் வடிக்க முடியாதது. மக்காவில் யூதர்களும், கிறிஸ்தவர்களும், அபிசீனியர்களும் அடிமைகளாகவே பெரும்பாலும் இருந்தார்கள் என்கிறார் வரலாற்று ஆசிரியர் ஹைகல்.

போர்க்கைதிகளாகக் கிடைப்பவர்களை விலைக்கு வாங்கி கடினமான வீட்டு வேலைகளைச் செய்வதற்காக அடிமைகளாக வைத்துக்கொள்ளும் பழக்கம் அரேபியாவில் இருந்தது. அப்படி ஒரு அடிமையாக விற்கப்பட்டு, கடைசியில் அன்னை கதீஜாவிடம் வந்து சேர்ந்த ஒருவரின் பெயர் ஜைத். கதீஜா பெருமானாரின் மனைவியானதால் அவரது அடிமை பெருமானாருக்கும் அடிமையாக ஊழியம் செய்து வந்தார்.

ஏற்கனவே பெருமானாரின் காசிம், அப்துல்லாஹ் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்த கொஞ்ச நாளிலேயே இறந்து போனதால், நான்கு பெண் குழந்தைகள் மட்டுமே இருந்தனர். (நபித்துவம் அருளப்படுவதற்கு முந்திய காலகட்டத்திலேயே இந்த இரண்டு பிள்ளைகளும் இறந்துபோயினர். மூன்றாவது ஆண் குழந்தையாகிய இப்ராஹீம் என்பவர் மட்டுமே இஸ்லாத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இறந்துபோனார்).  பெண் குழந்தைகளை உயிரோடு புதைக்கும் சமுதாயத்தில் ஆண் குழந்தைகளுக்கு எவ்வளவு மதிப்பிருந்திருக்கும் என்று யூகிக்கலாம். அந்த காலகட்டத்தில்தான் ஜைத் இப்னு ஹாரிதா என்பவர் அடிமைச் சந்தையில் விலைக்கு இருந்ததை பெருமானார் பார்த்தார்கள் என்றும், தன் மனைவி கதீஜாவிடம் சொல்லி உடனே அவரை வாங்கி, வாங்கிய உடனேயே விடுதலை செய்து, தன் மகனாக ஏற்றுக்கொண்டார்கள் என்றும் ஹைகல் கூறுகிறார்.

பெருமானார் ஜைதை எப்படி நடத்தினார்கள்? இதைத் தெரிந்துகொள்ள ஜைத் எடுத்த ஒரு முக்கியமான முடிவைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவேண்டியுள்ளது. ஜைத் பெருமானாரிடம்  இருப்பதை அறிந்த ஜைதின் பெற்றோர்கள் பெருமானாரிடம் வந்து தம் மகனை ஒப்படைத்துவிடும்படியும் அதற்குரிய பணத்தைக் கொடுத்துவிடுவதாகவும் கூறினார்கள். அதற்கு பெருமானார், “ஜைதின் விருப்பத்துக்கு விட்டுவிடுங்கள். அவர் உங்களோடு வர சம்மதித்தால் அழைத்துச் செல்லுங்கள். அதற்காக நீங்கள் பணம் எதுவும் கொடுக்கவேண்டாம். ஆனால் அவர் எங்களோடே இருக்க விரும்பினால் அவரை விட்டுவிட்டுச் செல்லுங்கள்” என்று கூறினார்கள்.

இது ரொம்ப வித்தியாசமானதொரு நிபந்தனையாகும். எந்த அடிமையும் தன் பெற்றோரோடு இருக்கவும், சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கவும்தான் விரும்புவார். ஆனால் ஜைத் தனக்கு பெற்றோரோடு போக இஷ்டமில்லை, பெருமனாரோடே  இருந்து கொள்கிறேன் என்று கூறினார்!

இது ஒரு வரலாற்றுப் புதுமை. இந்தப் புதுமையின் பின்னால் இருப்பது பெற்றோரை மிகைத்த அன்பும் பரிவுமாகும்.  இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் இதுதான். பெருமானார் எவ்வளவு அன்பாக ஜைத் என்ற அடிமையை நடத்தியிருந்தால் அந்த அடிமை அப்படிக்கூறியிருப்பார்? யோசியுங்கள். ’லின்ச்சிங்’ என்ற பெயரால் காலதாமதாக ஒரு அடிமை வந்தால்கூட அவரைக்கொன்று போட்டது அமெரிக்க சமுதாயம். முஸ்லிமானார் என்பதற்காக ஒரு வயதான அம்மாவின் பெண் குறியில் ஈட்டியால் குத்திக்கொன்றது அரேபிய சமுதாயம். ஆனால் தன் பெற்றோர் வந்து அழைத்தும் அவர்களோடு போக விருப்பமில்லை, தன் எஜமானரோடே தங்கிவிடுகிறேன் என்று ஒரு அடிமை சொன்னாரென்றால் அந்த எஜமானர் எப்படிப்பட்ட அன்பின் இருப்பிடமாக இருந்திருப்பார் என்று கற்பனை செய்து பார்க்கலாம்.

அன்றிலிருந்து ஜைது அடிமைத்தளையிலிருந்து பகிரங்கமாக விடுதலை செய்யப்பட்டார். அதுமட்டுமல்ல, பெருமானாரின் அறிவிப்பின் பேரில் முஹம்மதின் மகன் ஜைது (ஜைத் இப்னு முஹம்மத்) என்றே அவர் அழைக்கப்பட்டார். அறியப்பட்டார்.

அடிமைகளைக்கூட தன் பிள்ளைகளாகப் பார்த்துக்கொண்ட ஆளுமை இறுதித்தூதருடையது. இப்படிப்பட்ட ஒரு மனிதர் எடுத்துரைத்த மார்க்கம் எப்படிப் பரவியிருக்கும்? யோசித்துப்பார்க்க வேண்டும்.

PKM-05.5பொறுமையும் சகிப்புத்தன்மையும்

அபூ லஹப். இவர் பெருமானாரின் நெருங்கிய உறவினர். அப்துல் முத்தலிபுக்குப் பிறந்தவர். பெருமானாருக்கு பெரிய தந்தையார் முறை. ஆனால் இஸ்லாத்துக்கும் பெருமானாருக்கும் பிரதான எதிரிகளாக இருந்தவர்களில் இவர் முக்கியமானவர். நெருங்கிய உறவினர்களை இஸ்லாத்துக்கு அழைக்கச் சொல்லி இறைவனின் உத்தரவு வந்தபோது (திருமறை 26:214) ஒரு மலையின் மீது ஏறி பெருமானார் தன் உறவினர்களையெல்லாம் அழைத்து இஸ்லாத்தை முதன் முறையாக எடுத்துரைத்தார்கள். ஆனால் அதற்கு அபூலஹப், “இதற்குத்தான் அழைத்தாயா? நீ நாசமாய்ப் போக” என்று கூறினார். அதுமட்டுமா? பெருமானாரை குதிகாலில் ரத்தம் வருமளவுக்குக் கல்லால் அடித்தவர்களில் அவரும் ஒருவர்.

அவருடைய மனைவியும் அவருக்குச் சளைத்தவரல்ல. முட்களையெல்லாம் ஒன்று சேர்த்துக்கட்டி பெருமானார் வரும் பாதையில் போட்டுவைப்பார்.

இன்னொரு முக்கியமான எதிரி அபூ ஜஹ்ல். அபூஜஹ்லின் உத்தரவின் பேரில் உக்பா என்பவன் பெருமானார் க’அபாவில் தொழுது கொண்டிருந்தபோது அவர்கள் முதுகில் ஒட்டகத்தின் குடல்களைப் போட்டான். எழமுடியாமல் பெருமானார் அப்படியே இருக்க, எதிரிகள் சிரித்துக்கொண்டிருக்க, பெருமனாரின் மகளார் ஃபாத்திமா வந்துதான் அதை எடுத்தார்கள்.

இன்னொரு முறை பெருமானார் தொழுதுகொண்டிருந்தபோது இதே உக்பா பெருமானாரின் கழுத்தில் துணியைப் போட்டு இறுக்கினான். அபூபக்கர் அவர்கள் வந்துதான் உக்பாவைத் தள்ளிவிட்டுவிட்டு பெருமானாரைக் காப்பாற்றினார்கள்.

இன்னொரு முறை அதே உக்பா பெருமானாரோடு வம்புச்சண்டைக்கு வந்து அசிங்கமாகப் பேசி அவர்கள் சட்டையைக் கிழித்தான். முகத்தில் காறி உமிழ்ந்தான். (ஆனால் எச்சில் பெருமானார் முகத்தில் படவில்லை. பெருமானாரின் கண்ணியத்தைக் காக்கும் பொறுப்பை இறைவன் எடுத்துக்கொண்டான்).

இப்படிப்பட்ட கொடுமைகள் தனக்கு நடந்தபோதெல்லாம் பெருமானார் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. திட்டியவனை திருப்பித் திட்டவில்லை. அடித்தவனைத் திருப்பி அடிக்கவில்லை. பொறுமையை மட்டுமே கடைப்பிடித்தார்கள்.

ஒரு முறை பெருமானார் அமர்ந்திருந்தபோது, ஒரு சடலம் அவ்வழியாகக் கொண்டு செல்லப்பட்டது. உடனே மரியாதைக்காக அவர்கள் எழுந்து நின்றார்கள். “அது ஒரு யூதருடைய உடல்” என்று தோழர்கள் சொன்னார்கள். நீங்கள் எழுந்திருக்க வேண்டியதில்லை, நாம் எழுந்துநின்று மரியாதை கொடுக்கும் அளவுக்கான இறப்பு அல்ல இது என்று அதற்கு அர்த்தம். ஆனால் பெருமானார் என்ன பதில் சொன்னார்கள் தெரியுமா? “அதற்குள் இருந்த உயிரும் இறைவன் கொடுத்ததுதானே!” என்று சொன்னார்கள்!

மரணத்திற்கு அப்பாலும் ஒட்டிக் கொள்ளுகிற சாதி அவலத்தை உயிரோடு இருக்கிறபோதே துடைத்தெறிந்து விடுகிற ஒரே சமயம் இஸ்லாம்தான்.” என்று வலம்புரிஜான் எழுதியதன் அர்த்தம் இப்போது புரிந்திருக்கும் (இஸ்லாம்:மண்ணுக்கேற்ற மார்க்கம், பக்கங்கள் 143 – 146).

PKM-05.6மன்னிப்பு

மன்னிக்கின்ற மிக உயர்வான குணம் இவ்வுலகில் வாழ்ந்த எல்லாப் பெரியவர்களிடமும் இருந்துள்ளது. ஆனால் இறுதித்தூதரிடம் அது வெளிப்பட்ட விதத்தைவிட சிறப்பாக வேறு யாரிடமும் வெளிப்படவில்லை.

இஸ்லாத்தை எடுத்துரைத்ததற்காக தாயிஃப் நகர மக்கள் பெருமானாரைக் கற்களால் அடித்துக் காயப்படுத்தி, ரத்தம் சொட்டச்சொட்ட விரட்டினார்கள். கேலி செய்தார்கள். தாயிஃப் நகரத்தில் செல்வமும் செல்வாக்கும் கொண்ட ஒரு குடும்பத்தின் மூன்று சகோதரர்கள் பெருமானாரை அவமதித்துப் பேசினார்கள்.

“இறைவன் உம்மை நபியாக அனுப்பியிருந்தால் அது க’அபாவுக்கே அவமானமாகும்” என்றான் ஒருவன்.

“நபியாக அனுப்புவதற்கு இறைவனுக்கு உம்மைத்தவிர வேறு யாரும் கிடைக்கவில்லையா?” என்று கேட்டான் இன்னொருவன்.

“நீர் ஒரு நபியாக இருக்கும் பட்சம் உம்மோடு பேசும் தகுதி எனக்கில்லை. நீர் நபியாக இல்லாத பட்சம் என்னோடு பேசும் தகுதி உமக்கில்லை” என்று கிண்டலடித்தான் மூன்றாமவன்.

அந்நகரத்தில் இருந்த காலிகளையும் குழந்தைகளையும் தூண்டிவிட்டு பெருமானாரை அடித்து விரட்டச் செய்தவர்களும் அவர்கள்தான். ஓடிக்களைத்து ஓரிடத்தில் பெருமானார் உட்கார்ந்தால் உடனே காலிகள் அங்குவந்து பெருமானாரை உட்கார விடாமல் தூக்கி நிறுத்துவார்கள். வேதனைகளை சகித்துக்கொண்டு மீண்டும் நடந்தால் கல்லடியும் வசவுகளும் தொடரும்.

இப்படியெல்லாம் செய்தபோதுகூட, அம்மக்களுக்கு எதிராக பெருமானார் எதுவும் சொல்லவில்லை. இறைவனிடம் எந்த ஒரு முறையீடும் செய்யவில்லை. ஆனால் தன்னைத் துன்புறுத்தியவர்களுடைய சந்ததியினர் தன்னுடைய செய்தியை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்கள். அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை என்பதை வரலாறு காட்டுகிறது.

தன்னைத் துன்புறுத்தியவர்களுக்காக, “இறைவா, இவர்களுக்கு நேர்வழிகாட்டுவாயாக! தாங்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமல் இவர்கள் செய்கிறார்கள்” என்று பிரார்த்தனை செய்தார்கள். இது சிலுவையில் அறையப்பட்டபோது  இயேசு செய்த பிரார்த்தனையை நினைவுபடுத்துவதாக உள்ளது. ஆனால் உன்னிப்பாகப் பார்த்தால் இரண்டுக்கும் இடையில் ஒரு நுட்பமான வித்தியாசம் உள்ளது.

“தந்தையே, இவர்களை மன்னித்துவிடும், தாங்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமல் இவர்கள் செய்கிறார்கள்” என்று இயேசு பிரார்த்தித்தார் என்று பைபிள் கூறுகிறது (ல்யூக் 23:24).

மன்னிப்பு என்பது கடந்த காலத்தோடு சம்பந்தப்பட்டது. எதிர்காலத்துக்கும் அதற்கும் தொடர்பில்லை. தனக்கிழைக்கப்பட்ட பாவத்தை இறைவன் மன்னிக்கவேண்டும் என்று இயேசு பிரார்த்திக்கிறார். ஆனால் பெருமானார் அம்மக்களுக்கு நேர்வழி காட்டுவாயாக என்று இறைவனிடம் கேட்கிறார்கள். அது எதிர்காலத்தை எண்ணிச்செய்த பிரார்த்தனை. ஏனெனில் அம்மக்களை பெருமானாரே மன்னித்துவிட்டார்கள். கடந்த காலத்தில் செய்த பாவங்களை மன்னிக்காவிட்டால் எதிர்காலத்தில் நேர்வழி பெறுவது எப்படி சாத்தியமாகும்!

கல்லால் எறிந்தொருகால் காயமுறக் கண்டகொடு

பொல்லாப் புலையருக்கும் புத்திவரக் கையேந்தி

அல்லாத் திருச்சமுகம் ஆனதுஆக் கேட்டுவந்த

நல்லாருமைப்போலும் நானிலத்திலுண்டேயோ?

என்று சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர் ”நாயக மாண்மிய மஞ்சரி”யில் பாடியதுதான் எவ்வளவு பொருத்தமானது!

எதிரிக்காகப் பிரார்த்தனை

மதினாவில் இருந்த அப்துல்லாஹ் இப்னு உபை என்பவர் பெயரளவில் மட்டும் முஸ்லிமாகவும் உள்ளுக்குள் நயவஞ்சகராகவும் இஸ்லாத்துக்கு எதிரான வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டும் இருந்தார். ஆனால் மரணப்படுக்கையில் இருந்த அவரின் வேண்டுகோளுக்கு இணங்க பெருமானார் தங்களது போர்வையை அவரது உடலின் மீது போர்த்துவதற்காக அனுப்பி வைத்தார்கள்! அதுமட்டுமல்ல. அவருக்கான ஜனாஸா தொழுகை எனப்படும் இறந்தவருக்கான பிரார்த்தனையையும் அவர்களே முன்னின்று நடத்தப் புறப்பட்டார்கள்!

ஆனால், “யா ரஸூலல்லாஹ், அந்த நயவஞ்சகனுக்காகவே தொழுகை நடத்தப்போகிறீர்கள்?” என்று உமர் கேட்டார். ஆம் என்று பெருமானார் சொன்னார்கள். ஆனால் உமர் விடவில்லை.

“இப்படிப்பட்ட நயவஞ்சகனின் பாவங்களை இறைவன் மன்னிக்கமாட்டான் என்று தெரிந்துமா போகிறீர்கள்?” என்று ஒரு ’டெக்னிக’லான கேள்வியைக் கேட்டார்! ஆனால் பெருமானார் என்ன சொன்னார்கள் தெரியுமா?

“யாருக்காகவும் மன்னிப்புக்கோரி பிரார்த்தனை செய்யும் உரிமை எனக்குண்டு. அதை ஏற்பதோ, மறுப்பதோ இறைவனின் விருப்பமாகும்” என்று பதில் கூறினார்கள்! அதுமட்டுமல்ல. அப்துல்லாஹ் இப்னு உபைக்காக பிரார்த்தனையும் புரிந்தார்கள்.

பகைவருக்கும் உணவு

மக்காவுக்குத் தன் நாட்டிலிருந்து சென்றுகொண்டிருந்த உணவுப் பொருள்களை நிறுத்திவிட்டார் யமாமா நாட்டின் தலைவர் துமாமா. ஏன்? மக்காவாசிகள் பெருமானாருக்கும் இஸ்லாத்துக்கும் எதிரிகளாக இருந்ததுதான் காரணம். “பெருமானாரை எதிர்ப்பதை நீங்கள் நிறுத்தாவிட்டால் என் நாட்டிலிருந்து உங்களுக்கு ஒரு குண்டுமணி கோதுமைகூடக் கிடைக்காது” என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.

உணவுப்பொருள்கள் கிடைக்காமல் வாடிய மக்கா வாசிகள் பெருமானாருக்கு இதுபற்றி தூது அனுப்பினார்கள். விஷயம் தெரிந்துகொண்ட பெருமானார் உடனே துமாமாவுக்கு எழுதினார்கள். ”எதிரியாக இருந்தாலும் அவரை நாம் பட்டினி போடக்கூடாது. உணவை மறுக்கக்கூடாது. கட்டாயப்படுத்தி யாரையும் நான் இஸ்லாத்தின் பக்கம் அழைக்கமாட்டேன். மக்காவுக்கான உணவுப்பொருள்களை நிறுத்த வேண்டாம்” என்று செய்தி அனுப்பினார்கள். மீண்டும் உணவுப்பொருள்கள் யமாமாவிலிருந்து மக்காவுக்குச் செல்லத் துவங்கின!

முரட்டுக் கைக்கு மரியாதை

ஒருநாள் பெருமானார் பள்ளிவாசலில் இருந்தபோது ஒரு காட்டரபி அவர்களைப் பார்க்க வந்தார். பெருமானாரைச் சந்தித்த அவர் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு விடைபெறும்போது பெருமானாரின் கைகளைப் பிடித்துக் குலுக்கினார். அல்லது கையோடு கை கொஞ்ச நேரம் வைத்துக்கொண்டிருந்தார். அப்போது அவருடைய கை மிகவும் கடினமாகவும் சொரசொரப்பாகவும் இருப்பதை பெருமானார் உணர்ந்தார்கள். ஏன் உங்கள் கை இப்படி இருக்கிறது என்று கேட்டார்கள். அதற்கவர், “பெருமானார் அவர்களே, எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து நான் உடல் உழைப்பால், என் கைகளால் கஷ்டப்பட்டே வாழ்ந்து வருகிறேன். உடலாலும் கைகளாலும் கஷ்டப்பட்டு உழைப்பதைத்தவிர எனக்கு வேறு ஒன்றும் தெரியாது” என்று கூறினார். அது கேட்ட பெருமானார் அவருடைய கைகளை எடுத்து தன் கண்களில் வைத்து ஒற்றிக் கொண்டார்கள்.

அதைப்பார்த்த தோழர்களுக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அந்தக் காட்டரபி சென்றவுடன் ஏன் அப்படிச் செய்தீர்கள், அவர் கையில் அப்படி என்ன சிறப்பு இருந்தது என்று தோழர்கள் வினவினார்கள். அதற்கு பெருமானார், “உழைத்து உழைத்து உரமேறிய புனிதக் கரங்கள் அவை. அதனால்தான் அப்படிச் செய்தேன்” என்று கூறினார்கள்!

இறைவனின் இறுதித்தூதர் செல்வத்துக்கோ, செல்வாக்குக்கோ, அதிகாரத்துக்கோ, அகங்காரத்துக்கோ மரியாதை தரவில்லை. உழைப்புக்கு மரியாதை செய்தார்கள். அதனால்தான் இன்னொரு சமயத்தில் சபையில் வந்து அச்சத்தோடு அமர்ந்திருந்த ஒரு ஏழையை அவர்களே சென்று அணைத்து சபைக்கு அழைத்து வந்து ஆறுதல் சொன்னார்கள். ’நானும் ஏழைதான், காய்ந்த ரொட்டியையும் பேரீச்சம் பழங்களையும் தின்று வாழ்ந்த ஒரு ஏழைத்தாயின் மகன் நான்’ என்றெல்லாம் சொல்லி அவரை ஆதரித்தார்கள். இன்னொரு சமயம், பள்ளிவாசலுக்கு வந்து தொழுது கொண்டே இருந்த ஒரு நபரைவிட காட்டுக்குப் போய் விறகுவெட்டி சம்பாதித்து அதில் தன் குடும்பத்தையும், தொழும் அந்த சகோதரரையும் காப்பாற்றும் இன்னொரு சகோதரரே சிறந்தவர் என்றும், குடும்பத்தின் ஜீவனத்திற்காக நியாயமான வழியில் சம்பாதிப்பதும் வணக்கம் (இபாதத்)தான் என்றும் கூறினார்கள்!

சூரியனா காரணம்?

ஒருமுறை அரேபியாவில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. சூரியன் மறைந்து இருள் பரவ ஆரம்பித்தது. அரபிகளின் மத்தியில் அச்சம் பரவ ஆரம்பித்தது. மூட நம்பிக்கைகளில் மூழ்கிப் போயிருந்த அவர்கள் இந்த இருளுக்கும் நிச்சயமாக ஒரு மகானின் மறைவுதான் காரணமாக இருக்கும் என்றே கருதினார்கள்.

அந்த நேரத்தில் எரிகிற தீயில் எண்ணெய் வார்ப்பது மாதிரி ஒருவர் சொன்னார். “உங்களுக்குத் தெரியாதா? முஹம்மதுவின் மகன் இப்ராஹீம் இறந்துவிட்டார். அதனால்தான் சூரிய கிரகணம் ஏற்பட்டுவிட்டது”. அது பெருமானாருக்கு ஒரு அருமையான வாய்ப்பு. அவர்கள் அமைதியாக இருந்திருந்தால்கூடப்போதும். மக்களின் மூட நம்பிக்கையைப் பயன்படுத்தி தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் சொன்னார்கள்:

“சூரியனும் சந்திரனும் இறைவனது படைப்புகள். அவனது உத்தரவின்படி அவை எழுகின்றன, சுற்றுகின்றன, மறைகின்றன. எந்த மனிதனின் பிறப்புக்காகவோ, இறப்புக்காகவோ அவைகளில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. எனவே இப்படிப்பட்ட நிகழ்வுகளை நீங்கள் கண்டால் இறைவனைத் துதியுங்கள். அவனையே வணங்குங்கள்”!

தானாகவே உருவாகியிருந்த ஒரு வாய்ப்பை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் குணம் பெருமானாரிடம் இல்லை. அவர்கள் எப்போதும் உண்மையின் பக்கமே நின்றார்கள் என்பதற்கு இந்நிகழ்ச்சி நல்ல எடுத்துக்காட்டு.

எதிரி கொடுத்த சான்றிதழ்

 ஒருவருடைய குணாம்சம் எப்படிப்பட்டது என்பது பற்றி அவருடைய எதிரிகளிடம் கேட்டால்தான் உண்மை தெரியும். ஆனால் அதில் ஒரு அபாயம் உண்டு. பிடிக்காத ஒருவரைப்பற்றி எதிர்மறையாகத்தான் எதிரிகள் கூறுவார்கள். அதிலிருந்து ஒருவருடைய பலவீனங்களை நாம் தெரிந்துகொள்ள வாய்ப்புண்டு. ஆனாம் நம் எதிரிகள் நம்மைப் புகழ்ந்து பேசுவதற்கு வாய்ப்புண்டா? உண்டு என்று சொல்கிறது பெருமானாரின் வரலாறு.

வரலாற்றில் ’ஜார்’ என்ற சொல் ரஷ்ய மன்னர்களைக் குறிக்கும். ’ஃபிர்அவ்ன்’ என்ற சொல் எகிப்திய மன்னர்களைக் குறிக்கும். அதேபோல ’சீசர்’ என்பது ரோமாபுரிச் சக்கரவர்த்தியையும், ’கெய்சர்’ அல்லது ’கிஸ்ரா’ என்பது பாரசீகப்பேரரசர்களையும் குறிக்கும்.

ரோமசாம்ராஜ்ஜியத்தின் கிழக்குப் பகுதிகளின் ஆட்சியாளராக ஹெராக்லியஸ் என்பவர் இருந்தார். பல சீசர்களுக்கும் கெய்சர்களுக்கும் கிஸ்ராக்களுக்கும் இறுதித்தூதர் பல கடிதங்களை எழுதியிருக்கிறார்கள். அதில் ஒரு கடிதம் பற்றியதுதான் இந்த நிகழ்ச்சி.

வெற்றிகரமான ஒரு ராணுவப் புரட்சியின் மூலம் ஹெராக்லியஸ் கான்ஸ்டாண்டி நோப்பிலின் ஆட்சியதிகாரத்து வந்திருந்தார். பாரசீகர்களை வெற்றிகொண்டு வெற்றிவிழாக்கொண்டாட டமாஸ்கஸ் நகருக்கு வந்திருந்தார். அப்போது அவரிடம் பெருமானாரின் கடிதம் தூதுவர் மூலம் கொடுக்கப்பட்டது. இஸ்லாத்துக்கு வரும்படி அவருக்கு அதில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கடிதத்தைப் படித்து முடித்தவுடன் அதைக் கீழே வைத்தார் சீசர். பின் தன் சபையை நோக்கி, ‘அரேபிய வர்த்தகர்கள் யாராவது வந்திருந்தால் அழைத்து வாருங்கள்’ என்று உத்தரவு பிறப்பித்தார். பெருமானாரின் முக்கிய விரோதியாகவும் மக்காவின் குறைஷித் தலைவர்களில் ஒருவராகவும் இருந்த அபூசுஃப்யான் தலைமையில் ஒரு வணிகக்குழு வந்திருந்தது. எனவே தலைவரான அபூசுஃப்யான் ஹெராக்லியஸின் சபைக்கு அழைத்துவரப்பட்டார். அங்கே, பாதிரிமார்களும், கிறிஸ்தவ அறிஞர்கள் பலரும் இருந்தனர்.

“தம்மை ஒரு இறைத்தூதர் என்று சொல்லிக்கொள்ளும் மனிதரின் உறவினர்கள் யாராவத் இங்கே இருக்கிறீர்களா?” என்று கேட்டார் சீசர்.

“நான் இருக்கிறேன்” என்று அபூ சுஃப்யான் முன்னால் வந்தார். ஹெராக்லியஸ் அவரிடம் கேட்ட கேள்விகளும் அவற்றுக்கு அபூ சுஃப்யான் சொன்ன பதில்களும் இதோ:

”முஹம்மது நபியின் குடும்பம் எப்படிப்பட்டது?

“எங்கள் நாட்டில் உள்ள மிகவும் கண்ணியம் வாய்ந்த குடும்பங்களில் அவரது குடும்பமும் ஒன்று”.

”இதற்கு முன்னால் உங்கள் இனத்தில் யாராவது தான் ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லிக்கொண்டதுண்டா?”

“இல்லை, அப்படி எவரும் சொன்னது கிடையாது”.

”முஹம்மதின் முன்னோர்களில் யாராவது அரசராக இருந்ததுண்டா?”

“இல்லை, எவரும் இருந்ததில்லை”.

“அவர் தன்னை தீர்க்கதரிசி என்று சொல்லிக்கொள்வதற்கு முன்னர், எப்போதாவது பொய் சொல்லியிருக்கிறாரா?”

“இல்லை, அவர் எப்போதுமே பொய் சொன்னதில்லை”.

“அவரைப் பின்பற்றுகிறவர்கள் எப்படிப்பட்டவர்கள்? ஏழைகளா, செல்வந்தர்களா?”

“பெரும்பாலும் ஏழைகள்தான்”.

“அவரைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறதா அல்லது பெருகிவருகிறதா?”

“பெருகிக்கொண்டுதான் போகிறது”.

“அவரைப் பின்பற்றியவர்களில் எவரும் அவரை வெறுத்துத் திரும்பியதுண்டா? ஏற்றுக்கொண்ட கொள்கையிலிருந்து விலகியதுண்டா?”

“இல்லை”.

“உங்களுக்கு அவருக்கும் இடையில் போர் நடந்ததுண்டா?”

“ஆம், நடந்ததுண்டு”.

“அவற்றின் முடிவென்ன?”

“சில சமயங்களில் அவர் வெற்றிபெற்றார். சில சமயங்களில் நாங்கள் வெற்றி பெற்றோம்”.

“அவர் எப்பொழுதாவது வாக்குத் தவறியதுண்டா?”

“இல்லை, அவர் வாக்குத்தவறியதே இல்லை. இப்போது எங்களுக்கும் அவருக்கும் ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதில் அவர் எவ்விதம் நடந்துகொள்ளப்போகிறார் என்பதை இனிமேல்தான் பார்க்கவேண்டும்.”

“முஹம்மது என்ன மாதிரியான கொள்கைகளை எடுத்துரைக்கிறார்?”

“சிலைகளை வணங்கக் கூடாதென்றும், ஒரே இறைவனையே வணங்க வேண்டுமென்றும் கூறுகிறார். உண்மை சொல்லவேண்டுமென்றும், கெட்டசெயல்கள், விபச்சாரம் ஆகியவற்றில் இருந்து விலகி இருக்கவேண்டும் என்றும் சொல்கிறார். அட்டூழியங்கள் செய்யவேண்டாமென்றும், ஜகாத் எனும் ஏழைவரி கொடுக்க வேண்டும் என்றும் கட்டளை இடுகிறார்.”

இஸ்லாத்தின் பரம எதிரியாக இருந்த அபூசுஃப்யான் இப்படியாக பதில் சொன்னார். ஏனெனில் குறைஷிக் குலத்தில் இருந்த உயர்ந்தவர்கள் பொய் சொல்வதை இழுக்காக எண்ணினர். அதன் பிறகு மொழிபெயர்ப்பாளர் மூலமாக பதில்களைத் தெரிந்துகொண்ட ஹெராக்லியஸ் சொன்னார்:

“இறுதித்தீர்க்கதரிசி ஒருவர் வர இருக்கிறார் என்பது எனக்கும் தெரியும். ஆனால் அவர் அரேபியாவில் பிறப்பார் என்று நான் நினைக்கவே இல்லை. நீங்கள் இப்போது சொன்னதெல்லாம் உண்மையாக இருந்தால், என் காலுக்குக் கீழே உள்ள நிலத்தை அவர் வெற்றிகொள்வார். மாபெரும் மாறுதலொன்று உலகில் இந்த மனிதரால் ஏற்படும். அவரோடு இருந்து அவர் கால்களைக் கழுவும் வாய்ப்பு இல்லையே என்று வருத்தப்படுகிறேன்.”

ஹெராக்லியஸ் சொன்ன பதிலைவிட தன் எதிரியான பெருமானாரைப் பற்றி அபூசுஃப்யான்  சொன்னதுதான் முக்கியம். ’என் நாட்டு மக்கள் என்னைப் பொய்யன் என்று தூற்றுவார்கள் என்ற பயம் மட்டும் இல்லாதிருந்தால், நான் முஹம்மதைப் பற்றிய உண்மைகளை சக்கரவர்த்தியிடம் சொல்லியிருக்க மாட்டேன்’ என்று அபூசுஃப்யான் பிறகு வருத்தப்பட்டார்.

ஆனால் காரணம் எதுவாக இருந்தாலும் எதிரியாக இருந்த அபூசுஃப்யான் பெருமானார் பற்றிச் சொன்ன செய்திகள் அனைத்தும் உண்மையானவை. ஒரு மனிதனைப்பற்றிய நற்சான்றிதழை ஒரு எதிரியே கொடுக்கிறார் என்பது வரலாற்றுப் புதுமையல்லவா? பெருமானார் எப்படிப்பட்ட மனிதர் என்பதை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டது அவரது பதில். இப்படிப்பட்ட மனிதர் எடுத்துரைத்த மார்க்கம் ஏன் உலகளாவப் பரவாது?

எது அன்பு? எது பின்பற்றுதல்?

ஒருமுறை பெருமானார் தொழுகைக்காக தண்ணீரால் முறைப்படி தன்னை சுத்தப்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் ’வளூ’ச்செய்தபோது தோழர்கள் அருகில் நின்று அவர்கள் உடம்பிலிருந்து சிந்திய மீதித்தண்ணீரை தங்கள் கைகளால் ஏந்திக்கொண்டு அதைத் தங்கள் முகத்திலும் உடம்பிலும் தடவிக்கொள்ள ஆரம்பித்தனர். வளூவை முடித்த பெருமானார் அவர்களை நோக்கி, “நான் வளூச் செய்த தண்ணீரை எதற்காக உங்கள் முகத்திலும் உடம்பிலும் தடவிக்கொண்டீர்கள்?” என்று கேட்டார்கள்.

“இறைத்தூதரே, நாங்கள் உங்கள்மீது கொண்டுள்ள அன்பையும் மதிப்பையும் வேறு எப்படி வெளிப்படுத்துவது?” என்று தோழர்கள் சொன்னதற்கு இறுதித்தூதர் என்ன பதில் சொன்னார்கள் தெரியுமா?

“தோழர்களே, அன்பைக் காட்டும் வழி இதுவல்ல. நீங்கள் மனப்பூர்வமாக என்னை நேசிப்பதானால், நான் சொல்வதைக் கேட்டு என்னைப் பின்பற்றுங்கள். நான் எதைச் செய்கிறேனோ அதை நீங்களும் செய்யுங்கள். நான் எதைத் தவிர்த்துக்கொள்கிறேனோ அதை நீங்களும் தவிர்த்துக்கொள்ளுங்கள். என் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு அதன்படி நடந்துகாட்டுங்கள். அதைவிட்டுவிட்டு, என்னை வானளாவப் புகழ்ந்துவிட்டு, என்னை முன்மாதிரியாகக் கொண்டு நடக்காத யாரும் என்னைப் பின்பற்றுபவர் ஆகமாட்டார்”!

தஹன்னுஃப் என்னும் தனிமையும் ஹீரா மனநிலையும்

எல்லா ஞானிகளும் தங்கள் வாழ்வின் ஒரு பகுதியை தனிமையை நாடிச்சென்று தனிமையில் கழித்திருக்கிறார்கள். ஏனெனில் உண்மையானது சந்தையில் விற்கப்படும் சரக்கல்ல. அது தனிமையில் இருக்கும்போதுதான் உணரப்படுகிறது. தனியாகத்தான் வந்தோம், தனியாகத்தான் திரும்பிச் செல்வோம், எல்லாத் துணைகளும் இடைப்பட்ட வாழ்க்கையில் வந்துபோகும் துணைகள்தான் என்ற உண்மையை உணர்த்த அவை பயன்பட்டன. தன்னை அறிதலும், இறைவனை அறிதலும் கும்பலிலும் கூட்டத்திலும் நடக்கின்ற காரியங்களல்ல. ”தன்னை அறிந்தவன், தன் நாயனை அறிந்தவனாவான்” என்பது நபிமொழி. தன்னை அறியும் முயற்சியில் இறைவன் பெருமானாரை வழிநடத்தினான்.

இன்னும் சொல்லப்போனால், அரேபியர்களின் பழக்கமாகவும் அது இருந்தது. ஆச்சரியம். ஆனால் உண்மை. காட்டுமிராண்டித்தனமாக பெரும்பாலோர் இருந்தபோதும், சிந்திக்கத்தெரிந்த சிலர் ஆண்டுக்கு ஒரு முறை குறிப்பிட்ட காலத்தை மலைப்பொதும்புகளில், தனிமையிலும், தியானத்திலும் கழிக்கும் வழக்கத்தைக்  கொண்டிருந்தனர். தியானம் என்றால் இறைச்சிந்தனை, பிரார்த்தனை இன்னபிற.

அந்த அரேபிய வழக்கம் பெருமானாருக்கு மிகவும் உகந்ததாக இருந்தது. ஏனெனில் அவர்களுடைய மனம் கேள்விகளால் நிரம்பிக்கிடந்தது. யூத ரப்பிகளும், கிறிஸ்தவ பாதிரிமார்களும் உண்மையைச் சொன்னதாகத் தெரியவில்லை. அரேபியர்களின் சிலைவணக்கமும் இறைவனை அடையாளம் காட்டவில்லை. அவர்களால் வணங்கப்பட்ட கற்சிலைகள், லாத், மனாத், உஸ்ஸா, ஹுபல் இன்னபிறவால் அவர்களுக்கு ஒரு நன்மையையோ, ஒரு தீமையையோ செய்யமுடியாது என்பதைப் பெருமானார் புரிந்துகொண்டார்கள்.

இந்த வாழ்க்கையின் அர்த்தம்தான் என்ன? எப்படிப் பிறக்கிறோம்? இறந்த பிறகு எங்கே செல்கிறோம்? மாற்றமுடியாத விதிகளின் அடிப்படையில் இந்த பிரபஞ்சைத்தை இயக்குவது எது? உண்மை எங்கிருக்கிறது? அந்த வானத்துக்கு மேலேயா? பூமிக்குக் கீழேயா? எல்லாவற்றின் அடிநாதமாக விளங்கும் அந்த மகாசக்தியை எப்படித் தெரிந்துகொள்வது? உண்மையான இறைவன் யார்? – இப்படிப்பட்ட கேள்விகள் அவர்கள் உள்ளத்தை வாட்டின. அவற்றுக்கு பதில் தேடித்தான் அவர்கள் தனிமையை நாடினார்கள்.

அவ்வப்போது ஒரு ஊழியர் வந்து ஹீராவில் பெருமானாரைச் சந்தித்து உணவு கொடுத்துவிட்டுப் போவாராம். அது ஆணா, பெண்ணா என்ற விபரமில்லை. அப்போது பெருமானாருக்கும் கதீஜாவுக்கும் திருமணமாகியிருந்தது. அப்படியொரு தனிமையில் செல்ல கணவருக்கு அனுமதி கொடுத்ததோடு மட்டுமின்றி, உணவும் கொடுத்தனுப்பினார் கதீஜா என்றால் தம்பதியருக்குள் நிலவிய புரிந்துகொள்ளல் எப்படிப்பட்டது என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். அவ்வாறு தனிமையில் காலம் கழிப்பதை ’தஹன்னுஸ்’ என்றும் ‘தஹன்னுஃப்’ என்றும் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

ரமாலான் மாதம் முழுவதும் ஹீரா என்ற குகையின் பொதும்பில் தனிமையில், உண்மையான இறைவனைப்பற்றிய சிந்தனையில், தஹன்னுஃபில் கழிப்பதை பெருமானார் பெரிதும் விரும்பினார்கள். இறைவனின் செய்தியானது பலர்கூடும் சந்தையில்  கிடைக்கக்கூடியதல்ல. முதலில் அதைப்பெறக்கூடிய பக்குவத்தை ஒருவர் பெறவேண்டும். அதன்பிறகு சந்தையின் இருக்கும்போதும் அவருக்கு இறைவனின் செய்தியும் தொடர்பும் கிடைக்கும் சாத்தியமுண்டு. அது வேறு விஷயம். பெருமானார் ஹீராக்குகையின் தனிமையை நாடியதன் காரணம் இறைவன் அவர்களைத் தயார் செய்ய விரும்பியதன் விளைவு என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

தனிமை, இறைச் சிந்தனை, தன்னை அறிதல், தன்னை அலசிப்பார்த்தல், இறைவனை அறிவதற்குத் தடையாக இருப்பவற்றைத் தெளிவாக உணர்ந்துகொள்ளுதல், அவற்றிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ளுதல் போன்ற காரியங்களுக்காக ஹீராக்குகையின் தனிமை பெருமானாருக்குப் பயன்பட்டது. தன்னை சுத்தப்படுத்திக்கொள்ளுதல் என்றும் அதைச் சொல்லலாம். ’தஸ்கியதுன் நஃப்ஸ்’, ’தத்தஹீருல் கல்ப்’ என்றும் அவை சொல்லப்படுகின்றன.

பெருமானாரின் இந்த ஹீரா வாழ்க்கை ஒரு தகவலாக மட்டுமே இதுவரை அறியப்பட்டுள்ளது. அதன் ஆழங்களையும் முக்கியத்துவத்தையும் பற்றி நாம் இதுவரை கவலைப்படவில்லை. இஸ்லாத்தில் இது இல்லை, இஸ்லாத்தில் அது இல்லை, இது ஷிர்க், இது பித்’அத் என்று கூப்பாடு போடுவதற்குப் பயன்படுத்தும் நேரத்தை, நபிகளாரின் ஹீரா வாழ்க்கை பற்றி சிந்திக்க நாம் பயன்படுத்தலாம். ஏனெனில் இறைவனின் இறுதித்தூதராக தன்னைத் தயார்படுத்திக்கொள்ளவேண்டிய அவசியம் பெருமானாருக்கு இருந்தது.

அவர்களைத் தயார் படுத்தும் வேலையை அல்லாஹ்வே செய்தான். அது ரொம்ப இயல்பானதாக, அரேபியர்களின் பழக்கவழக்கங்களை ஒட்டியதாக இருக்குமாறும் அவன் பார்த்துக்கொண்டான். ஏனெனில் தஹன்னுஃபில் ஈடுபட்ட அரேபியர் அனைவருக்கும் ’நுபுவ்வத்’ கொடுக்கப்பவில்லை. இறைவனைப் பற்றிய உண்மையும்கூட அவர்களுக்குத் தெளிவானதா என்ற தகவல் இல்லை. ஆனால் பெருமானாரின் இதயத்திலிருந்த இறைத்தாகம், உண்மையை அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஏக்கம் மற்றவர்களிடம் இருந்திருக்கவில்லை. அந்த ஏக்கத்தின் பரிசாக இறுதித்தூதுத்துவம் அவர்களுக்குக் கிடைத்தது. அந்த முன் மாதிரியை எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் நமக்கிருக்கிறது.  கொஞ்ச காலத்தையாவது தனிமையிலும் இறைச்சிந்தனையிலும் கழிக்கவேண்டியது அவசியம் என்பது பெருமானாரின் வாழ்விலிருந்து கிடைக்கும் நமக்கான செய்தியாகும். (ரமலானில் பள்ளிவாசலில் ’இ’திகாஃப்’ இருப்பது இதில் சேராது. ஏனெனில் அது கும்பலாகச் சேர்ந்து செய்வது. அதன் நன்மைகள் வேறு).

இஸ்லாம் உலகளாவப் பரவியது, பரவிக்கொண்டே இருக்கிறது என்றால் சொன்னவரிடம் உண்மை இருக்கவேண்டும். உலக விஷயங்களைப் பேசும்போது உண்மையாக இருத்தல் என்ற தன்மை பெருமானாரிடம் ஆரம்பத்தில் இருந்தே இருந்தது. அல் அமீன் (நம்பிக்கைக்குரியவர், உண்மையாளர்) என்று அப்போதே அவர்கள் அறியப்பட்டார்கள். அதோடு, ஆன்மிக உண்மையையும் அறிந்துகொண்டவர்களாக இருக்கவேண்டுமல்லவா? தன்னைப் பற்றிய, இறைவனைப் பற்றிய உண்மையைத்தான் நான் ஆன்மிக உண்மை என்று குறிப்பிடுகிறேன். அப்படி அறிந்துகொள்வதற்கு ஹீரா வாழ்க்கை அவர்களுக்கு உதவியிருக்கிறது. அல்லாஹ் என்ற பேருண்மைதான் புடம் போட்ட தங்கமாக அவர்களை மாற்றியது. அதனால்தான் அவர்கள் எடுத்துரைத்த இஸ்லாம் உலகளாகவப் பரந்து விரிந்துகொண்டே போகிறது. இதை நாம் புரிந்துகொள்ளவேண்டியது முக்கியம்.

இறைவனிடமிருந்து செய்தியைப் பெற்றுக்கொள்கின்ற மனநிலையை, சூழ்நிலையை ஹீரா பெருமானாருக்கு வழங்கியது. அந்த சூழ்நிலையையும், மனநிலையையும் நாம் ’ஹீரா’ என்றே குறிப்பிடலாம். அந்த மனநிலை ஸ்திரப்பட்டபிறகு பெருமானார் சந்தையில் இருந்தாலும், சஹாபாக்களோடு இருந்தாலும், பள்ளிவாசலில் படுத்திருந்தாலும், பத்ருப்போரில் வாளெடுத்திருந்தாலும், ஒட்டகத்தின் மேலிருந்தாலும், மரத்தின்கீழிருந்தாலும், வியாபாரத்தில் இருந்தாலும், வீட்டில் இருந்தாலும், பசியோடிருந்தாலும், பகைவரோடிருந்தாலும், மனைவியோடிருந்தாலும், மற்றவரோடிருந்தாலும் – எந்த சூழ்நிலையிலும் ஹீரா அவர்களோடு சென்றுகொண்டே இருந்தது!

எந்த நிலையிலும், எந்த கணமும் இறைவனை மறக்காத அந்த மனம்தான் இஸ்லாத்தை எடுத்துரைத்தது. அதனால்தான் உலக முடிவுநாள் வரையிலும் படு வேகமாகப் பரவிக்கொண்டே இருக்கும் தன்மை பெற்றது இஸ்லாம். இதை நாம் புரிந்துகொள்வது முக்கியம். இன்றைக்கு விடுக்கப்படுகின்ற இஸ்லாமிய அழைப்புக்கும் பெருமானார் எடுத்துரைத்த இஸ்லாமிய அழைப்புக்கும் இடையில் பாரதூரமான வித்தியாசமுள்ளது. நம்முடைய அழைப்பு நம்முடைய நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது. அல்லாஹ்வை அனுபவித்து உணர்ந்துகொண்ட பிறகு நாம் அழைக்கவில்லை. நாம் நம்புவதை மற்றவர்களும் நம்பினால் நன்மை பயக்கும் என்று நம்பி அழைப்புவிடுக்கிறோம். ஆனால் பெருமானார் வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் இஸ்லாத்தை எடுத்துரைக்கவில்லை. அல்லாஹ்வை அறிந்துகொண்டவர்களாக, அவனிடமிருந்து நேரடியாக செய்திகளைப் பெற்றுக்கொண்டவர்களாக, கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் அவனிடமிருந்தே பதிலைப் பெறுபவர்களாக, மிஃராஜில் மட்டுமின்றி எக்கணமும் அல்லாஹ்வை அறிந்தவர்களாக, தன் அனுபவத்தின் அடிப்படையில் அழைப்பு விடுத்தார்கள். அவர்களுடைய சொல்லுக்கும் அனுபவ அறிவு இல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் அழைப்பு விடுப்பவரின் சொல்லுக்கும் இடையில் எத்தகையை வித்தியாசம் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். அந்த அனுபவத்தை அவர்களுக்கு முதலில் கொடுத்தது ஹீரா.

இஸ்லாம் மெல்ல மெல்ல அரேபியாவுக்குள்ளும் அதற்கு வெளியிலும் பரவியதன் காரணம் முழுக்க முழுக்க பெருமானாரின் குணாம்சங்கள்தான். அவற்றைப்பற்றித்தான் இதுவரை பார்த்தோம். ஆனால் கொஞ்சம்தான். முழுமையாக இங்கே சொல்வது சாத்தியமில்லை. அரேபியர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள், அவர்கள் உள்ளங்களில் பெருமானார் எப்படிப்பட்ட மாறுதலை தன் நடவடிக்கைகள் மூலம் ஏற்படுத்தினார்கள் என்றும் கொஞ்சம் பார்த்தோம். அழுகி துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்த ஒரு சமுதாயத்தையே மாற்றி அதன் நறுமணம் உலகம் முழுவதிலும் வீசச்செய்த சாதனை பெருமானாருடையது.  இஸ்லாம் உலகளாவப் பரவிய வரலாற்றைப் பார்ப்பதற்கு முன் இந்த பின்னணியைத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம் என்பதால் இவ்வளவும் சொன்னேன்.

இனி அரேபியாவுக்குள் பெருமானார் காலத்தில் இஸ்லாம் எப்படிப் பரவியது என்று பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ்.

===========

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

One Response to புறாக்கள் கட்டிய மாளிகை 05 – அவர் எப்படிப்பட்டவர்?

  1. najimudeen says:

    நன்றி நானா நல்ல தகவல் தெரியாத சில விபரங்களூம் தெரிந்துக்கொண்டேன் என்பதில் மகிழ்ச்சி…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s