இறந்துபோதல் – முடிவா தொடக்கமா?

இறந்து போவதைப் பற்றி தினமணி டாட்காமில் இன்று வெளியான என் கட்டுரை  இது. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறினால் எனக்கு நிச்சயம் பயனுண்டு. GOD

ஒருமுறைகூட இறந்துபோகாத ஒருவன் இறந்து போதலைப் பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதுவது வினோதமானதுதான். என்ன செய்வது, இந்த விஷயத்தில் முன் அனுபவம் இருக்கிறதென்று சொன்னால் அது பேய்க்கட்டுரையாகிவிடலாம்! கொஞ்சகாலமாகவே இறப்பைப்பற்றி நான் சிந்தித்துக்கொண்டுதான் இருக்கிறேன். (தற்கொலை பற்றியல்ல). அதுபற்றிய பலருடைய கருத்துக்களையும் ஊன்றிப் படித்துக்கொண்டும் இருக்கிறேன்.

இறப்பு என்ற ஒன்று எல்லோருக்குமானது. பிறப்பைப்போல.  ஆனால் பிறப்பைப் போலல்லாமல் இறப்பு நிச்சயமானது. ஏனெனில் ஒருவர் பிறக்காமலேகூட போகலாம். ஆனால் பிறந்த பிறகு இறக்காமல் இருக்கமுடியாது. இறப்பைப்போல கவர்ச்சியானது ஒன்றுமில்லை என்றார் ஃப்ரெஞ்சு தத்துவவாதி சார்த். இறப்பைப் பற்றி ஞானிகள் என்ன சொன்னார்கள், வேத நூல்கள் என்ன சொல்கின்றன என்றெல்லாம் நான் கவனமாக ஆராய்ந்துவருகிறேன். இறந்துவிடுவேனோ என்ற அச்சத்தின் அடிப்படையில் அல்ல. ஒரு ஆர்வத்தின் அ டிப்படையில் என்று சொல்லலாம். ஏன் இப்படி ஆனது என்ற கேள்விக்கு சத்தியமாக எனக்கு பதில் தெரியாது. உறவினர்கள், நண்பர்கள் இறந்துவிடும்போது  போய்ப்பார்த்திருக்கிறேன். சிலருடைய இறுதிக்கணங்களில் சாட்சியாக இருந்திருக்கிறேன். இறந்துகொண்டிருக்கும் ஒரு மனிதனுடைய எண்ணத்தின் சக்தி என்னவென்று எனக்குத் தெரியும். இரண்டு உதாரணங்களைச் சொல்கிறேன்.

Vaapchiஒன்று வாப்ச்சி என்றழைப்பட்ட என் தந்தைவழித் தாத்தாவின் மரணம். அவர் இறந்துகொண்டிருந்தபோது என்னைக் கூட்டிவரச் சொல்லியிருக்கிறார். எனக்கப்போது நான்கு வயதிருக்கலாம். விளையாடிக்கொண்டிருந்த நான் விருப்பமில்லாமல்தான் போனேன்.

நான் போய்க்கொஞ்ச நேரம்தான் இருந்தேன். அவர் உயிர் உடலைவிட்டுப் பிரிந்துகொண்டிருந்தபோது அவர் இரு கைகளையும் ஏந்தி இறைவனிடம் எனக்காகப் பிரார்த்தனை செய்தார். என்ன பிரார்த்தனை? எனக்கு கல்வியறிவு கிடைக்கவேண்டுமென்று! நான் படிப்பிலும், ஆங்கில இலக்கியத்திலும், தமிழிலக்கியத்திலும் மாணவனாக, பேராசிரியராக, எழுத்தாளனாக மிளிர்ந்ததற்கும் மிளிர்வதற்கும் காரணம் எனது அறிவல்ல. அது அவரது பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான அறிகுறி. நான் இருக்கும்வரை அது இருக்கும். ஏனெனில் அது எனக்கு வாப்ச்சியால் வழங்கப்பட்ட அருட்கொடை. ரொம்பப் பணிவாகவெல்லாம் நான் இதைச் சொல்லிக்கொள்ளவில்லை. இதுதான் நிஜம். இதில் நான் மிகத்தெளிவாக இருக்கிறேன்.

SINNAPPAஇரண்டாவது என் சின்னாப்பாவின் இறப்பு. அவர் சீரியஸாக இருந்தபோது நாங்களெல்லாம் சிங்கப்பூரில் இருந்தோம். செய்தி கேள்விப்பட்டு அவரை சென்னை பில்ரோத் மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில் தங்கை போகவேண்டும், ஒருவாரம் கழித்து தம்பி ஒருவர், அடுத்த வாரம் இன்னொரு தம்பி, பின்பு நானும் என் மனைவியும் என்று முடிவு செய்தோம். இந்தோனேஷியாவில் இருந்த தங்கையும் சிங்கப்பூர் வந்தாள். திடீரென்று நாங்கள் அனைவருமே ஒரே நாளில் உடனே கிளம்பி சென்னை செல்லவேண்டுமென்று முடிவெடுத்தோம். அது ஏனென்று அப்போது விளங்கவில்லை. ஆனால் அதிசயமான முறையில் அன்றே அனைவருக்கும் விமான டிக்கட்டுகளும் கிடைத்தன.

சென்னை வந்து பில்ரோத்தில் சின்னாப்பாவின் அருகிலிருந்தோம். அடுத்தநாள் அவர் காலமானார். நாங்கள் பேசியதெல்லாம் அவருக்கு விளங்கியது. தலையை ஆட்டினார். இரண்டுமுறை உடலில் லேசாக ஒரு ’ஜெர்க்’ வந்தது. அதன்பின் அவர் உயிர் அவர் உடலில் இல்லை.

அப்போதுதான் எனக்குத் தெளிவாகப் புரிந்தது. எங்களையெல்லாம் பார்க்கவேண்டுமென்ற அவரது இறுதிஆசைதான் ஒரேநாளில் கிளம்பவேண்டும் என்ற முடிவை எங்களுக்குக் கொடுத்து, டிக்கட்டும் வாங்கிக் கொடுத்திருந்தது!

ramanaஇறப்பு பற்றி யோசிக்காத ஞானிகளே கிடையாது. மகரிஷி ரமணருடைய முதல் ஆன்மிக அனுபவமே இறப்புதான். இறந்துபோனால் என்னாகும் என்று பரிசோதித்துப்பார்க்க சின்னப்பையனாக இருந்த அவர் இறந்துபோனதுபோல் மூச்சடக்கி, அசைவுகளற்று படுத்துக்கிடந்ததில் தொடங்குகிறது.

 

Yaseen Maulanaசீர்காழிக்கு அருகிலுள்ள திருமுல்லைவாசல் என்ற ஊரில் அடங்கியுள்ள மகான் யாசீன் மௌலானா அவர்கள் ஒருநாள் மாலை 5.30க்கு இந்த உலகை விட்டுப் பிரிந்தார். யார்யாருக்கு சொல்லியனுப்புவது என்பதற்காக சீடர்கள் அவருடைய நாட்குறிப்பை எடுத்துப் பார்த்தபோது அதில் அவருடையை கையால் “இன்று மாலை 5.30 மணிக்கு” என்று எழுதியிருந்தது!

 

 

Paramahamsaஎப்போது எனக்கு சாப்பாட்டில் உள்ள ஆர்வம் குறைந்துபோகிறதோ அன்றிலிருந்து மூன்றாவது நாள் நான் போய்விடுவேன் என்று பரமஹம்சர் தன் மனைவியிடம் கூறினார். அதைப்போலவே நடந்தது!

12ம் நூற்றாண்டில் வாந்த ஞானி இமாம் கஸ்ஸாலி இறந்துபோனபின்பு அவருடைய தலையணைக்குக் கீழே “இந்தப் பறவை கூட்டை விட்டுப் பறந்துபோகப் போகிறது” என்ற கவிதையொன்று இருந்தது!

ஒருவரை ஒரு நாட்டுக்கு கவர்னராக நியமித்து அவரை வழியனுப்பிய நபிகள் நாயகமவர்கள், அவர் எப்படியெல்லாம் நியாயமாக ஆட்சி செய்யவேண்டும் என்று அறிவுரைகள் சொல்லிவிட்டு, ’நான் சொன்னபடியே நடந்துகொள்ளுங்கள், ஏனெனில் நீங்கள் அடுத்த ஆண்டு இங்கே வரும்போது நானிருக்கமாட்டேன்’ என்று கூறினார்கள்! இந்த உலகைவிட்டுப் பிரியப்போகிறோம் என்று ஒரு ஆண்டுக்கு முன்பே அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது!

Oshoசரியாக வாழாவிட்டால் சரியாகச் சாகமுடியாது என்கிறார் ஓஷோ! நம்முடைய இறுதிக்கணம் ஒழுங்காக இருக்கவேண்டுமென்றால் நாம் வாழும் விதத்தை ஒழுங்குபடுத்தவேண்டிய அவசியத்தை அவர் அழகாகச் சொல்கிறார்.

Bacon”பிரச்சனை இறப்பல்ல. அது பற்றிய அச்சம்தான்” என்றார் பேகன். இறப்பு என்றதும் மனிதனுக்கு அச்சம் ஏன் வருகிறது? எல்லாம் அதோடு முடிந்துவிடுகிறதே என்ற அச்சம்தான். மறுபிறப்பு உண்டென்று நம்புபவர்களுக்கும் இந்த அச்சம் போவதில்லை. “எல்லோருமே சொர்க்கத்துப் போக விரும்புகிறார்கள். ஆனாலும் யாருமே சாக விரும்புவதில்லை” என்றொரு  பிரபலமான வாசகம் உள்ளது. அப்படியானால் இந்த அச்சத்தைப் போக்கும் வழி உண்டா?

உண்டு. ஏனெனில் இறப்பு என்பது முடிவல்ல. அது ஒரு தொடக்கம் என்கின்றன வேத நூல்கள். அதுதான் உண்மை என்று அடித்துக்கூறுகின்றனர் ஞானிகள். ”ஒவ்வொரு ஆன்மாவும் இறப்பைச் சுவைக்கவேண்டும்” என்று திருக்குரானின் வசனமொன்று கூறுகிறது (3:185). நமது சிந்தனைக்கு விருந்தாக உள்ள வசனமிது. ஒன்றை நாம் சுவைக்கவேண்டுமென்றால் சுவைப்பதற்கு நாம் உயிரோடும் ஆரோக்கியமான நாக்கோடும் இருக்கவேண்டுமல்லவா? ஒவ்வொரு ஆன்மாவும் இறப்பைச் சுவைக்குமென்றால் இறப்புக்குப் பின்னரும் அது இருக்கும் என்றுதானே அர்த்தம்?       நான் எப்படி என் குருநாதர்களையும் சகோதரர்களையும் கொல்வேன் என்று அர்ஜுனன் தயங்கும்போது ”நா ஜாயதே, ம்ருத்யதே” (ஆன்மா பிறப்பும் இறப்புமற்றது) என்று ஆன்மாவின் அழிவற்ற தன்மை பற்றி அவனுக்கு உபதேசிக்கிறார் கிருஷ்ணர் (பகவத்கீதை 2:20).

அப்படியானால் முடிவைப்போலத் தோன்றுகிற நித்தியத்தின் தொடக்கம் என்று இறப்பைக் கொள்ளலாம். ”இறப்பு வருமுன் இறந்துவிடுங்கள்” என்கிறது ஒரு நபிமொழி! இறப்பு வருமுன் இறந்துவிடுவதா? நபிமொழி முதலில்ல் புரியவில்லை. இன்னொரு நபிமொழியைப் படிக்கும்வரை. ”மனிதர்கள் உறங்குகிறார்கள். மரணம் வரும்போது விழித்துக்கொள்வார்கள்” என்கிறது அந்த இன்னொரு நபிமொழி! இப்போது புரிந்துவிட்டது. வாழும்போதே உணர்ச்சிகளைக் கடந்த நிலைக்கு, விழிப்புணர்வு பெற்ற நிலைக்குச் சென்றுவிடுங்கள் என்கிறது அந்த நபிமொழி! விழிப்புணர்வு பெற்றவனே சரியான மனிதன் என்கிறது சிவசூத்திரம். எல்லா மார்க்கங்களும் ஒரே உண்மையைத்தான் வேறுவேறு வார்த்தைகளில் சொல்கின்றன.

தமிழில் ஒரு வழக்கு உண்டு. ஒருவர் இறந்துவிட்டார் என்பதை பல வகையில் சொல்லலாம். செத்துவிட்டார், உயிர் போய்விட்டது, உயிர் நீத்தார், இறந்துவிட்டார், மரணமடந்தார் – என்றெல்லாம் சொல்லலாம். ஆனால் ’காலமானார்’ என்று சொல்வதும் உண்டு.

ஆஹா, எவ்வளவு அற்புதமான சொல்! இந்த உலகத்தில் உள்ள எந்த மொழியிலும் இந்த அற்புதம் நிகழவில்லை. ‘காலமானார்’ என்ற சொல்லால் ஏற்பட்ட உந்துதலில் நான் இதுபற்றி ஒரு கவிதைகூட எழுதியிருக்கிறேன்.

அடிக்கடி மணி கேட்டுக்கொண்டிருந்தவர்

நேற்று காலமானார்

நின்றுபோன வாட்ச்சைப்போல

என்று!

நேரம் என்பது காலத்தின்மீது வைக்கப்பட்ட ஒரு புள்ளி. அது மனிதனால் அவனது வசதிக்காக வைக்கப்பட்டது. அது உண்மையல்ல. இங்கே ஐந்து மணி என்றால் அது ஒரு வசதிக்கான ஏற்பாடு. அது உண்மையாக இருந்தால் உலகெங்கிலும் ஐந்து மணியாகவல்லவா இருக்கவேண்டும்?! ஆனால் இங்கே பகலாக இருந்தால் அமெரிக்காவில் இரவாக இருக்கலாம். இதுபற்றி மலையாளத்தில் சச்சிதானந்தனின் அழகான கவிதை இது:

என் வீட்டில் ஐந்து அறைகள்

ஒவ்வொரு அறையிலும் ஒரு கடிகாரம்

ஒவ்வொன்றும் வெவ்வேறு நாட்டில் தயாரித்தவை

ஒவ்வொன்றிலும் அவ்விடங்களின் நேரம்

முதலாவது அறையில் முல்லை மொட்டுக்கள் மலரும்போது

இரண்டாவதில் மதிய சூரியன் ஜொலிக்கிறது

மூன்றாவதில் அந்தி மந்தாரைகள் விழிக்கின்றன

நான்காவதில் கிளிகள் உறங்கச் செல்கின்றன

ஐந்தாவதில் நடு நிசியின் காரிருள்…

கடைசி அறையில் பனி உறைந்து கிடக்கிறது

எனக்கு எப்போதும் நேரம் தவறிவிடுகிறது (‘கடிகாரங்கள்’)

நேரம் இடம் ஆகியவற்றுக்குள் அடைபட்டுக்கிடந்த ஒரு மனிதன் இறப்பின்போது நேரம் இடம் இரண்டையும் கடந்து காலமாகவே ஆகிவிடுகிறார் என்று தமிழ் மட்டுமே கூறுகிறது. தமிழர்களின் ஞானத்துக்குச் சான்று இந்தச் சொல். இறப்பென்பது நேரம், இடம் ஆகியவற்றைக் கடந்து செல்லுதல் என்ற உண்மையை நாம் இதிலிருந்து புரிந்துகொள்ளலாம். ’டைம்’, ’ஸ்பேஸ்’ இரண்டுமே ’ரிலேடிவ்’-ஆனவை என்று ஐன்ஸ்டீன் கூறியதன் உட்பொருளும் இதுவாகத்தான் இருக்கவேண்டும்.

இறந்துபோனார் என்பதை இஸ்லாமிய வழக்கில் ’தாருல் பனாவை விட்டு தாருல் பகாவை அடைந்தார்’ என்று சொல்வார்கள். ’அழியக்கூடிய வீட்டை விட்டு அழியாத வீட்டுக்குச் சென்றுவிட்டார்’ என்று அதற்குப் பொருள்.

இறப்பென்பது ஒரு விடுதலை, அழிவிலிருந்து அழிவின்மையை நோக்கிய பயணம் என்பதால்தானோ என்னவோ தமிழ்க்கலாச்சாரம் அதனை ’வீடுபேறு’ என்று கொண்டாடுகிறது. இறப்பைக் கொண்டாடவேண்டும் என்று ஓஷோ சொன்னதையும் இங்கே பொருத்திப்பார்க்கலாம்.

உண்மையைத் தெரிந்துகொள்ள மனிதனுக்கு இருக்கின்ற ஒரே வழி உடலை விட்டுப் பிரிந்துபோவதுதான். ஆமாம். உயிர் உடலை  விட்டுப் பிரிகின்ற அந்தக் கணத்தில் ஒவ்வொரு மனிதனுக்கு ஞானம் கிடைக்கிறது என்கிறார் ஓஷோ. ஆனால் கடைசிக் கணத்தில் கிடைக்கும் அந்த ஞானத்தால் பயனில்லை என்றும் கூறுகிறார். உடலோடு உயிர் வாழும் காலத்திலேயே அதை உணர்ந்துகொண்டவர்களைத்தான் நாம் ஞானிகள் என்கிறோம். அதனால்தானோ என்னவோ வாழும்போதே உண்மையைத் தெரிந்துகொண்டுவிடுங்கள் எனும் அர்த்தத்தில் ‘இறப்பு வருமும் இறந்துவிடுங்கள்’ என்று நபிகள் நாயகம் கூறினார்கள் போலும்!

ஒருமுறைகூட இறந்துபோகாதவன் என்றுதானே என்னைப்பற்றிச் சொன்னேன் ஆரம்பத்தில்? அதில் ஒரு சின்ன மாற்றம். ஒரேயொரு முறை நான் இறந்துபோயிருக்கிறேன்! ஆமாம். இரண்டாண்டுகளுக்கு முன்பு எனக்கு ’ஹார்ட் அட்டாக்’ வந்தது. உடனே கவனிக்காவிட்டால் மூன்று நாளைக்குள் இறந்துவிடுவேன் என்று டாக்டர் தீர்க்கதரிசனம் சொல்லி, அவசர ஊசியொன்று போட்டு, கிளினிக்கை விட்டு வெளியில் வந்து காருக்குள் ஏறுவதற்குள் கீழேபோட்ட கர்சீஃப் மாதிரி மயங்கி விழுந்தேன். ஒருசில வினாடிகள்தான். ஆனால் மயங்கி விழுந்தது எனக்குத் தெரியாது. அப்போது எனக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாகவும், இறைவன் எனக்கு மறுஉயிர் கொடுத்திருப்பதாகவும் பின்னர் டாக்டர் சொன்னார்! ஆனால் என் உடலும், மூளையும், மனமும் முற்றிலுமாக செயலிழந்திருந்த அந்த கணங்களிலும் நான் உயிரோடுதான் இருந்தேன். ஏதேதோ தோன்றிக்கொண்டுதான் இருந்தது. நான் அவற்றை அனுபவித்துக்கொண்டிருந்தேன். பிரக்ஞை வந்ததும் என்னாச்சு என்று கேட்டேன். ஒன்றுமில்லை என்று என் மகள் சொன்னாள். எல்லோருக்கும் அப்போதுதான் உயிர் வந்ததாம்! எனவே உயிர் என்பது உடலை மட்டும்தான் விட்டுப் போகிறது, அது அழிந்துவிடவில்லை என்பதை என் அனுபவத்தில் நான் உணர்ந்திருக்கிறேன். அது சொற்ப கணங்களுக்கே என்றாலும்.

எப்படி யோசித்தாலும் இறந்துபோனவர்களை  நினைத்தால் எனக்குக் கொஞ்சம் பொறாமையாகத்தான் உள்ளது.

======

 

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

6 Responses to இறந்துபோதல் – முடிவா தொடக்கமா?

 1. fakhrudeenh says:

  Class. மரணம் என்பது இறப்பவரைப் பொருத்தளவில் உயிரிழப்பன்று, உடலிழப்பு தான்.

 2. abulhasan says:

  ithuvoru periya subject easyaaga purinthukolvathu kadinam, innum konjam briefa sonnal innum sariyaga/ nantraga purinthu kollalaamo entru thontrukirathu……fantastic.

 3. அற்புதம்

 4. Magesh.S says:

  As usual with amazing simplicity you have shared the glimpse of the deeper wisdom. Thank you sir

 5. Sankar says:

  “Awareness on death” is written well with clear examples and supporting documents. Great work.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s