சவுண்ட் சிட்டியும் சைலண்ட் கோட்டும்: அங்கதத்தின் உச்சம்

Umar Bookஉமர் ஃபாரூக்கை எனக்கு கொஞ்ச காலமாகத்தெரியும். நடுநிலை தவறாத ஹீலராக. அக்யுபஞ்சர் கல்லூரியின் முதல்வராக. ஆரோக்கியம் தொடர்பான பல நூல்களை எழுதிய எழுத்தாளராக. நான் முழுமையாக நம்பி ஆலோசனை கேட்கும் ஒருவராக. சுத்தமாகத் தமிழ் பேசும் முஸ்லிமாக. ஆனால் இந்த நாவல் அவரது இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தி என்னை மிகுந்த ஆச்சரியத்துள் ஆழ்த்தியது.

எல்லா மகா இலக்கியங்களிலும் உள்ள ஒற்றுமை அங்கதமும் நகைச்சுவையும். Animal Farm என்ற ஜார்ஜ் ஆர்வெலின் நாவல் ரஷ்யப் புரட்சி பற்றிய மிகக்கடுமையான விமர்சனமாகும். ஆனால் சிறுவர்களுக்கான நூல் போல மிருகங்களை வைத்து, பன்றிகளும் குதிரைகளும் பேசிக்கொள்வதாக, மனிதர்களை எதிர்த்துப் போராடுவதாக கதை! ஸ்டாலின் போன்ற சர்வாதிகாரிகளெல்லாம் நாவலில் பன்றிகள்! படிக்கப் படிக்க சிரித்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு எளிமை. அவ்வளவு அழகு. அவ்வளவு ஆழம். அவ்வளவு அங்கதம். அவ்வளவு நகைச்சுவை. உமரின் இந்த நாவலைப் படித்தவுடனே எனக்கு ஆர்வலின் நாவல்தான் ஞாபகம் வந்தது.

அப்படியானால் உமரின் நாவலும் ஆர்வலுடையதைப் போல உலகத்தரம் வாய்ந்ததா? இருக்கலாம். ஏன் இருக்கக்கூடாது? படித்துவிட்டு நீங்கள்தான் சொல்லவேண்டும். நான் சில ’சாம்பிள்’கள் மட்டும் தருகிறேன்.

முதலில் இது ஒரு நாவலே அல்ல. ஆனாலும் நாவல்தான்! என்ன குழப்பமாக உள்ளதா? இதை எந்த இலக்கிய வடிவத்துக்குள்ளும் அடக்கலாம். ஒரு வசதிக்காக நான் இதை நாவலெனக் குறிப்பிடுகிறேன். சில அத்தியாயங்கள் கவிதையாக உள்ளன. மற்றவை எளிமையான உரைநடையாக உள்ளன. அதுசரி, தமிழ் நாவலுக்கு எதற்கு ஆங்கிலத்திலேயே தலைப்பு? எல்லாக் கேள்விகளுக்குமான பதில்கள் உள்ளே உள்ளன. படித்தால் புரியும்.

சரி, இது எதைப்பற்றிய நாவல்? கற்பனையான ஏமான் என்ற ஒரு தேசத்தைப் பற்றியது. எஜமான் தேசம்தான் பின்னர் சுருங்கி ஏமான் தேசமாகிவிட்டதாக பின்னர் குறிப்புவேறு! சுருக்கமாகச் சொன்னால் இது நம்மைப் பற்றியது. நம் நாட்டை, நம் அரசியலை, நம் கலாச்சாரத்தை, நம் பண்பாட்டை, நம் அறிவை, நம் அறிவின்மையை, நம் சிந்தனையை, நம் சிந்தனை வறட்சியை – இப்படி எல்லாவற்றையும் பற்றியது.

படிக்க ஆரம்பித்துவிட்டால் போதும். நாவல் முடியும் வரை கீழேவைக்கவே முடியாது. Side-splitting in many places. முதலில் நாவலின் வடிவம் பற்றி நாவல் என்ன சொல்கிறதெனப் பார்ப்போம்:

தேர்வு செய்க

விமர்சனக் கலப்பைகளால் பண் / புண்படுத்துபவர்கள் இந்நூலின் இலக்கிய வகைமையை முடிவு செய்துகொள்ளலாம்:

 • பெரிய சிறுகதை
 • சிறிய நாவல்
 • நேர்காணலும் கட்டுரைகளும்
 • கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள்

சரி, இந்த நாவலைப் பிடிக்காவிட்டால் என்ன செய்யலாம்? அதற்கும் நாவலே வழிசொல்கிறது! இதோ இப்படி:

நினைவூட்டல்

இந்த நூலை விலைகொடுத்து வாங்கி வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த நூலின் எந்த ஒரு வரியையும் எந்த ஒரு பக்கத்தையும் அல்லது எல்லா பக்கங்களையும் ஏமான் தேச சுதந்திர சாசனத்தின்படி எரிக்கும் உரிமை உண்டு. இந்த உரிமை ஒருவேளை விற்பனையாளர்களால் மறுக்கப்பட்டால் ஏமான் தேசத்தின் சர்வதேச சர்வாதிகார நீதிமன்றத்தை அணுகியோ, நூலெரிப்புத் துறையின் சிறப்பு அனுமதி பெற்றோ எரித்துக்கொள்ளலாம். எரிப்பது நம் பிறப்புரிமை. நூலின் எந்தப் பக்கமும் ஃபயர் புரூஃப் செய்யப்படவில்லை.

பிறப்புரிமை என்று நாம் எதையெல்லாம் சொல்வோம்? ஆனால் எரிப்பது நம் பிறப்புரிமை என்று நாவல் சொல்கிறது! நமது அடிப்படை உரிமைகள் நம் நாட்டில் படும்பாட்டை இதைவிட சிறப்பாகச் சொல்லமுடியுமா என்ன? “சுலபமாக எரிப்பது எப்படி?” என்று குறிப்பு வேறு!

அடுத்த சில பக்கங்களிலேயே இன்னொரு அடி:

பொறுப்பு துறப்பு எனும் அறிவிப்பு

இந்தக் கதையில் வரும் பாத்திரங்கள் பாத்திரங்கள் அல்ல. இவர்களை யாரும் பன்னாட்டுப் பாத்திரக்கடைகளில் தேடவேண்டாம்…

இந்தக் கதை எழுதுவதற்கும் தயாரிப்பதற்கும், வெளியிடுவதற்கும் எந்த ஒரு இயற்கையான பொருளும் பயன்படுத்தப்படவில்லை என்றும், முழுக்க முழுக்க மரபணு மாற்றம் செய்யப்பட்ட வெளிநாட்டுத் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏமான் தேசத்து ரசாயனப் பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் உறுதியளிக்கிறோம்.

நம்முடைய ஆரோக்கியம் இன்று எவ்வளவு பெரிய கேள்விக்குறியாகியிருக்கிறது என்பதை வெகுசிறப்பான கிண்டலுடன் இந்த பத்தி பேசுகிறது. மேலே சொல்லப்பட்டதுபோல அச்சிடப்பட்ட பொருள்கள் விற்பனைக்கு வரும் காலம் வெகுதூரத்திலில்லை!

இன்னும் சில உதாரணங்கள் கொடுக்கிறேன். அவை எவை பற்றிய கிண்டல் என்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்:

ஏமான் தேசத்தில் கொண்டாடப்படும் எல்லா விஷேஷங்களிலும் மிஸ்டர் ஸேவின் சிலைக்கு மாலை அணிவிப்போம். யார் பிறந்தநாள் என்றாலும் மிஸ்டர் ஸேவின் சிலைக்கு மாலை மரியாதை செய்து விடுவோம்.

முகநூலுக்கு பதிலாக நாவலில் வருவது ரகநூல்! ”ஜி விருதும் ரகநூல் லைக்குகளும்” என்று ஓர் அத்தியாயம்! அதிலிருந்து:

”பல அரசு ஹோட்டல்கள் உணவு சாப்பிட்டுவிட்டு பணம் தருவதற்கு பதிலாக லைக் தந்தால் போதும் என்று அறிவித்தன….பழக்கம் லைக்குகளுக்கு பைக்குகள் தருகிற அளவிற்கு வளர்ந்தது”!

எல்லா நிறுவனங்களையும் அரசுதான் நடத்தவேண்டும் என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அரசாங்கம் என்பதே தனியார்தான் என்பதை…” (ஆஹா, இப்படி எழுதுவதற்குத்தான் எவ்வளவு துணிச்சல் வேண்டும்! ஆனாலும் எவ்வளவு உண்மை!)

ஏமான் தேசத்துப் பொதுமக்களில் பெரும்பாலோருக்கு (பிறரோடு பேசும்) சிறப்பு உரிமை கிடையாது.

’பேஸோஸேபியன்கள்’ என்று ஓர் அத்தியாயம். இதை முகநூல் கலாச்சாரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் Homo Sapiens என்ற சொல்லோடும் இதைப் பொருத்திப் பார்க்கவேண்டும்.

ஏமான் தேசத்தின் எல்லா மக்களும் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் உரிமை பெற்றிருந்ததால் காதுகள் தேவைப்படவில்லை !

தாய்நாட்டுக்காகக் குரல் கொடுத்துப் போராடுபவர்களை ஏமான் தேசம் ‘ஆப்பிரிக்கத் தீவிரவாதி’ என்று குறிப்பிடுகிறது!

ஆரம்பத்தில் ஏமான் தேசத்தின் பெயர் ’கோணக்கழுத்தர்களின் தேசம்’ என்ற பெயரில் இருந்ததாம்! காரணம், குடிமக்கள் அனைவரும் செல்ஃபோனை ஒரு காதில் வைத்து கழுத்தைச் சாய்த்துப் பேசிக்கொண்டே இருந்ததால் அப்பெயர் ஏற்பட்டதாம்!

எவ்வளவு சொத்து இருக்கிறதோ அந்த அளவிற்கு ஆட்காட்டி விரல்களில் போடப்படும் பூட்டுகளும் பெரியதாக இருந்தன. இப்படித்தான் விரலுக்கேத்த வீக்கம் என்ற பழமொழி கோணக்கழுத்தர்களின் தேசத்தில் உருவானது!

’கட்டாயக் குளியல் திட்டம்’ என்று ஒரு அத்தியாயம்! ஒரு அத்தியாயத்துக்கு தலைப்பு வைப்பதில்கூட நிறைய விஷயங்களைச் சொல்லமுடியும் என்பதற்கு இது ஒரு அழகான உதாரணம்!

திரைப்படங்களுக்கு க்ளைமாக்ஸ் இருப்பதுபோல இந்த நாவலுக்கும் ஒரு க்ளைமாக்ஸ் உண்டு. அதுதான் தமிழாசிரியரின் பிரவேசம். இந்நாவலின் தமிழாசிரியர் என்பவர் புரட்சியின், சுதந்திரத்தின், அறிவின் குறியீடாக இருக்கிறார். அவரை ஒரு திரைமறைவில் பேட்டி காண்கின்றனர் பத்திரிக்கையாளர். அதனால் அதற்கு ’மறைகாணல்’ என்று பெயராம்! ஒரு கட்டத்தில் தமிழாசிரியர் கோபத்தில் திரையை விலக்கிக்கொண்டு வந்து கத்தியதால் அதற்குமேல் பேட்டி ‘நேர்காணலா’கிவிட்டதாம்!

’ஏமான் சாஸ்திரம்’ என்று ஓர் அத்தியாயம். அதில் வர்ணாசிரம (அ)தர்மம், அதன் மானிட வரிசையான பிராமணர், சத்திரியர், வைஷ்யர், சூத்திரர் ஆகியோர் இப்படி வர்ணிக்கப்படுகிறார்கள்:

அந்தக் கடவுளானவர் உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய கண், மூக்கு, வாய், காது இவைகளினின்றும் பார்ப்போர், வீசுவார், பேசுவார், கேட்பார் இவர்களை கிரமமாக உண்டு பண்ணினார் !

ஏமான் தேசத்தின் மாதிரித்திட்டம் என்ன தெரியுமா? குசு ஒழிப்புத் திட்டம்! குசு என்பதனை மாற்றி, கொசு, பசு, பிரச்சனை என்று எதை வேண்டுமானாலும் நாம் வைத்துக்கொள்ளமுடியும்! குசு பற்றி இப்படிக் குறிப்பிடப்படுகிறது ஓரிடத்தில்: “தனி மனிதக் குசுதான் உலகக்  குசுவாக மாறுகிறது”!

’முடிவின் ஆரம்பம்’ என்பதுதான் இறுதி அத்தியாயம். அதில் சத்திய சோதனை நூலைக் கண்டுபிடித்து ஒருவர் அதன்அழுக்கைத் துடைக்கும்போது அதில், ‘வருக புதிய தமிழாசிரியரே வணக்கம்’ என்று எழுதப்பட்டிருக்கிறது!

மீண்டும் காந்தியத்தால்தான் நாட்டைக் காப்பாற்ற முடியும், அதை முன்னெடுத்துச் செல்ல தமிழர்களால்தான் முடியும் என்ற குறிப்போடு நாவல் முடிகிறது. இது என் புரிந்துகொள்ளல்தான். ஆசிரியர் உண்மையில் வேறு விதமாக சிந்தித்திருக்கலாம். ஆனால் முடிவைப்பற்றியதல்ல இக்கட்டுரை. முடிவே ‘முடிவில் ஆரம்பம்’ என்றுதானே உள்ளது! இலக்கிய ரசிகர்கள், சமுதாயத்தின்மீது அக்கறைகொண்டவர்கள் என்று அனைவரும் அவசியம் படித்து, ரசித்து ருசித்துக் கொண்டாட வேண்டிய நூல் இது. எதிர் வெளியீடு. 2015ல் நான் படித்த மிகச்சிறந்த நாவல் இதுதான். படித்துப் பாருங்கள். சொல்லுங்கள்.

அன்புடன்

நாகூர் ரூமி

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

2 Responses to சவுண்ட் சிட்டியும் சைலண்ட் கோட்டும்: அங்கதத்தின் உச்சம்

 1. k g baskar says:

  படித்தபின்

  • நாகூர் ரூமி says:

   ஒரு வாக்கியமாவது முழுசாக எழுதக்கூடாதா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s