நலம் நலமறிய ஆவல்-1

 

இன்று முதல் தினமணி டாட்காமில் நலம் நலமறிய ஆவல் என்ற தலைப்பில் நான் எழுதும் ஆரோக்கியம் பற்றிய தொடர் தொடங்கியிருக்கிறது. இனி ஒவ்வொரு திங்களும் வரும். இது முதல் கட்டுரை. படித்துவிட்டு எழுதுங்கள். உங்கள் கருத்துக்கள் எனக்கு ஊக்கம் தரும்.

அன்புடன்

நாகூர் ரூமி

நன்றி தினமணி டாட்காம்.

நண்பர் எடிட்டர் பார்த்தசாரதி, அசோசியேட் எடிட்டர் தோழி உமாசக்தி

01 – எது ஆரோக்கியம்

ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மிகச்சிறந்தவழி ஆரோக்கியம் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதுதான்

– கௌது நாயகம் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி (ரலி)

கடவுளுக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்றால் உங்களை டாக்டரிடம் அனுப்புவார். டாக்டருக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்றால் உங்களைக் கடவுளிடம் அனுப்புவார்!

வாட்ஸப்பில் வந்த இந்த ஜோக்கில் சொல்லப்படாத இன்னொரு உண்மையென்னவெனில், மருத்துவருக்கு உங்களைப் பிடித்திருந்தாலும் அவர் உங்களை கடவுளிடம் அனுப்புவதற்குத்தான் முயற்சி செய்வார்! ஒருவேளை இது அவருக்கேகூட தெரியாமல் நடக்கலாம்!

உடம்புசரியில்லையா, மருத்துவரைப் பாருங்கள்.

அவர் பிழைக்கவேண்டாமா?

அவர் தரும் மருந்துகளை அவசியம் வாங்கிக்கொள்ளுங்கள்,

மருந்துக்கடைக்காரர் பிழைக்க வேண்டாமா?

ஆனால், அந்த மருந்துகளில் எதையும் சாப்பிட்டுவிடாதீர்கள்,

நீங்கள் பிழைக்கவேண்டாமா? !

இது ஒரு நண்பர் அவருடைய பேச்சினூடே சொன்ன ஜோக். வாட்ஸப், சமூக ஊடகங்கள், நண்பர்கள், புத்தகங்கள் என்று பல திசைகளிலிலிருந்தும் அன்றாடம் நம்மை நோக்கி பல ஜோக்குகள் வீசப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

இவற்றைப் படித்தும், கேட்டும் வெறும் ஜோக்குகளாக எடுத்துக்கொண்டு சிரித்துவிட்டுப் போய்விடுவதான் வாழ்க்கை நம்மைப் பார்த்து அடிக்கும் ஜோக்!

ஆமாம். அவைகளெல்லாம் உண்மையில் ஜோக்குகளே அல்ல. நமக்கான எச்சரிக்கைகள். ஆனால் அவைகளை ஜோக்குகள் என்று நினைத்து நாம் சிரித்துவிட்டு உதாசீனப்படுத்துவதுதான் சோகமே.

அலோபதியிலிருந்து மாற்று மருத்துவத்தை நோக்கியும், மாற்று மருத்துவத்திலிருந்து மருந்தில்லா மருத்துவத்தை நோக்கியும் நாம் நகர்ந்துகொண்டிருக்கிறோம். இந்த ஜோக்குகளெல்லாம்  அவற்றைச் சுட்டுவாதாக எடுத்துக்கொள்ளலாம்.

நோயாளியிடம் டாக்டர் சொல்கிறார். ‘ஆபரேஷன் முடிந்துவிட்டது. நீங்கள் நடந்தே உங்கள் வீட்டுக்குப் போகலாம்’.

அதற்கு பதிலாக நோயாளி கேட்கிறார்: ‘ஏன் டாக்டர், ஆட்டோவில் போவதற்குக்கூட காசிருக்காதா?’!

மருத்துவர் சொன்னது ஒரு கோணம். நோயாளி புரிந்துகொண்டது வேறொரு கோணம். இந்த இரண்டாவது கோணம்தான் நம் கவனத்துக்குரியது. மருத்துவச் செலவுகள்! அதை நினைத்தாலே வாழும் ஆர்வம் குறைந்துபோகிறது.

சமீபத்தில் என் இரண்டு மகள்களுக்கு இரண்டு மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறந்தன. முதல் மருத்துவமனை அந்தப் பகுதியில் பிரபலமானது. இரண்டாவது மருத்துவமனை தமிழ்நாட்டிலேயே பிரபலமானது. முதல் மருத்துவமனையில் பிறந்த குழந்தை, பிறந்தபோது இருந்த எடை 1.8 கிலோ. ஆனால் டாக்டரம்மா குழந்தையை சந்தோஷமாக எங்களிடம் கொடுத்துவிட்டார். அக்குழந்தை இப்போது நான்கு கிலோவுக்கு வந்துவிட்டது. இன்னொரு மகளிருந்த இரண்டாவது மருத்துவமனையில் பத்து நாட்களில் கிட்டத்தட்ட முப்பது குழந்தைகள் பிறந்தன. ஒரு குழந்தையைக்கூட நிர்வாகம் தாயிடம் கொடுக்கவில்லை. தாயிடம் காட்டக்கூட இல்லை. ஒரு குழந்தைக்கு 2.8 கிலோதான் எடை இருக்கிறது என்று சொல்லி தனியறையில் வைத்துவிட்டார்கள்! மூன்று கிலோ எடை இருக்கவேண்டுமாம்! 3.5 கிலோ எடையில் பிறந்த என் மகளின் குழந்தையையும் அவளிடம் கொடுக்கவில்லை! ’ஹார்ட் பீட்’ சரியாக வரவில்லையாம்! ஒரு வாரம் கழித்து ஒன்றரை லட்ச ரூபாய் ’பில்’ கட்டிய பிறகுதான் ’ஹார்ட் பீட் நார்ம’லுக்கு வந்தது! அவர்கள் குழந்தையின் இதயத்துடிப்பைப் பற்றிச் சொன்னார்களா அல்லது மருத்துவமனையின் இதயத்துடிப்பைப் பற்றியா என்பது ஆராய்ச்சிக்குரியது!

இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. ரொம்ப காலமாக. இதைத்தான் அந்த ஜோக்கில் அந்த அப்பாவி நோயாளியின் கேள்வி சுட்டுகிறது!

Psychopathology-of-Everyday-Lifeஇந்த ’ஜோக்’குகளெல்லாம் வெறும் ஜோக்குகள் அல்ல. நிஜங்களின் வெவ்வேறு வடிவங்கள். இவை சிரிப்பதற்காக மட்டுமல்ல. சிந்திப்பதற்காகவும். Psychopathology of Everyday Life என்று சிக்மண்ட் ஃப்ராய்டு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அன்றாடம் நம் வாய்வழி வந்துவிழும் ’ஜோக்’குகளின் பின்னால் உள்ள மன அழுத்தங்களை விளக்குகிறது அந்நூல். ‘My way of joking is telling the truth. That is the funniest joke in the world’ என்று பெர்னார்ட்ஷா சொன்னதுதான் எவ்வளவு உண்மை!

சரி, இப்போது கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் மேற்கோளுக்கு வருவோம். 12ம் நூற்றாண்டில் பாக்தாதில் வாழ்ந்த மகான் கௌதுநாயகம் அவர்கள் சொன்னது சரியா? அதெப்படி? ஆரோக்கியம் பற்றிக் கவலையே படாமலிருந்தால் ஆரோக்கியம் கெட்டல்லவா போகும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் கொடுக்கப்பட்ட மேற்கோளில் உள்ள சொற்களை உற்று கவனித்தால் ஒரு உண்மை விளங்கும்.

ஆரோக்கியம் பற்றி அக்கறை கொள்ளாமல் இருக்கவேண்டும் என்று மகான் சொல்லவில்லை. கவலைப்படாமல் இருக்கவேண்டும் என்றே சொல்கிறார்! அக்கறை காட்டுவது வேறு, கவலைப்படுவது வேறு. நீங்கள் சிரித்தால் இந்த உலகம் உங்களோடு சேர்ந்து சிரிக்கும். நீங்கள் அழுதால் உங்கள் கன்னங்கள் ஈரமாகும் என்கிறது ஒரு முதுமொழி! என்ன அர்த்தம்? நீங்கள் கவலைப்பட்டால் அதைப்பகிர்ந்துகொள்ள இந்த உலகில் உண்மையில் எவருமில்லை என்று அர்த்தம். அதுமட்டுமல்ல, கவலைப்பட்டதனால் ஒரு பிரச்சனையை தீர்க்க முடிந்ததாக வரலாறு பூகோளம் எதுவும் கிடையாது! ஆனால் கவலைப்பட்டால் வேறொன்று நடக்கும். அது என்ன?

ஒரு விஷயத்தைப்பற்றி நாம் கவலைப்பட்டால், மேலும் மேலும் கவலைப்பட்டுகொண்டே இருப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகும்! நம்மைச் சுற்றியிருப்பவர்கள், நண்பர்கள், சொந்தக்காரர்கள் என்று நம்மீது ’அன்புகொண்ட’ அனைவரும் நம் கவலையை மேம்படுத்த தங்களால் முடிந்த அளவு கடுமையாக உழைப்பார்கள்! கவலையால் ஏற்படும் ஒரே விளைவு அதுதான் !

குழந்தைக்கு ஜுரம் என்றால் போதும். ’அய்யய்யோ, அப்படியே விட்டுவிடாதீர்கள், என் குழந்தைக்கும் அப்படித்தான் வந்தது. கடைசியில் ஒரு மாதம் படுத்த படுக்கையாகிவிட்டான். டாக்டர் பன்றிக்காய்ச்சல் என்று சொல்லிவிட்டார். அதோடு விட்டுதா? மஞ்சக்காமாலையும் சேர்ந்துகொண்டு பிள்ளையைப் பாடாய் படுத்திவிட்டது. ரொம்ப கவனமாக இருக்கவேண்டும்’ என்று நம்மை அச்சுறுத்தும், அச்சம்கொண்ட, அவதிப்பட்ட உறவுகள், நம்மைச் சுற்றி எப்போதுமே இருப்பதுதான் பிரதான பிரச்சனை! ஒரு பிரச்சனையைப் பற்றிக் கவலைப்படுவதால் அப்பிரச்சனையின் தீவிரம் அதிகரிக்குமே தவிர, குறையாது. ஏன்?

கவலை, குழப்பம், கோபம், பொறாமை, அச்சம், மன இறுக்கம் – இவர்களெல்லாம் கூடப்பிறந்தவர்கள். ஒருவருக்கு உதவியாக இன்னொருவர் உடனே வந்துவிடுவார்கள். பிரச்சனையை அதிகப்படுத்துவதிலும் தீவிரப்படுத்துவதிலும் அவர்களுக்கு இணை துணையே கிடையாது ! அவர்களுக்கிடையில் அவ்வளவு பிரிக்கமுடியாத பாசப்பிணைப்பு உள்ளது!

மகான்கள் யாரும் தம் அறிவுரைகளுக்குக் கோனார் நோட்ஸெல்லாம் கொடுத்துக்கொண்டிருப்பதில்லை. சுருக்கமாக, உத்தரவுகளைப் போல சில உண்மைகளைச் சொல்வார்கள். அவர்களின்மீது நம்பிக்கை வைத்து கேள்வி எதுவும் கேட்காமல் அவற்றை அப்படியே பின்பற்றினால் நன்மை மட்டுமே விளையும்.

உதாரணமாக, ஷிர்டி சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு நிகழ்ச்சி. தனக்குப் பணிவிடைகள் செய்துகொண்டிருந்த பக்தர் ஒருவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. முன்னேற்பாடாக ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து வைத்துக்கொண்டு அவர் தொடர்ந்து பணிவிடைகள் செய்துகொண்டிருக்கிறார். அவ்வப்போது கழிவறைக்கும் சென்றுவருகிறார். அதைப்பார்த்த பாபா அவரை அழைத்து வேர்க்கடலையைக் கொடுத்து சாப்பிடு என்று வற்புறுத்துகிறார்! வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கும்போது வேர்க்கடலை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு அதிகமாகும் அபாயம் உள்ளது என்று நம் அனுபவப் பட்சி சொல்கிறது. ஆனால் பாபா அதைத்தான் கொடுக்கிறார்! பக்தரும் பாபா கொடுக்கக்கொடுக்க வாங்கி சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்! கொஞ்ச நேரத்தில் வயிற்றுப்போக்கு சுத்தமாக நின்று போகிறது!

இதேபோல எனக்கும் ஒரு அனுபவம் உண்டு. எனக்கு வலது கண்ணில் ஒரு பிரச்சனை வந்தது. பார்ப்பதெல்லாம் கலங்கலாக, தண்ணீர்  கலந்தமாதிரி, இரண்டிரண்டாகத் தெரிந்தது. இரண்டு டிவி, இரண்டு மேஜை என. மனைவியைப் பார்த்தபோதும் இரண்டு மனைவிகள் தெரிந்தனர்! ஆனால் ஒருத்தியின் ஜெராக்ஸ் காப்பி மாதிரியே இன்னொருத்தியும் இருந்ததால் என்னால் சந்தோஷப்பட முடியவில்லை! (இந்த நகைச்சுவையின் பின்னால்கூட ஒரு சோகம் இருப்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்)!

கண்ணை பரிசோதித்துப் பார்த்ததில் என் ரெடினா-வில் தண்ணீர் மாதிரி ஏதோ கட்டிக்கொண்டிருப்பதாகவும், லேசர் ஆபரேஷன் செய்துதான் குணப்படுத்த முடியுமென்றும் மருத்துவர்கள் சொன்னார்கள். அதற்கு central serous retinopathy என்று ஞானஸ்நானமும் செய்தார்கள்.

Hazrat-1

Hazrat Mama

ஆனால் நான் ஆபரேஷன் எதுவும் செய்துகொள்ளவில்லை. என் குருநாதர் ஹஸ்ரத் மாமா சொன்னபடி மறக்கின்ற ஞானம் என்ற ’தொழில்நுட்ப’த்தைப் பயன்படுத்தினேன். ஹஸ்ரத் மாமா சொன்னபடி ஒன்றரை மாதங்களுக்கு நன்றாக டிவி பார்த்தேன், படித்தேன், எழுதினேன். அவ்வளவுதான். ஒன்றரை மாதம் கழித்து ஒருநாள் காலை இரண்டு மனைவிகளும் இணைந்து ஒரு மனைவியாகிவிட்டாள்! இன்றுவரை ஒரே மனைவிதான்!

எங்கேபோனது செண்ட்ரல் சீரஸ் ரெடினோபதி? இந்த அற்புதம் எனக்கு உணர்த்திய பாடம் மிகமிக முக்கியமானது. ஒரு நோயைத்தீர்க்க  பலவழிகள் உண்டு. ஆனால் இதுதான், இப்படித்தான், இதைத்தவிர வேறுவழியில்லை என்று சொல்வதெல்லாம் வருமானத்திற்கான வழிகளே தவிர, வேறெதுவுமில்லை .

இதெல்லாம் இருக்கட்டும். ஆரோக்கியம் பற்றிப் பேசுவதற்கு எனக்கு என்ன அருகதை இருக்கிறது? நியாயமான கேள்வி. பதில் சொல்லவேண்டியது என் கடமை. ஆரோக்கியம் பற்றிப் பேசுவதற்கு எனக்கு இரண்டு தகுதிகள் உண்டு. ஒன்று, நான் ரொம்ப ரொம்ப ஆரோக்கியமானவன். இரண்டு, நான் ஒரு நோயாளி (யாகவும் இருந்தவன்)!

ஆம். ஆரோக்கியம் பற்றிப் பேச அதை அனுபவித்து இழந்தவனுக்குத்தானே அதிக உரிமை உள்ளது! ஒன்றை இழந்த பிறகுதானே அதன் அருமை தெரியும்? பாட்டி சுட்ட தோசையின் அருமை கண்றாவி பீட்சாவை வாயில் வைத்த பிறகுதானே தெரியும்?! (நன்றி:காக்காமுட்டை)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     அய்ம்பத்தெட்டு ஆண்டுகளைக் கடந்துவிட்ட இளைஞன் நான். எனக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு, கெட்ட கொழுப்பு இன்னபிற என எதுவும் கிடையாது. இவ்வளவுக்கும் ரொம்ப காலமாக நான் ’ஸ்ட்ரிக்ட் நான்-வெஜிடேரிய’னாக இருந்தவன்! இன்னும் சொல்லப்போனால் நான் ஒரு மட்டன் காதலன்!

சரி, இதெல்லாம் என் கடந்தகாலம். மூன்றாண்டுகளுக்கு முன்பு எனக்கு உடம்பு சரியில்லாமல் போனது. ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை. இதயத்தின் ஒரு வால்வில் கொஞ்சம் கெட்ட கொழுப்பு போய் அடைத்துக்கொண்டது. ’ஹண்ட்ரட் பெர்சன்ட் ப்ளாக்’. அப்படித்தான் மருத்துவர் சொன்னார்! அது ஏன் வந்தது என்பது பெரிய கதை. அதிருக்கட்டும்.

இப்போது நான் மீண்டும் பழைய ஆரோக்கிய நிலைக்குத் திரும்பிவிட்டேன். அதற்கு முக்கியமான காரணம் எனக்குக் கொடுக்கப்பட்ட அலோபதி மருந்துகளையெல்லாம் நான் குப்பையில் தூக்கி எறிந்துவிட்டு எந்த மருந்து மாத்திரையும் சாப்பிடாமல் இயற்கையாக, இயல்பாக இருப்பதுதான்!

ஆஹா, ஒரு கிறுக்குப்பயல் எழுதப்போகிற கட்டுரைகளைப் படிக்கவேண்டுமா என்று தோன்றுகிறதா? ஒரு நிமிடம் இருங்கள். இப்போது எந்த முடிவுக்கும் வந்துவிடவேண்டாம். நான் கிறுக்கனாகவே இருந்துவிட்டுப் போகிறேன். ஆனால் அந்த கிறுக்குத்தனத்தினால் நான் உயிர்வாழும் காலம் வரை ஆரோக்கியமாக இருக்கமுடியும் என்றால், அந்த கிறுக்குத்தனம் அறிவைவிட முக்கியமானதல்லவா?

போகட்டும், விஷயத்துக்கு வருவோம்.

முதலில் ஆரோக்கியம் என்றால் என்ன என்ற கேள்வியிலிருந்து தொடங்கிக்கொள்ளலாம். ஆரோக்கியம் என்றால் உடலில் எந்தப்  பிரச்சனையுமில்லாமல் இருப்பது என்று நீங்கள் நினைத்தால் அது சரிதான். ஆனால் அதுமட்டுமே சரியல்ல. அது பாலபாடம். த, மி, ழ் என்ற மூன்று எழுத்துக்களும் சேர்ந்ததுதான் தமிழ் என்று சொல்வது மாதிரியானது அது.

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றுக்கும் உடல் பகுதியொன்றும் உயிர்ப்பகுதியொன்றும் உள்ளது. நாம் பொதுவாகவே உடல் பகுதிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஏனெனில் அது மட்டும்தான் நம் ஐம்புலன் அனுபவங்களுக்குள் வருவதாக உள்ளது. ஆனால் அப்பகுதியைக் கட்டுப்படுத்தக்கூடிய,  அப்பகுதியை நல்லவிதமாகவோ, கெட்டவிதமாகவே பாதிக்கக்கூடிய இன்னொரு பகுதி உள்ளது. அது நன்றாக இருந்தால்தான் இது நன்றாக இருக்கும். அது உடல்பகுதியைவிட வெகு நுட்பமானது. அதைக் கண்ணால் பார்க்கவோ, காதால் கேட்கவோ, நாக்கால் சுவைக்கவோ, தொட்டு உணரவோ, மூக்கால் நுகரவோ முடியாது. அதுதான் கண்ணுக்குத் தெரியாத மனம் என்ற பகுதி.

மனம் சரியாக இருந்தால் உடல் சரியாக இருக்கும். மனம் உடலை பாதிக்கும். உடல் மனதை பாதிக்கும். இன்னும் சொல்லப்போனால் உடலும் மனமும் இரண்டு வேறு வேறு பொருளல்ல என்றே சொல்லலாம். ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது. இதுவாக அதுவும், அதுவாக இதுவும் இருப்பது. ஆனாலும் உடலைவிட நுட்பமானது. உடலை பாதிக்கும் வல்லமை பெற்றது.

Hegdeஉடலில் பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் இருந்தால் ஆரோக்கியமாக இருப்பதாகச் சொல்லிவிடமுடியாது.  ’ஆக்கப்பூர்வமாக இருப்பவர்களே உண்மையில் ஆரோக்கியமானவர்கள்’ என்கிறார் ஹார்வர்டில் கார்டியாலஜிஸ்ட்டாக இருக்கும் டாக்டர் பி.எம்.ஹெக்டே. (இவர் பற்றி வரும் அத்தியாயங்களில் நிறைய பேச இருக்கிறோம்). உடலும் உயிரும் ஒத்திசைவாகச் செயல்படுவதுதான் ஆரோக்கியம் என்கிறார் ஹீலர் உமர்.  உடல் ஊனமுற்றவர்கள், உடலில் பல பிரச்சனைகள் கொண்டவர்கள் பலர் பல சாதனைகளைச் செய்திருக்கிறார்கள்.

Hr Umarஉலகப்புகழ் பெற்ற சிம்ஃபனிகள் கொடுத்த பீதோவன் காதுகேளாதவர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய கண்டுபிடிப்புகளைச் செய்த எடிசனும் காதுகேளாதவர். உலகப் புகழ்பெற்ற ’இழந்த சொர்க்கம்’ (Paradise Lost) என்ற ஆங்கிலக் காப்பியத்தை எழுதிய ஜான் மில்டன் பார்வையற்றவர். இந்தியில் சிச்சோர், ராம் தேரி கங்கா மைலி போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவரும், ஜேசுதாஸை ஹிந்திப்படங்களில் பாடவைத்தவருமான இசையமைப்பாளர், மெலடி கிங் ரவீந்திர ஜெய்ன் பிறவியிலேயே பார்வையற்றவர். ஏன்,  சமீபத்தில் தமிழ்நாட்டிலிருந்து பெனோ ஜெஃபைன் என்ற முற்றிலும் பார்வற்ற பெண் முதன்முதலாக ஐ.எஃப்.எஸ். தேர்வில் வெற்றிபெற்று அதிகாரியாக பொறுப்பு கொடுக்கப்பட்டதை நாடறியும்.

இப்படி நிறைய உதாரணங்கள் நம்மிடையே உண்டு. அவர்களால் செய்ய முடிந்ததில் லட்சத்தில் ஒரு பங்குகூட நம்மால் செய்யமுடியவில்லை. அவர்கள் கொடுத்துவிட்டுச் சென்றதையெல்லாம் நம்மால் அனுபவிக்க மட்டுமே முடிகிறது. இப்போது சொல்லுங்கள், யார் ஆரோக்கியமானவர்கள்? நாமா? அல்லது அவர்களா?

சமுதாயத்தில் நடக்கும் ஒவ்வொரு கொலையும், கொள்ளையும், எல்லா வன்முறைகளும் நோயுற்ற மனதின் வெளிப்பாடுதானே? Disease என்றாலே dis-ease என்றுதான் பொருள். அதாவது நிம்மதி இல்லாமல், அமைதியில்லாமல் இருக்கின்ற மனமே நோயுற்ற  மனமாகும். மனதில் நோயிருந்தால் அது உடலில் கேன்சராக, டிபியாக இன்னும் என்னென்னவெல்லாமோவாகவெல்லாம் வெளிப்படும்.

நான் சொல்வது தத்துவமல்ல. நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மையாகும். அதுபற்றி விரிவாக அடுத்துவரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். ஆரோக்கியமான மனிதர்களால் சமுதாயத்தில் மேலும் மேலும் அமைதியைக்கொண்டுவரமுடியும், அதை மேம்படுத்த முடியும். எனவே நாம் ஆரோக்கியமாக வாழ்வது நமக்கு மட்டுமல்லாமல் நாம் வாழும் சமுதாயத்துக்கும் நன்மை பயப்பதாகும். உங்களுடைய ஆரோக்கியமே உங்களுடைய சமுதாய சேவையாகவும் இருக்கிறது.

ஆரோக்கிய வாழ்வு பற்றிய இத்தொடரைத் தொடங்குவதற்கு முன் நான் கடந்த மூன்றாண்டுகளாக சிலபல ஆராய்ச்சிகளைச் செய்துவிட்டேன் என்று சொல்லலாம். இந்திய அளவிலும், உலகளவிலும் பேரும் புகழும் பெற்ற பல முக்கியமான அலோபதி மருத்துவர்கள், சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள், இயற்கை மருத்துவர்கள், ஹீலர்கள், இந்த விஷயத்தைச் சீரியஸாக எடுத்துக்கொண்டு பின்பற்றும் நண்பர்கள் என்று பலரைச் சந்தித்து, பலருடன் பேசி, பலருடைய பேச்சைக் கேட்டு, பல நூல்களைப் படித்து ஆராய்ந்து இறுதியாக ஆரோக்கியம் பற்றி சில தெளிவுகளுக்கு நான் வந்திருக்கிறேன். அத்தெளிவுகளால் நான் வாழும் முறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடிந்திருக்கிறது. அது எனக்கு மிகுந்த நன்மையைச் செய்திருக்கிறது, செய்துகொண்டே இருக்கிறது.

அந்தத் தெளிவை உங்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்பதே என் ஆசை. நான் சொல்லப்போவது எதையும் நீங்கள் நம்பவேண்டாம். சோதித்துப் பாருங்கள்.

 • சமைத்த உணவைத்தான் சாப்பிடவேண்டும்
 • சமைக்காத உணவைத்தான் சாப்பிடவேண்டும்
 • அலோபதி மருத்துவம்தான் ஆகச்சிறந்தது
 • அலோபதி மருத்துவம் ஆபத்தானது. அது கூடவே கூடாது.
 • ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா, மூலிகை மருத்துவம், இயற்கை மருத்துவம், யூனானி, அக்யுபஞ்ச்சர், ரெய்கி, வர்மா, யோகா – இப்படித்தான் பார்க்கவேண்டும்.
 • இல்லை, இதெல்லாம் கதைக்கு ஆகாது, இவர்களையெல்லாம் பார்க்கவே கூடாது.
 • மருந்து மாத்திரைகள்தான் வழி
 • மருந்து மாத்திரைகள் கூடவே கூடாது.
 • உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைக்குத்தான் போகவெண்டும்.
 • மருத்துவமனைக்குப் போகவே கூடாது.

 

இப்படி எந்த ’எக்ஸ்ட்ரீம்’ முடிவையும் நான் சிபாரிசு செய்யப்போவதில்லை. நான் சொல்லப் போகும் விஷயங்களை, அனுபவங்களை வைத்து நீங்களே உங்களுக்கு உகந்த ஒரு முடிவை எடுக்கலாம். உங்களுக்கு எது நன்மை செய்யும் என்ற திசையை நோக்கி நீங்கள் நகரலாம். ஏனெனில் எனக்கு நன்மையாக இருப்பது உங்களுக்கும் அப்படியே இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. அதேபோல உங்களுக்கு நன்மையாக இருப்பது எனக்கும் நன்மைபயக்கவேண்டிய அவமில்லை. One man’s meat is another man’s poison என்று ஆங்கிலத்தில் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்.

உங்கள் ஆரோக்கிய வாழ்வு பற்றிய ஒரு முடிவுக்கு நீங்களாகவே வருவதற்கு இக்கட்டுரைகள் நிச்சயம் உதவும். வழிகாட்டும் என்றுகூடச் சொல்லுவேன். ஏனெனில் புகழ்பெற்ற, சேவை மனப்பான்மை கொண்ட, அனுபவம்மிக்க மனிதர்களின் வாழ்விலிருந்தும், சிபாரிசுகளிலிலிருந்தும் நான் தகவல்களை எடுத்து உங்களுக்குத் தரப்போகிறேன்.

இக்கட்டுரைகளில் நீங்கள் படிக்கப்போகும் எந்தக் கருத்தும் எனக்குச் சொந்தமானதல்ல என்றுசொல்லி நான் பொறுப்புத் துறப்பு செய்யமாட்டேன். என்னுடைய கருத்துக்கள்தான். ஆனால் அவை என்னுடைய கருத்துக்கள் மட்டுமல்ல. மருத்துவர்கள், ஹீலர்கள், ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்கள், மகான்கள் என்று பலரது உதாராணங்கள் மூலம் என் கருத்துக்களுக்கு வலு சேர்த்துள்ளேன். அவர்களது கருத்துக்களை எனதாக்கிக்கொண்டிருக்கிறேன். அதன்மூலம் தெளிவும் ஆரோக்கியமும் பெற்ற என் அனுபவங்களை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

ஒரு நாளைக்குக் குறைந்தது 200 பக்கங்கள் வீதம் முக்கியமான பல புத்தகங்களைப் படித்துக் குறிப்புகள் எடுத்துள்ளேன். ஆரோக்கியம் தொடர்பான எண்ணற்ற வீடியோக்களைப் பார்த்துவிட்டேன். கடந்த முப்பது ஆண்டுகளாக எனக்கு நானே பல பரிசோதனைகள் நிகழ்த்தி பல உண்மைகளைத் தெரிந்துகொண்டுள்ளேன். நான் கண்ட உண்மைகளை உங்கள் முன் வைக்கப்போகிறேன். உங்களுக்கு எது தேவையோ அதை மட்டும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

எது வேண்டாம், எது வேண்டும் என்பதில் நான் மிகமிகத் தெளிவாக உள்ளேன். எனக்குக் கிடைத்த அந்த அரிய, பொக்கிஷம்  போன்ற தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரைகளின் நோக்கம்.

உங்க டூத்பேஸ்ட்ல உப்பிருக்கா என்று கேட்கிறது ஒரு விளம்பரம். உப்பானது பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் என்பது அவ்விளம்பரத்தின் உப்குறிப்பு! ஆனால் நீங்கள் உண்மையிலேயே ஆரோக்கியத்தை விரும்புபவராக இருந்தால் அந்தக் கேள்விக்கு பதில் இப்படிச் சொல்லவேண்டும்: ‘டேய், டூத்பேஸ்ட்ல எதுக்குடா உப்பப் போடணும்? எங்கவீட்ல தனியாவே உப்பிருக்கு’.

வாங்க, நலமுடன் வாழலாம்.

 • தொடரும்.
Advertisements
This entry was posted in Articles /கட்டுரை, Uncategorized. Bookmark the permalink.

21 Responses to நலம் நலமறிய ஆவல்-1

 1. வாழ்த்துக்கள் பல ரூமி சாா்.
  தங்களது இந்த தொடர் சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்…..

  என்ன ஒரே ஒரு வருத்தம் தான்…. வாரம் வாரம் திங்கள் கிழமை மட்டும் தான் தினமணி யில் வரும் என்று சொல்லியது தான்….

  ஒரே புத்தகமாக வெளியிட்டாள் அருமையாக இருக்கும்…..

  • நாகூர் ரூமி says:

   இப்போதுதான் எழுத ஆரம்பித்துள்ளேன். தொடர் முடிந்த பிறகு நூலாகவும் வரும், இன்ஷா அல்லாஹ்.

   • நூல் வந்ததும், அவசியம் எனக்கு ஒரு பிரதி வேண்டும் நண்பர் நாகூர் ரூமி

   • நாகூர் ரூமி says:

    அன்பு புகாரி, இப்போதுதான் எழுத ஆரம்பித்துள்ளேன். ஆறு மாதமோ ஒரு வருடமோ இது போகலாம். இன்ஷா அல்லாஹ் நூலாக வந்ததும் நிச்சயம் உங்களுக்கு ஒரு பிரதி எடுத்து வைக்கிறேன்.

 2. S.velu says:

  மிகவும் பயனுள்ள அருமையான அனுபவபதிவு

 3. Ananthkumar Rajagopalachari says:

  அதேபோல உங்களுக்கு நன்மையாக இருப்பது எனக்கும் நன்மைபயக்கவேண்டிய அவமில்லை. /அவமில்லை/ is it typo? if not I have to learn this.
  Very good start, waiting for the next post. Thanks.

  • நாகூர் ரூமி says:

   ஆமாம். அவசியமில்லை என்று இருந்திருக்கவேண்டும்.

 4. paul says:

  Nice sir,All the best sir

 5. Vijayan says:

  அய்யா அருமையான மகிழ்ச்சியான செய்தி தொடருங்கள் வாழ்த்துக்கள்

 6. அருமையான துவக்கம்.என்னைப்போன்ற “பயந்தாங்கொள்ளி”க்கு நல்ல பாடம்.பதினைந்து நாட்களாக உடல்நிலை சரியில்லையென்று மருந்துகளும் மாத்திரைகளும்…கூடவே ஊசிகளும் ஏற்றிக்கொண்டேன்.மனதில் ஏதோ ஒன்று அழுத்துவது போல் தோன்ற ஒருகட்டத்தில் தங்களை தொடர்பு கொள்ள வேண்டுமென்ற அவா மிகுந்தது.ஏதேச்சையாக இன்று கூகுள் பிளஸ்-ஸில் உங்களது பதிவை பார்த்தேன்.இரண்டு பாகங்களையும் படித்து முடித்தவுடன் ஒரு புதுத்தெம்பு பிறந்திருக்கிறது.இன்ஷா அல்லாஹ் உங்களது இந்த பணி தொடரட்டும்.
  அன்புடன்…
  சு.மு.அகமது

 7. யாக்ஞவல்கியன் says:

  அதே எள்ளலுடனான மனம் கவரும் துள்ளல் நடை!நாளாக நாளாக இளமையாகும் மொழி வளம் எத்தனை பக்கங்காயினும் ‘ஒரே மூச்சில்’ படித்துவிடுவேன்.. வணக்கங்களுடன்- யாக்ஞவல்கியன், மேட்டூர் அணை

 8. Magesh.S says:

  Excellent sir. Part 1 itself started with inspiring details and messages. Thank you. wishing this series a great success and may help a lot of readers.

 9. Jayarajan Babu says:

  Sir, very useful articles….. Congrats for the success. I read your book Adutha Vinadi, fantastic book!

 10. நாகூர் ரூமி says:

  உங்களுடைய கருத்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் என் நன்றிகள். உங்கள் உற்சாகப்படுத்துதல்தான் மேலும் மேலும் எழுதத் தூண்டுகிறது.

 11. R,Sakthivelu says:

  I am a diabetic for over 20 years and taking 9 tablets perday .Ofcourse I have some blocks in the artery, I am not having any faith in alternate medicine but taking allopathy with limited faith that it would help me to control the illeffects of diabetic. So I am reading your blog with lot of faith and confidence . I am 67 and a reitired ban k Executive. I am eagerly waiting for you for MOndays. with Regards.

 12. G.V.PALANIVEL says:

  அன்பு மிகு ரூமி ஐயா
  வணக்கம்.20 வருடங்கள் முன் மேட்டுரில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்திருக்கிறோம்.வாழ்க்கைப்புதிருக்கான விடை தேடலில் “திராட்சைகளின் இதயம்”காலத்தை வென்று நிலைத்திருக்கும்.உங்களுக்குக் கிடைத்த ஹஜ்ரத் மாமா ஒவ்வொருத்தருக்கும் கிடைக்கணும்.CSR லிருந்து மீண்டது போல Heart Block லிருந்து வெளி வந்தது பற்றியும் எழுதுங்கள்.ஒரு பொருத்தம் என்னவென்றால் நான் தற்போது (54 வயது) Left Eye Retino Tear ஆல் பாதிக்கப்பட்டுள்ளேன்.Test முடித்து லேசர் Suggest பண்ணியுள்ளனர்.But i am comfortable and can wait some more time for Natural Healing.I may feel happy if i get your inputs.
  திராட்சைகளின் இதயம்-இறுதிப்பகுதியில் தங்கள் துணைவியின் கருப்பைக்கட்டி விஷயத்தில் மாமாவின் செயல்களுக்கு பிற்காலத்தில் அர்த்தம் தெரிந்ததா? அதே போல் தாஹாவின் 2 இலட்சம்?திராட்சைகளின் இதயம் படித்ததில்-எல்லாம் புரிஞ்ச மாதிரி ஒரு நேரமும் இனித்தான் எல்லாம் தெரிஞ்சுக்கணும்கற மாதிரி ஒரு நேரமும் இருக்குது.அதுவே நூலின் சிறப்பும் கூட.
  தாங்கள் ,Para normal Science,Life After Death,Reincarnation பற்றியெழுதினால் நன்றாக இருக்கும்.
  -கோ.வா.பழனிவேல்.

 13. Senthil says:

  I am visiting your block first time rumi sir. After finishing adutha vinadi , now I am reading your intha vinadi. Very much inspiring practical word flow. Good service sir. Way to go! Senthil from Bangalore

 14. Senthil says:

  Very inspiring words sir. Way to go!

 15. viji says:

  Roomi sir this is viji, last week i finished yr “திராட்சைகளின் இதயம்” book which u gave us, hope u remember us, me & my hubby visted yr hse 2015 Nov. Am Searching something to express my feel or to say about the book & its concept, i thot to mail u too. Its not words when i just read the book but i was with u all in the story, simply. Mny quries arised in my mind after read it. While reading it, i myself thought – why Roomi sir not to write abt hlth in detailed way which Hazarath ji explained? Willing to read more N more abt yr experience & guidence. Yr writing entering readers heart. உங்கள் குரு உங்களுக்கு உதவியது போல, நீங்களும் எங்களுக்கு குருவாகயிருந்து வாழ்க்கை உதவ வேண்டும்.

 16. viji says:

  Roomi sir this is viji, last week i finished yr “திராட்சைகளின் இதயம்” book which u gave us, hope u remember us, me & my hubby visted yr hse 2015 Nov. Am Searching something to express my feel or to say about the book & its concept, i thot to mail u too. Its not words when i just read the book but i was with u all in the story, simply. Mny quries arised in my mind after read it. While reading it, i myself thought – why Roomi sir not to write abt hlth in detailed way which Hazarath ji explained? Willing to read more N more abt yr spritual experience & expecting yr guidence. Yr writing entering readers heart. உங்கள் குரு உங்களுக்கு உதவியது போல, நீங்களும் எங்களுக்கு குருவாகயிருந்து வாழ்க்கை உதவ வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s