நலம் நலறிய ஆவல் 04 – உடல் எனும் ஞானி

04 – உடல் எனும் ஞானி

உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்

உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன் — திருமூலர்

உடலெனும் அற்புதம்

 

IMG-20160329-WA0099தலைகீழாக நின்றுகொண்டு சாப்பிட்டால் என்னாகும்? ஒன்றும் ஆகாது. நேராக நின்று சாப்பிட்டால் எவ்வளவு எளிதாக உணவு உணவுக்குழாய்கள் வழியாக பயணிக்குமோ அவ்வளவு எளிதாகவே தலைகீழாக நின்றுகொண்டு சாப்பிட்டாலும் பயணிக்கும்!

ஆச்சரியமாக உள்ளதா? இருக்கலாம். ஆனால் நிஜம் இதுதான். சமீபத்தில் யூட்யூபில் ஒரு வீடியோ பார்த்தேன். ஒரு குழந்தைக்கு அம்மா எதையோ ஊட்டுகிறாள். அது குழந்தையின் வயிற்றுக்குள் சென்று செரித்து கழிவாக வெளிவரும்வரை படமெடுத்திருக்கிறார்கள். முதன் முறையாக குழந்தையின் உடலுக்குள் வாய்வழியாக ஒரு ஹெச்டி கேமராவை வைத்து அனுப்பியிருக்கிறார்கள். எப்படிச் செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்த உடல் எனும் அற்புதத்தின் ஒரு பக்கத்தை அந்த காணொளியில் காணலாம்.

ஆஹா, உணவை உடல் எப்படி உணவுக்குழாய்களுக்குள் தள்ளுகிறது, எப்படி ஹைட்ரோக்ளோரிக் ஆசிட் உணவை துகள்களாக உடைக்கிறது, எப்படி செரிக்கிறது,  எப்படி உயிர்ச்சத்துக்களைப்  பிரித்தெடுக்கிறது, எப்படி ரத்தத்தோடு கலக்கிறது, எப்படி கழிவுகளை வெளியேற்றுகிறது ! எல்லாமே துல்லியமாகவும் மிகவும் தெளிவாகவும் காட்டப்படுகிறது. நம் உடலுக்குள் இருக்கும் சமாச்சாரங்களின் நிறங்களும் அமைப்பும்! அடடா, பாராட்ட வார்த்தையில்லை. ரொம்ப பிரமிப்பாக இருந்தது. கொஞ்ச நேரம் ’சமாதி’ நிலைக்குச் சென்றுவிட்டேன் என்றே சொல்லலாம். அவ்வளவு வியத்தகு அழகு!

அதைப் பார்த்துக்கொண்டிருந்தபொழுதே ஆண்டவனை நினைத்து நன்றியுணர்வு எழுந்தது. அந்தச் சின்னக் குடல், ஐ மீன் உடல், செய்யும் வேலைகளை கோடிக்கணக்கான மனிதர்களிடம் கொடுத்தாலும் செய்யமுடியாது. ஆண்டவன் என்ற Master Mind-ஆல் மட்டுமே அதெல்லாம் செய்ய முடியும். The Digestive System என்ற அந்த காணொளிக்காட்சியை யூட்யூபில் யாரும் பார்க்கலாம் (https://www.youtube.com/watch?v=_QYwscALNng)

ஞானத்தைத்த தேடி மனிதன் எங்கெங்கோ அலைந்திருக்கிறான். புத்தர், மஹாவீரர், கௌது நாயகம், இமாம் கஸ்ஸாலி, சித்தர்கள், சூஃபிகள் – இப்படி பலர் காடுகளிலும் மலைகளிலும் ஞானம் வேண்டி தவம் செய்துள்ளனர்.  ஆனால் நமக்குள்ளேயே ஒரு ஞானி நாம் பிறந்தபோதே நம்மோடு வந்துவிட்டார் என்பதுதான் உண்மை. அவர் வேறுயாருமல்ல, நம்முடைய உடலார்தான்!

முட்டாளும் அறிவாளியும்

நீங்கள் படித்தவரோ படிக்காதவரோ, டாக்டரோ நோயாளியோ, ஆணோ பெண்ணோ, அறிவாளியோ முட்டாளோ, அவரோ இவரோ  – எவராக  இருந்தாலும் உங்களுக்குள் இருக்கும் ஒரே அறிவாளி உங்கள் உடல்தான். அப்படியானால் எல்லாரும் அறிவாளிதான்!

இங்கே ஒரு இடைச்செருகலுக்கு மன்னிக்கவும். இந்த உலகில் அறிவாளி என்றோ முட்டாள் என்றோ ஒருவரும் கிடையாது. எல்லாருமே அறிவாளிதான். அதேசமயம் எல்லாருமே முட்டாள்தான்! என்ன குழப்பமாக உள்ளதா?

உதாரணமாக என் மனைவிக்கு இலக்கியம் தெரியாது (என்று நினைத்தேன்). ஆனால் நான் முட்டாளாகிப்போனேன். ஒருமுறை நண்பர் யுகபாரதி வீட்டுக்கு வந்திருந்தபோது, ’என்ன அக்கா, அடுத்த விநாடி, இந்த விநாடி என்றெல்லாம் புத்தகம் எழுதிவிட்டார். அடுத்த புஸ்தகத்துக்கு தலைப்பு என்ன’ என்று கேட்டார். சற்றும் தயங்காமல் உடனே என் மனைவி சொன்னாள்: ’நொந்த விநாடி’!

எனக்கு சமையல் தெரியாது. என் மனைவியோ சமைப்பதில் மன்னி! பல ‘ச்செஃப்’களுக்கு பாடம் எடுக்கும் அளவுக்கு எக்ஸ்பர்ட்! நானோ (கொஞ்சமாகச்) சாப்பிடுவதில் மன்னன்! என்னைப் பற்றி என் சின்னம்மா  அடிக்கடி சொல்வது: நீ ஒரு படிச்ச முட்டாளு! ஆஹா, எவ்வளவு அறிவார்ந்த விமர்சனம்!

நூற்றுக்கு நூறு எல்லாம் தெரிந்தவர் இந்த உலகில் ஒருவரும் கிடையாது. ஒவ்வொரு அறிவாளிக்குள்ளும் ஒரு முட்டாளும், ஒவ்வொரு முட்டாளுக்குள் ஒரு அறிவாளியும் இருப்பதுதான் உண்மை. ஒவ்வொரு பெண்ணுக்குள் ஒரு ஆணும், ஒவ்வொரு ஆணுக்குள் ஒரு பெண்ணும் இருப்பதுபோல. ஒருமுறை நான் என்னைப்பற்றியே ஒரு கவிதை எழுதினேன். தலைப்பு: ’ஒரு முட்டாளின் கவிதை’!

கிரேக்கத்திலேயே அறிவாளி சாக்ரடீஸ்தான் என்று ஆரக்கிள் சொன்னபோது அவரிடம் அதுபற்றிக் கேட்கப்பட்டது. அப்போது அவர், ‘எனக்கு ஒன்றும் தெரியாதென்பதுதான் எனக்குத் தெரியும்’ என்று சொன்னார்! எனவே ’அறிவு ஜீவி’ என்று எந்த மனிதனையும் வர்ணிக்க முடியாது. வேண்டுமானால் ’உணர்ச்சி ஜீவி’ என்று சொல்லலாம். மனிதனிடமிருந்து உணர்ச்சியை மட்டும் எடுத்துவிட்டால் அவனால் உயிர் வாழவே முடியாது. ஆனால் அறிவு சமாச்சாரம் அப்படியில்லை! அது இல்லாமல் எத்தனையோபேர் சந்தோஷமாக வாழவில்லையா! (ஒருவேளை அது இல்லாததனால்தான் அப்படி வாழ முடிகிறதோ)! முழுக்க முழுக்க அறிவு, ம்ஹும் இல்லை, ஞானம் சார்ந்து எல்லா வேலைகளையும் பார்ப்பது மனித உடல் மட்டுமே!

இதுதான் அடிப்படை உண்மை. இதை மட்டும் இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் புரிந்துகொண்டால், அனுபவத்தில் அறிந்துகொண்டுவிட்டால் அப்புறம் இந்த உலகில் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் ஒழிந்தே போய்விடுவர். அந்த கற்காலத்தை, ஐ மீன், பொற்காலத்தை நோக்கித்தான் நாம் ஆமை வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறோம்!

கற்காலமே பொற்காலம்

Hegdeகற்காலத்தை எப்படி பொற்காலமென்று சொல்லலாம்? மறை கழன்று விட்டதா என்று நீங்கள் நினைக்கலாம். இப்படி நான் சொல்லவில்லை. டாக்டர் ஹெக்டேதான் சொல்லுகிறார்! அந்தக் கால மனிதர்கள் இறந்துபோனதற்கு இரண்டு காரணங்கள்தான் இருந்தன. ஒன்று முதுமை, இன்னொன்று மிருகங்களால் வேட்டையாடிக் கொல்லப்படுதல். இதைத்தவிர வேறு காரணங்களால் அவர்கள் சாகவே இல்லை.

அவர்கள் வேட்டையாடி வாழ்ந்தார்கள். குரங்குகளைப்போல மரங்களில் குடியிருந்தார்கள். ஆனால் அந்தக் காலகட்டத்தில்தான் மனிதன் மிகவும் ஆரோக்கியாக வாழ்ந்தான். அப்போது யாரும் ஹார்ட் அட்டாக் வந்து சாகவில்லை. ஐயையோ பி.பி. ஏறிவிட்டதே! சுகர் 400ஆ? என்றெல்லாம் யாரும் அரற்றவில்லை. ஆரோக்கியம் தொடர்பாக அவர்களுக்கு ஒரு பிரச்சனையும் ஏற்படவில்லை என்று மிகவும் நியாயமாகவும் சரியாகவும் சொல்லியிருக்கிறார் டாக்டர் ஹெக்டே! இப்படி ஒரு ’கன்ஃபஷன்’ அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக இதய நிபுணரிடமிருந்து வந்திருப்பதுதான் விஷேஷம்.

மருத்துவ பரிசோதனைகள், மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள், அறுவை சிகிச்சைகள் – இவைகள்தான் மனிதனைக் காப்பாற்றும் என்று நம்பியிருந்தோமென்றால் டைனோசார்களைப் போல எப்போதோ நாம் ஒழிந்து போயிருப்போம். இன்னும் சொல்லப்போனால், இவ்வளவு மருந்து மாத்திரைகளையும் மீறி மனிதகுலம் இன்னும் அழியாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்றுதான் நாம் யோசிக்கவேண்டும்.

ஞானம் கொடுக்கப்பட்டே உயிர்கள் யாவும் இந்த உலகுக்கு அனுப்பப்படுகின்றன. ’தகவல்’ என்ற அளவில் சுருங்கிவிடலாம் என்ற அச்சத்தின் காரணமாக நான் ’அறிவு’ என்ற சொல்லுக்கு பதிலாக ’ஞானம்’ என்பதை பல இடங்களில் பயன்படுத்த விரும்புகிறேன். அதுதான் உண்மையும்கூட. சரி, விஷயத்துக்கு வருவோம்.

சால்மன் மீன் செய்யும் அற்புதம்

Salmonசால்மன் என்று ஒருவகை மீன் உள்ளது. அது ஆற்றோடு கலக்கும் சுத்தமான நீரோடைப் பகுதியிலோ அல்லது கடலோடு கலக்கும் ஆற்றிலோ பிறக்கும். ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு முட்டையிட்டுக் குஞ்சுபொறிக்கும் வயது அதற்கு வரும். அப்போது அது எங்கிருந்தாலும் தான் பிறந்த இடத்தைத் தேடிச்சென்று அங்கேதான் குஞ்சுபொறிக்கும். அந்த இடம் சில நூறு கஜங்களிலிலிருந்து இரண்டாயிரம் மைல் தூரம்வரை இருக்கலாம். ஆனால் தான் பிறந்த இடம் எவ்வளவு தூரத்திலிருந்தாலும் மோப்பம் பிடித்து சால்மன் மீன்கள் பிரசவத்துக்கு தாய்வீட்டுக்குச் செல்வது உலக அதிசயங்களில் ஒன்று என்று சொல்லலாம். இதை ஆங்கிலத்தில் natal homing என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்த ’நேட்டல் ஹோமிங்’ அறிவு சால்மனுக்கு எங்கிருந்து கிடைத்தது? தேனீக்களுக்கு நாம் செய்தி அனுப்பவில்லையா என்று கேட்கிறது ஒரு திருக்குர்’ஆன் வசனம்! இந்த பிரபஞ்சம் முழுவதுமே இறைவனின் அறிவின் துளிகள் கொட்டிக்கிடக்கின்றன என்று சொல்லலாம். அதில் மிகச்சிறந்த துளி மனித உடல் என்று சொல்லவேண்டும்.

உடலின் ஞானம்

நமது உடலில் RAS (renin-angiostensin-aldosterone) என்று ஒரு அமைப்பு உள்ளது. காயங்களால் ரத்தப்போக்கு ஏற்படும்போது நமது ரத்த அழுத்தம் குறிப்பிட்ட அளவுக்குக் கீழே சென்றுவிடாமல் அந்த அமைப்பு நம்மைப் பாதுகாக்கும். அந்தக்கால மனிதர்களுக்கு அப்படித்தான் இருந்தது. ஆனால் உணவில் அதிகமாக உப்பு  சேர்த்துக்கொள்வதன் மூலம் கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாக இந்த அமைப்பை நாம் கெடுத்து வைத்திருக்கிறோம். இதன் காரணமாகத்தான் நமக்கு ஹை ப்ளட் ப்ரஷர் (உயர்ந்த ரத்த அழுத்தம்)  என்னும் புதிய நோய் உருவாகியிருக்கிறது என்கிறார் ஹெக்டே.

ரத்த அழுத்தம் குறைவது, உயர்வது, கொலஸ்ட்ரால் அதிகமாவது, குறைவது, ’சுகர்’ அளவு அதிகமாவது, குறைவது – இதெல்லாமே ‘நார்மல்’தான். இவை அடிக்கடி உயர்வதும் தாழ்வதுமாக இருப்பதுதான் இயற்கையும் இயல்புமாகும். இவை நோயின் அறிகுறிகளல்ல. ஆரோக்கியத்தின் அறிகுறிகளே. இறந்த உடல்களில்தான் இவை மாறாத நிலையில் இருக்கும் என்றும் கிண்டலடிக்கிறார் ஹெக்டே!

உதாரணமாக, ஒலிம்பிக்ஸ் மராத்தனில் ஓடிவருபவனின் இதயத்துடிப்பும் ரத்த அழுத்தமும் அதிகமாக இருக்கும். அப்படி இருப்பதுதான் இயல்பாகும். அப்போது எப்படி அவனது ப்ளட் பிரஷரை நார்மல் என்று சொல்லப்படும் 120/80 என்ற அளவில் வைக்க முடியும்?  அப்படிச் செய்யவும் கூடாது. ரத்த அழுத்தம் ஏறுவதும் இறங்குவதும்தான் இயல்பானது. உதாரணமாக மஹாத்மா காந்தியின் ரத்த அழுத்தம் நார்மலாகவே 200/140 இருந்தது என்று கூறுகிறார் ஹெக்டே! காந்தியே பல கடிதங்களில் தன் ரத்த அழுத்தம் 188 இருந்ததாக எழுதியுள்ளார்.  அவரது பி.பி.யைப்  பரிசோதித்த  டாக்டர்களுக்குத்தான் பி.பி. எகிறியது! ஆனால் மஹாத்மா  இறுதிவரை ஆரோக்கியமாகத்தான்  இருந்தார். அவரைப் போல பல மைல்களுக்கு இன்றுள்ள இளைஞர்களால்கூட நடக்க முடியாது. அவர் சுடப்படாமல் இருந்திருந்தால் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருப்பார்.

First Pass Effect

first pass effectநாம் விழுங்கும் ஒவ்வொரு அலோபதி மாத்திரையிலும் வேதிப்பொருள்கள் உள்ளன. இன்னும் கொஞ்சம் எளிமையாகச் சொல்லவேண்டுமென்றால் நாம் உட்கொள்ளும் ஒவ்வொரு மாத்திரையிலும் விஷம் உள்ளது என்று சொல்லலாம். இல்லையே, நமது உடல்கூடத்தான் வேதிப்பொருள்களை உருவாக்குகிறது, அப்படியானால் நமது உடலே விஷத்தை உருவாக்குகிறதா என்ற கேள்வி தவறானது. நம் உடல் உருவாக்கும் எதுவும் உடலுக்கு நன்மை செய்வதாகும். ஆனால் அதேபோன்ற ஒன்று வெளியிலிருந்து மனிதர்களால் உருவாக்கப்பட்டால் அது ஆபத்தை விளைவிப்பதாகும். நாம் புரிந்துகொள்ளவேண்டியது இதைத்தான்.

ஒரு மெட்டாசின் அல்லது வேலியம் 5 போன்ற அவ்வளவாக பிரச்சனை தராத மாத்திரையை நாம் விழுங்கினாலும் ‘யாரிவன், அந்நியன்?’ என்று நம் உடலில் உள்ள கோடிக்கணக்கான செல்களும் வியந்து பார்க்கும் என்கிறார் அமெரிக்க டாக்டரும் (நியோரோஎண்டாக்ரினாலஜி) உடல் மனம் பற்றிய புதிய பரிமாணங்களை விஞ்ஞானப்பூர்வமாக விளக்கும் நவீன குருவான தீபக் சோப்ரா. இவரைப் பற்றியும் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.

நாம் எந்த அலோபதி மாத்திரையை விழுங்கினாலும் அதை நம் உயிரணுக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. சந்தேகத்தின் பேரில் அதை சோதனைச்சாலைக்கு அனுப்பிவிடும். அந்த சோதனைச்சாலையின் பெயர் லிவர். ஆம். நாம் விழுங்கும் எல்லா மாத்திரைகளும் கல்லீரலுக்குத்தான் முதலில் அனுப்பப்படும்.

அம்மாத்திரைகளில் உள்ள விஷப்பொருள்களில் 90 விழுக்காட்டை கல்லீரல் அழித்துவிடும். மிஞ்சும் கொஞ்சூண்டு விஷத்தன்மையுடன் அம்மாத்திரை லிவரிலிருந்து ’ரிலீஸ்’ ஆகி உடலில் கலக்கும். அந்த கொஞ்சூண்டு விஷத்தன்மைக்குத்தான் அவ்வளவு பக்க விளைவுகளும் நமக்கு ஏற்படுகின்றன. அவை உண்மையில் பக்க விளைவுகள் அல்ல, அவை ‘பக்கா விளைவுகள்’ என்று கூறுகிறார் ஹீலர் உமர்! உண்மைதானே?

சரி, விழுங்கிய மாத்திரைகளில் இருந்த நச்சுப்பொருள்களை (toxins) எல்லாம் காலி செய்யும் கல்லீரல் என்னாகும்? நிச்சயமாக பாதிக்கப்படும். நாம் சாப்பிடும் மாத்திரைகளினால் நம்  உயிர் காக்கும் கல்லீரலை தினமும் கொஞ்சம்கொஞ்சமாகக் கொலை செய்துகொண்டிருக்கிறோம் நாம் என்பதுதான் நிஜம். இப்பூவுலகில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் வேதிப்பொருள்கள் கலக்கப்பட்ட லட்சக்கணக்கான மாத்திரைகளை அன்றாடம் உட்கொண்டு தங்களுக்கே தெரியாமல் இந்தத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்!

கல்லீரலால் 90 விழுக்காடு நச்சுப்பொருள்கள் அழிக்கப்பட்டதுபோக மீதியுள்ள கொஞ்சூண்டு நச்சுப்பொருள்களுடன் மாத்திரைகள் உடலுக்குள் கலப்பதற்குப் பெயர்தான் ‘ஃபஸ்ட் பாஸ் இஃபக்ட்’. எம்.பி.பி.எஸ். படிக்கும் எந்த மாணவரிடத்திலாவது இதுபற்றி கேட்டுப் பாருங்கள், சொல்வார்கள் என்று சொல்லும் ஹெக்டே அதுதொடர்பாக, முத்தாய்ப்பாக ஒரு கேள்வி கேட்கிறார் (பார்க்க: Modern Science and Spirituality என்ற அவரது உரையின் வீடியோ).

எடுத்துக்கொள்ளப்படும் மாத்திரைகளால் நன்மைதான் ஏற்படும் என்றால் கல்லீரல் அவற்றை ஏன் அழிக்கிறது? Why on earth the First Pass Effect happens? என்று கேட்கிறார். நியாயம்தானே?

டாக்டர் ஹெக்டே – ஒரு சிறு குறிப்பு

What Doctors Don't Get to Study at Med School

 • கர்நாடகாவில் பெல்லே என்ற கிராமத்தில் 1938ல் பிறந்தார்.
 • சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்.பி.பி.எஸ்.(ஸ்டான்லி)
 • லக்னோ பல்கலைக்கழகத்தில் எம்.டி.
 • FRCP – லண்டன் பல்கலைக்கழகம்
 • FRCIP – டப்ளின் பல்கலைக்கழகம்
 • தற்காலிகமாக நின்றுபோன இதயத்துக்கு மறு உயிர் கொடுப்பதற்கான ஒரு உபகரணத்தைச் செய்த நோபல் பரிசு பெற்ற பெர்னார்டு லௌன் (Bernard Lown) என்ற ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியரிடம் இதயவியல் பயின்றார்.
 • இரண்டு முறை மணிபால் மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி
 • 1999 — மருத்துவத்துறையில் சிறந்த பணிக்காக டாக்டர் பி.சி.ராய் விருது
 • 2010 – பத்மபூஷன் விருது
 • Wisdom of the Human Body, What Doctors Don’t Get to Study at Medical School போன்ற நூல்களின் ஆசிரியர்.
 • அவருக்கு மெயில் செய்து அவரின் அனுமதியின் பேரில்தான் அவரது கருத்துக்களை நான் இங்கே பயன்படுத்துகிறேன்.

 

நம்முடைய உடலுக்கு ஞானமிருப்பதால் அது நம்மைக் காப்பாற்ற முயற்சிகள் செய்துகொண்டே இருக்கிறது. நமக்கு அறிவில்லாததால் நாம் மீண்டும் மீண்டும் மாத்திரைகளை விழுங்கி ஆண்டவன் கொடுத்த நம் உடலுக்கும், ஆரோக்கியத்துக்கும், உயிருக்கும் தொடர்ந்து உலை வைத்துக்கொண்டே இருக்கிறோம்.

இப்படி நான் சொல்லவில்லை. உலகப் புகழ்பெற்ற அலோபதி மருத்துவர்கள் பலர் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். டாக்டர்கள் தீபக் சோப்ரா, ப்ரூஸ் லிப்டன், ஹெக்டே, ஃபசுலுர் ரஹ்மான் , ஹீலர்கள் பாஸ்கர், உமர், ரங்கராஜ் – இப்படி மனிதகுலத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

உடல் இதுமட்டுமா செய்கிறது? இன்னும் என்னென்னவோ செய்கிறது. பார்க்கலாம்.

 

=========

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை, Uncategorized. Bookmark the permalink.

One Response to நலம் நலறிய ஆவல் 04 – உடல் எனும் ஞானி

 1. Sir i am eagerly waiting for this week articles

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s