நலம் நலறிய ஆவல் 05 – உடலின் பேச்சு

05 – உடலின் பேச்சு

Zeno_of_Citiumநமக்கு இரண்டு காதுகளும் ஒரு வாயும் உள்ளது. அதன் அர்த்தம் என்னவெனில், அதிகமாகக் கேட்கவேண்டும், குறைவாகப் பேசவேண்டும். –ஜெனோ.

 

கேளுங்கள் கொடுக்கப்படும்

கிரேக்க சிந்தனையாளர்  ஜெனோ சொன்னது ரொம்பச்சரி. நாம் பொதுவாக யார் பேசுவதையும்  கேட்பதற்கு விரும்புவதில்லை. அப்படியே கேட்டாலும் அது பேசுபவர் சொல்வதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக இருக்காது. அவர் சொன்னதை வைத்து அவரை மடக்கி, அவர் சொன்னது தவறு என்று நிரூபிப்பதற்காக இருக்கலாம். பெரும்பாலும் நமது காதுகள் இந்தக் காரணத்துக்காகத்தான் எப்போதும் தயாராக உள்ளன.

dr Rமறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் ஒருமுறை “Islam has converted the whole earth into a place of worship” என்று ஒரு உண்மையை அழகாகச் சொன்னார். இறைவனை வணங்குவதற்காக பிரத்தியேகமாக பள்ளிவாசல்கள் இருந்தாலும் அங்கே போகமுடியாதவர்கள் எங்கு வேண்டுமானாலும் தொழுகையை நிறைவேற்றலாம். அது சுத்தமான இடமாக இருக்கவேண்டும். அவ்வளவுதான். இந்த கருத்தைத்தான் டாக்டர் ராதாகிருஷ்ணன் சொன்னார். ஆனால், converted என்ற சொல் வருவதால், இஸ்லாம் இந்த உலகம் முழுவதையும் இஸ்லாத்துக்கு convert செய்ய முயல்வதாக அதற்கு அர்த்தம் கொடுக்கப்பட்டது! மனிதர்கள் ரொம்ப திறமைசாலிகள். அவர்கள் ஊஞ்சல்களில் மட்டுமின்றி வார்த்தைகளையும் பிடித்துக்கொண்டு தொங்கி ஆடுவதில் விற்பன்னர்கள்! சரி, கேட்கின்ற விஷயத்துக்கு வருவோம்.

வெளிப்பேச்சும் உள்பேச்சும்

வாய் பேசுவது தெரியும். உடல் பேசுமா? ஏன் பேசாது? காதலர்கள் கண்களால் பேசிக்கொள்வதில்லையா? வாய்பேச முடியாதவர்களுக்கான செய்தி  வாசிப்பைப் பார்த்ததில்லையா? மனித முகமும் கைகளும் எவ்வளவு வியத்தகு முறையில் பேசுகின்றன என்பது புரியும்!

ஆனால் நான் அவ்விதமான உரையாடல்களை, குறிப்புகளை, அசைவுகளைப் பற்றி இங்கே பேசவில்லை. நான் சொல்ல வருவது உடலின் நுட்பமான ஆனால் வெகு நிச்சயமான பேச்சைப்பற்றி. அது உள் பேச்சு. புற அசைவுகள் மூலம் புரிந்துகொள்ளப்படுவதல்ல.

உடலின் அகவயமான, உள்ளார்ந்த பேச்சு நாள் முழுவதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால் நாம் அவற்றை கவனிக்கத் தவறிவிடுகிறோம். அதையெல்லாம் கேட்பதற்கு நமக்கு நேரம் ஏது? காதில் விழும் பேச்சையே நாம் கேட்பதில்லை. நுட்பமான, வார்த்தைகளற்ற பேச்சையா நாம் கவனிக்கப்போகிறோம்!

உடல் பொய் சொல்வதே இல்லை என்று சொன்னார் மஹாத்மா. அவர் சொன்னது சத்தியம். நமது உடல் பொய் சொல்வதே இல்லை. ஏனென்றால் அதற்குப் பொய் சொல்லத்தெரியாது! சத்தியத்தின் இன்னொரு வடிவம்தான் நம் உடல்! அது நம்மோடு இருபத்து நான்கு மணி நேரமும் பேசிக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால் நாம்தான் கேட்பதே இல்லை!

நம் உடலின் நுட்பமான பேச்சுக்கு உதாரணமாக பசி, தாகம் இவற்றைச் சொல்லலாம். ஒருவருக்கு பசி அல்லது தாகம் எடுத்துவிட்டதென்றால் அவரால் அதை நிச்சயம் உணர்ந்துகொள்ள முடியும். உடலின் இந்த அறிவிப்பை மட்டும் நாம் ரொம்ப கவனமாக, மிகுந்த மரியாதையோடு கேட்கிறோம்! இன்னும் சொல்லப்போனால் இந்தப் பேச்சை, இந்த உள் குரலைக் கேட்கவும் அதற்கு உடனே மரியாதை செய்யவும் நாம் தயங்குவதே இல்லை!

உதாரணமாக என்னையே நான் சொல்லுவேன். வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் முதள் தளத்தில் இருப்பார்கள். நான் தரைத்தளத்தில் இருப்பேன். சாப்பிடுவதற்காக அவர்கள் அழைக்கப்படுவார்கள். அப்போது எனக்கு பசியாக  இருந்தால் – எப்போதுமே இருக்கும் – அவர்கள் கீழே இறங்கி வருவதற்குள் நான் சாப்பிட  ஆரம்பித்துவிடுவேன். ஒரு மரியாதைக்காகக்கூட  விருந்தினர்கள் வரட்டும் என்று காத்திருக்கமாட்டேன்! விருந்தோம்பலைவிட வயிறோம்பல்தான் எனக்கு முக்கியம்! நாட்டில் உள்ள பத்து பேரில் ஒன்பது பேர் என் கட்சிதான், எனக்குத் தெரியும்!

இந்த நல்ல பழக்கத்தை நான் இன்றுவரை கடைப்பிடித்து வருகிறேன்! என் மனைவிக்கு இதில்  ரொம்ப வருத்தமுண்டு. விருந்தினர்களை எப்படியும் கவனிக்கத்தான் போகிறோம். அவர்களுக்கு எந்தக் குறையும் வைக்கப்போவதில்லை. அதே சமயம் உடலின் குரலுக்கு மரியாதை தரவேண்டாமா? நான் அதைத்தான் செய்கிறேன்! ஆனால் பசி, தாகம் என்ற இரண்டு விதிவிலக்குகளைத்தவிர, எப்போதெல்லாம் நாம் உடலின் பேச்சை உதாசீனப்படுத்துகிறோம்?

நாள் முழுவதும். மாதம் முழுவதும். வருஷம் முழுவதும்!

எப்படி என்கிறீர்களா? சாப்பிடும்போதே இதை நாம் செய்கிறோம். எப்படி?

  1. பேசிக்கொண்டே சாப்பிடுவது
  2. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிடுவது
  3. போதும் என்ற உணர்வு ஏற்பட்ட பிறகும் கொட்டிக்கொள்வது – இப்படி.

இந்த மாதிரியான  ஒவ்வொரு தவறான பழக்கத்தின் விளைவுகளைப் பற்றியும் புத்தகமே எழுதலாம். அவ்வளவு இருக்கிறது. சரியான தருணத்தில் இதுபற்றி விரிவாகப் பேசலாம்.

வயிறு முட்ட உண்ட பிறகு வயிறு அடைத்துக்கொண்ட மாதிரி உணர்விருக்கும். போதும் இதற்குமேல் வேண்டாம் என்று தோன்றும். அந்த உணர்வும் உடலின் நுட்பமான அறிவுறுத்தல்தான். ஆனால் அதை நாம் மதிக்கிறோமா? சாப்பாடு ’வேஸ்ட்’ ஆயிடும் என்று ஒரு ’வசதியான’, ‘பாரம்பரிய’ காரணத்தை நாமே சொல்லி, தட்டைக் காலி செய்யும் வேலையில் மும்முரமாக ஈடுபடுகிறோம்!

ஒருமுறை எங்களூர் அண்ணன் ஒருவர் கல்யாண வீட்டில் சாப்பிட்டு முடித்த பிறகு தட்டில் நிறைய சோறு மீதி இருந்தது. அவர் எழ முயன்றார். ’அண்ணே, நிறைய சாப்பாடு மீதியிருக்கு. சாப்பிடலேன்னா வேஸ்ட்டாயிடும்’ என்று வீட்டார் உபசரித்தினர். ஆனால் அவர் சொன்னார், ‘எனக்கு வயிறு நிறைந்துவிட்டது. இதற்கு மேல் சாப்பிட்டால் என் வயிறு வேஸ்ட்டாகிவிடும். மீது சோறு இருந்தால் நாய்க்கோ பூனைக்கோ போடுங்கள். அப்ப எப்படி வேஸ்ட்டாகும்?’ என்றார்! மிகச்சரியான, நியாயமான கேள்வி. நம்மில் எத்தனை பேர் இவ்விதம் சிந்திக்கிறோம்?

காலத்தைப் போக்கவா காலமாகவா?

ஒருமுறை நான் வேலூருக்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்தேன். வழியில் பச்சைகுப்பம் என்ற இடத்தில் லெவல் க்ராஸிங் இருந்தது (இப்போது மேம்பாலம் வந்துவிட்டது). ’கேட்’ போட்டுவிட்டதால் ரயில் போகும்வரை பஸ் நிறுத்தப்பட்டது. உடனே தட்டுக்களைத் தூக்கிக்கொண்டு சிலர் அருகில் வந்தார்கள். நிலக்கடலை, பழங்கள், பூ போன்றவற்றை விற்பதற்கு. அதிலொன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் நிலக்கடலையைப் பொட்டலம் கட்டி விற்றவர் சொன்ன வார்த்தைகள்தான் எனக்கு மிகுந்த ஆச்சரியமூட்டின. ‘நிலக்கடலை, நிலக்கடலை’ என்று சொல்லியோ எங்க ஊரில் சொல்வது மாதிரி ‘மல்லா கொட்டெ’ என்று சொல்லியோ அவர் விற்கவில்லை. மாறாக, ‘டைம் பாஸ், டைம் பாஸ்’ என்று சொல்லிக்கொண்டே வந்தார்! பலரும் அவரிடம் பொட்டலங்களை வாங்கிப் பிரித்தெடுத்து வாயில் போட்டு மென்று ‘டைம் பாஸ்’ பண்ண ஆரம்பித்தனர்!

அப்போதுதான் எனக்கு அது புரிந்தது. ஆஹா, மனிதர்கள் பசிக்காக சாப்பிடும் காலம் போய், நேரத்தைச் செலவு செய்வதற்காகவும் சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள்! ’நேரா நேரத்துக்குச்’ சாப்பிடுவது என்பதும் இயற்கைக்கு மாறான, தவறான ஒரு பழக்கம்தான். அதென்ன நேரான நேரம், கோணலான நேரம்? பசிக்கின்ற நேரம்தான் நேரான நேரம். அலுவலகம் செல்ல வேண்டும், ஸ்கூல் வேன் வந்துவிட்டது, கல்லூரிகளுக்குச் செல்லவேண்டும் – இப்படி நாமாக ஏற்படுத்திக்கொண்ட வாழ்க்கை முறைக்காக, பசிக்காத போதும் வயிற்றில் எதையாவது போட்டு அடைப்பது நமக்கு வழக்கமாகிவிட்டது.

அன்போடு வீட்டில் செய்யப்பட்ட உணவாக இருந்தாலும், பசி என்ற ஒன்று வராமல் உட்கொள்ளப்படும் உணவால் பயனில்லை என்பது மட்டுமல்ல, உடல்நலக் கேடும் நிச்சயம் ஏற்படும். அப்படியானால் நம்மை நிச்சயமான நோயாளிகளாக மாற்றுகின்ற வாழ்க்கை முறையைத்தான் நாம் விரும்பித் தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டுள்ளோம். சைவ உணவுதானே,’டீப் ஃப்ரை’ பண்ணப்படவில்லையே, உப்பு அதிகமாகவே இல்லையே, கொழுப்பில்லாத உணவாயிற்றே – இப்படி நாம் எத்தனை அக்கறை பொதிந்த கேள்விகள் கேட்டாலும் பசி எடுக்காமலே சாப்பிடும் பழக்கத்து மனிதன் அடிமையானால் விளைவு என்னாகும்? நம் காலம் முடிவதற்கு முன்பே நாம் காலமாகும் வாய்ப்பு ஏற்படும்!

ரொம்பப் பழைய ஜோக் ஒன்று ஞாபகம் வருகிறது. ஆனால் அது நம்முடைய தவறான பழக்கத்தை அழகாகச் சொல்லும் ஜோக். அதனால் திரும்ப நினைவுபடுத்துகிறேன். காலை, பகல், இரவு மூன்று வேளையும் இரண்டிரண்டு சப்பாத்திகள் மட்டும் சாப்பிடச் சொல்லி டாக்டர் சொல்கிறார். நோயாளி சந்தேகம் கேட்கிறார்: ‘டாக்டர், இரண்டு சப்பாத்திகள் என்று சொன்னீர்களே, அது சாப்பாட்டுக்கு முந்தியா பிந்தியா?’! நம்மில் பெரும்பாலோருடைய வாழ்க்கை முறையைத்தான் இந்த ஜோக் எடுத்துக்கூறுகிறது!

பசிக்கும்போது சாப்பிடாமல் இருந்தாலும் தப்பு, பசிக்காதபோது சாப்பிட்டாலும் தப்பு. பசிக்காதபோது ஒரு நாய்கூட சாப்பிடுவதில்லை. பசியடங்கிப் படுத்திருக்கும் ஒரு நாயிடம் அதற்குப் பிடித்த மட்டன் துண்டுகளைப் போட்டுப் பாருங்கள் தெரியும். மோந்து பார்த்துவிட்டு மீண்டும் அது படுத்துக்கொள்ளும்! ஒரு நாயைவிடக் கேவலமாகவா நாம் போய்க்கொண்டிருக்கிறோம்?  இதெல்லாம் தெரிந்துதான் ரொம்ப காலத்துக்கு முன்பே நம் திருவள்ளுவர் அழகாகச் சொன்னார்:

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.

(யப்பா ராசாக்களா, உங்களை நோய் பீடித்து அதற்காக உங்கள் உடம்புக்கு மருந்து எடுத்துக்கொள்ளாமல் இருக்கவேண்டுமென்று நீங்கள் விரும்பினால், ஏற்கனவே உண்ட உணவு செரித்துவிட்டதா என்று நிச்சயமாகத் தெரிந்துகொண்டு அதன் பிறகு அடுத்த வேளை உணவை உண்ணுங்கள் – நாகூர் ரூமி தெளிவுரை).

உடல் செய்யும் மூன்று முக்கிய காரியங்கள்

நம் உடல் மூன்று முக்கிய காரியங்களை அன்றாடம், கணந்தோறும், நாம் விழித்திருக்கும்போதும், தூங்கும்போதும், எப்போதும் செய்துகொண்டிருக்கிறது. அவை என்ன? நம் உடலானது

  1. உருவாக்குகிறது
  2. அறிவிக்கிறது
  3. குணப்படுத்துகிறது

 

உருவாக்கம்

உடல் எதை உருவாக்குகிறது? உருவாக்கப்பட்டது உடல்தானே என்ற கேள்வி எழலாம். உண்மைதான். நாம் அனைவரும் ஆரம்பத்தில் ஜைகோட் (zygote) என்ற ஒரு செல் உயிரியாகத்தான் இருந்தோம். அது பிரிந்து பிரிந்து, பல்கிப் பெருகி, திசுக்களாகி, உறுப்புகளாகி, மனித உடலாகிறது. அந்த உருவாக்கத்தையும் இங்கே நாம் நன்றியோடு நினைவுகூறலாம்.

zygoteஒரு செல் உயிரியிலிருந்து கோடிக்கணக்கான உயிரணுக்கள் கொண்ட மனித உடல் உருவாக்கப்படுகிறது. பின்னர் வாழும் காலம்வரை அதுஉருவாக்கிக்கொண்டே இருக்கிறது! எதை உருவாக்குகிறது? நம்மைத்தான்!

 

காலையில் நாம் மூன்று இட்லிகள் சாப்பிடுவதாக வைத்துக்கொள்வோம். (நான் என்னை வைத்துச் சொல்கிறேன். சிலருக்கு முப்பது இட்லிகள்கூட இயல்பாக இருக்கலாம். ஐம்பது பரோட்டாக்களை கபளீகரம் செய்த கணக்கை வேண்டுமென்றே தவறாக ஹோட்டல்காரர் சொல்லும்போது, திருப்பி மொதல்லேருந்து ஆரம்பிக்கலாம் என்று சொல்லும் காமடிக்காட்சி நினைவு வருகிறதா?).

இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து அந்த இட்லிகள் என்னவாகின்றன? செரித்து, உயிர்ச்சத்துக்களெல்லாம் ரத்தத்தில் சேர்க்கப்பட்டு, கழிவுகளெல்லாம் வெளியேற்றப்படுகின்றன. வேறு வார்த்தைகளில் சொன்னால், அவைகளை ராகவன் சாப்பிட்டால் அவை ராகவனாகிவிடுகின்றன. ராதிகா சாப்பிட்டால் ராதிகாவாகிவிடுகின்றன. இதுதான் உண்மை.

நாம் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட், விட்டமின், கால்சியம் போன்ற வேதிப்பொருள்கள் மட்டுமின்றி உயிர்ச்சத்து என்று சொல்லப்படும் எனர்ஜி இருக்கிறது. அது இருப்பதால்தான் உணவை உட்கொண்டபின் உடல் உருவாக்கத்தில் ஈடுபடுகிறது. வெறும் வேதிப்பொருள்கள் என்றால், சந்திரனுக்குச் செல்லும் அஸ்ட்ரோனாட்டுகளுக்குக் கொடுக்கப்படுவதைப்போல வேதிப்பொருள்களையெல்லாம் சேர்த்து மாத்திரைகளாக்கி அவற்றையே உணவுக்கு பதிலாக நாம் விழுங்கிக்கொண்டிருக்கலாமே! (குறிப்பிட்டகால அவகாசம்வரை பசிக்காமலும் கழிவு வெளியேற்றம் நடக்காமலும் இருக்க செய்யப்படும் ஏற்பாடுகள் அவை).

நமக்கு என்ன தேவையோ, அதை உடலே உருவாக்கிக்கொள்கிறது. உதாரணமாக நமக்கு இரும்புச் சத்து தேவை என்று வைத்துக்கொள்வோம். நாம் தினமும் மீன்தான் சாப்பிடுகிறோம் (என்று வைத்துக்கொள்வோம்). மீனில் அதிகமாக ப்ரோட்டீன்களும், விட்டமின்களும்தான் உள்ளன. ஆனால் மீனிலிருந்து நமக்குத் தேவையான ’அயன்’ எனப்படும் இரும்புச் சத்தை நம் உடல் உருவாக்கிக்கொள்ளும்! பாலில் கால்சியம் அதிகம் உள்ளது. ஆனால் பசுவின் உணவான புல்லிலோ வைக்கோலிலோ கால்சியம் இல்லை! உதாரணமாக புல்லில் மக்னீசியம்தான் உள்ளது. அப்படியானால் பாலுக்குத்தேவையான கால்சியத்தை மக்னீசியத்திலிருந்து பசுவின் வயிறு  உருவாக்கிக்கொள்கிறது என்று அர்த்தம்.

நமக்கும் இதே கதைதான். நமக்கு என்ன சத்துப்பொருள் தேவையோ, அதை அல்லது அவைகளை நாம் சாப்பிடும் அன்றாட உணவிலிருந்தே நமது உடல் உருவாக்கிக்கொள்கிறது. இதற்கு பயோ ட்ரான்ஸ்ஃபர்மேஷன் (biotransformation) என்று பெயர்!

இன்னொரு செய்தியையும் இங்கே சொல்லிவிடுகிறேன். உடலின் பாகங்களெல்லாம் அதி அற்புதமான ஞானத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக நம் குதிகாலின் எலும்புகளைச் சொல்லலாம். நம் உடல் எடையை முழுவதும் தாங்குமாறு அவை உருவாகின்றன. உங்கள் எடை 150 கிலோ  என்றாலும் உங்கள் குதிகாலால் அதைத்தாங்க முடியும். அதனால்தான் நீங்கள் நிற்பது சாத்தியமாகிறது. நாற்பது கிலோ எடையுள்ளவரின் குதிகால் எலும்பை 90 கிலோ எடையுள்ளவரின் குதிகாலில் பொருத்தினால் அவரால் நிற்க முடியாது!  இந்த உருவாக்கத்தை உடலால் மட்டுமே, இயற்கையால் மட்டுமே செய்ய முடியும்.

அறிவித்தல்

உடல் செய்யும் காரியம் இன்னொரு முக்கிய காரியம் அறிவிப்பது. எதை அறிவிப்பது?

நம் தேவைகளையும் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும்தான். பசி, தாகம், தூக்கம், ஓய்வு — இந்த நான்கும் நமக்கான அடிப்படைத் தேவைகள். இந்த நான்கும் இல்லாமல் ஒரு மனிதன் வாழ முடியாது.

baby vomitting bad milkகெட்டுப்போன பாலை பிறந்த குழந்தைக்குக் கொடுத்துப் பாருங்கள். கொஞ்ச நேரத்தில் குழந்தை அந்தப் பாலை வாந்தி எடுத்துவிடும்! குழந்தைக்குத்தெரியுமா, அது கெட்டுப்போன பால் என்று? தெரியாது. ஆனால் குழந்தையின் உடலுக்குத் தெரியும்!

நமக்கும் இதே கதைதான். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுவிட்டால் ஒன்று வாந்தி வரும், அல்லது பேதியாகும். இரைப்பைக்கு மேலே தேவையில்லாத உணவிருந்தால் அது வாந்தியாக வெளியே வரும். ரொம்ப ’வற்புறுத்தி’ அந்த சமாச்சாரங்களை வயிற்றுக்குக் கீழே அனுப்பிவிட்டால் அது செரிக்கப்படாமல் பேதியாக வெளிவரும்.

ஆனால் அறிவாளிகளான நாம் என்ன செய்கிறோம்? வாந்தியையும் பேதியையும் நிறுத்துவதற்கு மருந்துகளை உடனே உட்கொள்கிறோம்! அதாவது, எதெல்லாம் வெளியே போகவேண்டுமோ அதையெல்லாம் உள்ளேயே வைத்திருந்து, நம் உடலைக் கக்கூஸாக மாற்ற கடுமையான முயற்சிகள் செய்கிறோம்! அது கக்கூஸாக மாறிவிட்டதென்றால், ஆஹா வாந்தி வரவே இல்லை என்று சந்தோஷப்படுகிறோம்!

காய்ச்சல் கடுமையாகும்போது நாக்கு கசக்க ஆரம்பிக்கும். ஏன் தெரியுமா? அது உடல் செய்யும் அறிவிப்பு. ஐயா அறிவாளி மனிதனே, நான் ஒரு முக்கியமான வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன், நீ இப்போது சாப்பிடவேண்டாம் என்று சொல்கிறது! ஆனால் நாம் என்ன செய்கிறோம்? நாக்கு கசக்கிறது என்பதால், கசப்புக்குத் ‘தகுந்த’ மாதிரி வறட்டு ப்ரட்டையும் ஓட்ஸ் கஞ்சியையும் போட்டு மாட்டுறோம்!

உண்மையில் காய்ச்சல் என்பது கழிவுகளை வெளியேற்ற உடல் செய்யும் பகீரதப் பிரயத்தனம். நம் தவறான வாழ்முறைகளினால் கழிவுகளை வெளியேறுகின்ற எல்லா வாசல்களையும் நாம் ஒவ்வொன்றாக அடைத்துக்கொண்டே இருந்ததால் கடைசி முயற்சியாக எல்லாக் கழிவுகளையும் வெப்பமாக மாற்றி காய்ச்சல் மூலம் உடல் வெளியேற்றிக்கொண்டிருக்கிறது. அப்போது நாம் செய்யவேண்டிய வேலைகள் இரண்டுதான். ஒன்று ஓய்வெடுப்பது. இரண்டு சாப்பிடாமல் இருப்பது!

காய்ச்சல் வரும்போது நம்மில் பலர் ஓய்வெடுப்பதுண்டுதான். ஆனால் சாப்பிடாமல் இருப்பதில்லை. ’என் ராசா, கஞ்சியாவது குடிச்சிடுப்பா’ என்ற அன்புக்கு நாம் அனைவரும் மதிப்புக் கொடுப்பவர்களாகவே இருக்கிறோம்! காய்ச்சலடிக்கும்போது வெறும் ரசம் சாதமும் நல்ல ஸ்பைஸியான சிக்கன் கறியும் சாப்பிடுபவர்களும் உண்டு. என் நண்பர்கள் பலர் இப்படித்தான். (நானும் காய்ச்சல் காலத்தில் இப்படியான ‘லைட் ஃபுட்’ சாப்பிடுபவனாகத்தான் இருந்தேன்)!

இப்போது உடல் கழிவுகளை வெளித்தள்ளுமா அல்லது உண்ட உணவை செரிக்கும் வேலையைச் செய்யுமா? இரண்டையுமே ஒழுங்காக அதனால் செய்ய முடியாது.

உடலின் அறிவிப்புகளை உதாசீனப்படுத்தினால் என்னாகும்? பார்க்கலாம்.

=======

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை, Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s