நலம் நலமறிய ஆவல் 8 & 9

08– எவ்வளவு கொழுப்பு?

கொலஸ்ட்ரால் பற்றிய கருத்துக்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மனிதனால் உண்டாக்கப்பட்ட கற்பனையான பொய் மட்டுமல்ல, மனிதகுலத்துக்குக் கிடைத்த ஆகப்பெரிய சாபமும் ஆகும் – டாக்டர் பி.எம்.ஹெக்டே, இதயநிபுணர், ஹார்வர்டு

”பயப்படாதீங்க டாக்டர், எனக்கு கொலஸ்ட்ரால் கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும்”

இப்படி டாக்டர் ரவன்ஸ்கோவிடம் சொன்னவர் ஒரு வழக்கறிஞர். அவர் சொன்னது உண்மை. அவருக்கு கொலஸ்ட்ரால் அதிகமாகத்தான் இருந்தது. 400க்கும் மேல்! ”எங்கப்பாவுக்கு இன்னும் அதிகமாக இருந்தது. அவர் 79 வயதுவரை நன்றாக வாழ்ந்தார். என் பெரியப்பாவுக்கு அப்பாவைவிட அதிகமாக இருந்தது. அவருக்கு குடும்ப ரீதியாக மிக அதிக கொலஸ்ட்ரால் இருந்தது (familial hypercholesterolemia). ஆனால் அவரும் ரொம்ப ஆரோக்கியமாக 83 வயதுவரை வாழ்ந்தார்” என்று முடித்தார்.

Uffe2அவர் சொன்னது உண்மைதான். ரவன்ஸ்கோவின் நோயாளிக்கு அப்போது வயது 53. அவரது சகோதரருக்கு 61. அதிகமான கொலஸ்ட்ரால் இருந்தாலும் அவர்களுக்கு இதயம் தொடர்பான எந்தப் பிரச்சனையுமில்லை. கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதற்கான எந்த மருந்து மாத்திரைகளையும் அவர்கள் எடுத்துக்கொள்ளவும் இல்லை!

அமெரிக்காவின் டொரொண்டோ பல்கலைக்கழக மருத்துவமனையின் டாக்டர் ஹென்றி ஷனோஃப் (Henry Shanoff) செய்த ஆராய்ச்சியின்படி ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்தவர்களுக்கு கொழுப்பின் அளவு அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் மறு அட்டாக் வருகிறது என்று கண்டுபிடித்தார். அதை வைத்துப் பார்க்கும்போது அட்டாக் வந்தவர்களின் கொலஸ்ட்ரால் அளவுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாமல் போகிறது.

ரஷ்யாவில் நடந்த இன்னொரு பரிசோதனையில் இன்னும் குழப்பமான முடிவுகள் கிடைத்தன. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்த ரஷ்யன் அகாடமி ஆஃப் மெடிகல் சயின்ஸஸின் டாக்டர் டிமிட்ரி ஷஸ்தோவ் நடத்திய பரிசோதனையில் கொலஸ்ட்ரால் அளவு  குறைவாக இருந்தவர்களுக்கே ஹார்ட் அட்டாக் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது!

அதிக கொலஸ்ட்ரால் அமெரிக்கர்களுக்கு ஆபத்து. ஆனால் கனாடியர்களுக்கும், ஸ்டாக்ஹோமர்களுக்கும் அப்படியில்லை. குறைவான கொலஸ்ட்ரால் அளவு ரஷ்யர்களுக்கு ஆபத்தாக இருந்துள்ளது. அதிகமான கொலஸ்ட்ரால் ஆண்களுக்கு ஆபத்து. ஆனால் பெண்களுக்கு அது தீமை  செய்யவில்லை. ஆரோக்கியமானவர்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் ஆபத்து. ஆனால் இதய நோயாளிகளுக்கு கொலஸ்ட்ராலால் ஆபத்தில்லை. முப்பது வயதுடையவர்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தானதாகவும் நாற்பத்தைந்து வயதைக் கடந்தவர்களுக்கு அப்படி இல்லாமலும் போகிறது!

ஆஹா, அற்புதமான கண்டுபிடிப்புகள். பல நாடுகளில் நடந்த பல பரிசோதனைகளுக்குப் பிறகு மேற்கண்ட முடிவுகளுக்குத்தான் மருத்துவர்களால் வரமுடிந்தது!

இதனால் சகலருக்கும் அறிவிக்கப்படுவது என்னவென்றால், அதிக அளவில் ஒருவர் உடலில் கொலஸ்ட்ரால் இருக்குமானால் அதனால் அவருக்கு ஹார்ட் அட்டாக் வரும் என்று சொல்லிவிடமுடியாது. ஹை கொலஸ்ட்ராலுக்கும் ஹார்ட் அட்டாக்குக்கும் நேரடியான ஒன்றுக்கொன்று தொடர்புள்ள முடிச்சு எதுவும் இல்லை. அதிகபட்சமாக என்ன சொல்லலாம் என்றால், அதிகமான கொலஸ்ட்ரால் தன்னளவில் அபாயகரமானதில்லை. ஆனால் வேறு ஏதாவது பிரச்சனைகளை அது ஏற்படுத்தலாம்!

நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு

கொலஸ்ட்ரால் என்பது ஒரு வித்தியாசமான மாலிக்யூல். அதை லிபிட் (lipid) என்றும் ஃபாட் (fat) என்றும் கூறுகிறார்கள் என்று ஏற்கனவே பார்த்தோம். கொலஸ்ட்ரால் நீரில் கரையாத தன்மை கொண்டது. அதன் காரணமாகவே நம் உடலில் உள்ள உயிரணுக்களெல்லாம் தங்களுக்கான பாதுகாப்புக் கோட்டைச் சுவர்களை எழுப்ப கொலஸ்ட்ராலைப் பயன்படுத்திக்கொள்கின்றன. இந்தச் சுவர்கள் ’வாட்டர் ப்ரூஃப்’ ஆக இருந்தால்தான் நரம்புகளும், உயிரணுக்களும், மரபணுக்களும் பிரச்சனை ஏதுமில்லாமல் செயல்பட முடியும். ஆகவேதான் மூளையிலும் நரம்பு மண்டலத்தின் முக்கிய பகுதிகளிலும் கொலஸ்ட்ரால் உறுதியாக க் குவித்து வைக்கப்பட்டுள்ளது. நம் உடலைக் காப்பது இந்த கொலஸ்ட்ரால் கோட்டைதான் என்று சொன்னால் அது மிகையாகாது. கொலஸ்ட்ராலை ’உயிர் கொடுப்பான்’ (Life  Giver)  என்று வர்ணிக்கிறார் டாக்டர் பி.எம்.ஹெக்டே!

450px-BelleMonappaHegdeநீரில் கரையாத தன்மையைக் கொண்டிருப்பதால் கொலஸ்ட்ரால் ரத்தத்துக்குள் சுற்றிக்கொண்டே இருக்கும். எண்ணெயும் தண்ணீரும் போல ரத்தத்தில் கலக்காமல் கொலஸ்ட்ரால் மிதந்துகொண்டே செல்லும். நீரில் கரையக்கூடிய தன்மைகொண்ட லிபொப்ரோட்டீன்கள் எனப்படும் சமாச்சாரங்கள்தான் கொலஸ்ட்ராலை உடல் முழுக்க ஒரு நீர்மூழ்கிக் கப்பலைப் போல எடுத்துச் சென்றுகொண்டிருக்கும்.

இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் போய்ச்சேர வேண்டிய இடத்தைப் பொறுத்து எச்.டி.எல்.(HDL/ High Density Lipoprotein) என்றோ எல்.டி.எல்.(LDL / Low Density Lipoprotein) என்றோ புதிய பெயர்களைப் பெறுகின்றன. எச்.டி.எல். நல்ல  கொலஸ்ட்ரால் என்றும் எச்.டி.எல். கெட்ட கொலஸ்ட்ரால் என்றும் அறியப்படுகிறது. ஏன்? கொஞ்சம் இருங்கள் பார்க்கலாம்.

எச்.டி.எல்.லின் முக்கிய பணி வெளிப்பக்கமாக இருக்கும் திசுக்களிலிலிருந்து கல்லீரலுக்குக் கொலஸ்ட்ராலைக் கொண்டு செல்வது. அங்கே அது பித்தநீரோடு வெளித்தள்ளப்படுகிறது.

எச்.டி.எல். செய்யும் வேலைக்கு நேர்மாறானதை எல்.டி.எல். செய்கிறது. நம் உடலில் மிக அதிகமான கொலஸ்ட்ரால் உருவாக்கப்படும் கல்லீரலிலிருந்து உடலின் பல பாகங்களுக்கும், இதயத்தின் சுவர்கள்வரை கொலஸ்ட்ராலைக் கொண்டு செல்கிறது எல்.டி.எல். உயிரணுக்களுக்குக் கொலஸ்ட்ரால் தேவைப்படும்போதெல்லாம் இந்த எல்.டி.எல்.தான் அவற்றுக்கு கொலஸ்ட்ராலை ‘சப்ளை’ செய்கிறது.

60-80 விழுக்காடு கொலஸ்ட்ராலை எல்.டி.எல்.தான் உடல் முழுக்கக் கொண்டுசென்று கொடுக்கிறது. 15-20 விழுக்காடு கொலஸ்ட்ரால்தான் எச்.டி.எல். மூலம் கல்லீரலுக்கு வந்து சேர்கிறது.  பின்னே ஏன் எல்.டி.எல். ‘கெட்ட’ கொலஸ்ட்ரால் என்றும் எச்.டி.எல். ‘நல்ல’ கொலஸ்ட்ரால் என்றும் பெயர் வாங்கியது?

எச்.டி.எல்.  ’நார்மல்’ அளவைவிடக் குறைவாக இருந்தாலோ,

எல்.டி.எல். ’நார்மல்’ அளவைவிட அதிகமாக  இருந்தாலோ

ஹார்ட் அட்டாக் வருவதற்கான ரிஸ்க் / வாய்ப்பு அதிகம் என்றும்,

எச்.டி.எல். ’நார்மல்’ அளவைவிட அதிகமாக இருந்தாலோ,

எல்.டி.எல். ’நார்மல்’ அளவைவிடக் குறைவாக இருந்தாலோ

இந்த வாய்ப்பு குறைவு என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

மாரடைப்பை ஏற்படுத்தும் உள்ளார்ந்த சாத்தியக்கூறைக் கொண்டதால் எல்.டி.எல்.லை கெட்டது என்றும், எச்.டி.எல்.லை நல்லது என்றும் சொல்லிவிட்டார்கள். பாவம், அதிகமாக வேலை செய்பவனுக்குக் கெட்ட பெயர்!

ஒடிந்து விழுந்துவிடுவார்களோ என்று நினைக்கும் அளவுக்கு சில பெண்கள் ஒல்லிக்குச்சியாக இருப்பார்கள். நம்ம எல்.டி.எல்.லும் அந்த ரகம்தான். உடலெங்கும் கொலஸ்ட்ராலை எடுத்துச்  செல்லும்போது அதன் தடிமன் குறைவின் காரணமாக வழியிலேயே உடைந்து போகும் வாய்ப்பு உள்ளது. அப்படி உடைந்து போகும்போது ’கப்பல் கவிழ்ந்து’ ரத்தத்தில் கொலஸ்ட்ரால் விழுந்துவிடும். கொலஸ்ட்ரால் அதன் கரையாத்தன்மையால் ரத்த ஓட்டத்தில் கலந்துகொள்ளாமல் விழுந்த இடத்திலேயே குத்துக்கல் மாதிரி உட்கார்ந்து கொள்ளும். அதனால் சீரான ரத்த ஓட்டம் தடைபடும். ரத்தக் குழாய்களின் இடைவெளி குறையும்.

இதைத்தான் நாம் ரத்தக் குழாய் அடைப்பு என்று புரிந்துகொள்கிறோம். இதேபோல தமனிகள், சிரைகள் போன்ற இதயக் குழாய்களின் வழியாக எல்.டி.எல். கொலஸ்ட்ராலை எடுத்துச் செல்லும்போது இப்படி ஆகிவிட்டால், இதயக்குழாய்களில் அடைப்பு ஏற்படும் வாய்ப்பும் உண்டாகிறது. இப்படி வழியிலேயே உடைந்துபோய் கொலஸ்ட்ராலைக் கீழேபோட்டுவிடுவதால் எல்.டி.எல் ’கெட்ட’ கொலஸ்ட்ரால். உடையாமல் கொண்டுபோவதால் எச்.டி.எல். ’நல்ல’ கொலஸ்ட்ரால்!

நல்லவன் கெட்டவன்

கெட்டவன் நல்லவன்

என்று ஒரு ஆத்மா நாம் கவிதையில் வருவது மாதிரி, பல சமயங்களில் நல்லவனே கெட்டவனாகவும் கெட்டவனே நல்லவனாகவும் அவதாரங்களெடுப்பதுண்டு, ஏனெனில் ’ரிஸ்க் ஃபாக்டர்’ என்பது ஒரு சாத்தியக்கூறுதானே தவிர உறுதிப்படுத்தப்பட்ட காரணியல்ல! அதனால்தான் ’அட்டாக்’ வருபவர்களுக்கெல்லாம் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருக்கும் என்று சொல்லமுடியவில்லை! நல்ல கொலஸ்ட்ரால் அதிமாக இருந்தவர்கள் ஹார்ட் அட்டாக் வந்து இறந்த வரலாறும் ஆராய்ச்சியில் உண்டு!

பொய் – 2  — அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுகள் ரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவை அதிகப்படுத்துகின்றன.

ஒட்டகங்களும் பசுக்களும் கொலஸ்ட்ராலும்

கென்யா நாட்டின் சம்பூரு மசாய் ஆகிய பழங்குடியின மேய்ப்பர்கள் மூன்று வேளையும் பால், ரத்தம், மிருகக்கொழுப்பு ஆகியவற்றை மட்டுமே உணவாக எடுத்துக்கொண்டாலும் அவர்களது கொலஸ்ட்ரால் அளவு மிகவும் குறைவாகவே இருந்தது, உதாரணமாக 170 ml/dL தான் இருந்தது.

சோமாலியாவில் இருந்த மேய்ப்பர்கள் தங்கள் ஒட்டகங்களின் பாலைத்தவிர வேறெதுவும் குடிப்பதில்லை. ஒரு நாளைக்கு ஒன்றரை ’காலன்’ பால் என்பது அவர்களுக்கு ’நார்மல்’!  ஒரு பவுண்டு வெண்ணெயில் உள்ள கொழுப்புக்குச் சமம் அது! ஏனெனில் ஒட்டகப்பாலில் பசும்பாலைவிட கொழுப்பு மிக அதிகமாக உள்ளது. என்றாலும் அவர்களது சராசரி கொலஸ்ட்ரால்  அளவு சுமார் 150 ml/dL தான். இது நகரவாழ்க்கை வாழும் மக்களின் கொழுப்பைவிட ரொம்பக் குறைவு!

கொலஸ்ட்ராலும் தேங்காயும்

vlcsnap-2016-05-03-15h27m24s35மிருகக் கொழுப்பைவிட அதிகமாக செறிவூட்டப்பட்ட கொழுப்பு தேங்காயில் இருப்பதாக நம்பப்பட்டது. நீயூஸிலாந்தைச் சேர்ந்த டாக்டர் அயன் ப்ரியரும் ( Dr Ian Prior) அவரது குழுவும் டொகேலா (Tokelau), புகாபுகா (Pukapuka) ஆகிய தீவுகளில் வாழ்ந்த மனிதர்களிடம் ஓர் ஆராய்ச்சியைச் செய்தார்கள். அத்தீவில் வாழ்ந்தவர்களின் பிரதான உணவு தேங்காய்தான். தேங்காய்த் தோசை, தேங்காய் இட்லி, தேங்காய்ச் சோறு, தேங்காய்ப் பொடி – இப்படி! அவர்களின் எல்லா உணவு வகைகளிலும் தேங்காய் இருக்கும். அதல்லாமல் மீன்களையும், கோழிகளையும்கூட அவர்கள் விரும்பி உண்டனர். கோழிகளுக்கும் தேங்காய்தான் பிடித்தமான ’கொத்து’க் கறி!

அத்தீவின் தேங்காய் மக்களின் தோலுக்குக் கீழே ஒரு சிரிஞ்சைச் செலுத்தி கொழுப்பைக் கொஞ்சம் உறிஞ்சி மருத்துவர் குழு ஆராய்ச்சி செய்தது! அதிகமான கொழுப்பு உணவால் எவ்வகையான பாதிப்புகளுக்கு, முக்கியமான இதய பாதிப்புக்கு, உள்ளாகி இருக்கிறார்கள் என்று கண்டு பிடிப்பதுதான் ஆராய்ச்சியின் பிரதான நோக்கம்! அப்படி உறிஞ்சி  எடுக்கப்பட்ட கொழுப்பின் அளவு மேற்கத்திய உலகில் வாழ்ந்த நவநாகரீக மக்களிடம் இருந்த கொழுப்பைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது. அவர்கள் ஆராய்ச்சிக்கு பலம் சேர்ப்பதாக இருந்தது அந்தக் கண்டுபிடிப்பு.

ஆனால் அதற்குப் பிறகுதான் அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. 1966ல் ஏற்பட்ட ஒரு சூராவளிக் காற்றில் டொகேலா தீவிலிருந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்த்து வீழ்த்தப்பட்டன. அதற்குமே அத்தீவுகளில் இருக்க முடியாமல் மக்கள் நியுஸிலாந்துக்குக் குடிபெயர்ந்தனர். அங்கே நகர வாழ்க்கையின் உணவுப் பழக்க வழக்கங்களுக்கு மாறிக்கொண்டனர். வேறு வழி? அதனால் செறிவூட்டப்பட்ட கொழுப்புச் சத்துக்களால் தீவுகளில் கிடைத்துக்கொண்டிருந்த கலோரிகளில் பாதிதான் அவர்களுக்கு நியூஸிலாந்தில் கிடைத்தது.

ஆனாலும் நியூஸிலாந்துக்குச் சென்ற டொகேலா தீவு மக்களின் கொல்ஸ்ட்ரால் அளவு தீவில் இருந்ததைவிட பத்து விழுக்காடு அதிகரித்திருந்தது! 1950களில் நடந்த ஃப்ராமிங்காம் (Framingham) ஆராய்ச்சியில் ஆயிரம் பேர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்கள் உண்ட உணவுக்கும் அவர்கள் ரத்தத்தில் இருந்த கொலஸ்ட்ரால் அளவுக்கும் தொடர்பே இல்லை என்பது தெளிவானது!

கொலஸ்ட்ரால் என்ற வெள்ளையான, சுவையற்ற, மணமற்ற அந்தப் பொருள்தான் மனித உடலின் ஆதார சுருதி. கொலஸ்ட்ராலைக் குறைக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு அதற்காக விற்கப்படுகின்ற மருந்து மாத்திரைகள் எல்லாமே இறப்புச் சான்றிதழில் இறப்புக்கான காரணத்தை வேண்டுமானல் மாற்றலாமே தவிர, இறப்புத் தேதியை மாற்றாது. வேண்டுமானால் தேதியை கொஞ்சம் முற்படுத்தலாம் என்கிறார் டாக்டர் ஹெக்டே!

கொலஸ்ட்ரால் பற்றிய ஆராய்ச்சிகளெல்லாம் கற்பனையானதொரு அச்சத்தை நிரூபிக்கவே செய்யப்பட்டன என்பதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. மனித குலத்துக்கான சாபம் அது என்று டாக்டர் ஹெக்டே சொல்வதைப் பற்றி தீவிரமாக நாம் யோசிக்க வேண்டியுள்ளது. அவர் மேலும் சொல்கிறார்:

”தேங்காய் எண்ணெயில் செறிவூட்டப்பட்ட கொழுப்பு (fat) கொஞ்சம் உள்ளது. ஆனால் அது மனிதர்களுக்கு நன்மை செய்யக்கூடியது. சிலவகையான கேன்ஸரிலிருந்து தேங்காய் எண்ணெய் நம்மைக் காப்பாற்றும் தன்மை கொண்டது. உடலில் கேன்ஸரை உருவாக்கும் ’ரவுடி’ உயிரணுவை மேற்கொண்டு வளராமல் தடுப்பது தேங்காய் எண்ணெயாகும்”.

”தேங்காய் எண்ணெயையும் தேங்காயையும் அன்றாடம் பயன்படுத்துகின்ற, உடலில் தேய்த்துக்குளிக்கின்ற கேரளப் பெண்களின் தலையில் பொடுகை நான் கண்டதில்லை.

”அதுமட்டுமல்ல. தேங்காயில் மானோலாரியேட் (monolaureate) என்ற ஒரு பொருள் உள்ளது. இந்த உலகிலேயே மானோலாரியேட் இருக்கும் இன்னொரு இடம் தாய்ப்பால்தான். எனவே தேங்காயும் தேங்காய் எண்ணெயும் மோசமானதென்று சொன்னால், தாய்ப்பாலும் மோசமானதே”! என்று சொல்லி சிரிக்கிறார் ஹெக்டே.

மு.ஆ.அப்பனும் தேங்காயும்

தேங்காயைப் பற்றியும் தேங்காய்ப்பாலைப் பற்றியும் டாக்டர் ஹெக்டே இவ்வளவு சொன்னபிறகு எனக்கு இயற்கை உணவு நிபுணர் மு.ஆ.அப்பனின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. தேங்காய்க்கான மரியாதையாக எண்ணி அந்த நிகழ்ச்சியை இங்கே நான் பதிவிடுகிறேன்.

Appanஅப்பன் அவர்கள் இருபது வயது இளைஞராக இருந்தபோது அவருக்கு தொழுநோய் வந்தது. காட்சிக்கும் அனுபவத்திற்கும் இந்த உலகில் தொழுநோயைவிட மோசமான நோய் ஒன்று இருக்கிறதா என்று தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக முழு உடலும் அழுகிப்போகும். துர்நாற்றம் வீசும். தோல் முழுக்க செந்நிறத்தில் உணர்ச்சியற்ற பற்றுக்கள் தோன்றும். ’ரத்தக்கண்ணீர்’ படத்தில் எம்.ஆர்.ராதாவின் career best performance நினைவுக்கு வருகிறதா?

அப்பன் அவர்கள் எட்டு ஆண்டுகள் ஆங்கில மருத்துவர்களின் ஆலோசனைப்படி ‘டாப்சோன்’ (Dapsone) போன்ற ஆங்கில மருந்துமாத்திரைகளை எடுத்து வந்தார். அதன் விளைவாக அவரது தொழுநோய் இன்னும் தீவிரமானது! நம்பிக்கையற்றுப் போன ஒரு நிலையில் ஒரு சித்தராக இருந்த அவரது மூத்த சகோதரர் ராமகிருஷ்ணனிடமிருந்து எல்லா மருந்து மாத்திரைகளையும் தூக்கிப் போடச்சொல்லியும் இயற்கை உணவுக்கு மாறச்சொல்லியும் உத்தரவு வந்தது.

இயற்கை உஷ்ணமான வெயில் பட்டு விளைந்த, சமையல் நெருப்பு படாத, இயற்கை உணவுகள். பழங்கள், காய்கறிகள், சிறு தானிய வகைகள். முக்கியமாகத் தேங்காய். மூன்று வேளையும். அல்லது பசிக்கும் போதெல்லாம். அரை மூடி ஒரு மூடி என்று தேங்காயைத் துருவி அவர் மென்று சாப்பிட்டார். அதோடு பழங்கள் இன்னபிற. ரொம்ப கஷ்டம்தான். அடிக்கடி பசிக்கும். ஏனெனில் சமைத்த உணவுகளைப்போல ஃபுல் மீல்ஸ் கொடுத்து வயிறை ‘பாக்’ பண்ணுவது சாத்தியமில்லை. பசித்தபோதெல்ல்லாம் தேங்காய்த் துருவல். அல்லது பழங்கள்தான். ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் மாதிரி மூன்றே மாதங்களில் தொழுநோய் முற்றிலுமாகக் குணமானது!

இந்த உண்மையான உலக அதிசயம் முக்கியமாகத் தேங்காயினால் நடந்துள்ளது. இந்த உலக வரலாற்றில் இயேசு கிறிஸ்துவுக்குப் பிறகு தொழுநோயை தேங்காய்தான் குணப்படுத்தியுள்ளது என்று நான் சொன்னால் அது மிகையல்ல.  ‘இயற்கை உணவின் அதிசயம், ஆரோக்கிய வாழ்வின் ரகசியம்’ என்று அப்பன் ஒரு நூலும் எழுதியுள்ளார்.  சமைக்கப்படாத, இயற்கையான உணவின் உன்னதத்துக்குச் சான்றாக, வாழும் அதிசயமாக அப்பன் வாழ்ந்துகொண்டிருக்கிறார். முழுக்க முழுக்க சமைக்காத உணவுகளுக்கு நம்மால் மாற முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இயற்கையான உணவின் மகத்துவத்தை அவர் வாழ்க்கை அனுபவங்களிலிலிருந்து நம்மால் நிச்சயம் உணர்ந்துகொள்ள முடியும். குறிப்பாக தேங்காயின், இளநீரின், வழுக்கையின், தேங்காய்ப்பாலின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும். கிட்டத்தட்ட எண்பது வயதாகும் அப்பன் இன்னும் ஆரோக்கியமாக வாழ்ந்துகொண்டு, மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ வழிவகைகளை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாகவும் நூல்கள் மூலமாகவும் சொல்லிக்கொண்டிருக்கிறார்!

டாக்டர் ராவன்ஸ்கோவின் முட்டைப் பரிசோதனை

heart eggநாம் உண்ணும் உணவுப் பண்டங்களிலேயே முட்டையில்தான் மிகமிக அதிகமான அளவு கொலஸ்ட்ரால் உள்ளது என்று கூறப்படுகிறது. மாரடைப்பு வந்தவர்கள், ஒருமுறை ஆஞ்சையோப்ளாஸ்டி அல்லது பைபாஸ் செய்துகொண்டவர்களுக்கு மருத்துவர்கள் கூறும் முக்கிய அறிவுரைகளில் ஒன்று முட்டை சாப்பிட வேண்டாம் என்பது. இல்லை, அதெல்லாம் முடியாது, சிக்கன் இல்லாமல்கூட நான் இருந்துவிடுவேன், ஆனால் அதன் பிள்ளையான முட்டை இல்லாமல் என்னால் வாழமுடியாது என்று கூறுபவர்களுக்கு டாக்டர்கள் தரும் கருணை அனுமதி, மஞ்சள் கரு வேண்டாம், வெள்ளைக்கருவை மட்டும் எடுத்துக்கொள்ளலாம் என்பதுதான்! மஞ்சளில் மிக அதிகமான அளவு கொலஸ்ட்ரால் இருக்கிறதாம்!

அப்படியானால் அதிகமாக  முட்டை சாப்பிடுபவர்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவு கூடவேண்டும், அல்லவா? இதைப்பற்றி ஒரு நிச்சயமான முடிவுக்கு வர டாக்டர் ராவன்ஸ்கோவ் தன்னை வைத்தே ஒரு பரிசோதனை நிகழ்த்தினார். ஒரு வாரத்துக்கு முட்டைகளை அதிகமாக எடுத்துக்கொண்டார். முட்டைகளைச் சாப்பிடுவதற்கு முன் தனது கொலஸ்ட்ரால் அளவு என்ன என்பதையும், ஒவ்வொரு நாளும் முட்டை சாப்பிட்ட பிறகு கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு இருந்தது என்பதையும் குறித்துக்கொண்டார்.

முதல் நாள் ஒரேயொரு முட்டை சாப்பிட்டார். அப்போது அவரது கொலஸ்ட்ரால் அளவு 278 mg/dl இருந்தது. இரண்டாவது நாள் நான்கு முட்டைகள், மூன்றாவது நாள் ஆறு முட்டைகள் சாப்பிட்டார்! ஆனால் மூன்று நாட்களும் கொலஸ்ட்ரால் அளவு இம்மிகூடக் கூடவில்லை. நான்காவது நாளிலிலிருந்து எட்டாவது நாள்வரை  ஒவ்வொரு நாளும் எட்டு முட்டைகளைக் கபளீகரம் செய்தார்! முட்டைகளின் அளவு அதிகமாக அதிகமாக, உடலில் இருந்த கொலஸ்ட்ராலின் அளவு குறைந்துகொண்டே போனது! எட்டாவது நாள் அவரது ரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு 246 mg/dlக்குப் போனது!

எவ்வளவுக்கெவ்வளவு கொலஸ்ட்ரால் உள்ள உணவை நாம் அதிகமாக எடுத்துக்கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நமது உடல் இயற்கையாகவே உருவாக்கும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்துக்கொள்கிறது. ஏனெனில் நமது தேவையைப் பொறுத்து நமக்கான கொலஸ்ட்ராலை  நம் உடலே உருவாக்கிக் கொள்கிறது என்பதை அவர் உணர்ந்துகொண்டார்.

இன்னும் நிறைய கொழுப்பு உள்ளது…

09– எவ்வளவு கொழுப்பு?

நீங்கள் முட்டாளாக்கப்பட்டுவிட்டீர்கள் என்று புரியவைப்பதைவிட மக்களை முட்டாளாக்குவது எளிமையானது. – மார்க் ட்வைன்

பொய் 3 – அதிக கொலஸ்ட்ரால் இதயத்தின் தமனிகளை அடைக்கிறது.

கொலஸ்ட்ராலின் அளவு ரத்தத்தில் அதிகமாகும்போது அது இதயக்குழாய்களில் போய்த் தங்கிக்கொண்டு அடைத்துக்கொள்கிறது. அதனால் இதயத்தின் வேலை சீர்கெட்டு மாரடைப்பு வரும் வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர்களால் சந்தேகத்திற்கிடமின்றி, விவாதங்களுக்கு அப்பாற்பட்டு நம்பப்படுகிறது.

ரத்தத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் கொலஸ்ட்ரால் மாலிக்யூல்கள் இதயக்குழாய்களின் அறைகளில் போய் தங்கிக்கொண்டு ரத்தம் சீராகச் செல்வதைத் தடுக்கும் என்பது உண்மையானால், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்களுக்குத்தானே இப்பிரச்சனை ஏற்படவேண்டும்? அதுதானே நியாயம்? ஆனால் அப்படித்தான் நடக்கிறதா?

1936ல் நியூயார்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த லாண்டே, ஸ்பெர்ரி ( Lande and Sperry) என்ற இரண்டு நோய்க்குறியியல் பேராசிரியர்கள் இதுபற்றி ஆராய்ச்சி செய்தனர். ஆராய்ச்சியின் முடிவில் ரத்ததில் இருக்கும் அதிக கொலஸ்ட்ரால் அளவுக்கும் இதயக்குழாய் அடைப்புக்கும் தொடர்பில்லை என்று தெரியவந்தது!

அதன்பிறகு கனடாவைச் சேர்ந்த டாக்டர் ஜெ.ஸி.பேட்டர்சன் (Dr J.C. Paterson) போர்களில் நீண்டகால அனுபவம் பெற்று மருத்துவமனைகளில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த 800 பேரைத் தன் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தினார். அவ்வப்போது அவர்களது ரத்த மாதிரிகளை ஆராய்ந்தார். அவர்களில் இறந்தவர்களுக்குப் பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டது. அவர்களது ரத்தத்தில் இருந்த கொலஸ்ட்ராலின் அளவுக்கும் இதயக்குழாய் அடைப்புக்கும் எந்த தொடர்பும் இருந்ததாகத் தெரியவில்லை.

இதேபோன்ற பரிசோதனையை ஆக்ராவிலிருந்த டாக்டர் மதுர் என்பவரும் அவரது சகாக்களும் செய்தனர். இருபது நோயாளிகளின் ரத்தத்தை அவர்கள் இறப்பதற்குச் சற்று முன்னும், இறந்து 16 மணி நேரம் கழித்தும் எடுத்துப் பரிசோதித்தனர். பின்னர் திடீரென விபத்தில் இறந்துபோன இருநூறு பேர்களின் ரத்தத்திலும் அப்பரிசோதனையைச் செய்தனர். ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவுக்கும் இதயக் குழாய் அடைப்புக்கும் தொடர்பில்லை என்று டாக்டர் பாட்டர்சன் வந்த முடிவுக்கே அவர்களும் வந்தனர். போலந்து, கௌதமலா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளிலும் இது உறுதியானது.

பொய் 4 – கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்தால் வாழ்நாள் அதிகமாகும்.

மிருகக் கொழுப்புள்ள உணவை வருஷக்கணக்கில் போட்டு மாட்டியிருந்தாலும் உடலின் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்பதையும்,  கொலஸ்ட்ரால் அளவு குறைவாக இருந்தாலும் மாரடைப்பு வருமென்பதையும் விஞ்ஞானப்பூர்வமான பல பரிசோதனைகள் நிரூபித்தன. உண்மை இப்படி இருக்க, கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதன் மூலமோ அல்லது கொழுப்புச் சத்துக் குறைவான உணவை உட்கொள்வதன் மூலமோ மாரடைப்பு வராமல் தடுக்க முடியுமா? வாழ்நாளை அதிகரிக்க முடியுமா? முடியாதென்பதுதான் விஞ்ஞானம் நிரூபித்துச் சொன்ன பதில்!

ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால் வரக்கூடிய ஆபத்துகளைவிட, அளவைக் குறைத்தால் அதிக ஆபத்துகள் ஏற்படும் என்கிறார் டாக்டர் ராவன்ஸ்கோவ்! ஆனால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்தால்  என்னாகும் என்று மிகத்துல்லியமாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், புகைபிடித்தலை நிறுத்துதல், அதிக எடையைக் குறைத்துக்கொள்ளுதல், உடற் பயிற்சி செய்தல், வேலையை மாற்றிக்கொள்ளுதல், அல்லது வேலையை விட்டுவிடுதல், காதலித்தல், விவாகரத்து செய்தல் (திருமணத்திற்குப் பிறகுதான்), ரொம்ப சூடா இருக்குன்னு ஏழைகளின் ஊட்டிகளை நோக்கி இடம் பெயர்தல் போன்ற எந்தக் காரியமும் செய்யாமல், பழைய வாழ்க்கை முறையையே கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்ததால் குறிப்பிட்ட விளவு ஏற்பட்டதா அல்லது கொடைக்கானல் குளிரை காதலியை வைத்து சமாளிக்க முயன்று முடியாமல் கோபித்துக்கொண்டதால் அப்படியொரு விளைவு ஏற்பட்டதா என்று துல்லியமாகச் சொல்ல முடியும் என்றும் அவர் ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார்!

குறிப்பிட்ட வகை ‘டயட்’ நம்மைக் காப்பாற்றுமா?

லண்டனில் இதுபற்றிய ஒரு ஆராய்ச்சி நடந்தது. நான்கு லண்டன் மருத்துவமனைகளில் மாரடைப்பு வந்து சேர்க்கப்பட்டிருந்த 400 பேருக்கு மிருகக்கொழுப்புக்கு பதிலாக சோயா மொச்சை எண்ணெய் கொடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகள் இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டது. சோயா எண்ணெய் கொடுக்கப்பட்டவர்களுக்கும், கொடுக்கப்படாதவர்களுக்கும் இதய வால்வுகளில் அடைப்பு ஏற்படத்தான் செய்தது! இன்னும் சொல்லப்போனால் சோயா எண்ணெய் சாப்பிட்டவர்களின் இதயங்களின் பெருந்தமனிகளில் மற்றவர்களைவிட அதிகமாக கொலஸ்ட்ரால் இருந்தது!

இதயக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதன் மூலமாக இறப்பு ஏற்படுவது குறைந்துபோனது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அடைப்பு ஏன் ஏற்படுகிறது, அது ஏன் குறையவில்லை என்று மேற்கண்ட பரிசோதனைகள் மூலம் தெரியவில்லை. எனவே கொழுப்புச்சத்துள்ள உணவுகளைக் குறைத்துக்கொள்வதுதான் இம்மாதிரியான அடைப்புகளிலிலிருந்து மீள வழி என்று சொல்லமுடியவில்லை. இன்னின்ன மாதிரியான ’டயட்’ எடுத்துக்கொண்டால் பிரச்சனை வராமல் வாழலாம் என்று சொல்லமுடியவில்லை. ’டயட்’ட்டுக்கும் உடலில் ஏற்படும் பிரச்சனைக்கும் நேரடியான தொடர்பு ஏதுமில்லை என்பதைத்தான் பல ஆண்டுகளாக செய்யப்பட்ட பரிசோதனைகள் காட்டின.

அதோடு, பரிசோதனைகளெல்லாம் பெரும்பாலும் முதியவர்களிடம்தான் செய்யப்பட்டன. அவர்களில் பலர் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமைகளாக இருந்தனர். அவர்களின் இதயநோய்கள் அவர்களின் கெட்ட பழக்கங்களினாலேயே ஏற்பட்டிருந்தன. உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொண்டதால் பெரிய நன்மையோ தீமையோ ஏற்படவில்லை.

விதவிதமான பரிசோதனைகளும் விநோத விளைவுகளும்

1967ல் அமெரிக்காவில் ஒரு பரிசோதனை நடத்தப்பட்டது. அதுவும் ஏழாண்டுகளுக்கு. ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க அமெக்க அரசின் ஆதரவோடு தேசிய இதய, நுரையீரல் மற்றும் இரத்த இன்ஸ்ட்டிட்யூட் நடத்திய மெகா பரிசோதனை அது. சிகாகோ பேரா. ஜெரமியா ஸ்டானம்லர் (Prof Jeremiah Stamler) தலைமையில் அது நடத்தப்பட்டது. த க்ரோனரி ட்ரக் ப்ராஜக்ட் (The Coronary Drug Project) என்று அதற்குப் பெயர்.

Dr J Stamler53 மருத்துவமனைகளிலிருந்து நாற்பதிலிருந்து ஐம்பது வயதுக்குட்பட்ட 8000 பேர் பரிசோதனைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களுக்கு நிகோடினிக் ஆஸிட்கள், க்ளோஃபைப்ரேட்டுகள், தைராய்டு ஹார்மோன்கள் மற்றும் எஸ்ட்ரோஜன் எனப்படும் செக்ஸ் ஹார்மோன்கள் போன்ற மருந்துகள் கொடுக்கப்பட்டன. ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதன் மூலம் இதய நோய்கள் வராமல்  அவை அவர்களைக் காப்பாற்றும் என்று நம்பப்பட்டது. ஆனால் 18 மாதங்கள் அம்மாத்திரைகளை எடுத்துக்கொண்டதற்குப் பின் நடந்தது என்ன?

மாரடைப்பு வருவதைத் தடுப்பதற்கு பதிலாக நோயாளிகளில் பலருக்கு மாரடைப்பு ஏற்பட்ட ஆரம்பித்தது! அதுமட்டுமல்ல. ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட்டது. இன்னும் ஒருபடி மேலே போய் பெண்களைப் போல ஆண்களுக்கு மார்பகங்கள் வளர ஆரம்பித்தன! ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண்ணிருக்கிறாள் என்ற தத்துவத்தை  அம்மாத்திரைகள் நிரூபித்தன! அதோடு விட்டதா என்றால் இல்லை. கேன்ஸரும் அவர்களுக்கு வர ஆரம்பித்தது! க்ளோஃபப்ரேட் கொடுக்கப்பட்ட பலர் செத்தே போனார்கள்!

திங்கள் கிழமை வந்த தலைவலிக்கு எடுத்துக்கொண்ட மாத்திரை வெள்ளிக்கிழமை வரப்போகும் தலைவலியை குணப்படுத்தும் என்று சொல்வது மாதிரி அப்பரிசோதனைகள் இருந்தன என்கிறார் டாக்டர் ராவன்ஸ்கோவ்!

பொய் 5 – ஸ்டாடின்கள் மனிதகுலத்துக்குக் கிடைத்த வரப்பிரசாதம்

Statinsரத்ததில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படும் மாத்திரைகளின் பொதுப்பெயர் ஸ்டாடின் (Statin). இந்தப் பெயரை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளேன். நம் உடல் தயாரிக்கும் முக்கியமான பொருள்களின் அளவைக் குறைப்பது இதன் வேலை. நமது உடல் நமக்காகத் தயாரிக்கும் முக்கிய பொருள்களில் ஒன்றுதான் கொலஸ்ட்ரால் என்று ஏற்கனவே பார்த்தோம். அதன் அளவைக் குறைக்க ஸ்டாடின்கள் பயன்படுத்தப்பட்டன.

1980களில்தான் ஸ்டாடின்கள் மருந்துக் கம்பனிகளால் அறிமுகப்படுத்தப்பட்டன. ஸ்டாடின்களுக்கு முந்தையை மருந்துகள் கொலஸ்ட்ரால் அளவை 15லிருந்து 20 விழுக்காடுவரைதான் குறைத்தன. ஆனால் ஸ்டாடின்கள் 30லிருந்து 40 விழுக்காடுவரை  குறைத்தன என்று சொல்லப்பட்டது. ஆரோக்கியமான மனிதர்களுக்கும், இதய நோய் இருந்தவர்களுக்கும் செய்யப்பட்ட பல பரிசோதனைகளுக்குப் பிறகு கீழ்க்கண்ட முடிவுகளுக்கு வந்தார்கள்.

ஒரு முறை மாரடைப்பு வந்தவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு ஸ்டாடின் மாத்திரை எடுத்துக்கொண்டால் 93 அல்லது 94 விழுக்காட்டினர் நான்கிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு மீண்டும் மாரடைப்பு வந்து இறக்காமல் இருக்கும் சாத்தியமுண்டு. மாத்திரை எடுத்துக்கொள்ளாமல் இருந்தால் 92 விழுக்காட்டினருக்கு அந்த சாத்தியமுண்டு! மாத்திரை எடுத்துக்கொண்டால் ஒரு வாரத்தில் குணமாகும், எடுக்காவிட்டால் ஏழு நாட்களில் குணமாகும் என்ற திரைப்பட வசனத்தை நினைவுபடுத்துகின்றன ஸ்டாடின் பரிசோதனகள்!

இதுமட்டுமல்ல. ஆரோக்கியமானவர்களுக்கு ஸ்டாடின் கொடுத்தால் அது எந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்காகக் கொடுக்கப்படுகிறதோ அதே பிரச்சனையை ஏற்படுத்தலாம் என்பதும் கண்டறிந்த முடிவுகளில் ஒன்று! நமது தசைகளும் கல்லீரலும் ஸ்டாடின்களால் பாதிக்கப்படும் வாய்ப்புண்டு. நினைவாற்றல் இழப்பும் ஸ்டான்களால் ஏற்படும் முக்கிய பக்க விளைவுகளில் ஒன்றாகும்.

டாக்டர் டுவான் க்ராவ்லினுக்கு நடந்தது என்ன?

Graveline-deடாக்டர் டுவான் எட்கார் க்ராவ்லின் (Duane Graveline) ஒரு நாசா (NASA) விண்வெளி வீரரும், விண்வெளி மருத்துவ ஆராய்ச்சியாளருமாவார். ’Lipitor, Thief of Memory’ என்ற அவரது நூலில் அவருக்கு நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார். அவருக்கு அதிக அளவில் கொலஸ்ட்ரால் இருந்ததனால் லிபிட்டர் என்னும் ஸ்டாடின் கொடுக்கப்பட்டது.  அந்த மாத்திரை எடுத்துக்கொண்ட ஆறு வாரங்களுக்குப் பிறகு ஒருநாள் அவர் தன் வீட்டுப்பக்கம் சுற்றிக்கொண்டிருந்தார். ‘ஏங்க, இப்புடி சுத்திகிட்டிருக்கீங்க? உங்களுக்கு என்னாச்சு? நம்ம காருக்குள்ள வாங்க’ என்று அவர் மனைவி அழைத்தார். ஆனால் மனைவியை அவருக்கு அடையாளம் தெரியவில்லை! ஆஹா, தமிழ்நாட்டுக் கணவன்மார்களுக்கு மிகவும் அவசியமான மாத்திரை என்று தோன்றுகிறாதா?! ரொம்ப கஷ்டப்பட்டு, வற்புறுத்தித்தான் அவரை காருக்குள் அழைத்துச் செல்ல முடிந்தது! அதோடு கதை முடிந்ததா என்றால் இல்லை.

அவரைப் பரிசோதித்த நரம்பியல் நிபுணருக்கு அவரது நினைவாற்றல் இழப்புக்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை. எல்லாம் ‘நார்ம’லாகத்தான் இருந்தது, மறதியைத் தவிர. அடுத்தமுறை வழக்கமான ’செக்அப்’பின்போது மீண்டும் நாசா டாக்டர்கள் அவருக்கு லிபிட்டர் கொடுத்தார்கள். அடுத்த ஆறு வாரங்கள் கழித்து மீண்டும் நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டது டாக்டர் க்ராவ்லினுக்கு. இந்த முறை 12 மணி நேரங்களுக்கு மறதி நீடித்திருந்தது.

இந்த முறை உயர்நிலைப் பள்ளி வாழ்க்கைக்குப் பிறகான எதுவுமே அவருக்கு நினைவில் வரவில்லை! அவருடைய கல்லூரி வாழ்க்கை, திருமணம், நான்கு குழந்தைகள், நாசாவில் டாக்டரானது, ரிடையர் ஆனது, எட்டு புத்தகங்கள் எழுதியது — எதுவுமே நினைவில் இல்லை! எங்கே செல்லும் இந்தப் பாதை என்று நம்ம ’சேது’ மாதிரி ஆகிப்போனார்!

Lipotorகடைசியில் லிபிட்டர் ஸ்டாடின்தான் தன்னுடைய வில்லன் என்று அவரே கண்டுபிடித்தார். அதன்பிறகுதான் அந்த ஸ்டாடினின் சாத்தானிய வேலைகள் பற்றி மேலே சொன்ன புத்தகத்தை எழுதினார்!

அவர் அப்படி எழுதிய பிறகு தங்களுக்கும் அப்படிப்பட்ட பிரச்சனைகள் இருந்ததாக  ஸ்டாடின் எடுத்துக்கொண்ட ஆயிரக்கணக்கானோர் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை வெளிப்படையாக ஒத்துக்கொண்டனர்.

ஸ்டாடினும் பாலிநியூரோபதியும்

மூளையின் வெளிப்பக்க நரம்புகள் பாதிக்கப்படுவதற்குப் பெயர் பாலிநியூரோபதி. ஒருவருக்கு அது வந்துவிட்டால் பாதங்களில் தொடங்கி உடல் முழுக்க பல பாகங்களும் கடுமையாக வலிக்க ஆரம்பிக்கும். எரியும். தொடுஉணர்ச்சி முழுமையாக அற்றுப்போகலாம். தசைகளுக்கு பலவீனம் ஏற்படும். நடக்க முடியாமல் போகலாம்.

டென்மார்க்கில் டாக்டர் டேவிட் என்பவர் தலைமையில் நடந்த பரிசோதனயில் ஆயிரக்கணக்கானோர் பரிசோதிக்கப்பட்டனர். ஸ்டாட்டின் எடுத்துக்கொண்டவர்களுக்கு, எடுத்துக் கொள்ளாதவர்களைவிட 16 மடங்கு அதிகமாக பாலிநியூரோபதி பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது!

கேன்ஸரை உருவாக்கும் ஸ்டாட்டின்

எல்லாவற்றுக்கும் மேலாக, ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதற்காக உபயோகிக்கப்படும் ஸ்டாட்டின்கள் கேன்ஸரை உருவாக்குகின்றன என்று கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக் குழு கூறியது!

ஓர் எச்சரிக்கை

ஒரு மருந்தை ஆயிரக்கணக்கான மனிதர்களுக்குக் கொடுத்துப் பரிசோதிக்க வேண்டுமென்றால் அதற்குப் பல கோடிகள் செலவாகும். அத்தகைய செலவுகளை ஏற்றுக்கொள்ள மருந்துக் கம்பனிகள் தயாராக இருந்தன, இருக்கின்றன. ஏன்? செலவு செய்ததைவிட பல மடங்கு அதிகமாக அம்மருந்துகளை விற்பதன் மூலம் லாபம் சம்பாதிக்க முடியும் என்று அவைகளுக்குத் தெரியும். அதனால் மேய்ப்பனுடைய வேலையைச் செய்யும் ஓநாய்களை எப்படி நம்பமுடியும் என்று கேட்கிறார் டாக்டர் உஃபே!

கொழுப்பு சில உண்மைகள்:

 • கொழுப்பு என்று அறியப்படும் கொலஸ்ட்ரால் உடலுக்கு மிகவும் அவசியமானது. நமது உடலில் உள்ள கோடிக்கணக்கான உயிரணுக்களை இழுத்துப் பிடித்து வைத்துக்கொண்டிருப்பது இந்த கொலஸ்ட்ரால்தான்.
 • நாம் சாப்பிடுவதால் உண்டாகும் கொழுப்பைவிட மூன்று அல்லது நான்கு மடங்கு கொலஸ்ட்ராலை நம் உடலே உருவாக்கிக்கொள்கிறது. 90 விழுக்காடு கொலஸ்ட்ராலை லிவரே உருவாக்கிக் கொள்கிறது. பத்து விழுக்காடு கொலஸ்ட்ராலைத்தான் உணவு கொடுக்கிறது.
 • கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவை நாம் சாப்பிடும்போது குறைவாகவும், கொழுப்புச்சத்து குறைவான உணவை நாம் சாப்பிடும்போது அதிகமாகவும் கொலஸ்ட்ராலை உடல் உற்பத்தி செய்துகொள்கிறது!
 • உடலில் உண்டாகியிருக்கும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதற்காக நாம் சாப்பிடும் மாத்திரை மருந்துகளால் நம் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைகிறது. நம் வாழ்நாளும் குறைந்துபோகிறது. முக்கியமாக நமது கல்லீரல் பாதிக்கப்படுகிறது.
 • ஸ்டாடின்கள் (Statins) எனப்படும் அவ்வகை மருந்துகள் கேன்சரை ஏற்படுத்த வல்லவை.
 • உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவு ரொம்பவும் குறைந்துபோய்விட்டால் உங்களுக்கு வன்முறை உணர்வும், தற்கொலை செய்துகொள்ளும் எண்ணமும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
 • கொழுப்புச்சத்து அதிகமாக உள்ள வயதானவர்கள், குறைவாக உள்ள வயதானவர்களைவிட அதிககாலம் உயிர் வாழ்கிறார்கள்.
 • உங்கள் உணவில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவுக்கும் உங்கள் ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவுக்கும் தொடர்பில்லை. முன்னது பின்னதை பாதிப்பதில்லை.
 • ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் இருக்குமானால் அதில் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. அது இதயத்தின் தமனிகளையும் நாளங்களையும் அடைத்துவிடும் என்பது விஞ்ஞானத்தின் தவறான கருத்தாகும். நமக்கு வயதாகும்போது நமது இதயத்தின் நாளங்கள், தமனிகள், அதைச்சுற்றியுள்ள தசைகள் நார்களெல்லாம் நெகிழ்வுத்தன்மை குறைந்து விறைப்பாகிவிடும். அந்த நிலையில் இதயத்திலிருந்து உடலுக்கு ரத்தம் கொண்டுசெல்லும் ரத்தக்குழாய்களின் உள்சுவர்களில் கொழுப்பு, கால்சியம் போன்றவை தங்குவதற்கு வசதியாகிவிடும்.

 

நீங்கள் சாப்பிடும் பொருளால் உங்களுக்கு பிரச்சனை வருவதில்லை. உங்களை எது சாப்பிட்டுக்கொண்டிருக்கிறதோ அதனால்தான் பிரச்சனை வருகிறது – என்று அழகாகச் சொன்னார் டாக்டர் பி.எம்.ஹெக்டே. நம்மை எது சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது?

அச்சம்.

பி.பி., கொலஸ்ட்ரால், சுகர் போன்றவை பற்றிய கற்பனையும் அச்சமும்தான் நமது பிரச்சனை. மருத்துவமனைகளும், டாக்டர்களும் அதிகரித்துக்கொண்டே இருப்பதற்குக் காரணம், உச்ச வியாபாரமாக இருக்கும் அச்ச வியாபாரம்தான். படித்தவர்களும் படிக்காதவர்களும் லட்சம் லட்சமாகக் கொடுத்து அச்சத்தை வாங்கி மனசில் போட்டுக்கொள்வதுதான் பிரச்சனை.

கொலஸ்ட்ராலைப் பற்றி ஓரளவு பார்த்துவிட்டோம். மீண்டும் சந்திக்கலாம். அடுத்த முக்கிய அச்சப்பொருளைப் பற்றிய தகவல்களுடன்…

========

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை, Uncategorized. Bookmark the permalink.

One Response to நலம் நலமறிய ஆவல் 8 & 9

 1. Kannan says:

  Very Nice Article in Tamil. It is really true ‘Acha Viyabaram’ Pharmaceutical companies are living by this concept. If we follow our traditional food habits, We can live healthy. Illness is absence of awareness.

  Thanks a lot for making awareness!!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s