நலம் நலமறிய ஆவல்–10– ஸ்வீட் எடு, கொண்டாடு!

10– ஸ்வீட் எடு, கொண்டாடு!

 

எறும்புகள் எப்போதும் இனிப்பான உணவுப் பண்டங்களையே சுவைக்கின்றன. ஆனால் அவைகளுக்கு எப்போதுமே சர்க்கரை நோய் வந்ததில்லையே! – யாரோ.

முன் கதைச் சுருக்கம்

ஒருமுறை நானும் என் எழுத்தாள நண்பர்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது என் நண்பரும் எழுத்தாளருமான ஒருவர் – இப்போது அவர் ஒரு பிரபல பத்திரிக்கையின் ஆசிரியர் – தனது டயபடிஸ் பிரச்சனை பற்றிப் பேசினார். சர்க்கரை நோயை குணப்படுத்த முடியாது, ஆனால் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க முடியும் என்று சொன்னார். அவருடைய எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக சிறுகதைகள். ஆனால் அதற்காக அவர் சொல்லும் ஒரு தவறான கருத்தையும் நான் ஏற்றுக்கொள்ளவேண்டுமா என்ன?

அப்படியெல்லாம் இல்லை நண்பரே, டயபடிஸ் நோயை முழுமையாக குணப்படுத்த முடியும் என்று நான் சொன்னேன்.

உளறியது வேறு கிரகத்திலிருந்து வந்திறங்கிய ஈ.டி. அல்லது பி.கே. என்பதைப்போல என்னை அனைவரும் பார்த்தனர். நான் சொன்னதை யாரும் காதில்கூட போட்டுக் கொள்ளக்கூட விரும்பவில்லை என்பது அவர்களுடைய பேச்சிலிருந்து எனக்குப் புரிந்தது. பலருக்கு மத்தியில் வித்தியாசமாகத் தெரியவேண்டும் என்பதற்காக படுமுட்டாள்தனமான, விஞ்ஞானத்துக்கு எதிரான கருத்தைச் சொன்ன அயோக்கியனாக நான் அவர்களுக்குப் பட்டிருக்கலாம். எனக்கு வருத்தமாக இருந்தது. நான் ஏளனமாகப் பார்க்கப்பட்டுவிட்டேன் என்பதற்காக அல்ல. அவர்களுக்கு என்னால் உதவ முடியவில்லையே என்பதற்காக.

அந்த நிகழ்ச்சி நடந்து பல மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் கழித்து, அந்த  நண்பரே எனக்கு அலைபேசினார். நான் அன்று சொன்ன நம்ப முடியாத செய்தி பற்றி மீண்டும் கேட்டார். நான் புது உற்சாகத்துடன் அவருடன் அவ்விஷயம் பற்றி எனக்கு அப்போது தெரிந்த உண்மைகளைச் சொன்னேன். குறிப்பிட்ட வகை மூச்சுப் பயிற்சியை அவருக்கு சொல்லிக்கொடுத்தேன். குறிப்பிட்ட இடம், குறிப்பிட்ட நேரத்தில் செய்யவேண்டும் என்றும் சொன்னேன். அவரும் கேட்டுக்கொண்டார்.

கொஞ்ச காலம் கழித்து மீண்டும் அலைபேசினார். நான் சொன்னதுபோலவே செய்ததாகவும், பிரம்ம முகூர்த்தத்தில், தன் வீட்டின் ஒரு குறிப்பிட்ட அறையில் மூச்சுப்பயிற்சி தொடர்ந்து சில மாதங்கள் செய்ததாகவும், இப்போது ’சுகர் லெவல்’ கடந்த பல ஆண்டுகளில் இருந்ததைவிட பல மடங்கு  குறைந்திருப்பதாகவும், கிட்டத்தட்ட நார்மல் நிலைக்கு வந்துவிட்டதாகவும், ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருப்பதாகக் கூறினார். இப்போது அவர் இயற்கை உணவுக்கு மாறிக்கொண்டிருக்கிறார். எனக்கும் அவர் சொன்னது பற்றி ரொம்ப சந்தோஷம். என்னாலும் ஒருவருக்கு உதவ முடிந்திருக்கிறது!

நிற்க, பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை மூன்றிலிருந்து நான்கு அல்லது நாலரை மணிவரை என்று வைத்துக்கொள்ளலாம். நண்பர் அந்த நேரத்தில் பயிற்சி செய்தது மிகமுக்கியமானது. அது ரொம்ப நல்லது. வாழ்க்கையில் பெருவெற்றி பெற்று சாதனை படைத்த பலர் பிரம்ம முகூர்த்தத்தில் விழித்துக்கொள்பவர்களாகவே இருந்துள்ளனர். ஆனால் நம்மில் பலருக்கு சாந்தி முகூர்த்தம்தான் தெரியும்! அதையும் பிரம்ம முகூர்த்தத்தில் வைத்துக்கொள்வது சிறப்பு என்று உபரியாக  ஒரு ஆலோசனை சொல்லலாம் என்று நினைக்கிறேன்!

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு லைஃப் பாய் சோப்பு போடாமலே ஆரோக்கிய வாழ்வினைக் காப்பது பற்றி நானும் இன்னும் நிறையத் தெரிந்துகொண்டேன். அதில் ஒன்றுதான் டயபடிஸ், சுகர், சர்க்கரை நோய் என்றெல்லாம் உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் பிசாசு பற்றியது. இதைப் பற்றி நான் சொல்லப்போகும் உண்மைகளை எண்ணி நீங்கள் புருவம் உயர்த்தலாம். ஆனால் ஏற்றுக்கொள்வீர்களா என்பது சந்தேகமே. ஏனெனில் அவ்வளவு தூரம் இந்திய மனதில் சர்க்கரை நோய் பற்றிய பயமும், அதை குணப்படுத்தவே முடியாது என்ற அ-விஞ்ஞானபூர்வமான, வணிகமயமான கருத்தும் ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது.

இல்லை, அதை குணப்படுத்தலாம், அதுவும் ஸ்வீட் சாப்பிட்டே என்று நான் சொன்னால் என் கட்டுரைகளைப் படிப்பதை நீங்கள் இத்துடன் நிறுத்திக் கொண்டுவிடலாம். அல்லது இந்தப் பைத்தியம் எழுதும் விஷயங்களையெல்லாம் காதில் போட்டுக்கொள்ள வேண்டாம் என்று உண்மையான அக்கறையுடன் உங்கள் நண்பர்கள், உறவினர்களிடத்தில் சொல்லிவைக்கலாம். நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், உங்கள் மனதில் தப்பான கருத்தை விதைப்பது எளிது. நான் சொல்வதை உறுதி செய்ய ஒரு உதாரணம் தருகிறேன்.

Me Suki Sivamஒரு முறை சொல்வேந்தர் சுகி. சிவம் அவர்கள் பேசும்போது நான் எழுதிய ’இந்த விநாடி’ என்ற புத்தகத்தில் உள்ள ஒரு விஷயம் பற்றி கொஞ்சம் விரிவாகப் பேசினார். மனதின் வலிமை பற்றிய செய்தி அது. ரத்தம், யூரியா, நைட்ரஜன் ஆகியவற்றின் அளவு ஹெரால்டு என்பவரின் உடலில் 90 விழுக்காடு இருந்தபோதும் எப்படி அவர் நாற்பது ஆண்டுகளாக ஒரு மருந்து மாத்திரையும் எடுத்துக்கொள்ளாமல் சந்தோஷமாக, டாக்டர்களால் எச்சரிக்கப்பட்ட பிரச்சனைகளில் ஒன்றுகூட வரமால், ஆரோக்கியமாக இருந்தார் என்ற உண்மைக்கதை அது. டாக்டர் தீபக் சோப்ரா தனது Unconditional Life என்ற நூலில் விபரிக்கும் அவரது அனுபவம் அது.

அதைச் சொல்லி முடித்த சுகி.சிவம் அவர்கள், ‘அதற்காக சுகர் நோயாளிகளெல்லாம் ஸ்வீட் சாப்பிடலாம் என்று நான் சொல்லமாட்டேன். அப்படிச் சொன்னால் அது அயோக்கியத்தனமான யோசனையாகிவிடும்’ என்று சொன்னார்.

ஆனால் உண்மை என்னவெனில், சர்க்கரை நோயாளிகளுக்குத்தான் ஸ்வீட்டான உணவுப்பண்டங்களின் அவசியம் அதிகம் உள்ளது! ஸ்வீட் எடு, கொண்டாடு என்று அவர்கள்தான் இருக்கவேண்டும்! இது காலம் காலமாக நாம் நம்பி வந்திருக்கும் ’விஞ்ஞானப்பூர்வமான’ கருத்துக்கு எதிரானதாகவும், அபாயகரமானதாகவும் தோன்றலாம். ஆனால் உண்மையில் அப்படியெல்லாம் இல்லை. எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்.

டயபடிஸ் என்றால் என்ன?

குளோகோஸ் எனப்படும் சர்க்கரைப் பொருளை / சுகரை உடலுக்குத் தேவைப்படும் சக்தியாக உடலால் மாற்ற முடியாத குறைபாடுதான் டயபடீஸ். இதற்கு மருத்துவ உலகம் ’டயபடிஸ் மெலிட்டஸ்’ என்று பெயர் வைத்துள்ளது. கொஞ்சம் நீளமாகவும், புரியாத மாதிரியும் பெயர் வைத்தால்தான் பயம் ஏற்படுத்த ஏதுவாக இருக்கும் என்பது மருத்துவ உலகுக்கு நன்றாகவே தெரியும்.

குளூகோஸ்தான் நமது உடலுக்குத் தேவைப்படும் எரிபொருளைத்தரும் மிகமுக்கியமான மூலப்பொருளாகும். உண்ட உணவு செரித்த பிறகு ஃபாட், ப்ரொட்டீன், கார்போஹைட்ரேட் போன்ற சமாச்சாரங்கள் உடலால் பிரித்தெடுக்கப்படுகின்றன. அதில் கார்போஹைட்ரேட்தான் குளூகோஸாக மாறுகிறது. பின் ரத்தத்தில் குளூகோஸ் கலக்கிறது. அதிலிருந்து நமக்குத் தேவையான ஆற்றலை நம் உயிரணுக்கள் உருவாக்கிக்கொள்கின்றன.

க்ளூகோஸை உயிரணுக்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் ஒரு நிபந்தனை உண்டு. வெளிநாட்டுக்குப்போக பாஸ்போர்ட் தேவைப்படுவதைப்போல  ’செல்’லுக்குள் க்ளூகோஸ் ‘செல்ல’வேண்டுமெனில் அந்த க்ளூகோஸில் ’இன்சுலின்’ என்ற ஒரு பொருள் இருக்கவேண்டும். இன்சுலின் இல்லாவிட்டால் அந்த க்ளூகோஸுக்கு செல்களுக்கு உள்ளே அனுமதி கிடைக்காது!

Insulin-1இன்சுலின் என்பது க்ளூகோஸுக்கு உள்ளேயே இருக்கும் பொருளல்ல. அதை க்ளூகோஸ் இன்னொருவரிடமிருந்து பெற்றுக்கொள்ளவேண்டும். அந்த இன்னொருவரும் நமது உடலுக்கு உள்ளேயேதான் இருக்கிறார். அவர் பெயர் ’பாங்க்ரியாஸ்’ (pancreas) எனப்படும் கணையம்! அவர்தான் க்ளூகோஸுக்கு இன்சுலின் சப்ளை செய்யவேண்டும். அவர் ஏன் இன்சுலின் கொடுக்க மறுத்தார் என்பதைப் பிறகு பார்க்கலாம்.

 • உடலுக்குத் தேவையான அளவு இன்சுலினை கணையம் சுரக்காவிட்டால் உண்டாகும் பிரச்சனையை முதல் வகை நீரிழிவு நோய் (Type 1 Diabetes Mellitus) என்றும்,
 • குறையுள்ள இன்சுலினைச் சுரந்தாலோ அல்லது சுரந்த இன்சுலினை உடல் / உயிரணுக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தாலோ (Insulin Resistance) இரண்டாம் வகை நீரிழிவு நோய் (Type 2 Diabetes Melllitus) என்றும் சொல்கிறர்கள்.

 

Type 2 Diabetesமுதல் வகை நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான இன்சுலின் உடலில் சுரக்காததால் வெளியிலிருந்து இன்சுலினை ஊசிகள் மூலமாக ஏற்றுகிறார்கள். அப்படிச் செய்வது ரொம்ப தவறானது ஏன்?

ஆரோக்கியத்தின் பாலபாடம்

இயற்கையாகவே உடல் உருவாக்கிக்கொள்ளும் எதற்கும் இணையான ஒன்றை வெளியிலிருந்து, மானிட தயாரிப்பின் மூலம் ஈடுகட்டவே முடியாது என்பதுதான் ஆரோக்கியத்தின் அடிப்படை. ட்யூப்ளிகேட் பொருளுக்கு ஐ.எஸ்.ஐ. முத்திரை குத்தி வினியோகத்துக்கு அனுப்புவது மாதிரியான செயல் அது. உதாரணமாக, நம் உணவில் கால்சியம், இரும்புச் சத்து, ப்ரோட்டீன், விட்டமின், கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் உள்ளன. ஆனால் கால்சியம், ப்ரோட்டீன், விட்டமின் மாத்திரைகளெல்லாம் மருந்துக் கடைகளில் கிடைக்கத்தானே செய்கின்றன? உணவுக்குப் பதிலாக தேவையான சத்துக்களை மாத்திரைகளாக நேரடியாக ஏன் நாம் சாப்பிடக்கூடாது? சமைக்கின்ற வேலையும் நேரமும் மிச்சமாகுமல்லவா?

நாம் அப்படிச் செய்வதில்லை. செய்யவும் முடியாது. செய்தால் செத்துவிடுவோம்! உணவிலிருந்து உடல் உருவாக்கும் கால்சியம் வேறு, மனிதர்களால் வெளிலிருந்து உருவாக்கிக் கொடுக்கப்படும் கால்சியம் வேறு. பாலில் உள்ள கால்சியம் வேறு, மாத்திரைகளில் உள்ள கால்சியம் வேறு. மீனில் உள்ள ப்ரோட்டீன் வேறு, மாத்திரைகளில் உள்ள ப்ரோட்டீன் வேறு. முன்னது அமிர்தம். பின்னது விஷம்.(அதாவது வேதிப்பொருள்).

Pancreasஇயற்கையானதை மட்டுமே உடல் ஏற்றுக்கொள்ளும். இதுதான் ஆரோக்கியத்தின் பாலபாடம். இதை தயவுசெய்து நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எல்லா நோய்களுக்குமான தீர்வு இங்கே உள்ளது. நினைவில் வையுங்கள்.

 1. தேவையான அளவு இன்சுலினை கணையம் ஏன் சுரக்கவில்லை?
 2. சுரக்கப்பட்ட இன்சுலினும் ஏன் குறைகள் கொண்டதாக உள்ளது?

இந்த இரண்டு மிகமுக்கியமான கேள்விகளுக்கான பதிலை நாம் இப்போது தெரிந்துகொள்ள வேண்டாம். இன்னும் கொஞ்ச தூரம் போகவேண்டியுள்ளது. வாருங்கள் போகலாம்.

கதாநாயகன் இன்சுலின்

Insulin-1உடInsulin injectionம்பில், குறிப்பாக ரத்தத்தில், அளவுக்கு அதிகமான க்ளூகோஸ் / சுகர் இருப்பது தெரிந்தால் அது டயபடிஸ் நோய் வந்துவிட்டதற்கான அறிகுறி என்று கூறுகிறார்கள். மேலே சொன்னதற்கும் இதற்கும் வித்தியாசமில்லை. ஒரே உண்மையை வேறுவேறு விதமாகப்  புரிந்துகொண்டிருக்கிறார்கள். எப்படி?

உடலுக்குத் தேவையான, சரியான, அதாவது இன்சுலினுடன் கூடிய, க்ளூகோஸ் இருந்தால் மட்டுமே அதை ஏற்றுக்கொண்டு தன்னுள்ளே உயிரணு அனுமதிக்கும். இதற்கு ’க்ளூகோஸ் மெடபாலிஸம்’ (glucose metabiolism) என்று பெயர்.

ஆனால் உயிரணுக்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டவர்கள் என்ன செய்வார்கள்? ரத்தத்துக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருப்பார்கள் அல்லவா? அப்போது உங்கள் ரத்தத்தைப் பரிசோதித்தால் எத்தனை பேர் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்ற கணக்கு தெரியும்! உதாரணமாக 200 பேர் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் சுகர் லெவல் ரொம்ப ‘ஹை’யாக உள்ளது என்று சொல்லிவிடுவார்கள்!

அப்படி ’ஹை’யாக உள்ள க்ளூகோஸெல்லாம் இன்சுலின் கிடைக்காமல் ரத்த ஓட்டத்துடன்  ’ஹாய்’யாக சுற்றிக்கொண்டிருக்கும் ஓசிக்கிராக்கிகள்! அவர்கள் எதற்கும் பிரயோஜனமில்லாதவர்கள். உடலுக்குத் தேவையான  சக்தியை அவர்களால் தரமுடியாது. உயிரில்லாத உடல்கள். இன்சுலின் இல்லாத க்ளூகோஸ் பிணங்கள். ரத்த பரிசோதனையில் அந்த பிணங்களின் எண்ணிக்கையைப் பார்த்து பயந்து சொன்ன ரிபோர்ட்டுதான் ’ஐயையோ, உங்களுக்கு ஹை சுகர் வந்துவிட்டது’ என்ற அரற்றல்!

அளவுக்கு அதிகமான க்ளூகோஸ் இருப்பது சுகர் நோய்க்கான அறிகுறி என்று சொன்னதன் தொடர்பு இப்போது புரிகிறதா? அதோடு, சர்க்கரை நோயின் கதாநாயகன் யார் என்று தெரிகிறதா? அவர்தான் இன்சுலின். அவர் இல்லாவிட்டால் படம் ஓடவே ஓடாது!

சர்க்கரை நோய் வந்துவிட்டதற்கான அறிகுறிகள் என்று சொல்லப்படுபவை:

 1. கண்பார்வை மங்குதல்
 2. திடீரென்று எடை குறைதல்
 3. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
 4. அடிக்கடி தாகமெடுத்தல்
 5. அடிக்கடி பசித்தல்
 6. உடலில் ஏற்படும் வெட்டுக்காயங்கள் சரியாக நீண்ட நாளாகுதல்
 7. ஆண்குறி விறைத்தலில் பிரச்சனைகள்
 8. ரொம்ப களைப்பாக உணர்தல்
 9. கைகளிலோ பாதங்களிலோ உணர்ச்சியற்றுப் போதல் மேலும் தொட்டால் ஊசிகளால் குத்தியது மாதிரியாக உணர்தல் அல்லது எரிச்சல் இன்னபிற.

diabetic foot

இப்படி பல அறிகுறிகளைச் சொல்லி நம்மை பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள். பத்து பேரில் ஒன்பது பேருக்கு மேலே சொல்லப்பட்டவற்றில் ஒரு நான்கைந்தாவது அவ்வப்போது இருக்கத்தான் செய்யும்!

உதாரணமாக எனக்கு அடிக்கடி ’ஒன்னுக்கு’ வரும் (மழைக்காலத்தில்)! அடிக்கடி வியர்க்கும், தாகமெடுக்கும் (வெயில் காலத்தில்)! அடிக்கடி பசிக்கும் (எல்லாக் காலத்திலும்)! உடலில் எங்காவது எனக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தால் அது நிற்க பல மணி நேரங்களாகும் (ஆஸ்பிரின் என்ற ’ப்ளட் தின்னர்’ சனியனை (மாத்திரையை) தினமும் போட்டுக்கொண்டிருந்ததனால்)!

ஆனால் இறையருளால் எனக்கு சீக்கிரமே அறிவு வந்துவிட்டது! ஆஸ்பிரினைத் தூக்கிக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டேன். கொஞ்ச நாளைக்கு முன்பு கதவிடுக்கில் என் சுண்டுவிரல் மாட்டி நசுங்கி மூன்று இடங்களில் ஓடிய ரத்தம் ஐந்தே நிமிடங்களில் நின்றுவிட்டது. காரணம் ஆஸ்பிரினை நிறுத்தியதுதான். ஆனால் ஆஸ்பிரின் போட்டுக்கொண்டிருந்த காலத்தில் ஒருநாள் உதட்டில் அடிபட்டு ஓடிய ரத்தம் அரைநாளுக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக ஓடிக்கொண்டேயிருந்தது!

ரத்த  பரிசோதனை அல்லது சிறுநீர் பரிசோதனை மூலம்தான் உங்களுக்கு சுகர் இருக்கிறதா இல்லையா என்று தெரிந்துகொள்ள முடியும் என்று சொல்கிறார்கள். சுகர் வியாதி வந்துவிட்டால் கண் பார்வை போய்விடலாம், சிறுநீரகம் செயலிழந்து போகலாம், உடலில் கால், கை என எந்தப் பகுதியில் வேண்டுமென்றாலும் ரத்த ஓட்டம் செல்ல முடியாமல் தடைப்பட்டு அந்தப் பகுதியையே வெட்டி எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம், நீங்கள் இறந்துகூட போகலாம்  என்று டயபடீஸ் பற்றி ஏகப்பட்ட ’லாம்’ அச்சங்கள் நிலவுகின்றன.

சொல்வதெல்லாம் உண்மை என்று சொல்ல முடியாது. சொல்வதெல்லாம் பொய், பொய்யைத்தவிர வேறெதுவுமில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். இனிப்பு வியாதி பற்றி சொல்லப்படும் பல கசப்பான விஷயங்களையும் அவைகளில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்றும் பார்க்கத்தானே போகிறோம்?

=======

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை, Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s