நலம் நலமறிய ஆவல் — 19 – அதிநவீன எலிப்பொறிகள்

19 – அதிநவீன எலிப்பொறிகள்

கடவுளை நம்பாத மனிதர்கள் உண்டு. ஆனால் டெஸ்ட்டுகளை நம்பாத மனிதர்களே இல்லை.

 • ஹீலர் உமர் ஃபாரூக்Hr Umar

என் சகோதரி ஒருவர் வெளிநாட்டில் வசிக்கிறார். அவர் இந்தியா வரும்போதெல்லாம் தனக்கும் தன் கணவருக்கும் ’கம்ப்ளீட் மெடிகல் செக்-அப்’ எடுக்காமல் போகமாட்டார். அப்படிச் செய்தால்தான் அவர்களுக்குத் திருப்தி. ஆய்வுக் கூடங்களில் செய்யப்பட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு எல்லாம் ’நார்மல்’ என்று வந்துவிட்டால் போதும். அப்பாடா என்று பெருமூச்சு விட்டுவிட்டு நிம்மதியாக வெளிநாட்டுக்குத் திரும்பிச் செல்வார்கள். அவர்கள் அப்படி நிம்மதிப் பெருமூச்சுவிடுவதற்கு எப்படியும் ஒரு இருபத்தையாயிரம் ரூபாய்கள் செலவாகியிருக்கும்! ஆனால், பணமா முக்கியம்? ஆரோக்கியம்தானே முக்கியம்?

Nurse drawing off blood

Nurse drawing off blood

அவர்கள் நினைப்பது சரிதான். ஆரோக்கியம்தான் முக்கியம். பணம் முக்கியமே அல்ல. ஆனால் ஆரோக்கியத்தை அளக்க அவர்கள் நம்பிய நிறுவனங்களும் கருவிகளும்தான் தவறானவை. ஆரோக்கியத்துக்கும் அவற்றுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது அந்த சகோதரி குடும்பத்தினர் அறியாதது. அவர்கள் மட்டுமல்ல. இன்றைக்கு கோடிக்கணக்கான மக்கள் நம்பிக்கொண்டிருக்கும், செயல்படுத்திக்கொண்டிருக்கும் வாழ்க்கை முறையும் இப்படிப்பட்ட தவறான நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்ததுதான். மனிதர்களுடைய மனநிலையை வைத்து வியாபாரம் செய்வது ரொம்ப எளிது.

என் நண்பர் ஒருவருடைய தாயாருக்கு ஒரு பழக்கமுள்ளது. மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை முழு மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். இல்லையென்றால் வீட்டில் பிரளயமே உருவாகிவிடும். பிரச்சனை பரிசோதனையில் இல்லை. அவர் விரும்புவதுபோல ஒரு டாக்டரைப் பார்த்து, முழு மருத்துவ பரிசோதனை செய்த பிறகு, டெஸ்ட் ரிபோர்ட்டுகளையெல்லாம் பார்த்துவிட்டு டாக்டர் புன்னகைத்துக் கொண்டே, ‘உங்களுக்கு ஒன்னுமில்லம்மா, நல்லா இருக்கீங்க’ என்று சொன்னால் போச்சு! அவன் சரியான டாக்டரில்லை என்று சொல்லித் திட்டிவிடுவார்! ‘உங்களுக்கு வயிற்றில் சின்னதாக கட்டி உள்ள மாதிரி தெரிகிறது. நான் மாத்திரைகள் தருகிறேன். ஒரு மூன்று மாதங்களுக்கு சாப்பிடுங்கள், சரியாகிவிடும்’ என்று சொன்னால், ‘பார்த்தியா, இவன்தான் நல்ல டாக்டர். இனிமே இவங்கிட்டதான் வரணும்’ என்று தன் மகனுக்கு உத்தரவுகள் போடுவார்! அவரை எக்ஸ் என்று வைத்துக்கொள்வோம்.

லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான எக்ஸ்களால் ஆன சமுதாயம்தான் நமது. இந்த எக்ஸ்களை வைத்துக் கொழுத்துக்கொண்டிருக்கும் வியாபாரத்தின் இன்னொரு பெயர்தான் மருத்துவ ஆய்வுக் கூடங்கள்! அவை அலோபதியின் முக்கிய பங்காளியாக இருப்பதால் அவை பற்றியும் இங்கே பார்த்துவிடலாம்.

கட்டியா கருவா?

abortion-07-01என் நெருங்கிய நண்பர் ஒருவர் தனது அனுபவங்களை தான் எழுதிய ஒரு நூலில் பதிவு செய்திருக்கிறார். அதில் அவர் விவரித்த ஒரு உண்மை நிகழ்ச்சி எனக்கு அதிர்ச்சியூட்டியது. உங்களுக்கும் நிச்சயம் அதிர்ச்சி கொடுக்கும். அதைப்பற்றி அவர் எழுதியதை அப்படியே தருகிறேன்:

”நீண்ட காலமாக குழந்தையில்லாத ஒரு தம்பதி, என் நண்பர் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு வந்தார்கள். அவர்களுக்கு பல விதமான பரிசோதனைகள்.  செய்யப்பட்டு, பரிசோதனை முடிவுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. (இப்போதெல்லாம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை. பரிசோதனை முடிவுகளுக்குத்தான் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள்). சிகிச்சை மேற்கொண்ட பெண்ணுக்கு உடலில் சில மாறுதல்கள் தெரிந்தன. கர்ப்பப்பை தொடர்பான சில தொந்தரவுகள் ஏற்பட்டன. ஸ்கேன் எடுக்குமாறு பரிந்துரைத்தார் மருத்துவர்.

”கர்ப்பப் பையில் ஒரு கட்டி வேகமாக வளர்வதாகவும், அதன் வேகம் புற்று நோய் செல்களுக்கு இணையாக இருப்பதாகவும், ஸ்கேன் அறிக்கையின் வழியாக மருத்துவர் முடிவு செய்தார். அந்தக் கட்டியின் வேகமான வளர்ச்சி, அடுத்த கட்ட பரிசோதனைகளுக்குச் செல்வதற்குக்கூட நேரம் தரவில்லை என்றும், பெண்ணைக் காப்பாற்றுவதற்காக கர்ப்பப்பையை நீக்கிவிடலாம் என்றும் பரிந்துரைத்தார் மருத்துவர். கர்ப்பப்பை நீக்கப்பட்ட பிறகு தனக்குக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்பே இல்லை என்ற அதிர்ச்சியை தன் மனைவிக்காக ஏற்றுக்கொண்ட கணவர் அறுவை சிகிச்சைக்குச் சம்மதித்தார். அறுவை சிகிச்சை உதவியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த என் நண்பரும், நானும் ஸ்கேன் அறிக்கைகளையும், விசித்திரமான நோயாளிகளைப் பற்றியும் விவாதித்துக் கொள்வோம்.

“கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை அந்தப் பெண்ணிற்கு முடிந்தது. அவர் உயிர் பிழைத்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது. அறுவை சிகிச்சையில் அறுத்து எறியப்பட்ட உறுப்புகளைப் பார்ப்பதற்காக வழக்கம்போல நாங்கள் அறைக்குள் செல்கிறோம். அறுத்து குப்பையில் வீசப்பட்ட கர்ப்பப் பையின் ஒரு பகுதியில் ஒட்டிக்கொண்டிருந்தது கட்டி அல்ல. அறுபது நாட்கள் வளர்ந்த கரு. அந்த சிசுவின் விரல்கல் அரிசி ஓவியம் போல நேர்த்தியாக இருந்தன.   அறுவை சிகிச்சை உதவியாளர்கள் மருத்துவரிடம் தகவல் சொன்னார்கள். ஒரு நிமிடம். ஒரே ஒரு நிமிடம் அதிர்ந்தார். அவருக்குள் இருந்த மனிதத் தன்மை வெளிப்பட்டது. அடுத்த நிமிடம் தொழில்முறை மருத்துவரானார். அதைப்பற்றி யாரிடமும் சொல்லவேண்டாம் என்று அறிவுறுத்தினார்.  மருத்துவமனைப் பணியாளர்கள் அவர்கள் தொழில் தர்மத்தைக் கட்டிக் காத்தார்கள். சம்பளத்தோடு.

“கருவிலே வேறருக்கப்பட்ட அந்தக் குழந்தைக்கு வாழும் வாய்ப்பை மறுத்தது யார்? ஸ்கேன் அறிக்கையா? அதை உறுதி செய்துகொள்ளாத மருத்துவரா? வணிக மயமான மருத்துவமா?

“அந்த சிசு என்னோடு இரண்டு வருடங்கள் இருந்தது. அதை ஒரு கண்ணாடிக் குடுவையில் வைத்திருந்தேன். முழு வளர்ச்சியடையாத அந்த சிசுவின் கைகள் ஆங்கில மருத்துவத்தை விட்டு என் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியது (பக்கம் 6 & 7).

மேலே விவரிக்கப்பட்ட அதிர்ச்சியான நிகழ்ச்சியை விவரித்த நண்பர் வேறுயாருமல்ல. கம்பம் அகாடமி ஆஃப் அக்யுபங்ச்சர் கல்லூரியின் முதல்வர் ஹீலர் உமர் ஃபாரூக்தான். ஏற்கனவே ரத்தவியல் (hematology) துறையில் பணியாற்றியவர் அவர். நிறைய ஆய்வுக்கூட அனுபவங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் அவர் இங்கே குறிப்பிட்ட அவரது அனுபவம்.

மேலே சொன்ன நிகழ்ச்சி மருத்துவ ஆய்வுக்கூடத்தில் ஏற்பட்ட ஒரு தவறு. ஆனால் மருத்துவ ஆய்வுக்கூட அறிக்கைகள் எதுவுமே என்றைக்குமே உண்மையைச் சொல்வதற்கான சாத்தியமே இல்லை என்பதுதான் உறுதி செய்யப்பட்ட உண்மையாகும்! என்ன குழப்பமாக உள்ளதா?

ஆய்வுக்கூடங்களில் உடலைப் பரிசோதிப்பதே தவறு என்று சொல்கிறேன். ஏன்? ஏனெனில், அந்தப் பரிசோதனைகளின் மூலம் உண்மை தெரியவர வாய்ப்பே இல்லை! அதுவல்லாமல், உமர் குறிப்பிட்டுள்ளதைப் போல ஒரு உயிரை அநியாயமாகக் கொலை செய்துவிடும் அபாயமும் உள்ளது.

ஆங்கிலத்தில் fact என்றொரு சொல்லும் truth என்றொரு சொல்லும் உள்ளது. முன்னதை நிஜம் என்றும் பின்னதை உண்மை என்றும் சொல்லலாம். இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் முன்னது மாறக்கூடியது. பின்னது மாறாதது. எனக்குத் தொப்பை இருக்கிறது என்பது ஒரு fact-ஆக இருக்கலாம். அதாவது இப்போதைய நிஜம் அது. ஆனால் அது என்னைப் பற்றிய உண்மையல்ல. நாளைக்கே நான் என் உடல் உழைப்பின் மூலம் தொப்பையை குறைத்து த்ரிஷா மாதிரி ஸ்லிம்-மாக மாறிவிடலாம்! நிஜம் என்றால் ‘இப்போதைக்கு இது நிஜம்’ என்று அர்த்தம். ஆய்வுக்கூட அறிக்கைகளும் இப்படிப் பட்டவையே.

ரத்தத்தில் ஹீமோக்லோபின் 09 தான் இருக்கிறது என்று இந்த மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை பகல் பன்னிரண்டு மணிக்கு ஒரு அறிக்கை சொன்னால், டெஸ்ட் ரிபோர்ட் வந்த அடுத்த சில மணி நேரங்களிலோ, சில நிமிடங்களிலோ அது மாறலாம். மாறலாம் என்ன, நிச்சயம் மாறும். மாறிக்கொண்டே இருப்பதுதான் உடலின் இயல்பு. எனவே எல்லா ஆய்வுக்கூட அறிக்கைகளும் கடந்த காலத்தின் அறிக்கைகளே! இன்றின், இப்பொழுதின் அறிக்கையை நாம் பெறவே முடியாது. கடந்த காலத்தை எடுத்து நிகழ் காலத்தில் திணித்து வைத்துக்கொண்டு அது பற்றிய கவலையில் எதிர்காலத்தை வீணடிக்கும் வேலைக்குப் பெயர்தான் ஆய்வுக் கூட அறிக்கைகள் என்று சொன்னால் அது மிகையே அல்ல!

இதை விளக்க இன்னொரு உதாரணம் கொடுக்கலாம். ஆய்வுக்கூட அறிக்கைகள் நம்மைப்பற்றிய நிஜத்தைச் சொல்லலாம் என்று சொன்னேனல்லவா? அதுபற்றிய ஒருவரின் வாழ்வில் நடந்த நிஜ சம்பவத்தை இங்கே பார்க்கலாம்.

ஒருவர் தன் ரத்தத்தில் எவ்வளவு ஹீமோக்ளோபின் மற்றும் வெள்ளை அணுக்கள் உள்ளன என்று அறிந்துகொள்வதற்காக, வேண்டுமென்றே ஐந்து மருத்து ஆய்வுக்கூடங்களில் பரிசோதனைக்குச் சென்று அறிக்கைகளையும் பெற்றுள்ளார். அதுவும் ஒரே நாளில்! அவர் சென்றது 18.10.2012 அன்று. உண்மையாகவே பரிசோதனைக் கூடங்களின் சோதனைகள் மூலம் உண்மை தெரியவரும் என்பது உண்மையானால் – ஆஹா,எத்தனை உண்மைகள்! — எல்லா அறிக்கைகளும் ஒன்றைத்தானே சொல்லவேண்டும்? ஆனால் அதுதான் நடக்கவில்லை. அவருக்கான அறிக்கைகள் என்ன சொல்லின ? கீழே பாருங்கள்:

 

பரிசோதனையின் பெயர் லேப் 1 லேப் 2 லேப் 3 லேப் 4 லேப் 5
வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை 5,600 7,900 8,500 9,150 10,100
ஹீமோக்ளோபின் 11.9 கி 12.8 கி 13.5 கி 12.6 கி 14.5 கி

இப்பரிசோதனைகள் ஒரே நாளில் சுமார் ஒரு மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்டவை! இந்த அறிக்கைகளில் எதை நம்புவது? எதை நம்பினாலும் மோசம்தான்! அறிக்கைகளையெல்லாம் கூட்டிக்கழித்துப் பார்த்து, சராசரியாக இவ்வளவு ஹீமோக்ளோபின் உள்ளது, இன்னும் இவ்வளவு தேவை, சராசரியாக இவ்வளவு வெள்ளை  அணுக்கள் உள்ளன, இன்னும் இவ்வளவு தேவை என்ற முடிவுக்கெல்லாம் வர முடியாது. அப்படியெல்லாம் யோசித்தால், எதிர்ப்பு சக்தி போய்விட்டது, அல்லது குறைந்துவிட்டது என்று கூறி மேலும் பல புதிய வேதனைக்கூடங்களுக்கு, ஐ மீன், சோதனைக்கூடங்களுக்கு அனுப்பிவிடுவார்கள்!

”இந்த ஆய்வுக்கூட அறிக்கைகள் நோயாளிகளுக்கு உதவுவதற்காகவா? அல்லது நோயாளிகளை உருவாக்குவதற்காகவா?” என்று கேட்கிறார் ஹீலர் உமர். நெத்தியடிக்கேள்வி. இதற்கு சோதனைக்கூடங்களை நடத்துவபவர்கள் மனசாட்சியோடு பதில் சொல்வார்களா?

அவர்கள் பதில் சொல்வது இருக்கட்டும். ஒரு டாக்டர் நம்மை ஒரு சோதனைக்கூடத்துக்கு அனுப்பி எதற்காக சில பரிசோதனைகளை மேற்கொள்ளச் சொல்கிறார்? யோசித்தால் இரண்டு காரணங்கள் நமக்குத் தெரிய வரும். ஒன்று, டாக்டருக்கு நம் உடலின் உண்மையான நிலை பற்றி சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவற்றை தீர்த்துக்கொள்வதற்காக நம்மை அவர் அனுப்புவார்.

ஆனால் இதைவிட முக்கியமான காரணம் ஒன்று உள்ளது. ஒரு குறிப்பிட்ட சோதனைக்கூடத்துக்குச் சென்று ஒரு சி.ட்டி. ஸ்கேன் எடுத்து வாருங்கள் என்று அவர் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். உடனே நாம், இல்லை சார், என் நண்பரின் ஸ்கேன் செண்டர் ஒன்று உள்ளது, அங்கே போய் எடுத்துக்கொள்கிறேன் என்று சொன்னால் அவர் என்ன சொல்வார் என்று நினைக்கிறீர்கள்? நிச்சயமாக ஒத்துக்கொள்ள மாட்டார். கண்ட கண்ட செண்டர்களில் எடுத்த ரிப்போர்ட்டையெல்லாம் நான் பார்க்க மாட்டேன். நான் சொல்லும் இடத்தில் எடுத்துக்கொண்டு வா, இல்லையென்றால் என்னைப் பார்க்க வராதே என்று திட்டவும் செய்யலாம். நான் சிபாரிசு செய்யும் மையம் இந்த மாநகரத்திலேயே மிகச்சிறந்தது என்றும் சொல்லலாம்.

ct scanஎன்னை ஒரு முறை அப்படித்தான் ஒரு சி.ட்டி. ஸ்கேன் எடுக்கச் சொல்லி டாக்டர் அனுப்பினார். இதயத்தில் ஸ்டெத்-தை வைத்துப் பரிசோதித்துவிட்டு, வழக்கம் போல இசிஜியும் எடுத்துவிட்டு, இதயத்தில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று சொல்லி அங்கே அனுப்பிவிட்டார். அடிமுட்டாளாகிய நானும், என்மீது அபரிமிதமான பாசம் கொண்ட முட்டாளாகிய என் மனைவியும் அங்கே சென்றோம். ரொம்ப தயக்கத்துப் பிறகு நான் அந்த டெஸ்ட்டை எடுக்க என்னை அனுமதித்தேன். முக்கியமாக என் மனைவியை திருப்திப் படுத்தத்தான் அது.

என் வலது மணிக்கட்டில் ஒரு ஊசியை ஏற்றி ஒரு குளிர் படுக்கையில் என்னைப் படுக்க வைத்து, சினிமாவில் வருவதுபோல என்னை எதற்குள்ளோ அனுப்பினார்கள். எனக்கு எடுத்த குளிரில் என் உடம்புக்குள் இருந்த பஞ்ச பூதங்களும் உறைந்து போயின. ரிப்போர்ட்டை வாங்கிக் கொண்டு ஒரு காரில் ஏறி வீட்டுக்குப் போகும் வழியில் வந்ததே ஒரு உதறல்! அதை இன்று நினைத்தால்கூட உதறுகிறது! என்னை யாரோ ஒரு கண்ணுக்குத் தெரியாத ஜின் அல்லது விஸ்வரூபி அனாயாசமாக உறுப்பு உறுப்பாக தூக்கித் தூக்கிப் போட்ட மாதிரி ஒரு உதறல். என் வாழ்க்கையில் எனக்கு அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் அப்படி ஒரு உதறல் வந்ததில்லை. வீட்டு மாடியில் என்னைக் கைப்பிடித்து ஏற்றிய குண்டு ட்ரைவர்கூட பயந்து போனார். டாக்டருக்கு ஃபோன் செய்து சொன்னபோது, ’அப்படித்தான் இருக்கும், கொஞ்சம் மோர் குடிக்க வையுங்கள்’ என்று காஷுவலாகச் சொன்னாராம். மோர் குடித்த கொஞ்ச நேரத்தில் கண்ணுக்குத் தெரியாத அமானுஷ்யங்களின் வன்முறையான உதறல் என்னை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகச் சென்றது.

அந்த உதறல் டெஸ்ட்டுக்கு நான் கொடுத்த பணம் பதினோறாயிரம் ரூபாய்கள்! விஷயம் அதுவல்ல. ரிபோர்ட்டை டாக்டரிடம் காட்டியபோது அவர், ’நல்ல வேளை இதயத்தில் ஒன்றும் பிரச்சனை இல்லை’ என்று சொன்னார்! அடப்பாவி, இதயத்தில் ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்வதற்கு எனக்கு 11, 000 ரூபாய்கள் செலவு வைத்து என்னை ஏழாவது வானத்துக்கு கொஞ்ச நேரம் ஏன் அனுப்பிவைத்தாய் என்ற கேள்விக்கு விடையை டாக்டர் ஹெக்டேயும் ஹீலரும் உமரும்தான் எனக்குச் சொன்னார்கள்!

அந்த விடையின் பெயர் கமிஷன்!

நூறு ரூபாய்க்கு நீங்கள் டெஸ்ட் எடுத்தால், கிராமமாக அல்லது சிறு நகரமாக இருந்தால், குறைந்தது நாற்பது ரூபாய் மருத்துவருக்குப் போகிறது. அதுவே பெருநகரமாக இருந்தால் எழுபது ரூபாய் வரை போகும் என்கிறார் ஹீலர் உமர். தொன்னூறு விழுக்காடு மருத்துவருக்குப் போகிறது என்கிறார் ஹெக்டே! நான் இந்த விஷயத்தில் டாக்டர் ஹெக்டே சொல்வதையே ஏற்றுக்கொள்கிறேன்! ஒரு நாளைக்கு பத்து பேருக்கு சி.ட்டி. ஸ்கேன் எடுக்க அனுப்பிவிட்டால் போதும், ஒரு நாள் வருமானம் ஒரு லட்ச ரூபாய்! ஆஹா, மருத்துவ சோதனைக்கூடங்கள் வாழ்க! எம்.பி.பி.எஸ். படிக்க ஏன் கோடிகோடியாகக் கொட்டி செலவு செய்ய அலைகிறார்கள் என்று இப்போதுதான் புரிகிறது!

இப்போது ஒரு கேள்வி வருகிறது. இவ்வளவு சதவீதத்தை மருத்துவருக்கே கொடுத்துவிட்டால், சோதனைக்கூடங்களுக்கு என்னதான் கிடைக்கும்? அப்படியானால் அவர்கள் உண்மையில் சோதனை செய்வார்களா மாட்டார்களா?

சுவாரஸ்யமான பதில்கள் காத்திருக்கின்றன.

======

 

 

 

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

3 Responses to   நலம் நலமறிய ஆவல் — 19 – அதிநவீன எலிப்பொறிகள்

 1. Nagore Ganapathy says:

  Dear Dr.Rumi,
  Well said.When ever I go to a scanning center any where in Chennai it is crowded like fish market.
  The money they get is very big even after sparing a big portion to doctors for their reference.
  You can find minimum two centers on all the streets.
  Er.Nagore Ganapathy,former AGM SIPCOT

 2. lakshmi says:

  where to read நலம் நலமறிய ஆவல்11th to 18th editions. It is missing 10th to 18th, kindly post it or give the link

  • நாகூர் ரூமி says:

   Please visit dinamani.com junction section and click my name in Nalam Nalamariya Aval and you can select the number of the article you want.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s