ஆதியோகியும் பாதி யோகியும்

தினமணி டாட் காமில் இன்று வெளியான கட்டுரை. நன்றி: தினமணி

551412-modi-sadhguru-jaggi-vasudevகோவையில் உள்ள ஈஷா மையமும் அதன் செயல்பாடுகளும் கொஞ்ச காலமாகவே பல கேள்விக்குறிகளை நமக்குள் எழுப்பிக்கொண்டே இருக்கிறது. சத்குரு என்று பக்தர்களால் ஆலாபனை செய்யப்படும் ஜக்கி வாசுதேவ் அவர்களால் இக்கேள்விகளுக்காக சொல்லப்பட்ட பதில்கள் மேலும் பல கேள்விகளை உருவாக்குவதாகவே உள்ளன.

எல்லாக் கேள்விகளுக்கும் பின்னால் உள்ள ஒரே கேள்வி ஒரு ஞானி இப்படி நடந்துகொள்வாரா என்பதுதான். நிச்சயம் நடந்துகொள்ள மாட்டார் என்பதைத்தான் உண்மையான ஞானிகளின் வரலாறு காட்டுகிறது.

தலைக்கு ஏறிவிட்ட சக்தியைக் கட்டுப்படுத்த அந்தக் காலத்தில் ஜடா முடி வைத்தார்கள். எனக்கு ஜடாமுடி இல்லாததால் தொப்பி அணிந்து அதைக்கட்டுப்படுத்தி வைத்திருக்கிறேன் என்று சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் ஜக்கி கூறினார். மூலாதாரத்திலிருந்து சஹஸ்ராரம் எனும் இறுதிச் சக்கரம் வரை நான் சக்தியை மேலேற்றிவிட்டேன் என்று சூசகமாக உடல்குலுங்க சிரித்துக்கொண்டே அவர் கூறுவதைக் கேட்கும்போது நாமும் உடல் குலுங்க அவரைப் போலவே சிரிக்கலாம்! அவரைப் பார்த்து.

Sri_Ramakrishna_Paramahamsa-imageஒரு நாளில் பல முறை சமாதி நிலைக்குச் செல்வதை இயல்பாகவும் இயற்கையாகவும் கொண்ட மகான் ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்சர் ஒரு நாள்கூட சக்தி தன் தலைக்கேறிவிட்டது என்று சொன்னதில்லை. அவர் சொல்லமாட்டார். அவர் ஓர் உண்மையான மகான். ’கொழுப்பு, திமிர் தலைக்கேறிவிட்டது’ என்று பெரியவர்கள் சிறியவர்களைத் திட்டுவதுதான் நினைவுக்கு வருகிறது!

சட்டத்தை மதிக்காமல் காடுகளை அழித்தும், மிருகங்களின் வழித்தடங்களை அபகரித்தும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டு தொடர்பாக ஜக்கி கொடுத்த பல தொலைக்காட்சிப் பேட்டிகளில் ஒரே பதிலைத்தான் திரும்பத்திரும்ப சொல்கிறார்: சட்டப்படிதான் எல்லாம் செய்யப்படுகிறது; குறைகூறுபவர்களின் விருப்பப்படியெல்லாம் செய்ய முடியாது. அது விஷயமாக காலமும் சட்டமும்தான் பதில் சொல்லவேண்டும்.

ஆனால் பெற்றோரின் விருப்பத்துக்கு மாறாக வாழவேண்டிய கன்னிப் பெண்களை சந்நியாசினியாக்குகிறார் என்ற இன்னொரு குற்றச்சாட்டு உள்ளது. அதற்கும் சட்டப்பூர்வமாகத்தான், 18 வயது வந்த அப்பெண்களின் விருப்பத்தோடுதான் எல்லாம் நடக்கிறது என்ற பதில் போதாது. பிரச்சனையை மறைக்க சட்டம் என்ற சொல் அங்கே பயன்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஏனெனில் அந்த நிகழ்ச்சியின் பின்னால் உணர்ச்சி, பாசம், பெற்றோர் பிள்ளை உறவு என்று பல விஷயங்கள் உள்ளன.

32016 ஆகஸ்ட் வாக்கில் வேளாண் பல்கலைக்கழகப் பேரா. காமராஜும் அவர் மனைவியும் தங்கள் இரண்டு மகள்களையும் மொட்டையடித்து ஜக்கி சந்நியாசினிகளாக்கிவிட்டார், அவர்களைப் பார்க்கக்கூட அனுமதிக்கவில்லை. துரத்தியடிக்கிறார்கள் என்று தொலைக்காட்சிச் செய்திகளில் வேதனையை வெளிப்படுத்தினார்கள்.

5ஒரு சிவராத்திரி அன்று ஈஷா மையம் சென்ற அவரது மகள்கள் இருவரும் ஈஷா மையத்தின் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு நாங்களும் யோகா கற்றுக்கொள்கிறோம், யோகா சொல்லித்தருகிறோம் என்று அங்கேயே தங்கிவிட்டார்கள். ஆனால் கொஞ்ச காலம் கழித்து இங்கே நடப்பதெல்லாம் சரியில்லை, எங்களை வந்து அழைத்துச் சென்றுவிடுங்கள் என்று ஒருநாள் ஒரு மகள் ஃபோன் செய்ய, போய்ப்பார்த்தபோது இருவரும் மொட்டையடிக்கப்பட்டு  சந்நியாசினிகளாக காட்சியளித்தனர். ஆனால் சொந்த விருப்பத்தின் பேரிலேயே அப்படி பிரம்மச்சரியம் ஏற்றுக்கொண்டதாகவும் சொன்னார்கள். இடையில் நடந்ததென்ன என்ற மர்மம் இன்றுவரை நீங்கவில்லை. பாவப்பட்ட பெற்றோர் காவல்துறை, நீதிமன்றம் ஆகியவற்றின் உதவியை நாடியும் இன்றுவரை பலனில்லை என்றன அதே தொலைக்காட்சி மற்றும் ஊடகச் செய்திகள்.

Jaggi Daughter Marriageஆனால் ராதை என்ற தன் மகளுக்கு மட்டும் ஜக்கி வெகு விமரிசையாகத் திருமணம் செய்துவைத்தார். ஊரில் உள்ள பெண்களுக்கெல்லாம் சந்நியாசம் சிபாரிசு செய்யும் அவர் தன் மகளுக்கு அதைச் செய்யவில்லை. உபதேசமல்லாம் ஊருக்கு மட்டும்தானா என்ற கேள்வி நம் முன் எழுகிறது. தன் மகளுக்கு சந்நியாச வாழ்க்கையில் விருப்பமில்லை என்று அதற்கு பதில் வரலாம் என்பதையும் புரிந்துகொள்ளமுடிகிறது.

Sai Baba in front of Dwarkamai Dhuniமகரிஷி என்று ரமணரும் பரமஹம்சர் என்று ஸ்ரீ ராமக்ருஷ்ணரும், பாபா என்று ஷிர்டி சாய்பாபாவும் போற்றப்படுகிறார்கள். இந்த கௌரவப் பட்டங்கள் எல்லாம் சாதாரண மக்களால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டவை. இன்றளவும், உலக முடிவுநாள் வரையிலும் அவர்கள் அப்படியே கௌரவிக்கப்படுவார்கள். உண்மையான ஞானிகள் யாரும் செல்வந்தர்களாக இருந்தவர்களில்லை. பணத்தை மதித்தவர்களுமில்லை. தனக்குப் பின்னால் ஒரு கூட்டத்தைக் கூட்டிக்கொள்ள ஆசைப்பட்டவர்களுமில்லை. பரமஹம்சருக்கு கையில் காசு பட்டாலே வலியும் வேதனையும் ஏற்படுமாம்! நமக்கோ காசு இல்லாவிட்டால்தான் வலியும் வேதனையும்!

சத்குரு என்ற பட்டத்தை ஜக்கி வாசுதேவ் அவர்களுக்கு யார் கொடுத்தார்கள்? சீடர்கள் என்று சொல்லப்படுகிறது! ஒருவேளை, அவரே அவருக்கு சீடராக இருந்திருப்பாரோ என்று தோன்றுகிறது!

ஒருவரின் செயல்பாடுகளை வைத்துத்தான் அவரது உண்மையான ஞானம் வெளிப்படும். அவரது பணத்தையோ செல்வாக்கையோ வைத்து அல்ல. ஆனால் ஜக்கியின் கதை வேறு மாதிரி உள்ளது. கோடிகோடியாகப் பணமும், மிகுந்த அரசியல் செல்வாக்கும் மிகுந்தவராகவே அவர் இன்றுவரை காணப்படுகிறார். உதாரணமாக ஆதியோகியாக சித்தரிக்கப்படும் சிவனின் சிலை திறப்பு விழாவுக்கு பிரதமர் வந்ததைச் சொல்லலாம்.

1விவசாயிகள் பிரச்சனைக்காக, ஜல்லிக்கட்டுப் பிரச்சனைக்காகவெல்லாம் மக்கள் பிரதிநிதிகளைச் சந்திக்க நேரம் ஒதுக்க முடியாத பிரதமர் ஆதியோகி என்று ஜக்கி வாசுதேவால் வர்ணிக்கப்படும் சிவபெருமானின் 112 அடி சிலையைத் திறக்கும் விழாவில் கலந்துகொள்ள கோவையில் உள்ள ஈஷா மையத்துக்கு வருகை புரிகிறார்! வாசுதேவரின் கையால் மாலை வாங்கிக்கொள்கிறார்! சின்ன கொட்டு ஒன்றையும் அடித்து மகிழ்கிறார்!

வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் 15 லட்சம் சதுர அடிகளில் அமைந்துள்ளது ஈஷா மையம். இத்தனை லட்சம் சதுர அடிகளுக்கு காட்டை அழித்து கட்டடங்கள் எழுப்ப வேண்டுமெனில் எவ்வளவு இயற்கை நாசத்தை ஏற்படுத்த வேண்டியிருக்கும் என்று அறிவுள்ள யாரும் அனுமானிக்க முடியும். அவர் நடத்தும் பள்ளிகளில் குழந்தையைச் சேர்க்க சில லட்சம் ரூபாய்கள் ‘ஃபீஸ்’ வாங்கப்படுகிறது.

ஜக்கி அவர்களின் செல்வாக்கும் பண பலமும் இதிலிருந்து தெரியவில்லையா?

Sadhguru-Man-Snakesஉண்மையான ஞானிகள் யாருமே மனிதர்களுக்கோ விலங்குகளுக்கோ தீமை செய்ததாக வரலாறு கிடையாது. ஒரு கிணற்றில் தன் சாக்ஸிலிருந்து தண்ணீர் எடுத்து தாகித்துக்கொண்டிருந்த ஒரு நாயின் வாயில் சாக்ஸைப் பிழிந்து தண்ணீர் ஊற்றியதற்காக ஒருவருக்கு சொர்க்கத்தை இறைவன் கொடுத்ததாக நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளில் ஒன்று கூறுகிறது. ஜக்கி அவர்களுக்கும் விலங்குகளின் மீது பிரியம் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக கடும் விஷமுள்ள பாம்புகளின் மீது! பாம்பின் கால் பாம்பறியும் என்பது அதுதானோ !

8ஆனால் யானைகள் மீது அவருக்கு எந்தப் பிரியமும் இல்லை. யானைகள் செல்லும் வழித்தடத்தை அழித்துத்தான் ஈஷா மையம் கட்டப்பட்டிருப்பதாக செய்திகள் வந்தபோதெல்லாம் அதை மறுத்து தொலைக்காட்சிப் பேட்டிகளில் அவர் பதிலளித்தார். ஆனால் ஆதியோகி சிலை திறக்க பிரதமர் வந்தபோது அவருக்கு யானைகளின் தொல்லைகள் இருக்கக்கூடாது என்பதற்காக பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக ஈஷா மைய செய்தி கூறியது! யானைகளின் வழித்தடத்தில் அந்த இடம் அமைந்திருக்கவில்லையெனில் எதற்கு அந்த சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடு? இந்த முரணைப் புரிந்துகொள்கிற அளவுக்கு பொதுமக்களுக்கு அறிவில்லை என்று ஜக்கி நினைத்திருக்கலாம்.

தொலைக்காட்சிப் பேட்டிகளிலிலும் பத்திரிக்கைகளிலும் கேட்கப்படாத சில கேள்விகள் உண்டு.

51+dVxfx+xL._SX322_BO1,204,203,200_இந்து மதத்தில் முற்பிறவி பற்றிய கருத்துக்கள் இருப்பதை உலகறியும். Sadguru More Than A Life என்ற அவரது வாழ்க்கை வரலாற்றில் அவர் முற்பிறவிகளில் யாராகவெல்லாம் இருந்தார் என்று கதைகதையாக கூறப்படுகிறது! அதில் ஒரு பிறவியில் அவர் காட்டுவாசியாக இருந்தபோது காதலித்த பெண்ணின் பெயர்தான் சாம்பவி. அந்த முற்பிறவிக் ’காதலுக்கு மரியாதை’ செலுத்தும் விதமாக அவரது தியானங்களில் ஒன்றுக்கு ’சாம்பவி மஹாமுத்ரா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது!
சிவனது இன்னொரு வடிவமாக வணங்கப்படுவதுதான் Dyanalingaசிவலிங்கம். 76 அடி உயர தியானலிங்கம் 1999-ம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு மக்கள் வந்து தியானம் செய்யும் இடமாக ஆக்கப்பட்டது.

சந்நியாசம் போவது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். அப்படி ஒருவர் போவதை இந்துமதம் அனுமதிக்கிறது. தன் அன்னையின் அனுமதியோடு ஆதி சங்கரர் சென்றார். ஆனால் சந்நியாசிகளுக்காக ஒரு நிறுவனத்தை ஏன் ஜக்கி வாசுதேவ் ஏற்படுத்த வேண்டும்?

காளி கோவில் பூசாரியாக தான் இருந்ததை பரமஹம்சர் என்றும் பெருமையாகத்தான் சொல்லியிருக்கிறார். அதனால் அவருக்கான மரியாதை கூடவே செய்தது. ஏனெனில் அவரிடம் உண்மை இருந்தது. நேர்மை இருந்தது. ஆனால் சிவனைத்தான்  நான் வணங்குகிறேன் என்று ஏன் ஜக்கி அவர்கள் இதுவரை ஒத்துக்கொள்ளவில்லை?

ஈஷா மையக்கட்டிடங்கள் பல முறைப்படி அனுமதி பெறாமல் கட்டப்பட்டவை என்றும், யானை வழித்தடங்களை மறித்து கட்டப்பட்டது என்றும் பல கடிதங்கள், பல நோட்டீஸ்கள், பல எச்சரிக்கைகள் கொடுத்தும், வழித்தடம் அழிக்கப்பட்ட காரணத்தால் கடந்த பத்தாண்டுகளில் 133 யானைகள் இறந்து போனபோதும் எந்த மாற்றமும் இதுவரை செய்யப்படவில்லை என்று பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிச் செய்திகள் கூறுகின்றன.

தன் அருமை மகள்களுக்கு மொட்டையடித்து பலவந்தமாக சந்நியாசியாக்கிவிட்டார்கள் என்ற பெற்றோரின் குற்றச்சாட்டுக்கு ஜக்கி என்ன பதில் சொன்னார் தெரியுமா? பெற்றோர்கள் என்றாலே நல்லவர்கள் என்று சொல்லிவிட முடியாது. குழந்தைகளைக் கொல்லும் பெற்றோர்கள் இல்லையா? இந்த பெற்றோரின் பின்னால் ஏதோ ஒரு அரசியல் இருக்கிறது என்கிறார் ! அன்னை தெரசா மூலமாக இரண்டாயிரம் பேருக்கு மேல் சந்நியாயம் வாங்கினார்கள். அதை யாராவது கேள்வி கேட்டீர்களா என்கிறார்!

ஓர் உண்மையான ஞானி, ஒரு மகான் இப்படித்தான் பேசுவாரா?

சிவபெருமான், முற்பிறவி, தியான லிங்கம், வாழவேண்டிய இளம் பெண்களை மொட்டையடித்து சந்நியாசம் வழங்குதல், ராட்சச ஆதியோகி சிலை என்று அவர் செய்துகொண்டிருக்கும் எல்லாமே இந்து மதம் சார்ந்த, சைவ நெறி சார்ந்த விஷயங்கள்தான். ஆனால் குறிப்பிட்ட மத நெறியினைத்தான் பின்பற்றுகிறேன் என்று அவர் இன்றுவரை ஒத்துக்கொண்டதில்லை. அதுமட்டுமின்றி, சிவன் கடவுளே இல்லை என்றும் சாதிக்கிறார்! இது ஏன்? மஹாசிவராத்திரி அன்று மட்டும் தனக்கென்று போடப்பட்ட பிரத்தியேக நடைமேடையில் குதித்தாடுவது ஏன்?7

மனசாட்சியுள்ள எல்லா மனிதர்களுக்கும் இப்படிப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் தெரியும்தான். ஆனால் பணமும், செல்வாக்கும் எல்லா வாய்களையும் அடைக்கிறது.

ஆங்கில இலக்கியம் படித்த ஜக்கி வாசுதேவின் ஆங்கிலம் நன்றாக இருக்கும். ஆனால் அவருடைய தமிழ்தான் கேட்டு சிரிக்கக்கூடியதாக இருக்கும்! பலர் தங்களுடைய ”வயிற்றுப் போக்குக்காக”  தன் மீது குற்றம் சுமத்துவதாக ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் வாசுதேவ் கூறினார்! ’வயிற்றுப் பாட்டுக்காக’ என்பதைத்தான் அவர் அப்படிக் கூறினார்!

சிவன் வேண்டுமானால் ஆதியோகியாக இருந்திருக்கலாம். ஆனால் ”வயிற்றுப் போக்குக்காக” முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்கிற ஜக்கி வாசுதேவ் அவர்கள் ஒரு ஞானியாக, பரிபூரணமடைந்த முழு யோகியாக இருக்க வாய்ப்பில்லை என்பதையே அவரது சொல்லும் செயலும் காட்டுகின்றன.

ruminagore@gmail.com

 

 

 

 

 

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

One Response to ஆதியோகியும் பாதி யோகியும்

  1. Barakathullah says:

    நல்ல கட்டுரை. உண்மையான கருத்துக்கள். ஆராய்ந்து தரப்பட்ட ஆதாரப் பூர்வமான தகவல்கள். நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s