காலில் விழலாமா

அன்பு நண்பர்களுக்கு

காலில் விழுவது பற்றி சில கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். சக்கரவர்த்தி அசோகர் ஒரு துறவியின் காலில் விழுந்தார் என்று ஒரு நண்பர் எழுதியிருந்தார். அந்த நிகழ்ச்சி அர்த்தம் பொதிந்தது. காலில் விழுவது பணிவின் அடையாளம். மரியாதையின் அடையாளம். அவ்வளவுதான்.

முஸ்லிம்கள் யார் காலிலும் விழுவதில்லை பொதுவாக. ஆனால் விஷேஷ  நாட்களில் பெற்றோர், முதியவர்கள் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவார்கள். சின்ன வயதில் நானும் விழுந்து ஆசீர்வாதமும் காசும் பெற்றிருக்கிறேன்! ஆனால் நான் விழுந்த நோக்கம்மே காசு பெறுவதுதான்!

நிற்க, கொஞ்சகாலமாக என்னைச் சந்திக்க வரும் சிலர் என் காலில் விழுகிறார்கள். என்னைவிட வயதில் பெரியவர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள்கூட. எனக்கது சங்கடமான விஷயம் என்றாலும் அவர்களின் பண்பாடு, நோக்கம் கருதி நான் அதை அனுமதிப்பதுண்டு. வேண்டாம் என்று ஒரேயடியாக மறுத்தால் அவர்கள் மனம் புண்படுமோ என்ற கவலை எனக்குண்டு. அது ஒரு issue ஆகிவிடக்கூடாது.

எந்த நாளிலும்,அப்படியொரு மரியாதை கிடைக்க வேண்டுமென்பதற்காக நான் எந்தக் காரியமும் செய்ததில்லை. நான் மறுமையில் ஆண்டவனுக்கு பதில் சொல்லியாகவேண்டும். மனிதர்களிடம் பொய் சொல்லிவிடலாம். ஆனால் இறைவன் முன் போகும்போது நம் கைகளும், கால்களும், மொத்த உடம்பும் பேசும்!

போகட்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலில் யாரும் விழுந்தார்களா, அப்படி ஒரு காரியத்தை அவர்கள் அனுமதித்தார்களா, தடுத்தார்களா என்று சரியாகத்தெரியவில்லை. தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்று சொன்னவர்கள் அவர்கள்.

எந்தக் காலத்திலும் தனக்கு பிரத்தியேக மரியாதை தரப்படுவதை அவர்கள் விரும்பியதில்லை. ஒரு விரிப்பில் தோழர்கள் அமர்ந்திருக்கும்போது அவர்கள் வந்தால், தோழர்கள் எழுவதை தடுத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, விரிப்பின் நடுவில் போய் அமர்வதில்லை. இடமிருக்கும் ஓரத்திலேயே அமருவார்கள்.

உலக வரலாற்றை எடுத்துப்பார்த்தால் எல்லா ஞானிகளுக்கும் சீடர்கள் உண்டு. அந்த ஞானிகள் அவர்களை சீடர்கள் என்று அறிவித்ததும் உண்டு. அது தவறு என்று நான் சொல்ல வரவில்லை. ஒரு தகவலுக்காகச் சொல்கிறேன். ஆனால் தன்னையறிந்த, இறைவனைக் கண்ட ஞானியான நபிகள் நாயகம் மட்டும்தான் உலக வரலாற்றிலேயே, தன்னைப் பின்பற்றுபவர்களை, தாய், தந்தையரை, உயிரைவிட தன்னை மேலாக மதித்தவர்களையெல்லாம் தோழர் (ஸஹாபா) என்று அழைத்தார்கள். ஒரு ஞானி தன் சீடர்களுக்கு அளித்த உச்சகட்ட மரியாதை என்று நான் அதைச் சொல்வேன்.

sajdaநிற்க, காலில் விழுவது ’ஸஜ்தா’(வணங்குவதற்குச் சமம்) என்ற ஒரு கருத்து உள்ளது சில முஸ்லிம்களிடத்தில். அதனாலேயே அதனை அவர்கள் அனுமதிப்பதோ, விரும்புவதோ இல்லை. ஆனால் ஒரு முஸ்லிம் இன்னொரு மூத்த முஸ்லிமின் காலைத்தொட்டு மரியாதை செய்வது நிச்சயமாக வணக்கமாகாது. ஏனெனில் முதல் மனிதர் ஆதமைப் படைத்துவிட்டு ’ஆதமுக்கு ஸஜ்தா செய்யுங்கள்’ என்று இறைவன் வானவர்களிடம் கூறுவதாக திருமறை குர்’ஆனில் வசனம் உண்டு:

வ இத் குல்னா லில் மலாயிக திஸ்துஜூ லி ஆதம ஃப சஜதூ இல்லா இப்லீஸ். அபா வஸ்தக்பர வ கான மினல் காஃபிரீன்

என்று அத்தியாயம் 2, வசனம் 34 கூறுகிறது. இதன் அர்த்தம்:

பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.

அதாவது, தனது பிரதிநிதியாகப் படைத்துள்ள முதல் மனிதர் ஆதமுக்கு ’ஸஜ்தா’ செய்யுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். இங்கே ’ஸஜ்தா’ என்ற சொல் இஸ்லாமிய தொழுகையின் ஒரு பகுதியாக உள்ள தலைகுனிந்த நிலையில் செய்யப்படும்’ஸஜ்தாவைக் குறிக்கவில்லை. அப்படிக் குறிக்குமனால் மனிதன் வணங்கத் தகுந்தவன் என்ற அர்த்தம் கிடைத்துவிடும். மனிதனை வணங்குங்கள் என்று இறைவன் கூறவில்லை. ஆனால் மரியாதை செலுத்துங்கள் என்று மலாயிகத்துகளுக்கு (வானவர்களுக்கு) கூறுகிறான். மனிதனுக்கு சேவை செய்யுங்கள் என்றும் இதற்கு அர்த்தம் எடுக்கலாம். ஆதமுக்கு ஸஜ்தா செய்யாத இப்லீஸ் இறைமறுப்பாளனாகிவிட்டான் என்று அல்லாஹ் கூறுவதையும் கவனியுங்கள்!

touching feetஒரு மனிதன் தன் கைகளையோ, தலையையோ இன்னொரு மனிதரின் காலடியில் வைப்பானேயானால் இறைவனுக்கு செய்யப்படும் மரியாதையை ஒத்த ஒரு செயலை அம்மனிதன் செய்வதாகவும், அதனால் அது இறைவனுக்கு இணை வைத்தல் (ஷிர்க்) என்ற பாவ காரியமாகிவிடும் என்றும் ஒரு கருத்து உள்ளது. ஆனால் இந்தக் கருத்தில் உள்ள பலர் அவர்களாகவே சொந்தமாக இந்தக் கருத்துக்கு வந்ததில்லை. மார்க்க அறிஞர்கள் என்று அறியப்படுகிற சில தலைவர்கள் சொல்வதை அப்படியே ஒப்பிக்கிறார்கள், அது ஒரு கிளிப்பேச்சு. அவ்வளவுதான். சுயமாக சிந்திப்பார்களேயானால் சில உண்மைகளை இறைவன் அவர்களுக்குப் புரிய வைக்கலாம்.

ஒரு மனிதர் இன்னொரு மனிதர் காலில் விழுவது தடுக்கப்பட்டது, அது கூடாது, அது இணை வைப்பது (ஷிர்க்) என்று சொல்லப்படுமானால், நினைக்கப்படுமானால் அது தவறாகும். இறைவனின் அடிப்படைத் தன்மையையைப் புரிந்துகொள்ளாமல் அவசர கதியில் சொல்லப்பட்ட கருத்தாகிவிடும். ஏன்?

இஸ்லாமியப் புரிதலின்படி இறைவனுக்கு உருவம் கிடையாது. அவன் தேவைகளற்றவன் அவனுக்கு ஆரம்பம் கிடையாது.

அவனே ஆரம்பம், அவனே முடிவு. அவனே பகிரங்கம், அவனே அந்தரங்கம் ஹுவல் அவ்வலு, வல் ஆஹிரு, வல் வள்ளாஹிரு, வல் பாதினு,

அல்லாஹுஸ் ஸமது (அவன் தேவைகளற்றவன்)

என்று குர்ஆன் அல்லாஹ்வின் தன்மைகளைப் பற்றிக் கூறுகிறது (57:03, 112:02).

இறைவனுக்கு உருவம் இருந்தால்தான் தலை, காலெல்லாம் இருக்கும்! எனவே ஒரு மனிதரின் காலில் விழுந்து மரியாதை செய்வது இறைவனுக்கு இணைவைக்கும் காரியம் என்று நினைத்தால் இறைவனுக்கு உருவம் இருப்பதாக ஒத்துக்கொள்வதாக அர்த்தமாகிவிடும்! அவனுக்குக் காலும் இல்லை, அவன் நம்மைப்போல ஒரு ஆளும் இல்லை!

நீங்கள் எந்தக் காரியம் செய்தாலும் அதன் பின்னால் உள்ள உங்கள் இதயத்தையே, உங்கள் எண்ணத்தையே, உங்கள் நோக்கத்தையே இறைவன் பார்க்கிறான்.

நீங்கள் வெளிப்படுத்துவதையும் இதயத்தில் மறைப்பதையும் இறைவன் அறிவான் என்கிறது திருமறை (03:29).

உங்கள் இதயங்களில் என்ன இருக்கிறது என்று இறைவன் பரிபூரணமாக அறிவான் என்று திருமறையில் அனேக இடங்களில் இறைவன் கூறுகிறான். உதாரணமாக பார்க்க: 03:119, 154, 05:07, 08:43, 11:05, 28:69, 29:10, 33:51.

எனவே நீங்கள் என்ன நினைத்து ஒரு காரியத்தைச் செய்கிறீர்கள் என்பதை வைத்துத்தான் அக்காரியம் தவறானதா, சரியானதா என்று முடிவு செய்யவேண்டும். எல்லாக் காரியங்களும் அவைகளின் பின்னால் உள்ள எண்ணததை / நோக்கத்தை வைத்தே முடிவு செய்யப்படும் என்பது நபிமொழியும்கூட (இன்னமல் அ’ஃமாலு பிந்நிய்யாத்).

எனவே காலில் விழுவதை ஒரு பிரச்சனையாக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்.

 

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s