பிராமணர்கள் மாமிசம் உண்பவர்கள்!

பிராமணர்கள் மாமிசம் உண்பவர்கள்!

என்ன ஆச்சரியமாக உள்ளதா? மாட்டை யாரும் கொல்லக்கூடாது, அதன் கறியை யாரும் உண்ணக்கூடாது என்று சட்டம் இயற்றும் நாட்டில் பிராமணர்கள் மாமிச உணவு உண்பவர்களென்று சொன்னால் அது ஆச்சரியம்தானே? ஆனால் அது உண்மை. இந்த உண்மையை நான் சொல்லவில்லை. ஒரு பிரபலமான நாடறிந்த பிராமணரே சொல்கிறார்! அவர் பெயர் ராஜகோபாலாச்சாரியார்! ஆமாம். எங்கே, ஏன் சொல்கிறார் என்று தெரிந்துகொள்ள நாம் மஹாபாரதக் கதையொன்றுக்குள் செல்ல வேண்டும். செல்வோமா?

அகத்திய ஜீரணம்

பாண்டவர்கள் தீர்த்த யாத்திரை போனபோது மணிமதி என்று ஒரு ஊரில் தங்கினார்கள். மணிமதி. ஆஹா,என்ன அழகான தமிழ்ப்பெயராக உள்ளது! அந்த நகரத்தின் கதை என்னவென்று யுதிஷ்ட்ரர் கேட்டார். யாரிடம்? அங்கிருந்த லோமசர் என்ற முனிவரிடம். மணிமதியின் வரலாற்றைச் சொல்லத்தொடங்கினார் லோமசர். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வரலாறு உண்டு. அது ஊரின் வரலாறாக மட்டும் இருக்காது. அவ்வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் ஒன்று நிச்சயம் இருக்கும். மணிமதியின் வரலாறும் அப்படிப்பட்டதுதான்.

அந்தக் காலத்தில் மணிமதியை ஒரு ராட்சசன் ஆண்டு வந்தான்! ஆமாம். ராட்சசர்களும் அரசர்களாக அந்தக் காலத்தில் இருந்திருக்கிறார்கள். ஏன் இப்போதுகூட ராட்சசர்கள் அரசியல் தலைவர்களாக, அதிகாரிகளாக இருக்கும் வரலாற்றையும் நாம் அறியத்தானே செய்கிறோம்? ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின், போல்பாட், ஜார்ஜ் புஷ், ராஜபக்‌ஷே – இப்படி இல்லையா என்ன? மஹாபாரதகால வரலாற்றின் தொடர்ச்சியில்தான் நாம் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

மணிமதியின் அரசன் ஒரு அசுரன். அவன் பெயர் இல்வலன் (இதுகூட சுத்தமான தமிழ்ப்பெயர்போல உள்ளது. சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் ஏதோ ரத்த சம்பந்தம் உள்ளது). அவனுக்கு ஒரு தம்பி. ஏன் அசுரர்களுக்கு சகோதரர்கள் இருக்கக்கூடாத என்ன? தம்பி பெயர் வாதாபி. இல்வலனுக்கு அந்தணர்கள்மீது பயங்கர கோபம். ஏன்? தனக்கு இந்திரனைப் போன்ற ஒரு பிள்ளைவேண்டும், அதற்கு வரம் கொடுக்கவேண்டும் என்று ஒரு பிராமண முனிவரிடம் அவன் கேட்டிருந்தான். ஆனால் அந்த ரிஷி, பேராசை பிடித்தவனே என்று அவனைத் திட்டி அனுப்பிவிட்டார். அதிலிருந்து எல்லா பிராமணர்களையும் கொல்லவேண்டும் என்று இல்வலனுக்கு வெறி பிறந்தது.

வெறியைத் தணிக்க அவன் என்ன செய்தான்? ஒரு வினோதமான காரியம் செய்தான். கறி சமைத்தான்! வெறி போக்க கறியா? ஆமாம். பிராமணர்களை, தவ சிரேஷ்டர்களையெல்லாம் அழைத்து விருந்தளித்தான்! இது என்ன புதுமை என்கிறீர்களா? அங்கேதான் விஷயமிருக்கிறது.

விருந்தென்றால் சாதாரண விருந்தல்ல. ரொம்ப ஸ்பெஷல். ஆமாம். சோற்றுக்குக் கறியென்ன தெரியுமா? ஆட்டுக்கறி. அதுவும் ராட்சச ஆட்டுக் கறி! ஆமாம். தன் தம்பி வாதாபியை வெட்டி கறி சமைத்து விருந்திட்டான்! இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா? இதோ சொல்கிறேன்.

தம்பி வாதாபி விருந்தினர்கள் குளிக்கப் போயிருக்கும்போது ஒரு ஆடாக மாறிவிடுவான். அந்தணர்கள் குளித்துவிட்டு வருவதற்குள் வாதாபி ஆட்டை அறுத்து சமைத்து தயார் செய்துவிடுவான் இல்வலன். வந்தவுடன் பரிமாறுவான். அனைவரும் வயிறாற உண்டபிறகு, “வாதாபி, வெளியில் வா” என்று அழைப்பான். அவ்வளவுதான். உடனே வாதாபி அந்தணரின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு உயிருடன் வெளியில் வருவான். வயிறு கிழிபட்டு அந்தணர்  உயிர் துறப்பார். பிறகு இல்வலனுக்கும் வாதாபிக்கும் அந்தணக் கறிதான்.

இங்கே இரண்டு விஷயங்கள் நம் கவனத்துக்கு உரியது. ஒன்று சாப்பிடுவதற்கு முன் எல்லா பிராமணர்களும் குளிக்கப் போவார்கள் என்பது. உணவு உட்கொள்ளுமுன் கை கழுவிக்கொள்ளும் பழக்கம்கூட நம்மில் பலருக்கு இல்லை என்பதுதான் கண்கூடு. அல்லது கைகூடு. ஆனால் அந்தக் காலத்தில் குளித்துவிட்ட பிறகே உணவு உண்டிருக்கிறார்கள். புத்தரின் வரலாற்றிலும் இதையொத்த ஒரு அனுபவம் கூறப்படுகிறது. புத்தரை நான் மிகவும் நேசிப்பதற்கு அந்த நிகழ்ச்சியும் ஒரு காரணம். அது என்ன நிகழ்ச்சி?

புத்தர் பல நாள்கள், அல்லது சில மாதங்கள் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். ஞானம் பெறுவதற்காக வேண்டி. ஆனால் உண்ணாமல் இருந்ததனால் ஞானம் வருகிற மாதிரி தெரியவில்லை. உடல் எலும்புக்கூடு மாதிரி ஆகிவிட்டது. ஞானம் வருவதற்கு பதிலாக கடுமையான பட்டினியால் இயல்பாக அசையக்கூட முடியாத ஊனம்தான் வரும்போலிருந்தது. இது ஞானத்திற்கான வழியல்ல, சாப்பிட்டு விடலாம் என்று அவர் முடிவெடுத்தபோது சுஜாதா என்ற ஒரு பெண் அவருக்கு உணவு கொண்டு வந்து வைக்கிறாள். அவ்வளவு பசியிலும் புத்தர் அருகிலிருந்த ஆற்றில் இறங்கி குளித்துவிட்டுத்தான் அந்த உணவை உண்கிறார்! சுத்தம் சோறுபோடும் என்று சும்மா சொல்லவில்லை. வாழ்ந்ததைத்தான் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள்.

vadabi storyசரி, இரண்டாவது விஷயம் இன்னும் ஆச்சரியமானது. ஆமாம். பிராமணர்கள் எப்படி ஆட்டுக்கறி உண்டார்கள்? இந்தக் கால பிராமண நண்பர்கள் சிலர் அல்லது பலர் மாமிச பட்சிணியாக இருப்பது நமக்குத் தெரியும். என் பிராமண நண்பர்கள் சிலர் முட்டை மட்டும் எடுத்துக்கொள்வார்கள். இன்னும் சிலர் என்னைப் போலவே – நான் ’ஸ்ட்ரிக்ட் நான்-வெஜிடேரியன்’ – எல்லாம் சாப்பிடுவார்கள். ஆனால் மஹாபாரத காலத்தில் எப்படி என்று ஒரு கேள்வி வந்தது. அதற்கு பதிலும் கிடைத்துவிட்டது. “அந்தக் காலத்தில் பிராமணர்கள் மாமிசம் உண்பார்கள்” என்று பதில் சொல்கிறார் நம்ம சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (”மஹா பாரதம் வியாசர் விருந்து”  நூல், பக்கம் 152, வானதி பதிப்பக வெளியீடு). மஹாபாரத கால உணவுப்பழக்க வழக்கங்களை அனைவரும் பின்பற்றலாம் என்று நான் சிபாரிசு செய்கிறேன்!

போகட்டும், கதைக்கு வருவோம். எதற்கும் ஒரு முடிவு வேண்டுமல்லவா? அந்த முடிவு அகத்திய முனிவரின் வடிவத்தில் வந்தது. சப்தரிஷிகளில் ஒருவரான அவரை சாதாரண அந்தணர் என்று நினைத்துக்கொண்டு அசுரன்  இல்வலன் வழக்கம்போல விருந்துக்கு அழைத்தான். அவரும் உடன்பட்டுச் சென்றார். ஆனால் அவருக்கு விஷயம் தெரியும். தெரிந்தே சென்றார். வழக்கம்போல எல்லாம் நடந்தன. வாதாபியாட்டின் மாமிசத்தைக் கேட்டுக்கேட்டு வாங்கி சாப்பிட்ட அகத்தியர், சாப்பிட்டு முடித்து வயிற்றை மூன்று முறை தடவி, “வாதாபி, ஜீர்ணோ பவ” (வாதாபி, நன்கு செரித்துவிடுவாயாக) என்று கூறினார்.

இதுபற்றி ஒன்றும் அறியாத இல்வலன் ரொம்ப பந்தாவாக, “வாதாபி, வெளியில் வா”என்று கூறினான். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. அதிர்ந்துபோன அசுரன் மறுபடி மறுபடி மறுபடி அழைத்துக்கொண்டே இருந்தான். ம்ஹும். வாதாபி எப்படி உயிரோடு வெளியில் வருவான். வேறுவிதமாகத்தான் வெளியில் வரவேண்டும்! விஷயம் புரியாமல் அசுரன் திகைத்தான்.

“வாதாபி வெளியில் வரமாட்டான். அவனை இந்த உலகத்தின் நன்மைக்காக நான் ஜீரணித்துவிட்டேன். ஏன் வீணாக அழைத்துக்கொண்டிருக்கிறாய்?” என்று கூறிச் சிரித்தார் அகத்தியர்!

பொய்யையும், புரட்டையும், ஏமாற்று வேலையையும், அரக்கத்தனத்தையும், அயோக்கியத்தனத்தையும், அகங்காரத்தையும் எத்தனை நாளைக்கு ஜீரணித்துக்குக் கொண்டிருக்க முடியும்?  அதனால்தான் வாதாபியை அகத்தியர் ஜீரணித்தார். ஜீரணிக்க முடியாத கொடுமைகளை முடிவுக்குக் கொண்டுவர ஒரு அசுர ஜீரணம் தேவைப்பட்டிருக்கிறது. வாழ்க அகத்தியம்!

========

This entry was posted in Articles /கட்டுரை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to பிராமணர்கள் மாமிசம் உண்பவர்கள்!

 1. Prabhu Muthukumar says:

  Awesome,Sir

 2. M Karthi says:

  மிக அருமையான விளக்கம். எப்படி தங்களால் மட்டும் இந்த ஆற்றோட்டம் போன்றதொரு எழுத்துக்கள் கோர்வையாகவும், ஆர்வத்தை தூண்டுவதாகவும் அமைகின்றன.
  தங்களிடம் ஒரு கேள்வி?
  தாங்கள் பதிவேற்றும் கட்டூரைகளை தாங்கள் எத்துனைமுறை வாசித்து சரிசெய்து பதிவேற்றுவீர்கள்? அல்லது சிறுசிறு பத்திகளிலேயே முடித்துவிடுவீர்களா?

  நன்றி ஐயா,
  கார்த்தி, கரூர்.

 3. Pingback: பிராமணர்கள் மாமிசம் உண்பவர்கள்! பிராமணர்கள் மாமிசம் உண்பவர்கள்! | SEASONSNIDUR

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s