சிவகுமாராமாயணம்

vlcsnap-2017-07-27-01h59m53s89நான் பி.எச்.டி. செய்தது இரண்டு காவியங்களைப் பற்றி. ஒன்று ஜான் மில்டனின் Paradise Lost என்ற காப்பியம். இன்னொன்று கம்பராமாயணம். கம்பராமாயணத்தை மட்டும் ஒன்றரை ஆண்டுகள் படித்தேன். முதலில் ஒன்றுமே புரியவில்லை. என் தமிழறிவு அப்படி! பின்பு அதற்கான விளக்கவுரைக்கட்டுரைகளைப் படித்தேன். அவைகள் கம்பராமாயணத்தைவிட கடினமான மொழியில் இருந்தன! இதற்கு கம்பனே தேவலை என்று முடிவு செய்து கம்பராமாயணத்தை நானே மெல்ல மெல்ல படிக்கத் தொடங்கினேன். கம்பனின் ஆன்மாவுக்கு என் ஆர்வம் புரிந்துவிட்டதோ என்னவோ, காப்பியம் புரிய ஆரம்பித்தது!

முதலில் என்னைக் கவர்ந்தது கம்பனின் கற்பனைதான். கம்பனின் கற்பனைக்கு முன்னால் மில்டனெல்லாம் அருகே வரவே முடியாது. நான் ஒரு ஆங்கிலேயனாக இருந்தாலும் இதைத்தான் சொல்லியிருப்பேன். அவ்வளவு அழகான கற்பனை. போகட்டும். சிவகுமாருக்கு வருகிறேன்.

சிவகுமார் அவர்கள் ஒரு அருமையான நடிகர். அழகானவர். திரைத்துறையில் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத ஒழுக்கமான வெகுசிலரில் ஒருவர். நல்ல ஓவியர். இதெல்லாம் நமக்குத் தெரியும்தான். ஆனால் என் சமீபத்திய ஆச்சரியம் அவரது அபாரமான நினைவாற்றல்.

vlcsnap-2017-07-27-01h59m04s176ஆமாம். சமீபத்தில் அவர் ஈரோட்டுக்கு அருகில் உள்ள வேளாளர் பெண்கள் கல்லூரி ஒன்றில் ஒரு சாதனை நிகழ்த்தி உள்ளார். அது என்ன சாதனை? நூறு பாடல்களை மட்டும் விளக்கிச் சொல்லி முழு கம்பராமாயணக் கதையையும் சொல்லுவது!

பாடல்களை எழுதி வைத்துக்கொண்டு அவர் சொல்லவில்லை. மனப்பாடமாகவே சொல்கிறார். நிறுத்தி, நிதானமாக, அழகிய தமிழில்! ஆயிரம்  ஆண்டுகளாக நம் மண்ணோடும் மக்களோடும் இரண்டறக் கலந்துவிட்ட காவியம் கம்ப ராமாயணம் என்று சொல்லித் தொடங்கும் அவர் ”100 பாடல்களைத் தேர்வு செய்து ராமாயணத்தின் முழு கதையையும் என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் சொல்ல முயற்சிக்கின்றேன்” என்று சொல்லிச் செல்கிறார்! இடையில் நின்று நிதானித்து ஒரு கணம்கூட அவர் யோசிக்கவே இல்லை! கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் விடாமல் பேசுகிறார்! ’நீராரும் கடலுடுத்த’வைக்கூட முழுசாக, சரியாகச் சொல்லாமல் சொதப்பிய தமிழ்ப்பேராசிரியர்களை நானறிவேன்!

vlcsnap-2017-07-27-02h00m47s103இவ்வளவுக்கும் கம்பராமாயணத்தோடு தனக்கான தொடர்பு ”சரியாக ஓராண்டுதான்” என்று சிவகுமார் சொன்னதுதான் ‘ஹைலைட்! நான் ஒன்றரை ஆண்டுகளாக அதை என் ஆய்வுக்காகப் படித்தாலும் என்னால் ஒரு சில பாடல் வரிகளை மட்டுமே இப்போது மனப்பாடமாகச் சொல்லமுடியும். ஆனால் அவர் முழுக்கதையும் வருமாறான நூறு பாடல்களைத் தேர்ந்தெடுத்து அதைக்கொண்டே கம்பராமாயணக் கதை முழுவதையும் பேசுகிறார்.

vlcsnap-2017-07-27-02h00m33s228எவ்வளவு இதயப்பூர்வமாக ஒரு மனிதர் இருந்தால் இது சாத்தியம் என்று யோசிக்க வேண்டும். பாராட்டுப் பெறவேண்டுமென்றோ, கைதட்டல்கள் வாங்கவேண்டுமென்றோ இது மாதிரியான காரியத்தை ஒருவர் செய்யவே முடியாது. சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் அவர்கள் செய்த மாதிரியான ஒரு காரியம் அது. அது ஒருவகையான ’ஜீனியஸ்’ என்றால் இது இன்னொரு வகையான ’ஜீனியஸ்’ என்றுதான் சொல்லுவேன். ஆமாம். நூறு பாடல்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியமல்ல. ஆனால் அதற்குள்ளாகவே ஆறு காண்டங்களில் சொல்லப்படும் கதையும் முழுமையாக வரவேண்டும்.

இது ஒரு இமாலய சாதனை என்றுதான் சொல்லுவேன். ஏனெனில் கம்பராமாயணத்தின் ‘அளவு’ அப்படிப்பட்டது. மில்டனில் ’பாரடைஸ் லாஸ்ட்’ காவியம் 12 காண்டங்களைக் கொண்டது. கம்பனின் ராமாவதாரம் ஆறு காண்டங்களைத்தான் கொண்டது. ஆனால் மில்டனின் 12 காண்டங்களையும் ஒட்டுமொத்தமாகச் சேர்த்துப்பார்த்தாலும் அது யுத்தகாண்டத்துக்கு ஈடாகாது! ஆமாம். யுத்தகாண்டம் மட்டுமே மில்டனின் 12 காண்டங்களையும்விட அளவில் பெரியது! அப்படியானால்…நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள்!

vlcsnap-2017-07-27-01h59m38s174தமிழின் மீதும், தமிழ் இலக்கியத்தின் மீதும், நம்முடைய பண்பாட்டின்மீதும் ஒரு மனிதனுக்கு எவ்வளவு காதல் இருக்குமானால் இது சாத்தியம் என்று மலைக்கத்தோன்றுகிறது! பணத்துக்காகவோ புகழுக்காகவோ அவர் இதைச் செய்யவில்லை. ஏனெனில் அவை இரண்டையும் அவர் ஏற்கனவே பெற்றுவிட்டவர். Sheer love of Tamil language and Kamban must have made it possible. என்னால் வேறு காரணங்களைக் காண முடியவில்லை.

அவ்வளவு நேரமும் எந்த மாணவியும் எழுந்து போகாமல் அவ்வப்போது கை தட்டி ஆரவரித்து அமர்ந்திருந்ததும் எனக்கு ஆச்சரியம்தான். ஒரு சினிமா நடிகர் இப்படி தமிழ் முழங்குகிறாரே என்ற ஆச்சரியம் அவர்களுக்குள்ளும் தமிழ் ஆர்வத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.

vlcsnap-2017-07-27-02h01m13s121சிவகுமார் அவர்களின் பேச்சில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், அவர் பேசிய விதம்தான். கம்பராமாயணப் பாடல்களை மட்டும்தான் அவர் அப்படியே ஒப்பித்தாரே தவிர, கதையை அவர் பேச்சு வழக்குத் தமிழில், நேருக்கு நேர் இரண்டு பேர் பேசும் மொழியிலேயே முழுக்க முழுக்க சொல்லிச் சென்றார். ”ராமன் கறுப்பான சின்னப் பையன், அவன் அப்பன் இருக்கானே…” இப்படித்தான் அவர் அந்த இரண்டரை மணி நேரமும் ராமாயணத்தை சொல்லிச் சென்றார்! அது மிகவும் அறிவார்ந்த பேசுமுறை என்று நான் சொல்வேன். தூய தமிழிலேயே பேசியிருந்தால் நிச்சயம் அது களைப்பூட்டி கொட்டாவி வர வழைத்திருக்கும். தொழும்போதுகூட கொட்டாவி விடும் நமக்கு தூய தமிழ் நிச்சயம் தூக்கத்தையே கொடுத்திருக்கும்! ஆனால், ”அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்” என்ற பாடல் வரிகளுக்கு, “ராமன் சீதையை சைட் அடிச்சான்” என்று அவர் சொல்வது ரசிக்கக்கூடியதாகவே இருந்தது.

கடவுள் வாழ்த்தில் தொடங்கும் அவர் அதில் உள்ள ஒரு முக்கியமான விஷயத்தைத் தொடுகிறார். இதை நான் இங்கே சொல்லியே ஆகவேண்டும். ஏனெனில் கம்பன் ஒரு வைணவன். அவன் படிமங்களெல்லாம் விஷ்ணு தொடர்பானதாகவே உள்ளது என்பது என் ஆய்வின் ஒரு முக்கிய அம்சம்.

உதாரணமாக,

ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு பூசை

நக்குபு புக்கென ஆசை பற்றி அறையலுற்றேன்

மற்றிக் காசில் கொற்றத்து இராமன் கதையரோ

என்ற வரிகளில் பூனை பாலை நக்கிக்குடிக்கும் நமக்குத்தெரிந்த படிமத்தை கம்பன் பயன்படுத்தினாலும் அது வெறும் பாலாக அல்லாமல் விஷ்ணு சயனிக்கும் பாற்கடலாக இருப்பது குறிப்பிடத்தக்கது என்ற ரீதியில்தான் என் ’தீசிஸ்’ செல்லும்.

ஆனால் சிவகுமார் அவர்களது பேச்சின் தொனி அதை உடைக்கிறது! கடவுளை  சிவனாக, முருகனாக, விஷ்ணுவாகவெல்லாம் கம்பன் பார்க்கவில்லை. பரம்பொருளாகவே பார்க்கிறார் என்ற அவரது கோணம், கம்பனைக் காட்டுகிறதோ இல்லையோ, எதிலும் சிக்கிக்கொள்ளாத, உருவங்களுக்குள் சிக்காத உண்மையாக இருக்கும் கடவுளை மட்டுமே காட்டுகிறது என்று அவர் சொல்வது அவரது விசாலமான மனதையும் பார்வையையும் காட்டுவதாகவே நான் நினைக்கிறேன். சரயு நதி பற்றி கம்பன் சொல்வதையும் அந்தக் கோணத்திலேயே அவர் விளக்குவது குறிப்பிடத்தக்கது.

தோள் கண்டார். தோளே கண்டார் / தொடு கழல் கமலம் அன்ன

தாள் கண்டார். தாளே கண்டார் / தடக் கை கண்டாரும். அஃதே;

வாள் கொண்ட கண்ணார் யாரே / வடிவினை முடியக்கண்டார்?-

ஊழ் கொண்ட சமயத்து அன்னான் / உருவு கண்டாரை ஒத்தார்

 

என்று ராமனின் தோற்றம் பற்றிக் கம்பன் பாடுவது சிவகுமார் அவர்களின் கருத்துக்கு வலு சேர்ப்பதாகவே உள்ளது.

vlcsnap-2017-07-27-01h59m46s13சினிமாவில் நடித்தோமா, பணமும் புகழும் சம்பாதித்தோமா, அதோடு ஒதுங்கினோமா என்று இல்லாமல், ஆரோக்கியம், ஒழுக்கம், கலை, இலக்கியம், தமிழ், தமிழ் காப்பியங்கள், தமிழர் பண்பாடு என்று சிவகுமார் அவர்கள் பல பரிமாணங்களில் இயங்கிக்கொண்டிருப்பது சிந்திக்கத்தக்கது. போற்றத்தக்கது. பின்பற்றததக்கது. ஆனால் பின்பற்றுவதில் ஒரு பிரச்சனை உள்ளது. அவரைப் போன்ற அபார நினைவாற்றல் வேண்டும்! ஆனால் இதயப்பூர்வமான ஆசையும் முயற்சியும் இருந்தால் அதுவும் சாத்தியம்தான் என்றே நினைக்கிறேன். திருமறையை மனனம் செய்த லட்சக்கணக்கானவர்கள் இல்லையா? அதுபோல.

Desert’கம்பன் என் காதலன்’ என்ற அந்த சிடி-யைக் கொடுத்த நண்பர் யுகபாரதிக்கு நன்றிகள். அவசியம் அந்த குறுந்தகடை வாங்கிக் கேட்டுப்பாருங்கள். தமிழின் மகத்துவமும் தமிழனின் மகத்துவமும் புரியும்.

அன்புடன்

நாகூர் ரூமி

 

 

 

 

This entry was posted in Articles /கட்டுரை, Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s