இது ராஜபாட்டைதான்

இது ராஜபாட்டை அல்ல (பாகம் 1 & 2)

Idu Raja Paattai Allaநடிகர், ஓவியர், காப்பிய விரிவுரையாளர் என பன்முகத்திறமை கொண்ட அண்ணன் சிவகுமாரின் மிகமுக்கியமான வாழ்க்கை ஆவணம் இது. என்ற நான் தமிழாக்கம் செய்த ’இதயத்தை நோக்கித் திரும்புதல்’ சூஃபி நூலின் வெளியீட்டு விழா தொடர்பாக நான் அவரைப் பார்க்கச் சென்றபோது அவரே எனக்கு இரண்டு பாகங்கள் அடங்கிய இந்த தொகுப்பைக் கொடுத்தார். ராமயணம், மஹாபாரதம் பற்றிய அவரது பேச்சுக்கள் அடங்கிய சில ’சிடி’க்களையும், அவரைப் பற்றிய பிரபலங்களின் கருத்துக்களைக் கொண்ட ’சிவகுமார் எனும் மானுடன்’ என்ற நூலையும் கொடுத்தார்.

நான் ஒரு நாளைக்குக் குறைந்தது 100 பக்கங்கள் படிப்பேன். அது தமிழானாலும், ஆங்கிலமானலும். உர்து, ஃபார்சி என்றால் பத்து பக்கம் முடிவதே பெரும்பாடு. அகராதிகளின் துணையும் தேவை! போகட்டும் ராஜபாட்டைக்கு வருவோம்.

536 பக்கங்கள் கொண்ட ’இது ராஜபாட்டை அல்ல’ நூலை நான் இரண்டு நாட்களில் படித்து முடிக்க முடிந்தது! புத்தகமும் எழுத்தும் அப்படி! அதிலிருந்த உண்மை அப்படி! ஆனால் இப்போதுதான் அது பற்றி எழுத முடிகிறது, என்ன செய்வது?

உண்மையைச் சொல்வதற்கு நிச்சயமாக துணிச்சல் வேண்டும். அடிப்படையில் ஒரு நேர்மை வேண்டும். நேர்மையும் துணிச்சலும் இருந்தால்தான் உண்மையைச் சொல்ல முடியும். இப்படி உண்மையைச் சொல்லி சமுதாயத்தில் வாங்கிக் கட்டிக்கொண்டவர்கள் நிறைய பேர் உண்டு. இன்றைய அரசியல் சூழலிலும் அதைப் பார்க்கலாம். உண்மையைச் சொல்ல வேண்டும், அதே சமயம் யார் மனதும் புண்படாமல், நாசூக்காக, நயமாகச் சொல்லவேண்டும் என்றால் அதற்கு ஒரு தனித்திறமை வேண்டும்.

Me Sivakumarசிவகுமார் அண்ணன் இதற்கு ஒரு சிறந்த உதாரணம் என்பதற்கு சாட்சி கூறுகிறது ’இது ராஜபாட்டை அல்ல’ என்ற அவரது சினிமா வாழ்வு பற்றிய நூல். அரிய ஒளிப்படங்களும், அரிய தகவல்களும் அதில் உள்ளன. அதோடு, ஏற்கனவே பல பரிமாணங்களில் சிவகுமார் தன்னை நிரூபித்துக் கொண்டுள்ளார். ஓவியர், நடிகர், காப்பிய விரிவுரையாளர், ஒழுக்க சீலர், உணவு, உடல், உணர்ச்சிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சாதகர், இந்த நூலைப் படிக்கும்போது ஒரு நல்ல எழுத்தாளர் என்ற பரிமாணமும் அவருக்கு வந்து சேருகிறது என்று சொல்வேன்.

நான் சும்மா சொல்லவில்லை. முன்னுரையிலேயே அவர் அதை நிரூபித்துவிடுகிறார்:

’மூத்த கதாநாயகர்களின் புகழ்க்கொடி உச்சத்தில் பறந்தபோது நான் திரையுலகப் பிரவேசம் செய்தேன். சிங்கத்தின் பங்கு போக மீதியை மற்ற மிருகங்கள் பங்கு போட்டுக்கொள்வதுபோல், படத்தில் கதாநாயகர், நாயகிக்குக் கொடுக்கப்படும் அதிமுக்கியத்துவம் போக, மீதியில் ஏதோ கொசுறு, என் போன்ற கலைஞர்களுக்கு அன்று கிடைக்கும்!’

இப்படித்தான் தொடங்குகிறது அவரது முன்னுரை! அடுத்த பத்தி இன்னும் ஜோர்:

’திமிங்கிலங்கள், சுறா மீன்கள் போன்றவற்றிற்கு இரையாகாமல் தப்பித்துப் பிழைக்கும் சிறு கடல் ஜீவராசிகள்போல, திரையுலகில் உயிர் வாழ்வதே போராட்டமாகிவிட்ட காலம்’.

வாழைப்பழத்தில் ஊசி

சிவகுமார் அண்ணனுக்கு வாழைப்பழத்தில் அழகாக ஊசி ஏற்றத் தெரிந்திருக்கிறது!  இந்த நூல் எழுத வந்த வரலாற்றை அவர் சொல்லும்போது இது புலனாகிறது. 1986ல் நான்கு இதழ்களுக்கு வருகிற மாதிரி சிவகுமாரிடம் கட்டுரை வாங்கி வாருங்கள் என்று சுதாங்கன் அவர்களிடம் விகடன் ஆசிரியர் சொல்கிறார். இனி சுதாங்கனைப் பற்றி சிவகுமார் அண்ணன் சொல்வது:

அவர் தீவிர வாசகர். ஆயிரம் பக்கம் உள்ள ஆங்கில நாவலை, விடிவதற்குள் படித்து – சுருக்கமாக அதைச் சொல்லும் ஆற்றலுள்ளவர். எழுத்து அவருக்கு வெகு சரளமாக வரும்.

இப்படி வர்ணிக்கப்பட்ட சுதாங்கன் மூன்று மணி நேரத்துக்கும் மேல் பேசிவிட்டு சிவகுமாரைப் பேட்டி எடுக்கிறார். எடுத்த பேட்டியைப் படித்துக் காண்பிக்கிறார். ’சொல்ல வந்த விஷயம் நான் நினைத்த அளவு அழுத்தமாக இல்லை என்று தோன்றியது’ என்கிறார் சிவகுமார்!

ஒருவருக்கு ஆங்கில அறிவு அபாரமாக இருக்கலாம். படித்ததை சுருக்கமாக தமிழில் சொல்லிப் புரியவைக்கின்ற திறமை இருக்கலாம். இதனாலெல்லாம் திருப்திகரமாகப் பேட்டி எடுக்கும் திறமை ஒருவருக்கு வந்துவிடாது என்று சிவகுமார் சொல்லவில்லை. பிரச்சனையை அவர் பக்கம் இருந்து சொல்லாமல் தன் பக்கமிருந்து பார்க்கிறார். அழுத்தமாக வரவில்லை என்று தனக்குத் தோன்றியதாகக் கூறுகிறார்.

சமுதாயத்தில் ஏதோ ஒருவகையில் பிரபலமாக இருக்கும் ஒவ்வொரு வருக்கும் இந்த குணம் தேவையான குணம் என்று கருதுகிறேன். அண்ணன் சிவகுமாரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது. இந்த புத்தகம் லயோலா கல்லூரியில் 1991-92ல் துணைப்பாடமாக வைக்கப்பட்டது என்ற தகவலையும் தருகிறார். வைக்க வேண்டிய புத்தகம்தான்.

இந்த நூலைப் பற்றி விரிவாக நான் எழுத முடியாது. அவரது 40 ஆண்டுகால சினிமா வாழ்வு, சந்தித்த மனிதர்கள், அவருடைய சொந்த ஊர், பெற்றோர், சகோதர, சகோதரிகள், நண்பர்கள், ஆசிரியர்கள் – இப்படி அனைத்தையும் பற்றிய விரிவான பதிவு இது.

ஆங்காங்கே அவர் சினிமா பற்றியும் மானிட வாழ்வு பற்றியும் சொல்வது நமது சிந்தனைக்குரியது. அவை பற்றி மட்டும் சுருக்கமாக நான் இங்கே சொல்ல முயல்கிறேன்.

சினிமாவில் கிடைக்கும் புகழ் பற்றிப் பேசும்போது, ‘கொடைக்கானல் மேகத்துக்கும் சினிமாப்புகழுக்கும் வேறுபாடே இல்லை’ என்கிறார். அதற்கான காரணத்தையும் அவரே சொல்கிறார்: ‘நம்மைக் கேட்டுக்கொண்டு அது வருவதும் இல்லை, நம் அனுமதி பெற்றுப் போவதுமில்லை’! இந்த தெளிவு ஒரு மனிதனுக்கு இருந்துவிட்டால் போதும். ஆனால் அது புகழின் உச்சியில் இருக்கும் பலருக்குப் புரியாமலே போய்விடுவதுதான் அவர்களுக்கான சோகம்.

குடி அல்லது வேறு கெட்ட பழக்கங்களால் சினிமாத்துறையில் புகழின் உச்சியில் உயிரை விட்டவர்கள் பலர். என் மாமா தூயவன், நடிகர் ரகுவரன், சமீபத்தில் இறந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இப்படி உதாரணங்களைச் சொல்லலாம். ஆனால் சிவகுமார் அதில் ஒரு கொள்கைப் பிடிப்போடு இருந்திருக்கிறார். இன்னும் இருக்கிறார்.

தற்காலிகமாகப் பிரச்சனைகளை மறக்க குடிதான் ஒரே வழி என்றால் ’அப்படி ஒரு வாழ்க்கை எனக்கு வேண்டாம்….புகழும் பணமும் என் இயல்பை மாற்றிவிடக் கூடாது. என் நிம்மதையைக் குலைத்துவிடக் கூடாது. இதயத்தின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் மனிதப் பண்புகளைத் தகர்த்து விடக்கூடாது’ என்கிறார்!

அடடா, இந்தத் தெளிவும் பிடிவாதமும் பலருக்கு இல்லையே!

கிராமத்துக் கலாச்சாரம் பற்றிய ருசியான பல தகவல்களை இந்த நூல் தருகிறது. கேழ்வரகுக் களி, ஒட்டகப் பால், வெண்மையான கற்றாழைக் கிழங்கு உணவு, அரளி விதையைக் கரைத்துக் குடித்த பெண்ணைக் காப்பாற்ற நாயின் மலத்தைச் சட்டியில் போட்டுக் கரைத்து அப்பெண்ணின் வாயில் ஊற்ற அவள் வாந்தி எடுத்து பிழைத்தது போன்ற கிராமத்து ’ட்ரிட்மெண்ட்’, பருத்தி மார் (காய்ந்த பருத்திச் செடி) தொடர்பான தகவல்கள் எல்லாம் புதியதோர் உலகைக் காட்டின.

மீதமுள்ள அரிசிப் பருப்புச் சாதத்தைச் சுரண்டித் தின்ற சிவகுமாரின் அக்காள் பற்றிய தகவல் எவ்வளவு ஏழ்மையில் அவர்கள் வாழ்ந்தார்கள் என்பதை பிரகடனப்படுத்துகிறது.

சிவகுமாரின் அம்மா அவரோடு சேர்ந்து சாப்பிட்டதே இல்லையாம். அதுமட்டுமல்ல, அவர் சாப்பிட்டதை முழுசாகப் பார்த்ததே இல்லை என்கிறார் சிவகுமார்! இதை ஒரு தகவலாகத்தான் சிவகுமார் சொல்கிறார். ஆனால் தகவல் என்ற விஷயத்தைத் தாண்டி இதிலோர் ஆன்மிக உண்மை ஒளிந்துகொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன்.

ஞானிகள் சாப்பிட்டதையும் தூங்கிய முறையையும் கூடவே இருந்தவர்கள்கூட பார்த்திருக்கவில்லை என்றே அவர்களின் வரலாறு கூறுகிறது. காரணம், யாரும் பார்க்குமாறு ஞானிகள் அக்காரியங்களைச் செய்யவில்லை. நாகூர் ஆண்டகை அவர்கள் எப்படி சாப்பிட்டார்கள், எப்படித் தூங்கினார்கள் என்று அவர்களின் அருமை மகனார் சின்ன எஜமான் யூசுஃப் தாதாவுக்கு மட்டுமே தெரியும் என்று என் ஞானகுரு ஹஜ்ரத் மாமா அவர்கள் சொன்னது என்  நினைவுக்கு வருகிறது.

சிவகுமாரின் அம்மாவையும் ஞானிகளையும் நான் ஒப்பிடவில்லை. ஆனால் இயற்கையாகவே அவரிடத்தில் ஒரு ஆன்மிகச் செயல்பாடு இருந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது என்பது என் கணிப்பு.

அண்ணன் சிவகுமாருக்கு பல திறமைகள் இருந்தாலும் அவர் நடிகராகப் பிறந்தவர் என்பதை இந்த நூலை உன்னிப்பாகப் படிக்கும் யாரும் புரிந்துகொள்ள முடியும். சின்ன வயதிலிருந்தே படம் பார்க்கும் ஆசை அவருக்கு இருந்திருக்கிறது. இது பொதுவாக எல்லாருக்கும் இருப்பதுதான். ஆனால் ஜாக்கிரதையாகப் படித்தால், ஒரு பற்றி எரியும் ஆசையாக அவருக்கு சினிமா இருந்திருப்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு முறையும் படம் பார்க்க அம்மாவிடம் அனுமதி வாங்கிவிட்டுத்தான் போயிருக்கிறார்! படம் பார்த்துக் கெட்டுப் போய்விடுவான் என்று நினைக்காத, அவரை ஒவ்வொரு முறையும் அனுமதித்த அம்மாவும் நம் வியப்புக்கு உரியவர்தான்.

சினிமாக் கொட்டகையில் அந்தக் காலத்தில் ஸ்பீக்கரில் பாட்டு போடுவார்கள். இது எனக்கும் தெரியும். நானும் நாகூர் தியேட்டருக்குச் சென்று மண்ணைக் குவித்து அதன் மீது அமர்ந்து படம் பார்த்திருக்கிறேன். ஆனால் ’ஒரு ஃபர்லாங் தூரத்தில் ஸ்பீக்கர் பாடுவது நின்றுவிட்டால் உடனே படம் போட்டு விடுவார்கள்’ என்பது ஒரு மிக நுட்பமான கவனிப்பாகும்! நுட்பமான இந்த அறிவு கொட்டகையில் படம் பார்க்கச் சென்ற அனைவருக்கும் இருக்காது. உடலில், உள்ளத்தில், நாடி நரம்பிலெல்லாம் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

உதாரணமாக நான் தூயவன் மாமாவின் கதைகளை இப்போது படிக்கும்போது ஒன்று புரிகிறது. ஒவ்வொரு கதையிலும் ஒரு சினிமாத்தனமான க்ளைமாக்ஸ் முடிச்சு ஒன்று உள்ளது. ஒவ்வொரு கதையும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. தூயவனுக்குள் இருந்த கதை வசன கர்த்தா, தயாரிப்பாளரை அது இன்று எனக்கு அடையாளம் காட்டுகிறது.

தூயவன் என்றதும் அவரைப் பற்றி சிவகுமார் அண்ணன் எழுதியிருப்பது நினைவுக்கு வருகிறது. நடிகர் ஸ்ரீகாந்த் பற்றிய கட்டுரையில் ஒரு இடத்தில், ‘மேஜர் சுந்தரராஜனுடன் இணைந்து தூயவன் என்ற நாடக ஆசிரியரின் ‘தீர்ப்பு’ நாடகத்தில் நடித்தார். அதுவும் 100 முறைக்கு மேல் மேடையேறியது’ என்று எழுதுகிறார் (பக்கம் 231).

அவர் சொன்னது சரிதான். தூயவன் மாமா கதை வசனம் எழுதிய ’தீர்ப்பு’ நாடகத்தின் நூறாவது நாள்  விழாவில் எம்.ஜி.யார். கலந்துகொண்டார். அதிருக்கட்டும், சிவகுமார் கதாநாயகனாக நடித்த ’ராமன் பரசுராமன்’ என்ற படத்துக்கு வசனம் எழுதியதே தூயவன் மாமாதான். தூயவன் திரைப்படத் துறையில் இருந்தது எப்படி அவருக்குத் தெரியாமல் போனது?!

அவ்வப்போது கவிதை மாதிரி சில சொற்கள், சில வாக்கியங்கள் வந்து விழுகின்றன. சில உதாரணங்கள்:

கிராமம் என்பது தாயின் மடி மாதிரி.

பழைய சோத்து நேரம்.

வறுமையால் பலாத்காரம் செய்யப்பட்டாள் அன்று! வசதியால் பலாத்காரம் செய்யப்படுகிறாள் இன்று!

‘அஷ்டகோணலாக முகத்தையும் உடலையும் ஒடித்து நடிக்க வேண்டுமா? அறுபதடி உயரத்திலிருந்து குதிக்கவேண்டுமா? யாரும் செய்யாத நடன மூவ்மெண்ட்டை graceful ஆகச் செய்யவேண்டுமா? அறுநூறு அடி நீள பிலிமில் ஒரே ஷாட்டில் உணர்ச்சிவசப்பட்டு நடிப்பை வெளிப்படுத்த வேண்டுமா? – தன்னுடைய அபரிமிதமான நடிப்புத் திறமையால், நடிகருக்கு அழகான முகம் அவசியமே இல்லை என்று நிரூபித்த நகைச்சுவை நாயகர் நாகேஷ்…சோதனைகளின் உச்சத்தில், வேதனைகளின் விளிம்பில், எரிமலையின் சிரசில் இந்தச் சாதனைகளைப் புரிந்திருக்கிறார் (பக்கம் 301).

நாகேஷைப் பற்றி இதைவிடச் சரியாகவும் சிறப்பாகவும் வேறு யாரும் சொல்லிவிட முடியாது என்றே நினைக்கிறேன்.

நாகேஷ் அவர்களைப் பற்றி நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். சிவாஜி கணேசனின் காமடி வெற்றிபறவில்லை. காமடி, ட்ராஜடி (நீர்க்குமிழி) இரண்டிலுமே வெற்றிக்கொடி நாட்டியவர் நாகேஷ். அந்த வகையில் அவர் சிவாஜியை மிஞ்சியவர் என்று சொல்வேன்.

வீட்டுக்குள்ளே எங்கெங்கு ஒழுகுதோ அங்கெல்லாம் பாத்திரம் வச்சிருவோம். மழைத்துளி ஒவ்வொரு பாத்திரத்திலும் விழறப்ப ஒவ்வொரு விதமா சத்தம் கேட்கும் ((நாங்களும் இதைச் செய்திருக்கிறோம்)!

பயங்கரமா இடி இடிக்கும்போது, வீட்டு மேலே இடி விழுந்திருமுன்னு, ‘அர்ச்சுனன் தேரோட்டிப் போறான், அதனால, புங்கப்பத்தி, புளியப்பத்தி, ஆத்தைப்பத்தி, அரசப்பத்தி, அர்ச்சுனா, அர்ச்சுனான்னு சொல்லும்பாங்க. (ஆஹா, ஒரு மாஹாபாரத விரிவுரையாளர் எப்படி உருவானார்னு இப்பதான் புரியுது)!

ஒரு இடத்தில், ‘எங்கள் ஊரில் பெரும்பாலும் இறந்தவர்களைப் புதைப்பதுதான் வழக்கம்’ என்று கூறுகிறார். எனக்கிது புதிய தகவல் மட்டுமல்ல, ஆச்சரியமானதும்கூட. ஏனெனில், இந்துப்பெருமக்கள் அனைவருமே இறந்தவர்களை எரிப்பார்கள் என்றுதான் நான் நினைத்துக்கொண்டிருந்தேன்.

‘எங்கள் திருமணங்களில் பிராமணப் புரோகிதர்கள் அழைக்கப்படுவதில்லை. ‘அருமைக்காரர்’ எனப்படுபவரே திருமணச் சடங்குகளை நிறைவேற்றி வைப்பார் என்பதும் திருமணத்தை முடிக்கும்போது கம்பர் எழுதிய மங்கல வாழ்த்தைச் சொல்லி முடிப்பார் என்பதும் அருமையான புதிய தகவல்கள்!

சிவகுமாரின் பிடிவாத முறை

ஒவ்வொரு மனிதனுக்கும் பிடிவாதம் தேவை. லட்சியம் இருந்தால் அதை நிறைவேற்ற பிடிவாதம் தேவைதான். ஆனல் தன் பிடிவாதத்தை சிவகுமார் வெளிப்படுத்திய முறை ரொம்ப வித்தியாசமானது. அது ஒரு ஆன்மிக சாதகனுக்குரியது. அப்படி என்ன என்கிறீர்களா?

சென்னைக்குச் சென்றால் இளைஞர்கள் சீரழிந்துவிடுவார்கள் என்று நம்பப்பட்டிருந்த காலத்தில் சென்னைக்கு செல்வது என்று சிவகுமார் முடிவெடுக்கிறார். அதில் உறுதியாக இருக்கிறார். அம்மாவின் அனுமதியையும் வாங்கிவிடுகிறார். எப்படித்தெரியுமா? மூன்று நாள் உண்ணா விரதமிருந்து!

ஆஹா, இதுவல்லவா பிடிவாதம்! நானும் பிடிவாதமாக இருந்துள்ளேன். அழகழகான பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்ட சிங்கப்பூர் கண்ணாடிப் பீங்கான்களை தூக்கித்தூக்கிப் போட்டு உடைத்து என் காரியத்தை நான் சாதித்துக்கொள்வேன்! என் பாட்டியிடம்! (தாயில்லாப் பிள்ளை என்பதால் நான் என் பாட்டி செல்லம். பாட்டியின் பேரும் ’செல்லம்’தான்)!

சிவகுமார் அவர்களின் அழகிய முன்னுதாரனப் பிடிவாதத்தை நாமும் பின்பற்றினால் லட்சியம் நிறைவேறுகிறதோ இல்லையோ, நம் உடல் நலம் காக்கப்படுவது உறுதி! ஏனெனில் உண்ணா விரதம்தான் கத்தியின்றி, ரத்தமின்றி நம் உடலில் செய்யப்படும் அறுவை சிகிச்சை என்று வர்ணிக்கிறார் பேராசிரியர் எஹ்ரட்!

இப்படியெல்லாம்கூட நடக்குமா

இப்படியெல்லாம்கூடவா நடக்கும் என்று வியக்கவும் வருத்தப்படவும் வைத்த பல விஷயங்களும் இந்த நூலில் உள்ளன.

உதாரணமாக, உயர்ந்த மனிதன் படத்தில் பிரம்பால் அடிவாங்கி, பின் சிவாஜியால் உதைக்கப்பட்டு விழும் காட்சியில், அவர் உதைத்து எகிறி விழுந்ததில் தோள் பட்டை மூட்டு கழன்றுவிட்டது என்று எழுதுகிறார் (பக்கம் 86).

’கவிக்குயில்’ படப்பிடிப்பில் மயங்கிய நிலையில் தரையில் விழுந்து கிடப்பதாக  காட்சி. அப்படி விழுந்து கிடக்கையில் ஓடிவந்த தண்ணீரில் மனிதக் கழிவுகள் புதியதும் பழையதுமாக முகத்தருகே மிதந்து சென்றன என்று எழுதியுள்ளார்! தயாரிப்பாளரிடம் விஷயத்தைச் சொன்னபோதும், ஏற்கனவே ரொம்ப செலவாகிவிட்டதால் இன்னும் ஒரு மணி நேரம்தான், தம் பிடித்துப் படுத்துக்கொள்’ என்று சொல்லியிருக்கிறார்!

இன்னும்கூட எழுத ஆசைதான். ஆனாலும் இது போதும். அவ்வப்போது வரும் சில ஆங்கிலச் சொற்களையும் தமிழ்ப்படுத்திப் போட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற கருத்தை மட்டும் இங்கே முன் வைக்க விரும்புகிறேன். உதாரணமாக, ‘நாற்பது கிலோ  மீட்டர் நீளத்திற்கு டோட்டலா மேகங்களைத் தங்க விடாம அடிச்சிட்டுப் போயிடும்’ என்ற வாக்கியத்தில் வரும் ‘டோட்டலா’ என்ற சொல், ’ப்ரசண்ட் வில்லேஜ்ல’ என்பதையெல்லாம் அடுத்த பதிப்பில் தமிழ்ப்படுத்திப் போடலாம்.

புத்தகத்தில் உள்ள ஓர் ஓவியத்தின் பெயர் தவறாக உள்ளது. பக்கம் 101-ல் மகாபலிபுரம் திருக்கழுக்குன்ற ஓவியம் என்று போட்டு, பாண்டி ட்யூப்ளே சிலையும் தெருவும் உள்ள ஓவியம் உள்ளது. அதை மாற்ற வேண்டும்.

அற்புத நடிப்பாற்றலுக்கும், அபார நினைவாற்றலுக்கும், ஒழுக்கமான வாழ்வுக்கும், தான் வாழும் சமுதாயத்துக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்ற உந்துதலில் கொடுக்கும் சொற்பொழிவுகளுக்கும் சொந்தக்காரரான அண்ணன் சிவகுமார் இன்னும் நிறைய ஆண்டுகள் ஆரோக்கியத்தோடு வாழவேண்டும் என்ற பிரார்த்தனையோடு முடிக்கிறேன்.

இது ராஜபாட்டை அல்ல என்பது அவரது நூலுக்குத் தலைப்பாக இருக்கலாம். ஆனால் அவர் வாழ்க்கையைப் படிக்கும் யாரும் சொல்ல விரும்புவது: ‘இது ராஜபாட்டைதான்’!

=========

This entry was posted in Articles /கட்டுரை, Uncategorized. Bookmark the permalink.

One Response to இது ராஜபாட்டைதான்

  1. சரவணன் says:

    வெகு சிறப்பு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s