புதைகுழியில் பொக்கிஷம்

28 ஞாயிறு ஜனவரி, 2018

Z nanaஅதிகாலை அல்லது நடு இரவு 12.30 மணி இருக்கும். நண்பர் அஷ்ரஃப் அலைபேசியில் சேதி தெரியுமா என்று கேட்டார். என்ன என்றேன். ஜஃபருல்லாஹ் நானா மௌத் என்றார்.

கடந்த 23ம் தேதிதான் நான் நாகூருக்குச் சென்று நானாவைப் பார்த்தேன். சில மாதங்களுக்கு முன் பார்த்ததற்கும் அன்று பார்த்ததற்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருந்தது. முன்னர் நான் பார்த்தபோது நாற்காலியில் அமர்ந்து என் இலியட் நூலை எடுத்துக் காட்டி ஏதேதோ சொன்னார் என்னைப் பார்த்து. பேச்சு மட்டும்தான் அப்போது வரவில்லை.

அந்த நிலையையே என்னால் சகிக்க முடியவில்லை. நான் அவரை  என் நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன். என்னையுமறியாமல் என் கண்களிலிலிருந்து வழிந்தோடியது கண்ணீர். அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பது நினைவுக்கு வந்தது.

அது ஒரு வித்தியாசமான அனுபவம். அவர்தான் என்னை அணைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் நான் அவரை அணைத்துக்கொண்டேன்.

ஜஃபருல்லாஹ் நானா ஒரு சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், பாடகர், z-nanaகம்பீரக் குரலோன், வித்தியாசமாக சிந்திப்பதையே இயல்பாகக் கொண்டவர், தமிழ்நாடு இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இளைஞரணிச் செயலாளராக அல்லது தலைவராக பல ஆண்டுகள் இருந்தவர். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அவரைப் பற்றி, அவரது திறமைகளையும் சிந்தனையையும் பற்றி என்னால் ஒரு புத்தகமே எழுத முடியும். காலில் விழலாமா என்பதைப் பற்றி அவர் மீலாது விழாவில் நாகூர் தமிழ்ச்சங்கத்தில் பேசிய பேச்சைக் கேட்டால் அவரது சிந்தனையின் ஆழம் புரியும். இதை ஒரு உதாரணத்துக்காகவே சொல்கிறேன்.

ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் சொல்லில் வடித்துவிட முடியாத பாசம் கொண்டவர். நாம் சந்தோஷமாக இருக்கும்போது நம்மோடு பலர் இருப்பார்கள். ஆனால் நாம் வேதனையில் இருக்கும்போது நம்மோடு யார் இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

நான் சொல்லவொண்ணாத வேதனையிலும் துன்பத்திலும் இருந்த காலகட்டத்தில் உடனே ஆம்பூர் வந்து எனக்காகவும், என மகளுக்காகவும் ஒரு மாதத்துக்கும் மேல் என்னோடு தங்கி இருந்து ஆறுதல் தந்தவர். ஆம்பூர் எம்.எல்.ஏ.வை வா, போ என்று அழைக்கும் உரிமை பெற்றவர். எனக்காக எவ்வளவோ செய்தார். தமிழக அரசின் சிறுபான்மை கமிஷனின் உறுப்பினராகவும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தார். எனக்காக என்னை எதிர்த்தவர்களோடு சண்டை போட்டார்.

என் தம்பி தீன் (சிங்கை காதர்) பிகாம் படிக்க விரும்பியபோது ஜமால் முஹம்மது கல்லூரியில் அவர்தான் சேர்த்துவிட்டார். அவர் ஆடிட்டர் ஜலீல் என்பவரிடம்தான் சி,ஏ. அப்ரெண்டிஸ்ஷிப் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தபோது, சிராஜுல் மில்லத் அவர்களிடம் சொல்லி அதையும் செய்தவர். எப்போது ஹோட்டலுக்கு எங்களை அழைத்துச் சென்றாலும் அவர்தான் பில்லுக்கும் பணம் கொடுப்பார்.

Z Nana a few months before 2018என்னை செதுக்கியவர்களில் மிக முக்கியமானவர் ஜஃபருல்லாஹ் நானா. என் ’இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்’ நூலை நான் அவருக்குத்தான் அர்ப்பணம் செய்தேன். ஹஜ்ரத் மாமா அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்களின் சீனியர் சிஷ்யர் அவர்.

பன்முகத்தன்மை கொண்ட அவரது திறமைகளைவிட முக்கியம் அவரது அன்பு கொண்ட பாத்திரம். நாகூரில் ஜஃபருல்லாஹ் நானா வாங்கிக் கொடுக்கும் கொத்துப் புராட்டாவைவிட சிறந்த ஒன்றை இதுவரை நான் சாப்பிட்டதில்லை. அவருக்கென்றால் எல்லாம் ’டபுள் ஸ்பெஷல்’தான். அவரது கருத்துக்களை எல்லா ஜமா’அத்தைச் சேர்ந்தவர்களும் ஏற்றுக்கொள்வர். அதுவும் அவரது ஸ்பெஷாலிட்டிதான்.

என்னால் மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்றால் அது அவரது DSC03705திருமணத்தின்போது செய்ததுதான். திருமணப் பத்திரிக்கையை எடுத்துக்கொண்டு ஊரில் இருந்த ஒவ்வொரு ஏழையாகப் பார்த்துக்கொடுத்து, என் கல்யாணத்துக்கு வந்துவிடுங்கள் என்று சொல்லி கிட்டத்தட்ட ஐநூறு பேருக்கு திருமண விருந்தளித்தார்! ஏன் அப்படிச் செய்தீர்கள் என்று கேட்டபோது, சொந்தக்காரர்களெல்லாம் இருப்பவர்கள்தானே? அவர்களுக்கும் கொடுப்போம். ஆனால் இவர்களுக்கு இந்த உணவு எப்போது கிடைக்கும்? ஏழைகளை சந்தோஷப்படுத்த திருமணம் என்பது ஒரு அருமையான வாய்ப்பல்லவா என்று கேட்டார்! திருமறையையும் திருநபி வாக்கையும் மிகமிக ஆழமாகப் படித்துப் புரிந்துகொண்டவர். கொடுப்பவனே சரியான மனிதன் என்ற கருத்தை வலுயிறுத்துபவர். பேச்சிலும் வாழ்க்கையிலும்.

அவரால் உந்தப்பட்ட நான், என் இரண்டாவது மகளின் திருமணத்தின்போது 101 ஏழைகளுக்கு சிக்கன் பிரியாணி சாப்பாடு ஏற்பாடு செய்து கொடுத்தேன்.

z-nana-1திருமண அழைப்பிதழ்களை அழகாக சின்ன தாக வெட்டி, அவர் கவிதைகளை சின்னச் சின்னதாக அதில் எழுதி வைப்பது அவர் பழக்கம். இதுபற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். அதையெல்லாம் ஒரு புத்தகமாகக் கொண்டுவருவது அவசியம் என்பதால், அவரைக் கெஞ்சிக் கூத்தாடி, ஆமாம் அப்படிச் செய்தால்தான் அவர் கொடுப்பார், அவரது கவிதைகளை நான் வாங்கிகொண்டு வந்து அவற்றை லேப்டாப்பில் உள்ளிட்டு ஒரு நூலாக ஆக்கி நாகூரில் தமிழ் சங்கத்தில் வைத்து வெளியிட்டோம். அவருக்காக என்னால் செய்ய முடிந்தது அவ்வளவுதான். என்றாலும் எனக்கதில் ஒரு திருப்தி இருந்தது. எட்டு பவுனுக்கு பொன்முடியும் அவருக்கு என் நண்பர்கள் மாலிம், நூர் சாதிக் போன்றவர்களால் கொடுக்கப்பட்டது.

இறுதித்தூதர் எம்பெருமான் (ஸல்) அவர்கள்மீது அவர் கொண்ட ஈடுபாடும் அன்பும் இணையற்றது என்று சொல்வேன். ”கண்மணி நாயகம் என் வீட்டுக்கு வந்தால், அவரை எப்படி நான் வரவேற்பேன்” என்ற அவரது பாடல் அதற்குச் சான்று. (என் நினைவிலிருந்து எழுதுவதால் கொஞ்சம் வார்த்தைகள் வித்தியாசப்படலாம்).

உடல்நிலை முடியாமல் இருக்கும் என் தந்தையாரையும், ஜஃபருல்லாஹ் நானாவையும், முதுமையில் வாடும் என் பெரியம்மா சித்தி ஜுனைதா பேகத்தின் மகளார் அம்மாவையும் பார்த்துவிட்டு, நாகூர் தர்கா சென்று பாதுஷா நாயகத்தோடு கொஞ்சம் பேசி விட்டு வரவேண்டும். நான்கைந்து நாட்களுக்கு முன்பு நான் நாகூர் சென்றதற்கு காரணம் இவைதான்.

நினைவாற்றலை இழந்துவிட்ட, 80 வயதைத் தாண்டிவிட்ட என் தந்தையார் சாவண்ணாவை போய்ப்பார்த்தேன். அவ்வப்போது நினைவு வந்துவந்து ஒரு சில கணங்களுக்கு இருந்துவிட்டுப் போகிறது அவருக்கு. நான் உங்கள் மூத்த மகன் அம்மியாப்பா என்று சொன்னால், ஆமாமா என்று தலையாட்டுகிறார். கொஞ்சம் ஜூஸ் குடிக்கிறார். அதையும் வற்புறுத்தி ஊட்டவேண்டும். கொஞ்சம் குடித்துவிட்டுத் துப்புகிறார். அவரையும் அறியாமல் சிறுநீர் கழித்துவிடுகிறார். ஆனால் எது செய்தாலும் அவரை இதுவரை நான் பனியனில் பார்த்ததில்லை. நூற்றுக்கு நூறு வெள்ளைக் கைலியும் வெள்ளைச் சட்டையிலும்தான் வீட்டுக்குள்ளும் இருக்கிறார், எந்நேரமும்!

ஜஃபருல்லாஹ் நானாவுக்கு பேச்சும் (கொஞ்சம்) நினைவாற்றலும் போனதற்குக் காரணமாக ஒரு நிகழ்ச்சியை அவரது மனைவி சொன்னபோது அது எனக்குப் புதிய தகவலாக இருந்தது.

கடையநல்லூருக்கோ காயல்பட்டினத்துக்கோ ஒரு விஷாவில் பேசச் சென்றிருக்கிறார் ஜஃபருல்லாஹ் நானா. அப்போது ஒரு ஆட்டோ ஒரு குழந்தை மீது மோதவிருந்தது. குழந்தையைக் காப்பாற்ற குறுக்கே புகுந்து தடுத்திருக்கிறார். அவர்மீது ஆட்டோ மோதியதால் தலையில் அடிபட்டு அன்றே அவருக்கு நினைவு தப்பிவிட்டது என்றும், தான் எங்கிருக்கிறோம், எதற்கு வந்தோம் என்றும் தெரியவில்லை என்றும், ஊரிலிருந்தவர்கள்தான் நானாவின் வீட்டுக்கு ஃபோன் செய்து சேதியைச் சொல்ல, ஆளனுப்பி அவரை நாகூருக்கு அழைத்து வந்ததாக அவரது மனவி சொன்னார். அந்த ஒரு காரணத்துக்காகவே இறைவன் அவருக்கு அதி உயர்ந்த பதவியை ஜன்னத்தில் கொடுப்பானாக, ஆமீன்.

என் தந்தையாரோடு சில மணி நேரங்கள் இருந்துவிட்டு நானும் என் மனவியும் அப்படியே நடந்து புதுமனைத்தெரு ஜஃபருல்லாஹ் நானா வீட்டுக்குள் சென்று பார்த்தபோதுதான் நான் அதிர்ந்து போனேன்.

மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பு பார்த்த நானா இல்லை. ஒரு எலும்புக் கூட்டை சட்டை போட்டு படுக்க வைத்தது போலிருந்தது. அவரது கன்னங்களைத் தடவினேன். எப்படி இருந்த மனிதர்! எவ்வளவு கம்பீரம், எவ்வளவு கொழுகொழு அழகு, அதெல்லாம் எங்கே போனது?  வெகுநேரம் என்னால் அங்கே அவரை அப்படிப் பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை. நான் அழுததைப் பார்த்து லாத்தாவும் (அவரது மனைவி) அழ ஆரம்பித்துவிட்டார். நான் கிளம்பி வந்துவிட்டேன்.

வரும்போது இறைவனிடம் இரண்டு துஆக்களை வைத்தேன். ஒன்று: வெகு சீக்கிரமாக அல்லாஹ் அவரை குணப்படுத்தி இயல்பு நிலைக்கு அவர் திரும்ப வேண்டும். அல்லது, இரண்டு: இனியும் அவரை வேதனைப்படுத்தாமல் இறைவன் அழைத்துக்கொள்ள வேண்டும். ஆமாம், எனக்கு அப்படித்தான் தோன்றியது.

நான் சென்னை வந்த நான்கைந்து நாட்களில் அவரது மறைவுச் செய்தி…

அப்போதுதான் எனக்குப் புரிந்தது, என்னைப் பார்க்க அவர்தான் விரும்பியிருக்கிறார். அவரது எண்ண வலிமைதான் என்னை நாகூருக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. ஒரு வாரமாக இன்று போகலாம், நாளை போகலாம் என்று தள்ளிக்கொண்டே போன நான் அவர் மறைவதற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் சென்று பார்க்க வேண்டுமா? என் மீது அளப்பரிய பிரியம் கொண்ட அவர் என்னைப் பார்க்க விரும்பியிருக்கிறார். அது என்னை இழுத்துச் சென்று அவரைப் பார்க்க வைத்திருக்கிறது.

சற்று முன்புதான் ஷம்ஷீரே மில்லத் பேரா. காதர் மெய்தீன் சார் பேசிய இரங்கல் பேச்சின் ஆடியோ வாட்ஸப்பில் என் நண்பர் பிலால் (ஜஃபருல்லாஹ் நானாவின் தம்பி) மகனார் ஃபைசல் மூலமாக வந்தது. காதர் மொகிதீன் சார் ஜஃபருல்லாஹ் நானாவுக்கு வரலாறு சொல்லிக்கொடுத்த பேராசிரியர். நானாவின் கவிதை நூலை நான் தொகுத்து வெளியிட்டதையும் குறிப்பிடுகிறார் பேராசிரியர்.

நானாவில் இறுதிச்சடங்கிற்கு என்னால் போக முடியவில்லை. தர்காவில் நானாவை அடக்கம் செய்ததில் எனக்கொரு திருப்தியுண்டு. அதிலும் குறிப்பாக ஹஜ்ரத் மாமாவின் அடக்கஸ்தலத்தை அடுத்து அடக்கம் செய்திருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ். ஹஜ்ரத் மாமா, நாகூர் ஹனிபா மாமா, கலிஃபா சார், ஜஃபருல்லாஹ் நானா என வரிசை அமைந்துள்ளது. நாகூர் ஹனிபா மாமாவின் பாடல்களை அவரைப் போலவே உச்ச ஸ்தாயியில் அழகாக ஜஃபருல்லாஹ் நானா பாடுவதைக் கேட்க கொடுத்துவைக்க வேண்டும். குருவின் பாதுகாப்பில் சீடர். இவ்வுலகைப் பிரிந்த பின்னும்!

இறைவன் நானாவின் பிழைகளையெல்லாம் பொறுத்துக்கொண்டு, அவர்களுக்கு ஜன்னத்தில் பொருத்தமான பதவியை அளிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையோடு முடிக்கிறேன்.

சிறையில் நான் சந்தித்த
அந்த
மரண தண்டனை கைதிக்கு
இன்னும் தேதி குறிப்பிடவில்லையாம்
அதுசரி..!
நமக்கு மட்டும்
இறப்புத்தேதி
தெரிந்தா விட்டது…?

என்று எழுதிய நாகூரின் பொக்கிஷங்களில் ஒன்று இன்று புதைக்கப்பட்டுவிட்டது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவரைப் பொருந்திக்கொள்வானாக. ஆமீன்

 

 

This entry was posted in Articles /கட்டுரை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to புதைகுழியில் பொக்கிஷம்

 1. யாக்ஞவல்கியன் says:

  ஜஃபருல்லாஹ் நானா வை நான் அறிந்திலேன். தங்கள் கட்டுரை மூலம் அவருடன் சில மணித்துளிகளில் வாழ்ந்ததிலேயே அவர் மீதான தங்களின் மரியாதையும் பாசமும் உணர்ந்தேன் – நெகிழ்ந்தேன். பணிவுடன் யாக்ஞவல்கியன்

  • நாகூர் ரூமி says:

   ஆமாம் நண்பரே. என்னை உருவாக்கியவர்களில் அவர் முக்கியமானவர். உங்களால் முடியுமானால் யாராவது ஒரு ஏழைக்கு அவர் சார்பாக உணவு வாங்கிக் கொடுங்கள்.

 2. Jaffer says:

  This incident happened in Dindukal. At that time he shown Sadiq No. Some one called Sadiq and he send Zafarullah nana along with his friend to Nagore

 3. abdulqaiyum says:

  கண்களில் கண்ணீரை பெருக்கெடுக்கவைக்கும் பதிவு
  -அப்துல் கையூம்

 4. LKS. Meeran Mohideen says:

  அண்ணனுக்கு …தாங்கள் செய்த அன்பும் மரியாதையும் கண்ணியமும் மகத்துவம் மிக்கவை….உங்கள் பதிவினை வாசிக்கும் போதே….கண்களில் நீர்த்திரையிடுகிறது..அல்லாஹ் அவரை பொருந்திக்கொள்ளட்டும்.

 5. அல்லாஹ் அவருக்கு சுவனத்தை தந்தருள்வானாக
  ஆமீன்

 6. Pingback: புதைகுழியில் பொக்கிஷம் – TamilBlogs

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s