தவறவிடப்பட்ட ஞானம்:ஜே.கிருஷ்ணமூர்த்தி

நன்றி: தி இந்து, திங்கள், மார்ச் 26, 2018

JKஇந்த உலகுக்கு நிறைய ஞானிகளைக் கொடுத்த நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு உண்டு. ஆனால் அந்த ஞானிகள் எடுத்துக்காட்டிய உண்மையை இந்தியா பின்பற்றவில்லை என்பதுதான் அதில் உள்ள சோகம். ஆமாம். போதிதர்மரை சீனாவுக்குக் கொடுத்துவிட்டு நாம் வீணாய்ப்போய்க்கொண்டிருக்கிறோம். பாத்தாம் என்ற இந்தோனேஷியத் தீவில் இருக்கும் ஆசியாவின் மிகப்பெரிய புத்த கோயிலைக்கண்டு நான் வியந்தேன். கோயிலின் அளவும் அழகும் மட்டும் அதற்குக் காரணமல்ல. ஜப்பான், இந்தோனேஷியா, பர்மா, இலங்கை போன்ற நாடுகளுக்கு புத்தரை தாரை வார்த்துவிட்டு நாம் ஏம் கைசேதப்பட்டுப்போனோம் என்பதுதான் என் வியப்புக்கு இன்னொரு காரணம்.

Sri_Ramakrishna_Paramahamsa-imageரமணர், பரமஹம்சர், விவேகானந்தர், ஷிர்டி சாய்பாபா போன்ற ஞானிகள் அறியப்படும் அளவுக்கு, போற்றப்படும் அளவுக்கு ஜே.கே. என்று அறியப்படும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஏன் பேசப்படவில்லை? ஏன் அவர் அலட்சியப் படுத்தப்பட்டுவிட்டார்?  அவர் ஆங்கிலத்தில் பேசியதுதான் காரணமா? இருக்க முடியாது. வட இந்திய ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் பேசிய ஓஷோ, அழகான ஆங்கிலத்திலும் கற்றுக்குட்டித் தமிழிலும் பேசிக்கொண்டிருக்கும் ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள் அங்கீகரிக்கப்பட்டும், பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டும்தானே இருக்கிறார்கள்?

நகைச்சுவை கலந்த பேச்சு ஜேகேயிடம் கிடையாது. அவரது பேச்சும் எழுத்தும் முழுக்க முழுக்க தீவிரமானவை. ஜேகே அவர்களுக்கு பல ஆண்டுகளாக இருந்துவந்த கடுமையான தலைவலி பற்றி ’ஜேகே ஒரு தலைவலி’ என்று ஓஷோ கிண்டலடிக்கும் அளவுக்கு ஜேகேயின் பேச்சு எப்போதும் தீவிரத்தன்மையுடன்தான் இருக்கும். ஆனால் ஜேகேயின் அருமை புரியாமல் போனது நிச்சயமாக நமக்கு பேரிழப்புதான்.

JK2ஜேகே ஒரு புரட்சியாளர். அவரது சொற்பொழிவுகளிலும் எழுத்திலும் அலங்காரங்கள் இருக்காது. எந்த வேத நூலில் இருந்தும் மேற்கோள் இருக்காது. எந்த மகானையும் அவர் குறிப்பிடமாட்டார். அவரிடமிருந்தது எல்லாமே சொந்தச் சரக்கு மட்டுமே. இந்திய மரபில் தோன்றிய எந்த மகானையும் புகழ்ந்தோ பாராட்டியோ அவர் பேசியதில்லை. குண்டலினி சக்தி பற்றிய ஒரு கேள்விக்கு அதை மட்டம் தட்டும் விதத்தில்தான் பதில் சொன்னார். அவர் பரவலாகப் புரிந்துகொள்ளப்படாமல் போனதற்கு இவையெல்லாம் காரணமாக இருக்கலாம்.

Krishnamurtiஆனால் அவர் எதையும் யாரையும் மேற்கோள் காட்டிப் பேசாததற்கு முக்கியமான காரணமிருக்கிறது. நமக்கான உண்மையை இன்னொருவர் மூலம் நாம் பெறமுடியாது என்பதில் அவர் மிகவும் தெளிவாக இருந்தார். அவரது ’அறிந்ததிலிருந்து விடுதலை’ (Freedom from the Known) என்ற நூலின் அல்லது பேச்சின் சாரமே அதுதான். அவரது சொற்பொழிவுகளும் கருத்துக்களும் கிட்டத்தட்ட நூறு நூல்களுக்கு மேல் வரும். ஆனால்  மேலே குறிப்பிடப்பட்ட ஒன்றை ஊன்றிப் படித்தால் போதும் அவரது ஆன்மாவை தரிசித்துவிடலாம்.

Freedom-from-the-Knownஉண்மையை ஒரு வேத நூலில் இருந்தோ, குறிப்பிட்ட மதத்திலிருந்தோ, ஒரு இறைத்தூதரிடமிருந்தோ,  குறிப்பிட்ட மகானிடமிருந்தோ தெரிந்துகொள்ள நாம் விரும்புகிறோம். ஆனால் அது அவர்களின் உண்மை. நமக்கான உண்மையல்ல. உண்மை ஒன்றென்றாலும் அதை நாமாக தனிப்பட்ட முறையில் அனுபவித்தே உணரவேண்டும். ஆனால் கடவுள், இம்மை, மறுமை, பிறப்பு, இறப்பு, ஆன்மா பற்றிய கருத்துக்களையெல்லாம் நாம் அனைவரும், அல்லது நம்மில் பெரும்பாலோர் அவரவர் ஏற்றுக்கொண்டுள்ள நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே புரிந்து வைத்திருக்கிறோம்! இப்படிச் செய்கின்ற நாம் அனைவரும் ’இரண்டாம்தர மனிதர்கள்’ (we are secondhand people) என்கிறார் ஜேகே! உண்மையல்லவா?!

ஏற்கனவே போடப்பட்ட பாதையில் செல்கிறோம் நாம். அது யாரோ, யார்யாரோ போட்டு வைத்த பாதை. நாம் உருவாக்கிய, நமக்கான பாதையல்ல. இப்படி வாழ்வது ஒருவிதமான ஆன்மிக எதேச்சாதிகாரம் என்கிறார்! அரசியல் ரீதியான சர்வாதிகாரத்தை எதிர்க்கும் நாம் இதை மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்கிறார்!

காளி வந்து தனக்கு நேரில் அருள் வழங்கினாள் என்று பரமஹம்சர் சொன்னபோது புரட்சியாளராக இருந்த சீடர் நரேந்திரர் (விவேகானந்தர்) அதெல்லாம் உங்களது கற்பனை (hallucination) என்று கூறினார். அப்படியா, வெறும் கற்பனைதானா என்று தன் முகத்தை மண் தரையில் தேய்த்துக்கொண்டு காளியிடம் கேட்டு அழுதபோது காளி காட்சி கொடுத்து அவரை சமாதானப்படுத்தியதாக பரமஹம்சரின் வரலாறு கூறுகிறது.

தோத்தாபூரி என்ற மகான் வந்து அத்வைத உண்மையை அறிந்துகொள்ள இறுதிப்பயிற்சியொன்றை பரமஹம்சருக்குக் கொடுத்தபோது, வருவதையெல்லாம் வெட்டு என்று சொன்னார். வந்த எல்லா எண்ணங்களையும் வெட்ட முடிந்த பரமஹம்சரால் காளியை வெட்ட முடியவில்லை. அதையும் செய்யச்சொல்லி உடைந்த கண்ணாடித்துண்டுகளால் அவர் புருவ மத்தியில் தோத்தாபூரி குத்திய பிறகுதான் பரமஹம்சருக்கு அந்த நிலை சாத்தியமானது என்று Gospel of Sri Ramakrishna என்ற நூல் கூறுகிறது.

Shirdi Sai Baba Wallpapers

Shirdi Sai Baba Wallpapers

நம்முடைய உண்மைகளெல்லாம் நம்முடைய மனதுக்குள் அல்லது மூளைக்குள் நாமே போட்டுக்கொண்ட, அல்லது மற்றவர்களால் போடப்பட்ட தகவல்களே என்பதை மகான்களின் வாழ்க்கை அனுபவங்கள் எடுத்துக்கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ God is a closed concept என்று சொன்னார் நவீன குரு எக்ஹார்ட் டாலி (Echart Tolle).

அப்படியானால் நம்முடைய வேதங்கள், மதங்களில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களெல்லாம் பொய்யா என்றால் அப்படியல்ல. அவை உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால் அவை நம்முடைய அனுபவத்தில் வந்தவையல்ல. அப்படியானால் ஜேகே சொல்வதை ஏற்றுக்கொள்ளும்போதும் அதே பிரச்சனைதானே வரும்?! ஆமாம். அதையும் அவரே சொல்கிறார். நான் பேசப்போகிறேன், எனக்கு உண்மை தெரியும், என் பேச்சைக் கேட்டு உண்மையை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள் என்று அவர் சொல்லவில்லை. ’நாம் அனைவரும் இணைந்து ஒன்றாக பயணிக்க இருக்கிறோம்’ என்றுதான் தன் சொற்பொழிவுகளை அவர் எப்போதுமே தொடங்குவார்.

ஜேகே பேசும்போதும் எழுதும்போதும் ஒவ்வொரு சொல்லையும் மிகுந்த கவனத்துடன் வைப்பார். ஒரு முறை ரமணருக்கு கையில் வேதனை ஏற்பட்டபோது, ‘ரமணருக்கு கை வலிக்கிறது’ என்றாராம். ’எனக்குக் கை வலிக்கிறது’ என்று சொல்லவில்லை. ’நான்’ என்ற சொல்லைக்கூட அவர் பயன்படுத்தவில்லை.

ஜேகேயும் அப்படிப்பட்டவர்தான். தூரத்திலிருந்தே குணமாக்கும் கலை (distance healing) உண்மையா என்று ஒருவர் கேட்டபோது, ’ஆமாம், அது சாத்தியம்தான், உங்களிடம் பேசிக்கொண்டிருப்பவரே சில முறை அதைச் செய்திருக்கிறார் (Yes, the speaker himself has done it) என்று கூறுகிறார் ஜேகே! நான் செய்திருக்கிறேன் என்று அவர் சொல்லவில்லை. ’நான்’ என்ற சொல்லை ஜேகே தன் பேச்சிலும் சரி, எழுத்திலும் சரி பயன்படுத்தியதில்லை. அதில் நமக்கான முக்கிய குறிப்பு உள்ளது.

இந்த வாழ்க்கையில் நாம் செய்யவேண்டியெதெல்லாம், கடந்த காலம், எதிர்காலத்துக்குள் நுழைந்துகொள்ளாத, நிகழ் கணத்தில் மட்டுமே இருக்கும் கலையைக் கற்றுக் கொள்வதுதான். அப்படி ஒரு மனிதன் இருக்கும்போது, அவன் முழுமையோடு இருக்கிறான். முழு ஆற்றலின் வடிவமாக இருக்கிறான். அப்போதுதான் உண்மையை ஒரு மனிதனால் தரிசிக்க முடியும் என்று கூறும் ஜேகே அதற்கு அழகான ஒரு உதாரணமும் கொடுக்கிறார்.

ஒரு அறையில் நீங்கள் தனியாக இருக்கிறீர்கள். கூடவே ஒரு ராஜநாகமும் இருக்கிறது. அந்த மாதிரி சூழ்நிலையில் உங்கள் கவனம் சிதறுமா? உங்கள் முழுகவனமும் ஒவ்வொரு கணமும் இருக்கும். பரிபூரண கவனமாக நீங்கள் இருப்பீர்கள். கடந்த காலம், எதிர்காலம் எதுவுமே அப்போது உங்களுக்குள் நுழையாது. நிகழ்கணமும் நீங்களுமாக இருப்பீர்கள். அக்கணமே ஞானம் சித்திக்கும் கணமாகும், அப்போது பேராற்றலின், உண்மையான அறிவின் பிழம்பாக நீங்கள் இருப்பீர்கள் என்கிறார் ஜேகே.

JK n Anne Besantஅகில உலகத்துக்கும் ஆசானாக, மைத்ரேயனாக இருக்கப் போகிறவர் என்று உள்ளுணர்வால் உணர்ந்து அவரைத் தத்து எடுத்துக்கொண்டனர் பிரம்ம ஞான சபையின் அன்னி பெசண்ட் அம்மையாரும் லெட்பீட்டரும். ஆனால் உரிய நேரம் வந்தபோது Order of the East (OSE) என்ற அமைப்பைக் கலைத்துவிட்டு, தான் யாருக்கும் ஆசானாக இருக்க வந்தவனல்ல என்று சொல்லி வெளியேறி உலகம் முழுவதும் சென்று தன் பேச்சாலும் எழுத்தாலும் உண்மையை உரக்கச் சொன்ன ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உண்மையான குருவல்லவா?

 

தமிழகத்தின் பொக்கிஷங்களில் ஒன்றை நாம் தவறவிட்டுவிட்டோமோ?

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

One Response to தவறவிடப்பட்ட ஞானம்:ஜே.கிருஷ்ணமூர்த்தி

  1. Pingback: தவறவிடப்பட்ட ஞானம்:ஜே.கிருஷ்ணமூர்த்தி – TamilBlogs

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s