நபிமொழிக் கவிதைகள்

NMK-01ஆதாரப்பூர்வமான நபிமொழித்தொகுப்புகள் ஆறு உள்ளன. என் கணக்குப்படி இமாம் மாலிக் அவர்களின் மு’அத்தா, இமாம் அஹ்மது அவர்களின் முஸ்னது போன்ற இன்னும் சில தொகுப்புகளும் உண்டு. முஸ்லிம்களாகிய நாம் வாழ்வது திருமறையையும் திருநபி வழிகாட்டுதலையும் அடியொற்றித்தான். ஆனால் நம்மில் எத்தனைபேர் திருமறையையும் திருநபி வாக்கையும் முழுமையாகப் படித்துள்ளோம்? நேர்மையான பதில் சிலர் மட்டும்தான் என்பதாகவே இருக்கும். நம்மில் பெரும்பாலோர் மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகளில் இருந்தும், அவர்களது நூல்களில் இருந்தும்தான் எடுத்து வைத்துக்கொண்டு பேசுகிறோமே தவிர, நாமாக சொந்தமாக உள்ளே சென்று பார்த்ததில்லை என்பதுதான் நிஜம். இதில் அவர் சொன்னதையும் இவர் சொன்னதையும் ஆதாரமாக வைத்து நமக்குள் பிரிந்துகிடப்பதுதான் சோகமே.

நாம் நன்றாக இல்லை

காரணம்

நாம் ஒன்றாக இல்லை

என்று ஆரூர் புதியவன் ஒரு கவிதையில் அழகாகச் சொன்னார்.  இந்த மோசநிலை மாற நாம் என்ன செய்யவேண்டும்? முதல் கட்டமாக நாமாகவே திருமறையையும் திருநபி வாக்கையும் நமக்குத் தெரிந்த மொழியில் படித்து சிந்திக்க வேண்டும். அல்லாஹ் நமக்கு அப்போது நிச்சயம் ஒற்றுமைக்கான வழியைக் காட்டுவான்.

நான் அந்த வேலையில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டிருந்தேன். இறையருளால் ஆதாரப்பூர்வமான நபிமொழித்தொகுப்புகள் ஆறையும் அரபி மூலத்தோடு இருக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பின் வாயிலாகப் படித்து முடித்தேன். அல்ஹம்துலில்லாஹ்.. கொஞ்சம் எனக்கு அரபியும் வரும் என்பதால் முக்கியமான நபிமொழிகளில் அரபியில் என்ன சொல்லபட்டுள்ளது என்று பார்த்து உறுதி செய்துகொள்வேன்.

நபிமொழிகளை அனைவரும் படிப்பதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அனைவரும் என்றால் முஸ்லிம்கள் மட்டுமல்ல. அனைவரும். ஏனெனில் மனிதகுலம் அனைத்திற்கும் வழிகாட்டியாகத்தானே பெருமானாரை இறைவன் அனுப்பினான்? எனவே எல்லாருக்கும் பொதுவான பல நபிமொழிகளையும், முஸ்லிகளுக்கு மட்டுமே புரியக்கூடிய, பயன்படக்கூடிய சில நபிமொழிகளையும் எடுத்து எளிய தமிழில் புதுக்கவிதை வடிவில் கொடுத்தால் என்ன என்று தோன்றியது. அதன் விளைவுதான் இந்த நபிமொழிக்கவிதைகள். இதனைப் படிப்பவர்களுக்கு நபிமொழிகளை தேடிப்படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட வேண்டும் என்பதே என் நோக்கம். இவைகள் கவிதையாகிவிட்டனவா என்று எனக்குத் தெரியாது. ஆனால் சொற்களில் கொஞ்சம் சந்தமிருக்கும். நபிமொழிகளை நினைவு வைத்துக்கொள்ள அவை நிச்சயம் உதவும். ஹதீஸ்களை எடுத்துப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இக்கவிதைகளைப் படிப்பவர்களுக்கு ஏற்படுமானால், என் நோக்கத்தை இறைவன் நிறைவேற்றிவிட்டான் என்று புரிந்துகொள்கிறேன். இக்கவிதைகளை எழுத வைத்த இறைவனுக்கே எல்லாப் புகழும்.

ஆதாரப்பூர்வமான ஆறுநபிமொழித் தொகுப்புகளில் இருந்தும், முவத்தா, முஸ்னத் ஆகிய தொகுப்புகளில் இருந்தும் இக்கவிதைகள் பிறந்துள்ளன. ஆதாரப்பூர்வமான ஆறுநபிமொழித் தொகுப்புகளும் டாக்டர் முஹம்மது முஹ்சின் கான் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு சவுதி அரேபியாவின், ரியாத், தாருஸ்ஸலாம் வெளியீடாக வெளிவந்தவை. ஒவ்வொரு கவிதைக்குக் கீழும் அடைப்புக்குறிகளுக்குள் சில எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். உதாரணமாக (புகாரி. அ: 01 – 10). ’அ’ என்பது பிரதான அறிவிப்பாளரைக் குறிக்கும். சஹீஹ் புகாரி தொகுப்பின் பாகம் 01-ல் பத்தாவது நபிமொழி என்று புரிந்து கொள்ள வேண்டும்.

மனிதகுலமனைத்துக்கும் அருட்கொடையாக பெருமானார் (ஸல்) அவர்கள் அவதரித்து அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து காட்டி இருப்பதால், தமிழறிந்த அனைவருக்குமான கவிதைகளாகவே இருக்கவேண்டும் என்ற ஆசையில் நான் வழக்கமாக அடைப்புக்குறிகளுக்குள் கொடுக்கப்படும் மரியாதை நிமித்தமான சுருக்கச் சொற்களான (ஸல்) என்றோ, நபித்தோழர்களின் பெயர்களுக்குப் பின்னால் (ரலி) என்றோ போடவில்லை.  அவைகளை மனதுக்குள் போட்டுக்கொண்டேன். நம் மனதில் இருப்பதை இறைவனே நன்கறிந்தவன்.

1

முஸ்லிம் என்பவர் யார்?

என்ற கேள்விக்கு

முஸ்தஃபா சொன்ன பதில் இதுதான்:

 

எந்த நாக்கு உன்னைக் கடிக்காதோ

எந்தக்கை உன்னை அடிக்காதோ

அந்த மேனிக்கு உரியவர்

அந்தப் பாதுகாப்பைத் தருபவர்

 

கைகளால் காட்டாதே கோபம்

நாவாலும் அதைச் செய்தல் பாவம்

சொல்லாலும் செயலாலும் வன்முறை

செய்யாமலிருப்பதே நன்முறை

முஸ்லிம் எனில் காட்டவேண்டும் மென்முறை

அதுவே இஸ்லாத்தின் இன்முறை

(அ: அப்துல்லாஹ் இப்னு அம்ர். புகாரி, 01– 10)

2

நாயனுக்காக

நம்பிக்கை கொள்ளும்வரை சொர்க்கமில்லை

நாயனுக்காக

நேசம் கொள்ளும்வரை நம்பிக்கையில்லை

நேசமில்லையெனில் மோசம்தான்

நேசமே நம்பிக்கையின் ஆதாரம்

நேசம் இல்லையெனில் எல்லாமே சேதாரம்

(அ:அபூஹுரைரா. இப்னு மாஜா, 01—68)

3

எதையும்

மூன்று முறை சொன்னார்கள்

மூன்று முறை செய்தார்கள்

மூன்று முறை அசைந்தார்கள்

மூன்று முறை இசைந்தார்கள்

மூன்று மிடக்கில் குடித்தார்கள்

முத்திரைநபி முஹம்மது

 

மூன்றென்பது ஸுன்னத்து

முஸ்தஃபாவைப் பின்பற்று

முடிவில் வரும் ஜன்னத்து

(புகாரி, அ:  அனஸ். 01 – 94)

நன்றி: மக்கள் உரிமை மற்றும் ஜனாப். பேரா. ஜவாஹிருல்லாஹ்

 

This entry was posted in Poetry /கவிதை. Bookmark the permalink.

2 Responses to நபிமொழிக் கவிதைகள்

  1. Pingback: நபிமொழிக் கவிதைகள் – TamilBlogs

  2. Nahvi says:

    மாஷா அல்லாஹ் . அருமையான முயற்சி. நல்ல பலன் தரும் பலே முயற்சி. வாழ்த்துக்கள். உங்கள் சேவை நற் சேவை யாய் என்றும் தொடர உங்கள் அன்பு நஹ்வியின் துஆக்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s