நபிமொழிக் கவிதைகள் 09 & 10

ஐந்து ஐந்தாக மக்கள் உரிமையில் வந்துகொண்டிருந்தன இக்கவிதைகள். என் வேண்டுகோளுக்கிணங்க இப்போது பத்து பத்து கவிதைகளாக வருகின்றன. அல்லாஹ்வுக்கும் சகோதரர் பேரா ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கும் நன்றி.

NMK --- 0934

இருவருக்கான உணவைக்கொண்டு

ஆயிரம் பேருக்கு அருள் பாலித்தது

அண்ணல் நபியின் உமிழ்நீர்

 

தோழருக்கான உமிழ்நீர் அற்புதத்தை

தனக்கென என்றும் துப்பியதில்லை

ஏழையாய் வாழ்ந்த ஏந்தல் நபி

 

ஒட்டிய வயிறை மறைப்பதற்கு

கட்டிய கல்லொன்று கனத்திருக்கும்

 

உண்ண வீட்டில் இல்லாதபோது

உண்ணா நோன்பு மேற்கொள்வார்கள்

உண்மை சொன்ன உன்னத நபி

(சஹீஹ் முஸ்லிம், அ: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ். 05 – 5315)

 

35

நோயுற்றவரை நோக்கச் சென்றால்

நோயாளிக்கு ஆறுதல் சொன்னால்

எழுபதாயிரம் வானவர் ஏகமாகச் சொல்வார்கள்

சென்றவருக்கு சலாம் சலாம்

நோயுற்றவருக்கு வாட்டமிருக்கும்

நலம் விசாரித்தவருக்கு

சொர்க்கத்தில் தோட்டமிருக்கும்

(திர்மிதி. அ: துவைர். 02 – 969)

36

போனவருக்காகப் புலம்ப வேண்டாம்

உடல் விட்டுப் போனவருக்கு

ஒப்பாரி வேண்டாம்

 

நம்மை விட்டுப் போனவர் பற்றி

நல்ல விஷயங்களைப் பேசுங்கள்

தவறான தகவல்கள் மூலம்

தவறிப் போனவருக்கு

தண்டனை கொடுக்காதீர்

என்றார்கள் தாஹா நபி

(திர்மிதி. அ: யஹ்யா இப்னு அப்துர் ரஹ்மான். 02 – 1004)

 

37

மறுமைக்கான நற்செய்தியோ

மறுக்க முடியாத துர்ச்செய்தியோ

இம்மை முடித்து இறப்பவர்க்கு

காலையிலும் பகலிலும் கூறப்படும்

சொர்க்கத்திலோ நரகத்திலோ அவருக்கு

உரிய இடம் காட்டப்படும்

காட்டப்பட்டதன் காரணமாக அவர்

கடவுளைக் காண காதல் கொள்ளலாம்

ஆண்டவனைக் காண அச்சமும் கொள்ளலாம்

(புகாரி, அ: அப்துல்லாஹ் இப்னு உமர். 02 – 1379)

38

புத்தி மிகுந்த நீதிபதியானவர்

கத்தியின்றி கழுத்தறுபட்டவர் போலாவார்

என்று காத்தமுன் நபி

ஏன் சொன்னார்கள்?

உதவி செய்ய முடியாத

பதவி அது என்பதாலா!

(திர்மிதி. அ: அபூஹுரைரா. 03 – 1325)

39

சினம் கொண்ட மனத்தோடு

தீர்ப்பு சொல்லாதீர்கள் என்றார்கள்-நற்

குணம் கொண்ட   நபிகள் நாதர்

(திர்மிதி. அ:அப்துர் ரஹ்மான் இப்னு அபீபக்ரா. 03 – 1334)

40

மேஜைமீது உண்டதில்லை

மேன்மை நபி

பெரிய தட்டில் வைத்தும் புசித்ததில்லை

பொறுமை நபி

துணி விரித்தே உண்ணுவார்கள்

தூய நபி

(புகாரி, அ: அனஸ். 07 – 5386)

41

அப்பாவை நேசி என்று

ஒருமுறை சொன்ன அல் முஸ்தஃபா

அம்மாவை நேசி என்று

மூன்று முறை சொன்னார்கள்

முதலிலேயே

(திர்மிதி. அ: பஹஸ் இப்னு ஹாகிம். 04 – 1897)

42

உற்றாரும் உறவினரும்

கற்றாரும் இருந்தாலும்

பெற்றோரின் திருப்தி ஒன்றே

பெரியோனின் திருப்தி என்று

பெருமானார் சொன்னார்கள்

 

சொந்தங்கள் பந்தங்கள் எல்லாம்

சூழ இருந்தாலும்

தாய் தந்தை திருப்தி ஒன்றே

தூயோனின் திருப்தி என்று

தாஹா நபி சொன்னார்கள்

(திர்மிதி. அ: அப்துல்லாஹ் இப்னு அம்ர். 04 – 1899)

43

பேரர் ஹஸனுக்கு

பெருமானார் கொடுத்தார்கள் ஒரு முத்தம் — அது

பாட்டனார் அன்பின் சப்தம்

 

முத்தான குழந்தைகள்

பத்து இருந்தும்

முத்தம் ஒன்றுகூட நான் கொடுத்ததில்லையே

என்றார் அதைப்பார்த்த அல் அக்ரா இப்னு ஹாபிஸ்

 

அன்பு கொடுக்காதவர்

அன்பு கொடுக்கப்படமாட்டார் என்றார்கள்

அண்ணல் நபி

கருணை காட்டாதவர்

கருணை காட்டப்பட மாட்டார் என்றார்கள்

காத்தமுன் நபி

(முஸ்லிம், அ: அபூஹுரைரா. 06 – 6028)

44

பெண்மக்கள் இருவரை

பருவம் வரும்வரை

பாசமுடன் பார்த்துக்கொண்டால்

கன்னிப்பெண்ணாகும்வரை

கண்ணியமுடன் கவனித்துக்கொண்டால்

 

இரண்டு விரல்களைப் போல நெருக்கமாக

என்னோடு இருக்கலாம் மறுமையில்

என்று நவின்றார்கள் இறுதித்தூதர்

(முஸ்லிம், அ: அனஸ் இப்னு மாலிக். 06 – 6695)43

NMK -- 1045

வியர்வை மணக்கும் விந்தை நபி

விளக்கிச் சொன்னது இது:

வளூ என்பது தொழுகைக்கான சுத்தம்

அதை முறிக்கும் குறிப்புகளோ இரண்டு:

காற்றுப் பிரியும் சப்தம் பின்னால்

நாசி பொத்தும் துர்வாசம் முன்னால்

தொழுகைக்கான

சுத்தம் முறிப்பதோ ஒரு சப்தம்

நாசம் செய்வதோ துர்வாசம்

(திர்மிதி. அ:அபூஹுரைரா. 01 – 74)

46

ரோமானியர்களோ பைசாந்தியர்களோ

சிரியாவில் சீறிக்கொண்டுள்ளார்கள்

முஸ்லிம்கள் வாழும் பகுதியிலும்

முகாமிட்டுள்ளார்கள் என்ற

தகவலைத் தொடர்ந்து

முப்பதாயிரம் தோழர்களுடன்

முத்திரை நபியவர்கள்

தபூக் என்ற பகுதி நோக்கி

பகைவர்களை வெல்ல

படையெடுத்துச் சென்றார்கள்

 

எதிரிகள் யாருமங்கே

கூடாரம் அடிக்கவில்லை என

காசிம் நபிக்குத் தெரிந்த பின்னர்

திரும்பிச் சென்றது தோழர்களின் படை

 

வாளெடுத்து வீசுவதற்கு

வாய்ப்பில்லாத தோழர்களால்

காலெடுத்தும் வைக்க முடியவில்லை

கடுமையான வெப்பத்தில்

 

வயிற்றின் பசிக்குரலோ

வதைத்தெடுத்தது

வீரர்களின் வயிறுகளை

 

ஓட்டி வந்த ஒட்டகங்களை அறுத்து

உண்டுகொள்ளலாமா என்றனர்

உம்மி நபியின் தோழர்கள்

அப்படியே செய்யுங்கள் என்று

அனுமதி கொடுத்தார்கள்

அஹ்மது நபிகள்

 

வேண்டாம் மாநபியே என்றார்

விவேக வீரர் உமர் அவர்கள்

போருக்குக் கொண்டு வந்த மிருகங்களை

சோறுக்காக சமைத்திட்டால்

ஊருக்குப் போவதற்கு

வாகனங்கள் போதாது

 

அவரவர்கள் வைத்திருக்கும்

அற்ப சொற்ப பண்டங்களை ஒரு

துணிமீது போடச் சொல்லுங்கள்

தூதர் அவர்களே – அவைகளில்

பெருக்கம் ஏற்பட – இறைவனின்

நெருக்கம் உள்ள நீங்கள்

பிரார்த்தியுங்கள் என்றார்

பகுத்தறிந்த வீரர் உமர்

 

அப்படியே செய்யுங்கள் என்று

அஹ்மது நபி சொன்னார்கள்

தோல் விரிப்பு ஒன்றின்மீது

தூதர் நபி சொன்னபடி

தோழர்கள் கொண்டுவந்த

கொஞ்சம் கோதுமை

கொஞ்சம் பேரீச்சம்

கொஞ்சம் ரொட்டித்துண்டு என

கொண்டுவந்து வைக்கப்பட்டது

 

உணவில் பெருக்கம் கொடு பேரிறைவா என

கைகளை ஏந்தி காருண்ய நபி

கருணையாளனிடம் கேட்டார்கள்

காத்தமுன் நபி கேட்டபின்பு

கடவுள் கொடுக்காமல் இருப்பானா!

 

பெருக்கம் ஏற்பட்டதை

புரிந்துகொண்ட பெருமானார்

பைகளை நிரப்பிக்கொள்ளுங்கள் என்று

கைகளைக் காட்டினார்கள் தோழர்களுக்கு

 

வந்திருந்த தோழர்களெல்லாம்

வயிறாற உண்டபின்பும்

பைகளெல்லாம் நிரம்பி அவர்கள்

பசியாறி முடித்த பின்னும்

பரக்கத் குறையவில்லை

 

எஞ்சியிருந்த உணவுப்பொருள்கள்

தூவப்பட்ட தோல்துணியில்

மிஞ்சியிருந்தது உணவு

முப்பதாயிரம் தோழர்கள்

முழுமையாக உண்டபின்னும்!

(சஹீஹ் முஸ்லிம், அ: அபூஹுரைரா. 01 – 139)

47

அஸர் தொழும் ஆர்வம்கொண்ட

அனைவருமே வந்துவிட்டாலும்

சொட்டுகூடத் தண்ணீர் இன்றி

சுத்தம் செய்ய முடியவில்லை

 

தயக்கதுடன் தோழர்கள்

தாஹா நபியைப் பார்த்தார்கள்

அவர்களுக்கென்று அளிக்கப்பட்ட

பாத்திரத்தினுள் பதிந்திருந்தன

பெருமானாரின் புனித விரல்கள்

 

வேகமாக வந்துகொண்டிருந்தது

விரல்களிலிருந்து வாகாய்த் தண்ணீர்!

அத்தனை பேரும் அதில் வளூ செய்து

அஸர் தொழுகையை அழகாய் முடித்தார்கள்

 

அண்ணல் நபி செய்த அற்புதத்துக்கு

ஆச்சரிய சாட்சியானார் தோழர் அனஸ்

விரல்களிலிலிருந்து வழிந்த நீரைக்கண்டு

விழிகளிலிலிருந்து தோழர்களுக்கு

வழிந்தோடியது ஆனந்தக் கண்ணீர்

(புகாரி, அ: அனஸ் இப்னு மாலிக். 04 – 3573)

48

கைபர் போர் நடந்தபோது

கண்மணி நாயகம் சொன்னார்கள்

வெற்றி பெற வைக்கும் வீரத்தலைவரிடம்

கொடியைக் கொடுப்பேன் நாளை என்று

 

அந்த ஒருவர் யார் என்றறிய

அனைவரும் ஆர்வமாய் இருந்த காலை

விழியில் நோய் ஏற்பட்டு

வலியில் துடித்துக்கொண்டிருந்த

அலீயை அழைக்கச் சொன்ன

அஹ்மது நபியவர்கள்

வீரர் அலீயின் விழிகளிலே தன்

புனித எச்சிலை உமிழ்ந்துவிட்டு

பிரார்த்தனை செய்தார்கள்

 

கண்ணின் பிரச்சனை அவருக்கு மறந்து போனது!

கண்ணிமைக்கும் நேரத்தில் வலி பறந்துபோனது!

பச்சிலை மருந்தைப்போல

பெருமானார் இதழ்கள் தொட்ட

எச்சிலும் மருந்தானது

என்றென்றும் அற்புதமே!

(புகாரி, அ: சஹ்ல். 04 – 3009)

49

அல்லாஹ் சொன்னான் என்று

அஹ்மது நபிகள் அறிவித்தது:

நன்மை ஒரு சொத்து

செய்தால் கிடைக்கும்

ஒன்றுக்குப் பத்து

பத்து மடங்கு ஒரு தொடக்கம்தான்

எழுநூறும் அதில் அடக்கம்தான்

(புகாரி, அ: அபூ சயீத் அல் குத்ரி. 01 – 41)

50

சாதகமான தீர்ப்புக்காக கொஞ்சம்

எது கொடுத்தாலும் அது லஞ்சம்

கொடுத்தாலும் வாங்கினாலும் பாவம்

வந்திறங்கும் பெருமானாரின் சாபம்

(திர்மிதி, அ: அபூஹுரைரா. 03 – 1336)

51

அருகில் இல்லாத ஒருவருக்காக

அல்லாஹ்விடம் கேட்டுவிட்டால்

அருளப்படும் உடனே என்று

அஹ்மது நபி கூறினார்கள்

 

தூரத்தில் இருக்கும் ஒருவருக்காக

தூயவனிடம் பிரார்த்தித்தால்

தரப்படும் நிச்சயமாய் என

தாஹா நபி கூறினார்கள்

(திர்மிதி, அ: அப்துல்லாஹ் இப்னு அம்ர். 04 – 1980)

52

திருமறையின் திருவசனம்

நெஞ்சமதில் கொஞ்சமேனும்

இல்லாமல் போகுமானால்

பாழடைந்த பங்களா போல்

நீயாவாய் என்றார்கள் நீதி நபி

 

இறைவனது திருவாக்கு

இதயத்தில் இல்லையெனில்

இடிந்துபோன இல்லம்போல்

இருக்கும் உந்தன் உள்ளம் என

இயம்பினார்கள் ஈகை நபி

(திர்மிதி, அ: இப்னு அப்பாஸ். 05 – 2913)

53

ஒலியெழுப்பி திருமறையை

உரத்த குரலில் ஓதுவது

பட்டப்பகலில் செய்யப்பட

பகிரங்க தர்மம் போன்றது

அலையடிக்காமல் அமைதியாக

உள்ளுக்குள் ஓதுவதோ

சப்தம் காட்டாத சதகாவாகும்

(திர்மிதி, அ: உக்பா இப்னு ஆமிர். 05 – 2919)

நன்றி:  மக்கள் உரிமை ஜூன் 22–28, 2018

This entry was posted in Poetry /கவிதை. Bookmark the permalink.

1 Response to நபிமொழிக் கவிதைகள் 09 & 10

  1. Pingback: நபிமொழிக் கவிதைகள் 09 & 10 – TamilBlogs

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s