நபிமொழிக் கவிதைகள் — 11

NMK -- 1154

முஆத் இப்னு ஜபல் என்ற தோழரை

யெமன் நாட்டுக்கு ஆட்சியாளராக

அனுப்பியபோது அருமை நபி சொன்ன

அறிவுரை இதுதான்:

 

மனதை வருத்துவது பாவம்

அதுவே நமக்கான சாபம்

அஞ்சிக்கொள்ளுங்கள் அன்பரே

அநீதி இழைக்கப்பட்டவரின் உள்ளம்

அல்லாஹ்விடம் உடனே செல்லும்

 

அவர்களது நெஞ்சம்

இழைக்கப்பட்ட அக்கிரமத்தால் வலிக்கும்

அவர்களது பிரார்த்தனையோ

அக்கணமே அக்கணமே பலிக்கும்

ஏனெனில்

அவர்களது பிரார்த்தனையில் குறையில்லை

அல்லாஹ்வுக்கும் அதற்குமிடையில் திரையில்லை

(முஸ்லிம், அ: இப்னு அப்பாஸ். 01 – 121)

55

தூதர்கள் அனைவருமே

தூய்மையுடன் கட்டி வைத்த

இஸ்லாம் எனும் இல்லத்தின்

இறுதிச் செங்கல் நான் என

இயம்பினார்கள் இறுதி நபி

(புகாரி, அ:அபூஹுரைரா. 04 – 3535)

56

முஸ்தஃபாவின் முகம் முழுமதி — அது

மூலவன் கொடுத்த வெகுமதி

சிவப்பும் வெண்மையும் கலந்த முகத்தில்

கண்களும் இமைகளும் கருப்பாய் மின்ன

உவப்பாய் பார்த்தனர் நபிகளின் தோழர்

நெஞ்சிலிருந்து நாபி வரை

நீண்டது முடிக்கோடு

 

உயரமும் இல்லை

குள்ளமும் இல்லை

நடுத்தரமானதே நபியின் மேனி

நீள்முடியில்லை சுருள் முடி இல்லை

நடுவில் நின்றது அருள் முடிதானே

 

முகத்தைத் திருப்பினால்

முழுவதும் திரும்பும் திருமேனி

மேலிருந்து கீழே மெல்ல வருவதுபோல்

மிடுக்கு நடை நம் முத்திரை நபிக்கு

 

புறாவின் முட்டைபோல் சிவப்பாக

தோள்களுக்கு நடுவில்

நபித்துவ முத்திரை

தொட்டுப் பார்த்திட

தோழர்கள் அக்கறை

 

வேகமாகப் பேசுவது

வாஞ்சை நபி வழியல்ல

நெஞ்சத்தில் நிற்கும் வண்ணம்

கொஞ்சம் கொஞ்சமாகவே

தெளிவாகச் சொல்லிடுவார்

தாஹா நபி

(திர்மிதி, அ: அனஸ். 03 – 1754, 06 – 3623, 3635,37, 38)

57

ஒவ்வொரு செயலின் பின்னாலும்

உள்ளது ஒரு நோக்கம்

எல்லாம் வல்லவனின் பார்வையோ

நோக்கத்தை மட்டுமே பார்க்கும்

 

செயலின் பின்னால் உள்ளது எண்ணம்

செங்கோலின் தீர்ப்பு திண்ணம்

எண்ணத்தின் தன்மையைக் கொண்டு

வசவோ விருதோ உண்டு

(புகாரி, அ: உமர் இப்னு கத்தாப். 01 – 01)

58

என் உயிர் எவன் கையில் உள்ளதோ

அவன்மீது ஆணையாக!

தந்தையும் தாயும்

தான் பெற்ற சேயும்

என்னைவிட பெரிதல்ல

என்றெண்ணும்போதுதான்

இறைநம்பிக்கை

சித்திக்கும் என்றார்கள்

சத்திய நபி

 

பெற்றோரும் பிள்ளைகளும்

பெருமானாரைவிட

பெரிதல்ல

என்ற நிலையில்தான்

ஈமானிருக்கும்

(புகாரி, அ:அபூஹுரைரா 01 – 14)

59

குதிரை வீரர்கள் சிலரை

நஜ்துக்கு அனுப்பினார்கள்

நபிகள் நாயகம்

 

எதிர்ப்பு தெரிவித்த

யமாமா பகுதியின் தலைவரான

துமாமா என்பவரைக் கொண்டுவந்து

பெருமானாரின் பள்ளிவாசலில்

மூன்று நாட்கள் தூணில் கட்டி வைத்தார்கள்

முன்கோபம் கொண்ட குதிரை வீரர்கள்

 

அவிழ்த்துவிடுங்கள் அவரை என

அன்புக் கட்டளை கொடுத்தார்கள்

அஹ்மது நபியவர்கள்

 

பேரீச்சமரத் தோட்டம் சென்று

குளித்துவிட்டு வந்த அவர்

பள்ளிவாசலுக்கு மீண்டும் வந்து

பணிவுடனே கலிமாச் சொல்லி

ஈமான் கொண்டார் துமாமா

 

தூணில் பிணைக்கப்பட்ட துமாமா

தீனில் இணைக்கப்பட்டார் நிலையாக

(முஸ்லிம், அ: அபூஹுரைரா மூலமாக சயீத் இப்னு அபீ சயீத். 05 – 4589)

60

வித்ர் தொழுமுன் உறங்குகிறீர்களா என

அன்னை ஆயிஷா

அண்ணலைக் கேட்டபோது

கண்களுக்கு மட்டுமே தூக்கம்

இறைவனே என் இதயத்தின் நோக்கம்

விழியின் கதவுகள் மூடியிருந்தாலும்

விரியத் திறந்திருக்கும் என் இதயம்

இமைகள் மட்டுமே இருக்கும் மூடி

இதயம் விழித்திருக்கும் இறைவனை நாடி

என்றார்கள் எம்பெருமான்

(புகாரி, அ: ஆயிஷா சொன்னதாக அபூசல்மா இப்னு அப்துர் ரஹ்மான். 02 – 1147)

61

ஹிஷாம் என்பவர் திருமறையை

ஓதிய முறை தவறென்றார்

ஹிஷாமோடு சமர் செய்த உமர்

 

ஹிஷாம் ஓதியதும் சரிதான்

உமர் ஓதியதும் முறைதான்

 

ஏகனின் வாக்கு எனக்கு

ஏழு விதமாய் அருளப்பட்டது கணக்கு

உனக்குகந்த முறையில் அதை ஓதி

உண்மையை நீ எளிதாக்கு

என்றார்கள் ஏந்தல் நபி

(புகாரி, அ: உமர் இப்னு கத்தாப். 06 – 4992)

62

முஹம்மதைவிட உயர்ந்த நபி

மூஸாதான் என்றார் ஒரு யூதர்

அவரை அறைந்துவிட்டார்

அன்புகொண்ட ஒரு தோழர்

தூதரிடம் யூதர் சென்று

தனக்கான நியாயம் கேட்டார்

அப்படிச் சொல்லவேண்டாம் என்றும்

நபிமார்களை ஒப்பிடவேண்டாம் என்றும்

நவின்றார்கள் நம் தூதர்

(புகாரி, அ: அபூஹுரைரா. 03 – 2411)

63

காசிம் நபிக்குக் கடன் கொடுத்தவன்

கொடும் சொற்களால் கடுமை காட்டினான்

நாக்கைச் சுழற்றித் தீயை மூட்டினான்

நாயகத்தோழர்கள் அடிக்க நினைத்தனர்

 

கடுமை காட்ட சொற்களைக் கொண்டு

கடன் கொடுத்தவனுக்கு உரிமை உண்டு — என

பொறுமை நபிகள் போதனை செய்தார்

அருமைத் தோழர்களை அடக்கி வைத்தார்

நன்றி: மக்கள் உரிமை ஜூலை 06 — 11, 2018

(புகாரி, அ: அபூஹுரைரா. 03 – 2401)

 

This entry was posted in Poetry /கவிதை. Bookmark the permalink.

1 Response to நபிமொழிக் கவிதைகள் — 11

  1. Pingback: நபிமொழிக் கவிதைகள் — 11 – TamilBlogs

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s