கலைஞர் என்றொரு பன்முகன்

With Kalaignar-2

இலக்கியம், இசை என்று ஆரம்பத்தில் இயங்கிக்கொண்டிருந்த நான் கொஞ்ச காலமாக மதம் சார்ந்தும், சாராமலும் உள்ள ஆன்மிகத்தை வாசித்துக்கொண்டும் சுவாசித்துக்கொண்டும் இருக்கிறேன். இதுவே என் இறுதிவரை தொடரும் என்பதையும் உணர்கிறேன்.

எனக்கு அரசியலில் எப்போதுமே ஆர்வம் இருந்தது கிடையாது. ஆனாலும் கலைஞரை ஒருமுறையாவது நேரில் சந்திக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்குக் காரணம் அவரது பன்முக ஆளுமை. குறிப்பாக இலக்கிய ஆளுமை. சுட்டிச் சொல்லவேண்டுமெனில் திருக்குறளுக்கான அவரது விளக்க உரைகள். தான் கொண்ட இறைமறுப்புக் கருத்துக்கும் குந்தகம் ஏற்படாமல் திருக்குறளுக்கும் அவரால் சிறப்பாகவும் சரியாகவும் விளக்கம் சொல்ல முடிந்திருக்கிறது. அது அவரது தனித்திறமை.

திருக்குறளின் கடவுள் வாழ்த்து என்ற பகுதியை ‘வழிபாடு’ என்ற தலைப்பில் கலைஞர் கொடுத்திருப்பார். வாலறிவன், மலர் மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், தனக்குவமை இல்லாதான் – இப்படி விதம்விதமாய் இறைவனுக்கு வள்ளுவர் அடைமொழிகள் கொடுத்திருந்தாலும் எந்தக் குறளுக்குக் கொடுத்த விளக்கத்திலும் இறைவன், ஆண்டவன் என்ற சொல்லை கலைஞர் வேண்டுமென்றே பயன்படுத்தவில்லை. அதே நேரத்தில் திருக்குறளின் பொருள் கெடாமலும் விளக்கம் தருகிறார்! உதாரணமாக

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடி சேராதார்

என்ற குறளை எடுத்துக்கொள்ளலாம். எல்லா அறிஞர்களும் இறைவன், கடவுள் என்றுதான் சொல்கிறார்கள். பாருங்கள்:

மணக்குடவர் உரை:

பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவர் அதனுள் அழுந்துவார்

பரிமேலழகர் உரை:

இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் – இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்; சேராதார் நீந்தார் – அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர். (காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், ‘பிறவிப் பெருங்கடல்’ என்றார். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். உலகியல்பை நினையாது இறைவன் அடியையே நினைப்பார்க்குப் பிறவி அறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்குப் அஃது அறாமையும் ஆகிய இரண்டும் இதனான் நியமிக்கப்பட்டன.)

மு. வரதராசன் உரை:

இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது.

சாலமன் பாப்பையா உரை:

கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.

ஆனால் கலைஞரின் உரை இதுதான்: ‘வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்’ என்று விளக்குகிறார்!

அவரது தமிழ் கெட்டுப்போகாமல் இருந்ததற்கு அவர் பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் பயிலாதது உதவியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்! ‘என் கல்வியில் தலையிடும் உரிமையை நான் எந்தப் பள்ளிக்கூடத்துக்கும் கொடுக்கப்போவதில்லை’ என்று மார்க் ட்வைன் சொன்னது ஞாபகம் வருகிறது! படிக்காத ஆனால் படித்த அறிஞர் என்று சொல்ல வேண்டியவர்களில் கலைஞர் முக்கியமானவர்.

அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆசையை கவிஞர் வைரமுத்து மூலமாக இறைவன் நிறைவேற்றி வைத்தான். அதிலும் லேசான ஒரு அரசியல் உள்ளது! ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக, கலைஞருக்கு 90 வயதானபோது, ‘கலைஞர் 90, கவிஞர் 90’ என்று ஒரு நிகழ்ச்சியை தாஜ் கொரமண்டல் ஹோட்டலில் வைரமுத்து அவர்கள் ஏற்பாடு செய்தார். அதற்கு அழைக்கப்பட்ட 90 கவிஞர்களில் நானும் ஒருவன்! என்னை வைரமுத்து அவர்களுக்குத் தெரியும் என்றாலும் அங்கே நான் அழைக்கப்படுவதற்கு சிங்கையில் இருக்கும் என் தம்பி காதரும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். அவர் வைரமுத்துவுக்கு நெருக்கமானவர். அதனாலும் அவர் என்னை 90 கவிஞர்களின் பட்டியலில் சேர்த்திருக்கலாம். இது என்னுடைய அனுமானம்தான். இது தவறாகவும் இருக்கலாம்.

எப்படியோ அரசியல் வாதிகள் யாரும் இல்லாத, கவிஞர்களால் நிரம்பியிருந்த ஒரு அறையில் கலைஞரை அருகில் சென்று பார்க்க முடிந்தது, அவருக்கு ‘சொல்லாத சொல்’ என்ற என் கவிதை நூலை நினைவு நூலாகக் கொடுக்க முடிந்ததில் எனக்கு சந்தோஷம்தான்.

அவர் 96ம் வயதில் மறைந்துள்ளார். நிறைவாக வாழ்ந்துவிட்டார். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்று சொல்வோமே அவற்றில் எதிலுமே குறையில்லாமல் அவர் வாழ்ந்து சென்றுவிட்டார் என்றே சொல்லவேண்டும்.

அவரது அரசியல் பற்றி கருத்துச் சொல்லும் அளவுக்கு எனக்கு விபரம் போதாது. ஆனாலும் அவரது ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உணர்ந்தார்கள் என்றே சொல்லவேண்டும்.

கலைஞருக்குப் பிறகும் சரி, அவர் பேச முடியாமல் இருந்தபோதும் சரி, அவருக்கு இணையான ஒரு தலைமையை அவர் ஏற்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. அவருக்கிருந்த தமிழோ, ஆளுமைத் திறனோ கட்சியில் உள்ள சிலருக்கு இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு முன்னுரிமை தரப்படவில்லை. இன்று முன்னிறுத்தப்படுகின்ற யாரும் அவருக்கு இணையானவர்கள் இல்லை என்றே தோன்றுகிறது.

நாடகம், திரைப்படம், வசனம், கடித இலக்கியம், கொஞ்சு தமிழ், ஆழமான இலக்கிய அறிவு, மயக்கும் மேடைப்பேச்சு, ஆட்சித்திறன் – ம்ஹும் கலைஞரின் இடத்தை நிரப்ப யாராலும் இயலாது என்றே தோன்றுகிறது.

எந்த இறைவனின் பெயரை சொல்லாலும் எழுத்தாலும் சொல்லாமல் வேண்டுமென்றே அவர் மறைத்தாரோ அந்த இறைவனின் அடியைச் சென்று சேர்ந்துவிட்டார். வேறு வழியின்றி.

அவரது இறுதி ஊர்வலத்தில் நிச்சயம் ஒரு லட்சம் பேராவது இருந்திருப்பார்கள். ’நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்’ (3:26) என்ற திருமறையின் வசனத்துக்கு ஏற்ப கலைஞர் மிகுந்த கண்ணியத்தோடு வாழ்ந்து மறைந்துவிட்டார்.

 

 

 

 

 

 

One Reply to “கலைஞர் என்றொரு பன்முகன்”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: