சகோதரர் மொழிப்பிரியன் அவர்களது மகனார் அக்ரம் இருநூறு மொழிகளில் அறிந்து வைத்திருக்கிறார், அம்மொழிகளில் டைப் செய்யவும் அவரால் முடியுமென்பதை நான் நேரில் சென்று அறிந்துகொண்டேன். அவரைப் பற்றிய பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் யூட்யூபில் காணக்கிடைக்கின்றன.
மொழிப்பிரியனின் வீட்டுக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தபோது, எப்போதிலிருந்து மகனுக்கு மொழிகள் பற்றிய அறிவை ஏற்படுத்த முயன்றீர்கள் என்று கேட்டபோது அவர் அம்மாவின் வயிற்றில் இருந்தபோதே என்று அவர் சொன்னது எங்களுக்கு ஆனந்தமான ஆச்சரியம் கொடுத்தது. கருவில் இருக்கும் குழந்தை மிக விரைவாகக் கற்றுக்கொள்ளும் என்றும் மொழிப்பிரியன் விளக்கினார். உலக மொழிகளை ஆன்லைனில் கற்றுக்கொடுக்கும் வேலையை அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார்! தமிழ், தெலுங்கு, மலையாளம் என இந்திய மொழிகளும் உண்டு.
சில ஊர்களில் அவருடைய நிகழ்ச்சிகளும் அரங்கேறியுள்ளன. மூளையின் வலது பக்கத்தைத் தூண்டி விரைவாகக் கற்றுக்கொள்ளும் ஆற்றலைப் பெறலாம் என்பதும் அவர் சொன்ன ஒரு முக்கியமான கருத்து. ஆனால் நாம் இரண்டு பக்கத்தையுமே பயன்படுத்தாதவர்களாக இருப்பதால் அது நமக்கு இன்னும் விளங்காமலே உள்ளது! நமது Global Spiritual Garden குழும உறுப்பினராகவும் அவர் உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. அவருக்கு ஏதாவது உதவிகள் செய்யவேண்டும் என்று நான் விரும்பினேன். அதற்கான சரியான தருணமாக இது உள்ளது என்று நினைக்கிறேன்.
நம் குழும உறுப்பினர்கள் அனைவரும் இதைப் படித்துவிட்டு ஒரு நாளைச் சொன்னால் நாம் அவரையும் அக்ரமையும் சென்னையில் சந்திக்கலாம். மேற்கொண்டு அவருக்கு என்ன மாதிரியான உதவிகள் செய்யலாம் என்று யோசிக்கலாம். செயல்படுத்தலாம். அதற்கு முன்னர் மொழிப்பிரியன் அனுப்பிய இந்த பதிவைப் படித்துப் பாருங்கள்:
ஜெர்மனி நாட்டு TV நிகழ்ச்சியில் அக்ரம் பங்கெடுப்பு
Small vs Big – the Unbelievable Duel என்ற ஜெர்மானிய நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றது. இதை i&u TV யானது வருடத்தில் 3 பிரிவுகளாக நடத்து வருகிறது. உலகத்தில் உள்ள திறமையான குழந்தைகளின் திறமையை வெளிப்படுத்தக் கூடிய ஒரு நிகழ்ச்சியாகும்.
இந்த நிகழ்ச்சியில் அக்ரம் கடந்த அக்டோபர் மாதம் கலந்து கொண்டு தன் திறமையை நிருபித்து நம் இந்தியாவுக்கும், குறிப்பாக தமிழர்களுக்கு பெருமை சேர்ந்தார். இதைப் பற்றிய முழு விபரத்தை பார்க்கலாம்.
கடந்த 2017, செப்டம்பர் மாதம் i&u TV யிலிருந்து அக்ரமிற்கு ஒரு Email வந்தது. உங்களுடைய சாதனையை youtube ல் பார்த்து ஆச்சரியப்பட்டோம். எங்களுடைய நிகழ்ச்சியில் கண்டிப்பாக பங்கெடுக்க வேண்டும் என்பதாக அம்மெயிலில் இருந்தது.
அக்ரமும் ரெடியாக இருந்தார். ஆனால் அக்ரமின் திறமை அவர்கள் வெளிப்படுத்துவதில் பல சிக்கல்கள் இருந்தன. காரணம் 400 மொழிகள் தெரிந்த வல்லுனர்களை வரவழைக்க வேண்டும். அதற்கான முயற்சிகள் செய்த பொழுது அத்தனை மொழிகள் அறிந்தவர்கள் கிடைக்கவில்லை. இதனால் அக்ரமின் திறமையை வெளிப்படுத்துவதற்கான முயற்சிகள் கேள்விக்குறியாக இருந்தன.
இச்சிறுவனை உலகம் அறியச் செய்ய வேண்டும் இப்படியே இச்சிறுவனை விட்டுவிடக் கூடாது என்று லட்சக்கணக்கான பணத்தைச் செலவிட்டு உலகம் முழுவதிலும் மொழி வல்லுனர்களை தேடி அவர்களை வரவழைப்பதற்கான முயற்சி செய்யப்பட்டது. அதன் படி 37 பேர்கள் அக்ரத்திற்கு போட்டியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
உலகத்தில் யாருக்குமே இல்லாத ஒரு தனித்திறமையை கடவுள் அக்ரமிற்கு கொடுத்திருக்கிறார் என்று உணர்ந்த அந்த டிவி நிகழ்ச்சியாளர்கள் பெரிய அளவிற்கு இதை செய்ய வேண்டும் எண்ணினர். அக்ரமின் தட்டச்சு திறமை உலகத்தில் யாருமே செய்ய முடியாத ஒரு திறமையாக இருப்பதால், அதிலே அவனை உலகத்திற்கு வெளிக்காட்ட தீர்மானித்தனர்.
அக்ரமிற்கு இவ்வளவு மொழிகள் அறிவது சாத்தியமா? அல்லது போலியான ஒரு விஷயமாக இருக்குமோ? என்ற சந்தேகங்கள் ஜெர்மனி நிகழ்ச்சி பொறுப்பாளர்களுக்கு ஏற்பட்டது. ஏனென்றால் லட்சக்கணக்கில் செலவு செய்தும் நிகழ்ச்சியின் பேர் கெட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அக்ரமை பரிசோதிப்பதற்காக 5 பேர் அடங்கிய குழு இந்த வருடம் ஏப்ரல் மாதம் சென்னை வந்தது. ஒரு வாரம் சென்னையில் தங்கியிருந்து அக்ரத்தை தினமும் காலையில் 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை எங்கள் வீட்டிலிருந்து பரிசோதித்துப் பார்த்தனர்.
கடவுளின் கிருபையால், அக்ரம் அவர்களின் எல்லா டெஸ்ட்களிலும் தேர்ச்சி பெற்று, கடைசியில் அவர்களுடைய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு தேர்வானான்.
அதன் படி அக்டோபர் மாதம் குடும்பத்தோடு ஜெர்மனி நாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அனைத்துச் செலவுகளையும் அவர்களே ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியன்று வரவேற்பாளராக பல நாடுகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர். போட்டி என்னவென்றால் ஜெர்மன் மொழியிலிருந்து அவர்கள் சொல்லும் மொழிக்கு அக்ரம் மொழிபெயர்த்து அந்த மொழியில் வேகமாக தட்டச்சு செய்ய வேண்டும். 3 நிமிஷம் அவகாசம் கொடுக்கப்படும். 3 நிமிஷத்தில் எத்தனை மொழிகளில் எத்தனை வார்த்தைகளை மொழிப்பெயர்த்து தட்டச்சு சரியாக செய்கிறாரோ அதற்கான point கள் கொடுக்கப்படும்.
போட்டியில் அக்ரம் தனக்கு கொடுக்கப்பட்ட 3 நிமிடத்தில் 24 மொழிகளில் மொழிபெயர்த்து, அதை தட்டச்சு செய்து காண்பித்தார். அதில் 18 மொழிபெயர்ப்புகள் சரியான பதிலாக இருந்தது.
அதே போல் 36 பேர் அடங்கிய உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த மொழியியல் வல்லுனர்களுக்கும் இதே போல் 3 நிமிடம் அவகாசம் கொடுக்கப்பட்டது. அவர்கள் எல்லோரும் சேர்ந்து, 3 நிமிடத்தில் 20 மொழிகளில் மொழிபெயர்த்து, தட்டச்சு செய்தனர் அதில் அக்ரம் செய்த 18 மொழிபெயர்ப்புகள் சரியான பதிலாக இருந்தது.
அக்ரமின் குடும்பம், அக்ரமை மேற்படிப்பு படிப்பதற்கு மிகவும் கஷ்டப்படுதை உணர்ந்த நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் அக்ரம் வெளிநாட்டில் படிப்பதற்காக ஒரு தொகையை தருவதாக அந் நிகழ்ச்சியிலே அறிவிப்பித்து செய்து, அங்கீகார லெட்டரை அக்ரமிற்கு பரிசாக வழங்கினர்.
மேலும் அக்ரம் ஒரு வாரம் ஜெர்மனியை சுற்றிப்பார்த்து அழகாக ரசிப்பதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. எதிர்காலத்தில் அக்ரமிற்கு ஜெர்மனி சார்பாக எல்லா உதவிகளும் செய்யப்படும் என்றும் சொல்லப்பட்டது.
வந்திருந்த மொழியியல் வல்லுனர்கள் அனைவரும் அக்ரமை பாராட்டினர். குறிப்பாக UKவில் இருந்து வந்திருந்த Twins Polyglot சகோதர்களான மாத்யூ மற்றும் மைக்கேல் இருவரும் மிகவும் பாராட்டி கொண்டே இருந்தனர். இவர்களுடைய வீடியோ யூட்யூபில் நிறைய உள்ளது. ஏனென்றால் அவ்விருவருக்கும் 25 மொழிகள் தெரியுமாம். எங்களுக்கே மிக கஷ்டமாக இருக்கிறது. நீ எப்படி இதையெல்லாம் ஞாபகம் வைத்திருக்கிறாய் என்று ஆச்சிரியமாக கேட்டார்கள்.
திறமைசாலிகள் ஊக்கவிக்கப்பட வேண்டும் என்பதற்காக இந் நிகழ்ச்சியை நடத்துவதற்கு பல நாடுகளிலிருந்து மொழியியல் வல்லுனர்களை கொண்டுவருவதற்கு பல லட்சங்கள் செலவாகியது. இதுவரை, எங்களுக்கு 50 லட்சத்திற்கு மேல் செலவு ஆனாலும், அக்ரம் உடைய திறமையை வெளிக்கொண்டு வருவதற்காகவே நாங்கள் நடத்தினோம். அதுவும் நாங்கள் நடத்திய நிகழ்ச்சியில் அதிக செலவு உள்ள நிகழ்ச்சியாகவும், அதிக மக்கள் ஆர்வத்தோடு பார்க்க துடிக்கும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்தது என்று ஆனந்தப்பட்டனர். நிகழ்ச்சியானது வருகிற டிசம்பர் மாதம் 15 ந் தேதி இரவு ஒளிபரப்பாக உள்ளது.
எங்களுடைய நாட்டில் இந்த பையன் பிறந்திருந்தால் நாங்கள் இந்நேரம் அவனை வேற விதத்தில் உருவாக்கி பெரிய இடத்திற்கு கொண்டு போய் இருப்போம். வெளிநாட்டில் சென்று படிப்பதற்கும், இந்தியாவில் கூட மேற்கொண்டு அவனுடைய பயணத்தைத் தொடர பணம் இல்லை என்று அக்ரம் சொன்ன வார்த்தை எங்களுக்கு கண்ணீரை வரவழைத்தது.
உங்களுடைய நாட்டில் ஏன் இந்த சிறுவனை ஊக்கப்படுத்தி, உதவி செய்யவில்லை என்று வருத்தத்தோடு கேட்டனர்.
இவ்விதம் முடிகிறது அக்ரமின் தந்தை மொழிப்பிரியனின் சிறு கட்டுரை. இனி ஆர்வமுள்ளவர்கள், எங்கிருந்தாலும் திறமையை வளர்க்க விரும்புபவர்கள், தர்மம் செய்வதில் நாட்டமுடியவர்கள் என அனைவரும் அவருக்கு உதவலாம். ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன்.
இதை நம் குழும உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி, இதை ஒரு கட்டுரையாக என் இணையப்பக்கத்தில் ஏற்றி என் முகநூல் பக்கத்திலும், கூகுள் ப்ளஸ் பக்கத்திலும் இணைக்கிறேன். ட்விட்டும் செய்கிறேன். இன்ஷா அல்லாஹ் நல்லது நடக்கும். நம்பிக்கையோடு இருப்போம்.
மொழிப்பிரியனின் அலைபேசி எண்கள்: 96003 62628/96003 62627/97899 60549
அன்புடன்
நாகூர் ரூமி
We also share and spread this message to all