இதயமே இதயமே

Me with Dr Hegde-02

சென்ற 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எனக்கு முதன் முறையாக ஹார்ட் அட்டாக் வந்தது. அதுபற்றி விரிவாக நான் ‘பூனைக்கும் அடி சறுக்கும்’ என்ற தலைப்பில் ஒரு நீண்ட பதிவை என் வலைத்தளத்தில் போட்டிருந்தேன். உங்களில் பலர் படித்திருக்கலாம்.

உடலே உடலை சரிசெய்துகொள்கிறது என்ற உண்மை புரிந்துவிட்டதால் நான் மாத்திரை மருந்துகளையெல்லாம் விட்டு ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன. இதுபற்றி நான் ‘நலம் நலமறிய ஆவல்’ என்ற தலைப்பில் தினமணி ஜங்ஷனில் 56 வாரங்கள் தொடராக எழுதிய கட்டுரைகளை அவர்களே, அதே தலைப்பில் நூலாகக் கொண்டு வந்ததும் உங்களுக்குத் தெரியும்.

சில மாதங்களுக்கு முன்பு நான் சிங்கப்பூர் சென்றிருந்தபோது மூன்று நான்கு முறை எனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. நான் ஒன்றும் செய்யவில்லை. வலியை கவனித்துக் கொண்டிருந்தேன். என் வழக்கம்போல. என் குருநாதர் ஹஸ்ரத் மாமா மர்ஹூம் அப்துல் வஹ்ஹாப் அவர்கள் சொல்லிக்கொடுத்தது போல. சிங்கையிலிருந்த என் தம்பிகள், குடும்பத்தினர் அனைவரும் சிங்கப்பூரிலேயே நல்ல டாக்டர்கள் இருக்கிறார்கள் காட்டிக்கொள்ளலாம் என்று எவ்வளவோ வற்புறுத்தியும் நான் மசியவில்லை.

ஊருக்கு வந்ததும் அவர்களோடு இருந்த பிடிவாதத்தை என் மகள்களிடம் காட்ட முடியவில்லை! குறிப்பாக இரண்டாவது மகள்! அவள் நான் இந்தியா வந்திறங்கு முன்னரே எனக்கு ஏற்கனவே பார்த்த டாக்டர் பிரும்மானந்தம் அவர்களிம் பேசி ‘அப்பாயிண்ட்மெண்ட்’ வாங்கிவிட்டாள்!

நான் அவரிடம் காட்டக்கூடாது என்ற முடிவோடு இருந்தேன். எனக்கு ஏன் மறுபடி அப்படி வந்தது என்று தெரிந்துகொள்ளவும் விருப்பமிருந்தது. எனவே நண்பர்கள் சிலர் வற்புறுத்தியதன் பேரில் நான், நண்பர்கள் காசிம், ராஜேஷ், பிலால் ஆகியோரும், என் மனைவியும் ரொம்ப கேட்டுக்கொண்டதன் பேரில் பில்ரோத் மருத்துவ மனையில் ராஜேஷுக்குத் தெரிந்த ஒரு டாக்டரிடம் காட்ட அழைத்துச் சென்றனர்.

அன்று அங்கு பயங்கர கூட்டமாக இருந்தது. வழக்கத்து மாறான கூட்டம். நான் வரப்போகிறேன் என்று தெரிந்துவிட்டது போலும்! கடைசியில் ராஜேஷின் இன்ஃப்ளுவன்ஸைப் பயன்படுத்தி ஈஸிஜி எக்கோவெல்லாம் எடுத்துக்கொண்டு ஒரு டாக்டரைப் போய்ப்பார்த்தோம்.

பிபி ரொம்ப அதிகமாக இருப்பதாகவும், அதனால் அந்த பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என்றும் சொன்னார். பிபி என்பது ஏறி இறங்கக்கூடியதுதானே, அது எப்படி ஒரே மாதிரியாக பல நாட்களுக்கு இருக்குமென்று கேட்டேன். அது சரிதான், ஆனால் உங்கள் ஈஸிஜி அப்படித்தான் சொல்கிறது என்று சொன்னார். சரி இப்போது என்ன செய்யலாம் என்று கேட்டபோது, TMT செய்யலாம் அல்லது ‘செக் ஆஞ்சையோ’ செய்யலாம் என்றார். ட்ரெட்மில் டெஸ்ட் எனக்கு சரிப்படாது. அது என்ன ‘செக் ஆஞ்சையோ’ என்று கேட்டேன். மீண்டும் ஆஞ்சையோகிராம் செய்து மீண்டும் அடைப்பு உள்ளதா என்று பார்க்கலாம் என்று அர்த்தம் என்றார். அதாவது, மீண்டும் சில லட்சங்களுக்கு செலவு வைக்க திட்டம் என்று பொருள்!

சரி, இரண்டு நாளில் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டோம். என்ன செய்யலாம் என்று யோசித்தேன். டாக்டர் ஹெக்டேவையே கன்ஸல்ட் செய்தால் என்ன என்று ஒரு ஃப்ளாஷ்! அல்ஹம்துலில்லாஹ். ஆனால் அவர் பார்க்கிறாரா, இந்தியாவில்தான் இருக்கிறாரா என்று தெரியவில்லையே என்றெல்லாம் குழப்பங்கள் இருந்தன. ஏற்கனவே அவருக்கு ஒரு மெயில் கொடுத்து அவர் அதற்கு பதிலும் கொடுத்திருந்தார். எனவே அவருக்கே ஒரு மெயில் கொடுத்தேன்.

மறுநாளே பதில் வந்தது. ஆழ்வார்பேட்டையில் ஒரு க்ளினிக் முகவரி கொடுத்து அங்கே மாதாமாதம் வருவதாகவும், முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் என்றும் பதில். மறுநாளே அந்த எண்ணுக்கு அழைத்தேன். யாருமே எடுக்கவில்லை. அது என்ன முகவரி என்று இணையத்தில் தேடினேன். அது ஒரு கைனகாலஜிஸ்ட்-டின் கிளினிக் என்பதாக இணையம் சொன்னது! அடடா, நான் இன்னும் பால் மாறவில்லையே, எனக்கு குழந்தையும் உண்டாகவில்லையே என்று குழப்பமாக இருந்தது! மீண்டும் ஹெக்டேக்கு மெயில் கொடுத்தேன்.

அது சரியான முகவரிதான், அது அவர்களின் ஆராய்ச்சிக்கூடம் என்றும், அங்கேயே வருமாறும், காலை 11 முதல் மாலை 5 வரை எடுப்பார்கள் என்றும் பதில் கொடுத்தார். மறுநாள் காலை பத்து மணிக்கே அழைத்தேன். ஒரு சகோதரி எடுத்தார். கேட்டேன். ஆமாம் டாக்டர் ஹெக்டே பார்க்கிறார், பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று கூறினார். செய்தேன். அப்பாடா என்றிருந்தது. அது மாதக்கடைசி. அதோடு நான் ஏற்கனவே அழைத்தபோது அவர்கள் ஏன் எடுக்கவில்லை என்று அப்போதுதான் விளங்கியது. நான் அழைத்தது ஒரு ஞாயிறு அன்று!

அடுத்த மாதம், அதாவது சென்ற மாதம், ஒன்னாம் தேதியே மீண்டும் அழைத்து, டாக்டர் ஹெக்டே எப்போது வருகிறார் என்று கேட்டேன். அவர் வந்து போய்விட்டார் என்றார்கள்! என்னம்மா, நான் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்தேனே என்றேன். ஆமாம், ஆனால் ஒரு மாதத்தில் ஒரு நாளில் 20 பேர்களைத்தான் பார்ப்பார், நீங்கள் 35வது ஆள், எனவே அடுத்த மாதம்தான் அழைக்க முடியும் என்றார்!

இன்று காலை 10.30 மணி அளவில் அங்கே சென்றோம். பார்த்தார். அவரேதான். சார், நான் உங்கள் ரசிகன், உங்களது பல வீடியோக்களை பார்த்திருக்கிறேன், உங்களுக்கு என் ஆங்கிலப் புத்தகம் ஒன்றுகூட அனுப்பி வைத்தேன் என்றேன். அப்படியா என்றார். ஞாபகம் வந்த மாதிரி தெரியவில்லை.

பின்னர் ஈஸிஜி, பிபி எல்லாம் செக் செய்தார்கள். அவர் என்னைப் படுக்கச் சொல்லி, ஸ்டெத் வைத்துப் பார்த்தார். வாயைத்திறந்து மூச்சு விடச்சொன்னார். பாதங்களை மேலும் கீழும் ஆட்டச் சொன்னார். சாய்ந்து உட்காரச் சொன்னார். அவ்வளவுதான். ஒன்றுமில்லை, நன்றாக இருக்கிறீர்கள் என்று சொன்னார்.

அசைவ உணவு பற்றிக் கேட்டபோது கொஞ்சமாக, வாரம் ஒரு முறை எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னார். சாப்பாட்டு நெய் எனக்கு மிகவும் பிடிக்குமென்று சொன்னபோது, அது நல்லதாயிற்றே என்றார் ! நான் வெற்றிப் புன்னகை பூத்தேன். என் மனைவியில் முகத்தில் தோல்வி வடிந்தது! அவள்தான் எனக்கு நெய் தராமல் இருக்கிறாள்! நெய்யான, ஸாரி, மெய்யான அக்கறை!

தூக்கமின்மை பற்றிக் கேட்டேன். குறைந்தது நான்கு மணி நேரமாகவது தூங்கிவிடுங்கள் என்றார். நண்பர் ஹீலர் உமரும் இதைத்தான் சொன்னார். அவர் இன்னும் விளக்கமாக இரவு 11-லிருந்து காலை 3 வரை படுத்து உறங்க வேண்டும், அல்லது படுத்தாவது இருக்கவேண்டும். அப்போதுதான் நம் லிவரானது அன்றையை கழிவுகளை எல்லாம் வெளியேற்ற உதவியாக இருக்கும் என்று சொன்னார்.

ஏப்பம் வருகிறதே என்ற என் மனைவியின் கேள்விக்கு அது anxiety-யின் விளைவு என்று சொன்னார். படபடப்பில் என் இதயம் குதிரை மாதிரி ஓடுவதாகவும், அந்த படபடப்பு தேவையில்லை என்றும் சொன்னார்.

நிம்மதியாக வெளியில் வந்தோம். முக்கியமாக என் குடும்பத்தினர். அப்படியானால் நான் நிம்மதியாக இல்லையா என்று கேட்கக் கூடாது. நான் ஏற்கனவே நிம்மதியாகத்தான் இருந்தேன். ஹெக்டே அவர்களைப் பார்த்ததுகூட அவர்களைத் திருப்திப்படுத்தத்தான்.

ஒருநாள் போய்விடுவோம். அது இறைவனின் கட்டளை. அதை எந்த டாக்டராலும் தடுக்க முடியாது. ஆனால் அதுவரை எப்படி வாழப்போகிறோம் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். அதை இறைவன் நம்மிடமே விட்டுவிட்டான்.

முடிவை நான் ஏற்கனவே எடுத்துவிட்டேன். புரிகிறதல்லவா?

அன்புடன்

நாகூர் ரூமி

 

 

 

10 Replies to “இதயமே இதயமே”

 1. உளம் திறந்து உண்மையைப் பேசும் உன்னத மனிதர் பேராசிரியர் டாக்டர் நாகூர் ரூமி அவர்கள்…

  பல மக்களின் பிரார்த்தனை உங்களுக்கு இருக்கிறது. வலிமையான ஆயுதம் பிரார்த்தனை. நீங்கள் வலிமையான ஆயுதங்களால் சூழப்பட்டிருக்கிறீர்கள்.

 2. “எவ்வளவு அடித்தாலும் வலிக்காத மாதிரியே” என்ற வடிவேல் டயலாக் மாதிரி எந்த வலியையும் இயல்பாய் லேசான நகைச்சுவை யுடன் எதிர்கொள்ளும் வலிமை கண்டு நெகிழ்கிறேன் ஐயா! தங்களுக்கு இறையருள்என்றும் துணைநிற்க வேண்டுகிறேன்.

  1. Please call 044 2499 2484 This is Chennai Alwarpet clinic number and to this clinic Dr Hegde comes every month once and fix an appointment with Dr Hegde.

 3. இந்த ரணகளத்திலையும் ஒரு நகைச்சுவை!!

  உங்கள் நகைச்சுவை உணர்வுக்காகவே பல்லாண்டு
  வாழ்வீர்கள்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: