சீர்காழி தாஜ் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியது மறைந்த கவிஞர் ஜஃபருல்லாஹ் நானா. இந்த அறிமுகம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்று நினைக்கிறேன். பின்னர் தாஜ் எனக்கு மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவராகிப் போனார். ஒன்று சீர்காழியில் நான் அவர் வீட்டுக்குப் போவேன். அல்லது அவர் திருமுல்லைவாசலுக்கு என் மனைவி வீட்டுக்கு வருவார். (அது நான் வேலை தேடிக்கொண்டு மனைவி வீட்டில் இருந்த காலம்)!
ஒரு ஃபோன் செய்தால் போதும் நாகூருக்கும் வந்து என்னைப் பார்ப்பார். அவ்வளவு அன்பும், மரியாதையும். அவரோடு சாதிக் என்று ஒரு இளம் தம்பியும் இருப்பார். அவர் அப்போது வெளிநாட்டில் – துபாய் என்று நினைவு – வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நாங்கள் சந்தித்தால் கவிதை, நாவல், சிறுகதை என இலக்கியம் பேசுவோம். அப்போதெல்லாம் தாஜ் சிகரட் அதிகமாகப் பிடிப்பார். ரொம்ப காலம் அந்தப் பழக்கம் அவரிடமிருந்தது.
ஒருமுறை ஜஃபருல்லாஹ் நானா வீட்டுக்கு தாஜும் நானும் சென்றிருந்தோம். அது நோன்பு மாதம். நான் சிகரட் பிடிக்கலாமா என்று தாஜ் ஜஃபருல்லாஹ் நானாவிடம் கேட்டார். அதற்கு நானா அவருக்கே உரிய பாணியில், ‘நீங்கள் நோன்பில்லையல்லவா? நீங்கள் பிடிக்கலாம். நான்தான் பிடிக்கக் கூடாது’ என்றார்!
இன்று (22 ஜனவரி 2019)மாலை ஒரு அலைபேசி அழைப்பு என் மனைவிக்கு வந்தது. சீர்காழி தாஜ் வஃபாத்தாகிவிட்டார் என்று ஒரு சகோதரி சொன்னார். ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. அவரது அலைபேசி எண்ணுக்கு போட்டுப்பார்த்தேன். ஸ்விட்ச் ஆஃப் என்று சொன்னது. உடனே துபாயில் உள்ள நண்பர் ஆபிதீன் இதுபற்றி ஏதாவது அவரது கூகுள் ப்ளஸ்ஸில் ஏதாவது சொல்லியுள்ளாரா என்று போய்ப்பார்த்தேன்.
நேற்று மாலையே வஃபாத்தாகிவிட்டதாகவும் இன்று மாலை நல்லடக்கம் என்றும் எழுதி வருத்தப்பட்டிருந்தார். அவருக்கு என்னைவிட தாஜ் நெருக்கமாக இருந்தார். புத்தகக் கண்காட்சிக்குப் போனபோதுகூட ஆபிதீனின் ‘உயிர்த்தலம்’ கதைத் தொகுதியை தூக்கிப் பிடித்து ‘போஸ்’ கொடுத்துக் கொண்டிருந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு நான் அவரோடு கடைசியாகப் பேசினேன். அவருக்கு சுகர் இருப்பதாகக் கேள்விப்பட்டு, அது ஒரு நோயே அல்ல, அதை எப்படிக் குணப் படுத்துவது என்று நான் நேரில் வந்து விளக்குகிறேன் என்று சொன்னேன். சுகர் ஒரு நோயே இல்லையாம் என்று நான் சொல்வதாக யாரிடமோ சொல்லிக்காட்டினார். ஃபோனில் எனக்கது காதில் விழுந்தது. நான் கடைசியாகக் கேட்ட அவரது குரல் அதுதான்.
சமீபத்தில் நாகூருக்குப் போயிருந்தேன். திரும்பி வரும்போது எப்போதும் கார் பைபாஸ் வழியாகத்தான் போகும். ஆனால் இந்த முறை அவர் வீட்டு வழியாகப் போனது. ஒரு அழகான, இயற்கை அழகு மிக்க வீடொன்றை அவர் கட்டியிருந்தார். அதைத்தாண்டி எங்கள் கார் போகும்போது ஒரு கணம் இறங்கி கொஞ்ச நேரம் பார்த்து விட்டுப் போகலாமா என்று தோன்றியது. ஆனாலும் செய்யவில்லை. அவர் மௌத் செய்தி கேட்டதிலிருந்து அது என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது. எனக்கு கனமான உறுத்தலைக் கொடுத்துவிட்டு அவர் போய்விட்டார்.
அவருடைய எழுத்தில் ஒரு குழந்தைத்தன்மை இருக்கும். அவருடைய அபரிமிதமான எழுத்துப்பிழைகளில் அது தெரியும். அப்படி எழுதுவதை அவர் விடவே இல்லை. கடல் உப்புக்கரிப்பதுபோல.
இம்மையிலிருந்து மறுமைக்குச் சென்றுவிட்டார். மறுமையில் இறைவன் அவரை தன் அருள் கொண்டு அணைத்துக்கொள்வானாக, ஆமீன். அவர் பல கவிதைகளையும், கதைகளையும், நாடகமும் எழுதியுள்ளார். அவற்றிலிருந்து அவர் தாயைப் பற்றியும், மனைவி பற்றியும் எழுதியதை இங்கே தருகிறேன். அதன் பிறகு தன் திருமண நாளைப் பற்றியும் அவர் எழுதியுள்ளார். அதையும் அப்படியே தருகிறேன். எந்தத் திருத்தமும் செய்யாமல். படித்து விட்டு அவருக்காக துஆ செய்யுங்கள்:
மனைவி பற்றிய தாஜ் கவிதை. எல்லா கணவர்களுக்கும் இதை சமர்ப்பிக்கிறேன். எனக்கும் சேர்த்து:
”அவள் சொன்னாலென்றாள்
எப்பவும் சரியாகத்தான் இருக்கும்.
ஒன்றை இரண்டென்றாலும்….
இரண்டை ஒன்றென்றாலும்…!!”
# அவரவர்களின் உலகம்…!
கவிதை / மீள்பதிவு / தாஜ்
———————————-
அம்மா எனக்கு நேர்
வகிடெடுத்து சிங்காரித்த
குழந்தைப் படம் –
உச்சி முகர்ந்த தந்தையுடன்
விழிப் பிதுங்கும் குண்டுப்
பையன் படம் –
பல்லெல்லாம் போனயென்
பாட்டியோடு
வாய்விட்டு சிரிக்கக் காட்டும்
அரும்பு மீசை படம் –
சம்பாத்திய மிடுக்கும்
பச்சை ஜொலிப்புமாய்
என்னவளோடு மகிழும் படம் –
ஈன்ற மழைகளிடம்
முத்துக்கள் சிந்தியப்
பதிவுகளையும் சேர்க்க
வண்ணமென ஒருபாடு
பத்திரப் படுத்தியிருக்கிறேன்
இன்றைய அழகைத் தவிர.
நான் சில மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் பூங்காவில் என் மகளுக்காக ‘போஸ்’ கொடுத்தேன். அது பற்றியும் தாஜ் எழுதியிருக்கிறார். இதோ அது:
Taj Deen
October 29, 2018 ·
ஆங்கில பேராசிரியரும் – நண்பருமான –
நாகூர் ரூமி என்கிற முகம்மத் ரஃபி….
மாணவர்களுக்கு…
ஷேக்ஸ்பியரின் நாடகமான ‘ஒத்தலோ’ நடத்துகிறார்!
# மற்றப்படி வேறு ஒண்ணுமில்லிங்க……
16.09.2018 – திருமணநாள்….
———————-
இரவு எட்டுக்கெல்லாம் ஊரில் நல்ல மழை. மறுநாள் என் திருமணம். உறவுகள் வர தொடங்கி இருந்தனர்.
இரவு 9.30-க்கு ‘நாள் விடுவது’ என்றோர் சடங்கு. ஊர் ஹஜிரத், நாட்டாண்மை பஞ்சாயத்துக்காரர்கள் பெரியோர்கள் என்று எல்லோரும் வந்திருந்து எனக்கு ஆசி வழங்கி – மறுநாள் நடக்கும் என் திருமணத்தை சிறப்புற நடத்துவது குறித்தான நிகழ்வை பேசி தீர்ப்பார்கள்!
என்னை நடு நாயகமாக உட்காரவைத்துதான் அந்த நிகழ்ச்சியை நடத்துவார்கள். தங்கத்தில் நெய்யப்பட்ட துணியால் ஆன மாதிரியான பாங்கில் தகடுமாதிரியான சட்டையை தம்பி மலேசியாவில் இருந்து இந்த நிகழ்வுக்கு நான் அணியவென்றே கொண்டுவந்து என்னை கட்டாயப் படுத்தினான்.
நான் வேண்டாம் என்றும் அவன் விடவில்லை. அதனைதான் அணிந்து சபையில் அமர்ந்தேன். மழை கொஞ்சம் குறைந்த மாதிரி இருந்தது. – என்றாலும் மழை விடவில்லை. அந்த மழையிலேயே அந்த நிகழ்வு நட்தேறியது.
அடுத்து மருதாணி சாந்தை என் விரல்களில் இட்டும் சடங்கு. நான் மாடிக்குப் போய், கல்யாணப் பந்தலில் படபடவென்று கொட்டி தீர்க்கும் மழையை கிளிக் செய்தவனாய் புகைப் பிடித்து கொண்டு இருந்தேன். என் அம்மா என்னை தேடிக் கொண்டு – அந்த இருட்டிலும் – மாடிக்கு வந்து சேர்ந்தார்கள்.
“என்னடா தாஜ் இப்படி பெய்யுது?”
“என்னைக் கேட்டா?”
“ஊர் விட்டு ஊர் வரும் உறவினர்கள் பாடெல்லாம் கஷ்டமாச்சேடா.”
“……..”
“இனிமேதான் ஆடு அறுக்கணும், பண்டாரி சமைக்கணும், நாளைக்கு ஊர் சோறுவேறு கொடுத்தாகணும்!”
“ஏம்மா இதையெல்லாம் என்கிட்டே சொல்றே. நான் என்னத்தே செய்யமுடியும்?”
“நம்ம ஒண்ணு சொன்னா… இவன் ஒண்ணு சொல்வான்.”
“………..”
“மழையையே நல்லா போட்டோ எடுத்துகிட்டு இருடா. இப்ப அதான் கொரைச்சல். வரும் பொண்ணுக்கு உல அரிசியெ தின்கும் பழக்கம் இருக்குமோ என்னவோ…? இப்படி ஊத்துதே! ரோட்ல தேங்காவெ போட்டு உடைச்சா மழை நிக்கும் என்கிறார்களே….”
“போங்க கீழ. மழை பேஞ்சா நம்ம என்ன செய்ய முடியும்?”
“நான் ஓங்கிட்ட வந்து சொன்னேன் பாரு. நீ கீழ வா, உன் ஆச்சிம்மா சம்சுநிஷா மருதாணி அரைச்சு வச்சுகிட்டு உன்னைக் கூப்பிடுறா.”
அம்மா கீழே போனார்கள். மழை நின்ற பாடில்லை. என் மனசுக்குள்ளும் வர இருக்கிற மனைவி மேலே கடுப்பு. எங்க அம்மா சொல்கிற மாதிரி ‘உலையில போடுற புழுங்க அரிசியை சாப்பிட்டும் பழக்கம் கொண்டவளா இருப்பாளோ!?’ நினைத்தேன்.
கீழே போய், மருதாணி இட்டுக் கொண்டு, மூலையில் பாய்போட்டு படுத்துவிட்டேன். முற்றத்தில் மழையின் சப்தம்.
ஆமாம் மழை விடவில்லை விடியவிடிய பெய்துகொண்டே இருந்தது.
மறுநாள் கல்யாண தினம். மழைச் சப்தத்தில்தான் விழித்தேன். அன்று நான் எந்தப் புத்தாடை அணிந்தாலும் மழை சேர் படிந்து பாழ்!
மழை பெய்ய பெய்ய பண்டாரி சமைத்திருந்தார். ஊர் முழுக்க ஊர் சோர் எனும் ‘ஜகான் சோர்’ அணுப்பி கொண்டிருந்தார்கள்.
பள்ளிவாசலில் வைத்து நிக்காஹ் முடித்து,
நனைந்த கோலமாய் பெண் வைக்கப்பட்டிற்கும் வீட்டு அறைக்குள் அனுமதித்தார்கள். ஈரம் சொட்டச் சொட்ட வெடவெடத்த கரத்தோடு மனைவியின் கையைப் பிடித்து, சற்றைய நாழிக்கெல்லாம் குனிந்த அவள் முகத்தை நிமிர்த்தி பார்த்தேன். மழையில் கொண்ட அவஸ்த்தையெல்லாம் ஓடோடிவிட்டது!
நான் / நகுலன்
————————–
எனக்கு யாருமில்லை
நான்
கூட…
இவ்வளவு பெரிய
வீட்டில்
எனக்கு இடமில்லை
இவ்வளவு
பெரிய நகரத்தில்
அறிந்த முகம் ஏதுமில்லை
அறிந்த முகம் கூட
மேற் பூச்சுக் கலைய
அந்நியமாக
உருக்காட்டி
மறைகிறது
என்னுருவங்
கலைய
எவ்வளவு
காலம்
கடந்து செல்ல வேண்டும்
என்ற நினைவுவர
”சற்றே நகர்”
என்று ஒரு குரல் கூறும்.
=========
இந்தக் கவிதையை நான் அவருக்கே சமர்ப்பிக்கிறேன்.
கண்ணீருடன்
இம்மையில் இருந்துகொண்டு
மறுமையைப் பற்றி யோசித்துக்கொண்டே இருக்கும் நண்பன்
நாகூர் ரூமி
உருக்கமான பதிவு. நெருக்கமானவர்கள் பிரிவு எவ்வளவு வலியை தருகிறது. முன் பின் தெரியாத எனக்கே இப்படி என்றால்…….
இறைவன் அவருக்கு சுவனத்தையும், அவரின் பிரிவால் வாடும் தங்களுக்கும், யாவருக்கும் பொறுமையையும் தரட்டும். ஆமீன்