மௌலான ரூமிக்கு தத்துவக் கவிதைகளால் ஒரு பொன்னாடை

அண்ணன் தமிழன்பன் அவர்கள் நேற்று அலைபேசினார். மௌலானா ரூமியை தான் அடிக்கடி போய்ப் பார்த்ததாகவும், ரூமியோடு பேசிய பேச்சுக்களையும், கேட்ட கேள்விகளையும், ரூமி சொன்ன பதில்களையும் புதுக்கவிதைகளாக வடித்திருப்பதாகவும் சொன்னார்.

என்ன புரியவில்லையா? கற்பனையில்தான்! ரூமியும் நானும் என்ற இந்த கவிதைத்தொகுப்பு நவீன தமிழிலக்கியத்துக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் என்று துணிந்து சொல்வேன்.

இந்த கொரோனா ஊரடங்கு காலம் அண்ணன் தமிழன்பன் அவர்களுக்கு அற்புதமானதொரு வாய்ப்பைக் கொடுத்துள்ளது. தமிழன்பன் அவர்கள் கொரொனாவுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்! கவிதைளை எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தார். கோப்பைத் திறந்து படிக்கத் தொடங்கியவன் ஒரே மூச்சில் முடித்துவிட்டுத்தான் இங்கே வருகிறேன்!

அவ்வளவு சுவை! அத்தனையும் தத்துவச் சுவை! தத்துவார்த்த மனம் கொண்டவர்களுக்கு மட்டுமே இது புரியும். (எப்படி தத்துவார்த்த மனம் கொண்டவர்கள் மத்தியில் நான் என்னையும் நுழைத்துக்கொண்டேன் பார்த்தீர்களா?!)

அதைப்படித்தபோது எனக்கு கவிக்கோ அவர்களின் நினைவுதான் வந்தது. அவர் இருந்திருந்தால் தமிழன்பன் நிச்சயம் அவரிடம் முன்னுரை வாங்கியிருப்பார். கவிக்கோவின் இடத்தை நான் நிரப்புகிறேன் என்று சொல்வதாக தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். யாருடைய இடத்தையும் யாராலும் நிரப்ப முடியாது. அவரவர் இடம் அவரவர்க்கே உரியது.

ஆனால் மௌலானா ரூமி மீதும், மஸ்னவி ஆன்மிகக் காவியத்தின் மீதும் காதல் கொண்ட சிலரில் அவரும் ஒருவர். மௌலானா ரூமி பற்றி இந்தியாவில் யார்யாரெல்லாம், எந்தெந்த மொழியில் எழுதியுள்ளார்கள் என்று ஒரு பேராசிரியர் ஒரு ஆய்வு நடத்தினார். அந்தக் காலகட்டத்தில்  தமிழில் மௌலானா ரூமி பற்றி யாருமே எழுதியிருக்கவில்லை. என்னுடைய ’கவிஞானி ஜலாலுத்தீன் ரூமியின் கதைகள், கவிதைகள்’ என்ற ஒரு நூல் மட்டுமே சந்தியா பதிப்பக வெளியீடாக வந்திருந்தது.

அது பற்றி என்னிடம் பேச அந்த பேராசிரியரையும் அழைத்துக்கொண்டு கவிக்கோ அண்ணன் அப்போது பெசன்ட் நகரில் இருந்த என் வீட்டுக்கே வந்துவிட்டார்! வந்து குறிப்புகளெல்லாம் எடுத்துக்கொண்டுதான் போனார்கள். ரூமியின்மீது கவிக்கோ எவ்வளவு காதல் கொண்டிருந்தார் என்று ஃபஹீமிய்யா ட்ரஸ்ட் வெளியிட்ட மஸ்னவி வெளியீட்டு விழா காணொளிகளைக் கண்டால் தெரியும். தமிழன்பனின் இந்த நூல் வெளிவந்தவுடன் நிச்சயம் அவரது ஆன்மா சந்தோஷப்படும்.

சரி, மீண்டும் ’ரூமியும் நானும்’ நூலுக்கு வருவோம். இதில் மௌலானா ரூமியைத் தினமும் தான் சென்று அவர் வீட்டில் பார்ப்பதாகவும், அவரோடு பேசுவதாகவும், சில கேள்விகள் கேட்டு, அவற்றுக்கு ரூமியின் பதில்களை வாங்குவதாகவும் செல்கின்றன இக்கவிதைகள்.  

கற்பனைதான் எத்துனை மகத்தான அருட்கொடை! ரூமியை இதுவரை வேறு யாரும் இவ்வளவு நெருக்கமாகப் புரிந்துகொண்டிருப்பார்களா என்ற கேள்வியை முன் வைக்கும் கவிதைகள் இவை. தமிழன்பன் அவர்களுக்கு இயல்பாகவே ஒரு தத்துவார்த்த மனம் இருப்பதும் இப்படிப்பட்ட கவிதைகளை அவர் எழுதியிருப்பதற்குக் காரணம் என்று நான் சொல்வேன். ஏற்கனவே தத்துப்பித்துவம் என்ற தலைப்பில் ஒரு சிறு தத்துவார்த்த நூலை அவர் எழுதியுள்ளார்.  எனவே இப்போது ரூமியுள் திளைத்து அந்த அனுபவம் தத்துவார்த்தக் கவிதைகளாக வெளிப்பட்டிருப்பதில் வியப்பில்லை.

கவிதைகள் என்ன சொல்கின்றன? சுருக்கமாகச் சொல்வதானால், செருப்பு, நீண்ட தொப்பி, அதாவது தலைப்பாகை, புல்லாங்குழல், மீன், தண்ணீர், காதல், இறப்பு போன்ற விஷயங்களை மையமாக வைத்து கவிதைகள் எழுதப்பட்டுள்ளன.

ரூமி எப்படி எழுதுவார் என்று அவரது மிகச்சிறந்த படைப்பான ‘மஸ்னவி’ காவியம் மூலமாக இந்த உலகம் அறியும். ஆனால் ரூமி தனிப்பட்ட  முறையில் எப்படிப் பேசுவார் என்று யாருக்காவது தெரியுமா? தமிழன்பனுக்குத் தெரியுமென்று நான் சொல்வேன்! அல்லது தமிழன்பன்களுக்குத் தெரியும் என்றும் சொல்லலாம்!

நான் என்ன சொல்ல வருகிறேன் என்று தத்துவார்த்த மனம் கொண்டவர்களுக்கு நிச்சயம் புரியும். இப்படிச் சொல்வதைவிட, முரணழகின் மகத்துவம் புரிந்தவர்களுக்கு எளிதாகப் புரியும் என்றும் சொல்லலாம்.

சமீபத்தில் ’மஸ்னவி’யின் ஆறு பாகங்களையும் ஏழு பாகங்களாக ஃபஹீமிய்யா அறக்கட்டளை வெளியிட்டது. அந்த சாதனையைச் செய்து முடித்திருக்கும் சூஃபி அண்ணன் நரியம்பட்டு சலாம் ஆவார்கள். இறைவன் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த ஆரோக்கியத்தையும் இம்மையில் கொடுப்பானாக. நான் சூஃபி என்று அவரைச் சொன்னதில் அர்த்தமுண்டு. அவர் பேசவே மாட்டார். நேரில் சென்று பேசினால்கூட ஒருசில வார்த்தைகளைத்தான் அவரிடமிருந்து பெற முடியும். சரி மீண்டும் தமிழன்பனுக்கு வருவோம்.

அந்த நூல் மஸ்னவி. அதில் பேசுபவர் ரூமி. இங்கே பேசுபவர்கள் இரண்டு பேர்கள். தமிழன்பனும் ரூமியும்! கேள்விகளும் பதில்களுமாக! கேட்பவர் தமிழன்பன். பதிலளிப்பவர் ரூமி. பெரும்பாலும். 

”நான்போன நேரம் ரூமி செருப்பில்

ஆணி அடித்துக்கொண்டிருந்தார்.

வலிக்காதா? என்றேன்.

ஆணிக்கும்தான் வலிக்கும்

சுத்திக்கும்தான் வலிக்கும்

கைக்கும்தான் வலிக்கும்

வலியில்லாமல்

என்னதான் நடக்கும்

என்றார் ரூமி.

சொல்லப்பட்ட பதில்கள் யாவும் கேட்கப்பட்ட ஒரு கேள்வியிலிருந்து உருவானவை. செருப்புக்கு ஆணி அடிக்கும்போது ‘வலிக்காதா?’ என்று யாரும் கேட்கமாட்டார்கள். நினைக்கவும் மாட்டார்கள். ஆனால் ஒரு குழந்தைஅப்படிக் கேட்கும் சாத்தியமுண்டு.

நீங்கள் ஒரு குழந்தையைப் போல் ஆகிவிடாதவரை இறைவனின் சாம்ராஜ்ஜியம் கிடைக்காது என்று இயேசு சொன்னாதாக புனித பைபிள் கூறுகிறது. ஏன்? ஒரு குழந்தைக்கு அறிவு வேலை செய்வதில்லை. அது இதயத்தால் பார்க்கிறது. தர்க்க நியாயம் அதற்குத் தெரியாது. உள்ளதை உள்ளபடியே அது பார்க்கிறது. உண்மையை உணர்ந்துகொள்ளும் சாத்தியம் ஒரு குழந்தைக்கே அதிகமாக உள்ளது.

ஞானிகளும் ஒருவகையில் குழந்தைகளே. அவர்கள் சாதகம் செய்து அறிவுக்கு மேலே சென்றவர்கள். அறிவால் அவர்களது பார்வைக்குத் தடைபோட முடியாது. எனவே செருப்புக்கு ஆணி அடிக்கும்போது வலிக்காதா என்று ஒரு குழந்தையாலோ அல்லது ஒரு ஞானியாலோதான் கேட்க முடியும்!

நாமாக இருந்தால் அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லியிருப்போம்? ’என்ன முட்டாள்தனமாகக் கேட்கிறாய்? செருப்புக்கு எப்படி வலிக்கும்’? என்று திருப்பிக்கேட்டிருப்போம்! ஆனால் கேள்வி கேட்ட குழந்தைக்கு பதிலை ஒரு ஞானி இங்கே சொல்கிறார். (கேள்வியையும் ஒரு ஞானிதான் கேட்டார் என்று நான் சொன்னால் நான் தமிழன்பனைப் புகழ்வதாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்)!

செருப்புக்கு மட்டுமல்ல, ஆணிக்கும், சுத்திக்கும், அடிக்கும் கைக்கும்கூடத்தான் வலிக்கும், ’வலியில்லாமல் என்னதான் நடக்கும்? என்று கவிதை முடிகிறது!

உண்மையை மிக அழகாகச் சொல்லும் அற்புதமான கற்பனை என்று இதைச் சொல்லவேண்டும். கவிதையின் முடிவானது வாழ்வின் சாரத்தையே சொல்லிவிடுகிறது. அடிக்க அடிக்கத்தான் தங்கத்தின் துருவெல்லாம் போய் அது தூய்மையடையும். பிரசவம் என்றாலும் வலிதான்.

இப்படி வாழ்வின் எந்த சாதனையை எடுத்துக்கொண்டாலும் அது வலியில் உருவாவதுதானே? வலியின்றி சாதனைகள் எப்படி சாத்தியமாகும்? இப்படியொரு பதிலை ரூமியைத் தவிர வேறு யாரால் சொல்ல முடியும்?

01

கேளுங்கள், இந்த நாணல் புல்லாங்குழல் சொல்லும் ஓலக்கதையை

பல பிரிவுகளால் வாடும் அதன் மூலக்கதையை

03

பிரிவில் துண்டு துண்டாக உடைந்த இதயம் வேண்டும் கொள்ள

வேதனையின் வரலாற்றை அதன்மூலம் நான் சொல்ல

மஸ்னவி முதல் பாகத்தில் உள்ள முதல் மற்றும் மூன்றாம் பாடல்கள் இவை. (தமிழாக்கம் எனது). ’மஸ்னவி’யின் தொடக்கமே வேதனையை, வலியைச் சொல்வதில் துவங்குகிறது என்பதைக் கவனிக்கவேண்டும். புல்லாங்குழல் தன் வலியைச் சொல்வதாகத்தான் அது துவங்குகிறது.  

செருப்புகளைத் தலைக்கு வைத்திருந்தார்

படுத்துக்கொண்டிருந்தார் ரூமி

தலைணையைக் கால்களுக்கு வைத்திருந்தார்

கேட்டேன்

ஏன் கால்கள் மட்டமானவையா?

என்றார்

என்கிறது தமிழன்பனின் இன்னொரு கவிதை. வாழ்வின் தத்துவச் சாரம்கூட இதுதான். உயர்வு, தாழ்வு, மேன்மை, தாழ்மை, மேலே, கீழே – இவையெல்லாம் ஒரு கோணத்தில் தெரியும் உண்மையின் ஒரு வடிவம்தான். சார்பு நிலைத்தோற்றங்கள் என்று சொல்லலாம். உண்மையை உண்மையாக மட்டுமே பார்த்தால் அதில் உயர்வானது, மட்டமானது என்று எதுவுமே இல்லை.

கருப்பர்கள், அடிமைகள் என்பதால் நபித்தோழர்கள் பிலால், அம்மார் போன்றவர்களை தீயில் நிர்வாணமாகப் படுக்க வைத்து உடலை வதைத்தார்கள் குறைஷிகள். ஒரு கருப்பரின் கழுத்தில் தன் வெள்ளைத்தொடையை வைத்து நசுக்கி உயிர் பறிக்கும் வேலையைச் செய்கிறான் துப்பாக்கி ஏந்திய ஒரு வெள்ளை அமெரிக்கன் இன்று. சாத்தான்குளத்தில் துப்பாக்கி ஏந்திய சில சாத்தான்கள் ஒரு தந்தையையும் மகனையும் கொடுமையாக அடித்துக் கொல்கிறார்கள். ஒரு சின்னக் குழந்தையை அது முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக துப்பாக்கியால் சுட்டுக்கொல்கிறார்கள் சிரியாவில்.

இப்படிப்பட்ட வன்கொடுமைகள் ஏன் தொடர்ந்து நடந்துகொண்டே உள்ளன? ஒருபக்கச் சார்புதான். சிலரை செருப்பாகவும், சிலரைத் தலையணையாகவும் நினைப்பதால்தான்.

இந்த உயர்வு தாழ்வு நிலைகள் உண்மையானவை அல்ல என்று இக்கவிதைகள் மிக அழகாகச் சொல்கின்றன. தலை என்றால் உயர்வு, கால் என்றால் தாழ்வு என்ற நினைப்புதான் எல்லா வலிகளுக்கும் வேதனைகளுக்கும் காரணம். தலையால் மட்டுமே ஒருவர் வாழ்ந்துவிட முடியாது. தலையில்லாமலும் வாழமுடியாது. அதைப்போல கால்களால் மட்டுமே ஒருவர் வாழவும் முடியாது. தலையக் காலும், காலைத் தலையும் சார்ந்துள்ளன என்று தலையும் காலும் புரிந்துகொள்ள வேண்டும்.

அவரவர் கருத்துப்படியே என்னோடு மனிதர் நட்புறவாடினார்கள்

ஆனால் என் ரகசியத்தை யார் தேடினார்கள்?

என்று மஸ்னவி-யில் ஓரிடத்தில் ரூமி கேட்கிறார்.

ரூமி

செருப்புக்கு

மெருகேற்றிக்கொண்டிருந்தார்

நான் போனபோது

ஏன் புதிதாகவாங்கிக்கொள்ளலாமே என்றேன்

சளிப்பிடிக்கிறது தும்முகிறது

அறுபது ஆண்டுகாளாச்சு

புதுமூக்கு எங்கே கிடைக்கும் சொல் என்றார்.

என்கிறது ஒரு கவிதை.

நாளைக்குச் செருப்பைப்

பழுதுபார்க்கவேண்டும்

ரூமி இப்படிச்சொன்னதும் நான்கேட்டேன்

ஏன் புதுச்செருப்பு வாங்கிக்கொள்ளக்கூடாதா?

“நாளைக்குப் புது ரூமி தேடிப் போவாயா?”

என்கிறது இன்னொரு கவிதை.

மீண்டும் சார்புத்தத்துவம் வேறு கோணத்தில் பேசப்படுகிறது. பழையது, புதியது என்பதெல்லாம்கூட சார்பு நிலைக்கோட்பாடுதான். நாம் அணிந்துகொள்வது மட்டும் புதிது புதிதாக இருக்கவேண்டும் என்று விரும்பும் நாம் மட்டும் பழசாகவே உள்ளோம்! மேலும் மேலும் பழசாகிக்கொண்டே போகிறோம்! இந்த முரண்பாடு நமக்கு என்றைக்காவது உரைக்கிறதா? நம்மைப் பார்த்து இக்கவிதைகள் அந்தக் கேள்வியைக் கேட்கின்றன!

இது உயர்வானது, இது தாழ்வானது என்ற நினைப்பும்கூட ஒருவகையில் தவறுதான் என்று மீண்டும் வேறொரு கோணத்தில் பேசுகின்றன இக்கவிதைகள். புல்லாங்குழலையும் செருப்பையும் உதாரணமாக வைத்து. புல்லாங்குழல் தன் முறையீட்டைச் சொல்வதாகத்தான் மஸ்னவி காவியமே துவங்குகிறது. அந்த முதல் பாடலை மேலே கொடுத்துள்ளேன். மனிதனின் உதடுகளில் படும் பாக்கியம் புல்லாங்குழலுக்குக் கிடைத்தாலும், மண்ணின் மார்புத் துடிப்பை உணரும் வாய்ப்பு செருப்புத்தான்!  

இசைக்கருவிகளிலேயே

புல்லாங்குழல்தான்

சிறந்தது

ஏனெனில்

உதடுகள்தொடும் பேறு

வேறு எதற்கும் இல்லை

என்றீர்கள் ரூமி

பாதங்கள் தொடும் செருப்பு

எப்படி?

‘ ஆகா! மண்ணின்

மார்புத்துடிப்பை அதுவல்லவா

அறியமுடிகிறது!’

ரூமி சொன்னார்.

ரூமியின் அழகுகளில் ஒன்று முரண். மீனுக்கு தாகம் என்று சொன்னால் நம்ப முடியுமா? ஆனால் ரூமியால் மீனின் தாகத்தையும் உணர முடியும்!

‘தாகம்கொண்ட

மீன் என்று

ஏன் எழுதினீர்கள்

ரூமி?

தண்ணீரில்தானே

வாழ்கிறது

அப்புறம் என்னதாகம்?’

இதுதான் சாதாரண மனங்களுக்குள் எழும் கேள்வியாக இருக்கும். ஆனால் மரணத்தைப் பற்றிய சூசகமான கவிதைகளாக இவை மலர்கின்றன. நாம் எதை முடிவு என்று நினைக்கிறோமோ அதை ஞானிகள் விடுதலை என்று உணர்கிறார்கள்.

மரணம் ஒரு முடிவல்ல என்றுதான் திருமறையும் கூறுகிறது. ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும் என்கிறது திருமறை (3:185). ஒன்றைச் சுவைக்க வேண்டுமென்றால் அதற்கு நாம் இருந்தால்தானே செய்யமுடியும்? அப்படியானால் மரணத்தை ஆன்மா சுவைக்கும் என்றால் அது இருக்கும், அழிந்துபோய்விடாது என்பதுதானே இவ்வசனத்தின் குறிப்பு?! அதையே வேறு வகையில் ரூமி சொல்வதாக தமிழன்பன் எழுதுகிறார்:

கரையேறினால்

மரணமில்லாயா?

என்றேன்

ரூமி கேட்டார்

‘விடுதலையை

மரணம் என்றா சொல்கிறாய்!’

அது ஒரு விடுதலை. ’கூண்டிலிருந்து பறவை பறக்கப் போகிறது’ என்ற பொருள்தரும் வகையில்  ஞானி இமாம் கஸ்ஸாலி அவர்கள் தான்ன் இறக்கப்போகும் அன்று அல்லது அதற்கு சற்று முன் ஒரு கவிதையை எழுதி தான் படுத்திருந்த பாய்க்குக் கீழே வைத்திருந்தார்கள். ஆக, ஞானிகளைப் பொறுத்தவரை மரணம் என்பது முடிவல்ல. அது நித்திய வாழ்வின் துவக்கம்.  

குல்லா

இல்லாமல்

வெளியே

போயிருக்கிறீர்களா ரூமி?

நான்இப்படிக்கேட்டதும்

‘ஏன் நான்

தலையைக்கூடவீட்டில்

வைத்துவிட்டுக் கடைவீதிபோயிருக்கிறேன்’

என்கிறது இன்னொரு கவிதை! தொப்பி இல்லாமல் போகலாம். ஆனால் தலை இல்லாமல் போக முடியுமா? இது என்ன மாந்திரீக யதார்த்தக் கதையா? அப்படியல்ல. இங்கே தலை என்பது ஒரு குறியீடு. அறிவு, அகந்தை ஆகியவற்றுக்கான குறியீடு என்று கொள்ளலாம். ஒரு ஞானியானவன் அகந்தையின்றி இருக்கவேண்டும். அறிவின்றி என்றால் முட்டாளாகவா என்று கேட்கக்கூடாது. நம்மைவிட கூரறிவு படைத்தவர்கள்தான் ஞானிகள். ஆனால் தன்னிடம் அறிவிருக்கிறது என்ற அகந்தையைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு அலைபவர்கள் அல்ல. அதைக்கழற்றி வைத்துவிட்டு வாழ்பவர்கள். தலையைக்கூட வீட்டில் வைத்துவிட்டுச் செல்லக்கூடியவர்கள்!

எனக்கு இங்கே முல்லா நஸீருத்தீன் சொல்லும் ஒரு சூஃபிக்கதை நினைவுக்கு வருகிறது. ஒருநாள் ஒரு பணக்காரர் வீட்டுக்குச் சென்று, வாயில் காப்போனிடம், ‘அன்பளிப்பு கேட்டு முல்லா வந்திருக்கிறார் என்று சொல்’ என்று சொல்லியனுப்பினார். திரும்பி வந்த அவன், ‘முதலாளி வெளியூர் போயிருக்கிறாராம்’ என்றான்.

அதைக்கேட்ட முல்லா, ‘’சரி, இனிமேல் உன் முதலாளி வெளியூர் போவதாக இருந்தால் அவர் தலையையும் எடுத்துக்கொண்டு போகச்சொல். நான் அவர் தலையை மாடியில் பார்த்தேன்” என்றாராம் முல்லா! தலைக்குள்தான் எவ்வளவு விஷயங்கள், விஷமங்கள்! அதை வீட்டில் வைத்துவிட்டு வெளியில் போவது சாதாரண காரியமா என்ன!

ரோஜாவிடம் எதை யார்சொல்லி

அது இதழ்களைத்திறந்ததோ

அதை உன்னிடம் சொல்லி

நீ உன்னைத்திறந்தது உண்டா?

மிக அழகாக எழுதப்பட்ட கவிதைகளில் இது ஒன்று. ரோஜா தன் இதழ்களை விரிப்பதற்கு என்ன காரணம்? அது இயற்கையின் செய்தியைப் புரிந்துகொள்கிறது! ஆனால் அந்த பிரபஞ்ச மொழி நமக்குப் புரிவதில்லை. புரிந்திருந்தால் நாமும் நம் இதயங்களை மற்றவர்களுக்காகத் திறந்திருப்போமே?! இயற்கையோடு இணையாத நம் வாழ்வைப் பற்றிய விமர்சனமாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம்.

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடின்

மனிதரின் மொழிகள் தேவையில்லை

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடின்

மனிதர்க்கு மொழியே தேவையில்லை

என்று வைரமுத்து எழுதியதுதான் எவ்வளவு உண்மை!

ஆயிரம் ஊர்கள்

ஆயிரம் காடுகள்

ஆயிரம் மலைகள்

எல்லாம் பார்த்தாலும்

நதி கடலை நோக்கியே

ஓடுகிறதே

நீங்கள் ஏன் எப்போதும் உங்கள் ஞானகுருவைப்பற்றியே நினைத்துக்கொண்டுள்ளீர்கள் என்ற கேள்விக்கு பதிலாக இப்பாடல் வருகிறது. ரூமி அவர்களுக்கும் அவர்களது ஞானாசிரியர் ஷம்ஸ் தப்ரேஸி அவர்களுக்குமான ஞானவாழ்வு காவியத்தன்மை கொண்டது. மஸ்னவி காவியத்தைப் போலவே, தன் ஞானாசிரியர் மீதான தீவானெ ஷம்ஸ் தப்ரேஸ் என்ற காவியத்திலும் 30,000க்கும் மேற்பட்ட பாடல்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தன் குடும்பத்தைவிட, மகன்களைவிட, சீடர்களைவிட, புகழைவிட – எல்லாவற்றையும்விட ஞானாசிரியரே ரூமிக்கு முக்கியமானவராக இருந்தார். ஏன்? குருவே சத்தியத்தை உணர வைப்பவர். குடும்பமல்ல.

அவரது மகன்களே ஷம்ஸைக் கொலை செய்துவிட்டார்கள் என்றுகூட சொல்லப்படுகிறது. ஒருமுறை ரூமியை விட்டுப் பிரிந்த ஷம்ஸ்  கொஞ்ச காலம் கழித்து திரும்பி வந்தார். பின்னர் மீண்டும் ஒருநாள் நடுநிசியில் எழுந்து வெளியே போனார். பின்னர் திரும்பிவரவே இல்லை. ரூமியில் தன்னை நிறைத்துவிட்டு அவர் சென்றுவிட்டார் என்று சொல்லப்படுகிறது. அது உண்மைதான் என்பதை அவரது மஸ்னவி காவியத்தைப் படிக்கும்போது உணரமுடியும்.

ஞானியா?

துறவியா?

கவிஞரா?

ஆசானா?

அவர் ஏதும்சொல்லமாட்டார்.

பதில்

சொல்லிக்கொண்டிருந்தால்

அவர்

எதுவுமாகஇருக்கமாட்டார்

இதை முத்தாய்ப்பான கவிதையாக எடுத்துக்கொள்ளலாம். எதிலும் தன்னை சுருக்கிக் கொள்பவர் அல்ல ஒரு சூஃபி. இதுவென்று சொல்லிவிட்டால் அது இல்லை என்று ஆகிவிடும்! எல்லாமாக இருப்பவர் எப்படி தன்னை இதுவென்றும் அதுவென்றும் ஒத்துக்கொள்வார்?! தன்னை இறைவனில் இழந்த ஒருவர் எதுவாகவும் இருப்பதில்லை, ஏனெனில் எல்லாமாக இருக்கும் இறைவனில் ஒன்றிவிட்டவர் அவர்!

’ரூமியும் நானும்’ முற்றிலும் புதியதானதொரு உலகின் கதவுகளை நமக்காகத் திறந்து வைக்கிறது. சூஃபித்துவக்கால்களால் மட்டுமே அந்த மாளிகையின் உள்ளே நுழைய முடியும். அங்கே ரூமியையும் காணலாம், தமிழன்பனையும் காணலாம். என்னையும் காணலாம், உங்களையும் காணலாம்.

அன்புடன்

நாகூர் ரூமி

03.07.20

ruminagore@gmail.com 

About நாகூர் ரூமி

A spiritualist and a writer.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

1 Response to மௌலான ரூமிக்கு தத்துவக் கவிதைகளால் ஒரு பொன்னாடை

  1. நாகூர் கவி says:

    அற்புதம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s