தமிழும் ஹிந்தியும்

தாம்பரம் ஹிந்தி வித்யாலயாவின் 4வது ஆண்டுவிழா சென்ற 27.01.53 அன்று நடந்தது. அதற்கு [அப்போதைய] சென்னை கவர்னர் ஸ்ரீபிரகாசா தலைமை வகித்தார். அவர் அப்போது புரிந்த சொற்பெருக்கின் முக்கிய பகுதியை கீழே பிரசுரிக்கிறோம். சகலவற்றையும் அவரே மிக நன்றாய் விளக்கிவிட்டிருப்பதால், நாமொன்றும் மேலதிகமாக விமர்சனமெழுத விரும்பவில்லை.

கவர்னரின் பிரசங்கம்

Madras Governor Sri Prakasa (1952-56)

ஸ்ரீ பிரகாசா கூறினார்: இந்த நாட்டிலுள்ள வேறு பிரதேச பாஷைகளுக்குக் குந்தகம் விளைவிக்கத் தக்க முறையிலே ஹிந்தி பரத்தப்பட வேண்டுமென்று விரும்புபவர்களுள் நானொருவன் அல்லன். என்னைப் பொறுத்தமட்டில் நான் என்றைக்குமே ஹிந்தியை நம் நாட்டின் தேசிய பாஷையாக ஆக்கவேண்டுமென்று எப்போதுமே சம்மதித்தது கிடையாது. இன்றைக்குக்கூட நான் கொஞ்சமும் தயக்கமின்றி அதே உண்மையைத்தான் எடுத்துரைப்பேன். இதற்கு என்ன காரணமென்றால், நம் நாட்டு மக்கள் எல்லோரிடையேயும் ஹிந்தி பாஷையைப் பரத்துவதனால், அந்த பாஷைதான் குட்டிச் சுவராகப் போய்விடுகிறது. எவனெவன் தன் தன் இஷ்டத்துக்கு தன் தன் மனம் போன போக்கில், பேசுகிறானோ அதைத்தான் ஹிந்தி பாஷயென்று பெயரிட்டு அழைக்கிறார்கள். ஒவ்வொருவனும் கண்ட கண்ட மாதிரியாக அந்த பாஷையைப் பேசுவதையும், அப்படிப் பேசுவதற்குத்தான் இந்தி என்று பெயர் என்று கூறுவதையும் நான் காண்கின்றேன்.

மிகமிகக் கடினமான மொழி

ஹிந்தி மிகவும் சுலபமான மொழி என்று பலபேர்வழிகள் இடம்பமாகக் கூறுகிறார்கள். ஆனால் ஹிந்தி என்பது ஒரு மிகக்கடினமான மொழியென்பதும், எந்த மனிதன் வேண்டுமானாலும் பேசக்கூடிய விதத்தில் அது அமைக்கப்படவில்லை என்பதும் எனக்கு நிச்சயமாகத் தெரியும் என்பதை உங்களுக்குத் அறிவித்துக்கொள்கிறேன். எனக்கு இந்தப் பக்கத்திலும், அந்தப் பக்கத்திலும், என்னைச் சூழவும் அந்த மொழி எல்லா மக்களாலும் படுகொலை செய்யப்படுவதை நான் காணக்காண, ஹிந்தி தேசிய பாஷையாக ஆனாலும் சரியே, எப்படியாவது அந்தப் பாஷை கொலை புரியப்படாமல் காப்பாற்றப்பட்டால் போதுமே என்றுதான் நான் கவலைப்படுகிறேன்.

காலஞ்சென்ற காந்திஜி பேசிக்கொண்டிருந்த ஹிந்தி எனக்கு நினைவிருக்கிறது. அவர் பேசிவந்த ஹிந்தி சுத்த மோசமாகவே இருந்து வந்தது. எனினும், அனேக மக்கள் காந்திஜி பேசியதைப்போலவே தாங்களும் பேசவேண்டுமென்று ஆசை கொண்டு, அவர் பேசிய மாதிரியாகவே பேசி, ஹிந்தியைக் கொலை செய்துவிட்டார்கள். இதையெல்லாம் கண்ட நான், என்னருருமைத் தாய்மொழியாகிய ஹிந்தி பின்னொரு காலத்தில் தேசிய பாஷையாக ஆக்கப்படுமேயானால், அது நிச்சயமாகப் படுகொலை புரியப்பட்டு, சிதைக்கப்பட்டு, சிதறடிக்கப்பட்டுவிடுமென்று அப்போது நன்குணர்ந்துகொண்டுவிட்டேன்.

இன்று நம் நாட்டிலே ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா? அவர்களுடைய ஹிந்தியை ஒவ்வொரு இந்தியனும் எப்பாடுபட்டாவது கற்றுக்கொண்டுதான் தீரவேண்டுமென்றும், ஆனால் தாங்கள் மட்டும் வேறெந்த மொழியையும் கற்றுக்கொள்ள முடியாதென்றுமே அவர்கள் சவால் விடுகிறார்கள். இன்று ஹிந்தி தேசிய பாஷையாக ஆக்கப்பட்டுவிட்டதை அடுத்து, நம் நாட்டில் எத்தனையோ எண்ணிறந்த மக்கள், மிகவும் நரக அவஸ்தையுடன் ஹிந்தியக் கற்றுக்கொள்ள முற்பட்டிருக்கும்போது, ஹிந்தியைத் தன் தாய் பாஷையாகக் கொண்டவன் ஒவ்வொருவனும் அதே மாதிரியாக அவஸ்தைப்பட்டே வேறு பாஷைகளைக் கற்றுத்தீரவேண்டுமென்பதை கடமையாகக் கொள்ள வேண்டும். அப்போதுதான் எருதின் புண் காக்கைக்குத் தெரியும்.

இப்போது பாருங்கள், நான் இந்த மாகாணத்துக்கு கவர்னராக நியமன பெற்று வந்ததிலிருந்து, எவ்வளவோ சிரமப்பட்டு தமிழைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். ஆனால் சில சொற்களை மட்டுமே என்னால் கற்றுக்கொள்ள முடிந்ததேயொழிய, ஒரு வாக்கியத்தைக்கூட என்னால் தமிழில் பேச முடியவில்லை. ஹிந்தி பேசக்கூடிய எனக்கு தமிழைக் கற்றுக்கொள்ள இவ்வளவு கஷ்டமாக இருப்பதிலிருந்து, இப்படியேதானே தமிழர்களுக்கும் ஹிந்தி கற்றுக் கொள்வதென்பது மிகவும் சிரமமாக இருக்கும் என்பதை நான் நன்குணர்ந்து கொண்டு விட்டேன். நீங்கள் எனக்கு அனுமதி அளிப்பதாக இருந்தால், இந்த அம்சம் சம்பந்தப்பட்ட மட்டில், திராவிடக்கழக கட்சியினரின் கூற்றை நான் அனுதாபத்துடனே ஏற்றுக்கொண்டுதான் தீரவேண்டும். ஆனால், நம் நாட்டின் எல்லாப் பிரதேசங்களிலிருந்தும் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் ஒன்றுகூடியமர்ந்த அரசியல் நிர்ணயசபை ஹிந்தி பாஷை தேசிய பாஷையாக ஆக்கப்படவேண்டும் என்று தீர்மானித்துவிட்டபடியால், ஜனநாயக சித்தாந்தப்படி நாம் அந்த தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டுமல்லவா?

வட நாட்டிலிருப்பவர்கள் ஹிந்தி பேசுவதைவிட, எழுதுவதைவிட, இச்சென்னையில் ஹிந்தி கற்றுக்கொண்டவர்களே மிகவும் சுத்தமாகவும், இலக்கணப்பிழையின்றியும் ஒழுங்கான முறையிலும் ஹிந்தியைப் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். இந்த வகையில் நான் சென்னை ராஜ்ஜிய மக்களைப் பாராட்டுகிறேன்.

உருப்படாத பாஷை

இந்தி ஹிந்தியே நம் தேசிய பாஷையாக ஆக்கப்பட்டுவிட்டதென்றால், அந்த மொழி மிகவும் வளப்பமானது என்கிற காரணத்தினாலோ, அல்லது அது மிகவும் சக்தி மிக்கது என்னும் காரணத்தினாலோ அல்லவே அல்ல. ஹிந்தி என் சொந்த தாய்பாஷையாக இருந்துவரும் காரணத்தால், அந்த மொழியில் அப்படி எதுவும் சிலாகிக்கத்தக்க குண விஷேஷங்கள் எதுவுமே கிஞ்சித்தும் இருப்பதாக எனக்குப் புலப்படவில்லை என்பதை நான் வெட்கத்துடனே ஒத்துக்கொள்கிறேன். அப்படியானால் அந்த உதவாக்கறை ஹிந்தி ஏன் நம் தேசிய பாஷையாக ஆக்கப்பட்டது? ஏனென்றால் இந்நாட்டிலுள்ள மக்களுள் மிகப்பெரும்பாலோரால் அது பேசப்பட்டு வருகின்றமையாலும், மற்ற வேறு மொழியைப் புரிந்துகொள்கிறவர்களைவிட, ஹிந்தியை விளங்கிக்கொள்பவர்கள் இந்நாட்டில் மிகுதமாயிருப்பதாலுமே, ஹிந்தி தேசிய பாஷையாக ஆக்கப்பட்டுவிட்டது. எனவே அரசியல் நிர்ணய சபை, தேசிய பாஷையாக எதை ஆக்கலாம் என்று யோசித்த சமயத்தில், ஹிந்தி மீதே அதன் திருஷ்டி விழுந்துவிட்டது.

தமிழின் பழமை

இப்போது நான் இந்த ராஜ்ஜியத்தின் பிரதான மொழியாகிய தமிழைப்பற்றி எனக்குத் தெரிந்ததை உங்களுக்கு அறிவிக்க ஆசைப்படுகிறேன். என்னவென்றால், ஹிந்திப் பேர்வழிகள், ’வெண்கலக் குடத்தில் கூழாங்கற்களைப் போட்டுக் குலுக்குவதைப் போல் தமிழ் காணப்படுகிறது’ என்று சும்மாவாவது கிண்டல் செய்கிறார்கள். ஆனால் அது சுத்தத் தவறு. ஏனென்றால், தமிழென்பது ஒரு வலுப்பமுற்ற, அழகிய இனிய மொழியாகும். இந்த இனிய மொழியின் மிகப்பெரிய விஷேஷாம்சங்கள் என்னவென்றால், சென்ற இரண்டாயிர வருடங்களுக்கு மேலாக, இம்மொழி ஒரே விதமாகப் பேசப்பட்டு வருகிறது. அஃதாவது, சென்ற 2000 வருடங்களுக்கு முன் இத்தமிழ் நாட்டில் உயிர் வாழ்ந்திருந்த ஒருவன், தற்செயலாக உயிர் கொடுக்கப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்து இங்கே இப்போது நடமாடினானேயானால், நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதையும் அவன் நன்றாக விளங்கிக்கொள்ளுவான், அவன் என்ன பேசுகிறான் என்பதையும் நீங்கள் நன்றாகப் புரிந்துகொண்டுவிடுவீர்கள். இந்த உலகத்தில் உள்ள வேறெந்த மொழிக்கும் நீங்கள் இந்த உபமானத்தைப் பொருத்திக்காட்ட இயலாது.

மற்ற மொழிகள் காலம் செல்லச் செல்ல எவ்விதமான மாறுதலைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன என்றால், சென்ற நூறு வருடங்களுக்கு முன் ஒரு நாட்டினர் பேசிய பாஷையை அதே நாட்டில் இப்போது வசிப்பவர்கள் கொஞ்சமும் புரிந்துகொள்ள முடியாதவாறு பெரும் மாறுதலைப் பெற்றுக்கொண்டிருக்கிறது. இதே உண்மைதான் ஹிந்தியிலும் இங்கிலீஷிலும் நிலவி வருகிறது. ஏனென்றால் சென்ற சில நூற்றாண்டுகட்கு முன்னே வழக்கத்திலிருந்த ஹிந்திக்கும் இங்கிலீஷுக்கும் தற்போது புழக்கத்திலுள்ள அவற்றுக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை.

[எனவேதான் சென்ற ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட, சங்க இலக்கியத்தமிழ் நூல்களை இன்றும் நம் தமிழ் நாட்டினர் சுலபாகப் படித்துக் கற்க முடிகிறது. நம் பல்கலைக்கழகங்களிலும் சங்க இலக்கியம் பாடமாக்கப்பட்டுள்ளது. ஆனால் 2000ஆண்டு வயது முதிர்ந்த ஹிந்தியையோ, இங்கிலீஷையோ இன்று உங்களால் கண்டுபிடிக்க முடியாது. அப்படியே கண்டு பிடித்தீர்களாயினும் அவற்றை ஒருவரும் புரிந்துகொள்ள இயலாது  — பத்திரிக்கை ஆசிரியர்].

ஹிந்தியைக் கட்டாயப் படுத்தாதீர்

இவ்வளவும் நான் ஏன் கூறுகிறேனென்றால், நான் ஹிந்தி வல்லுநனாயிருப்பினும், அந்த ஹிந்தியை விரும்பாத எந்த ஒருவனின் தொண்டைக்குள்ளும் வலுக்கட்டாயப்படுத்தி நுழைத்துத் துருத்தக்கூடாது என்பதை வற்புறுத்திக்காட்டவேயன்றி வேறல்ல. என் ஆசையெல்லாம் என்னவென்றால், எல்லாப் பிரதேச பாஷைகளும் ஒழுங்காக முன்னேறி வளப்பத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே. எல்லாப் பிரதேச பாஷைகளுமே பீடுகெழு பெருமை மிக்கன. வன்மையுடையன, அழகு பொருந்தியன. ஒவ்வொரு மனிதனும் தன் தாய்நாட்டின் மீது பாசம் கொண்டதைப் போல், பெற்ற தாய்மீது பாசம் கொண்டதைப்போல், தன்தன் தாய்மொழி மீதும் சொல்லொணா அபிமானம் கொண்டிருக்கிறான். இப்படியிருக்க, ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவன் மட்டும், தன் கடைப்பிடி சரியென்று வாதிப்பதும், தன் ஹிந்தியையே மற்ற எல்லா இந்தியனும் கற்று வல்லுநனாக வேண்டுமென்று அடம்பிடிப்பதும் மிகவும் தவறானதாகும்.

தேசிய ஒற்றுமை கருதி எல்லோரும் ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டபடியால், நாமெல்லாரும் ஹிந்தியை ஒழுங்காகக் கற்றுக்கொள்வோமாக. ஆனால் அதே சமயத்தில், ஹிந்தி கற்றுக்கொள்ள விரும்புவோர்மீது, சுமக்கொணாச் சுமையை சுமத்தி வைத்து, அதைக்கற்றுக்கொடுப்பது கூடாதென்றே நான் கருதுகின்றேன்.

எனக்குத் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆவல் நிரம்ப இருக்கிறது. ஆனால் சென்னையிலே எல்லாரும் எவ்வளவு இங்கிலீஷ் பேசுகிறார்களென்றால், என் மாளிகையான ராஜ் பவனிலுள்ள சகல வேலைக்காரர்களுமே என்னிடம் சதா இங்கிலீஷிலேயே பேசுகிறார்கள். எனவே எனக்கு சீக்கிரத்தில் தமிழ் கற்றுக்கொள்ளத் தருணம் வாய்க்காமல் போய்விட்டது. இவ்வளவு தூரத்துக்கு இங்கிலீஷை சுலபமாகப் பேசக்கற்றுக்கொண்ட தமிழர்கள் அதே விதமாக எளிதில் இந்தியையும் பேசக்கற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

நன்றி : தாருல் இஸ்லாம், பிப்ரவரி, 1952

======

About நாகூர் ரூமி

A spiritualist and a writer.
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s