அபூதாலிப் நரகவாதியா?

ஆய்வுத்தொகுப்பு – 1

அப்துல் ரஸாக்

வெளியீடு: இலங்கை அஹ்லுல் பைத் நிலையம், இல. 410, காலி வீதி, கொழும்பு – 03

அபூதாலிப் நரகவாதியா? இந்தக் கேள்வியே என்னை நடுங்க வைக்கிறது. ஒருவரை சொர்க்கவாதி அல்லது நரகவாதி என்று தீர்ப்பு சொல்வதற்கு நமக்கு என்ன அருகதை உள்ளது? நாம் எந்த ‘வாதி’யாகப் போகிறோம் என்றே தெரியாதபோது அடுத்தவரைப் பற்றி இப்படி நினைப்பதோ பேசுவதோ சரியாகுமா?

இதுபோன்ற கேள்விகள் என் மனதில் உழன்றுகொண்டிருந்தாலும், அபூதாலிப் அவர்களை நரகவாதி என்று சொல்வதை என் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஏற்கனவே பெருமானாரின் பெற்றோர்களைப் பற்றி இவ்விதமான தவறான கருத்தும் முஸ்லிம்களிடையே பரவி உள்ளதுதான். ஆனால் அத்தகையை தவறான, சாத்தானிய சிந்தனைக்கு செருப்படி கொடுக்கும் விதமாக மார்க்க அறிஞர் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் ’சுவனப் பூங்காவில் சுந்தர நபியின் பெற்றோர்’ என்ற அருமையானதொரு சிறிய நூலை எழுதி அவர்களைப் பற்றிய தவறான சிந்தனைக்கு முற்றுப் புள்ளிவைத்துள்ளார். அதேபோன்றதொரு இஸ்லாமிய சேவையின் வெளிப்பாடாக இந்த நூலையும் சொல்லலாம்.  

நச்சுக் கருத்துக்களின் சுய ரூபத்தை தோலுரித்துக் காட்டும் ஆய்வுத் தொகுப்பு’ என்று நூல் கூறுவதென்னவோ உண்மைதான். என் கருத்திலிருந்து பிரித்துக்காட்ட வேண்டி இந்நூலில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள திருமறை வசனங்களையும், நூலாசிரியரின் கருத்துக்களையும், நான் சிவப்பில் கொடுத்துள்ளேன்.

8:22. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப்பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம்.

6:116. பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் – இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள்.

ஒருவிஷயத்தைப் பற்றிய முழு உண்மையையும் தெரிந்துகொள்ளாமல் முன்முடிவுகளுக்கு வந்துவிடுவது எவ்வளவு தவறு என்பதற்காக மேலே கொடுக்கப்பட்ட திருமறை வசனங்களை ஆசிரியர் கொடுத்துள்ளார். மேலும் அவர் கூறுகிறார்:

’கருத்து வேற்றுமைகளில் உள்ள ஏதாவதோரு விஷயம் அறிஞர்களுக்கு முன்னால் வரும்போது, அதனை எதிர்கொள்கின்ற அறிஞர்கள் மூன்று விதமான பிரிவுகளுக்கு விரும்பியோ விரும்பாமலோ பிரிந்துவிடுகிறார்கள். ஒரு கருத்தின் உண்மையை உணர்ந்து அதனை ஏற்றுக்கொள்கின்ற ஒரு பிரிவினரும், அதே கருத்தைப் பிடிவாதமாக மறுக்கின்ற நிலைக்கு ஒரு பிரிவினரும், இவை இரண்டும் இல்லாத நடுநிலையில் மூன்றாவது பிரிவினரும் பிரிந்துவிடுவது இயல்பு. இந்த நிலையில், எந்தப் பிரிவினரின் ஆளுமை இந்த சமூகத்தில் செல்வாக்கு செலுத்துகிறதோ அவர்களின் கருத்தியலின் பிரதிபிம்பமாக இந்த சமூகம் மாறிவிடுவதே யதார்த்தம்’ (பக்கம் 2).

ஹதீஸ் குழப்பம் 1

உங்களைப் பாதுகாத்து வளர்த்த பெரிய தந்தையான அபூதாலிபுக்கு உங்களால் எந்த உதவியும் செய்ய முடியவில்லையா என்று அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்கள் பெருமானாரைக் கேட்டபோது, ஹஸ்ரத் அபூதாலிப் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு கலிமா சொல்லி இறக்கவில்லை என்றும், அதன் காரணமாக, தன் சிபாரிசு ஏற்றுக்கொள்ளப் படாது என்றும், அதன் காரணமாக நரகத்தின் ஆழம் குறைந்த பகுதியில் அபூதாலிப் அவர்கள் இருப்பார்கள் என்றும் பெருமானார் சொன்னதாக புகாரியில் பதியப்பட்டுள்ளது. (பாகம் 5, ஹதீது எண் 3883).

’தூய ஈமானுக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக மிக நுணுக்கமாக புனையப்பட்டிருக்கும் இந்த ஹதீஸ் புகாரி கிரந்தத்தில் பதியப்பெற்றிருக்கும் ஒரே காரணத்தால் இதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்கிற அதீத தன்னம்பிக்கைக்கு ஆட்பட்டு…இதைப்பற்றி ஆழமாக ஆராய்வதற்குத் தயங்கி, பொய்மைக்குத் துணை போகின்ற பாவத்தை நம்மை அறியாமல் செய்துவிடுவதுதான் பரிதாபம். இந்த ஹதீஸ் நீதிக்கும் உண்மைக்கும் புறம்பானதாகும்… இந்த ஹதீஸை சற்று கவனமாகப் பார்த்தால் இங்கு சுட்டிக்காட்டப்படுகிற முரண்பாடுகளை இலகுவாக உணர்ந்துகொள்ள முடியும்’ (பக்கம்3).

1.அரபு மொழியில் உள்ள மூலப்பதிவில் ஹஸ்ரத் அபூதாலிபின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

2. மொழிபெயர்ப்பில் அடைமொழி சேர்க்கைக்குள் மட்டுமே ஹஸ்ரத் அபூதாலிப் அவர்களின் பெயர் பலவந்தமாக இணைக்கப்பட்டு, இந்த ஹதீஸ் அபூதாலிப் அவர்களைப் பற்றிப் பிரலாபிப்பதைப் போன்றதொரு மாயை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

3. ’நரகத்தின் மிக ஆழமான பகுதி’ என்ற வாக்கியம் பெருமானாருடைய குடும்பத்தோடு பகை கொண்டிருந்த, நன்னடத்தையில்லாதவர் என்று கணிக்கப்பட்ட முகைரா இப்னு ஸுபா என்பவரால் மொழியப்பட்டிருப்பதை கவனிக்க வேண்டும்.

4. அப்துல் மலிக் இப்னு உமைர், அப்துல் அஸீஸ் ரவார்தி, சுஃப்யான் அல் தவ்ரி ஆகியோர் இந்த ஹதீஸோடு தொடர்பு கொண்டிருக்கிறார்கள். இவர்களால் கூறப்படுகின்ற, இவர்களோடு தொடர்பு கொண்ட அனைத்து ஹதீஸ் அறிவிப்புகளும் மிகவும் பலவீனமானவை என்று இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் ஏக மனதாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது (பக்கம் 04) என்று கூறுகிறார்.

ஹதீஸ் குழப்பம் 2

அல் முசையப் அறிவிக்கும் அடுத்த ஹதீதில் அபூதாலிபின் மரணப்படுக்கையில் பெருமானார் அபூதாலிபிடம் வந்தார்கள். அப்போது அபூதாலிபின் அருகில் அபூ ஜஹ்ல் அமர்ந்திருந்தான். அப்போது பெருமானார் கலிமா சொல்லும்படி அபூதாலிபை வேண்டுகிறார்கள். அவர்களுக்காக அல்லாஹ்விடம் வாதாட அது அனுமதிக்கும் என்றார்கள்.

அப்போது அருகிலிருந்த அபூ ஜஹ்ல், அப்துல்லாஹ் இப்னு உமையா ஆகிய இருவரும், ’நமது முன்னோருடைய மார்க்கமான அப்துல் முத்தலிபுடைய மார்க்கத்தை விட்டு விலகிவிடவேண்டாம்’ என்று திரும்பத்திரும்ப வேண்டுகோள் வைத்துக்கொண்டே இருந்தார்கள்.

இறுதியாக ‘நான் அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே இருக்கிறேன்’ என்று கூறியவர்களாக அபூதாலிப் இறந்தார்கள்.

அப்போது பெருமானார், ‘நான் தடுக்கப்படும்வரை உங்களுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருப்பேன்’ என்றார்கள். உடனே அபூதாலிப் தொடர்பாக கீழ்வரும் திருமறை வசனங்கள் அருளப்பட்டன.

9:113. முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக்கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல.

28:56. (நபியே!) நீர் நேசிப்பவர்களை (யெல்லாம்) நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது; ஆனால், அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான் – மேலும் நேர்வழி பெற்றவர்களை அவன் நன்கறிகிறான்.

ஆனால் இந்த இரு ஆயத்துக்களுக்கு அபூதாலிபின் இறப்புக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. அவர்களது இறப்பு தொடர்பாக அறிவிக்கப்பட்ட வசனங்களும் அல்ல இவை (பக்கம் 7).

சூரா கசஸ் 28-வது அத்தியாயத்தின் 56வது வசனம் அபூதாலிப் அவர்கள் இறப்பதற்கு சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்னாலும், சூரா பரா’அத் 9வது அத்தியாயத்தின் 113 வசனம் அபூதாலிப் அவர்கள் இறந்து சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின்னரும், ஹிஜ்ரி 9ம் ஆண்டு, துல்காயிதா மாதம் அல்லது அதனையொட்டிய காலத்தில் இறக்கியருளப்பட்டதாக வலுவான ஆதாரங்கள் வரலாற்றில் பதிய வைக்கப்பட்டுள்ளன (பக்கம் 7).

பெரியவர் அபூதாலிபுக்கு எதிரான அந்த ஹதீதின் முடிவில் புகாரி ஷரீஃபில் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்பதாவது அத்தியாயமான சூரா தௌபா அல்லது சூரா பரா’அத் அருளப்பட்டது தாபூக் படையெடுப்பின்போது. அதாவது பெருமானாருடைய மதினா வாழ்வில் நடந்தது அது. கிபி 630ல் / அல்லது ஹிஜ்ரி 9ம் ஆண்டு.

மேலே குறிப்பிடப்பட்ட திருமறை வசனத்துக்கும் அபூதாலிப் அவர்களின் மரணத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அபூதாலிப் அவர்கள் இறந்தது பெருமானாருக்கு நபித்துவம் கிடைத்து ஒன்பது ஆண்டுகள் கழித்து. கிபி 619ல். இணையத்தில் இத்தகவல்கள் காணக்கிடைக்கின்றன. குறிப்பாக விக்கிபீடியாவிலும், alislam.org-லும் விரிவாகப் பார்க்கலாம்.

ஒருவர் இறந்து பல ஆண்டுகள் கழித்து அருளப்பட்ட ஒரு வசனத்தை அவருடைய இறப்போடு பொருத்தி, அவர் தொடர்பாகத்தான் அது அருளப்பட்டது என்று ஒரு புகழ் பெற்ற, ஆதாரப்பூர்வமானது என்று நம்பப்படுகிற நபிமொழித்தொகுப்பில்கூட இவ்வளவு மோசமாக புனைவுகளைப் புகுத்த முடியுமா என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

இமாம் புகாரி அவர்கள் லட்சக்கணக்கான நபிமொழிகளை அறிந்திருந்தாலும் ஏன் அவை எல்லாவற்றையெல்லாம் தொகுத்து எழுதிவைக்கவில்லை என்று இப்போது தெளிவாகப் புரிகிறது. அவ்வளவு கவனமாக இருந்தும் இப்படிச் சில இடைச்செருகல்கள் நடந்துவிடுகின்றன!

எனவே நபிமொழிகளை அப்படியே நம்பிவிடுவதில் பிரச்சனைகள் உண்டு என்பது நிச்சயமாகிறது. ஆனால் இம்மாதிரியான எந்தப் பிரச்சனையும் இறைவனின் பேச்சான திருமறையில் கிடையாது என்பதையும் நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்னும் சொல்லப்போனால் அந்த ஆண்டு பெருமானாருக்கு இருந்த கடுமையான பணிகளின் காரணமாக, ஹஜ்ஜுக்குத் தலைமையேற்று அவர்களால் செல்ல முடியவில்லை. எனவே ஹஸ்ரத் அபூபக்கரை அனுப்பி வைத்தார்கள். சூரா பரா’அத் அருளப்பட்டதும், உடனே அதை ஹஜ்ஜுக்கு வந்திருக்கும் மக்களுக்கும் அறிவிக்கும் பொருட்டு ஹஸ்ரத் அலீ அவர்களை மக்காவுக்கு அனுப்பி அறிவிக்கச் சொன்னார்கள்.

ஹஸ்ரத் அபூதாலிபின் இறப்புக்கும் இந்த சூராவுக்கும் அல்லது அதன் எந்த குறிப்பிட்ட வசனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை விளக்கவே இத்தகவல்களைச் சொல்கிறேன். உதாரணமாக, யூசுஃப் அலீ அவர்களின் திருமறைக்கான விளக்கவுரையில்கூட இந்த வசனத்துக்கு பொதுவானதொரு விளக்கம்தான் சொல்லப்பட்டுள்ளதே தவிர அபூதாலிப் அவர்களின் மரணப்படுக்கை நிகழ்வோடு இணைத்து இது சொல்லப்படவில்லை.

எதையும் ஆராய்ந்து பார்க்குமாறு அல்லாஹ்வும் அவனது அல்குர்’ஆனும் நமக்கு ஆர்வமூட்டினாலும் நம் ஆசிரியர்கள் மீதும், அவர்கள் எழுதிய புத்தகங்களிலும் நாம் வைக்கும் மரியாதை, நம்பிக்கையை நன்குணர்ந்த ஷைத்தானிய சக்திகள் அவைகளில் ஊடுருவி, நமது நம்பிக்கையைக் கொண்டே நமது ஈமானுக்கும் அகீதாவுக்கும் சாவு மணி அடித்திருப்பதை மறுக்க முடியாது (பக்கம் 7)

ஒரு ரமலானில் பெருமானார் க’அபாவுக்கு வந்து திடீரென்று யாரும் எதிர்பாராதபோது அப்போது அருளப்பட்ட நஜ்ம் என்ற அத்தியாயத்தை தங்கள் வெண்கலக் குரலில் ஓத ஆரம்பித்தார்கள். அங்கே கூடியிருந்த குறைஷிக் காஃபிர்களுக்கு அது அதிர்ச்சியாகவும் வினோதமாகவும் இருந்தது. ஏனெனில் அதுவரை பெருமானார் அப்படிச் செய்ததே இல்லை.

’அல்லாஹ்வுக்கு சுஜூது செய்யுங்கள்’ என்ற வசனம் வந்தபோது பெருமானார் சுஜூது செய்தார்கள். அருகில் இருந்த தோழர்களும் செய்தார்கள். ஆனால் அதிசயம் என்னவெனில் கூடியிருந்த இணைவைப்பாளர்களான குறைஷிகளும் கும்பலாக தரையில் நெற்றியை வைத்து சஜ்தா செய்தார்கள்!

ஏன் அப்படிச் செய்தோம் என்று அவர்களுக்கே விளங்கவில்லை. அவர்களது உடலும் மனமும் அவர்களது கட்டுப்பாட்டிலேயே அப்போது இல்லை. மந்திரித்து விட்டமாதிரி இயங்கினார்கள். அந்த அற்புதச்செய்தி காட்டுத்தீபோல் பரவியது. அபிசீனியாவுக்கு முதன் முறையாக ஹிஜ்ரத் செய்திருந்த முஸ்லிம்களுக்கும் இச்செய்தி எட்டியது.

அதைக்கேள்விப்பட்ட இருபது பேர்களுக்கும் மேல் இருந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார் குழு மக்காவுக்கு வந்து பெருமானாரைச் சந்தித்து, அவர்களின் விருந்தினர்களாக உபசரிக்கப்பட்டு, உண்மையை அறிந்துகொண்டு, பெருமானார் யாசீன் ஓதிக்காட்டியபோது கண்ணீர் விட்டு அழுது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு முஸ்லிம்களாகத் திரும்பினர்.

அவர்கள் எழுபதுபேர்கள் என்றும், நஜ்ரான் என்ற நகரிலிருந்து வந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

அவர்களை வழியில் சந்தித்த குறைஷிகள், முக்கியமான அபூ லஹப், அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை எதிர்த்துப் பேசினார்கள். ஆனால் அவர்கள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பொறுமையாகவும் உறுதியாகவும் இருந்தார்கள். அந்தக் கிறிஸ்தவப் பாதிரிமார் குழுவினரைக் குறித்துத்தான் சூரா கஸஸ் என்ற 28வது அத்தியாயத்தின் வசனங்கள் 51 முதல் 55 அவரை அருளப்பட்டன.

28:56. (நபியே!) நீர் நேசிப்பவர்களை (யெல்லாம்) நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது; ஆனால், அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான் – மேலும் நேர்வழி பெற்றவர்களை அவன் நன்கறிகிறான்.

இந்த வசனமானது அபூலஹப் போன்றவர்களை எதிர்த்து பெருமானார் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்ததையும், அவர்களுக்கு மன ஆறுதலையும் கொடுக்கும் பொருட்டு இவ்வசனம் அருளப்பட்டது என்று இந்நூலின் ஆசிரியர் கூறுகிறார்.

எப்படிப் பார்த்தாலும் இது அபூதாலிப் அவர்கள் தொடர்பான வசனமே அல்ல என்பது உறுதி.

28:54. இவர்கள் பொறுமையை மேற்கொண்டமைக்காக இருமுறை நற்கூலி அளிக்கப்படுவார்கள்.

என்ற இந்த வசனத்திலிருந்து அதை ஐயமறப் புரிந்துகொள்ள முடியும். இரண்டு மடங்கு அல்லது இரண்டு முறை நற்கூலி என்பதன் அர்த்தம், அந்த கிறிஸ்தவர்கள் ஏற்கனவே ஈஸா நபிக்குக் கொடுக்கப்பட்ட வேதத்தை ஏற்றுக்கொண்டார்கள், அதற்காக ஒரு நற்கூலி. இப்போது இறுதி வேதமான திருமறையையும் ஏற்றுக்கொண்டார்கள் என்பதற்காக இருமுறை நற்கூலி என்பதே விரிவுரையாளர்கள் தரும் விளக்கமாகும்.

இதற்கிடையில் அபூஜஹ்ல் ஒரு காரியம் செய்தான். பெருமானார் தொழுகையில் சஜ்தாவில் இருக்கும்போது தலையில் கல்லைப்போட்டுக் கொன்றுவிடலாம் என்ற முடிவுடன் வந்து அப்படிச் செயல்பட முயன்றபோது அந்தக் கல் அவன் கையோடு ஒட்டிக்கொண்டது!

அவனது அந்த செய்கைக்குப் பிறகு, அபூ ஜஹ்ல், அபூ லஹப், அபூ சுஃப்யான் போன்ற இஸ்லாத்தின் பரம எதிரிகளைக் கண்டால் வெட்டிக்கொன்று போட்டுவிடவேண்டும் என்ற வெறியில் ஹம்ஸா, அபூதாலிப், அலீ ஆகியோர் இருந்தனர்.

மூன்று ஆண்டு பகிஷ்கரிப்பு

அபூஜஹ்ல், அபூ சுஃப்யான் போன்றோர் ரகசியமாக ஒன்றுகூடி அபூதாலிப் குடும்பத்துக்கும் பெருமானாருக்கும் எதிரான ஒரு திட்டத்தை எழுதி அதை க’அபாவின் தொங்கவிட்டனர். திருமறையின் வெளிப்பாட்டுக்கு முன்னதாக, ‘கஅபாவின் என்ன எழுதி தொங்கவிடப்பட்டாலும் அதற்கு கௌரவம் கொடுத்து செயல்படுவது அரேபியர்களின் வழக்கம். அதன்படி அபூதாலிப் தன் குடும்பத்தினரோடு ஒரு மலைக்கணவாய் இடுக்குப் பகுதியில் போய் தங்கி இருந்தார்கள்.

தண்ணீர், உணவு எதுவும் இல்லாமல் கடுமையான சிரமங்களை அனைவரும் அனுபவித்தார்கள். தோழர்கள் சிலர் ரகசியமாக அவ்வப்போது இரவுகளில் கொண்டுவந்து கொடுத்தாலும் அது கொஞ்சம்கூடப் போதுமானதாக இல்லை. இலைகளையும், தழைகளையும், உலர்ந்த தோலை நெருப்பில் சுட்டுப் பொடியாக்கியும் சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

அந்த நிலையில்கூட பெருமானாரின் உயிருக்கு எதிரிகள் உலை வைத்துவிடலாம் என்ற சந்தேகத்தில் ஒவ்வொரு இரவும் பெருமானாரை இடம் மாற்றி இடம் மாற்றி அபூதாலிப் படுக்க வைத்துக்கொண்டிருந்தார். பெருமானாரின் போர்வைக்குள் தன் மகன்களை மாறிமாறி படுக்க வைத்துக்கொண்டிருந்தார் என்கிறார் வில்லியம் முய்ர்.

ஏன் அப்படிச் செய்தார்? எதிரிகள் உள்ளே நுழைந்து பெருமானாரின் போர்வையோடு சேர்த்து வெட்டினால் போகும் உயிர் தன் மகன்களில் ஒருவரது உயிராக இருக்கட்டும். அது அலீயோ ஜாஃபரோ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது பெருமானாராக மட்டும் இருந்துவிடக்கூடாது!

இரவு நேரத்தில் பாலோ தண்ணீரோகூட இல்லாமல் குழந்தைகள் அழும் குரலைக்கேட்டு அபூ ஜஹ்ல், அபூ லஹப், அபூ சுஃப்யான் போன்றோர் சந்தோஷப்பட்டனர் என்று வில்லியம் முய்ர் எழுதுகிறார்.

ஒருவழியாக மூன்று ஆண்டுகளுக்குப் பின் அந்த துன்பம் முடிவுக்கு வந்தது. க’அபாவில் அவர்கள் தொங்கவிட்டிருந்த சுவடியை கரையான் அரித்திருந்தது. ‘அல்லாஹ்’ என்ற பெயரை மட்டும் விட்டுவிட்டு!

ஆனால் இந்த பகிஷ்கரிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டது அபூதாலிப்தான். அவரது உடல் நிலையும் ஆரோக்கியமும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. பகிஷ்கரிப்பு ரத்தான அந்த ஆண்டிலேயே அபூதாலிப் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இறந்துபோனார்.

இந்த நிலையில் அபூ ஜஹ்ல், அபூ லஹ்ப், அபூ சுஃப்யான் ஆகியோர்மீது எத்தகைய கடுமையான கோபம் முஸ்லிம்களுக்கு இருந்திருக்கும் என்பதை யூகிக்க முடியும். அபூ ஜஹ்லைக் கண்ட இடத்தில் கொல்ல வேண்டும் என்று அபூதாலிப் சூளுரைத்திருந்தார். அப்படி இருக்க, அவர் மரணப்படுக்கையில் இருக்கும்போது, ’நீங்கள் அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே இருக்க வேண்டும்’ என்று அவர் பக்கத்தில் அமர்ந்து அபூ ஜஹ்ல் கேட்டுக்கொண்டே இருந்ததாகச் சொல்லப்பட்டுவதை எப்படி நம்ப முடியும்?

அப்படியே அவன் அங்கே வந்திருந்தாலும் சுற்றி இருந்த ஹம்ஸா, அலீ, உமர் போன்றவர்கள் அவனை உயிருடன் விட்டிருப்பார்களா? (பக்கம் 17).

அப்துல் முத்தலிபுடைய மார்க்கம் எது

ஒரு வாதத்துக்காக, அபூ ஜஹல் அப்படிச் சொன்னதாக வைத்துக்கொண்டாலும், அப்துல் முத்தலிபுடைய மார்க்கம் எது?

முத்தலிபின் கோத்திரத்தினரும், பனூ ஹாஷிம்களும் அல்லாஹ்வையே வணங்கி வந்தார்கள் என்பதே வரலாறாகும் (பக்கம் 20).

அப்ரஹா கஅபாவை அழிக்க வந்தபோது அவனை தன் ஒட்டகங்களைத் திருப்பிக் கொடுக்குமாறு கேட்டு அப்துல் முத்தலிப் அவனிடம் போனார். ’நான் உங்கள் க’அபா ஆலயத்தையே அழிக்க வந்திருக்கிறேன், நீ என்ன உன் ஒட்டகங்களைக் கேட்டு வந்திருக்கிறாயே’ என்று எகத்தாளமாக அப்ரஹா சொன்னபோது, ‘என் ஒட்டகங்களுக்கு எஜமானன் நான். க’அபாவுக்கு எஜமானன் அல்லாஹ். அதை அவன் பார்த்துக்கொள்வான்’ என்று அப்துல் முத்தலிப் சொன்ன பதில் பிரபலமானது (பக்கம் 20). பெருமானாரின் தந்தையின் பெயரும் ’அல்லாஹ்வின் அடிமை’ (அப்துல்லாஹ்) என்பதுதானே?!

அப்ரஹா வந்த அன்று குறைஷிகளையெல்லாம் மலைப்பகுதியில் பாதுகாப்பாக இருக்குமாறு அனுப்பி வைத்துவிட்டு, தன் குடும்பத்தினருடன் க’அபாவுக்குச் சென்று, க’அபாவின் கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு, ’யா அல்லாஹ், உனது அடிமை தன் வீட்டைப் பாதுகாக்கிறான். உன் வீட்டை நீ பாதுகாத்துக்கொள்வாயாக’ என்று அல்லாஹ்விடம் அப்துல் முத்தலி0ப் பிரார்த்தித்துக் கேட்டுக்கொண்டது வரலாறு (பக்கம் 20).

மேலும் இப்ராஹீம் நபி தன் சந்ததியினரை இமாமாக, தலைவராக ஆக்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் கேட்டபோது, நேர்மையானவர்களை மட்டுமே உங்கள் சமூகத்துக்குத் தலைவராக ஆக்குவேன், அநியாயக்காரர்களை ஆக்க மாட்டேன் என்று அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் (2:124). இந்த வசனத்தின்படியும் தன் சமுதாயத்தினரால் மிகவும் விரும்பப்பட்ட, மதிக்கப்பட்ட தலைவராக இருந்த அப்துல் முத்தலிபுக்குப் பிறகு அபூதாலிப் விளங்குகிறார் (பக்கம் 21).

அதனால்தான் கிட்டத்தட்ட 42 ஆண்டுகள் பெருமானாரை அல்லாஹ் அபூதாலிபின் பாதுகாப்பில் விட்டு வைத்திருந்தான்.

ஆனால் இப்ராஹீம் நபியின் சந்ததியில் வந்திருந்தாலும் அபூ லஹப், அபூ ஜஹ்ல் போன்ற தீயோர்கள், காஃபிர்கள் நரகத்துக்குப் போவது இறைநியதியாகும் (பக்கம் 22).

நிராகரிப்பாளர்கள் யார்

அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப யார் நடக்கவில்லையே அவர்கள் நிராகரிப்பாளர்கள், (காஃபிர்), அநீதி இழைப்பவர்கள் (ஜாலிம்), வரம்பு மீறும் பாவிகள் (ஃபாசிக்) என்று இறைவன் திருமறையில் கூறுகிறான். (5:44, 45, 47).

கொள்கையளவில் இறைவனின் சட்டத்தை ஏற்றுக்கொண்ட ஒரு கூட்டம் அல்லது நாடு நடைமுறையளவில் கூடுதல் குறைவாக நடந்துகொண்டாலும், இறைச்சட்டத்துக்கு மாற்றமாக நடந்துகொண்டாலும், அந்த நாடு அல்லது கூட்டம் முஸ்லிம் சமுதாயத்தை விட்டு வெளியேறிவிடவில்லை என்றாலும், தன் இறைநம்பிக்கையை குஃப்ர், பாவம், அநீதி ஆகியவற்றோடு கலக்கச் செய்துவிட்டதாகவே பொருள் கொள்ள வேண்டும் (பக்கம் 23).

சிலர் சில விவகாரங்களில் இறைவனுக்குக் கீழ்ப்படிந்தும், இன்னும் சில விவகாரங்களில் கீழ்ப்படியாமலும் நடக்கின்றனர் என்றால், அவர்களுடைய வாழ்வில் இறை நம்பிக்கை, இறைவனுக்குக் கீழ்ப்படிதல் ஆகியவற்றோடு, இறை நிராகரிப்பு, அநீதி, பாவமிழைப்பு போன்றவை கலந்திருப்பதாகவே அர்த்தம். (பக்கம் 24).

இவர்கள் எந்த விகிதாச்சாரத்தில் அவற்றைக் கலந்துவிட்டிருக்கின்றனரோ அந்த விகிதாச்சாரத்தில் இறைவனுக்குக் கீழ்ப்படியும் போக்கும், மாறு செய்யும் போக்கும் அவர்கள் வாழ்வில் கலந்து நிற்கும். (பக்கம் 24).

இன்றைய மத்திய கிழக்கில் இந்த நிலமை இருப்பதைக் காணமுடியும். எகிப்தில் குர்’ஆனின் கட்டளைகள் புறக்கணிக்கப்பட்டு ஃப்ரான்ஸிய சட்டங்களே இன்று நடைமுறையில் உள்ளன. முஸ்லிம்கள்அதிகமாக உள்ள இந்தோனேஷியாவில் நடைமுறையில் ’பஞ்சசீல’ சட்டம்தான் அமுல்படுத்தப்படுகிறது. துருக்கியில் இன்று அமெரிக்க, பிரிட்டிஷ் சட்டங்கள் மன்னரால் அங்கீகரிக்கப்பட்டு பின்பற்றப்படுகின்றன. பாகிஸ்தானில் பிரிட்டானிய ரோமச் சட்டமே அரசியல் சட்டமாக பின்பற்றப்படுகிறது. விரும்பியோ விரும்பாமலோ இத்தகைய சட்ட ஆளுமையின் கீழ்தான் வாழ்ந்து மடிய வேண்டிய துர்பாக்கிய நிலமையில் இருக்கிறோம் (பக்கம் 25).

இதில் வேடிக்கை என்னவென்றால், இறைவனையும் அவனது கட்டளைகளையும் முழுமையாக ஏற்றுக்கொண்டோம் என்று சொல்கின்ற எமது நிலைமையின் தளமே ஆட்டம் கண்டுகொண்டிருக்க, நாம் நம் துர்பாக்கிய நிலைமையை மறந்து, இஸ்லாமிய கொள்கையை உலகில் ஸ்தாபிக்க அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்களது தூதுத்துவத்திற்கு மிகப்பெரும் பாதுகாப்பு அரணாக அல்லாஹ்வால் அனுமதி அளிக்கப்பட்ட அந்தப் பெரியவரை இறைநிராகரிப்பாளர் என்றும் நரகவாதி என்றும் தீர்ப்பு வழங்குவதுதான்! (பக்கம் 25).

அரேபியாவில் முஷ்ரிக் அல்லது காஃபிர்

பெருமானாரின் காலத்தில் அரேபியாவில் ஒரு இறைநிராகரிப்பாளரையோ அல்லது இணைவைப்பாளரையோ எப்படி இனம் கண்டுகொண்டார்கள் என்பதற்கு அருமையானதொரு விளக்கத்தை இந்நூலாசிரியர் கொடுக்கிறார். பெருமானாரை யாரெல்லாம் ஏற்றுக்கொள்ளவில்லையோ, யாரெல்லாம் எதிர்த்தார்களோ அவர்கள்தான் அந்த இரு கூட்டத்தினரும் (பக்கம் 26).

ஆனால் ஹஸ்ரத் அபூதாலிப் அவர்களோ பகிரங்கமாக பெருமானாரை ஆதரித்ததுடன், தன் குடும்பத்தாரையும் பெருமானாருடன் இணைந்து செயல்படுமாறு தூண்டினார். அதன் காரணமாகவே இஸ்லாத்தின் எதிரிகளின் எதிர்ப்பையும் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டார் (பக்கம் 26).

ஒரு பலவீனமான நபிமொழி பலவழிகள் மூலமாக அறிவிக்கப்படுமானால் அது சஹீஹானதாக கருதப்படும். அப்படித்தான் இந்த பலவீனமான நபிமொழியும் சஹீஹானதாக மாறி புகாரியில் இடம் பிடித்துள்ளது (பக்கம் 27).

அல்லாமா ஷிப்லி நுஃமானி அவர்கள் எழுதிய சீரத்துந் நபி என்ற ஆய்வு நூலில், அபூதாலிப் தன் கடைசிக் கணத்தில் மெல்ல உதடுகள் அசைத்து கலிமா சொன்னதாகவும், அதை அப்போது முஸ்லிமாகாமல் இருந்த அப்பாஸ் அவர்கள் உதட்டருகே காதுகளைக் கொண்டுவைத்து கேட்டு பெருமானாரிடம் சொன்னதாக எழுதியுள்ளார் (பக்கம் 27)

அபூதாலிப் அவர்கள் கலிமா சொல்லாமல் மரணித்தார்கள் என்ற நபிமொழியை அறிவிக்கும் நபித்தோழர் முசய்யப் பற்றி ஷிப்லி நுஃமானி அதே நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார். ’அவருக்கு இந்த நபிமொழியை அறிவிக்க எந்த அதிகாரமும் இல்லை. ஏனெனில் அவர் மக்கா வெற்றிக்குப் பிறகுதான் இஸ்லாத்தை ஏற்று விசுவாசியானார். அபூதாலிப் அவர்களின் மரணத்தருவாயில் அவர் அங்கிருக்கவில்லை’ என்று எழுதியுள்ளார் (பக்கம் 28).

புகாரியில் உள்ள அபூதாலிபுக்கு எதிரான இந்த ஒரு ஹதீஸைத்தவிர வேறு எந்த வரலாற்றுக் குறிப்பும் அவருக்கு எதிராக இல்லாமலிருப்பதே அவர் இறைவிசுவாசி என்பதற்கு உறுதியான அத்தாட்சியாகும் என்று முடிக்கிறார் (பக்கம் 28).

9:23. ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால், அவர்களை நீங்கள் பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால், அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.

இந்த இறைவசனத்தின்படி, அபூதாலிப் அவர்கள் காஃபிராக இருந்திருப்பாரேயானால் அவரை 42 ஆண்டுகள் பெருமானாரின் பாதுகாவலராக அல்லாஹ் எப்படி விட்டிருப்பான் என்று கேட்கிறார் (பக்கம் 36).

நியாயமான, சிந்திக்க வேண்டிய கேள்வி.

காரணம் என்ன?

பெருமானார் மீதான அபூதாலிபின் அன்புக்கும் பராமரிப்புக்கும் பாதுகாப்புக்கும் காரணம் என்ன? தன்னுடைய தம்பி மகன் என்பது மட்டும்தானா? நிச்சயமாக இல்லை. தன்னுடைய மகன்களின் உயிர் போனாலும் பரவாயில்லை, பெருமானாரின் உயிர் முக்கியம் என்ற நினைப்புக்கு ரத்த பந்தம் மட்டும் காரணமல்ல. பெருமானார் இறைவனின் இறுதித்தூதர் என்ற உண்மை பெருமானாரின் சின்ன வயதிலிருந்தே அபூதாலிப் அவர்களுக்குத் தெரிந்திருந்ததுதான். இந்த விஷயத்தை ஆசிரியரும் உறுதிப்படுத்துகிறார்.

அபூதாலிப் வியாபார விஷயமாக சிரியாவுக்குச் சென்றபோது 12 வயதாகியிருந்த பெருமானாரையும் அழைத்துச் சென்றார். அங்கே புகைரா என்ற கிறிஸ்தவப் பாதிரியார் பெருமானாரைப் பார்த்தவுடன், அவர்கள்தான் வாக்களிக்கப்பட்ட இறுதி நபி என்று புரிந்துகொண்டு, அபூதாலிபிடம் அதுபற்றிக்கூறி பாதுகாப்பாக பெருமானாரை கவனித்துக் கொள்ளும்படிக் கூறிய வரலாறு நாமறிந்ததே.

பெருமானாருக்கு அபூதாலிப் அவர்கள் கொடுத்த அபரிமிதமான பாதுகாப்பையும் பொழிந்த அன்பையும் இதோடு நாம் பொருத்திப் பார்க்க வேண்டும். ஆசிரியரும் இதுபற்றிப் பேசுகிறார் (பக்கம் 42).

அல்லாமா அமீனி என்பவர் ’அல் காதிர்’ என்ற தனது நூலின் எட்டாம் பாகத்தில் அபூதாலிப் அவர்கள் முஸ்லிம்தான் என்பதற்கான பல ஆதாரங்களைக் கொடுக்கிறார். அபூதாலிப் அவர்களின் பல கவிதைகள் மூலமாகவும் இந்த உண்மை அறியப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

புத்தகத்தை இத்துடன் முடித்துவிடாமல் நேர்வழி காட்டப்பட்ட நான்கு கலீஃபாக்களின் காலத்துக்குப் பிறகு எப்படி தீய விஷயங்கள், பேராசை, கொலை, கொள்ளை போன்றவையெல்லாம் ஊடுறுவின என்றும் மௌதூதி அவர்களின் நூலிலிருந்து எடுத்துக்காட்டி நூலை முடிக்கிறார்.

அபூதாலிப் அவர்கள் முஸ்லிமாகத்தான் வாழ்ந்தார் என்பதற்கான எனக்குத் தெரிந்த மேலும் சில ஆதாரங்கள்:

அவரது மனைவி ஃபாத்திமா பின்தி அஸத் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர். அன்னை கதீஜாவுக்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட இரண்டாவது முஸ்லிம் பெண் அவர் என்று விக்கிபீடியாகூடக் கூறுகிறது.

இதன் உட்குறிப்பு என்னவெனில், மனைவி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, கணவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அந்த மனைவியோடு அவர் குடும்பம் நடத்த முடியாது. அவர் விவாகரத்து செய்யப்படுவார். ஏனெனில் ஒரு இறை மறுப்பாளரையோ, இணைவைப்பவரையோ கணவராக ஒரு முஸ்லிம் பெண் ஏற்றுக்கொள்ள அனுமதி கொடுக்கப்படவில்லை. அப்படிப்பட்ட திருமணத்தை திருமறையும் அனுமதிக்கவில்லை (2:221)

பெருமானாரின் மூத்த மகளார் ஜைனப் அவர்களின் கணவர் அபுல் ஆஸ் என்பவர் ஆரம்பத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தார். பத்ருப்போரில் முஸ்லிம்களை எதிர்த்துப் போரிட்டுத் தோற்று கைதியாக சிறைப்பிடிக்கப்பட்டார்.

அவரை விடுதலை செய்ய ஜைனப் அவர்கள் தன் தாயார் கதீஜா அவர்கள் தனக்குக் கொடுத்திருந்த வண்ணக்கற்களால் ஆன ஒரு மாலையைக் கொடுத்தனுப்பினார். அதைப் பார்த்ததும் தன் மனைவியின் நினைவு வந்ததால், அதைப் பெற்றுக்கொள்ளாமலே அவரை விடுதலை செய்து பெருமானார் அனுப்பினார்கள்.

அவர் இஸ்லாத்தில் இணைந்து, மதினாவுக்கு வந்த பின்னர்தான் மீண்டும் கணவன் மனைவியாக வாழ அனுமதி கிடைத்தது. அதற்குமுன் ஒருமுறை அவர் மதினா வந்தபோது ஒரு விருந்தினராகத்தான் தன் மனைவி வீட்டில் தங்க அனுமதி கிடைத்தது அவருக்கு.

அபூதாலிப் அவர்கள் தன் மனைவி ஃபாத்திமாவோடுதான் இறுதிவரை வாழ்ந்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிமாகத்தான் வாழ்ந்தார் என்பதற்கு இதுவே உறுதியான ஆதாரமாக உள்ளது.

என் கருத்தை நீல நிறத்திலும் ஆசிரியர் சொன்னதை சிவப்பிலும் கொடுத்துள்ளேன்.

பெரியோர்களைப் பற்றிப் பேசும்போது இவர் இப்படித்தான் அவர் அப்படித்தான் என்று பேசுவது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல. அதனால்தான் ஹஸ்ரத் அலீ அவர்களின் கிலாஃபத்தை ஏற்றுக்கொள்ளாமல் பிரச்சனைகள் செய்த, ஹஸ்ரத் அலீ அவர்களை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை குத்பாவிலும் வசைபாட உத்தரவிட்ட சிரியாவின் ஆளுநராக இருந்த முஆவியாவையும் நாம் மரியாதையோடு ஹஸ்ரத் முஆவியா என்றுதான் குறிப்பிடுகிறோம்.

சிந்திப்போம். கண்ணியத்தோடு பேசுவோம். இன்ஷா அல்லாஹ்.

27.06.21. இரவு 11.14

About நாகூர் ரூமி

A spiritualist and a writer.
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

2 Responses to அபூதாலிப் நரகவாதியா?

 1. Seyed abu thahir says:

  உங்களுக்கும் நூல் ஆசிரியர் அவர்களுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக.
  அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரத்யேகப் பேரன்பும் பரிந்துரையும் உண்டாகும்.

  உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உள்ளம் குளிரச் செய்யும் வகையில் ஆய்வு மேற்கொண்டு எழுதியுள்ளீர்கள். மேற்கொண்டும் ஆய்வு செய்யுங்கள்.
  அல்லாஹ்வின் உதவி உங்கள் மீது சொரியட்டும்.

 2. நாகூர் ரூமி says:

  நன்றி. ஜஸாகல்லாஹ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s