நபிமொழிகளின் உளவியல் –1

அறிமுகம்

மனிதர்கள் உடலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உள்ளத்துக்குக் கொடுப்பதில்லை. ஆனால் மனித மனம்தான் எல்லாவற்றையும்விட முக்கியமானது. எல்லாப் பிரச்சனைகளுக்கும் மனமே மூல காரணமாக உள்ளது.

அமெரிக்க அதிபர் ’டொனால்டு ட்ரம்ப்’ என்றுகூட சொல்லத்தெரியாமல் ஒரு துணைக்கண்டத்தின் பிரதமர் பெருங்கூட்டத்தின்முன் தவறாக அப்பெயரை ’டோலான் ட்ரம்ப்’ என்று வெட்கமில்லாமல் கேவலமாக உச்சரிக்கிறார் எனில் தவறு அவரைத் தேர்ந்தெடுத்த நாட்டின் பைத்தியக்கார மனநிலையில் உள்ளது. உளவியல்ரீதியாக அந்த நாடு நோயுற்றுள்ளது என்பதற்கான அடையாளம் அது. எல்லா விளைவுகளையும் உளவியலே தீர்மானிக்கிறது.

உடலியல் முக்கியம்தான். ஆனால் அதைவிட முக்கியம் உளவியல். பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அவர்களின் பொன்மொழிகளாகிய நபிமொழித்தொகுப்புக்களையும் உன்னிப்பாகப் படிப்பவர்களுக்கு இது விளங்கிவிடும்.

நோக்கத்தின் முக்கியத்துவம்

சஹீஹ் புகாரி நபிமொழித் தொகுப்பில் உமர் இப்னு கத்தாப் அவர்கள் அறிவிக்கும் முதல் நபிமொழி எண்ணத்தின் முக்கியத்துவத்தைப் பற்றித்தான் பேசுகிறது. ’இன்னமல் அ’மாலு பிந் நிய்யாத்’ என்பதுதான் அது.

’நிச்சயமாக நிய்யத் எனப்படும் எண்ணங்களை, நோக்கத்தைப் பொறுத்தே செயல்கள் உள்ளன’ என்று சுருக்கமாக அது உள்ளது. அதாவது ஒருவர் என்ன நினைக்கிறாரோ அதைப்பொறுத்தே, அதையொட்டியே அவரது செயல்களும், அவற்றுக்கான பலன்களும், விளைவுகளும் இருக்கும்.

ஒரு பெண்ணை மணப்பதற்காக ஒருவர் மக்காவிலிருந்து மதினாவுக்குச் சென்றதை ஒட்டி இந்த நபிமொழி சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும் பொதுவாக நம் செயல்களின் பின்னால் உள்ள எண்ணத்தை அல்லது நோக்கத்தை ஒட்டியே அதன் பலன்கள் இருக்கும் என்பது இந்த நபிமொழியின் குறிப்பு.

தண்ணீர் கிடைக்காத, இல்லாத நேரத்தில், அல்லது நீர் உடலில் பட்டால் பிரச்சனை ஏற்படும் என்ற நேரத்தில் மண்ணைக்கொண்டு ’தயம்மம்’ செய்து கொள்ளலாம் என்ற அனுமதிகூட ‘வளூ’ செய்யவில்லையே என்ற எண்ணத்தை மாற்றுவதற்காகத்தானே?!

எனக்குத் தெரிந்த அலுவலக ஊழியர் ஒருவர் மூன்றாவது முறையாக மனைவியோடு அமைச்சகம் மூலமாக ஹஜ் செய்யப்போவதாக சொன்னார். நாமாகச் செல்வதற்கும் அமைச்சகம் மூலமாகச் செல்வதற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டேன். ஒரு குழந்தையைப் பார்ப்பதுபோல என்னப் பார்த்துவிட்டு, எல்லா செலவுகளையும் அமைச்சகமே ஏற்றுக்கொள்ளும் என்றும், அவர் மனைவியில் சம்பளத்தையும் ரியாலாகக் கொடுத்துவிடுவார்கள் என்றும் சொன்னார்.

உங்கள் மனைவியின் சம்பளம் எவ்வளவோ அதைத்தானே ரியாலாகக் கொடுப்பார்கள் என்றேன். அவர் சிரித்துவிட்டு, இல்லை என் மனைவிக்கு 15000 ரூபாய் சம்பளம். ஆனால் அமைச்சகம் 15000 ரியால் கொடுக்கும். அது கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் வரும் என்றார்.

அதைச் சொன்னபோது அவர் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தைப் பார்க்க வேண்டுமே! மூன்று முறைக்கு மேல் ஹஜ் செய்ய அனுமதி இல்லையே என்ற வருத்தமும் அவர் முகத்தில் தெரிந்தது!

’பெருமானாரின் பள்ளிவாசலில் நீங்கள் தொழும்போது எனக்காகவும் துஆ செய்யுங்கள்’ என்று நான் அவரிடம் சொல்லும் வழக்கமுண்டு. ஆனால் கடந்த இரண்டு முறை அப்படி அவரிடம் சொன்னதற்காக நான் இறைவனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். மூன்றாவது முறை அவரிடம் நான் எதுவும் சொல்லவில்லை.

ஹஜ் செய்வதன் நோக்கம் ஹஜ் செய்வதாக இருக்க வேண்டும். ஆனால் அவர் சென்றதன் நோக்கம் சம்பளத்தைவிட பல மடங்கு பணம் பெறுவதாக இருந்தது. அவர் செய்யவிருந்த புனிதப்பயணத்தில் பாவத்தை சம்பாதிக்கும் அசிங்கமான, அந்தரங்கமான உளவியல் இருந்தது. அது புனித நோக்கத்தை இழிவு படுத்துவதாக இருந்தது. எனவே அவருடைய ஹஜ்ஜில் ஹஜ் செய்ததற்கான பலன் கிடைக்க வாய்ப்பில்லை. இது அவருக்கேகூட புரியாமல் இருந்திருக்கலாம்.

 இது போன்ற பல உதாரணங்களைச் சொல்லலாம். இதைத்தான் அழகாக சஹீஹ் புகாரியின் முதல் நபிமொழி கூறுகிறது.

மனித உடலில் ஒரு சதைத்துண்டு உள்ளது. அது நன்றாக இருந்தால் உடல் முழுக்க நன்றாக இருக்கும். அது கெட்டுப்போனால் உடல் முழுக்க கெட்டுப்போகும். அதுதான் இதயம் என்று பெருமானார் சொன்னது தோழர் அந் நுஃமான் இப்னு பஷீர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது (சஹீஹ் புகாரி, எண் 52).

அரபியில் இதயம் என்பதற்கு ‘கல்ப்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ’ஃபுவாத்’ என்றொரு சொல்லும் உண்டு. இந்த நபிமொழியில் இதயம் என்பது நமது உடலுக்குத் தேவையான ரத்தத்தை உடலுக்குள் அனுப்பும் உறுப்பான இதயத்தை மட்டுமின்றி, ’உள்ளம் என்பது ஆமை, அதில் உண்மை என்பது ஊமை’ என்ற பாடலில் வருகிற உணர்ச்சிகளின் பிறப்பிடமாக உள்ள இதயத்தையும் குறிக்கும்.

திருமறை முதன் முதலாக அருளப்பட்டபோது, ’இக்ர’உ’ என்ற வசனத்தை முதலில் வானவர் ஜிப்ரயீல் ஓதச்சொன்னபோது பெருமானார் எனக்கு ஓதத்தெரியாதே என்று கூறினார்கள். பின்பு அவர்களை மூன்று முறை தன் நெஞ்சோடு நெஞ்சாக அணைத்து ஜிப்ரயீல் விட்ட பிறகே பெருமானார் ஓதினார்கள்.

அந்த நெஞ்சமானது வெறும் உறுப்பு அல்ல. அது இறைவனின் அர்ஷாக இருக்கும் இதயமாகும். உள்ளம் என்று சொல்கிறோமே அந்த இதயம். உள்ளம் என்பது ஒரு உறுப்பல்ல. அன்பு, காதல், கருணை, நம்பிக்கை, பக்தி போன்றவற்றையெல்லாம் வெளிப்படுத்தும் உள்ளமானது உறுப்பல்ல. அது ஒரு குறியீடு. உளவியலில் ஆராயப்படும் உள்ளம். எனவே அது கெட்டுப்போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென்பதும் இந்த நபிமொழியின் குறிப்பாகும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

நன்றி ‘இனிய திசைகள்’, ஜூலை 2021.

About நாகூர் ரூமி

A spiritualist and a writer.
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

2 Responses to நபிமொழிகளின் உளவியல் –1

  1. senthil kumar says:

    உடலையும் மனதையும் பற்றி அருமையான விளக்கத்தை அறிந்து கொண்டேன்

  2. Sent from Yahoo Mail on Android

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s