’இஸ்லாமும் ஜீவகாருண்யமும்’ என்பது கவி. கா.மு.ஷரீஃப் அவர்கள் எழுதிய ஒரு நீண்ட கட்டுரை. அல்லது ஒரு சின்ன புத்தகம். கிட்டத்தட்ட அறுபது பக்கங்கள் கொண்ட ஒரு விஷயத்தை கட்டுரை என்றும் சொல்லமுடியாது. புத்தகமென்றும் சொல்லிவிடமுடியவில்லை. வடிவம் எதுவானால் என்ன? விஷயம்தானே முக்கியம்? வசதி கருதி அதைக்கட்டுரை என்றே குறிப்பிடுகிறேன்.
அந்தக்கட்டுரை பற்றி சில மாதங்களுக்கு முன்பே நண்பர் யுகபாரதி சொல்லியிருந்தார். அவரும் என்னைப்போலவே படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருப்பவர். அந்தக் கட்டுரையைப் படித்தபிறகுதான் உறுத்தலின்றி அசைவஉணவு சாப்பிடமுடிகிறது என்றும் சொன்னார். இதே வார்த்தைகளில் அல்ல. ஆனால் இந்த அர்த்தம் தொனிக்கும் வகையில். அன்றிலிருந்து எனக்கந்தக் கட்டுரையை எப்படியாவது படித்துவிடவேண்டும் என்ற அவா இருந்துகொண்டே இருந்தது. நீங்கள் என்னைப் பார்க்க வரும்போது அவசியம் அதைக்கொண்டு வாருங்கள் என்று நானும் சொல்லிக்கொண்டே இருந்தேன்.
ஆனால் அந்த நாள் சென்ற ஞாயிறன்றுதான் வாய்த்தது. என்னைப் பார்க்க மனைவி, மகள் சகிதமாக வந்திருந்தார். வழக்கம்போல பிரியாணி, பொரிச்ச மீன் என விருந்து. எனக்கும் கிடைத்தது! இல்லையெனில், என் இதயத்தைக் காரணம் காட்டி என் இதயதெய்வம் மறுத்துவிடும்!
வந்தவர், அந்தக் கட்டுரை எங்கோ தொலைந்துவிட்டதால், அவரது எல்லாக் கட்டுரைகளும் அடங்கிய ஒரு மொத்தமான நூலைக்கொண்டுவந்து கொடுத்து, இதில் அக்கட்டுரை உள்ளது, ஆனால் படித்துவிட்டு திருப்பிக் கொடுத்துவிடவேண்டும் என்று சொல்லிக்கொடுத்துவிட்டுப் போனார். அதில் உள்ள சில கட்டுரைகள் என்னிடம் ஏற்கனவே தனி நூல்களாக உள்ளன.
போகட்டும். இஸ்லாமும் ஜீவகாருண்யம் கட்டுரையை வாசித்து முடித்தேன். மூன்று விஷயங்கள் அதிலிருந்து தெரிந்துகொண்டேன்.
- இறுதித்தூதர் அவர்களின் வாழ்க்கையில் நடந்த நமக்குத் தெரிந்த சில நிகழ்வுகளுக்குள்ளிருந்த சில தெரியாத நிகழ்வுகள்.
- காமு. ஷரீஃப் அவர்களின் தர்க்கரீதியான எழுதுமுறை.
- யார் மனதையும் புண்படுத்தாத பண்பான நடை.
உதாணமாக, பெருமானாரும் ஹஸ்ரத் அபூபக்கரும் தௌர் குகையில் தங்கியிருந்தபோது குகையில் இருந்த ஒரு பொந்திலிருந்து ஒரு பாம்பு வந்தது. அது பெருமானாரைக் கொத்திவிடக்கூடாது என்பதற்காக, அபூபக்கர் தன் காலை அந்தப்பொந்தில்வைத்து மூடினார். அதனால் அந்தப்பாம்பு அவர் காலைத்தீண்டியது. அபூபக்கரின் வேதனைக்கண்ணீர் பட்டு பெருமானார் விழித்தெழுந்து, நடந்ததைத் தெரிந்துகொண்டு, தன் உமிழ்நீரைத்தடவ விஷமிறங்கி அபூபக்கர் குணமடைந்தார்.
ஆனால் ஒரு பொந்தல்ல. இரண்டு மூன்று பொந்துகள் இருந்துள்ளன. தன் மேல்துண்டைக் கிழித்துத்தான் முதலில் அபூபக்கர் அந்தப்பொந்துகளையெல்லாம் அடைத்துள்ளார். ஆனால் பொந்து மாற்றிமாற்றி அந்தப் பாம்பு வந்துகொண்டிருந்தது. கடைசியில் துணியில்லாமல் போனபிறகுதான் தன் காலைவைத்து அபூபக்கர் கடைசிப்பொந்தை அடைத்துள்ளார்.
இதுமட்டுமன்று. அந்தப் பாம்பிடம் பெருமானார் பேசியுள்ளார்கள். நாங்கள் உனக்கு எந்தத் தீங்கும் செய்ய வரவில்லையே, பின் ஏன் இவரைத்தீண்டினாய் என்று அவர்கள் கேட்க, இந்தக்குகைக்கு நீங்கள் வருவீர்கள் என்றும், அப்போது இக்குகை ஒளிமயமாகவும், நறுமணம் கமழ்ந்துகொண்டும் இருக்கும் என என் முன்னோர் கூறியுள்ளார்கள். அதேபோல இன்று இருந்தது. எனவே உங்களைப் பார்க்கவேண்டுமென்றுதான் நான் வந்தேன். இவர் என்னை வரவிடாமல் தடுத்துக்கொண்டே இருந்ததால் கொத்தினேன் என்று அந்தப் பாம்பு பதில் சொன்னதாக எழுதியுள்ளார்.
பாம்பு பேசுமா? அதற்கு அரபி தெரியுமா என்றெல்லாம் கேட்பது அவநம்பியாளர்களின் வாதம். நபிமார்களும், இறைநேசர்களும் மிருங்கள், பறவைகளோடெல்லாம் பேசியுள்ளார்கள். அதற்கு மொழி தேவையில்லை. புரிந்துகொண்டால் போதும்.
ஜீவகாருண்யம் என்பது உயிர்களிடத்தில் பரிவு காட்டுதல், அன்பாக நடந்துகொள்ளுதல். உணவுக்காக சில நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதிக்கப்பட்ட மிருங்களையும் பறவைகளையும் புசிப்பதற்கும் அதற்கும் தொடர்பில்லை என்பதை மிக வலுவாகவும், ஆதாரப்பூர்வமாகவும் கா.மு.ஷரீஃப் நிரூபிக்கிறார்.
இந்துமத சகோதரர்களில் பொதுவாக பிராமணர்கள் மட்டுமே சைவ உணவுக்காரர்களாக உள்ளார்கள். அதிலும் சிலர் முட்டை சாப்பிடுவார்கள். என் பிராமண நண்பர்கள் சிலர் அசைவமும் சாப்பிடுவார்கள்.
பெங்காலிகள் எல்லாருமே மீன் சாப்பிடுவார்கள். ஞானி பரமஹம்சர் உட்பட. “மிருக உணவு பக்தனுக்கு ஏற்றதல்ல. அதே சமயம், ஒருவன் இறைவனை நேசித்தால், பன்றிக்கறி சாப்பிட்டாலும் பிரச்சனையில்லை. இறையருள் கிடைக்கும். காமினி காஞ்சனையில் இருக்கும் ஒருவன் அரிசியும் பாலும் மட்டுமே உண்டாலும் அவனுக்குக் கேடுதான். இறைவனை அடையவேண்டும் என்ற உணர்வோடு மாட்டுக்கறி சாப்பிட்டாலும் அது கடவுளர்களின் உணவைப்போன்றதாகும்” என்பது பரமஹம்சரின் கூற்று.
ஸ்வாமி விவேகானந்தர் அசைவம் சாப்பிடுவார் என்பது தெரியுமா? “நான் மாமிசம் உண்கிறேன். இல்லை என்று சொல்லவில்லை” என்று அவரே கூறியுள்ளார். (நூல்: ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் திரட்டு பக்கம் 466).
ரிக், யஜூர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு ஆரிய வேதங்களிலும் புலால் உண்பதைத் தவறு என்றோ, அது கூடாது என்றோ சொல்லப்படவில்லை என்கிறார். அப்படிப்பட்ட ஒரு வசனமோ, தனிச்சொல்லோ எங்காவது உள்ளதா என்று கேட்கிறார். இந்த நான்கு வேதங்களுமே யாகங்களை வலியுறுத்துகின்றன. யாகம் என்பதே உயிர்ப்பலியை அடிப்படையாகக் கொண்டது என்கிறார். வங்காளத்தில் உள்ள பிராமணர்கள் மீன் புலால் அல்லவே என்கிறார்கள். இதேநிலைதான் மேற்குக்கரைப்பகுதியிலுள்ள கொங்கணிய பிராமணர்களிடத்திலும் உள்ளது. காஷ்மீரத்து பிராமணர்கள் மான் உணவையே புலாம் உணவாக ஒப்புக்கொள்வதில்லை என்கிறார் (பக்கம் 739).
பிராமணர்களைத்தவிர மற்ற இந்து ஜாதியினர் மாரி, காளி, காடன், கருப்பன், மாடன், துர்க்கை போன்ற சிறு தெய்வங்களுக்கு மிருகங்களைப் பலியிடுவது இன்றுவரை நடைமுறையில் உள்ளது. ஆடு, மாடு, எருமை, பன்றி, சேவல், கோழி போன்றவற்றையெல்லாம் பலிகொடுக்கிறார்கள். ஆரியப்பிரிவு யாகத்தில் ஆடு, புனிதமாகக் கொண்டாடுகின்ற பசு, குதிரை போன்றவற்றை உயிருடனோ அல்லது வெட்டியோ போட்டு அதன் சதை கரையுமளவுக்கு வேகவிட்டு, ‘அவிர்ப்பாகம்’ என்கிற பெயரில் உட்கொள்வதை புனிதம் நிறைந்ததாகக் கருதி வந்திருக்கிறார்கள் என்பது வரலாறு (பக்கம் 740).
கண்ணப்ப நாயனார் சிவலிங்கத்துக்கு பன்றிக்கறியை படையலாக அளித்து வணங்கினார். அவரது செயலை சிவன் ஏற்றுக்கொண்டதால் அது அனுமதிக்கப்பட்டது என்று ஆகிறதல்லவா? (பக்கம் 743).
கௌதம புத்தருக்கு செல்வந்தரும் வணிகர்களும் கொடுத்த விருந்தில் புலால் உணவு முக்கிய இடம்பெற்றிருந்தது. புத்தர் இறந்து போவதற்கு முன் சுந்தன் என்பவர் கொடுத்த விருந்தில் பன்றிக்குட்டியின் இறைச்சி இருந்தது (பக்கம் 746). புத்தர் புலால் உண்ணாமையை ஆதரித்தவரல்லர். ஆனால் அவர் ஜீவகாருண்யமுடையவர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும் (பக்கம் 747).
’யாகம் அல்லது யக்ஞம் என்பதை அரசர்கள் மற்றும் பெரும் செல்வந்தர் நடத்தினார்கள். அதை நடத்திக்கொடுத்தவர்கள் பிராமணர்கள். யாகங்களில் வேள்வித்தீயில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியிடுவதைப் பெரும் யாகம்’ என்று கூறுவர் (பக்கம் 748).
‘விவசாயிகளின் உழவிற்கும், வண்டிகளை இழுப்பதற்கும் பயன்படுவது காளைகள். அவற்றை ஈன்று தருவது பசுக்கள். அதுமட்டுமல்ல. பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் போன்ற மக்கள் உணவிற்கும், ஊட்டச்சத்துக்கும் அவசியமானவற்றை அளிக்கவல்லது பசு. எனவே மன்னர்களோடு போரிட முடியாத, போரிட விரும்பாத, பௌத்த சமணக்கூட்டத்தினர் வேள்வியின் பெயரால் பசுவையேனும் கொல்லாதிருக்குமாறு கூறினார்கள், தடுத்தார்கள், பிரச்சாரம் செய்தார்கள் என்றெல்லாம் அரசு அங்கீகாரத்துடன் வெளியிடப்பெற்ற கோஸம்பி எழுதிய ’பகவான் புத்தர்’ வரலாற்று நூலின் குறிப்பிலிருந்து அறியமுடிகிறது (பக்கம் 750).
பசு மற்றும் புலால் உணவினால் உடல் வலுவுடையதாகிறது. ஆதலினால் நான் உண்ணத்தான் உண்பேன் என்று யாக்ஞவல்கியர் கூறினார் (பக்கம் 751). இவர் பிருஹதாரன்யக உபநிஷத்தில் பேசப்படும் முனிவர். ஜைனத்துறவிகளும் பிச்சையில் கிடைக்கும் புலாலை உண்பார்கள் (பக்கம் 755).
இன்று இந்து சமயத்தில் ஒரு சிலரால் மட்டுமே அசைவ உணவு தவிர்க்கப்படுகிறது. உயிர்வதை என்று அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் அறிவுக்குப் புறம்பானது. ஆனால் நரபலி கொடுப்பது இன்றும் நடந்துகொண்டுதானுள்ளது. ‘சதி’ என்று சொல்லப்படும் உடன்கட்டையேறும் ஆணாதிக்க சதி பாபர் போன்ற மன்னர்களால் தடுக்கப்பட்டதும் வரலாறு. அசைவ உணவு கூடாதென்று சொல்லும் சில அறிவுஜீவிகள் நரபலி, ’சதி’ போன்றவற்றை எதிர்த்தமாதிரி தெரியவில்லை.
சைவ உணவு அதாவது ‘சாத்வீக’ உணவு உண்பவர்களுக்குத்தான் அறிவு அதிகமாக இருக்கும் என்றொரு கற்பனையையும் சிலர் கட்டவிழ்த்துவிட்டுள்ளார்கள். இந்த பொய்யையும் கா.மு.ஷரீஃப் தோலுரித்துக்காட்டுகிறார்.
இரண்டாம் உலகப்போரைத் துவக்கிய ஹிட்லர் புலால் உண்ணாதவன். ஆனால் அவனை வெற்றிகொண்ட அணியின் தலைவர் சர்ச்சில் புலால் உண்பதோடு மதுவும் அருந்துபவர்…புலால் உண்ணாத ஹிட்லரும், புலால் உண்ணும் சர்ச்சிலும் சாத்வீக குணமுடையவர்களல்லர். எனவே உணவுக்கும் உணர்வுக்கும் சம்பந்தமில்லை (பக்கம் 775).
அசைவ உணவு சாப்பிடச்சென்றால் ஏதோ கொலைசெய்யப்போவதைப்போல மிரண்டு ஓடும் அறிவுஜீவி நண்பர்கள் எனக்குண்டு! ஆடு, மாடையெல்லாம் அறுத்து உண்ணாமலே இருப்போமானால் மக்கள் தொகையைவிட மாக்கள் தொகை அதிகமாகிவிடக்கூடிய வாய்ப்பு உண்டு!
இக்கட்டுரையின் மூலம் கா.மு.ஷரீஃப் அவர்கள் எவ்வளவு பெரிய அறிஞர் என்று அறிந்துகொள்ள முடியும். எப்படிப்பட்ட ஞானவானை நாம் கொண்டாடாமல் விட்டிருக்கிறோம் என்பதும் புரியும்.