நான் எழுதிய உமர் கய்யாமின் ருபாயியாத் என்ற நூல் சமீபத்தில் வெளியானது. அதில் ’பாரசீகத்திலிருந்து தமிழில்’ என்று முன் அட்டையில் போடப்பட்டுள்ளது. அதையொட்டி சிலர் என்னிடம் எனக்கு பாரசீகம் தெரியுமா என்று கேட்டனர்.
இதற்கு நேர்மையான பதில்கள் இரண்டு. ஒன்று தெரியும். இன்னொன்று தெரியாது. வரும் ஆனால் வராது என்பது போன்ற இந்த பதில் எப்படி நியாயமான பதிலாக, உண்மையான பதிலாக இருக்க முடியும்?! கேள்வி சரிதான். எனக்கு அரபி தெரியுமா, உர்து தெரியுமா என்ற கேள்விகளும் இதைப்போன்றதே. அதற்கான பதில்களும் மேலே சொன்னதுதான். தெரியும், ஆனால் தெரியாது.
இந்த முரண்பாடு எப்படி சரி என்று நான் விளக்கிவிடுகிறேன். இதை நான் ருபாயியாத்துக்கான முன்னுரையிலும் சொல்லியுள்ளேன். உமர் கய்யாமை நான் எப்படிப் புரிந்துகொண்டேன்? அரபி, பாரசீகம், உர்து ஆகிய மொழிகளின் எழுத்து வடிவம் ஒன்றுதான். அரபி மொழியின் எழுத்து வடிவத்தைத்தான் பாரசீகம் பயன்படுத்துகிறது. சில மாற்றங்களுடன். பாரசீகத்தின் எழுத்து வடிவத்தைத்தான் உர்து பயன்படுத்துகிறது. சில மாற்றங்களுடன். வேறு வார்த்தைகளில் சொன்னால், பாரசீகம், உர்து ஆகிய இரு மொழிகளுக்கான உடல்கள் அரபி மொழி கொடுத்தது.
எங்களுக்கு சிறு வயதிலிருந்தே அரபி மொழியைப் படிக்கவும், எழுதவும் கற்றுக்கொடுக்கப்பட்டது. அதனால் விளைந்த நற்பயனாக, என்னால் தமிழைவிட வேகமாக அரபியையும், பாரசீகத்தையும், உர்துவையும் எழுத முடியும். இம்மூன்று மொழிகளில் உள்ளதை படிக்கவும் முடியும். நான் ஒரு ‘அகராதி பிடித்தவன்’ என்பதால், புரியாத இடங்களில் அகராதிகளின் உதவியுடன் அவைகளின் அர்த்தம் பற்றிய சரியான முடிவுக்கும் வரமுடியும். அதனால்தான் என்னால் கல்லூரியில் தமிழுக்கு பதிலாக அரபியும், உர்தும் எடுத்துப் படிக்கவும், ’பாஸ்’ பண்ணவும் முடிந்தது!
ஆனால் மிகச்சரியாகப் புரிந்துகொள்வதற்கு கொஞ்சம் அறிவைப்பயன்படுத்த வேண்டும். ஏனெனில் கூகுள் பல சமயங்களில் நமது காலை வாரிவிட்டுவிடும். அகராதிகளை மட்டும் நம்பி அப்படியே பின்பற்றினால் என்னாகும் தெரியுமா?
ஒருவர் புதிதாக ஆங்கிலம் கற்றுக்கொண்டார்.
ஹலோ ஹை ஆர் யூ? ஹாய் ஐ யம் ஓகே, ஹௌ ஆர் யூ என்று கேட்கவேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அவர் எப்படிப் பேசினார் தெரியுமா? அவரிடம் ஒருவர் ஹலோ ஹௌ ஆர் யூ – என்று கேட்டார். அதற்கு அவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?
ஹாய் ஐயம் ஓகே ஷ்ஷ்ஷ், ஹௌ ஆர் யூ ஷ்ஷ்ஷ்…
பதில்கள் சரிதான். ஆனால் அந்த ஷ்ஷ்ஷ்…தான் பிரச்சனை. அது என்ன என்கிறீர்களா? அவர் பிபிசி ரேடியோ நிகழ்ச்சி ஒன்றின் மூலம் ஆங்கிலம் கற்றுக்கொண்டாராம்!
எனவே கூகுளையோ அகராதிகளையோ மட்டும் நம்பி செயல்பட்டால் எல்லாம் ஷ்ஷ்ஷ் ஆகிவிடும்!அப்படியானால் என்ன செய்வது? அவைகளையும் பார்க்கத்தான் வேண்டும். ஒரு அகராதியைப் பார்ப்பதற்கு பதிலாக இரண்டு மூன்று அகராதிகளைப் பார்த்து அர்த்தத்தை உறுதி செய்துகொள்ளலாம். ஆனால் அங்கே விஷயம் முடிந்துவிடாது. அங்கேதான் தொடங்குகிறது என்றுகூடச் சொல்லலாம். அதன் பிறகுதான் சிந்திக்கவேண்டிய அவசியம் ஏற்படும்.
ஒரு மொழிபெயர்ப்பு சரியாக வரவேண்டுமெனில் அகராதி தாண்டிய அறிவு தேவை. நான் மௌலானா ரூமியின் மஸ்னவிக்கு இப்படித்தான் விளக்கம் எழுதிக்கொண்டுள்ளேன். ஒரு உதாரணம் சொல்கிறேன்.
மஸ்னவியின் முதல் பாடல் இது
பிஷ்னு அஸ் நய் ச்சூன் ஹிகாயத் மீ குனத்
அஸ் ஜுதாயீஹா ஷிகாயத் மீ குனத்
பிஷ்னு = கேள்,
அஸ் = இருந்து,
நய் = நாணல்
ச்சூன் = இது ஒரு உரிச்சொல் அல்லது பெயரடை. இதற்கு இடத்தைப் பொறுத்து பல அர்த்தங்கள் வரும். from, as, when என்பதைப்போல. எந்த அர்த்தத்தில் வருகிறது என்று முதலில் முடிவு செய்யவேண்டும். அதற்கு ஆங்கில அறிவு மட்டும் போதாது. இலக்கிய அறிவும் வேண்டும்.
ஹிகாயத் = கதை, உருவகம், நடந்தது, புதினம் என்றெல்லாம் அர்த்தமுண்டு.
மீ குனத் = சொல்கிறது,
ஜுதாயீஹா = பிரிவுகள்,
ஷிகாயத் = முறையீடு
இந்த தனித்தனி சொற்களின் அர்த்தங்களையெல்லாம் ஒன்று சேர்த்து, கவிதை சொல்லவரும் கருத்து வருகிறதா என்று புரிந்துகொள்ளவேண்டும். அதன் பின்னர் அதை மொழிபெயர்க்கவேண்டும். அப்படிச் செய்யும்போது கவிதை சொல்லாததையும் சொல்லவேண்டி வரலாம். அது கவிதைக்கு கூடுதல் அர்த்தம் சேர்க்கும். சில அல்லது பல சமயங்களில் கவிதை சொல்லவரும் அர்த்தம்கூட முழுமையாகக் கிடைக்காமல் போய்விடலாம்.
ஆனால் அல்ஹம்துலில்லாஹ், நான் செய்த மொழிபெயர்ப்புகளில் அப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் எதுவும் நடந்துவிடவில்லை.
கேளுங்கள், இந்த நாணல் புல்லாங்குழல் சொல்லும் ஓலக்கதையை பல பிரிவுகளால் வாடும் அதன் மூலக்கதையை
இதில் ‘மூலக்கதை’ என்ற சொல்லுக்கான மிகச்சரியான பாரசீகச் சொல்லை மௌலானா ரூமி பயன்படுத்தவில்லை. ஆனால் கவிதை சொல்ல வரும் கருத்து அதுதான். ஷிகாயத் அல்லது முறையீடு என்பது என் தமிழாக்கத்தில் ’ஓலக்கதை’யாகியுள்ளது. இது வெறும் சந்தத்துக்காகச் செய்யப்பட்டதல்ல. ஒரு கவிஞனின் மன அறைகளுக்குள் இன்னொரு கவிஞனால் மட்டுமே புகமுடியும். அப்படிப் புகுந்து பார்த்து செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு இது.
மொழியறிவு மட்டும் இருந்தால் இதெல்லாம் சாத்தியப்படாது. ஒரு கவிதையை மொழிபெயர்க்க மொழிபெயர்ப்பவனும் ஞானமுள்ள கவிஞனாக இருத்தல் வேண்டும்.
பாரசீகம் என்ற மொழி தெரிந்தவர்களாலெல்லாம் ’மஸ்னவி’யையோ, ‘ருபாயியாத்’தையோ மொழிபெயர்த்துவிட முடியாது. அதனால்தான் ரூமியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நிகல்சன் போன்றவர்கள்கூட பல இடங்களில் உயிரை விட்டுவிட்டு உடலை மட்டும் பார்க்கின்றனர்.
இதைப்பற்றி ரூமியே ஒரு கவிதையில்
ஒவ்வொருவரும் அவரவர் கருத்திலிருந்து எனக்கு நண்பராயினர் ஆனால் யாருமே என்னக்குள்ளிருந்த என் ரகசியத்தை உணரவில்லை
என்று கூறுகிறார்.
எனவே நான் மீண்டும் கூறுகிறேன்.
எனக்கு அரபி, பாரசீகம், உர்து ஆகிய மொழிகள் தெரியுமா என்றால்,
தெரியும் ஆனால் தெரியாது!
அன்புடன்நாகூர் ரூமி
23.10.21 11.29 p.m.