வீடில்லாப் புத்தகங்கள்

சீதக்காதி ட்ரஸ்ட்டின் ஒரு சந்திப்புக்காக நான் சென்றிருந்தபோது அதன் உறுப்பினர்களில் ஒருவராக எழுத்தாளர் சாகித்ய அகாடமி விருதுபெற்ற எஸ்.ரா வந்திருந்தார். சந்திப்பு முடிந்து கிளம்பியபோது அவரது வீடில்லாப் புத்தங்கள் என்ற நூலை எனக்கும் கொடுத்தார்.

இன்று அதைப்படித்து முடித்தேன். 232 பக்கங்கள். இவர் ஒரு ராட்சச படிப்பாளி, ராட்சச எழுத்தாளர். சிறுகதை, நாவல், கட்டுரை, குழந்தை நூல்கள், உலக இலக்கியப் பேருரை, நாடகத்தொகுப்பு, வரலாறு என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். ஹோமரின் இலியட் காவியத்தை தமிழில் எழுதியதற்காக நான் நல்லி திசையெட்டும் விருது பெற்றபோது, அவரும் அந்த விருதைப் பெற்றார்.

புத்தகங்கள் படிப்பதன் அவசியம் பற்றியும், அவர் படித்த புத்தகங்களைப் பற்றியும் எழுதியுள்ளார். பிரமிப்பூட்டுகின்ற படிப்பு. நானும் நிறைய படிப்பேன். ஒரு நாளைக்குக் குறைந்தது 50 பக்கங்கள் – தமிழானாலும் ஆங்கிலமானாலும் – படிப்பேன். படிக்காமல் எந்த ஒரு நாளும் இருந்ததில்லை. அப்படி இருக்கவும் என்னால் முடியாது.

ஆனால் நான் முன்னர் இலக்கியம் விரும்பிப் படித்தேன். இப்போது என் வட்டத்தை சுருக்கிக்கொண்டேன். ஆன்மிக இலக்கியம் மட்டும் என்று. ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகள், ஆன்மிகம் தொடர்பான நூல்கள் என. அவ்வப்போது இலக்கியமும் படிப்பேன். ஆரோக்கியம் தொடர்பான நூல்களும் வரலாம். ஆனால் எப்போதாவது. எப்போதும் படிப்பது மேற்சொன்ன இரண்டு வகையானவைதான்.

ஆனால் எஸ்.ராவின் கதையே வேறு. அவர் ஆல் ரௌண்டராக உள்ளார். புத்தரைப் பற்றியும் படிக்கிறார், பூச்சியைப்பற்றியும் படிக்கிறார். சினிமா பற்றியதானாலும் எனிமா கொடுப்பது பற்றியதானாலும் படிப்பார். உதாரணத்துக்காகச் சொல்கிறேன். பழைய புத்தகக்கடைகளில் கிடைத்த நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்யும் விதமாக எழுதப்பட்டதாக இந்நூல் கூறுகிறது.

அரிய புத்தகங்களைத் தற்செயலாகப் புத்தகக் கடைகளில் பார்க்கும்போது நிலவில் கால் வைத்தவன் அடைந்த சந்தோஷத்தை விடவும் கூடுதல் மகிழ்ச்சியை நான் அடைந்திருக்கிறேன் – என்று கூறுவதிலிருந்து அவர் படிப்பின்மீது கொண்டுள்ள காதலைப் புரிந்துகொள்ள முடியும்.

எத்தனை கல்லூரி வளாகங்களில் புத்தகக்கடைகள் உள்ளன என்று கேட்கிறார்! மிக முக்கியமான கேள்வி.

பல ஆச்சரியமூட்டும் தகவல்கள் இந்நூலில் உள்ளன. சென்னைக்கு வந்த டாக்டர் ஆண்ட்ரூ பெல் நமது கல்விமுறையை இங்கிலாந்தில் மெட்ராஸ் சிஸ்டம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். ஆனால் நாம் ஆங்கிலேயரின் கல்வி முறையை நமது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தூக்கிப்பிடித்துக்கொண்டிருக்கிறோம் என்று ஓரிடத்தில் கூறுகிறார்!

மனிதர்கள் புத்தகங்களுடன் கொள்ளும் உறவு விளக்க முடியாதது. சிலருக்கு அது தோழமை. சிலருக்கு வழிகாட்டி. சிலருக்கு அது சிகிச்சை. சிலருக்கு புத்தகம் மட்டும்தான் உலகம் என்கிறார் ஒரு கட்டுரையில். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்! ஒரு நாளைக்கு ஒரு புத்தகம் அல்லது அதிலிருந்து கொஞ்சமாவது படிக்காவிட்டால் அன்றைய தினம் எனக்கு வீண்தான்.

நமது காலத்தில் மிகப்பெரிய மோசடி அறிவைத்திருடுவதுதான். அதிலும் குறிப்பாக இணையத்தில் ஏராளமாகப் புதிய புத்தகங்கள் இலவசமாக, எந்த அனுமதியுமின்றி விநியோகம் செய்யப்படுகின்றன என்று சொல்வது என் மனசாட்சியின் குரலாகவே எனக்குப் பட்டது!

எழுத்தாளர்களுக்குக் கொடுக்கப்படும் ராயல்டி உயர்த்தப்படவே இல்லை…பெரும்பான்மை பதிப்பகங்கள் எழுத்தாளர்களுக்கு ஒரு ராயல் டீ கொடுத்துக் கணக்கை சரிசெய்துவிடுகின்றன – என்கிறார்! அந்த வார்த்தை விளையாட்டில் மறைந்துள்ள சோகம் எனக்குப் புரியும்!

’நினைவின் வெளிச்சம்’ என்ற கட்டுரையில் ஒரு தகவலைச் சொல்கிறார். புல்லரிக்கச் செய்யும் நிகழ்வாக அது இருந்தது.  அபூ இப்ராஹீம் என்பவர் ஒவ்வொரு வியாழனும் ஒரு புத்தகக்கடைக்கு வந்து 30 / 40 புத்தகங்கள் வாங்கிச் செல்வாராம். என்ன காரணம் என்று கேட்டதற்கு தன்னைப் பார்க்க வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு புத்தகம் அன்பளிப்பாகக் கொடுப்பது வழக்கம் என்றும், இது 25 ஆண்டுப்பழக்கம் என்றும் அவர் சொன்னாராம்!

ஒருமுறை அவருக்கு பதிலாக அவர் மகன் வந்து 100 புத்தகங்கள் வாங்கியிருக்கிறார். என்ன விஷயம் என்று கேட்டதற்கு, அப்பாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்க்க வருபவர்களுக்குக் கொடுப்பதற்காக அந்த புத்தகங்கள் என்று சொன்னாராம்!

பின்னர் இரண்டு வாரம் கழித்து மீண்டும் இப்ராஹீமின் மகன் வந்து 500 புத்தகங்கள் வாங்கியிருக்கிறார். அப்பா எப்படி இருக்கிறார் என்று கேட்டதற்கு, ‘அப்பா இறந்துவிட்டார். அவரது இறுதி நிகழ்வுக்கு வருபவர்களுக்குத் தருவதற்காகத்தான் இந்த புத்தகங்கள். இதுவும் அப்பாவின் ஆசையே’ என்று மகன் சொல்லியிருக்கிறார்! ரொம்ப பெருமையாகவும், ரொம்ப வேதனையாகவும் இருந்த நிகழ்வாக இது இருக்கிறது. இப்ராஹீமின் மனம்தான் எவ்வளவு அழகானது! அவரது சேவைதான் எவ்வளவு உயர்வானது! அப்பாவைப் புரிந்துகொண்டு அவரது எண்ணங்களுக்கு மதிப்பு கொடுத்த மகன்தான் எவ்வளவு அற்புதமானவர்! நினைத்து நினைத்து பெருமைப்படவேண்டிய விஷயம் இது.

தமிழ்ச்சிறுகதை உலகில் வண்ண நிலவனின் சாதனை தொடமுடியாத உச்சம் என்று, அவரது சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படவேண்டும் என்றும் ஓரிடத்தில் கூறுகிறார் எஸ்.ரா. வண்ணநிலவனின் மழை என்ற சிறுகதை ஒன்றை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அது இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியானதும், அதை எடுத்துக்கொண்டு துக்ளக் அலுவலகம் சென்று வண்ண நிலவனைச் சந்தித்ததும் என் நினைவுக்கு வந்தது.

புகழ்

என்னை அவமானப்படுத்துகிறது

ஏனென்றால் அது ரகசியமாய்

நான் எடுத்த பிச்சை

என்ற தாகூரின் கவிதையை ஓரிடத்தில் மேற்கோள் காட்டுகிறார். தாகூர் எவ்வளவு உயர்ந்த கவிஞன் என்பதை இவ்வரிகள் நிச்சயம் நமக்குச் சொல்லும்.

ஜப்பானில் ரயில் பயணம் செய்தபோது ஏதோ ஓடும் நூலகம் ஒன்றினுள் உட்கார்ந்திருப்பதுபோலவே இருந்தது – என்று எழுதுகிறார்.

இப்படி நிறைய சுவாரசியமான விஷயங்கள், நூல்கள் பற்றிய தகவல்கள் என உள்ளது. இந்த சிறு கட்டுரை எஸ்.ரா.வின் நூலை வாங்கிப் படிக்க உங்களைத் தூண்டும் என்று நம்புகிறேன்.

========

2 Replies to “வீடில்லாப் புத்தகங்கள்”

 1. அருமையான பதிவு. எஸ்.ரா என்னையும் அறியாமல் என் உள்ளம் நேசிக்கும், நான் அபிமானிக்கும் ஓர் ஆத்மா.இவரைப்பற்றி திருவண்ணாமலை கதை சொல்லி பவா கூற கேட்டிருக்கிறேன். ஓர் இலக்கிய கூடலில் நடிகர் மம்முட்டியை அழைத்து சென்ற போது எவ்வித சலனமும் காட்டாத, நடிகர்கள், ஆளுமைகள், பிரபலங்கள் யாரிடமும் வலியாத தன்மானம், தமிழ் ஆணவம், எழுத்தாளனின் செருக்கு ஒருங்கே அமையப் பெற்றவராக பவா எஸ்.ரா வை சொல்கிறார். அதுவே அவர் மீது என் அபிமானத்திற்கு காரணம். (மம்முட்டி ஒரு சிறந்த மனித நேயர், எழுத்தாளர், இலகியவாதி, வாசிப்பாளர், நல்ல ஆன்மீகவாதி, நேமமாக தொழுபவர் என்பதெல்லாம் பவா கூறித் தான் தெரியும்)

  புகழ்

  என்னை அவமானப்படுத்துகிறது

  ஏனென்றால் அது ரகசியமாய்

  நான் எடுத்த பிச்சை

  இந்த வரிகளைப் படித்ததும் எஸ்.ரா பற்றிய மேற்கூறியவைகள் ஞாபகம் வந்தது.

  ஜப்பானில் ரயில் பயணம் பற்றி ஒரு குறிப்பு உங்கள் பதிவில் கண்டேன். ஆனால் எஸ்.ரா வின் ஜப்பானிய ஹிரோஷிமா நாகசாகி பயணம் பற்றிய ஒரு உரை கேட்டேன். அவருடைய மென்மையான குரலில் அந்த கொடூரத்தை கேட்போர் மனமெல்லாம் கரைந்துவிடும்.

  அன்புடன் நஹ்வி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: