நபிமொழிகளின் உளவியல் — 9 & 10

ஈமானும் அசுத்தமும்

மதினாவின் ஒரு தெரு வழியாகப் பெருமானார் வந்துகொண்டிருந்தார்கள்.  அப்போது நபித்தோழர் அபூ ஹுரைரா அவர்களும் அவ்வழியாக வந்துகொண்டிருந்தார். ஆனால் பெருமானார் தன்னைப் பார்க்காதவாறு அவர் வேறு வழியாகச் சென்றுவிட்டார். ஏன்?

ஏனெனில் அவர் மனைவியோடு கூடிவிட்டு குளித்துச் சுத்தமடையாமல் இருந்தார். அந்த நிலையை அரபியில் ’ஜுனூப்’ நிலை என்று கூறுகிறார்கள். அந்த நிலையில் பெருமானாரைச் சந்திக்க அவர் விரும்பவில்லை. திரும்பி வந்தபோது அவரைப் பார்த்துப் பெருமானார் கேட்டார்கள், ‘ஓ அபூ ஹுரைரா, எங்கிருந்தீர்கள்?’.

’நான் ஜுனூப் ஆக இருந்தேன் யாரஸூலுல்லாஹ். அந்த நிலையில் உங்களோடு சேர்ந்து அமர என் மனம் இடம் கொடுக்கவில்லை’ என்று அவர் கூறினார்.

அதற்கு பெருமானார், ‘சுப்ஹானல்லாஹ், ஒரு மூ’மின் / நம்பிக்கையாளர் எந்த நிலையிலும் அசுத்தமாவதில்லை’ என்று கூறினார்கள்.

இது அனுமதிக்கப்பட்ட உடலுறவு தொடர்பான செய்தி மட்டுமல்ல. ஒரு நம்பிக்கையாளர் எந்த நிலையிலும் அசுத்தமடைவதில்லை என்றால் என்ன அர்த்தம்? உடல் ரீதியாக அனுமதிக்கப்பட்ட இன்பங்களைச் சுவைப்பதனால் ஒரு நம்பிக்கையாளர் அசுத்தமாகிவிடுவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. ஆனால் இந்த நபிமொழியில் வேறொரு உட்குறிப்பு உள்ளது. அது என்ன?

உள்ளத்தளவில் பொறாமை, தீய எண்ணம், கோபம், நயவஞ்சகம், சுயநலம், எதிர்மறைச் சிந்தனைகள் போன்றவை ஒரு நம்பிக்கையாளருக்கு ஏற்படும் தருணங்களில் அவர் தன் ஈமானை இழந்து அல்லது அதன் தூய்மையில் அழுக்குப்பட்டு அசுத்தமடைந்துவிடுகிறார் என்றுதானே அர்த்தம்?!

எனவே இருபத்து நான்கு மணி நேரமும் ஒரு நம்பிக்கையாளர் எந்த மனநிலையில் இருக்கவேண்டும் என்பதற்கான குறிப்பாக இந்த நபிமொழியை நாம் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. (புகாரி, 283). ஜுனூபாக இருந்த தோழர் அபூ ஹுரைரா அவர்களின் கையைப்பிடித்துப் பெருமானார் அழைத்துச் சென்று அமர வைத்ததாகவும், அங்கிருந்து அவர் வீட்டுக்குச் சென்று குளித்துவிட்டு வந்து அதற்கான விளக்கத்தைப் பெருமானாரிடம் சொன்னதாகவும் இன்னொரு நபிமொழி கூறுகிறது (புகாரி, 285).

அம்பும் அண்ணல் நபியின் அன்பும்

பள்ளிவாசலுக்கோ சந்தைக்கோ செல்லும்போது அம்புகள் வைத்திருந்தால் அவற்றின் கூர்மையான பகுதியை கைகளால் பிடித்துக்கொண்டு செல்லுங்கள் என்று பெருமானார் சொன்னார்கள் (புகாரி, 452).

அரேபியர்கள் கைகளில் அனேகமாக எப்போதும் வாள், ஈட்டி, அம்பு என ஏதாவது இருக்கும். அது அவர்களின் கலாச்சாரம். சீக்கியர்கள் கிர்பன் என்ற கத்தி வைத்திருப்பது மாதிரி. அப்படிக் கூர்மையான ஒரு ஆயுதத்தை வைத்துக்கொண்டிருக்கும் ஒருவர் சந்தைக்கோ பள்ளிவாசலுக்கோ செல்ல நேரிட்டால் அடுத்தவரைக் காயப்படுத்திவிடாமல் இருப்பதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு என்ன செய்வது? கூர்மையான ஆயுதம் அடுத்தவரைத் தெரியாமல்கூட காயப்படுத்திவிடாமல் இருக்க ரொம்ப எளிமையான தீர்வு ஒன்றை பெருமானார் கூறுகிறார்கள்.

அம்பின் கூர்மையான முனையைக் கைக்குள் பிடித்திருந்தால் அது அடுத்தவரைக் காயப்படுத்தும் வாய்ப்பு இல்லை. அதனால்தான் அண்ணல் நபிகள் அப்படியொரு உத்தரவைக் கொடுத்துள்ளார்கள்.

நம்மை அறியாமல்கூட யாரையும் புண்படுத்திவிடக்கூடாது என்ற பண்பட்ட மென்மையான மனத்தை இந்த நபிமொழி மூலம் நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது.  

உணவா தொழுகையா

இரவு உணவு உங்களுக்கு முன் வைக்கப்பட்டுவிட்டது. அதே சமயம் இஷாத்தொழுகைக்கான இகாமத் சொல்லப்பட்டுவிட்டது எனில், முதலில் உணவை உண்ணுங்கள் என்று பெருமானார் சொன்ன நபிமொழியை இப்னு உமர் அவர்கள் அறிவிக்கிறார் (புகாரி, 673).

அப்படியானால் தொழுகையைவிட உணவு முக்கியமா என்ற கேள்வி தவறானதும் சரியான புரிதல் இல்லாததுமாகும். பசியோடு இருக்கும்போது உணவு வைக்கப்பட்டால் மனமும் உடலும் உணவின் பக்கம்தான் இருக்கும். அப்போது தொழுகைக்கான அழைப்பு சொல்லப்பட்டுவிட்டதே என்பதால் தொழச்சென்றால் மனம் முழுமையாக தொழுகையில் இருக்காது.

எங்கள் ஊரில் இரண்டு இளைஞர்கள் வெள்ளிக்கிழமை ஜும்’ஆவுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். ’சாப்பிட்டுவிட்டு தொழச்செல்லலாமா, நேரம்தான் உள்ளதே’ என்று ஒருவர் கேட்டார். அதற்கு இன்னொருவர், ‘வேண்டாம், தொழுதுவிட்டு வந்து நிம்மதியாகச் சாப்பிடலாம்’ என்று பதில் சொன்னார்.

இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த மறைந்த கவிஞர் ஜஃபருல்லாஹ் அண்ணன் சொன்னார், ‘பார்த்தீர்களா? நிம்மதியை எதில் வைத்திருக்கிறார்கள் என்று’!

நிறைய பேருடைய நிலையும் இதுதான். விரைவாகத் தொழுகையை முடித்துவிட்டு வந்து நிதானமாகச் சாப்பிடலாம் என்பதே பலரின் கருத்தாக உள்ளது. அதாவது, தொழுகையை கடமைக்காக அவசர கதியில் நிறைவேற்றிவிட்டு, உள்ளமும் உடலும் விரும்பும் உணவை உண்டு மகிழலாம் என்பதே கருத்து.

இப்படி ஆகிவிடக்கூடாது என்றுதான் அந்தக் காலத்திலேயே பெருமானார் ஒரு அழகான குறிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். உணவு வைக்கப்பட்டிருந்தால் முதலில் உணவைச் சாப்பிட்டுவிட வேண்டும். பின்னர் தொழச்செல்லலாம். ஏனெனில் அப்போது மனம் தொழுகையில் நிற்கும். இல்லையெனில் தொழுகையில் இருக்கும்போதே மனமானது வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் உணவுக்குச் சென்றுவிடும். அல்லது அடிக்கடி சென்று வரும்! அதுமட்டுமல்ல, நீங்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது தொழுகைக்கான அழைப்பு கொடுக்கப்பட்டால், அவசரமாக தொழச்செல்ல வேண்டாம். சாப்பிட்டு திருப்தியடைந்த பிறகு செல்லலாமென்று இன்னொரு நபிமொழி கூறுகிறது (புகாரி, 674).

பெருமானாரின் பொன்மொழிகளில் பல உளவியல் ரீதியாக நம்மைத் தயார்படுத்துவதாகவே உள்ளன.

========­

தன்னை வருத்திக்கொள்ளக்கூடாது

ஒருமுறை பள்ளிவாசலில் இரண்டு தூண்களுக்கு மத்தியில் ஒரு கயிறு கட்டப்பட்டிருப்பதைப் பெருமானார் பார்த்தார்கள். என்ன இது என்று விசாரித்தார்கள். இது ஜைனப் அவர்களுடைய கயிறு. தொழும்போது களைப்பேற்பட்டால் இதைப்பிடித்துக்கொண்டு தொழுவார்கள் என்று சொல்லப்பட்டது. அதற்கு பெருமானார் உடனே, ’இதை எடுத்து விடுங்கள். முடியும்போது முடிகின்றவரை நின்றுகொண்டு தொழுங்கள். முடியாவிட்டால் உட்கார்ந்துகொள்ளுங்கள்’ என்று கூறினார்கள் (புகாரி பாகம் 02, ஹதீது எண் 1150).

சகோதர சகோதரிகள் சிந்திக்க வேண்டிய விஷயம் இது. ஏனெனில் பெருமானார் தன் கால்கள் வீங்கும் அளவுக்கு நின்று தொழுதுள்ளார்கள். ஏன் இப்படி உங்களை வருத்திக்கொள்கிறீர்கள் என்று கேட்டபோது, என் இறைவனுக்கு நான் நன்றி செலுத்த வேண்டாமா என்று பதில் சொன்னார்கள்.

அதேபோல, பெருமானார் தொடர்ந்து நோன்பிருந்துள்ளார்கள். நபித்தோழர்களும் அப்படிச் செய்தபோது, அப்படிச் செய்யவேண்டாம் என்று தடுத்துவிட்டார்கள். நீங்கள் பிடிக்கிறீர்களே என்று தோழர்கள் கேட்டபோது, ’நான் உங்களைப் போன்றவன் அல்ல, எனக்கு அல்லாஹ்வின் புரத்திலிருந்து உணவும், நீரும் கிடைத்துக்கொண்டுள்ளன’ என்று பதில் சொன்னார்கள் (புகாரி, பாகம் 2, எண் 1922). அதேபோல, தன் சமுதாயத்தார் இறைவனை வணங்கும்போது தன்னை வருத்திக்கொள்ள வேண்டாம் என்று பெருமானார் கூறுகிறார்கள்.

பெருமானார் நம்மைப் போன்றவர்களில்லை. அவர்களது நிலை வேறு நம் நிலை வேறு என்பதை இந்த நபிமொழிகளிலிலிருந்து நாம் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.

பெருமானார் செய்ததையெல்லாம் நாம் செய்ய முடியாது. அவர்கள் செய்யச் சொன்னதை மட்டும் செய்தால் போதும். தன் உமிழ் நீரால் உணவில் பெருக்கம் ஏற்படுத்திய பெருமானார் அந்த அற்புதத்தை தனக்காக ஒரு போதும் நிகழ்த்தியதில்லை. வயிற்றில் கல்லைக்கட்டிக்கொண்டுதான் பசியுடன் இருந்தார்கள்.

அவர்களின் பெருமைகளில் இதுவும் ஒன்று. தான் படும் சிரமங்களை தன் சமுதாயம் படக்கூடாது என்று நினைத்தார்கள். அதுமட்டுமல்ல. தன்னை வருத்தி ஒரு காரியம் செய்யப்படும்போது அது தொடர்ந்து செய்யப்படுவதில் பிரச்சனை ஏற்பட்டுவிடும். தொடர்ந்து வழக்கமாக செய்யப்படும் காரியம்தான் இறைவனுக்கு உவப்பானது என்று ஏற்கனவே கூறியுள்ளார்கள்.

இந்த நபிமொழியின் மூலம் அவர்கள் சொல்ல வருவதும் அதுதான். வணக்க வழிபாடுகள் விடாமல் தொடர்ந்து செய்யப்படவேண்டும். எளிமையாக, இலகுவாக எல்லோராலும் செய்யப்படக் கூடியதாக அவை இருந்தால்தான் இது சாத்தியப்படும். நம்மை வருத்திக்கொண்டு ஒரு காரியத்தை ஒரு நாளைக்குச் செய்யலாம். ஆனால் தினமும் அப்படிச் செய்யமுடியாது. அதோடு மற்றவர்களுக்கு அது ஒரு தவறான முன்னுதாரணமாகவும் போய்விடலாம்.

எனவே ஜைனப் அவர்களது கயிற்றை பெருமானார் அகற்றச் சொல்லிவிட்டு, தன்னை வருத்திக்கொள்ளாமல் செய்யமுடிகிற காரியம்தான் நிரந்தரமாகச் செய்யமுடிகிற காரியம் என்பதையும் நமக்குப் புரியவைக்கிறார்கள்.

இதை இன்னும் நன்றாகப் புரியவைக்க இன்னொரு நபிமொழியும் நமக்கு உதவுகிறது. நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு அம்ர் அவர்களைப் பார்த்துப் பெருமானார், ‘நீங்கள் இரவு முழுவதும் நின்று தொழுவதாகவும், பகலெல்லாம் நோன்பு பிடிப்பதாகவும் தகவல் வந்துள்ளதே, அது உண்மையா?’ என்று கேட்டார்கள்.

ஆமாம் என்று அவர் சொல்லவும், ’அப்படியெல்லாம் செய்தால் உங்கள் கண் பார்வை பாதிக்கப்படும், நீங்களும் பலவீனமாகிப்போவீர்கள். உங்கள் உடலுக்கு உங்கள்மீது சில உரிமைகள் உள்ளன. அதேபோல உங்கள் குடும்பத்துக்கும் உங்கள்மீது சில உரிமைகள் உண்டு. எனவே சில நாட்கள் நோன்பு பிடியுங்கள். சில நாட்கள் விட்டுவிடுங்கள். கொஞ்ச நேரம் தொழுங்கள். கொஞ்ச நேரம் உறங்குங்கள்’ என்று அறிவுரை கூறினார்கள் (புகாரி, பாகம் 2, 1153).

செல்வ மனநிலையும் வறுமை மனநிலையும்

சில அன்சாரித்தோழர்கள் பெருமானாரிடம் வந்து எங்களுக்கு ஏதாவது கொடுங்கள் என்று கேட்டார்கள். பெருமானாரும் கொடுத்தார்கள். அவர்கள் மீண்டும் கேட்டார்கள். பெருமானார் மீண்டும் கொடுத்தார்கள். அவர்கள் மீண்டும் கேட்டார்கள். பெருமானார் மீண்டும் கொடுத்தார்கள். கடைசியில் பெருமானாரிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லாமல் போனது. அப்போது அவர்கள், ‘என்னிடம் ஏதும் இருந்தால் அதை நான் கொடுக்காமல் இருக்கமாட்டேன்’ என்று கூறினார்கள்.

அதன் பிறகு ஒரு மிக முக்கியமான விஷயம் ஒன்றைக் கூறுகிறார்கள். அது என்ன?

’நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அடுத்தவரிடம் எதையும் கேட்காமல், யாசிக்காமல், யார் இருக்கிறாரோ அவரை அல்லாஹ் தன்னிறைவு பெற்றவராக ஆக்குவான். யார் பொறுமையுடன் இருக்கிறாரோ, அவரைப் பொறுமையாளராகவே அல்லாஹ் ஆக்குவான். பொறுமையைவிடச் சிறந்த அருட்கொடை வேறெதுவும் இல்லை’ என்று கூறினார்கள்.

தோழர் அபூ சயீத் அல் குத்ரி அவர்கள் அறிவிக்கும் இந்த நபிமொழி புகாரி இண்டாம் பாகத்தில் பதிவாகியுள்ளது (எண் 1469).

பல நுட்பமான விஷயங்களை இந்த நபிமொழி நமக்குச் சொல்கிறது.

  1. அடுத்தவரிடம் கேட்பது, அது யாசகமோ அல்லது ஜகாத்தோ, தவறல்ல.
  2. இல்லாதவர் கேட்டால், இருப்பவர் கொடுக்கவேண்டும்.
  3. ஆனால் அடுத்தவரிடம் எதையும் கேட்காமல் இருப்பது தன்னிறைவைத்தரும் அருட்கொடையாகும்.

பெருமானாரிடம் அன்சாரிகள் ஏன் கேட்டார்கள் என்ற விபரம் இந்த நபிமொழியில் இல்லை. வெற்றிபெற்ற போரில் கிடைத்த ’கனீமத்’ எனப்படும் போர்ப்பொருள்கள் வந்து குவிந்திருக்கலாம். அதனால் அன்சாரிகள் பெருமானாரிடம் வந்து அவற்றிலிருந்து கேட்டிருக்கலாம்.

ஆனால் அவர்கள் திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டே இருந்துள்ளார்கள். ஏன்? பெற்றுக்கொண்ட பொருள்களில் அவர்களுக்குத் திருப்தி, தன்னிறைவு ஏற்படவில்லை. ஏன் திருப்தி ஏற்படவில்லை? அவர்களிடம் செல்வ மனநிலை இல்லை. பொறுமை இல்லை என்றும் சொல்லலாம்.

பணம் வைத்திருப்பவரெல்லாம் பணக்காரர் அல்ல. செல்வ மனநிலை இருந்தால்தான் ஒருவரிடம் பணம் அல்லது செல்வம் மேலும் மேலும் சேர்ந்துகொண்டே இருக்கும். ஒருவரிடம் தொடர்ந்து பணம் இருந்துகொண்டிருப்பதற்குக் காரணம் அந்த மனநிலைதான்.

செல்வ மனநிலை என்றால் என்ன? இறைவன் கொடுப்பான் என்ற திடமான நம்பிக்கை கொண்ட மனநிலை. அவசியம் ஏற்படும்போது செலவு செய்யப்படும் பணத்தைப் பற்றிக் கவலைப்படாத மனநிலை. தன்னால் பணத்தை அல்லது செல்வத்தை தன்னை நோக்கி இழுக்க முடியும் என்ற பிரபஞ்ச விதியைப் புரிந்துகொண்ட தெளிவு.

நம்மிடையே வாழ்ந்த வள்ளல்கள் சீதக்காதி, அப்துல் ஹகீம் போன்றவர்கள் நமக்கு நன்றாகத் தெரிந்த உதாரணங்கள்.

ஆனால் இந்த பிரபஞ்சவிதியைப் புரிந்துகொள்ளாதவர்களுக்கு திருப்தி ஏற்படாது. பள்ளிவாசலில், கோயில் வாசலில் அல்லது அதையொத்த இடங்களில் யாசிக்கும் ஏழைகளை நோக்கிக் கொஞ்சம் பணத்தை நீங்கள் காட்டினீர்கள் என்றால் அவர்கள் முண்டியடித்துக்கொண்டு ஓடிவருவதைப் பார்க்கலாம்.

அவர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள்? அவர்கள் வறுமை மனநிலையில் வாழ்கிறார்கள். ஒரு பிச்சைக்காரருக்கு அவர் பிச்சையெடுக்காத மாதிரி கனவுகூட வருவதில்லை. இரண்டாயிரம் ரூபாய் நோட்டை யாராவது பிச்சை போடுவதாக வேண்டுமானால் கனவு வரலாம்.

கொடுப்பவரிடம் இருக்கும் மனநிலை வேறு, பெறுபவரிடம் இருக்கும் மனநிலை வேறு. அடுத்தவரிடம் எதையும் கேட்கக்கூடாது என்று நினைப்பதே ஓர் அருட்கொடையாகும். அத்தகைய மனங்கொண்டோரை இறைவன் தன் பொறுப்பில் எடுத்துக்கொள்கிறான். அவர்களது பொறுமைக்கு அவன் வெகுமதி வழங்குகிறான். அவர்கள்மீது தன் அருட்கொடைகளைச் சொரிகிறான்.

அதனால்தான் தன் உயிர் பிரிந்துகொண்டிருந்த நேரத்தில்கூட வீட்டில் தர்மம் செய்யப்படாமல் காசு உள்ளதா என்று கேட்டதாகவும், வீட்டில் காசை வைத்துக்கொண்டு எந்த முகத்தோடு நான் என் நாயனை சந்திப்பேன் என்று பெருமானார் அன்னை ஆயிஷா அவர்களிடம் கேட்டதாகவும், அந்தக் காசைத் தர்மம்செய்ய அனுப்பிய பிறகே பெருமானாரின் உயிர் பிரிந்ததாகவும், வரலாறு பதிவு செய்துள்ளது.

எனவே இரு வேறுபட்ட மனநிலைகளை இந்த நபிமொழி எடுத்துக்காட்டுகிறது. ஒன்று கேட்டுப்பெறுகின்ற மனநிலை. இன்னொன்று இறைவன்மீது நம்பிக்கை வைத்து, பொறுமை மேற்கொண்டு, கொடுத்து மகிழ்கின்ற அருள் பாலிக்கப்பட்ட மனநிலை. நமக்கு எந்த மனநிலை வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்துகொள்ள வேண்டும்.

யாருடைய கைமீது என் உயிர் உள்ளதோ அந்த இறைவன்மீது ஆணையாகச் சொல்கிறேன், காட்டுக்குப் போய், மரம் வெட்டி, அதை ஒரு கயிறு கொண்டு கட்டி, அதை முதுகில் சுமந்து விற்றுப் பிழைப்பதானது அடுத்தவரிடம் கேட்டுப்பெறுவதைவிட மேலானது என்று பெருமானார் சொன்ன நபிமொழியும் மேலே சொல்லப்பட்ட கருத்தை வலுப்படுத்துவதாக உள்ளது (புகாரி, பாகம் 2, எண் 1470).

நீங்கள் கேட்காமல் எதுவும் கொடுக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். அது ஆண்டவனின் அருள் பாலிக்கப்பட்டது. ஆனால் நீங்களாக அதை நோக்கி ஓடவேண்டாம் என்று தோழர் உமர் இப்னு கத்தாப் அவர்களுக்குப் பெருமானார் அறிவுரை கூறியதாகவும் ஒரு நபிமொழி உள்ளது (1473).

ஏழை என்றால் யாரென்று ஒரு நபிமொழி விளக்குகிறது. தோழர் அபூ ஹுரைரா இதை அறிவித்துள்ளார். அடுத்தவரிடம் ஒரு கவளம் உணவை யாசிப்பவர் மிஸ்கீன் (ஏழை) அல்ல. தன்னிடம் எதுவுமே இல்லாவிட்டாலும் அடுத்தவரிடம் கேட்க வெட்கப்படுபவரே ஏழையாகும் (புகாரி, பாகம் 2, எண் 1476).

அப்படியானால் கேட்பவர்களெல்லாம் ஏழைகள் என்று நாம் கருதத்தேவையில்லை. எதுவுமே கேட்காதவர்களுக்குத் தேவைகள் இருக்கலாம். நிச்சயம் இருக்கும். ஆனால் அவர்கள் யாரிடமும் கேட்கமாட்டார்கள். அவர்கள்தான் உண்மையான ஏழைகள். நாம்தான் உன்னிப்பாக அவர்களை கவனித்து உதவி செய்யவேண்டும் என்ற குறிப்பு இந்த நபிமொழியில் அடங்கியுள்ளது.

நன்றி இனிய திசைகள் மார்ச், ஏப்ரல் 2022

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: