நண்பர் இறையன்பு அவர்கள் நேற்று (25.06.22) எனக்கு தன் இரண்டு புத்தகங்களை அனுப்பி வைத்தார். ’நன்மதிப்புகளுடன்’ என்று எழுதி, தேதியிட்ட அச்சடித்தமாதிரியான கையெழுத்துடன். அவர் 22ம் தேதி அனுப்பியது எனக்கு நேற்றுதான் கிடைத்தது.
- சத்சங்கம்
- தென்கிழக்குத் தென்றல்
முதல் நூல் 159 பக்கங்கள். இரண்டாவது நூல் முன்னதை மாதிரி மூன்று மடங்கு பெரியது! நேற்று இரவு முன்னதைப் படிக்கத் தொடங்கி சற்று நேரத்துக்கு முன்புதான் முடித்தேன். தமிழ் நூலாக இருந்தால் ஒரு நாளைக்கு 100 பக்கங்கள் எளிதாகப் படித்துவிடுவேன். இது ஆன்மிகம் தொடர்பான நூலென்பதால் கீழே வைக்க மனமில்லை. எனவே ஒரே இரவில் முழு நூலையும் முடித்துவிட்டேன்.
குரு ஒருவரிடம் ஒரு சீடன் கேட்கும் கேள்விகளும் அதற்கு அவர் சொல்லும் பதில்களுமாக, 25 அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது இந்த நூல். முழுக்க முழுக்க ஆன்மிகம் தொடர்பானது. எனவே இதன் வாசகர் வட்டம் மிகமிகச் சிறியது!
உரைநடையில் கவிதை என்று ஒரு புதிய மொழிவடிவத்தை இந்நூல் அறிமுகப்படுத்துகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஆமாம்.
இந்த நாட்டின் அல்லது உலகின் இன்றைய நிலையை, நம் வாழ்க்கை முறையை, நம் சிந்தனா முறையை எல்லாம் ஒருவகையில் இது வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது என்று சொல்லலாம். போலிச்சாமியார்கள், போலி ஆன்மிக நிறுவனங்களையும். ஆனால் யாரையும் குறிப்பிடவில்லை. அந்த அவசியமும் இல்லை. உலகம் முழுக்க வியாபித்துள்ள பொதுவான உண்மைகள்தான் சொல்லப்பட்டுள்ளன. ஆனால் அவை நம் நாட்டுக்குப் பிரத்தியேகமாகப் பொருந்துபவை.
நான் மிகவும் ரசித்த இடங்களை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
உரைநடையில் கவிதை என்று சொன்னேன் அல்லவா? ஆமாம். அது எப்படி உரைநடையில் கவிதை வரும் என்ற கேள்வி நியாயமானதே.
இதைவிட சுருக்கமாகவும், இதைவிட அழகாகவும் இந்த விஷயத்தைச் சொல்லவே முடியாது என்று தோன்றுமளவுக்கு ஒரு வாக்கியம் இருக்குமானால் அந்த உரைநடை வாக்கியம் கவிதையின் அழகைப்பெற்றுவிட்டது என்றுதான் அர்த்தம். அந்த வகையில் நிறைய உரைநடைக்கவிதைகளக் கொண்டுள்ளது இந்நூல்.
எது பொய் ஆன்மிகம்?
எண்ணிக்கையை வைத்து பலத்தை நிரூபிக்க நினைப்பது பொய் ஆன்மிகம்.
பெறும் நிறுவனங்களே தவறு என்கிறீர்களா?
நிறுவனமாக்கப்படும் எதுவும் ஆன்மிகமாக இருக்க முடியாது.
காற்றுபோல அலைந்து திரிய சம்மதிப்பதும், அனைத்து அசௌகரியங்களையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதுமே தவ வாழ்க்கை (பக்கம் 20)
கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு என்ன சொல்வது?
சொல்லிவிட்டுப் போகட்டும். அது அவர்கள் புரிதல். கடவுளுக்கு வக்கீலாக நாம் செயலாற்ற வேண்டிய அளவிற்கு அவர் பலகீனமானவர் அல்லர். (பக்கம் 21)
கடவுள் இல்லை என்று பொதுவாகச் சொல்கிறவர்கள் நாத்திகர்கள். தங்கள் கடவுளைத் தவிர வேறு கடவுள் இல்லை [’இல்லை’ என்ற இந்த சொல் விடுபட்டுள்ளது] என்று சொல்கிறவர்கள் ஆத்திகர்கள் (பக்கம் 23).
ஒரு மொட்டு மலர்வதை அருகிலேயே இருந்து நொடிக்கு நொடி புகைப்படம் எடுப்பவனால் அதன் வாசத்தை சிலாகிக்க முடியாது (பக்கம் 25).
பூவைத்தொடும்போதுகூட பிரபஞ்சத்தோடு கைகுலுக்குவதைப்போல அவன் உணர்ந்தான் (பக்கம் 28).
அவர்களிடம் பதிலில்லாத கேள்விகளையா அவர்கள் கேட்பார்கள் என நினைக்கிறாய்? அவர்கள் வைத்திருக்கும் பதிலை நான் சொல்கிறேனா என்பதுதான் அவர்களின் வினாக்களின் நோக்கம் (பக்கம் 34).
இங்கு வருபவர்கள் யாரும் மாற்றத்திற்காக வருவதில்லை. எதுவும் மாறிவிடக்கூடாது என்பதற்காகவே வருகிறார்கள் (பக்கம் 35).
குறிப்பிட்ட வட்டத்தை மட்டும் நேசிப்பது இல்லறம். உலகத்தையே நேசிப்பது துறவறம் (பக்கம் 36).
இன்று பண்டிகை. எல்லோரும் அவரவர் வீட்டிலேயே மகிழ்ச்சியாக இருப்பார்கள். மகிழ்ச்சியாக இருக்க முடியாதபோதுதான் ஆன்மிகம் தேவைப்படுகிறது. நாம் ஆன்மிகத்தை ஊறுகாயைப்போலப் பயன்படுத்துகிறோம். அது உணவாக மாறும்போதுதான் உண்மையான உயர்வு உண்டாகும் (பக்கம் 39).
தான் ஆன்மிகவாதி என்று தெரியாமல் ஆன்மிகவாதியாக இருப்பதே சிறந்த ஆன்மிகம் (பக்கம் 39).
ஆன்மிகத்தை நோக்கி நாம் பயணிக்கிறோம் என்பதை எப்படி அறிவது?
அழகான மலரைப் பார்த்தால் மகிழ்ச்சி ஏற்படுகிறதா? ஒடிந்த இறகுடன் பறவையைப் பார்த்தால் மனம் வலிக்கிறதா? பசியினால் ஒடுங்கிய உடலுடன் யாரையாவது சந்திக்க நேர்ந்தால் கண்கள் கசிகின்றனவா? உன் உள் மையத்துள் ஏதேனும் மாற்றம் ஏற்படுகிறதா? அப்படி நிகழ்ந்தால் ஆன்மிகப் பயணத்தில் நீயும் இருக்கிறாய் என்று பொருள் (பக்கம் 43).
இறைமை எப்போதும் கேட்பவர்களுக்குக் கொடுப்பதைவிட கேட்காதவர்களுக்கு அதிகம் தருகிறது. கேட்பவர்களுக்கு அவர்கள் கேட்டது கிடைக்கிறது. கேட்காதவர்களுக்கு எது நல்லதோ அது கிடைக்கிறது (பக்கம் 48).
[புத்தகம் முழுக்க இறைவன் என்று சொல்லாமல் இறைமை என்றே எழுதுகிறார். இறைவனுடைய குணாம்சத்தை, அவனது எல்லையற்ற கருணையைக் குறிக்கும் இந்த விதமும் நன்றாகத்தான் உள்ளது].
உலகத்தை அறிந்துகொள்வதல்ல அறிவு. உன்னை அறிந்துகொள்வதே அறிவு (பக்கம் 52).
புகைப்படம் எடுத்துக்கொள்ளும்போது அது எப்படி புனித யாத்திரையாக இருக்கும்? ஏனென்றால், புகைப்படம் எடுத்தாலே நாம் பிரதானம் என்ற எண்ணத்தைத் தூக்கிப் பிடிக்கிறோம் என்று பொருள் (பக்கம் 56). [இந்த வாக்கியம் பலருடைய பழக்கத்துக்கு செருப்படியாக இருக்கும்!]
நான் என்கிற எண்ணம் மனிதர்களுக்கு மட்டுமில்லை. அது தேசங்களுக்குமுண்டு. அந்த தன்முனைப்பே போராக மாறுகிறது (பக்கம் 68).
சுகமும் மகிழ்ச்சியும் வேறுவேறா?
நான் என்கிற எண்ணம் தருவது அற்ப சுகம். சுகத்திற்கு எப்போதும் இன்னொருவர் தேவைப்படுகிறார்…நமக்குள்ளாக ஊறுகின்ற உணர்வே ஆனந்தம். அது உண்மையானது. மற்றவர்களால் அது தீர்மானிக்கப்படுவதில்லை. நம்மைப்பற்றி வரும் செய்திகளால் நாமதை அடைவது இல்லை. தனித்திருக்கும்போது அது கிடைக்கிறது (பக்கம் 70).
எந்தப் பாம்பும் மனிதர்களைத் தேடிவந்து கடிப்பதில்லை. ஆனால் மனிதர்கள் முகம் தெரியாதவர்களின்மீது குண்டுபோடுவதைத் திட்டமிட்டுச் செய்துவிட்டு அதைச் சாதனையாகக் கருதுபவர்கள் (பக்கம் 101).
செருப்பைக்கூட மிருதுவாகக் கையாள்வதில் அன்பு ஆரம்பமாகிறது (பக்கம் 102).
மந்திரங்களைக் கற்றுக்கொடுப்பதற்கு முன்பு மனிதர்களை நேசிக்கக் கற்றுத்தர வேண்டும். வழிபடக் கற்றுத்தரும் முன்பு சக மனிதர்களுக்கு வணக்கம் வைக்கக் கற்றுத்தரவேண்டும் (பக்கம் 106).
[இரண்டு முஸ்லிம்கள், அவர்கள் முன்பின் அறிமுகமில்லாதவர்களாக இருந்தாலும் சரி, ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது அஸ்ஸலாமு அலைக்கும் – உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் – என்று சொல்லவேண்டும் என்று இஸ்லாம் போதித்துள்ளது. இது உலகம் முழுவது 1400 ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் நடைமுறையிலும் உள்ளது].
நூல் கொஞ்சம் ஆங்காங்கு அலுப்பு தட்டத்தான் செய்கிறது. ஆனாலும் ஆன்மிக நாட்டம் கொண்டவர்களுக்கு இந்நூல் நிச்சயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த நூலிலிருந்து நான் கற்றுக்கொண்ட இன்னொரு செய்தியுண்டு. அச்செய்தி நூலின் அட்டைப்படத்திலேயே உள்ளது. சத்சங்கம் என்ற தலைப்பின் கீழே அவரது ஒளிப்படம் உள்ளது. அதன் கீழே வெ.இறையன்பு என்று அவர் பெயர் உள்ளது. ஐ.ஏ.எஸ். என்று இல்லை. தமிழக அரசு தலைமைச் செயலர் என்றும் இல்லை. ஏனெனில் அதற்கெல்லாம் இங்கே தொடர்பே இல்லை.
இதில் எனக்கென்ன செய்தி என்கிறீர்களா? இருக்கிறது. என் நூல்களின் கீழே நாகூர் ரூமி என்றிருக்கும். கூடவே சில நூல்களில் டாக்டர் நாகூர் ரூமி என்றோ, அல்லது என் பெயரின் பின்னால் எம்.ஏ.பி.எச்டி என்றோ போட்டிருக்கும்.
சில நூல்களில் நானே அப்படிப் போடச்சொல்லியுள்ளேன். பல நூல்களில் அவர்களே அப்படிப் போட்டுள்ளார்கள்.
அவர்கள் போட்டதை விட்டுவிடலாம். ஆனால் இனிமேல் நானாக என் டிகிரிகளையெல்லாம் போடக்கூடாதென்று எனக்கு இதைப் பார்த்ததும் உரைத்தது. ஏனெனில் என் கல்வித் தகுதிகளுக்காக யாரும் என் நூலைப்படிப்பதில்லை. அவர்களுக்கு வேண்டியது நாகூர் ரூமி மட்டும்தான். அவரது டிகிரிகள் அல்லவே!
சத்சங்கம் சத்தியத்தின் அழகான முழக்கம்.
அன்புடன்
நாகூர் ரூமி
The hard times of women