அண்ணலாரை மணந்தபோது அன்னை ஆயிஷா சின்னப்பிள்ளையா?

அறிமுகம்

ஆயிஷா அவர்களை அண்ணலார் மணந்தபோது ஆயிஷா அவர்களுக்கு வயது ஆறு என்றும், பின்னர் ஹிஜ்ரத்துக்குப் பிறகு மதீனாவில் வீடுகூடியபோது அவர்களுக்கு வயது ஒன்பது என்றும் நபிமொழிகள் மூலமாக அறியப்படுகிறது. சஹீஹ் புகாரியில் வரும் ஒரு நபிமொழியில் இவ்விஷயத்தை ஆயிஷா அவர்களே அறிவிப்பதாக வருகிறது.

இன்றைய வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் இக்கருத்து தவறானது என்று பல ஆதாரங்களை முன்வைக்கின்றனர். அவற்றைப் பார்க்கும்முன் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.

பெருமானார் அவர்கள் எதைச்செய்தாலும் அதை எந்த முஸ்லிமும் தவறு என்று சொல்லவோ தவறாக நினைக்கவோ போவதில்லை. ஆயிஷா அவர்களை ஆறு வயதில் அவர்கள் திருமணம் செய்திருந்தாலும் சரி ஆறு மாதத்தில் திருமணம் செய்திருந்தாலும் சரி. பெருமானார் ஒரு காரியம் செய்திருந்தால் நிச்சயம் அதில் நன்மை மட்டுமே இருக்கும் என்பதுதான் இஸ்லாமிய நிலைப்பாடு.

ஒருவரின் ஈமானின் ஆழத்தை உறுதி செய்யும் வகைகளில் இதுவும் ஒன்றாகும்.  

அப்படியெல்லாம் பெருமானார் செய்யவில்லை என்று யாரும் சொல்லத்தேவையில்லை. பெருமானார் செய்தது சரியான காரியம்தான் என்று உலகுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் எந்த முஸ்லிமுக்கும் இல்லை.

ஆனால் அன்னை ஆயிஷாவுடனான திருமண விஷயம் முஸ்லிமல்லாத பல அறிஞர்களுக்குள் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. அது அவர்கள் இஸ்லாத்துக்கு எதிரான மனநிலை கொண்டவர்களாக இருந்ததால் அப்படி ஏற்பட்டிருக்கலாம். அதோடு இஸ்லாத்தை உள்ளார வெறுக்கும் மனநிலைகொண்ட பலர் அத்திருமணத்தை தவறான முறையில் விமர்சிக்க வழிவகுத்திருக்கிறது என்றும் கொள்ளலாம். பெருமானார் மனோ இச்சைகளுக்கு அடிமையானவர்கள் என்பதுபோன்ற பிம்பத்தை இஸ்லாத்தின் எதிரிகளுக்கு வழங்க அந்தத் திருமணம் ஒரு வாய்ப்பாக அமைந்து போனது.

அது அப்படியல்ல என்று நிரூபிக்க வேண்டிய எந்த அவசியமும் நமக்கில்லை. ஏனெனில் நாம் எவ்வளவு உண்மையைப் பேசினாலும் எதிரிகள் அதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எனினும் வரலாற்று ரீதியான ஆய்வு என்பது மிக முக்கியமானது. அதன் மூலமாக பெருமானார் காலத்தில் நடந்த ஒரு விஷயத்தின் மீது அதிக வெளிச்சம் கொடுக்க முடியுமெனில் அதுவும் நல்லதுதான்.

அந்த வகையில் ஆயிஷா அவர்களுக்குத் திருமணமானபோதும் சரி, அவர்கள் வீடுகூடியபோதும் சரி, அவர்களுக்கு பதின்ம வயதுதான் என்று பல ஆதாரங்களைக் காட்டி, சில அறிஞர்கள் ஏற்கனவே சொல்லப்பட்ட சில நபிமொழிகளையும் வரலாற்று நிகழ்வுகளையும் புதிய ஒளியில் விளக்குகிறார்கள்.  அவைகளை நமது கவனத்துக்குக் கொண்டுவருவதே இக்கட்டுரையின் நோக்கம்.

அண்ணலாரைப்போல அரேபியாவிலேயே யாருமில்லை

ஹஸ்ரத் அலீ அவர்கள் கலீஃபாவானபோது ஈராக்கில் இருக்கும் கூஃபாவைத் தன் தலைநகராகக்கொண்டார்கள். அலீ அவர்களுக்கும் ஆயிஷா அவர்களுக்கும் இடையில் இருந்த மனக்கசப்பு வரலாற்றுப் புகழ்பெற்றது. ஆயிஷா அவர்கள் சின்னக்குழந்தை என்று சொல்லும் நபிமொழிகள் யாவும் ஈராக்கிலிருந்து வந்தவை. அவை மதினாவிலிருந்து வந்தவை அல்ல என்பது ஒரு வாதம். ஆனால் இந்த வாதத்தை மட்டும் வைத்து நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. அப்படி வந்துவிடவும் கூடாது.

அன்னை ஆயிஷாவைப் பெருமானார் மணந்தபோது அவர்களுக்கு வயது ஆறுதான் என்றும், அன்னைக்கு ஒன்பது வயதிருக்கும்போது கணவரோடு வீடு கூடினார் என்றும்தான் பொதுவாக அறியப்படுகிறது. இந்தக் கருத்து ஆதாரப்பூர்வமான நபிமொழிக்களஞ்சியங்களான சஹீஹ் புகாரியிலிருந்தும், சஹீஹ் முஸ்லிமிலிருந்தும் எடுக்கப்படுகின்றன.

அந்த நிகழ்வை வைத்து, அன்றும் இன்றும், பெருமானாரின் எதிரிகள் பெருமானார்மீது நியாயமற்ற, நாகரீகமற்ற விமர்சனங்களை வைப்பதும், அதற்கு மார்க்க அறிஞர்கள் பதில் சொல்வதும் நமக்குத் தெரிந்ததே.

பெருமானார் உடலுணர்ச்சிக்கு அடிமையானவர்கள் என்று எதிரிகள் நினைப்பதற்கும் எழுதுவதற்கும் ஏதுவாக இந்தத் திருமணம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் வரலாற்றை மறந்துவிட்ட அல்லது மறைத்துவிட்ட யூத மனத்தின் வேலை இது.

பெருமானாருக்கு முன்னர் ஒரு இளைஞர் முதல் விவாகமாகத் தன்னைவிட வயதில் மூத்த ஒரு விதவையைத் திருமணம் முடித்த வரலாறு அரேபியாவிலேயே கிடையாது. பெருமானார் கதீஜா திருமணத்தைத் தவிர. அதுவும் ஏற்கனவே இரண்டு முறைகள் திருமணமாகி விதவையானவர் மட்டுமல்ல, பெருமானாரைவிடக் கிட்டத்தட்ட 15 வயது மூத்தவர்கள் அன்னை கதீஜா.

வெறும் இச்சைக்கும் உணர்ச்சிக்கும் அடிமையாக ஒருவர் இருந்திருந்தால் நிச்சயமாக அவரால் இப்படி ஒரு திருமணத்தைச் செய்திருக்க முடியாது. அன்னை கதீஜா இறந்தபோது அவர்களுக்கு வயது 64/65.  பெருமானாருக்கு வயது 50! அதோடு பலதார மணம் என்பது அரேபிய கலாச்சாரத்தின் ஓர் அடிப்படையான அம்சமாக இருந்தது.

ஒரு பெண்ணுக்கு என்னதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் இளமையில் நடக்கும் திருமண வாழ்வின் சுகங்களைத் துறந்துவிட்டு ஒரு இளைஞர் இப்படிப்பட்ட தியாகங்களைச் செய்யவேண்டியதில்லை, அல்லவா?

ஆனால் பெருமானார் அரேபியாவிலேயே மிகுந்த தனித்துவம்கொண்ட மனிதர். எல்லா வகையிலும். அரேபிய இளைஞர்களிடமிருந்த எந்தக் கெட்ட குணமும் அவர்களிடம் இல்லை. குடி, விபச்சாரம், அடிமைப்பெண்களை உடல் இச்சைக்குப் பயன்படுத்திக்கொள்ளுதல், சூதாட்டம் – இப்படி எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாத ஒரு மனிதராக இறைவன் அவர்களை ஆக்கிவைத்திருந்தான்.

ஏன், பெண்களைவிட வெட்க உணர்வு அதிகம் கொண்டவர்களாகப் பெருமானார் இருந்தார்கள். ஒருமுறை க’அபாவைப் புதுப்பிக்க கற்களை எடுத்துச் சென்றபோது, அவர்களின் வழக்கப்படி, இசார் என்ற கீழாடையை அவிழ்த்து தோளில் போட்டுக்கொள்ளும்படி சிற்றப்பா அப்பாஸ் சொல்லவும், அந்த உத்தரவை மீறமுடியாமல் பெருமானார் அப்படிச்செய்தார்கள்.

இந்தக் காலத்தில் இருப்பதுபோல ஜட்டி போன்ற உள்ளாடைகளெல்லாம் இல்லாத காலமது. ஆனால் தான் நிர்வாணமாகப் போகிறோமே என்ற உணர்வு மேலிட்டவுடனேயே அங்கேயே மயங்கி விழுகிறார்கள். ’ஹயா’ எனும் வெட்கம் ஈமானில் ஒரு பகுதி என்று நபிமொழி உள்ளது.

எனவே எந்தக்கோணத்தில் பார்த்தாலும் பெருமானாரைப் போன்ற உயர்ந்த குணங்களின் இருப்பிடமாக இருந்த ஒருவரை அரேபியாவிலேயே காட்டமுடியாது.

அரேபியாவின் பாலைவன வெப்ப சூழலில் ஆறுவயதுப் பெண்கள் அல்லது ரொம்பச் சின்னப்பெண்கள் வயதுக்கு வருவதும், அப்படிப்பட்ட பெண் குழந்தைகளை அரேபியர்கள் திருமணம் செய்துகொள்வதும் வழக்கம்தான் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இது உண்மையா என்று எனக்கு ரொம்ப காலமாக ஒரு சந்தேகமிருந்தது.

அந்தக் கேள்விக்கு சமீபத்தில்தான் எனக்கு விடை கிடைத்தது. நீண்டகாலமாக தவறாகவே எடுத்துக்கொள்ளப்படும், ஏதேதோ வகையில் நியாயப்படுத்தப்படும் ஒரு பிரச்சனைக்கான வரலாற்று ரீதியான தீர்வாக அது இருந்தது. அது என் கண்களைத் திறந்தது என்றே சொல்லவேண்டும். அதை இந்த உலகிடம், முக்கியமாக தமிழுலகில், பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன்.

அன்னை ஆயிஷா அவர்களின் ஆறு/ஒன்பது என்ற திருமண மற்றும் வீடுகூடிய வயதுக்கணக்கு ஆதாரப்பூர்வ நபிமொழித்தொகுப்பாகிய புகாரி மற்றும் முஸ்லிமிலிருந்தே பெறப்படுகிறது. ஆனால் உலகப்புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்களின் கருத்து இதுவல்ல. ஆயிஷா அவர்கள் பதின்ம வயதுப்பெண்ணாகவே இருந்தார்கள் என்பதே அவர்களது வாதம்.

ஆயிஷா அவர்கள் பெருமானாரோடு வீடுகூடியபோது அவர்களுக்கு குறைந்தது பதினைந்து வயது என்று உலகப்புகழ் பெற்ற, அதிகாரப்பூர்வமாக எழுதிய வரலாற்று ஆசிரியரான தபரி கூறுகிறார். ஆயிஷா அவர்கள் பெருமானாரோடு வீடுகூடியபோது பத்து வயதிருக்கும் என்கிறார் வரலாற்று ஆசிரியர் இப்னு ஹிஷாம். திருமணத்தின்போது வயது ஒன்பது என்றும், வீடுகூடியபோது பன்னிரண்டு என்றும் இப்னு கல்லிகான் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் கணிக்கின்றனர். ஆயிஷா அவர்கள் இஸ்லாத்தில் இணைந்த மிகத்தொடக்ககால முஸ்லிம் என்று புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் இப்னு இஸ்ஹாக் கூறுகிறார்.

ஆறு/ஒன்பது வயது என்ற கூற்றுக்கு மாற்றமாக, அன்னை ஆயிஷா அதிகமான வயது கொண்டவர்கள் என்றே அவ்வரலாற்று ஆசிரியர்கள் மறைமுகமாகக் கூறுகிறார்கள். இது வரலாற்றாசிரியர் தபரியின் கருத்தோடு ஒத்துப்போகிறது.

அதுமட்டுமல்ல. ஆயிஷா அவர்கள் பெருமானாரோடு வீடுகூடியபோது பதின்ம வயதின் இறுதியில், அதாவது 17/18 வயதாக, இருந்தார்கள் என்றே நவவி, அஸ்கலானி, இப்னு கதீர் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

பிறந்த தேதி, வயது போன்றவற்றைப் பொறுத்தவரை இன்று நாம் இருப்பதைப்போல மிகத்தெளிவாக அந்தக்கால மக்கள் இருக்கவில்லை. இருக்கமுடியவில்லை. இன்ன ஆண்டு, இன்ன தேதி, இன்ன கிழமை, இன்ன நேரம் நான் பிறந்தேன் என்று நம்மால் சொல்லமுடிவதுபோல அந்தக்கால மக்களால் சொல்ல முடியவில்லை. எல்லாம் ஒரு குத்து மதிப்பாகத்தான் சொல்ல முடிந்தது. ஒவ்வொரு அரேபியரும் தனக்குப் பின்னால் உள்ள பத்துப் பதினோறு தலைமுறைகளையாவது நினைவில் வைத்திருப்பார். அந்தப் பாரம்பரியத்தொடரை மனப்பாடமாகச் சொல்வார். பாரம்பரியத்தொடரை நினைவில் வைத்திருத்தல் அரேபிய ரத்தத்தில் ஊறிய ஒரு குணாம்சமாகும். இதை மனதில் கொள்ளவேண்டியது அவசியம்.

எனக்குத் திருமணமானபோது ஆறு வயது என்றும், வீடுகூடியபோது ஒன்பது வயது என்றும் அன்னை ஆயிஷா சொன்னதாக சஹீஹ் புகாரியில் ஒரு அல்லது சில நபிமொழிகள் பதியப்பட்டிருப்பதுதான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம். எனவே அந்த நபிமொழிகளை சரியாக விளங்கிக்கொள்ளவேண்டிய அவசியம் நமக்குள்ளது.

நபிமொழித்தொகுப்பு என்பது வரலாற்று ஆவணமல்ல. பிரதானமாக, இதைச்செய்யுங்கள், இதைச்செய்யாதீர்கள் என்று பெருமானார் சொன்னதன் தொகுப்புதான் அது. எனவே அவ்விதமான கட்டளைகளுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை நபிமொழிகளில் காணப்படும் வரலாற்று ரீதியான தகவல்களுக்குக் கொடுக்க முடியாது.

அப்படியானால் அவை பொய்யா என்றால் அப்படியல்ல. அவை உண்மைதான். ஆனால் பல இடங்களில் காணப்படும் பல நபிமொழிகளை ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்து எந்த அளவுக்கு அதில் உண்மையுள்ளது என்று நாம் அறிந்துகொள்ளவேண்டியுள்ளது.

புகாரியிலேயே வரும் வேறு சில சஹீஹான நபிமொழிகளை வைத்துப் பார்க்கும்போது அன்னை ஆயிஷா தொடர்பான அந்த ஹதீதில் உள்ள தகவலில் பிழையுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

ஹதீதின் நம்பகத்தன்மையில் எந்தப்பிரச்சனையும் இல்லை. ஆனால் காலக்கிரம ரீதியான துல்லியம் அந்த நபிமொழிகளில் கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு இல்லை என்பது விளங்கும். அது எப்படி என்று பார்க்கலாம்.

இஸ்லாமிய அழைப்பு தொடங்கியது கிபி 610.

மக்காவிலிருந்து மதினாவுக்குப் புலம் பெயர்ந்தது, அதாவது ஹிஜ்ரத்தின் துவக்கம் கிபி 622.

மதினாவில் மனைவி ஆயிஷாவோடு பெருமானார் வீடுகூடிய ஆண்டு கிபி 623/24. அதாவது ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு என்று வைத்துக்கொள்ளலாம்.

இன்று நாம் செய்வதைப்போல நாள், தேதிகளை வைத்து அந்தக்கால மக்கள் ஒரு நிகழ்வை, ஒரு பிறப்பை, ஒரு இறப்பை, ஒரு திருமணத்தை – இப்படி எதையும் குறிப்பிடவில்லை. முக்கியமான நிகழ்வுகளை வைத்தே குறிப்பிட்டனர்.

உதாரணமாகப் பெருமானார் பிறந்த ஆண்டை ’யானை ஆண்டு’ என்று குறிப்பிட்டனர். அப்ரஹா க’அபாவை அழிப்பதற்காக யானைப்படையுடன் புறப்பட்டு வந்து ஆண்டவன் அனுப்பிய அபாபீல் பறவைகளால் செத்தொழிந்த வரலாற்றின் தொடர்பில் யானை ஆண்டு ஆனது அது.

அந்தக்கால ரோமாபுரியிலும் வயது உத்தேசமாகவே கணக்கிடப்பட்டது. 1837க்குப் பிறகுதான் மிகச்சரியாக வயதைக்கணக்கிடும் போக்கு இங்கிலாந்தில் ஏற்பட்டது என்று வரலாற்று ஆசிரியர் பாட்தேன் (Pat Thane) குறிப்பிட்டார்.

ஆயிஷா அவர்கள் எந்த ஆண்டு பிறந்தார்கள்?

இந்தக்கேள்விக்குத் தெளிவான பதில் இன்னும் கிடைக்கவில்லை. கிபி 613/14ல் பிறந்ததாக பிரிட்டானிகா, விக்கி போன்ற கலைக்களஞ்சியங்களும், பல வரலாற்று நூல்களும் சொல்கின்றன. ஆனால் அன்னை ஆயிஷா தொடர்பான நபிமொழிகளும், வரலாற்று நிகழ்வுகள் வேறுவிதமான தகவல்களைக் கொடுக்கின்றன.

ஹிஜ்ரத்துக்குப் பிறகே ஆயிஷா அவர்கள் பெருமானாரோடு வீடுகூடுதல் நிகழ்ந்தது. ஹிஜ்ரி இரண்டாமாண்டு, பத்ருப்போருக்குப் பிறகு என்று வரலாற்று ஆசிரியர் நவவி கூறுகிறார். ஆயிஷா அவர்கள் ஹிஜ்ரத்துக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது பெருமானாருக்கு நபித்துவம் கிடைப்பதற்கு முன்பே, கிபி 609ல், பிறந்தவர்கள் என்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

அபூபக்கர் அவர்களின் இரண்டு மனைவிகளுக்கும் பிறந்த குழந்தைகள் அனைவருமே இஸ்லாத்துக்கு முந்தைய காலகட்டத்தில் பிறந்தவர்களே என்று குறிப்பாக வரலாற்று ஆசிரியர் தபரி குறிப்பிடுகிறார்.

இஸ்லாமியப் பிரச்சாரம் பெருமானாரால் தொடங்கப்பட்ட காலகட்டம் கிபி 610. அதற்கு முன்னரே ஆயிஷா அவர்கள் பிறந்தார்கள் எனில் திருமணத்தின்போது 12 வயதாகவும் வீடுகூடியபோது குறைந்தது 14 வயதாகவும் இருந்திருக்க வேண்டும்.  ஏன் குறைந்தபட்சம் என்று சொல்கிறேன் என்றால், ஜாஹிலிய்யாக் காலத்திலேயே ஆயிஷா பிறந்துவிட்டார்கள் என்று தபரி கூறுகிறார். இஸ்லாம் பிரச்சாரம் செய்யப்பட்ட கிபி 610க்கு ஓராண்டுக்கு முன் அல்லது  இரண்டாண்டுக்கு முன் பிறந்தார்கள் என்று சொல்லவில்லை.

புகாரி நபிமொழியின்படி ஆறுவயதில் பெருமானாரோடு ஆயிஷாவுக்குத் திருமணமானதென்றும், ஒன்பது வயதில் அவர்கள் வீடுகூடினார் என்றும் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் இடையில் மூன்று ஆண்டுகள்தான் இடைவெளி என்று கூறுவது வரலாற்றுப்பிழை என்கிறார் மௌலானா முஹம்மது அலீ.

க’அபா புணர்நிர்மாணம் செய்யப்பட்ட காலகட்டத்தில் ஃபாத்திமா பிறந்தார்கள் என்றும், அப்போது பெருமானாருக்கு 35 வயது என்றும், ஆயிஷாவைவிட ஃபாத்திமா ஐந்து வயது மூத்தவர் என்று அப்பாஸ் அவர்கள் அறிவிப்பதாக வரலாற்று ஆசிரியர் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி கூறுகிறார். மௌலானா முஹம்மது அலீயும் அவர் எழுதிய பெருமானாரது வாழ்க்கை வரலாற்று நூலில் அப்படித்தான் கூறுகிறார்.  

மேலும் இஸ்லாமிய அழைப்புப்பணி தொடங்கிய ஆண்டுதான் அல்லது அதற்குக் கொஞ்ச காலத்துக்கு முன்னர்தான் ஆயிஷா அவர்கள் பிறந்திருக்கவேண்டும். எனவே, திருமணத்தின்போது பத்து வயதுக்குக் குறைவாக ஆயிஷா அவர்கள் இருந்திருக்க முடியாது என்று மௌலானா முஹம்மது அலீ கூறுகிறார்.

தன் மருமகனுக்குப் பெண் குழந்தை (ஃபாத்திமா) பிறந்தது சிற்றப்பா அப்பாஸ் அவர்களுக்கும் குறைஷி குலத்துக்கும் முக்கியமான நிகழ்வாகும். மேலும் க’அபாவின் புணர்நிர்மாணத்தோடும் அப்பிறப்பு தொடர்புகொண்டுள்ளது. எனவே அவர்கள் நினைவுத்தடத்தில் அது ஆழமாகப் பதிந்துள்ளது.

பெருமானாருக்கு நாற்பது வயதிருக்கும்போது ஆயிஷா பிறந்துள்ளார்கள் என்று இதன் மூலம் யூகிக்க முடியும். அதாவது நபித்துவம் தொடங்கிவிட்ட காலகட்டம் அது. நபித்துவம் தொடங்குவதற்கு முன்பே ஆயிஷா அவர்கள் பிறந்ததாக தபரி கூறுகிறார். 

எனவே மதினாவில் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு அவர்கள் பெருமானாரோடு வீடுகூடினார்கள் என்றால் அப்போது ஆயிஷா அவர்களுக்குக் குறைந்தது பதினைந்து வயதாவது ஆகியிருக்கவேண்டும். ஏனெனில் மக்காவில் பெருமானார் 12 ஆண்டுகளுக்கும் மேலாக, கிபி 610லிருந்து 22வரை, இஸ்லாத்தை எடுத்துரைத்தார்கள். அதன் பிறகுதான் ஹிஜ்ரத் நடந்துள்ளது.

ஹஸ்ரத் அபூபக்கருக்கு இரண்டு மனைவியர். குதைலா அல்லது ஃபாத்திலா என்று ஒருவர், உம்மு ரூமான் என்று ஒருவர். குதைலாவுக்கு இரண்டு குழந்தைகள். அப்துல்லாஹ், அஸ்மா. உம்மு ரூமானுக்கு இரண்டு குழந்தைகள். அப்துர் ரஹ்மான், ஆயிஷா. இந்த நான்கு குழந்தைகளுமே பெருமானாரால் இஸ்லாமிய அழைப்பு செய்யப்படுவதற்கு முன்பு பிறந்தவர்கள்.  

அபு உபைதுல்லாஹ் இப்னு அல் ஜர்ரா, சயீத் இப்னு ஜைத், கப்பாப், அர்கம் போன்றோர் இஸ்லாத்தில் இணைந்த காலகட்டத்தில்தான் ஆயிஷாவும் முஸ்லிமானார்கள் என்கிறார் வரலாற்று ஆசிரியர் இப்னு ஹிஷாம்.

புகாரி கூறும் ஆறு-ஒன்பது வயது நிகழ்வு உண்மையாக இருக்குமானால் மேலே சொல்லப்பட்ட வர்களெல்லாம் முஸ்லிமானபோது ஆயிஷா அவர்கள் பிறந்திருக்கவே வாய்ப்பில்லை.

ஆயிஷா அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டபோது அதனை நன்றாகப் புரிந்துகொண்டுதான் செய்தார்கள். எனவே பெருமானாரோடு வீடுகூடியபோது அவர்கள் பதின்ம வயதுகளில்தான் இருந்திருக்கவேண்டும் என்று இப்னு இஸ்ஹாக்கும் இப்னு ஹிஷாமும் கருதுகிறார்கள்.

அஸ்மா அவர்களின் வயது

ஆயிஷா அவர்களைவிட அவரது அக்கா அஸ்மா அவர்கள்பத்து வயது மூத்தவரென்றும், பெருமானார் ஹிஜ்ரத் செய்வதற்கு 27 ஆண்டுகளுக்கு முன், கிபி 595ல், அஸ்மா பிறந்தார்கள் என்றும் வரலாற்று ஆசிரியர் நவவி கூறுகிறார். இக்காலத்திய கலைக்களஞ்சியங்களும் அந்த தேதியைத்தான் கொடுக்கின்றன.

இதன்படி பார்த்தால் நபித்துவத்துக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன், கிபி 605ல், ஆயிஷா அவர்கள் பிறந்திருக்க வேண்டும். அப்படியானால் பெருமானாரோடு வீடுகூடும்போது அவர்களுக்கு 19 வயதாக இருந்திருக்க வேண்டும்.

இக்கருத்தை வரலாற்று ஆரிசியர் இப்னு கதீரின் கருத்து உறுதிப்படுத்துகிறது.

ஆயிஷா அவர்களைவிட பத்துவயது மூத்த சகோதரியான அஸ்மா அவர்கள் ஹிஜ்ரி 73ல் இறக்கிறார்கள். அப்போது அவர்களின் வயது நூறு! இந்தக்கணக்குப்படி பார்த்தால் பெருமானாரும் அன்னை ஆயிஷாவும் வீடுகூடிய ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் அஸ்மா அவர்களுக்கு வயது 28. அன்னை ஆயிஷாவைவிட அவர் பத்து வயது பெரியவர் என்பதால், அப்போது ஆயிஷா அவர்களின் வயது 18 ஆக இருக்கவேண்டும். எனவே பெருமானாரோடு வீடுகூடியபோது ஆயிஷா அவர்களுக்கு வயது 18 அல்லது 19 என்பது தெளிவாகிறது.   

ஜாரியா

சூரா கமர் அருளப்பட்டபோது நான் ஒரு ’ஜாரியா’வாக (விளையாட்டு குணம் கொண்டவளாக) இருந்தேன் என்று ஆயிஷா கூறுகின்றார்கள் (புகாரி 4876). ’சபி’யாக (குழந்தையாக) இருந்தேன் என்று கூறவில்லை.

’ஜாரியா’ என்பது பாரம்பரிய அரபி மொழியில் இளம் வயதுப்பெண்ணை அல்லது அதைவிடக் கொஞ்சம் அதிகமான வயதுகொண்டோரைக் குறிக்கும் சொல்லாகும். வீடுகூடுவதற்கு சுமார் ஏழாண்டுகளுக்கு முன்பே ஆயிஷா அவர்கள் பதின்ம பருவத்தை எட்டியிருக்கவேண்டும் என்பது இதன் குறிப்பு. இதன்படி பார்த்தால் பெருமானாரோடு வீடுகூடியபோது அவர்களுக்கு 19 வயது இருந்திருக்க வேண்டும்.

ஆறு-ஒன்பது என்ற புகாரி ஹதீதின் கணக்கை அப்படியே எடுத்துக்கொண்டால் சூரா கமர் அருளப்பட்டபோது ஆயிஷா அவர்களுக்கு வயது இரண்டாக மட்டுமே இருந்திருக்கவேண்டும். ஆனால் இரண்டு வயதுக்குழந்தையை ’ஜாரியா’ என்று சொல்லமுடியாது. இலக்கணப்பிழை, பொருட்பிழை எல்லாம் வந்துவிடும்.

அதோடு, அவ்வசனங்களை அன்னையார் நன்றாக நினைவுகூறுகிறார்கள். இரண்டு வயதுக்குழந்தைக்கு இது சாத்தியமில்லை. நான்கு வயது வரை நடந்தது எதுவும் பொதுவாக நினைவில் இருக்காது என்று உளவியல் கூறுகிறது.

ஏற்கனவே நிச்சயமானவர்

நபித்துவத்தின் பத்தாவது ஆண்டில், கிபி 619/20 ல், அன்னை கதீஜா இறந்துபோனார்கள். ஹௌலா குடும்பத்தின் நெருங்கிய உறவினராக இருந்தார். பெருமானாரைத் தனிமை வாட்டிக்கொண்டிருந்தது. அதோடு குழந்தைகளையும் கவனிக்கவேண்டும். பெருமானாருக்கு ஒரு துணை அவசியமென்பதை ஹௌலா உணர்ந்தார்கள்.

எனவே பெருமானாரிடம் சென்ற ஹௌலா, குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள தாய்ப்பாசம் கொண்ட ஒரு பெண் துணை தேவை என்பதை எடுத்துரைத்தார்கள். அதோடு, இரண்டு பெண்களைப்பற்றியும் கூறினார்கள்.

ஒரு ’சய்யிபா’, ஒரு ’பிக்ர்’ இரண்டு பேரில் யார் வேண்டும் என்று கேட்டார்கள்.

’சய்யிபா’ என்ற வயது முதிர்ந்த, பொறுப்புள்ள ஒரு விதவையைக் குறிக்கும். ’பிக்ர்’ என்பது தேவையான உடல் வளர்ச்சியும், மனமுதிர்ச்சியும் கொண்ட கன்னிப்பெண்ணைக் குறிக்கும்.

ஆனால் ’ஜாரியா’ என்ற சொல்லை ஹௌலா பயன்படுத்தவில்லை. இச்சொல்லை ஏற்கனவே அன்னை ஆயிஷா தனக்குப் பயன்படுத்தியதைப் பார்த்தோம். ’ஜாரியா’ என்பது இளம் பெண்களைக் குறிக்கும். ஆனால் அவர்கள் வயதுக்கு வந்தவர்களாகவும் இருக்கலாம், வராதவர்களாகவும் இருக்கலாம்.

இதுதான் பெருமானார் திருமணம் செய்துகொண்ட சூழ்நிலையின் பின்னணி. குடும்பத்தையும் குழந்தைகளையும் தன்னையும் பார்த்துக்கொள்ளும் ஒரு துணை தேவைப்படும் அந்தத் தருணத்தில் தானே ஒரு குழந்தையாக இருந்த, ஆறு வயதாக இருந்ததாகச் சொல்லப்பட்ட ஆயிஷாவையா தேர்ந்தெடுத்திருப்பார்கள்? அப்படிச்செய்வது பிரச்சனையை அதிகரித்திருக்குமே தவிர, நிச்சயமாகக் குறைத்திருக்காது! ஆனால் ஆயிஷா அவர்களுக்கு ஆறுவயதல்ல என்பதை மீண்டும் இங்கே நினைவுகொள்ளவேண்டும்.

பெருமானாருக்கு ஆயிஷா அவர்களை மணமுடிக்கலாம் என்று பெருமானாரின் அத்தையான ஹௌலா அவர்கள் முயற்சி செய்தபோது அபூபக்கர் அவர்களிடம் சென்று கேட்டார். ஹஸ்ரத் அபூபக்கர் முதலில் தயங்கினார். காரணம், ஒரு முஸ்லிமும் இன்னொரு முஸ்லிமும் சகோதரர் என்பதால் சகோதரரின் மகளை இன்னொரு சகோதரர் எப்படி மணக்க முடியும் என்பது அவரது பிரச்சனை.

அதை ஹௌலா அவர்கள் பெருமானாரிடம் சொன்னபோது, மார்க்கத்தில்தான் நாம் சகோதரர்கள், ரத்த உறவால் அல்ல என்று பெருமானார் சொல்லவும் அந்தப் பிரச்சனை ஒருவாறு தீர்ந்தது.

ஆனால் பிரச்சனை அதோடு முடிந்துவிடவில்லை. ஆயிஷா அவர்களை முத்’இம் என்பவரது மகன் ஜுபைர் என்பவருக்கு எற்கனவே நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இஸ்லாத்தை அபூபக்கர் அவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு முந்திய காலகட்டம் அது. எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் அந்த நிச்சயம் நடந்தது என்று தெரியவில்லை.

நிச்சயம் செய்யப்பட்ட ஜுபைரை இப்போது மருமகனாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அபூபக்கர் அவர்கள் சென்று பேச்சுக்கொடுத்துப் பார்த்தார். ஜுபைரின் தந்தை முத்’இம் தெளிவாகச் சொல்லிவிட்டார். உன் மகளை என் மகனுக்கு முடித்தால் அவனை நீ முஸ்லிமாக்கிவிடுவாய். எனவே இந்த உறவு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

அப்பாடா ரொம்ப சந்தோஷம், ஒரு வழியாக சனியன் விட்டொழிந்தது என்று நினைத்துக்கொண்ட அபூபக்கர் அவர்கள் பெருமானாருக்குத் தன் மகளைக் கொடுக்கச் சம்மதித்தார்கள்.

புகாரி ஹதீதின்படி பெருமானாருக்கு மணமுடித்தபோது ஆயிஷா அவர்களுக்கு வயது ஆறு என்றால் ஜுபைரோடு நிச்சயம் செய்யப்பட்டபோது வயது என்ன? மூன்றா? நான்கா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன!

அறிவுப்பூர்வமான அனுமானம் ஆயிஷா அவர்கள் பதின்ம வயதில் இருந்திருக்கவேண்டும் என்பதுதான். இல்லையெனில் ஒரு குழந்தையை நிச்சயம் செய்து வைத்திருந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டி வரும். அப்படிப்பட்ட பழக்கம் அரேபியாவில் அறியாமைக்காலத்தில்கூட இருக்கவில்லை என்பதுதான் உண்மை. பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தாலும் புதைப்பார்களே தவிர, ஒரு ஆணுக்கு நிச்சயம்செய்து வைக்க மாட்டார்கள்!

அபூபக்கர் அவர்களின் கவலை

நிகாஹ் ஆன உடனேயே பெருமானார் ஆயிஷா அவர்களை தன்னுடன் அழைத்துக் கொள்ளவில்லை. கிபி 622ல் ஹிஜ்ரத் நிகழ்ந்தபோது ஆயிஷா அவர்கள் பெருமானாருடன் மதினாவுக்குச் செல்லவில்லை. தனியாகத் தன் சகோதர சகோதரியோடும் அன்னையாரோடும்தான் சென்றார்.

மதினா சென்றபிறகு முதலில் தன் பெற்றோரோடும் பின்பு சுன்ஹ் என்ற புறநகர்ப் பகுதியிலும்தான் தங்கவைக்கப்பட்டார்கள். அதன் பிறகு மதினாவில் பள்ளிவாசல் கட்டப்பட்டது. பின்பு அதையொட்டிச் சின்னச் சின்னதாக பெட்டிகளைப்போல பெருமானாரின் குடும்பத்தினருக்காக வீடுகள் எழுப்பப்பட்டன.  அதில் ஒன்றில் பெருமானாரின் மனைவியான சௌதா அவர்கள் தங்கவைக்கப்பட்டார்கள். ஆனால் ஆயிஷா அவர்கள் அப்போது அழைத்துக்கொள்ளப்படவில்லை.

இவ்விஷயம் அபூபக்கர் அவர்களுக்கு உறுத்தியது. ஏன் என் மகளை அழைத்துக்கொள்ளவில்லை என்று பெருமானாரிடம் கேட்டார்கள். மஹர் கொடுக்க தன்னிடம் ஏதுமில்லை என்று பெருமானார் சொல்லவும், அந்தப் பணத்தைப் பெருமானாருக்காக அபூபக்கரே கொடுத்தார்கள்.

பெருமானாரும் ஆயிஷா அவர்களும் வீடுகூடியது ஹிஜ்ரி ஒன்றாம் ஆண்டு நிகழ்ந்தது என்றும், ஏழெட்டு மாதங்கள் கழித்து ஹிஜ்ரி இரண்டில் ஷவ்வால் மாதம் நிகழ்ந்தது என்றும் கூறப்படுகிறது.

தன்னுடைய மகள் ஒன்பது வயதே ஆன குழந்தையாக இருந்தால் பெருமானாரோடு வீடுகூடாமல் இருந்ததைப்பற்றி அபூபக்கர் அவர்கள் ஏன் இவ்வளவு கவலை கொள்ளவேண்டும்? மணமகன் கொடுக்க வேண்டிய மஹரை மாமனாரே கொடுத்து அதை ஏன் துரிதப்படுத்த வேண்டும்? சின்னப்பெண்தானே, இன்னும் சில ஆண்டுகள் ஆகட்டும் என்று காத்திருந்திருக்கலாமே?

ஆயிஷா அர்கள் பதின்ம வயதில்தான் இருந்தார்கள் என்பதை இதுவும் உறுதி செய்கிறது.

போர்களில் பங்கெடுப்பு

பதினைந்து வயது ஆகிவிட்ட ஆண்களையும் பெண்களையும்தான் போர்க்களத்துக்கு வர பெருமானார் அனுமதித்தார்கள். 14 வயதாக இருந்தால்கூட எக்காரணம் கொண்டும். அனுமதியில்லை. உதாரணமாக தனக்கு 14 வயதாக இருந்தபோது உஹதுப்போரில் தன்னை அனுமதிக்கவில்லை என்றும் 15 வயதான பிறகு அகழ்ப்போரில் கலந்துகொள்ள பெருமானார் அனுமதியளித்தார்கள் என்றும் இப்னு உமர் அவர்கள் சொல்லும் நபிமொழி ஒரு உதாரணம் (புகாரி,2664).

பொதுவாகப் பயணம் செல்லும்போதும், போர்களுக்குச் செல்லும்போதும் சீட்டுக்குலுக்கிப் போட்டு அதில் எந்த மனைவியின் பெயர் வருகிறதோ அவரைப் பெருமானார் அழைத்துச் செல்வார்கள் என்று அன்னை ஆயிஷா சொல்லும் ஒரு ஹதீது புகாரியில் உள்ளது (4141).

பெருமானார் வீடுகூடிய நிகழ்வுக்குப் பிறகு உஹதுப்போர் நடந்ததால், புகாரி ஹதீதின்படி அப்போது ஆயிஷா அவர்களின் வயது பத்தாக மட்டுமே இருந்திருக்க வேண்டும். ஆனால் பதினான்கு வயது ஆண் பையன்கள்கூட போர்க்களத்துக்கு வருவதைப் பெருமானார் அனுமதிக்கவில்லை. அப்படி இருக்கும்போது பெண் குழந்தைகள் வருவதை அனுமதித்திருப்பார்களா?!  பதின்ம வயதிலோ, இருபதுகளிலோ இருந்திருந்தால்தான் அப்பெண்களைப் பெருமானார் போர்க்களத்துக்குள் அனுமதித்திருக்க முடியும்.

எனவே புகாரி ஹதீதுக்கு எதிராக புகாரி ஹதீதே உள்ளதை நாம் நன்றாகப்புரிந்துகொள்ள வேண்டும். அப்படியானால் இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்கமுடியும், அல்லவா?

பத்ருப்போர் நடந்தபோது அங்கே அன்னை ஆயிஷா அவர்களும் இருந்துள்ளார்கள். அப்படியானால் அவர்களுக்கு அப்போது வயது 15 அல்லது அதற்கு மேல் இருந்திருக்கவேண்டும் என்பது குறிப்பு. 

பத்ருப்போரில் இறந்துபோன எதிரிக்குறைஷிகளின் உடல்கள் எல்லாம் ஒரு கிணற்றுக்குள் போடப்பட்டன. அந்தக் கிணற்றுக்குள் குனிந்து பார்த்த பெருமானார், ’உங்கள் நாயன் உங்களுக்கு வாக்களித்ததெல்லாம் உண்மைதான் என்பதைக் கண்டுகொண்டீர்களா?’ என்று கேட்டார்கள். பிறகு, ‘நான் சொல்வதை அவர்கள் கேட்கிறார்கள்’ என்றார்கள். அப்போது ஆயிஷா அவர்கள்,’நபியே மரித்தவர்களை உம்மால் கேட்கவைக்க முடியாது’ என்ற 30வது அத்தியாயம் சூரா நூரின் 52 வது இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்! (புகாரி, 3980, 81).

அன்னை ஆயிஷா அவர்கள் அபாரமான நினைவாற்றலும் திருமறை ஞானமும் கொண்டவர்கள் என்பதை இந்த நிகழ்ச்சியும் நிரூபிக்கிறது. அவர்களின் வயது நிச்சயமாக ஆறாகவோ ஒன்பதாகவோ இருக்கமுடியாது என்பதைப் புரிந்துகொள்ள இந்த அபார நினைவாற்றலும் நமக்கு நிச்சயம் உதவுகிறது.  

உஹதுப்போர் நிகழ்ச்சி

சஹீஹ் புகாரியிலேயே உஹதுப்போரில் நடந்த ஒரு நிகழ்ச்சி கூறப்படுகிறது. சிலர் பெருமானாரை விட்டுவிட்டுப் பின்வாங்கிச் சென்றனர். அப்போது ஆயிஷா அவர்களும், உம்மு சுலைம் அவர்களும் தண்ணீர்க் குடுவைகளை எடுத்துக்கொண்டு, ஆடைகளை உயர்த்தி வரிந்துகட்டிக்கொண்டு கணுக்கால்களில் கொலுசுகள் தெரிய ஓடிச்சென்று தாகித்தவர்கள் வாய்க்குள் தண்ணீர் கொடுத்துவிட்டு, தீர்ந்தவுடன் மீண்டும் தண்ணீர் நிரப்பச் சென்றனர் என்று நபித்தோழர் அனஸ் அவர்கள் அறிவிக்கும் அந்த நபிமொழி கூறுகிறது (புகாரி, 4064).

உஹதுப்போரில் பிஷ்ர் இப்னு அர்கபா என்பவருடைய தந்தை ஷஹீதானார். அப்போது பிஷ்ர் அழுதார். அதைப்பார்த்த பெருமானார், ‘நான் உனக்குத் தந்தையாகவும் ஆயிஷா உனக்குத் தாயாகவும் இருப்போம். இது உனக்குப் போதாதா?’ என்று கேட்டார்கள் என்று ‘திமிஷ்க்கின் வரலாறு’ என்ற நூலில் இப்னு அசாகிர் எழுதுகிறார். ஆயிஷா அவர்கள் ஒன்பது வயதுக் குழந்தையாக இருந்திருந்தால் பெருமானார் இப்படிச் சொல்லியிருப்பார்களா?

அகழ்ப்போர் நிகழ்ச்சி

மூண்டு ஆண்டுகள் கழித்து அகழ்ப்போர் ஏற்பட்டது. கடுமையான குளிராக இருந்தது. எதிரிகள் நுழைந்துவிடலாம் என்று நினைத்த ஒரு இடத்தைப் பெருமானார் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். குளிர் அதிகமானபோது பெருமானார் ஆயிஷாவிடம் வருவார்கள். அன்னையார் பெருமானாரை அணைத்துக்கொள்வார்கள். கொஞ்சநேர கதகதப்புக்குப்பின் மீண்டும் பெருமானார் காவலுக்குச் செல்வார்கள். கடைசியில் பெருமானாருக்கு பதிலாக அந்த வேலையைச் செய்ய ச’அத் இப்னு அபீ வக்காஸ் நியமிக்கப்பட்டார்கள்.

ஒன்பது வயதில் பெருமானாரோடு ஆயிஷா வீடுகூடியதை ஏற்றுக்கொண்டால், அகழ்ப்போரின்போது அவர்களுக்கு பதிமூன்று வயதுதான் இருந்திருக்கவேண்டும். எனவே புகாரியில் சொல்லப்பட்ட வயது இங்கேயும் பொருந்தவில்லை என்பதை கவனிக்கவேண்டும்.

நபிமொழிகளும் காலக்கணக்கும்

ஆண்டுக்கணக்கு சொல்வதில் அரேபியர்கள் மிகத்துல்லியமாக எப்போதும் இருந்ததில்லை. பெருமானார் மக்காவில் பதிமூன்று ஆண்டுகள் இருந்ததாகவும், பின் மதீனா சென்றதாகவும் இப்னு அப்பாஸ் கூறுகிறார்கள். ஆனால் மக்காவில் பத்தாண்டுகளும் மதினாவில் பத்தாண்டுகளும் இருந்ததாக தோழர் ராபியா இப்னு அபீ அப்துர்ரஹ்மான் கூறுகிறார்கள். இந்த இரண்டு நபிமொழிகளுமே புகாரியில் பதிவாகியுள்ளன!

காலக்கணக்கைப் பொறுத்தவரை நபிமொழிகள் சொல்லுவதை அப்படியே துல்லியமாக உள்ளதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதையே இவை காட்டுகின்றன.

எண்களும் அரேபியர்களும்

எண்களைப் புரிந்துகொள்வது அரேபியர்களுக்கு ரொம்பவும் கடினமாக இருந்தது. ஒரு மாதத்துக்கு இவ்வளவு நாட்கள் என்று காட்ட பெருமானார் தன் பத்து விரல்களையும் இப்படி, இப்படி என்று இரண்டு முறை விரித்துக்காட்டினார்கள். முதலில் தன் பத்து விரல்களையும் இரண்டு முறை விரித்து மடக்கிக் காட்டிய பெருமானார், இரண்டாம் முறை பெருவிரலை மடக்கிக்கொண்டு ஒன்பது விரல்களை மட்டும் காட்டினார்கள்.  எண்களைப் பொறுத்தவரை அரேபியக்கணக்கு ரொம்ப குழந்தைத்தனமானது. எனவே வயது பற்றிய அவர்களது கணக்கைத் துல்லியமானதாக எடுத்துக்கொள்ள முடியாது.

பெருமானாரின் அரிய குணங்கள்

மிகச்சின்ன வயதிலேயே தன் மனைவி ஆயிஷாவோடு பெருமானார் வீடுகூடினார்கள் என்று சொல்வது பெருமானாரின் குணாம்சத்தைப் புரிந்துகொள்ளாத பேச்சாகும். இளைஞராக இருந்தும் ஒரு விதவையை, தன்னைவிட பதினைந்து வயது மூத்த ஒரு பெண்ணைத் தன் மனைவியாக ஏற்றுக்கொண்டவர்கள் பெருமானார். அந்தக்கால அரேபியர்களைப்போல உணர்ச்சிகளுக்குப் பெருமானார் என்றுமே அடிமையானதில்லை.

ஆயிஷா அவர்களைத் திருமணம் செய்த பிறகும்கூட ஐந்து ஆண்டுகளுக்குத் தன்னோடு அழைத்துக்கொள்ளாமல்தான் இருந்துள்ளார்கள். ஹஸ்ரத் அபூபக்கரே போய் ஏன் உங்கள் மனைவியை இன்னும் அழைத்துக்கொள்ளாமல் இருக்கிறீர்கள் என்று சொன்னபிறகுதான் பெருமானாரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆயிஷா அவர்களின் திருமண வாழ்க்கை தொடங்குகிறது என்பதைப் பார்த்தோம்.

புகாரி ஹதீஸ் சொல்வது என்ன?

அப்படியானால் புகாரி நபிமொழி என்னதான் சொல்கிறது? ஏன் அப்படிச் சொல்கிறது? ”அன்சாரிகளின் தகுதிகள்” என்ற பாகத்தில் இரண்டு முறை அன்னை ஆயிஷா அவர்களின் வயது பற்றிய பிரச்சனைக்குரிய நபிமொழி கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்குமுன் வேறொரு நபிமொழியை நாம் பார்க்கவேண்டியுள்ளது.

அது லைலத்துல் கத்ர் இரவு எந்தெந்த நாட்களில் வரலாம் என்பது பற்றியது. அதைச் சொல்வதற்காகப் பெருமானார் வந்தபோது இரண்டு முஸ்லிம்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அதன் காரணமாக, அந்த தகவல் என்னிடமிருந்து எடுக்கப்பட்டுவிட்டது (அதாவது நான் அந்த தேதியை / இரவை மறந்துவிட்டேன்). அது உங்களுக்கு நல்லதாகக்கூட இருக்கலாம். லைலத்துல் கத்ர் எது என்பதை ரமலான் மாதத்தின் ஐந்தாவது, ஏழாவது மற்றும் ஒன்பதாவது இரவுகளில் தேடுங்கள் என்று கூறினார்கள் (புகாரி, 2023).

ரமலான் மாதத்தில் கடைசிப்பத்தில் வரும் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ர் இருக்கலாம் என்பதை நாம் அறிவோம். எனவே 21, 23, 25, 27, 29ல், குறிப்பாக 27ல், நாம் அதைத்தேடுகிறோம்.

ஆனால் மேற்கண்ட ஹதீதில் பெருமானார் ஐந்தாவது, ஏழாவது, ஒன்பதாவது இரவுகளில் என்றுதான் கூறுகிறார்களே தவிர, இருபத்தைந்தாவது, இருபத்தேழாவது, இருபத்தொன்பதாவது இரவுகளில் என்று கூறவில்லை.

அப்படிக்கூறியிருந்தால், ஹம்ஸ அஷ்ரூன், சப’அ அஷ்ரூன், திஸ்’அ அஷ்ரூன் என்று சொல்லியிருக்கவேண்டும். ஆனால் சொல்லவில்லை. ஏன்?

ஏனெனில் பாரம்பரியமான அரபி மொழிவழக்கில் எது அனைவருக்கும் தெளிவாகத்தெரியுமோ அது சொல்லப்படாமலே உணர்ந்துகொள்ளப்படும்.

எனவேதான் பெருமானார் அஷ்ரூன் (பத்து) என்ற சொல்லைச்சேர்த்துச் சொல்லவில்லை. The time is 5 a.m என்று சொன்னால் அது காலை என்று புரியுமல்லவா? The time is 5 a.m morning என்று சொல்லத்தேவையில்லை அல்லவா? அதுபோலத்தான் இதுவும்.

இப்போது அன்னை ஆயிஷா அவர்களின் வயது தொடர்பான அந்த முக்கியமான நபிமொழியைப் பார்ப்போம்.

தனக்கு ஆறு வயதாக இருந்தபோது பெருமானாருக்கும் தனக்கும் நிச்சயமானது என்றும், ஒன்பது வயதாக இருந்தபோது வீடுகூடியதாகவும் கூறுகிறார்கள் (புகாரி, 3894, 3896).

இந்த நபிமொழியிலும், அரேபியர்களின் வழக்கப்படி பத்து (அஷரா) என்ற சொல் விடுபட்டுள்ளது. எனவே அதையும் சேர்த்துப் பார்த்தால், அன்னை ஆயிஷாவுக்கும் பெருமானாருக்கும் நிச்சயமானபோது அவர்களின் வயது 16, வீடுகூடியபோது வயது 19!

சூரா கமர் அருளப்பட்ட காலம்

சூரா கமர் அருளப்பட்டபோது நான் விளையாட்டுப்பிள்ளையாக இருந்தேன் என்று அன்னை ஆயிஷா கூறும் ஒரு ஒரு ஹதீது புகாரியில் பதியப்பட்டுள்ளது (4876).

சூரா கமர் அருளப்பட்ட காலம் தொடர்பான இரண்டு விதமாக வரலாற்று ஆசிரியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். நபித்துவம் பெற்ற நான்காவது ஆண்டு அது அருளப்பட்டது என்று பல திருமறை விரிவுரையாளர்கள் கூறுகின்றனர். ஆனால் ஹிஜ்ரத்துக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் அது அருளப்பட்டதாக மௌலானா மௌதூதி குறிப்பிடுகிறார்.

இந்த இரண்டு கருத்துக்களில் முதல் கருத்தை எடுத்துக்கொண்டோமெனில், கிபி 613ம் ஆண்டு (நபித்துவம் பெற்ற நான்காவது ஆண்டு) அது அருளப்பட்டிருக்கவேண்டும். பெருமானார் ஆயிஷா அவர்களை ஹிஜ்ரத்துக்கு ஓராண்டுக்கு முன் திருமணம் செய்தார்கள். அதாவது கிபி 621ல். அப்போது புகாரி ஹதீதின்படி ஆயிஷா அவர்களுக்கு ஆறு வயது என்பதை ஒப்புக்கொண்டால், சூரா கமர் அருளப்பட்ட காலத்தில் அன்னையார் பிறந்திருக்கவே முடியாது! இதில் எங்கே விளையாட்டுப்பிள்ளையாக இருப்பது!

மௌலானா மௌதூதியின் கருத்தின்படி ஹிஜ்ரத்துக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் சூரா அல்கமர் அருளப்பட்டது என்று கொண்டால், இக்கணக்கின்படி அப்போது அன்னையாரின் வயது ஒன்றாக இருந்திருக்கவேண்டும்! இக்கருத்தின்படியும் அன்னையார் சூரா கமர் அருளப்பட்டபோது விளையாட்டுப்பிள்ளையாக இருந்திருக்க முடியாது.

எனவே நபிமொழிகள் கூறும் ’ஆறு’ வயதை ஆறு வயதுதான் என்று எடுத்துக்கொள்ள முடியாது என்பது விளங்குகிறது.

அன்னை ஆயிஷா எப்போதுதான் பிறந்தார்கள்?

இப்னு இஸ்ஹாக் என்பவர்தான் பெருமானாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய முதல் வரலாற்றாசிரியர். ஹஸ்ரத் அபூபக்கரின் மகளார் அஸ்மா 17வதாகவும், ஆயிஷா அவர்கள் 18வதாகவும் இஸ்லாத்தில் இணைந்தார்கள் என்று குறிப்பிடுகிறார். இஸ்லாத்தில் இணைய வேண்டுமானால் ஒரு குழந்தைக்குக் குறைந்தது நாலு வயதாகவாவது இருந்திருக்கவேண்டும். அப்படிப்பார்த்தால் திருமணத்தின்போது ஆயிஷா அவர்களுக்கு வயது 16/17 இருந்திருக்கவேண்டும்.

க’அபா புனர்நிர்மாணம் செய்யப்பட்ட காலகட்டத்தில் ஆயிஷா அவர்கள் பிறந்ததாக பல வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அது நபித்துவம் கிடைப்பதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது.

நாற்பது வயதில் நபித்துவம் (கிபி 610), ஹிஜ்ரத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (கிபி 620) ஆயிஷா அவர்களோடு திருமணம். இப்படிப் பார்த்தாலும் ஆயிஷா அவர்களின் வயது அப்போது பதினாறு அல்லது பதினேழு.

அபூபக்கர் அவர்களும் அவர் மனைவி உம்மு ரூமான் அவர்களும் இஸ்லாத்தில் இணைந்தபோது அஸ்மாவும் ஆயிஷாவும் புரிந்துகொள்ளும் பக்குவம் கொண்ட நான்கு அல்லது ஐந்து வயதுக் குழந்தைகளாக இருந்தனர் என்று திமிஷ்கின் வரலாறு என்ற நூலை எழுதிய வரலாற்றாசிரியர் இப்னு அசாகிர் கூறுகிறார். அதையடுத்த பதினோறாவது ஆண்டில்தான் நிகாஹ் நடக்கிறது. எனவே அப்போது ஆயிஷா அவர்களின் வயது 16/17 ஆகத்தான் இருந்திருக்க வேண்டும்.

இமாம் இப்னு ச’அத் தனது அத்தபகாத் நூலிலும், இப்னு கதீர் தனது அல் பிதாயா வந்நிஹாயா நூலிலும், ஹாஃபிஸ் இப்னு ஹஜர் தன் தஹ்தீப் என்ற நூலிலும், அல் சீராவில் இப்னு ஹிஷாமும் அத்தஹபி தன் சியாருல் ஆலம் அந்நுபாலா என்ற நூலிலும் இரண்டு விஷயங்களைக் கூறுகின்றனர்:

 1. ஹிஜ்ரத்தின்போது அஸ்மா அவர்களுக்கு 27 வயது என்றும்
 2. ஆயிஷா அவர்களுக்கு 17 வயது என்றும் கூறுகின்றனர்.

ஆயிஷா அவர்கள் பிறந்தது கிபி 614ல் என என்சைக்ளோபீடியா ப்ரிட்டானிகா, விக்கிபீடியா போன்ற கலைக்களஞ்சியங்களும், Aisha The Beloved of Muhammad என்ற நூலை எழுதிய சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியை நாபியா உட்பட எல்லா வரலாற்று ஆசிரியர்களும் குறிப்பிடுகின்றனர்.

இந்த ஆண்டுக்கணக்கை வைத்துப்பார்த்தால்  சூரா கமர் அருளப்பட்ட காலத்தில் ஆயிஷா அவர்களுக்கு ஒருவயதுதான் ஆகியிருக்க முடியும்! ஒருவயதுப் பிள்ளையை விளையாட்டுப்பிள்ளை என்று அறிவுள்ள யாரும் சொல்லமாட்டார்கள்.

வீடுகூடுதல் நிகழ்ந்தது எப்போது?

ஆயிஷா அவர்களுக்கு ஒன்பது வயதிருக்கும்போது ஒரு ஊஞ்சலில் தன் தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருந்ததாகவும், அப்போது அன்னை உம்மு ரூமான் வந்து அழைத்துச் சென்று பெருமானாரோடு சேருவதற்காக தன்னைத் தயார்ப்படுத்த ஏற்பாடு செய்ததாகவும், சில அன்சாரிப்பெண்கள் அவ்வேலையைச் செய்ததாகவும் புகாரி நபிமொழி உள்ளது (புகாரி 3894).

சஹீஹ் முஸ்லிம் சொல்வது என்ன?

சஹீஹ் முஸ்லிமில் உள்ள ஒரு புகழ்பெற்ற நபிமொழியின்படி நபிகளாரின் வீட்டில் பொம்மைகளை வைத்து ஆயிஷா அவர்கள் விளையாடிக்கொண்டிருந்ததாகவும், அப்போது என் தோழிகள் வருவார்கள், ஆனால் பெருமானார் வந்ததும் வெட்கப்பட்டு விலகிச்செல்வார்கள் என்றும், இல்லை ஆயிஷாவோடு இருங்கள் என்று பெருமானார் அவர்களை மீண்டும் என்னிடத்தில் அனுப்பிவைப்பார்கள் என்றும் அன்னையார் சொன்ன நபிமொழி முஸ்லிமில் பதிவாகியுள்ளது (6287, 88).

ஆயிஷா அவர்களின் தோழிகள் குழந்தைகளாக இருந்திருந்தால் பெருமானார் வந்ததும், கணவன் மனைவிக்கு இடையில் நாம் இருக்கக்கூடாது என்ற நாகரீகம் தெரிந்திருக்காது. அவர்கள் அங்கேயே இருந்திருப்பார்கள். அதோடு, பெருமானாருக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் விருப்பம். ஆனால் பெருமானார் வந்ததும் தோழிகள் விலகிச் செல்வார்கள் என்றால் அவர்களும் ஆயிஷா அவர்களைப்போல பதின்ம வயதினராகத்தான் இருந்திருக்க வேண்டும்.  

’விளையாடிக்கொண்டு’ என்பதைக் குறிக்க ல’அப என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அச்சொல்லுக்கு பொழுதுபோக்கு, விளையாட்டு, வேடிக்கை, கேலி என்றெல்லாம் பொருள் விரிகின்றது. திருமறையிலும் இச்சொல் சில இடங்களில் வந்துள்ளது. உதாரணமாக, 5: 57, 58, 6: 32, 70, 09:65, 21:02,16, 55,29:64, 47:36 ஆகிய வசனங்களைக் குறிப்பிடலாம்.

எனவே ஆயிஷா அவர்கள் தன் தோழியரோடு இணைந்து அங்கிருந்த குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டிக்கொண்டு அல்லது பொழுதுபோக்கிக்கொண்டு இருந்தார்கள் என்றும், தன் தோழிகளோடு ஊஞ்சலில் ஆடி பொழுதை இன்பமாகக் கழித்துக்கொண்டிருந்தார்கள் என்றும் இதனை எடுத்துக்கொள்ளலாம். அவர்களே குழந்தையாக இருந்தார்கள்  என்று எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

பொம்மைகளை வைத்து விளையாடும் பழக்கம் பெரும்பாலும் பருவ வயதை அடையும் பெண்களுக்கும் இருக்கும். சின்னக் குழந்தைகள்தான் அப்படிச்செய்வார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் அப்போதுதான் தங்களைத் தாயாகவும், பொம்மைகளைக் குழந்தைகளாகவும் பாவிக்க முடியும்.

சிறகுகள் கொண்ட குதிரை

இத்தொடர்பில் இன்னொரு நிகழ்ச்சியைக் குறிப்பிட வேண்டியுள்ளது. ஆயிஷா அவர்கள் பொம்மைகளை வைத்துக்கொண்டிருந்தாலும் குழந்தை அல்ல என்பது இன்னொரு நபிமொழி மூலம் உணர்த்தப்படுகிறது.

ஒருநாள் ஆயிஷா அவர்கள் தன் கையில்  சிறகுகள் கொண்ட குதிரை பொம்மையொன்றை வைத்திருந்தார்கள். பெருமானார் தாபூக் அல்லது கைபரிலிருந்து அப்போது திரும்பியிருந்தார்கள்.  காற்றின் வேகத்தில் திரைச்சீலை ஒதுங்கியதும் ஆயிஷா அவர்கள் கையிலிருந்து குதிரை பொம்மை தெரிந்தது. இது என்ன என்று பெருமானார் கேட்கவும், குதிரை என்று ஆயிஷா பதில் சொன்னார்கள். குதிரைக்கு சிறகுகள் இருக்குமா என்று பெருமானார் கேட்கவும், ‘சுலைமான் நபியின் குதிரைகளுக்குச் சிறகுகள் இருந்தனவே, கேள்விப்பட்டதில்லையா?’ என்று ஆயிஷா அவர்கள் கேட்கவும் கடைவாய்ப்பற்கள் தெரியுமளவுக்குப் பெருமானார் சிரித்தார்கள் என்று அபூதாவூதில் வரும் நபிமொழி கூறுகிறது (4932).

அன்னை ஆயிஷா அறிவுக்கூர்மை கொண்டவர்கள், நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டவர்கள் என்று நபிமொழித்தொகுப்புகள் கூறுவதன் பின்னால் உள்ள ஞானத்துக்கு இந்நிகழ்ச்சி சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. இது ஒரு குழந்தை கூறும் பதிலல்ல என்பது சிந்திப்போருக்கு விளங்கியிருக்கும்.

ஆயிஷா அவர்களின் பொழுதுபோக்கு

இஸ்லாத்தின் ஆரம்ப காலகட்டத்தில் துணிகளின்மீது வரைபடங்கள், உருவச்சிலைகள் போன்றவை இருக்கக்கூடாது. அப்படி இருக்குமானால் அந்த வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்றெல்லாம் உளவியல் ரீதியில் அத்தகையை செயல்களை நபிமொழிகள் தடுத்தன. ஏனெனில் ஜாஹிலிய்யாக் காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் குலதெய்வங்களின் குட்டிச்சிலைகள், வரைபடங்கள்  போன்றவை இருந்தன.

எனவே அப்படியெல்லாம் வீட்டுக்குள் இருக்கக்கூடாது என்று பெருமானார் தடுத்திருந்தார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லா நிலைகளிலும் அதைத்தடுக்கவில்லை. தாவரங்கள், பறவைகள் போன்றவற்றின் உருவங்கள் இரண்டு பரிமாணம் மட்டும் கொண்ட துணிகள், தாள்கள், விரிப்புகள், திரைச்சீலைகள் போன்றவற்றின் மீது வரையப்பட்டிருந்தன. அப்படிப்பட்டவை பெருமானாருக்கு வெறுப்பை ஏற்படுத்தின, தன் கவனத்தைத் தொழுகையிலிருந்து திசைதிருப்புகின்றன என்று அவர்கள் சொல்லியிருந்தாலும் அவைகள் இருக்கவே கூடாது, ஹராம் என தடுக்கப்படவில்லை.

அன்னை ஆயிஷா அவர்களின் பிரதான பொழுதுபோக்குகளில் ஒன்று இவ்விதமான கலைப்படைப்புகளை துணிகளின் மீது நெய்வது. பதின்ம வயதில் இருந்தவர்களின் பிரதான பொழுதுபோக்குகளில் அதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி ஒரு திரைச்சீலையை அவர்கள் நெய்தபோது அதை நீக்கிவிடுங்கள், அது தொழுகையிலிருந்து என் கவனத்தைச் சிதைக்கிறது என்று பெருமானார் கூறினார்கள். உடனே அது நீக்கப்பட்டது. அதைக்கிழித்துப் போடுங்கள் என்றோ, அது கூடவே கூடாது என்றோ பெருமானார் சொல்லவில்லை. எனவே அதையே தலையணை உறையாக ஆயிஷா ஆக்கினார்கள் (சஹீஹ் புகாரி 2105, சஹீஹ் முஸ்லிம், 5529).

மிஃராஜ் மற்றும் ஹிஜ்ரத் பற்றிய தகவல்கள்

கிபி 610ல் நிகழ்ந்த மிஃராஜ் பற்றியும், 620ல் நிகழ்ந்த ஹிஜ்ரத் பற்றியும் அன்னை ஆயிஷா தரும் தகவல்கள் வெகு விபரமானவையும் நுட்பமானவையுமாகும். ஆறு அல்லது எட்டு வயதுக்குழந்தையால் அப்படியெல்லாம் சொல்ல முடியாது என்பது அறிவுள்ளோருக்கு நன்கு விளங்கும்.

பரந்துபட்ட அறிவு

அன்னையாருக்கு மொழியறிவு, பரம்பரை பற்றிய ஆழமான அறிவு, மருத்துவ அறிவு, கவிதை சொல்லும் ஆற்றல்,  திருமறைக்கான விளக்கங்கள் பற்றிய அறிவு எல்லாம் இருந்தன. திருமறைக்கான அறிவை அவர்கள் திருமறையை நமக்குக் கொடுத்த தன் கணவரிடமிருந்தே பெற்றுக்கொண்டிருப்பார்கள்.

ஆனால் மற்ற அறிவுகளைப் பெருமானாரிடமிருந்து பெற்றிருக்க முடியாது. ஏனெனில் அவற்றிலெல்லாம் பெருமானார் என்றுமே கவனம் செலுத்தியதில்லை. இஸ்லாத்தை எடுத்துரைத்து, திருமறையை விளக்கிச் சொல்லவே அவர்கள் வாழ்க்கை போதுமானதாக இருந்தது.

ஆனால் ஆயிஷா அவர்களுக்கு பரம்பரையியல் பற்றிய ஆழமான ஞானமிருந்தது. கவிதை இயற்றுவதிலும் அவர்கள் திறன் பெற்றிருந்தார்கள். இதெல்லாம் அவர்களுக்கு தந்தையார் அபூபக்கர் அவர்களிடமிருந்து வந்திருக்கவேண்டும்.  

உர்வா  இப்னு ஜுபைர் அவர்கள் கவிதைகளை மனனம் செய்து ஒப்பிப்பதில் வல்லவராக இருந்தார். அவர் அதற்காக புகழப்பட்டபோது, அத்தை ஆயிஷா அளவுக்குத் தன்னால் கவிதை சொல்ல முடியாது என்று கூறினார்! உர்வா ஆயிஷா அவர்களின் சகோதரி அஸ்மாவின் மகனாவார்.

ஆயிஷா அவர்களின் இறப்பு தேதி

ஆயிஷா அவர்கள் இறந்த ஆண்டும் அவர்களுக்குத் திருமணமானபோது அவர்களின் உண்மையான வயது என்ன என்று அறிந்துகொள்ள உதவுகிறது.

அன்னை ஆயிஷா அவர்கள் 67 வயது இருந்தபோது இறந்தார்கள் என்று பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அஸ்மா அவர்களின் பேரரான ஹிஷாம் இப்னு உர்வாஹ் ஆயிஷா அவர்கள் இறந்தது ஹிஜ்ரி 50ல் / கிபி 672ல் என்று கூறுகிறார்.

இமாம் இப்னு ஹம்பல் அவர்களும், பாரம்பரிய வழித்தொடர் ஆராய்ச்சி நிபுணருமாகிய கலீஃபா இப்னுல் ஹய்யத்துல் உஸ்ஃபுரியும் அதே ஆண்டையே குறிப்பிடுகின்றனர்.

இது மிகமுக்கியமான கவனிப்பாகும். கிபி 672ல் அன்னை ஆயிஷாவுக்கு 67 வயதாக இருந்திருந்தால் கிபி 622ல் பெருமானாரின் ஹிஜ்ரத்தின்போது அவர்களுக்கு வயது 17 ஆக இருந்திருக்கவேண்டும். வீடுகூடும்போது 18/19 இருந்திருக்கவேண்டும் என்பது உறுதியாகிறது.

அப்படியானால் நபிமொழிக்களஞ்சியங்களெல்லாம் ஏன் நிகாஹ் நடந்தது ஆறு வயதில் என்றும் வீடுகூடியது ஒன்பது வயதில் என்றும் கூறுகின்றன? ஒரு காரணம், ஹிஷாம் அவர்களிடமிருந்து வந்த செய்திகள் யாவும் ஈராக்கிலிருந்து வந்தவை, எனவே நம்பத்தகுந்தவை அல்ல என்பது பல அறிஞர்களின் கருத்து.

புகாரி, முஸ்லிம் நபிமொழித்தொகுப்புகளில் காணப்படும் ஆயிஷா அவர்களின் வயது தொடர்பான நபிமொழிகளின் அறிவிப்பாளர் சங்கிலித்தொடரும் பஸராவுக்கோ கூஃபாவுக்கோ சென்றுதான் முடிகின்றன. ஈராக்கிய அறிவிப்பாக இருப்பதால் அவற்றையும் நம்ப முடியாது என்று அறிஞர் பலர் கூறுகின்றனர்.

”ஹிஜாஸில் வேர்கொள்ளாத எந்த ஹதீதும் நம்பத்தகுந்ததல்ல” என்று இமாம் ஷாஃபி, இமாம் மாலிக் ஆகியோர் ஆணித்தரமாகக் கூறுகின்றனர்.

எனவே அன்னை  ஆயிஷா அவர்களின் திருமணம், வீடுகூடல் போன்ற எந்த நபிமொழியாக இருந்தாலும், அது அன்னையாரே சொல்லியதாக இருந்தாலும், அது ஈராக்கில் தோன்றியதாகவும், மதினா நகர அறிஞர் பெருமக்களுக்குத் தெரியாததாகவும் இருக்குமானால் அது ஆறு ஆதாரப்பூர் நபிமொழித்தொகுப்பாளர்களின் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருந்தாலும் அவற்றை நம்ப முடியாத சூழலே உள்ளது.

சையித் சுலைமான் நத்வி சொன்னது என்ன?

ஆயிஷா அவர்களுக்கு நிகாஹ் ஆனபோது ஆறு வயது, வீடுகூடியபோது ஒன்பது வயதுதான் என்று அடித்துக்கூறும் அறிஞர் சையித் சுலைமான் நத்வி அவர்கள் தனது நூலில் தான் சொல்லியதையே மறுக்கிறார்.

”அமீர் முஆவியா அவர்களின் கிலாஃபத்தின் இறுதிக்கட்டமும் ஆயிஷா அவர்கள் வாழ்வின் இறுதிக்கட்டமும் ஒன்றுதான். அந்த நேரத்தில் ஆயிஷா அவர்களுக்கு 67 வயது” என்கிறார்.

அதே புத்தகத்தின் இன்னொரு அத்தியாயத்தில், “ஒரு விதவையாக ஆயிஷா அவர்கள் 40 ஆண்டுகள் இருந்தார்” என்கிறார். 67 ஆண்டுகள் வாழ்ந்த ஒருவர் 40 ஆண்டுகள் விதவையாகக் கழித்தார் என்றால் பெருமானார் மறைந்தபோது அவருக்கு 27 வயதாக இருக்க வேண்டும். 17 அல்ல.

இன்னொரு கோணத்திலும் இதைப்பார்க்கலாம். நபித்துவம் 23 ஆண்டுகள் என்று சொன்னால், அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆயிஷா அவர்கள் பிறந்திருக்கவேண்டும். அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து அல்ல. ஹிஜ்ரத்தின்போது அவர்களுக்கு 17 வயது எனில் வீடுகூடியபோது வயது 19 ஆக இருந்திருக்கவேண்டும், ஒன்பதாக அல்ல.

மார்க்க ஞானம்

அன்னை ஆயிஷா அவர்களின் மார்க்க அறிவு பிரமிப்பூட்டக்கூடியதாக இருந்தது. ஒரு மேதையாகவே ஆயிஷா இருந்துள்ளார்கள் என்று சொல்வது மிகையாகாது. இஸ்லாத்தைப் பரப்புவதில் அவர்கள் பெரும்பாங்காற்றியிருக்கின்றார்கள். 2210 நபிகள் அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்ல. பெண் சட்ட வல்லுணர்களில் ஆகச்சிறந்தவராக இருந்துள்ளார்கள். கலீஃபா உமர், இப்னு உமர், கலீஃபா உஸ்மான், அபூ மூஸா அஷ்’அரி, அபூ ஹுரைரா, இப்னு அப்பாஸ், இப்னு ஜுஃபர் போன்றோர் மார்க்கக் கோட்பாடுகள் குறித்து அன்னையாரிடம் கேட்டுத் தெளிவு பெற்றுள்ளார்கள் என்பது வரலாறு. ஒளிப்படம் எடுத்ததைப்போன்ற அபார நினைவாற்றல் அவர்களுக்கு இருந்தது.

எனவே பெருமானார் இவ்வுலகைப் பிரிந்தபோது அன்னையாருக்கு வயது 29/30 இருந்திருக்கவேண்டுமென்றும், வீடுகூடியபோது 19 வயதாகத்தான் இருந்திருக்கவேண்டுமென்றும் அறிஞர்கள் கணிக்கிறார்கள்.

சில நேரங்களில் சில விஷயங்கள் பற்றிய கேள்விகள் எழுந்தபோது, இதுபற்றி ஆயிஷாவிடம் கேட்டுத் தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள் என்று பெருமானாரே பலரை அனுப்பியுள்ளார்கள். அன்னையாருக்கு ஒன்பது வயதுதான் ஆகியிருந்தது எனில் பெருமானார் இப்படிச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை.

ஹஸ்ரத் உசாமா இப்னு ஜைதின் நிகழ்ச்சி

ஹஸ்ரத் ஜைத் அவர்களின் மகனான ஹஸ்ரத் உசாமா அவர்கள் சின்னப்பையனாக இருந்தபோது ஒருமுறை கீழே விழுந்து மூக்கில் அடிபட்டு ரத்தம் வந்தது. அப்போது பெருமானார், அவரது மூக்கைச் சுத்தம் செய்யும்படி அன்னை ஆயிஷாவிடம் சொன்னார்கள் என்று முஸ்னத் அஹ்மது நபிமொழித்தொகுப்பு நூல் கூறுகிறது.

ஹஸ்ரத் உசாமா அவர்கள் பெருமானார் நபித்துவத்தும் பெற்ற மூன்றாம் ஆண்டு, கிபி 612ல், பிறந்தார்கள். தனக்கு ஆறு வயதாக இருந்தபோது திருமணமானதாக அன்னையார் சொல்லும் நபிமொழிகளை சரியென்று எடுத்துக்கொண்டால் ஹஸ்ரத் உசாமாவுக்கும் ஹஸ்ரத் ஆயிஷாவுக்கு ஒரே வயதாக இருக்கும்.

கீழே விழுந்து மூக்கில் அடிபட்டு ரத்தம் வரும் ஒரு குழந்தையைக் கழுவித்துடைத்து உதவி செய்யும்படி அதே வயதுடைய இன்னொரு குழந்தையிடம் பெருமானார் சொல்லியிருக்க முடியாது அல்லவா?!

ஆனால் உண்மையில் ஆயிஷா அவர்கள் உசாமாஅவர்களைவிட பத்து  வயது மூத்தவராக இருந்தார்கள். பெருமானாரின் மறைவுக்குப் பிறகு ஹஸ்ரத் அபூபக்கரின் கிலாஃபத் காலத்தில் பெருமானார் உத்தரவுப்படி உசாமா அவர்களின் தலைமையில் கிழக்கு ரோமானியர்களை எதிர்த்துப் போரிடச் சென்றபோது வயது 20. அப்போது ஆயிஷா அவர்களுக்கு வயது 29 ஆக இருந்தது.

தனது 66ம் வயதில் ரமலான் பிறை 17ல் அன்னை ஆயிஷா இறைவனடி சேர்ந்தார்கள்.

இக்கட்டுரை எழுத உதவிய நூல்கள் மற்றும் வலைத்தளங்கள்:

 1. சஹீஹ் அல் புகாரி. பாகங்கள் -1 – 6. மொழிபெயர்ப்பு. டாக்டர் முஹம்மது முஹ்சின் கான். தாருஸ்ஸலாம். ரியாத். சௌதி அரேபியா
 2. சஹீஹ் முஸ்லிம். பாகங்கள் 1 – 6. மொழிபெயர்ப்பு. நஸீருத்தீன் அல் கத்தாப். கனடா, அமெரிக்கா.
 3. சுனன் அபூதாவூத். பாகங்கள் 1-5. மொழிபெயர்ப்பு யாசர் காதி, அமெரிக்கா.
 4. விசுவாசிகளின் அன்னை ஆயிஷா. சுருக்கமான சரிதை. www.understandqurantamil.org
 5. ஹஸ்ரத் ஆயிஷா நாயகி ஜீவிய சரித்திரம். ஹாஜி எம் ஷாஹுல் ஹமீத் லெப்பை. ஷாஹுல் ஹமீது அன் சன்ஸ், சென்னை. 2ம் பதிப்பு, சென்னை.
 6. Hazrat Ayisha Siddiqa: A Study of Her Age at the Time of Her Marriage, Islamic Vision Shamsha M Khan (IPCI)
 7. Aisha, Mother of the Faithful. Fatih Harpci, USA.
 8. The Life of Muhammad. A Guillaume. OUP, Delhi.
 9.  Proof That Aisha Was 15 Years Old When She Married the Prophet. Article. www.hameem.org
 10. The Wives of Prophet Muhammad. Muhammad Fati Musa. Islamic Inc. Egypt.
 11. Great Women of Islam. Mahmood Ahmad Ghadafar. Darussalam, KSA.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: