நபிமொழிகளின் உளவியல் – முஸ்லிமும் முஹாஜிரும்

தன் கையாலும், நாவாலும் ஒரு முஸ்லிமைக் காயப்படுத்தாதவரே முஸ்லிமாவார், அல்லாஹ் எதையெல்லாம் தடுத்திருக்கிறானோ அதையெல்லாம் வேண்டாம் என்று ஒதுக்கிவிடுபவர் முஹாஜிர் ஆவார் என்று பெருமானார் சொன்னதாக நபித்தோழர்கள் அப்துல்லாஹ் இப்னு அம்ர் மற்றும் அபூ மூஸா ஆகியோர் அறிவிக்கும் நபிமொழிகள் கூறுகின்றன (சஹீஹ் புகாரி, 10, 11)

கையால் காயப்படுத்துவது என்றால் அது உடல் ரீதியான வன்முறையின் குறிப்பு. நாவாலும் காயப்படுத்தாதவர் என்றால், கோபம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகள் மேலோங்கும்போது அந்த உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்பவரே முஸ்லிம் என்ற தகுதி பெறுவார் என்பது நபிமொழியின் குறிப்பு.

அபூ மூஸா அவர்கள் சொன்ன நபிமொழியில் யார் சிறந்த முஸ்லிம் என்ற கேள்விக்கான பதிலாக இது சொல்லப்படுகிறது. ஒரு முஸ்லிமுக்கான வரையறைபோல இந்த நபிமொழி உள்ளது.

அல்லாஹ் ஒருவனே இறைவன், முஹம்மது அவனது இறுதித்தூதர் என்பதை வாயாலும் மனதாலும் ஏற்றுக்கொண்டவரே முஸ்லிம் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படியானால் இந்த நபிமொழிகளுக்கு என்ன அர்த்தம்?

ஒருவரை நம் வாயாலோ கையாலோ ஏன் காயப்படுத்துகிறோம்? காயப்படுத்தும் காரியத்துக்கு முன் நடக்கும் காரியம் எது? காயப்படுத்த வேண்டும் என்ற நினைப்பும் விருப்பமும்தானே? எல்லா நடவடிக்கைகளும் தொடங்குவது உள்ளத்தில்தானே?

எனவே உங்கள் உள்ளத்தில் ஒருவரைக் காயப்படுத்த நீங்கள் நினைத்துவிட்டாலே இஸ்லாத்தை விட்டு விலகிவிட்டதற்கு ஒப்பாகும் என்பது இந்த நபிமொழியின் குறிப்பாகும்.

அப்படியானால் இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போர்களையெல்லாம் எப்படி நியாயப்படுத்த முடியும் என்ற கேள்வி வரலாற்றுப் பிழைகொண்டது. உங்களை ஒருவர் உடலால் காயப்படுத்த நினைத்து அருகில் வரும்போது சும்மா இருக்கவேண்டும், அடியை வாங்கிக்கொள்ள வேண்டும் என்று இந்த நபிமொழி சொல்லவில்லை. எந்த நபிமொழியும் சொல்லவில்லை.

மாறாக, அமைதிக்காலங்களிலும் நம்முடைய மனம் அமைதியாக இருப்பதில்லை. யாரையாவது, எங்காவது, எப்படியாவது காயப்படுத்திவிடவேண்டும் என்று துடித்துக்கொண்டுதான் உள்ளது. அந்த எண்ணத்தின் பின்னால் ஏதாகிலும் நியாயம்கூட இருக்கலாம்.

உதாரணமாக ஒருவரைப்பற்றி, ’அவன் ஒரு கஞ்சப்பய. எச்சிக்கையால காக்கா ஓட்டமாட்டான்’ என்று அவருடைய மகள், மகன் போன்ற உறவினர்கள் முன்னிலையில் யாராவது சொன்னால் அவர்கள் மனம் காயப்படுமில்லையா?

‘நீ ஒரு மக்கு, உனக்கு ஒன்னுமே வராது’ என்ற ரீதியில் சில குழந்தைகளை நாம் திட்டுகிறோம். அந்த திட்டலின் பின்னால் உண்மைகூட இருக்கலாம். ஆனால் அது நிரந்தர உண்மையல்ல. அது அப்போதைய நிஜம். அவ்வளவுதான். அது நாளையே மாறலாம்.

மக்காவிலிருந்து மதினாவுக்கு புலம் பெயர்ந்தவர்களை வரலாறு ’முஹாஜிர்’, அதாவது ’ஹிஜ்ரத்’ செய்தவர்கள் என்று குறிப்பிடுகிறது. ஆனால் இந்த நபிமொழி மூலமாக அந்த சொல்லுக்குப் புதியதொரு விளக்கம் கிடைக்கிறது. அல்லாஹ் எதையெல்லாம் தடுத்துள்ளானோ அதையெல்லாம் விட்டுவிட்டவரே ’முஹாஜிர்’ என்று சொல்லப்பட்டுள்ளது.

உதாரணமாக மது, மாது, கொலை, கொள்ளை, துரோகம், வன்முறை போன்ற தடுக்கப்பட்ட ஹராமான காரியங்களைச் செய்தல், இன்னபிறவற்றிலிருந்து யார் ஒருவர் முற்றிலுமாக ஒதுங்கிக் கொள்கிறாரோ அவர் ’முஹாஜிர்’ என்று இந்த நபிமொழி கூறுகிறது.

அப்படியானால் புலம்பெயர்தல் என்பது புலம்பெயர்தல் மட்டுமல்ல, அது மனம் பெயர்தலுமாகும் என்ற நுட்பமான விஷயத்தை இந்த நபிமொழியின் மூலம் விளங்கிக்கொள்ளலாம். விலக்கப்பட்டதன் மீது ஆசை வரும்போதெல்லாம் அதை விழிப்புணர்வோடு ஒருவர் தடுத்துக்கொண்டார் என்றால் அவருக்கு ’முஹாஜிர்’ என்ற அந்தஸ்தை இந்த நபிமொழி வழங்குகிறது.  

வரலாற்றின் காலப்புள்ளியை வைத்து, இஸ்லாத்தை வெறுத்த மனநிலையை ’மக்கா’ என்றும், இஸ்லாத்தை மனமாற ஏற்றுக்கொண்ட மனநிலையை ’மதினா’ என்றும் இந்த நபிமொழியை வைத்துப் புரிந்துகொண்டோமெனில் புலம்பெயர்தல் மட்டுமின்றி, நல்லதை மட்டுமே நோக்கிய திண்ணிய மனமாற்றமும் ஒருவரை முஹாஜிர் ஆக்கவல்லது என்பது இந்த நபிமொழியின் குறிப்பு.

பெருமானாரின் நபிமொழிகளில் பெரும்பாலானவை மானிட உளவியலை செப்பனிடுவதை நோக்கமாகக் கொண்டிருப்பதை இதன் மூலம் அறியலாம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

Posted in Articles /கட்டுரை | Leave a comment