சொல்லாத சொல்

எனது மூன்றாவது கவிதைத் தொகுதி வெளிவந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களாகிவிட்டன. இப்போதுதான் அதைப் பற்றி எழுத முடிகிறது.

என் நண்பரும் நேர்நிரை பதிப்பகத்தின் வெளியீட்டாளருமான கவிஞர் யுகபாரதி வெளியிட்டிருக்கிறார். ஏற்கனவே எனது இரண்டு கட்டுரைத் தொகுதிகளையும் நேர்நிரை-தான் வெளியிட்டது இப்போது என் மூன்றாவது கவிதைத் தொகுதி. அதிலிருந்து ஒரு கவிதையை மட்டும் கீழே கொடுத்துள்ளேன். நூல் வெளிவருமுன்பே  அது பற்றி நண்பர் அப்துல் கய்யூம் எழுதியிருந்தார். அவருக்கும் அழகாக வெளியிட்ட யுகபாரதிக்கும் நன்றிகள்.

சொல்லாத சொல். கவிதை. முதல் பதிப்பு டிசம்பர் 2009. நேர் நிரை வெளியீடு சென்னை. D1/15, TNHB, Sivan Koil St, kodambakkam, Chennai – 24 என்ற முகவரியிலும், சென்னையின் பிரதான புத்தகக் கடைகளிலும் இந்நூல் கிடைக்கும்.  nehrnirai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது yugabhaarathi@yahoo.co.in என்ற மின்னஞ்சல முகவரிகளுக்கோகூட மெயிலிட்டுக் கேட்கலாம். பக்கம் 104. விலை ரூ 65/-

நன்றி நவிலல்

நேசிக்காதவர்களுக்கு நான்
நன்றி சொல்ல வேண்டும்

அவர்களுக்காக நான்
காத்திருக்கவோ
பூத்திருக்கவோ தேவையில்லை

அவர்களின் தராமையும் வராமையும்
என்னை வாட்டுவதில்லை

அவர்களின் பொறாமையும்
என்மீதானதல்ல

அவர்களின் அசைவுகள்
என் தூக்கத்தைக் கெடுப்பதில்லை

அவர்களின் வசவுகள்
என்னைக் கசக்குவதில்லை

அவர்களிடம் நான்
கடன்படவில்லை

அவர்களோடு நான்
உடன்படவில்லை

அவர்கள் புன்னகைத்தால்
இரும்பால் செய்த
என் இதழ்கள் விரியாது

அவர்களின் கண்ணீர்
வெறும் உப்புக்கரிக்கும்
ஹைட்ரஜன் ஆக்ஸிஜனின் கலவை

அவர்கள் தும்மினால்
எனக்கு காய்ச்சல் வராது

அவர்கள் இருமினால்
என் நெஞ்சு வலிக்காது

அவர்கள் எழுதும் கடிதம்
எனக்கு வராது

ஹலோ நான்தான் சொன்ன பிறகும்
அவர்கள் ரிசீவரை வைத்து விட்டால்
எனக்கு மூளைக்காய்ச்சல் வராது

அழகான நீளமான
காலணிகளைப் பார்க்கும்போது
எனக்கு அவர்கள் நினைவு வராது

அவர்களின் மொழியும் மௌனமும்
எனக்கு ஒன்றுதான்
இரண்டுக்குமே அர்த்தம் கிடையாது

எனக்கு எதையுமே கொடுக்காத
என் எதையுமே கெடுக்காத

நேசிக்காத அவர்களுக்கு நான்
நன்றி சொல்ல வேண்டும்.

6 Replies to “சொல்லாத சொல்”

  1. நான் நன்றி சொல்ல வேண்டும்.

    உங்கள் நல்ல கவிதையை பணம் கொடுக்காமல் இங்கு படிக்க

    1. அன்பு நீடுரலி, கருத்தை அழகாகச் சொன்னதற்கு நன்றி.

  2. குண்டூசி முனை தரும் மெல்லிய அழுத்தமான வலியை சொல்கிறீர்கள். பாவம் விட்டுவிடுங்கள் அவர்களை. அவர்களும் நல்லவர்களே. ஒருவேளை சோம்பேறிகளாக இருப்பார்கள் – என்னைப்போலவே.

    1988 ல் உங்களை கேள்விப்பட்டு பல தடவை உங்களைப்பற்றி பேசியும், தொடர்பு கொள்ள நினைத்தும், 2010 ல் தான் முதல் தொடர்பு கொள்கிறேன்-
    மஜீத் – துபாய்

    1. அன்புள்ள சகோதரர் மஜீத், உங்களோடு தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி. அவர்களைத்தான் விட்டுவிட்டேனே, அதுவும் நன்றி சொல்லி!

Leave a comment

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.