யயாதி வியாதி -– 05

KK Cover Aug 16-31தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவிகளாமே, உண்மையா என்ற கேள்விக்கு பதிலாக ஓஷோ ஒரு அருமையான எதிர்கேள்வி கேட்கிறார்: “அதிருக்கட்டும், அதில் ஒன்று குறைந்தாலும் உன்னால் சந்தோஷமாக இருக்க முடியுமா?”

ஆஹா, நெத்தியடி என்பது இதுதான். ஆசை யாரைதான் விட்டது! அவருக்கு அத்தனை மனைவிகளாமே என்ற கேள்வியின் பின்னால், நமக்கு அந்த வாய்ப்பு இல்லையே என்ற ஏக்கம் தொனிப்பதை, அந்த உளவியல்ரீதியான உண்மையைத்தான் ஓஷோ தன் பதிலின் மூலம் வெளிப்படுத்துகிறார்! சரி இதை ஏன் இங்கே சொல்கிறேன்? காரணம் இருக்கிறது. மறுபடியும் மஹாபாரதத்துக்குள் போகலாம் வாருங்கள்.

வாத்தியார் சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானிக்கும் அசுர ராஜன் மகள் சர்மிஷ்டைக்கும் ஒரு சண்டை வந்தது. விஷயம் பெரிதாக ஒன்றுமில்லை. அவர்கள் தோழிகளாகத்தான் இருந்தார்கள். ஆனால் ஒருநாள் குளிக்கப்போனபோது அடித்த காற்றில் அவர்களது உடைகள் கலந்துவிட்டன. தேவயானியின் உடையை மாற்றி சர்மிஷ்டை அணிந்துகொண்டாள். கிண்டலாக அதற்கு தேவயானி ஏதோ சொல்ல சர்மிஷ்டை கோபமடைந்து, ”என் அப்பனிடம் பிச்சை பெறுபவனின் மகள்தானே நீ” என்ற ரீதியில் பேசி, கன்னத்தில் அறைந்து, அவமானப்படுத்தி, தண்ணீரில்லாத ஒரு கிணற்றுக்குள் அவளைத் தள்ளிவிட்டு, தேவயானி செத்திருப்பாள் என்ற யூகத்தில் நிம்மதியாகத் திரும்புகிறாள் சர்மிஷ்டை.  சர்மிஷ்டை என்று பெயர் வைத்ததற்குப் பதிலாக சர்வ சேஷ்டை என்று வைத்திருக்கலாம்.

KK -- 05கிணற்றுக்குள் இருந்த தேவயானியைக் காப்பாற்றுகிறான் யயாதி என்ற ராஜா. அவன் பாண்டவர்களின் முன்னோர்களில் ஒருவன். தன் வலது கையை அவன் பிடித்துவிட்டதனால் தன்னை மனைவியாக ஏற்றுக்கொள்ளும்படி தேவயானி அவனை வேண்டுகிறாள். பெண்களின் வலது கையில் விஷயம் இருக்கிறது, ஜாக்கிரதை! ஆனால் யயாதி கொடுத்து வைத்தவன். கைமேல் பலன் என்பது அதுதானோ! ஆனால் முதலில் அவன் மறுத்துவிடுகிறான். (ஏன் என்று கேட்கவேண்டாம். அது அனுலோமம், பிரதிலோமம் என்ற சொல்லப்படும் ஜாதிப்பிரச்சனை. அது இப்போது நமக்கு வேண்டாம்). கொஞ்ச காலத்துக்குப் பிறகு ஒரு ’ஸ்பெஷல் கேஸ்’ ஆக அவர்களது திருமணம் அனுமதிக்கப்படுகிறது! நான் சொல்லவரும் முக்கியமான விஷயம் திருமணத்துக்குப் பிறகு நடப்பவைதான்!

தன்னை அவமதித்த சர்மிஷ்டை வாழும் ஊருக்குள் நான் இனி வரமாட்டேன் என்று பிடிவாதமாக தேவயானி இருந்தாள். அதனால் மனம் நொந்துபோன சுக்ராச்சாரியார் அசுர அரசன் விருஷபர்வனிடம் சென்று நான் போகிறேன் என்று சொல்லவும், ’நான் போய் உங்கள் மகளிடம் மன்னிப்புக் கேட்டு அவளை ஊருக்குள்வர சம்மதிக்க வைக்கிறேன்’ என்று சொல்லித் தன் பரிவாரங்களுடன் சென்று தேவயானியின் காலில் விழுகிறான் விருஷபர்வன்!  ஆனால் அவள் அப்போதும் மசியவில்லை. அவன் விருஷ பருவனாக இருக்கலாம். ஆனால் தேவயானியின் பருவம் அதற்கு சம்மதிக்கவில்லை.

KK -- 5.1”பிச்சைக்காரனின் மகள் என்று என்னைச் சொன்ன உன் மகள் என் மாமியார் வீட்டில் எனக்கு வேலைக்காரியாக வரவேண்டும்” என்று நிபந்தனை விதிக்கிறாள்! சபாஷ், சரியான பழிவாங்கல்! ஒரு காலத்தில் அவள் தோழியாக இருந்த சர்மிஷ்டையும் அதற்கு ஒத்துக்கொள்கிறாள். ஓர் அசுர மகள் அப்படி ஒத்துக்கொண்டது ஆச்சரியமே. அசுர தியாகம்.

யயாதியைத் திருமணம் செய்துகொண்டு தேவயானி அவன் நாட்டுக்குச் சென்றாள். பணிப்பெண் சர்மிஷ்டையோடு! சிலபல ஆண்டுகள் தம்பதியர் சந்தோஷமாகக் கழித்தனர். ஆனால் இங்கே தான் ஒரு திருப்பம் நிகழ்கிறது. ஒருநாள் சர்மிஷ்டை யயாதியைத் தனியே சந்தித்து என்னையும் திருமணம் செய்துகொள் என்று வேண்டுகிறாள். அடித்தது யோகம் என்று யாயாதியும் உடன்பட்டு  அவளைத் திருட்டுத்தனமாகத் திருமணம் செய்து ’வைத்து’க்கொள்கிறாள். அசுர சுகம்!

விஷயம் தெரிந்தவுடன் கோபம் கொண்ட சுக்ராச்சாரியார் சாபம் கொடுக்கிறார். மிகக்கடுமையான சாபம். ”இளமையின் வேகத்தில் என் மகளுக்கு துரோகம் செய்தாயல்லவா, உன் இளமை நீங்கி, நீ இப்போதே முதுமையடைவாய்” என்பதுதான் சாபம். அதைவிட மோசமான சாபம் ஒரு ஆண்மகனுக்குக் கிடைக்க முடியுமா?

இளமையிலேயே முதுமையடந்தான் யயாதி. பசியும் உண்டு, பழங்களும் உண்டு, ஆனால் சாப்பிட முடியாது! அதைவிட வேதனை ஒரு ஆண்மகனுக்கு உண்டா? சாபங்களிலெல்லாம் மோசமானது மாமனார் சாபம்தான் போலிருக்கிறது! ஜாக்கிரதை! யயாதி மிகவும் கெஞ்சிக் கேட்டபிறகு, ’உன் சாபத்தை விரும்பி ஏற்றுக்கொள்பவருக்கு நீ மாற்றிக்கொடுக்கலாம்’ என்று ஒரு ’ஸ்பெஷல் க்ளாஸை’ அதில் சேர்த்துக் கொடுத்தார் சுக்ராச்சாரியார்!

வியாதிகள் வந்தாலும் பரவாயில்லை என்று நாயாய் அலையும் எத்தனையோ பேரை நாம் இன்று பார்த்துக்கொண்டிருக்கிறோம்! இப்படி ஒரு சாபத்தை யாராவது விரும்பி ஏற்றுக் கொள்வார்களா?

யாயாதி தன் ஐந்து அழகான இளம் மகன்களையும் அழைத்து தன் நிலையைச் சொல்லிப் புலம்பினான். ”யாராவது என் முதுமையை வாங்கிக்கொண்டு உங்கள் இளமையைக் கொடுங்கள். என் ராஜ்ஜியத்தை நான் கொடுக்கிறேன்” என்று கெஞ்சினான். ”இளமையை இழந்துவிட்டு, முதுமையை வாங்கிக்கொண்டு ராஜவாக இருந்து என்ன பயன்?” என்று சொல்லி நான்கு மகன்களும் மறுத்துவிடுகின்றனர். நியாயம்தானே? அப்படி ஒரு வாழ்க்கைக்கு யார்தான் ஒத்துக்கொள்வார்? ஆனால் புரு என்ற கடைசி மகன் ஏற்றுக்கொள்கிறான்! கருவிலேயே தியாக உணர்வுடன் வந்தவனாக இருக்க வேண்டும் புரு! மகிழ்ந்துபோன யயாதி அவனை அணைத்துக்கொள்கிறான். இளமையும் முதுமையும் உடல் மாற்றிக்கொள்கின்றன!

இளமையை மீண்டும் பெற்ற யயாதி இரண்டு மனைவிகளுடனும், இந்திரலோகத்து அப்சரஸ் ஒருத்தியுடனும் பல ஆண்டுகள் சுகம் அனுபவிக்கிறான். ஆனாலும் அவனுக்குத் திருப்தி ஏற்படவே இல்லை! அவன் ஆசை நாளுக்கு நாள் அதிகரித்ததே தவிர குறையவில்லை. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு என்று மனம் தாவிக்கொண்டே இருந்தது. ஆசையை விட்டொழி என்று புத்தர் சொன்னதன் அர்த்தம் புரிய யயாதியின் வாழ்க்கையைத்தான் பார்க்கவேண்டியுள்ளது. திரும்பி வந்து யயாதி தன் மகன் புருவிடம் சொல்லும் செய்தி மிகமிக முக்கியமானது.

“என் அன்பு மகனே! காமத்தீயானது விரும்பியதை அனுபவித்துவிடுவதால் மட்டும் அடங்கிவிடுவதில்லை. நெருப்பில் நெய்யை மேலும் மேலும் ஊற்றுவதால் நெய் அணையாது. இன்னும் தீவிரமாகத்தான் கொழுந்துவிட்டு எரியும்.  பொன், பொருள், மண், பெண் எதனாலும் ஆசைகள் அடங்கிவிடுவதில்லை. அத்தனைக்கும் ஆசைப்படாதே மகனே, அது முட்டாள்தனமானது. விருப்பும் வெறுப்பும் இல்லாத அமைதி நிலையை அடைவதே ஆசையை வெற்றிகொள்ளும்வழி. போதும் உன் இளமையை நீ திரும்பப் பெற்றுக்கொள்” என்று கூறி மகனை அணைத்து தன் முதுமையை மீண்டும் பெற்றுக்கொள்கிறான்.

முதுமையிலும் இளமைசுகம் பெறத்துடிக்கும் யயாதிகள் நம்மில் அனேகம் பேர் உள்ளனர். சட்டங்களைக் கடுமையாக்குவது மட்டும் இந்த வியாதியைப் போக்கிவிடாது. பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் நம் நாட்டில் யயாதியின் கதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியதல்லவா?!

நன்றி புதிய தரிசனம் ஆகஸ்ட் 2014, 16-31

Fan Lr on KKஇந்த மாதம் ஒரு வாசகர் என் மஹாபாரத கட்டுரைகள் பற்றி கருத்து தெரிவித்திருந்தார். இதோ அது:

சிறப்பாய்ச் சொல்லவேண்டுமானால் சாமான்ய மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதமாய் சமீபமாய் வெளிவரும் ’கதைகதையாம் காரணமாம்’ எனும் தலைப்பில் எழுதப்படும் மஹாபாரதத்தை நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிட்டு மிக எளிய முறையில் இதுவரை மனதில் பதியப்படாத, புரிந்துகொள்ள முடியாத, சூட்சும முடிச்சுகளை அவிழ்த்து விளக்கி வருவது, அவரது எழுத்துக்கே உரிய வித்தை என்று சொல்லலாம். இத்தகைய எளிமையான உயரிய எழுத்தாளர்கள் இன்றைய தலைமுறைக்கான வரம் என்று சொன்னால் அது மிகையில்லை.

  • இசபெல் ராஜேஸ், வடக்குளம் (புதிய தரிசனம் ஆகஸ்ட் 2014, 16-31)

 

=========

Leave a comment

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.