மந்திரச் சாவி – 13

மந்திரச் சாவி – 13

நாகூர் ரூமி

நீங்கள் சிறகுகளோடு பிறந்திருக்கிறீர்கள். ஆனால் அது தெரியாமல் தவழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்! நீங்கள் பறக்கப் பிறந்தவர்கள். உங்கள் சிறகுகளை உணருங்கள், பறந்து செல்லுங்கள் – என்கிறார் சூஃபி கவிஞர் ஜலாலுத்தீன் ரூமி.

எவ்வளவு உண்மையான வார்த்தைகள்! உண்மைக்குத்தான் எவ்வளவு அழகு! ஆமாம், வெற்றி வானில் பறக்கவேண்டுமென்றால் மன ஒருமை தேவை. அது இல்லாவிட்டால் அதை வளர்த்துக்கொள்ளவேண்டும். வாலுண்டரி கான்சன்ட்ரேஷனோடு வாழ நாம் பழகிக்கொள்ளவேண்டும். அதற்கு நாம் பயிற்சி எடுத்துக்கொள்ளவேண்டும். ஆம்.

தொடர்ந்த பயிற்சியானது ஒரு பழக்கத்தை ஏற்படுத்திவிடும். நல்லதானாலும் சரி, கெட்டதானாலும் சரி. தினமும் ஒரு க்வாட்டர் அடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்குமானால் நீங்கள் எவ்வளவு படித்தவராக இருந்தாலும், குடி குடியைக் கெடுக்கும் என்ற வாசகத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டே உங்களால் குடிக்க முடியும்! அதேபோல, ஒரு நல்ல காரியத்தை தினமும் செய்துவந்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஒரு விஷயம் பழக்கமாகிவிட்டால் அதனால் வரும் நன்மைகளும் அல்லது தீமைகளும் தாமாகவே வர ஆரம்பிக்கும்.

வாலுண்டரி கான்சன்ட்ரேஷனை பயிற்சியின் மூலம் பழக்கமாக்கிக்கொண்டால், தொடர்ந்து வெற்றி வரஆரம்பிக்கும். பில்கேட்ஸ், அம்பானி போன்றவர்கள் குறிப்பிட்ட காலகட்டம்வரைதான் தொழிலில் முன்னேற முயற்சி செய்தார்கள். இன்று அவர்கள் எந்த முயற்சியும் செய்யத்தேவையில்லை. சம்பாதித்து சம்பாதித்து, சம்பாதிப்பதே பழக்கமாகி, சம்பாதிக்காமல் இருக்கமுடியாது என்ற நிலை வந்துவிட்டது. என்ன செய்தால் வருமானம் வரும் என்ற பாதையை அவர்கள் கஷ்டப்பட்டு போட்டுவிட்டார்கள். அந்தப்பாதையில் செல்வதற்காக பிரத்தியேகமான வாகனத்தையும் வடிவமைத்துவிட்டார்கள். இனி அந்த வாகனம் அவர்களை அந்தப் பாதையில் எளிதாக ஏற்றிச் சென்றுகொண்டே இருக்கும். அதன் எரிபொருளோ தீரவே தீராது! ஆமாம். அதனால்தான் பில்கேட்ஸ் தன் ஜேபியிலிருந்து விழுந்த ஐநூறு டாலர் நோட்டை எடுக்கக் குனியவே இல்லை. காரணம், அவருடைய வருமானம் ஒரு வினாடிக்கு முந்நூறு டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது! குனிந்து அந்தப் பணத்தை எடுக்க சில வினாடிகள் செலவாகும் என்பதால் அந்த சில வினாடிகளை அவர் வீணாக்க விரும்பவில்லை!

விடாமுயற்சியாலும், தினமும் தவறாமல் மனதை ஒரு புள்ளியில் மையப்படுத்திச் செய்த பயிற்சியினாலும் மட்டுமே ஒருவருக்கு வெற்றிகிட்டுகிறது. அதனால்தான் அர்ஜுனனாலும், ஏகலைவனாலும் மிகச்சரியாக பறவையின் விழியையும், நாயின் வாயையும் தாக்க முடிந்தது.

வெற்றிபெற்ற அனைவரிடமும் இரண்டு உள்ளது. ஒன்று முயற்சி, இரண்டாவது பயிற்சி. அதற்கான தூண்டுகோலாக இருக்கும் விதத்தில் வாலுண்டரி கான்சன்ட்ரேஷன் தொடர்பாக சில பயிற்சிகள் இதோ. ஆனால் இவைகள் மட்டும்தான் பயிற்சிகள் என்பதல்ல. அனேக பயிற்சிகள் உள்ளன. நிலவு இருக்கும் திசையை மட்டுமே நான் சுட்டுகிறேன். ஆயிரம் மைல்களுக்கான பயணம் முதல் அடியில் தொடங்குகிறது என்றார் லாசூ.

பயிற்சியைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிபந்தனை உண்டு. அதிகம் உணர்ச்சி வசப்படாதவராக நீங்கள் இருக்கவேண்டும். இல்லையெனில் பயிற்சி செய்யமுடியாமல் போய்விடும். பத்துபேரை எடுத்துக்கொண்டால் பத்துபேருக்குமே இந்தப்பிரச்சனை இருக்கும். மனிதர்கள் பெரும்பாலான நேரம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களே. எவ்வளவு படித்தவராக இருந்தாலும் சரி. ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.

நீங்கள் நாடறிந்த அறிஞர், ஆன்மிகவாதி என்று வைத்துக்கொள்வோம். சிங்காரச் சென்னையில் ஒரு ஆட்டோவில் போகிறீர்கள். ஆட்டோ ஓட்டுநர் ஒரு வினாடிக்கு மூன்று முறை வலது பக்கமாகக் குனிந்து, ஒவ்வொரு முறையும் ஒருகிலோ அளவுள்ள சமாச்சாரங்களை தன் வாயிலிருந்து துப்பிக்கொண்டே இருக்கிறார் (ஆமாமா என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது). நீங்கள் எவ்வளவோ சொல்லியும் அவர் துப்புவதை நிறுத்தவேயில்லை. அப்போது எதிர்பாராமல், அல்லது எதிர்பார்த்த மாதிரியே, அவரது வாய்க்குள்ளிருந்து வெளியான திரவஉலகம் சட்டென்று காற்றின் உதவியுடன் உங்கள் வெள்ளை வேஷ்டியில் அல்லது சட்டையில் வந்து ’பச்சக்’ என்று அடைக்கலம் கொள்கிறது!

கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று ஆன்மிகக்கூட்டமொன்றில் பேசச்சென்றுகொண்டிருக்கும் உங்களுக்கு அப்போது எப்படி இருக்கும்? சென்னைத் தமிழுக்கு நீங்களும் இறங்கி வெறும் கைகளாலேயே அவன் மென்னியை நெரித்துக் கொன்றுபோட்டுவிடவேண்டும் என்று தோன்றுமல்லவா? அப்போது உங்களால் கீதையின் ஸ்லோகத்தையோ குர்’ஆனின் ஆயத்தையோ நினைவுக்குக்கொண்டுவர முடியுமா?  நிச்சயமாக முடியாது. நீங்கள் உணர்ச்சியின் கட்டுப்பாட்டில் அப்போது இருப்பீர்கள். உணர்ச்சிக்கு அடிமையாக இருக்கும் கணங்களில் எந்த மனிதனாலும் மனதை ஒருநிலைப்படுத்த முடியாது. பயிற்சிக்குப் போகும்முன் மேற்கண்ட தளைகளிலிலிருந்து மனரீதியாக உங்களை விடுவித்துக்கொண்டு செய்வதே சரியாகும். அதற்காகத்தான் சொன்னேன்.

முதல் பயிற்சி – உங்கள் அசைவுகளைக் கவனிப்பது

எப்பவாது அரிக்கும்போது சொரிந்திருக்கிறீர்களா? இது என்ன கேள்வி என்கிறீர்களா? உண்மைதான். மனிதர்கள் எல்லோருக்குமே அரிக்கும். அரிக்கும் எல்லோருமே சொரிந்துகொள்வார்கள். சரிதான். ஆனால் எப்பவாவது, சொரியும்போது இப்போது சொரிகிறோம் என்று கவனித்து சொரிந்திருக்கிறீர்களா? இந்தக் கேள்விக்கு இல்லை என்பதுதான் நேர்மையான பதிலாக இருக்கும். ஆமாம். பேசிக்கொண்டோ, ஏதாவது ஒரு காரியம் செய்துகொண்டே நாம் சொரிந்துகொள்கிறோம். சொரிவதைக் கவனித்து நாம் சொரிவதே இல்லை. ஏனெனில் சொரிவது நமக்கு முக்கியமில்லை. பேசுவதோ அல்லது வேறு காரியங்களோதான் முக்கியமானதாகப் போய்விடுகிறது. உண்மைதான். சொரிந்துகொள்வது முக்கியமான காரியம் இல்லைதான். ஆனால் கவனித்து செய்தால் அதுவும் மிகமிக முக்கியமான காரியமாக ஆகிவிடும்! ஆமாம். கவனித்து சொரிவது, கான்சன்ட்ரேஷன் ஆற்றல் வளர்வதற்கு உதவும் மிக எளிதான, மிக முக்கியமான பயிற்சி! ஏனெனில் நாம் அனைவருமே அலட்சியப்படுத்தும் ஒரு காரியமாக சொரிதல் இருக்கிறது. அன்றாடம் அலட்சியப்படுத்தும் ஒரு காரியத்தின்மீது வேண்டுமென்றே கவனம் வைத்துச் செய்வது கான்சன்ட்ரேஷன் வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. செய்து பாருங்கள். வித்தியாசத்தை உணர்வீர்கள். சொரிவது மட்டுமல்ல, தேவையில்லாமல் தொடையை ஆட்டுவது, ’அது வந்து’ என்று பேசத்தொடங்குவது போன்ற எல்லாவற்றையும் இது கட்டுப்படுத்தும். உணர்ந்து காரியங்கள் செய்யும் பழக்கம் வந்துவிடும்.

பயிற்சி இரண்டு – இசை கேட்பது

இது ஒரு பயிற்சியா, நாங்கள்தான் தினமும் ’கொலவெறி’யோடு பாடல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறோமே என்று நீங்கள் சொல்லலாம். உண்மைதான். ஆனால் நான் இசை கேட்கச் சொல்லும் முறைக்கும் நீங்கள் கேட்கும் முறைக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உள்ளது.  நீங்கள் ஒரு பாடலை முழுமையாகக் கேட்பீர்கள். நான் அதன் ஒரு பகுதியை மட்டும் கேட்கச்சொல்கிறேன். ஆமாம். ஒரு பாடலில், பாடகர்களின் குரல்கள், வாத்தியக்கருவிகளின் இசை மழை, மெட்டு என்று ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருக்கும். அதில் வயலின், தப்லா, சந்தூர், வீணை, சிதார், கிதார் என்று குறிப்பிட்ட இசைக்கருவியின் சப்தத்தை மட்டும் பின்பற்றிக் கேட்டுக்கொண்டே போக வேண்டும். இதுதான் பயிற்சி. செய்துபாருங்கள், அற்புதமாக இருக்கும்.

பயிற்சி மூன்று – கடிகாரம் பார்ப்பது

கடிகாரத்தில் மணிபார்க்கக்கூடாது. வினாடி முள்ளை மட்டும் ஒரு இரண்டு நிமிடங்களுக்கு கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

பயிற்சி நான்கு – குறிப்பிட்ட நேரத்துக்குள் கவனிப்பது

இரண்டு நிமிடம் என்று நாமே ஒரு நேர அளவை வகுத்துக்கொள்ளவேண்டும். அதற்குள் எதையாவது கவனித்து அதைப்பற்றி எழுதிக்கொள்ள வேண்டும். உதாரணமாக, ஒரு அறைக்குள் சென்று எத்தனை பொருள்களை இரண்டு நிமிடங்களுக்குள் பார்க்க முடிந்தது என்று குறித்துக்கொள்ளவேண்டும். பின் அதையே வேறு ஒருவரை அதே நேரத்துக்கு செய்யச் சொல்லவேண்டும். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். முன்னேற்றம் தெரியும். உதாரணமாக நீங்கள் நாலு பொருளைப் பார்த்திருக்கலாம். இன்னொருவர் அதே நேரத்தில் ஆறு பொருள்களைப் பார்த்திருக்கலாம். பின்னர் நீங்களே எட்டு பொருளைப் பார்க்கலாம். இப்படியாக.

பயிற்சிகள் அனேகம் உள்ளன. ஆனால் அவற்றை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கு இன்னொன்று வேண்டும். அது என்ன?

===

8 Replies to “மந்திரச் சாவி – 13”

  1. “பயிற்சிகள் அனேகம் உள்ளன. ஆனால் அவற்றை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கு இன்னொன்று வேண்டும். அது என்ன?”

    “மன்னிக்கணும். தெரியலை ரஃபி.”

    -தாஜ்

    1. காத்திருக்கணும் தாஜ், அடுத்த வாரம் வரை!

  2. அஸ்ஸலாமு அலைக்கும்.. உங்களின் புத்தகங்களை தொடர்ந்து படித்து வருகிறேன்.. நானும் நிறைய சாதிக்க விரும்புகிறேன்…..

  3. கான்சன்ட்ரேஷன; —> இதன் சரியான தமிழ் பொருள் என்ன சேர்

    1. கோபத்தைக் கவனித்துக்கொண்டே இருங்கள் கொஞ்ச நேரம். அதுவாகவே போய்விடும்.

Leave a reply to nawshad Cancel reply

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.