மறைவானவற்றை மனிதர் அறிய முடியுமா?

முன்னுரை

மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்த இறைவனுக்கே புகழனைத்தும். அக்டோபர் 2000 சிந்தனைச்சரம் இதழில் ஹெச்.பௌஜில் ஹக் ஆலிம் என்ற சகோதரர் ஒரு கடிதம் எழுதி வருத்தப்பட்டிருக்கிறார். மறைவானவற்றை இறைவன் மட்டுமே அறிவான். பெருமானார்(ஸல்) கூட அவற்றை அறிய வாய்ப்பில்லாதபோது, காயல்பட்டினத்திலிருந்து சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் புறப்பட்டதை தக்கலையில்  இருந்த பீரப்பாவால்  எப்படி அறிந்துகொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பி, சகோதரர் ஹெச்.ஜி.ரசூல் அவர்களுடைய வாய்மொழி வரலாற்றுப் பகுதிக்கான தனது ஆட்சேபணையையும் சொல்லி, அதற்கு ஆதாரமாக திருமறையின் ஏழாம் அத்தியாயம் 188-வது வசனத்தின் பின் பகுதியையும் காட்டியுள்ளார்.

இஸ்லாம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட மார்க்கம் என்பதற்குப் பொதுவாகப் பெண்கள், அடிமைகள் சம்மந்தப்பட்ட சட்டங்கள் மற்றும் ஜிஹாத் போன்ற விஷயங்களைத்தான் முன்னிறுத்தி விளக்குவார்கள். ஆனால் புறம் சம்மந்தப்பட்ட விஷயங்களைவிட அகம் சம்மந்தப்பட்ட விஷயங்களிலேயே இஸ்லாம் அதிகமாகத் தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டுள்ளது என்பதற்கு சகோதரரின் கடிதம் ஒரு நல்ல உதாரணம்.

மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு அல்லது நெருக்கம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் அதாவது வலியுல்லாஹ்க்கள் சம்மந்தப்பட்ட விஷயங்களில் நமது சமுதாயம் மிகவும் தெளிவுடன் இருக்கவேண்டியது அவசியம். வாழ்நாள் முழுவதும் கடலில் நீந்தினாலும் முத்து கிடைக்காது. முத்து வேண்டுமானால் ஆழ்கடலுக்குள் மூழ்கித்தான் ஆகவேண்டும். ஆழம் என்று ஒன்றுமே கிடையாது என்று தர்க்கம் புரிந்து கொண்டிருப்பதில் பயனில்லை. முத்துக்குளித்தவர்களிடம் நாம் கற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பது நம்முடைய ஆரோக்கியமற்ற நிலையே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.இத்தகைய குழப்பங்கள் நீடிக்கக்கூடாதென்ற உந்துதலினால் இந்த கட்டுரை எழுதுகின்றேன். இது ஒரு தொடக்கம்தான்.

மறைவானவையும் வெளிப்படையானவையும்

எவையெல்லாம் மறைவானவை எவையெல்லாம் வெளிப்படையானவை என்று நாம் அறுதியிட்டுக் கூற முடியுமா என்றால் முடியாது. பொதுவாக நமது ஐம்புலன்களாலும் மற்றும் அறிவாலும் உணர்ந்துகொள்ள அல்லது அறிந்துகொள்ள முடியாத விஷயங்களை மறைவானவை என்று கூறலாம். உதாரணமாக காற்று, மின்சாரம், ஜின்கள், வானவர்கள், எதிர்காலம் என்று சொல்லிக்கொண்டு போகலாம். இறைவன் உட்பட.

கண்ணுக்குத் தெரியாதவற்றையும் மறைவானவை என்று கூறலாம். கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் நாம் சிலவற்றை வேறு புலன் அனுபவங்கள் மூலம் உணர்ந்து கொள்ளலாம். காற்றைப் பார்க்க முடியாவிட்டாலும் அது நம்மீது படும்போது அது இருப்பதை உணர்கிறோம். மின்சாரத்தைப் பார்க்க முடியாவிட்டாலும் விளக்கு எரியும்போது அதன் இருப்பைப் புரிந்துகொள்கிறோம். அதாவது ஒரு புலனுக்கு மறைவாக இருப்பது இன்னொரு புலனுக்கு வெளிப்படையானதாகிறது.

ஆனால் இப்படி எந்த புலனனுபவத்திலும் பிடிபடாத, அறிவுக்கும் எட்டாத ஒன்றாக இருந்தால்கூட சிலவிஷயங்களின் மீது நம்பிக்கை வைக்கவேண்டியது ஒரு முஸ்லிமுக்கு அவசியமாகிறது. உதாரணமாக மறுமை நாள். இப்படி மறைவானவற்றில் நம்பிக்கை வைப்பவர்களுக்கு சந்தேகத்துக்கிடமின்றி திருமறை வழிகாட்டும் என்று இறைவனே கூறுகிறான் (சூரா பகரா, வசனம் 02).

சிந்தனையைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு உண்மை புரியும். அதாவது மறைவானவை எப்போதுமே மறைவானதாக இருப்பதில்லை. வெளிப்படையானதற்கும் மறைவானவற்றிற்கும் இடையே உள்ள நுட்பமான, மெல்லிய கோடு எந்த நேரத்திலும் மறைந்துவிடும் சாத்தியக்கூறை உள்ளடக்கியதாகவே உள்ளது என்பதும், வெளிப்படையான எல்லாவற்றிலும்கூட மறைவானது உள்ளது என்பதும் புரியும்.

உதாரணமாக, ஒரு ரத்தத்துளியையோ ஒரு விந்தின் துளியையோ நாம் கண்ணால் காண்கிறோம். ஆனால் ரத்தத்துளியின் உள்ளே உள்ள சிவப்பணுக்கள் மற்றும் வெள்ளணுக்கள் கண்ணுக்குத் தெரிகிறதா? விந்தின் துளியைக் காண்கின்ற நம் ‘நிர்வாண’க் கண்களுக்கு அதன் உள்ளே நெளியும் உயிரணுக்கள் தெரிகிறதா?

ஆனால் ஒரு சோதனைச் சாலையில் பரிசோதனை செய்பவருக்கு அது தெரியும். கண்ணுக்குத் தெரிகின்ற ரத்தத்துளியில் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்று மறைந்திருப்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டதால்தானே அந்த யாரோ ஒரு மனிதன் எல்லாக் கண்களுக்கும் அதை வெளிப்படையாக்கும் பொருட்டு ஒரு கருவியைக் கண்டான்?

அப்படியானால் அவனுடைய மனக்கண்களுக்கு இருந்த அந்தஸ்து சாதாரணர்களுடைய புறக்கண்களுக்கு இல்லை என்றுதானே பொருள்?

எனவே மறைவானவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பும் முயற்சியும் உள்ளவர்களுக்கு அதற்கான பாதைகளை அல்லாஹ் திறந்து விடுகிறான் என்பதே மனிதகுல வரலாறு காட்டும் மறுக்க முடியாத உண்மையாக உள்ளது.

இஸ்லாமிய வரலாறு காட்டும் உண்மைகள்

ஹஸ்ரத் உவைஸ் கர்னி அவர்கள் பெருமானார்மீது கொண்ட பிரியம் காவியத்தன்மை கொண்டது. உஹதுப் போரில் பெருமானாரின் பல் உடைந்து போனதைப் பற்றிக் கேள்விப்பட்டு, எந்தப்பல் என்று தெரியாத காரணத்தால், பெருமானாருக்கு இல்லாத பல் தனக்கெதற்கு என்று தன் எல்லாப்பற்களையும் உடைத்துக் கொண்ட பெருமகனார். “தாபியீன்களில் சிறந்தவர்”(ஹைருத்தாபியீன்) என்று பெருமானாரால் புகழப்பட்டவரும் கூட.

ஆனால் இதில் வினோதம் என்னவெனில், பெருமானாரும் உவைஸ் கர்னியும் நேரில் ஒருமுறைகூட சந்தித்துக்கொண்டதில்லை! (தனது வயதான அன்னையாருக்குப் பணிவிடை செய்யும் பொருட்டு அவரைவிட்டு அகலமுடியாமல் உவைஸ்கர்னி இருந்ததுதான் காரணம்!)

ஒரு நாள் பெருமானார் அவர்கள் உமர், அலீ இருவரையும் அழைத்து, தங்களின் போர்வை ஒன்றைக்கொடுத்து, அதை உவைஸ்கர்னியிடம் சேர்த்துவிடுமாறு பணித்தார்கள். உமரும் அலீயும் உவைஸைப் பார்த்ததில்லையாகையால், அவரை அடையாளம் கண்டுகொள்வதற்கு வசதியாக, உவைஸ் கர்னியின் அங்க அடையாளங்களை விலாவாரியாக பெருமானார் எடுத்துரைத்தார்கள்! அவரது வலது உள்ளங்கையில் ஒரு வடு இருக்கும் என்பது உட்பட(ஹஸ்ரத் உவைஸ் கர்னி, 01-10) !

ஹலரத் ஸல்மான் ஃபார்ஸி இஸ்லாத்தில் இணைவதற்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்று. ஒருவர் இறைவனின் தூதர்தான் என்பதற்கு மூன்று அடையாளங்களை அவர் அறிந்து வைத்திருந்தார்.

1. இறைத்தூதர் என்பவர் சதகாவை (காணிக்கை) ஏற்றுக் கொள்ள மாட்டார்.

2. அன்பளிப்பு எனில் ஏற்றுக்கொள்வார்.

3. முதுகுப் பக்கம் நபி என்பதற்கான அடையாளமிருக்கும்.

பெருமானாரைக்காண – அதாவது பரிசோதிக்க – வந்த அவர் முதலில் சில பேரீத்தம் பழங்களை ‘சதகா’ என்பதாகக் கொடுத்தார். பெருமானார் அவற்றை வாங்கி தான் எடுத்துக்கொள்ளாமல் மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டார்கள். மேலும் சில பழங்களை அன்பளிப்பு என தோழர் சல்மான் கொடுத்தவுடன் அவற்றை வாங்கி பெருமானார் புசித்தார்கள். மூன்றாவது அடையாளத்தை எப்படி அறிவது என்று ஸல்மான் யோசித்துக்கொண்டிருக்கையில் பெருமானார் புன்னகைத்துவிட்டு, தங்கள் மேல் துணியை அகற்றி முதுகைத் திறந்து காட்டினார்கள்! இது ஸல்மான் ஃபார்ஸ’ இஸ்லாத்தில் இணைந்த வரலாறு (மரணத்தின் மடியில் மாநபியின் தோழர்கள், பக்கம் 149 -156).

அபூபக்கர் சித்தீக் அவர்களின் பேரரும் ஜுபைர் அவர்களின் மகனுமாகிய அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் என்பவருக்கு இந்த உலகத்தில் அதிகாரமும் ஆட்சியும் கிடைக்கும் என்று பெருமானார் முன்னறிவிப்புச் செய்தார்கள். அவ்வாறே அவரும் கொடுங்கோலன் என்று வர்ணிக்கப்பட்ட யஸீதின் ஆட்சிக்குப் பிறகு கலீஃபாவாகி ஒன்பது வருடங்கள் ஆட்சி புரிந்தனர் (அதே நூல், 113-114).

யார் யார் சுவனம் செல்வார்கள், யார் யார் கொலை செய்யப்படுவார்கள் என பெருமானார் செய்த முன்னறிவிப்புகள் பல. “என் சமுதாயத்தவரில் ஒரு கூட்டம் அலீ மீது கொள்ளும் விரோதத்தால் நரகம் செல்லும். இன்னொரு கூட்டம் பிரியத்தால் நரகம் செல்லும்” என்பது ஹதீது (அதே நூல், 80).

கலீஃபா உதுமான் அவர்கள் வெட்டப்பட்டு, அவர்கள் ஓதிக்கொண்டிருந்த திருமறையின் “ஃபஜயக்ஃபிகஹுமுல்லாஹ்” என்ற குறிப்பிட்ட வாக்கியத்தின் மீது அவர்களின் ரத்தத்துளி விழுந்ததைக் கண்டு, பெருமானார் முன்னறிவிப்புச் செய்தவாறே அந்த வார்த்தையின்மீது ரத்தத்துளி விழுந்தது என்று சொல்லிக்கொண்டு உயிர் பிரியும் தருவாயிலும் உதுமான் அவர்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள்(அதே நூல், 76).

உமைர் இப்னு வஹம் என்பவர் பெருமானாரைக் கொல்ல, மதினா வந்தார். சந்தேகத்தின் பேரின் உமர் அவரை பெருமானாரிடம் அழைத்து வந்தார்கள். கைதியாயிருந்த தன் மகனை மீட்கவே தான் வந்ததாக அவர் பொய்சொல்ல, பெருமானார் உடனே, “இல்லை, ஸஃப்வான்(என்பவர்) என்னைக் கொல்லவே உம்மை அனுப்பினார்” என்று சொல்ல, உடனே அவர் அந்த இடத்திலேயே முஸ்லிமானார் (முஹம்மது நபி, 207- 08).

இவ்வளவு ஏன், வானவர்கள் நமக்கெல்லாம் மறைவானவர்கள்தானே? ஆனால் பெருமானாருக்கு வஹி கொண்டுவந்தது வானவர் தலைவர் ஜிப்ரீல்தானே? ! ஒருமுறை பெருமானார் தோழர்களுடன் அமர்ந்திருக்க, அப்போது அங்கே வெள்ளை உடையணிந்த ஒருவர் வந்து, ஈமான், இஸ்லாம், இஹ்ஸான் பற்றியெல்லாம் பெருமானாரிடம் கேள்விகள் கேட்டு, பதிலும் பெற்றுச் சென்றார்.

“அவர்தான் வானவர்கோன் ஜிப்ரீல், உங்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கவே அவர் வந்தார்” என்று பெருமானார் சொன்னதாக அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கும் ஹதீது உள்ளது நம் அனைவருக்கும் தெரியும். அதாவது, பெருமானார் மட்டுமல்ல, தோழர்களும்கூட நாமெல்லாம் நம்பிக்கை மட்டுமே வைத்திருக்கின்ற மறைவான வானவர்களின் தலைவரை நேரிலே பார்க்கின்ற பேறு பெற்றிருக்கின்றார்கள் என்கிறது வரலாறு!

ஜம்ஜம் கிணறு தூர்ந்துபோன இடம் எதுவென்று அப்துல் முத்தலிப் அவர்களுக்கு கனவில் அறிவிக்கப்பட்டு, அந்த இடத்தை அவர் அடையாளம் காட்டினார் (மறுவிலா முழுமதி, நபிகள் நாயகம்(ஸல்) வாழ்க்கை வரலாறு, பக்கம் 24).

ஹஸ்ரத் முஆவியா அவர்கள் பிறப்பதற்கு முன்பே, “உன் வயிற்றில் ஒரு அரசன் பிறப்பான்” என்று ஒரு ஜோசியன் சொன்னதாகவும் வரலாறு கூறுகிறது (மரணத்தின் மடியில் மாநபியின் தோழர்கள், பக்கம் 103-104).

இன்றைய நிலை

பெருமானார் செய்த முன்னறிவிப்புகளையும் எடுத்துரைத்த மர்மங்களையும், அப்துல் முத்தலிப் மற்றும் பெயர் தெரியாத ஒரு ஜோசியன் போன்றவர்கள் செய்த காரியங்களையும் பார்த்தோம். அவையாவையும் மறைவானவையே என்பது வெளிப்படை.

அவ்வளவு தூரம் போவானேன். பூமிக்கடியில் குடிதண்ணீர் இருக்கும் இடத்தைத் துல்லியமாக அறிந்து சொல்பவர்களை நாம் நம் அன்றாட வாழ்வில் கண்டுகொண்டும் பயன்படுத்திக் கொண்டும்தானே இருக்கிறோம்?! மனிதனால் முடியாததை, நாய்கள் மோப்பம் பிடித்துக் கண்டுபிடிப்பதை நாம் பார்த்ததில்லையா? ஒரு நாயைவிட இறைவனின் பிரதிநிதியாகிய மனிதனின் அந்தஸ்து தாழ்வானதா?

சிந்திக்காமல் எதையும் சொல்லிவிடுவது சமுதாயப் பொறுப்புள்ள செயலாகாது. அதுவும் திருமறையையும் பெருமானாரையும் பற்றிப் பேசுவதற்கு முன் பலமுறை சிந்தித்து, இப்படி இருக்கலாம் என்று தயக்கத்துடன் சொல்வதே சரியான மார்க்க அறிஞர்களின் வழிமுறையாகும். திருமறை வசனங்களுக்கும் ஹதீதுகளுக்கும் இதுதான் அர்த்தம் என்று அடித்துச் சொல்வதற்கு எந்த முஸ்லிமுக்கும், ஏன் எந்த மனிதனுக்கும், அருகதை கிடையாது.

தூரத்தில் இருப்பவற்றை இருந்த இடத்திலிருந்தே பார்த்தல் (cairvoyance), கேட்டல் (clair-audience), பிறர் மனதில் உள்ளதை அறிதல் (telepathy), மற்றும் ESP போன்ற parapsychology சம்மந்தப்பட்ட விஷயங்களில், பலமுறை பரிசோதனைகள் செய்து, பலமுறை வெற்றிகள் கண்டு, அவற்றில் இன்று அமெரிக்கப்  பல்கலைக் கழகங்கள், குறிப்பாக, ட்யூக் பல்கலைக்கழகம், பயிற்சியும் பட்டமும் அளித்துக்கொண்டிருக்கின்றன.

நாமென்னவென்றால், மறைவானவற்றை இறைவனே அறிவான் என்று சொல்லி, நமது பிடரி நரம்பைவிட நமக்கு மிகவும் நெருக்கமாக உள்ள நமது இறைவனிடமிருந்து நம்மை நாமே தூரப்படுத்திக்கொள்கிறோம்.

முடிவுரை

மறைவானவற்றை மட்டுமல்ல, வெளிப்படையானவற்றையும் இறைவனே அறிவான் (சூரா அன் ஆம், 06:73). எதையுமே சுயமாக அறிந்துகொள்கின்ற தகுதி மனிதனுக்கில்லை. இறைவனுடய அனுமதியின்றி இலைகூட அசையாதென்று அவனே கூறுகின்றான் (சூரா அன் ஆம், 06:53).

ஆனால் இறைவனை நெருங்கியவர்களுக்கு அவன் மர்மங்களையெல்லாம் வெளிப்படுத்திவிடுகின்றான். “எவன் இறைவனை அறிந்து கொண்டானோ அவனுக்கு எந்தப் பொருளும் மறைவானதாக இருக்க முடியாது” என்று உவைஸ்ர்னி அவர்களும் கூறுகின்றார்கள் (ஹஸ்ரத் உவைஸ் கர்னி, பக்கம் 46).

“உணர்ச்சிகளை நீங்கள் அடக்கி ஆளும்போது, உங்கள் உள்ளத்தில் தெய்வீகம் ஒளிவிடும். சாதாராண மனிதர்களுக்குப் புரியாத மர்மங்களெல்லாம் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்’’ என்று இமாம் கஸ்ஸாலி அவர்கள் தமது அஜாயிபுல் கல்ப் என்ற நூலில் கூறுகிறார்கள் (உள்ளத்தின் விந்தைகள், பக்கம் 53).

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்ற புனித நபிமொழி ஒன்று : “எனது நேசர்களைப் பகைக்கின்றவர்களை நானும் பகைக்கிறேன்…எனது நேசன் எனது கேள்வியைக் கொண்டு கேட்கிறான். எனது பார்வையைக் கொண்டு பார்க்கிறான். அவன் எடுக்கின்ற கைகளும் நடக்கின்ற கால்களும் எனது (Forty Hadith Qudsi, பக்கம் 104).

பத்ருப்போரில் பெருமானார் எதிரிகளை வென்றதும், அவர்கள்மீது பிடி மண்ணை எறிந்ததும் தன்னுடைய செயல்களே என்று இறைவன் திருமறையில் கூறுவது (சூரா அல் அன்ஃபால், 08:17) இந்த ஹதீதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும்.

எனவே, அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு, வெளிப்படையானவற்றை சாதாரண மனிதர்களும் மறைவானவற்றை இறை நேசர்களும் அறிந்துகொள்கிறார்கள்.

சகோதரர் எச்.ஃப்வுஜுல் ஹக் ஆலிம் அவர்கள் மேற்கோள் காட்டிய இறைவசனமும் இந்த கருத்தை உறுதி செய்கிறது. மேற்கோளில் விடுபட்டுப்போன 07:188 ஆவது வசனத்தின் முன்பகுதி :

நபியே, நீர் கூறும்! நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன், அல்லாஹ் நாடினால் ஒழிய

அதாவது, இறைவன் நாடினால், எதையும் யாரும் அறிந்து கொள்ளலாம் என்பது(ம்) இந்த வசனத்திலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது. “இல்லா மாஷா அல்லாஹ்” (இறைவன் நாடினாலொழிய) என்பது(ம்) இங்கே புரிந்துகொள்ளப்பட வேண்டிய செய்தி. ஆகவே பெருமானார் மட்டுமல்ல, பீரப்பாவும்,  ஏன் நீங்களும்கூட மறைவானவற்றை அறியமுடியும் இன்ஷா அல்லாஹ்!

நன்றி: சிந்தனைச் சரம், மார்ச், 2001

கட்டுரை எழுத உதவிய நூற்பட்டியல்

1.ஹஸ்ரத் உவைஸ் கர்னி, ஸையித் இப்ராஹ“ம், வளர்மதி, முதல் பதிப்பு, 1964.

2.மரணத்தின் மடியில் மா நபியின் தோழர்கள். எம்.எஸ்.முஹம்மது தம்பி. தம்பி புக்செண்டர், முதல் பதிப்பு, 1982.

3. முஹம்மது நபி. ஸையித் இப்ராஹ“ம். வளர்மதி, முதல் பதிப்பு, திருச்சி, 1973.

4. Summarized Sahih Al-Bukhari. Maktabah Darussalaam, Madina, 1994.

5.மறுவிலா முழுமதி நபிகள் நாயகம்(ஸல்) வாழ்க்கை வரலாறு. ஜமால், இஸ்லாமிய நூல்கள் மலிவுப் பதிப்பு, 11ஆம் பதிப்பு, சென்னை, 1999.

6. உள்ளத்தின் விந்தைகள். இமாம் கஸ்ஸாலி ( அஜாயிபுல் கல்ப் ). தமிழாக்கம். எஸ்.அப்துல் வஹ்ஹாப் பாகவி. யுனிவர்சல் பப்லிஷர்ஸ், 3ஆம் பதிப்பு, சென்னை, 1985.

7. Forty Hadith Qudsi. Tr. Ezzeddin Ibrahim & Davies. Dar Al Koran Al Karim. Lebenon, Ist ed. 1980.

Leave a comment

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.