நவீனகால மனிதர்களும் தனித்துவமும்

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு மாதிரி ’பேண்ட்’ போடுவேன். பாதத்தின் பக்கம் வரும்போது அது பெரிதாக விரிந்திருக்கும். ’பெல் பாட்டம்’ என்று அதற்குப் பெயர். ’பாபி’ படத்தில் ரிஷி கபூர் அப்படித்தான் போட்டிருப்பார். எனக்கும் ரிஷி கபூர் என்று நினைப்பு!

என் வயதைக் கருத்தில் கொண்டு, அந்த முட்டாள்தனத்தை மன்னித்துவிடலாம் என்றுதான் தோன்றுகிறது.

ஆனால் இன்று வேறு வகையான ஒரு பழக்கம் மக்களிடையே தலைதூக்கி உள்ளது. ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், இளைஞிகள், கிழவர்கள், கிழவிகள், ஒல்லியானவர்கள், குண்டானவர்கள் என எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லாருமே அதைச் செய்துகொண்டுள்ளார்கள்.

அது என்ன என்கிறீர்களா? அதுதான் டாட்டூ குத்திக்கொள்வது.

ஆமாம். கைகளில், நெஞ்சில், முதுகில் – இன்னும் எங்கெங்கே என்று தெரியவில்லை — என டாட்டூ குத்திக்கொள்வது. பிடித்தவர்களின் பெயர்களைக் குத்திக்கொள்வது. அல்லது மிருகங்களின் உருவங்களை வரைந்துகொள்வது இப்படி.

மனிதனை தனித்துவம் இழக்க வைக்கும் இந்தப் பழக்கத்தினால் ஏதாவது நன்மை உண்டா? ஆரோக்கியம் பெருகுமா? 

நன்மை ஒன்றுமில்லை, தீமைதான். ஆரோக்கியமில்லை, நோய்தான் என்கிறது விஞ்ஞானம்.

அன்பின், காதலின் அடையாளமாக டாட்டூ கருதப்படுகிறது. காதல் ரணம் என்றும் சொல்லலாம்! ஏனெனில் வெகுநுட்பமான காயங்களை அது தோலில் உண்டாக்குகிறது. அதை microinjuries என்றும், அதனால் முதல் இரண்டு வாரங்களில் தோல் தொற்று, அரிப்பு, தோல் சிவத்தல், அந்த இடத்திலிருந்து நீர் வெளியாதல் – இப்படியெல்லாம் நடக்கும் என்றும் விஞ்ஞானம் கூறுகிறது. எச்.ஐ.வி போன்ற நோய்களும் ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது என்றும் எச்சரிக்கிறது.

டாட்டூவானது தோலில் ஏற்படுத்தப்படும் நிரந்தர அடையாளமாகும். இறைவன் எந்த நோக்கத்துக்காக தோலைக்கொடுத்தானே அதை உதாசீனப்படுத்தி, நிரந்தரமான, செயற்கையான நிறமிகளை ஊசிகள் மூலம் உள்ளே வலிக்க வலிக்க குத்திக்கொள்கிறார்கள். கழிவுகளை தோல்மூலமாக வெளியேற்றுவதற்கு பதிலாக செயற்கைக் கழிவுகளை தோலுக்கு உள்ளே நிரந்தரப்படுத்துகிறார்கள்.

அது அன்பின், காதலின் அல்லது நட்பின் அடையாளமாம்! அல்லது அந்த ஹீரோ மாதிரி இருக்கவும், இந்த ஹீரோயின் மாதிரி இருக்கவும் செய்யப்படுகிறதாம்.

நாம் ஏன் இன்னொருவர் மாதிரி இருக்க வேண்டும்? நாம் நாமாகவே இருக்கவேண்டாமா? காதல் என்பது இன்னொருவருக்காக நம் சுயத்தை இழப்பதுதான். ஆனால் அது அகந்தை என்ற சுயத்தை இழப்பது. தோலை இழப்பது அல்ல!

நீங்கள் டாட்டூ போட்டுக்கொண்ட காதலி இன்னொருவனைத் திருமணம் செய்துகொண்டு போய்விட்டால்?! காதல் சின்னமானது காதல் ரணமாகிவிடும்! அதுவும் நிரந்தர ரணம்! மனசில் ஏற்பட்ட ரணம் போதாதென்று தோலிலும்!

சுயமாக சிந்திக்கத் தெரிந்த யாரும் டாட்டூ போட்டுக்கொள்ள மாட்டார்கள். நீங்கள் எப்படி?!

இரவு 01.26

31.12.21

Leave a comment

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.