ஆங்கில மற்றும் தமிழ் மரபுத்தொடர்கள்

ஒவ்வொரு மொழிக்கும் அதற்கேயுரிய மரபுத்தொடர்கள் மற்றும் சொற்றொடர்கள் உண்டு. ஆங்கிலத்தில் அவற்றை idioms and phrases என்று கூறுவர். அவற்றை நன்கு அறிந்திருப்பது ஒரு மொழியின்மீது நமக்குள்ள ஆளுமையின் வெளிப்பாடாக இருக்கும். ஆங்கிலத்திலும் தமிழிலும் உள்ள அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தபோது சில வியப்புகள் எனக்கு ஏற்பட்டன.

அந்த வியப்பை ஒரு புத்தகமாகக் கொடுப்பதன் மூலம் ஒருவரது ஆங்கில அறிவும் தமிழறியும் பெருகும், ஆழமாகும் என்பதால் இந்த விஷயத்தையே நாம் ஒரு நூலாக ஏன் எழுதக்கூடாது என்று எனக்குத் தோன்றியது.

ஒவ்வொரு மொழியிலும் உள்ள மரபுத்தொடர்கள் மற்றும் வினைமுற்றுப்பெறாத சொற்றொடர்கள் வித்தியாசமானவை. சிரிக்க வைப்பவை.  சிந்திக்க வைப்பவை. உதாரணமாக ஒரு உருதுப் பாடலில் எனக்குக் கிடைத்த அனுபவத்தை இங்கே சொல்லலாம் என்று நினைக்கிறேன். அந்தப் பாடலில் ஒரு பெண்ணைக் கிண்டல் செய்து அவளது தோழிகள்  பாடுவார்கள். திரும்பத்திரும்ப அந்தப் பாடலில், ‘தேரி பாவோன் பாரி ஹோகயீ’ என்ற மரபுத்தொடர் வந்துகொண்டே இருந்தது. அதுதான் கிண்டல்.

’தேரி பாவோன் பாரீ ஹோகயீ’ என்றால் ’உன் பாதம் வீங்கிவிட்டது’ என்று அர்த்தம். அதில் என்ன கிண்டல் உள்ளது என்று எனக்கு முதலில் புரியவில்லை. உருது தெரிந்த பலரிடம் கேட்டும் பார்த்தேன். அவர்களுக்கும் புரியவில்லை! கடைசியில் உருது நன்கு தெரிந்த ஒருவர்தான் சிரித்துக்கொண்டே அதற்கு விளக்கம் சொன்னார்.

‘குழந்தை உண்டாகி இருக்கும் ஒரு பெண்ணுடைய பாதங்கள் வீங்கிவிடும். நீ உண்டாகி இருக்கிறாய் என்பதைத்தான் அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள்’ என்று விளக்கினார்! அவருடைய உர்து அறிவு அபாரமானதாக இருந்ததால் அவரால் அதை விளக்கிச் சொல்லமுடிந்தது. ஆனால் உருது தெரிந்த பலருக்கு அச்சொற்களின் அர்த்தம் புரிந்தும் அதை விளக்க முடியவில்லை!

சொற்றொடரின் அழகே இதுதான். அவைகளை தனித்தனியாகப் பார்த்தால் அர்த்தம் விளங்கலாம். ஆனால் அவை வேறு ஒரு அர்த்தம் தரும். குழப்பம்கூடத் தரலாம். ஆனால் கூட்டாக வரும்போது அவை வேறு ஒரு புதிய உலகுக்கு நம்மை அழைத்துச் செல்லும். எந்த அளவுக்கு ஒருவருக்கு ஒரு மொழியில் உள்ள சொற்றொடர்கள் தெரிகிறதோ அந்த அளவுக்கு அவருக்கு அம்மொழியில் புலமை இருக்கிறது என்று பொருள். தமிழ்ப்புலமையும் ஆங்கிலப் புலமையும் நமக்கு வேண்டாமா?!

ஆனால் நான் இந்த நூலில் அகர வரிசைப்படி எல்லா முக்கியமான ஆங்கிலச் சொற்றொடர்களையும் எடுத்துக்கொள்ளவில்லை. சிலவற்றைப் பற்றி மட்டுமே சொல்ல இருக்கிறேன். காரணம் அவற்றின் பின்னால் உள்ள கதைகள் மிகவும் சுவாரசியமானவை. அவைகளைத் தெரிந்துகொள்வதன் மூலம் அச்சொற்றொடர்களை நாம் மறக்காமல் இருக்க முடியும். நம் மொழி ஆளுமையும் நம்மையறியாமலே வலுப்பெற்றிருக்கும்.

ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னால் ஒரு கதை இருக்கும். அந்தக் காலத்தில் ஒவ்வொரு சொல்லும் ஒரு கவிதையாக, ஒரு படமாக இருந்ததாம். ஒரு மனிதனின் கடந்தகால வரலாறு நமக்கு முழுமையாகத் தெரிந்திருந்தால் அவரை நாம் சிறப்பாகப் புரிந்துகொள்ள அது உதவுமல்லவா? இது சொற்களுக்கும் பொருந்தும். ஒரு சொல்லின் கடந்த கால வரலாறு நமக்கு நன்றாகத் தெரிந்திருந்தால் அதன் அர்த்தம் நமக்கு மறக்கவே மறக்காது.

வார்த்தைகள் சின்ன ஜன்னல்களைப் போன்றவைதான். ஆனால் அவற்றின் வழியாக நாம் ஒரு பெரிய உலகத்தையே பார்க்கலாம்.

ஆங்கிலச் சொற்களை, ஆங்கில மரபுத்தொடர்களை மற்றும் ஆங்கிலச் சொற்றொடர்களை இப்படிப் பார்ப்பதற்கான ஒரு சிறு முயற்சிதான் இது.

சரி புத்தகத்துக்குள்ளும், சொற்றொடர்களுக்குள்ளும் அவற்றின் பின்னால் உள்ள சில அபூர்வமான, சுவாரசியமான கதைகளுக்குள்ளும் செல்லலாம். வாருங்கள்.

அன்புடன்

நாகூர் ரூமி

02.01.22

Billingsgate – அசிங்கமான, ஆபாசமான வசவுப்பேச்சு Billingsgate என்று சொல்லப்படுகிறது. லண்டனில் தேம்ஸ் நதிக்கு அருகில் இருந்த மிகப்பெரிய மீன் மார்க்கட் இது. மீன் மார்க்கட் என்றாலே சப்தம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். அது லண்டன் மீன் மார்க்கட்டாக இருந்தால் என்ன நாகூர் மீன் மாக்கட்டாக இருந்தால் என்ன?!

எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. நாகூர் மீன் மார்க்கட்டில் அந்தக் காலத்தில் – அதாவது நான் பள்ளிக்கூட மாணவனாக இருந்த காலகட்டத்தில் – மீன்காரி குறிப்பிட்ட மீனை 100 ரூபாய் என்றால் பாதி விலைக்குக் கேட்பார்கள். அவள் ஒத்துக்கொண்டால் 50/- ரூ கொடுத்து வாங்கிப்போவார்களா என்றால் அதுதான் கிடையாது! 25/- ரூபாய்தான் கொடுப்பார்கள்!

அது ஏன் எனக்கு ரொம்ப நாள் புரியவே இல்லை. மீன்காரி சொல்லும் விலையில் பாதிதான் உண்மையான விலையாம். அதில் பாதியை அவர்கள் அவள் பாணியிலேயே கேட்டு தங்கள் பாணியில் வாங்கிக்கொண்டார்கள்!

நானும் அந்தக் கணக்கைப் பின்பற்றலாம் என்று நினைத்து ஒருநாள் ஒருத்தியிடம் சென்று மீன் எவ்வளவு என்று கேட்டேன். சொன்னாள். நான் பாதி விலை கேட்பதாக நினைத்து கால்வாசி விலை கேட்டுவிட்டேன்! என் கணித அறிவு அப்படி! அவள் ஒரு வார்த்தையைச் சொல்லி, ‘குடிக்கி’ என்று சேர்த்துச் சொல்லி என் கன்னத்தில் மீன் கையைத் தடவிவிட்டாள்! நான் ‘….குடிக்கி’ என்றால் என்ன என்று என் பாட்டியைக் கேட்டேன். அவர் முதலில் அதிர்ந்து, பின் விஷயம் கேட்டறிந்து என்னை அணைத்துக்கொண்டு மீன்காரியைத் திட்டினார்!

Billingsgate என்றால் சப்தம் மட்டுமல்ல, அசிங்கமான வார்த்தைகளும் இருக்கும்போல!

Leave a comment

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.