நபிமொழிகளின் உளவியல் — 7

சரியான நேரம் எது

பெருமானார் எங்களுக்கு ஏதாவது மார்க்கம் பற்றியோ வேறு விஷயங்கள் பற்றியோ எடுத்துச்சொல்ல வேண்டுமெனில் தகுந்த நேரத்தில் சொல்லுவார்கள். எங்களுக்கு அலுப்பு சலிப்பு ஏற்படாத வண்ணம் வசதியான ஒரு நேரத்தில்தான் சொல்லுவார்கள்.  எல்லா நேரத்திலும் எங்களிடம் மார்க்கம் பற்றி விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள் என்று இப்னு மசூத் அறிவிக்கிறார்கள். (புகாரி, எண் 68)

இது ரொம்ப முக்கியமானது. எதையும் நாம் உகந்த நேரத்தில் செய்யவேண்டும். நேரம், காலம் பார்க்காமல் ஒரு காரியத்தை நாம் செய்யும்போதுதான் அது தோல்வியடைகிறது அல்லது பயனில்லாமல் போகிறது.

குடி போதையில் இருக்கும் ஒருவனிடம் குடிப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகளைப்பற்றி எடுத்துச் சொன்னால் அவனுக்குப் புரியுமா? ஆனால் நம்முடைய ஆலோசனைகள், புத்திமதிகள் யாவும் அப்படிப்பட்ட பொருந்தாத நேரத்தில்தான் சொல்லப்படுகின்றன. சிலர் நம்மோடு இருக்கும்போதெல்லாம் நமக்கு சந்தோஷத்தை ஏற்படுத்துகிறார்கள். சிலர் நம்மைவிட்டுப் போனபிறகுதான் நமக்கு சந்தோஷமே ஏற்படுகிறது என்றார் ஆங்கில நாடகாசிரியர் ஆஸ்கார் வொயில்டு! அப்படிப்பட்ட ஒரு ஆளாக நாம் மாறிவிடக்கூடாதல்லவா?! அதைத்தான் இந்த நபிமொழி சுட்டுகிறது.

தான் இறைவனின் இறுதித்தூதர் என்பதால் தான் சொல்லவந்த கருத்தை எந்த நேரத்திலும் சொல்லலாம் என்று பெருமானார் நினைக்கவில்லை. கேட்பவர்களின் மனநிலையை முதலில் கணக்கில் எடுத்துக்கொண்டு, அதைப்புரிந்துகொண்ட பிறகுதான் பேசினார்கள். வெற்றிபெற விரும்புபவர்களுக்கான குறிப்பு அதுதான். என்ன பேசவேண்டும் என்பது எப்படி முக்கியமோ அதைவிட முக்கியம் எப்போது பேசவேண்டும் என்பது. இந்த நேரஉணர்வு இல்லாத காரணத்தினால்தான் பலர் வாழ்க்கையில் தோல்வி அடைகிறார்கள்.

ஆனால் பெருமானார் கொடுத்த நேரக்குறிப்பை மிகச்சரியாகப் புரிந்துகொண்டு நபித்தோழர்கள் செயலாற்றியுள்ளார்கள். அப்துல்லாஹ் என்ற நபித்தோழர் ஒவ்வொரு வியாழக்கிழமையும் மார்க்கத்தின் உயர்வுகளைப் பற்றி சொற்பொழிவு ஆற்றுவாராம். அப்படி அவர் சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தபோது ஒருநாள் ஒருவர், ‘ஓ அபூ அப்துர்ரஹ்மான், நீங்கள் ஒவ்வொரு நாளும் இப்படிச் சொற்பொழிவு ஆற்றினால் நன்றாக இருக்குமே’ என்றாராம். அதற்கு அந்த நபித்தோழர், ‘உங்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்று நான் அஞ்சுகிறேன். இறுதித்தூதரும் எங்களிடம் இப்படித்தான் நடந்துகொண்டார்கள். எதையும் தக்க நேரம் பார்த்துத்தான் சொல்வார்கள்’ என்று பதில் சொன்னதாக பெருமானார் சொன்ன நபிமொழி எண் 68-ஐ அடுத்து 70வது நபிமொழியாக இது புகாரியிலேயே பதிவாகியுள்ளது. இல்லையெனில் நம் முயற்சிகள் யாவும் விழலுக்கு இறைத்த நீர் போல ஆகிவிடும்.

நல்ல விஷயங்களைக்கூட நாம் தவறான நேரத்தில் சொன்னால் அது மனதுக்குள் போகாது. நாம் விரும்பும் நல்ல விளைவை ஏற்படுத்தாது. நல்ல பசியோடு இருக்கும் ஒரு மாணவனுக்கு கணிதம் சொல்லிக்கொடுக்க ஒரு ஆசிரியர் முயன்றாராம். ’மூன்றும் மூன்றும் எவ்வளவு? ’என்று கேட்டாராம். ரொம்ப எளிமையான, எளிதில் பதில் சொல்லக்கூடிய கேள்விதான். ஆனால் மாணவனோ கடுமையான பசியில் இருந்தான். கணிதத்தின்மீது அவன் கவனம் செல்லுமா? ஆனாலும் ஆசிரியர் கேட்டதற்கு அவன் பதில் சொன்னான். அது என்ன தெரியுமா?

’ஆறு இட்லி’!

ஆமாம். அவன் பசியில் இருந்தான். அவனுக்கு அப்போது தேவை கணிதமல்ல, இட்லிகள்தான்! நேரம் அறிந்துகொள்ளாமல் கேட்கப்பட்ட கேள்வி அது!

மனைவியா சகோதரியா

உக்பா இப்னு அல் ஹாரித் என்ற நபித்தோழர் அபீ இஹாப் இப்னு அஜீஸ் என்பவருடைய மகளை மணந்துகொண்டார். ஒரு பெண் உக்பாவிடம் வந்து, ‘நீ குழந்தையாக இருந்தபோது உனக்கும் நீ இப்போது மணமுடித்திருக்கும் பெண்ணுக்கும் நான் பால்கொடுத்துள்ளேன்’ என்று கூறினார். உக்பா உடனே மதினா சென்று பெருமானாரைச் சந்தித்து இவ்விஷயம் குறித்து சொல்லி ஆலோசனை கேட்டார். நீங்கள் இருவரும் பால்குடிச் சகோதர சகோதரிகளாக இருப்பதால் திருமண உறவு எப்படி வைத்துக்கொள்ள முடியும் என்று பெருமானார் சொல்லிவிட்டார்கள். உக்பாவும் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட, அப்பெண்ணும் வேறு ஒருவரை மணந்துகொண்டார். அப்துல்லாஹ் இப்னு அபீ முலைக்கா என்ற நபித்தோழர் அறிவிக்கும் இந்த நபிமொழி புகாரியில் பதிவாகியுள்ளது (88).

யாரை மணக்கலாம் யாரை மணக்கக்கூடாது என்று இஸ்லாத்தில் தெளிவான சட்டதிட்டங்கள் உள்ளன. இது நம் அனைவருக்குமே தெரியும். எல்லா மனிதர்களும் ஆதமுடைய மக்கள் என்பது உண்மையாக இருக்கும்போது மனிதர்கள் அனைவருமே சகோதர சகோதரிகள்தான். ஆதம் நபியவர்கள் தனக்கு ஆண் பெண், ஆண் பெண் என இரட்டையாகப் பிறந்த சகோதர சகோதரிகளுக்குத்தான் திருமணம் செய்து வைத்தார். இதுவும் வரலாறுதான். அந்த சூழ்நிலையில் அப்போது அப்படித்தான் செய்யமுடியும். ஆனால் அப்போதுகூட அழகாக இருந்த தன் உடன்பிறந்த சகோதரியைத் தானே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று காபில் நினைத்து தன் சகோதரர் ஹாபிலைக் கொன்றதும் வரலாறுதான். அங்கேயும் பிரச்சனை செய்தது காபில் மனதில் எழுந்த காமஉணர்வுகள்தான்.  

ஆனால் காலம் செல்லச்செல்ல திருமண உறவுகளுக்கான சட்டதிட்டங்கள் வெகு நுட்பமாகப் பெருமானாரால் வகுத்துக் கொடுக்கப்பட்டன. உறவுகள் என்ற நிலைக்கு மேல் அவ்வுறவுகளைச் சார்ந்த உணர்வுகள் முக்கியமாகிப்போயின. ஒரு பெண்ணைத் தாயாகவோ சகோதரியாகவோ நினைத்த பிறகு அவர் மீது காதல் உணர்வுகள் யாருக்கும் எழுவதில்லை. காமாந்தகர்களைத் தவிர. எனவே யாரைத்திருமணம் செய்துகொள்ளலாம், யாரைச் செய்துகொள்ளக்கூடாது என்பதன் பின்னால் மிக நுட்பமான உளவியல் உள்ளது. 

இன்ஷா அல்லாஹ் தொடரும்…  

நன்றி இனிய திசைகள், ஜனவரி, 2022

Leave a comment

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.