நபிமொழிகளின் உளவியல் — 8

தொழுகையில் அகந்தையை அழித்தல் 

ஒருமுறை பெருமானாரிடம் ஒருவர் வந்து, என்னால் கூட்டுத்தொழுகைக்கே செல்ல முடியவில்லை. ஏனெனில் அந்த இமாம் தொழுகையை ரொம்ப நேரம் நீட்டித்துக்கொண்டே போகிறார் என்று சொன்னார். அதைக்கேட்ட பெருமானார் மிகவும் கோபமாக அறிவுரை ஒன்றைக் கூறினார்கள். அவர்கள் அவ்வளவு கோபப்பட்டுத் தான் பார்த்ததில்லை என்று இந்த நபிமொழியை அறிவிப்பவர் கூறினார். சரி, பெருமானாருடைய உபதேசம்தான் என்ன?

’மக்களே, உங்களில் சிலர் நல்ல காரியங்களை (அதாவது தொழுகையை) அடுத்தவர் வெறுக்கும்படிச் செய்துவிடுகின்றனர். தொழுகைக்கு இமாமத் செய்யும்போது தொழுகையை சுருக்கிக்கொள்ள வேண்டும். ஏனெனில் நோயாளிகள், நலிவுற்றவர்கள், வேறு அவசரத்தேவையுடயவர்கள் இருப்பார்கள்’ என்று கூறினார்கள். (புகாரி, 90)

தனியாகத் தொழும்போது வேண்டுமானால் நீளமான ஆயத்துக்களை உங்கள் விருப்பப்படி ஓதிக்கொள்ளுங்கள் என்று பெருமானார் சொன்னதாக தோழர் அபூ ஹுரைரா அறிவிக்கும் நபிமொழியும் உள்ளது (புகாரி, 703).

மிக நுட்பமான, ஆழமான உளவியல் ரீதியான அறிவுரையாகும் இது. ஏனெனில் சுருக்கமாகத் தொழுகையை ஒரு இமாம் முடித்தாரென்றால், மீண்டும் மீண்டும் அங்கேயே தொழவரவேண்டும் என்ற ஆர்வம் மக்களுக்கு வரும். நீளமாகவும் அதிக நேரமாகவும் ஓதிக்கொண்டிருந்தால் அந்தப் பள்ளிவாசலுக்கு இனிமேல் வரவேகூடாதென்றுகூட ஒருவருக்குத் தோன்றிவிடலாம்.

தொழுகையில் நீண்ட ஆயத்துகளை ஒரு இமாம் ஏன் ஓதுகிறார்? அதிலும் ஆழமான உளவியல் உண்டு. தனக்கு மிக நீண்ட ஆயத்துகளும் மனப்பாடமாகத் தெரியும் என்று அவர் பறைசாற்ற விரும்புகிறார். அது அவருடைய மார்க்க ஞான அகந்தையின் வேலையாகும். அது அவருக்கேகூட தெரியாமலிருக்கலாம்.

அந்த அகந்தையை அழிப்பது எப்படி? திருமறையின் மிகநீண்ட அத்தியாயங்கள் மனப்பாடமாக இருந்தாலும் வேண்டுமென்றே அவற்றை ஓதாமல், சின்னச் சின்ன ஆயத்துக்களை ஓதி இமாம் தொழுகையை நடத்தவேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் தன் அகந்தையை அழிக்கும் வேலையையும் அந்த இமாம் செய்துகொள்கிறார். அதோடு, மேலே உள்ள நபிமொழியில் சொல்லப்பட்டிருப்பதுபோல நோயாளிகள், நலிவுற்றவர்கள், மற்றும் அவசரத்தேவை உடையவர்களுக்கு வசதியாகவும் தொழுகையை அமைத்துவிடுகிறார்.

இப்படிச் செய்வதன்மூலம் தனக்கும் சமுதாயத்துக்கும் அவர் நன்மை செய்துவிடுகிறார். அகந்தையை அழிப்பதில் பெருமானார் எப்போதுமே சிரத்தை காட்டியுள்ளார்கள். ஆனால் வழக்கம்போல மிக நுட்பமான முறையில். தொழுகையில் அல் பகரா போன்ற மிக நீண்ட சூராக்களை ஓதிய நபித்தோழர் முஆத் இப்னு ஜபல் அவர்களை அப்படிச் செய்யவேண்டாம், மக்களை தொல்லைக்கு ஆட்படுத்தவேண்டாம், சப்பிஹிஸ்ம ரப்பிகல், வஷ்ஷம்ஸி, வல்லைலி இதா யக்‌ஷாஹா போன்ற சின்ன சூராக்களை ஓதுங்கள் என்று அறிவுறுத்தியதாக ஒரு நபிமொழி கூறுகிறது (புகாரி, 701, 705).

சொல்லவேண்டாம்

ஒருமுறை தோழர் முஆத் இப்னு ஜபலிடம் பெருமானார் இப்படிச் சொன்னார்கள்: ’லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று உள்ளத்திலிருந்து உரைப்பவர்களை நரக நெருப்பிலிருந்து நாயன் காப்பாற்றுவான். அவர்கள் சொர்க்கம் செல்வார்கள்.’ அதைக்கேட்ட முஆத் அவர்கள், ’யா ரஸூலுல்லாஹ், இந்த நற்செய்தியை நான் நம் மக்களிடம் சொல்லலாமா?’ என்று கேட்டார்கள். அதற்குப் பெருமானார், ’வேண்டாம். மக்களுக்கு இது தெரிந்தால், அவர்கள் (வேறு நற்காரியங்கள் எதிலும் ஈடுபடாமல்) இதிலேயே நிலைத்துவிடுவார்கள்’ என்று கூறினார்கள். (புகாரி, 128, 129).

மனிதர்களின் மனங்களை அளந்து வைத்திருக்கும் ஒருவரால்தான் இப்படிச் சொல்ல முடியும். சொல்லிவிட்டாலே சொர்க்கம் என்ற செய்தி கிடைத்தால், நாம்தான் கலிமா சொல்லிவிட்டோமே, நமக்கு சொர்க்கம் நிச்சயம் என்ற நினைப்பில் செயல்பாடுகள் எதுவுமில்லாத சோம்பேறிகளாக மனிதர் ஆகிவிடுதல் சாத்தியமல்லவா? உணர்ந்துகொள்ளும் உம்மத்தாக மட்டும் நாம் இல்லாமல் செயல்படும் சமுதாயமாகவும் இருக்கவேண்டும் என்று பெருமானார் விரும்பியுள்ளார்கள்!

பெருமானார் சொன்ன இதே கருத்தை ஹஸ்ரத் உமர் அவர்கள் சொன்னதாகவும் சஹீஹ் முஸ்லிமில் ஒரு நபிமொழி உள்ளது.

தூக்கமா தொழுகையா

தொழும்போது யாருக்காவது தூக்கம் வந்தால், அதாவது தூங்குகின்ற மனநிலையிலும் உடல்நிலையிலும் ஒருவர் இருந்தால், முதலில் போய் நன்றாகத் தூங்கிவிட்டு, தூக்கம் கலைந்து விழிப்பு வந்த பிறகு தொழுங்கள் என்று பெருமானார் சொன்னதாக அன்னை ஆயிஷா அறிவிக்கிறார்கள் (புகாரி, 212).

இந்த நபிமொழிக்கு விளக்கமே தேவையில்லை. ஆனாலும் இதை வைத்து நாம் சில விஷயங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. உடலும் உள்ளமும் ரயில் பெட்டிகள் மாதிரி தனித்தனியான விஷயங்களல்ல. இதோ இங்கே உடல் முடிகிறது, இதோ இங்கே மனம் ஆரம்பிக்கிறது என்று சொல்ல முடியாத அளவில் ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்துள்ளது. ஒருவகையில் உடலை கண்ணுக்குத் தெரிகின்ற மனம் என்றும், மனதை கண்ணுக்குத் தெரியாத உடல் என்றும் சொல்லலாம். மனதை பாதிப்பதெல்லாம் உடலையும், உடலை பாதிப்பதெல்லாம் மனதையும் பாதிக்கும் என்பது நமக்குத் தெரிந்ததே. விஞ்ஞானமும் அதை உறுதிப்படுத்தியுள்ளது.

எனவே தூக்கம் மிகுந்த நிலையில் உள்ள ஒரு உடல் தொழுகைக்குத் தயாராக இல்லை என்று அர்த்தம். அப்படியானால் மனம் மட்டும் தயாராக இருக்குமா என்ன? எனவே முதலில் தூங்கி எழவேண்டும். நன்றாகத்தூங்கி விழித்த பிறகு உடலும் மனமும் புத்துணர்ச்சியுடன், புதுமலர்ச்சியுடன் இருக்கும். அப்போது தொழுதால் உடலும் மனமும் தொழுகையில் ஒன்றும்.  இதைத்தான் பெருமானார் சுருக்கமாகச் சொல்லியுள்ளார்கள்.

இதே நபிமொழியை தோழர் அனஸ் அவர்கள் அறிவிப்பதாகவும் உள்ளது. அதில், தொழும்போது தூக்கம் வந்தால் போய் நன்றாகத்தூங்கிவிட்டு வந்து பின்னர்தான் தொழவேண்டும். அப்போதுதான் என்ன ஓதுகிறோம் என்று தெரிந்து புரிந்து ஓத முடியும் என்று சொல்வதாக ஒரு கூடுதல் தகவல் உள்ளது. இதையும் இணைத்துப்பார்க்கும்போது இன்னொரு விஷயமும் புரிகிறது. அதாவது, தொழும்போது என்ன ஓதுகிறோம் என்று கவனித்து ஓதவேண்டும். அரபி தெரிந்திருந்தால் ஓதுவதன் அர்த்தங்களும் நமக்குப் புரியும். இல்லையெனில் என்ன ஓதுகிறோம், சரியாகத்தான் ஓதுகிறோமா என்று கவனித்துச் செய்யலாம்.

எந்த ஒரு காரியம் செய்யும்போதும் அதை கவனித்துச் செய்யவேண்டும் என்பதுதான் வெற்றியின் விதியாகும். மின்சார ஓட்டம் உள்ள இரண்டு வயர்களை கைகளில் பிடித்துக்கொண்டிருந்தால் எவ்வளவு கவனமாக இருப்போம்! இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து வந்துவிடலாம்! அதைப்போன்ற கவனத்தோடுதான் எல்லா வணக்க வழிபாடுகளையும் செய்யவேண்டும் என்பதே இந்த நபிமொழிகளின் உட்குறிப்பாகும். மனதை எங்கோ வைத்துக்கொண்டு வாயால் மட்டும் திருமறையின் சில வசனங்களைச் சொல்லிவிடுவதால் எந்தப் பயனும் கிடைத்துவிடாது. உடலும் மனமும் ஒன்றி ஒரு காரியத்தைச் செய்யவேண்டும் என்பதே இந்த நபிமொழிகளின் குறிப்பாகும். அப்போதுதான் வெற்றி கிடைக்கும். இம்மையிலும் மறுமையிலும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

நன்றி இனியதிசைகள், பிப்ரவரி,202

Leave a comment

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.